நினைவேற்றம் 7

முனை 7 

மனிதப் பரம்பல் உயிர்வாழ்தலின் நிமித்தத்தில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்த காலத்தில் உருவான கிராமமது. அதன் மூன்று திக்குகளிலும் வயல் நிலங்கள் இருந்திருந்தன. அவற்றினுக்குமப்பால் தரைவைக் கடல்கள். மழை காலத்தில்மட்டும் நீர் கொண்டு, கோடையில் காய்ந்து சுரிபட்டும் பொருக்கு நிறைந்துமாய்க் கிடக்கும் வெளி. அவை தம்முள் தொடுப்புண்டிருந்தன. மேற்குத் தரைவைக் கடல் தீவின் மேற்குச் சமுத்திரத்தோடு ஓடி இணைவதாய் இருந்தது.

குடியிருப்பு அமைந்த காலத்தில் அதன் நீரோடு வழிகள் வாய்க்கால்களெனப் பெயர்கொண்டிருந்தன. பின்னால் அவையே மக்களின் வண்டி மற்றும் நடைப் பயணங்களுக்கு பாதையாகியபோது ஒழுங்கைகள் எனப் பெயரெடுத்தன. நான் சிறுவனாயிருந்த காலத்தில் கோடையில் மணலும், மாரியில் நீரும் தவிர வேறேதும் நான் அவற்றில் கண்டிருக்கவில்லை.

பனை மரங்கள் நிறைந்த காடுகள் எங்கெங்கும் காணக்கிடந்தன அக்கிராமத்தில். அவற்றுள் பாளை கங்குமட்டை காவோலைகள் பொறுக்கவெனவும் இயற்கை உபாதைகள் கழிக்கவுமென அக்காட்டை ஊடறுக்கையில் வடலிக் கருக்குக் கிழித்த காயத்தோடு எப்போதும் ஒருவராவது காணப்பட்டனர். காற்றுக் காலத்தில் பனையின் தலைகளில் தொங்கிக்கிடந்த காவோலைகளின் சரசரவொலி கட்டக்கடு மத்தியானத்தில் அதுவரையில் அது கேட்டிருக்காதவர்களை அச்சப்பட வைத்துவிடும். அது பேய்களின் கூவலொலிபோல் தனிவழிப் பயணியை தலைதெறித்து ஓடப்பண்ணுவதுண்டு. அதுபற்றிய கதைகளை ஊர்ப் பெண்கள் காலைகளின் ஓய்வுப் பொழுதுகளிலோ, நல்ல தண்ணீர்க் கிணற்றடியிலோ ஒருவருக்கொருவர் பரிமாறிச்  சிரித்துக்கொள்வார்கள்.

அந்தப் பனங்கூடல்களின் மத்தியில் நான்கு திசைகளையும் நோக்கிக் கிளை பிரிந்த  நாற்சந்தியில் ஒரு வாகை மரம் இருந்தது. வாகை பூத்து காய்த்து முற்றிய படல்கள் மரத்திலிருந்து ஒருவித சலசல நாதமெழுப்பும். மாரியில் தளிர்த்து, கோடையில் இலையுதிர்த்துத் தவிர அது வேறு தொழில் அறிந்ததில்லை. அந்த நாற் சந்தியிலிருந்து மேற்கின் வயலைநோக்கி ஓடும்  பெரு வாய்க்கால் சுமார் நூற்றைம்பது யார் தூரத்தில் மேலும் இரண்டு கிளைகளாய்ப் பிரிந்த  சந்தியிலே மணல் கொழித்திருந்தது. நடப்பதும் சிரமமான மணற்காடு. அதனண்மையில் ஒரு பிள்ளையார் கோயில். அதற்கு பனையடிப் பிள்ளையார் கோவிலென்ற பெயர் அமைந்திருந்தது.

வெள்ளி தவறாது விளக்கேற்றி பூஜை கண்ட கோயிலது. தவிர்ந்த நாட்களிலும் விளக்கேற்றலும் பூஜையும் நடந்திருக்கலாம். யாரின் கவனமும் பெற்றதில்லை. வெள்ளிகளின் பூஜைகளுக்கே இரண்டு பக்தர்கள் வந்தால் அதிகமென்றிருந்தது அக் கோயில். பூஜைப் பெருமணி நால் திசையதிர ஒலிக்காத கோயிலில் பூஜைகள் யார் கவனத்தைக் கவர்ந்திருக்க முடியும்? மணிக்கோபுரம் உடைந்து கிடந்த அக் கோவிலின் கண்டாமணி ஒலித்ததை நான் என்றும் செவிமடுத்ததில்லை.

ஆயினும் இன்னும் அந்தக் கோயில் நீங்காத இடம்பிடித்த என் மனத்து நினைவுகளுள் ஒன்றாகவே இருக்கின்றது. அதற்கு மூன்று காரணங்கள் இருக்கமுடியுமென இப்போது தோன்றுகிறது. ஒன்று, அந்தக் கோவிலின் தாகமறுக்கும் இன்சுவை நீர்க் கிணறு. இரண்டு, கோயிலின் அயல் வீட்டிலிருந்த அரியமலர். மூன்று, ஐயாவுடன் கூடிச் சென்று அந்தக் கோவிலின் முன்றிலில் ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டு நாளிலும் சில ஆண்டுகளாய் நான் கண்டு களித்த போரடி.

இரண்டு வருஷங்களுக்கு முன்னால் இலங்கையில் நின்றிருந்தபோது திடீரென்று எழுந்த ஓர் நினைவெழுச்சியில் அக் கோயிலைப் பார்த்துவரப் போயிருந்தேன். அப்போது உண்மையில் நான் மேலே சொன்ன மூன்று காரணங்களும் ஓர் ஒழுங்கில் என் எண்ணத்தில் எழுந்திருக்கவில்லை. ஒரு மாயச் சுவரில் கைவல்லுநக் கலைஞன் ஒருவன் அவசரத்தில் தீட்டிய ஓவியம்போல் தெளிவற்றவையாகவே அவை இருந்திருந்தன.

கோயில் கொண்டிருந்த  தோற்றம் கண்டு மன அழுத்தம் மேவிப்போனேன். இறுதி யுத்தத்தின் பின்னால் இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சு செய்த உபகாரத்தால் போர் நடந்த மண்ணின் இந்து கிறித்தவ ஆலயங்களெல்லாம் புனர்நிர்மாணம்  ஆகியிருந்தன. தமிழகம் சென்று தரிசனம் கண்ட பெருமைபெற்ற இந்துக் கோவில்களின் பராமரிப்பையெல்லாம் விஞ்சியதாய், கண் கவரும்  வர்ணங்களில் கோபுர கலசங்களும், சுற்று மதில் சுவர்களும், நுழைவாயில்களில் பளீரிடும் பித்தளையில் இயன்ற அலங்கார வேலைப்பாடுகளுமாய் அவை காட்சிதந்தன. அந்நிலையில் பனையடிப் பிள்ளையார் கோவில்மட்டும் உடைந்த மணிக் கோபுரமும் பிற இடிபாடுகளும் சீர்செய்யப்பட்டதோடு கவனமெடுக்கப்பட்டதின் சுவடுமின்றி நின்றிருந்தது. தன் பழைமையை மாற்றுவதில் ஒவ்வாமை கொண்டதுபோன்ற பிடிவாதத்தை அதில் காணக்கூடியதாக இருந்தது. அது ஏனென்று எனக்கு விளங்கியிருக்கவில்லை.

கிணற்றுத் துலாவில் கயிறு இல்லாதிருந்தது. நல்லவேளையாக  சிறிய வாளியொன்று கட்டப்பட்ட நைலோன் கயிறொன்று அங்கே கிடந்தது. நீரை மொண்டு கூடவந்திருந்த ஓட்டோ ட்றைவரிடம் வார்க்கச்சொல்லி கையேந்திக் குடித்தேன். மாலை ஆகிவந்தபோதும் சூடு தணியாதிருந்த அவ்வேளையில் தண்ணீர் மந்திரமாய் உடலில் குளிரைக் கிளர்த்திற்று. ஆயினும் அது முந்திய காலத்தின் இன்சுவை கொண்டிருக்கவில்லையென்றே எனக்குப் பட்டது.

அந்த கிணற்று மேட்டில் நின்றுதான் அரியமலர் வீட்டை  முன்பு பார்க்கின்ற ஞாபகம் வந்தது. சற்று தொலைவிலிருந்த அரியமலர் வீட்டுப் பக்கமாய்ப் பார்வையைத் திருப்பினேன்.  எவ்வித எதிர்பார்ப்புமின்றித்தான். அவளும் அவள் பெற்றோரும் குடியிருந்த வீட்டின் தடம்கூட இன்றி வெறுமைபட்டுக் கிடந்தது வளவு. ஆண்டுகள் பல முன்பாக, மண்வீடாயினும் எவ்வளவு அழகு நிறை பூக்களுள்ள தோட்டத்தோடு அந்த வளவும் வீடும் இருந்திருந்தன! மல்லிகையென்ன, முல்லையென்ன, நந்தியாவெட்டையென்ன, கனகாம்பரமென்ன, செவ்வரத்தையென்ன… பல பல வர்ணங்களின் பூக்கள்! துக்கமாய் எதுவும் மனத்தில் இறங்கவில்லை. காலத்தின் நீட்சி பெரிதாக துக்க  உணர்வினை என்னுள் திகைந்தெழ வைக்கவில்லை.

அப்போது தார் போட்டிருந்த அவ்வீதியில் வந்த ஒரு சைக்கிள்காரரை மறித்து, அவர் அவ்விடத்தவராய் இருந்தால் அவ்வீட்டாரின் நிலைபற்றி தெரியுமாவெனக் கேட்டேன். தெரியாதென்றார். வேறு யாரிடமாவது தெரிந்துகொள்ளலாமென்ற நம்பிக்கையைக்கூட அவர் பதில் தந்திருக்கவில்லை. ‘அவை இஞ்சயிருந்து போய் இப்ப ஒரு…. இருபத்தைஞ்சு முப்பது வருஷமாவது இருக்குமே!’ என்பது என்ன நம்பிக்கையை ஒருவருக்குத் தருதல் கூடும்?  

ஆனாலும் ஒரு பறவைபோல் எங்கும் கலகலத்துப் பறந்தபடியிருக்கும் அரியமலர் தான் பிடித்த  மனத்தின் அரியாசனத்தைவிட்டு சாமான்யத்தில் நீங்குபவள் இல்லையாய் அப்போது என்னால் உணர முடிந்தது. அன்று, கல்மிஷமற்ற மனத்தோடிருந்த பருவத்தில் கண்ணில் ஆர்வமேற்படுத்திய அவளது தோற்றத்தின்  புரியாத அம்சங்களெல்லாம் ஒவ்வொன்றாய் அப்போது வெளிக்கிளம்பின.

 அவளது நடை அவசரமில்லாதபோதுகளிலும்கூட வேகமாயே இருந்திருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். அவளது தலையில் பூவற்ற ஒருபொழுது என்றும் இருந்திருக்காதென்றே இப்போது நினைக்கத் தோன்றுகிறது. எண்ணெய் பூசி நடு வகிடெடுத்து வாரிய தலை. பின்னால் நீண்டு தொங்கும் ஒற்றைப் பின்னல். அதன் நுனியில் பச்சை மஞ்சள் சிவப்பு வெள்ளையென ஏதோவொரு நிறத்தில் கட்டிய றிப்பன். குளித்திருந்தாலும் அவளது மாந்தளிர் நிற முகத்தில் எண்ணெய்ப் பசை லேசாகப் படர்ந்திருக்கும். அரிசியில் காய்ச்சிய சாந்தில் வட்டவடிவமான கரும்பொட்டு வைத்திருப்பாள். முழுப் பாவாடை, சட்டை. பெண்களுக்குள் சற்று உயரமான ஒல்லி உடம்பு. அரியமலர் அவ்வளவுதான்.

குடும்பரீதியான தொடர்பு இருந்ததில் அவளது தோற்றம் அந்தளவுக்கு மேல் என்னில் அதிகாரம் கொண்டுவிடவில்லை. காணவென்று தேடியலைந்ததில்லை. எதிர்ப்பட்டபோது கண் நிலைத்துப் பார்க்கவில்லையேயென உள்ளம் நைந்ததுமில்லை. ஆனாலும் அவள் நினைவு மறக்கப்படாதே இருந்திருக்கிறது. நெருங்கிப் பழகிய பலர் மறந்தே போய்விட்டிருக்கிறார்கள் இந்த நீள் கால வெளியில். கண்ணுக்குத் தரிசனம்மட்டும் தந்த அவள் அரை நூற்றாண்டளவு கடந்த பின்னும் நினைவுள் நின்றிருப்பது அதிசயம்தான்.

அவளை ஏன் என்னால் மறந்தவிட முடியாதுபோனது? தன்னை மறக்காதபடி செய்யும் எந்த அம்சத்தை அவள் தன்னில் கொண்டிருந்தாள்?

எல்லோரும் கோயிலுக்கு பூஜைக்கு பூ எடுத்துச்செல்ல பூஞ்செடி வளர்ப்பார்கள்; சிலர் தம் வீட்டு சாமிப் படங்களுக்கு வைத்து வணங்க பூமரம் நடுவார்கள்; அவள் தனக்கு வைப்பதற்காக ஒரு தோட்டமே வைத்து வளர்த்தாள். பள்ளி தவிர்ந்த நேரங்களில் பாதி நேரத்தை அவள் தோட்டத்திலேயேதான் கழித்தாள். வேறு அலுவலாக வெளியே செல்கிறபோதும், விரைவில் திரும்பி வந்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் அவள் அந்தளவு வேகத்தை தன் நடையில் ஏற்றியிருந்தாளோ? அதுவே நாளடைவில் அவளது இயல்பான நடையுமானதோ?

தலையில் பூ வைப்பதை அபூர்வமாக்கொண்ட மனிதர்கள் வாழ்கின்ற ஊரில் அவள் தினம் ஒரு பூவேனும் வைத்து தன்னை மலரச்செய்துகொண்டு இருந்தாள். அவளது காட்சியில் பிற மனங்களும் மலர்ந்தன. என் மனம் மலர்ந்ததும், இன்றும் மலர்ந்தே இருப்பதும் அரியமலரின் அந்த ஞாபகத்தினாலல்லவா?

சொல்லாமலே சில நினைவுகளை மனம் காத்துவைத்துவிடுகிறது என்பது அன்றைய தினத்தில் எனக்கு உறுதியாயிற்று. அரியமலர், சொல்லாமல் எனக்குள் பதிந்திருந்த ஞாபகம்.

கோயிலுக்கு சுற்றுச் சுவர் கட்டியிருந்தார்கள். கேற் சங்கிலிபோட்டு பெரிய ஒரு பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. முன்பு போரடி நடந்த இடத்தில் பாதி அப்போது உள்வீதி ஆகிவிட்டிருந்ததைக் கவனித்தேன். கோயில், கோயிலின் அகம் புறம் எல்லாமே  மாறிவிட்டிருந்தன. மனிதர்கள் மாறிவிட்டிருந்தார்கள். சூழ நின்ற பனை மர வளவுகள் இல்லாது போயிருந்தன. முழங்காலளவு மணல் வழிந்த பாதை மாறிவிட்டது. ஆனாலும் என் நினைவெல்லாம் நிகழ்காலத்தின் தரிசனம் மறந்து முற்காலம்நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய தமிழ்ப் புத்தாண்டு தினங்களில் நடந்த போரடிக் களத்தின் களேபரம்கூட என் செவியினில் அப்போது விழுவதாய்த் தோன்றியதே.

ஜனங்களின் ஆரவாரமும், போரடி வீரர்களின் ஆக்ரோஷமும் வீறார்ந்த நிலைகளும் தொடர்ந்து காலப் புழுதியைக் கிளர்த்திக்கொண்டு  தொடர் சம்பவங்களாய் விரிந்தன. தம்பு, சிவலை, செல்லையா, சின்னான், சின்னத்தம்பியென போரடிக் களத்தை தம் கம்பீரத்தால் ஆக்ரமித்திருந்த பலரும் கோவில் முன்றிலில் நடந்து திரிவதான காட்சிமயக்கம் பிறந்தது.

கூட, அதிசயமாய் இன்னொருவர். அவர் அந்தக் காலப் பகுதிக்குச் சொந்தக்காரர்தான். ஆனாலும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவரில்லை. அவர் பல கோலம் கொள்ளும் மனிதரென நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் பலரறிந்த எழுத்தாளர் என்ற கோலத்திலேயே அவர் அப்போது இருந்திருந்தார். அவர்தான் எஸ்.பொ. தன் ‘நனவிடை தோய்த’லில் ஒரு போரடிக் களத்தை எழுதி இலக்கியத்தில் நித்தியம் பண்ணியவர்.

ஐயாவின் இடுப்பளவு உயரத்தில் அவரது கைப்பிடிக்குள் நின்று போரடி கண்டுகொண்டிருக்கிறேன் நான்.

அச்சொட்டான நேரம் சொல்லி நிகழ்வுகள் நடக்காத காலமது. காலையில், மத்தியானத்தில், பின்னேரத்தில் அல்லது ராத்திரியில் என்றுதான் நேரங்கள் அப்போது குறிப்பிடப்பட்டன. இன்னும் துல்லியமாய் நேரம் குறிக்கப்படவேண்டி இருந்தால், காலமைக் கோச்சு… மத்தியானக் கோச்சு…. பின்னேரக் கோச்சு போற நேரம் என்பார்கள். அது சுமாராக காலை பத்து மணியையும், மதியம் ஒரு மணியையும், மாலை ஏழு மணியையும் குறிப்பதாயிருக்கும்.

இப்போதைய நேரப்படி ஒன்பது மணியிருக்கும் ஒரு புத்தாண்டுக் காலையில் போரடி துவங்கியிருந்தது. அப்போதே ஜனங்கள் குழுமியிருந்தும் மணல்ஒழுங்கையில் ஒன்றிரண்டாய் மனிதர்கள் வந்துகொண்டிருந்தது தூரதூரத்திலிருந்தும் தெரிந்துகொண்டு இருந்தது. வெய்யில் அப்போதே சுளீரிடத் துவங்கியிருந்தது. கிணற்றடியின் செழித்த பூவரசு நிழலில் ஆட்டகாரர் நின்று ஓய்வெடுப்பதும், களத்துக்கு வருவதுமாயிருந்தனர்.

அப்போது தோளில் தொங்கப்போட்ட சாக்கு மூட்டையுடன் கணேசன் வந்துசேர்ந்தான். கருகருவென்று வளர்ந்திருந்த உடம்பில் காய்ந்த வேர்வை எண்ணெய்ப் பிடிப்பாய் மினுமினுக்க, புதிதாய் ஊறும் வியர்வை நீராய் வழிந்துகொண்டிருந்தது. ‘கணேசன் வந்திட்டா’னென்று ஜனங்களிடையே சலசலப்பு எழுந்தது.

கணேசன் அந்தவூர்க்காரனில்லை. மண பந்தத்தில் வந்தேறியவன். வந்தேறி சில ஆண்டுகள்தானிருக்கும். வேட்டைக்குச் செல்வது, அதற்காக நாய்களைப் பயிற்றுவது, சவாரி நாம்பன்கள் வளர்ப்பது, சவாரிக்குச் செல்வதுதான் கணேசனின் தொழில், பொழுதுபோக்கு எல்லாமே. வெளியூர்க்காரனென்ற ஓர் இளக்காரம் ஆட்டகாரரிலும் இருந்திருக்கும். அவ்வாறான தருணங்களில் ஒருவகையான சினம் அவனது முகத்தில் அப்பியிருக்கும். போன வருஷ போரடியில் இறுதிவரை நின்று செல்லையாவிடத்தில் தோற்றுப்போனவன் அவன். அந்த அவமானத்தை அடுத்த வருஷ போட்டியிலே தீர்த்துக்கொள்வதாய்ச் சொல்லித் திரிந்ததை பலர் அப்போது நினைத்திருக்கக்கூடும். செல்லையாவுக்கும் அந்த நினைவு எழாமிலிருக்க சாத்தியமில்லை. கணேசனை ஒரு பார்வை பார்த்ததோடு செல்லையா திரும்பிக்கொண்டாலும், தன் அதிருப்தியின் ஒரு கீறை மூர்க்கமாய்க் காட்டுபவன்போல் தம்பு களத்தில் உருட்டிவிட்ட ஒரு மெலிந்த தேங்காயை சிதறடித்துவிடும் உத்வேகத்தோடு கைத் தேங்காயை வாகாய் பிடித்தபடி அதைத்   தடவிக்கொண்டே சுழன்று வந்துகொண்டிருந்தான்.

ஏற்கனவே தம்புவின் மூன்று விடுதேங்காய்களை அடுத்தடுத்து சிதற அடித்துவிட்டிருந்தான் செல்லையா. தன்னுடைய காய்களிலிருந்து தேர்ந்தெடுத்த பதமான ஒரு காயையே அப்போது தம்பு களத்தில் உருட்டிவிட்டிருக்கிறான். அதுவும் தன்னுள் உறுமியபடி கரு நிறத்திலிருந்த தன் உருவம் சிலிர்த்து கிடந்திருந்தது.

அதுவொரு முக்கியமான தருணம். எல்லோரும் செல்லையாவையே பார்த்தபடி நிற்கின்றனர். தம்பு உருட்டிவிட்ட காயை உற்றுநோக்கிய சிவசம்பு, ‘மணியத்தார் வீட்டு பின்வளவு மரத்துக் காய்போல கிடக்கு. அப்பிடியெண்டா செல்லையனால கஷ்ரம்தான்’ என்று அருகில் நின்றவனின் காதோரம் முணுமுணுத்தான். எப்படி அந்தக் களேபரத்திலும் அது செல்லையாவின் காதில் விழுந்ததோ? திரும்பி ஒரு அக்னி நோக்கினை எறிந்துவிட்டு, தன் கவனத்தை விடுகாயில் செலுத்தினான்.

போரடியென்பது, கீழே உருட்டிவிடும் தேங்காயை இன்னொரு தேங்காயினால் அடித்து நொருக்குவதென்பது மேலோட்டமான விபரணை. அதற்கான ஆயத்தங்களுக்கே ஓராண்டாய் மினக்கெடுவார்கள் போரடிகாரர். ஓடு கனதியான தேங்காய் எங்கெங்கே இருக்கிறதென்பது தெரிந்து, பொச்சுரிக்காமல் அதைக் கொண்டுவந்து, அது முளைவிடாதிருக்க சிறிது நாள் வெய்யிலிலும் சிறிதுநாள் மழையிலுமாய்  மாறிமாறிப் போட்டு, பின் அதை  தேங்காயின் ஓடு இறுகுவதற்காய் கிணற்றினுள்  போட்டுவைத்து என கவனம் கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவிருந்தன. எந்த வீட்டின், எந்த மரத்துக் காயை பதம்பண்ணி போரடிக்கு ஒருவன் கொண்டுவருகிறானென்பது ரகசிய விசாரணைகளில் எப்போதும் துளாவப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த ரகசியம் வெற்றியின் ஒரு சூட்சுமமாகக் கணிக்கப்பட்டிருந்தது. கையானையும் விடுதேங்காயையும் பிரித்தெடுப்பதிலும் மிகுந்த சாதுர்யம் தேவைப்பட்டது. இவ்வளவுக்குப் பின்னரும், கவனம் மிகத் தேவைப்பட்டது, அவற்றைக் களவு போகாமல் காப்பாற்றுவதில்.

ஊரிலே தேங்காய்க் களவு சாதாரணமாக நடப்பதுதான். தென்னந்தோட்ட வளவுக்குள் முள்ளு வேலி தாண்டிப் போய் பகலிலேயே தேங்காய்க் களவுகள் நடந்துவிடும். அது ஒபப்பீட்டளவில் மிகச் சுலபமான காரியம்கூட. ஆனால் போர்த் தேங்காய்க் களவு பெருந்திட்டமிடலில் நடத்தப்படுவது. சில வருஷங்களின் முன் போர்த் தேங்காய் களவெடுக்கப் போய் பிடிபட்ட சரவணை பட்ட அவமானம் கொஞ்சநஞ்சமில்லை. அத்தோடு போரடி மறந்தவர் அவர்.

மேலும் கையானால் விடுகாயை அடிப்பதற்குப் உடற் பலம் மட்டுமின்றி, மிகுந்த தேர்ச்சியும் அவசியமாயிருந்தது. மிக்க பலத்துடன் செங்குத்தாய் இறங்கும் ஒரு கையான், உருட்டிவிடப்பட்ட சாதாரணமான ஓடுடைய தேங்காயைக்கூட உடைக்காமல் போகக்கூடும். சாய்வாக அடித்தாலோ விடுகாய் நழுவி விழுந்த தாக்குதலிலிருந்து அநாயாசமாய்த் தப்பிவிடும். ஆக, பலமும் தேவை. வித்தையும் தெரிந்திருக்கவேண்டும்.

ஆம்; போரடி ஒரு கலை.

போரடிக் களத்தில் செல்லையாவின் கை தம்புவின் விடுகாயை நோக்கி இறங்கிக்கொண்டிருக்கிறது. செல்லையாவின் ஆக்ரோஷத்தில் தம்புவின் விடுகாய் இந்தா சிதறிவிட்டதென கூடியிருந்த சனம் மூச்சடங்கிப் பார்வையை நிலைகுத்தியிருக்கிறது. சடார்….! தம்புவின் விடுகாய் அடி விழுந்த அதைப்பில் துள்ளி அப்பால் விழுந்துகிடந்து சிறிதுநேரமாய் உருண்டுகொண்டிருந்தது. ஓ… ஆ… பலப்பல ஓங்காரங்கள் கூட்டத்தினிடையே.

சலசலப்பு மறைய சிறிதுநேரமாயிற்று.

தம்பு நிதானமாகச் சென்று சாக்கினால் மூடி சின்னானை காவலுக்கு வைத்திருந்த கும்பலிலிருந்து ஒரு காயை எடுத்து வந்தான். அதுபோல் செல்லையாவும் தன் ஆள் பாதுகாத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு காயை நன்கு அலசிப்பார்த்து எடுத்துவந்து களத்தில் உருட்டிவிட்டான்.

அது கண்ட சின்னான், ‘உது சரிவராது’ என்று கத்தினான்.

‘ஏன்?’ என்றான் செல்லையா.

‘தம்பரின்ர மூண்டு விடுகாயை ஒண்டுக்குப் பின்ன ஒண்டாய் உடைச்சிட்டாய். அதால நீ இப்ப உன்ர கையானைத்தான் விடவேணும்.’

‘கையான விடேலா. எங்கத்திப் பழக்கம், கையான் விடுறது? வேணுமெண்டா நான் விட்ட காயை அடிக்கச் சொல்லு ; இல்லாட்டிப் போகச் சொல்லு. அதுசரி… இதெல்லாம் கேக்க நீ ஆர்? கூட வாற சிண்ணுகளுக்கு அந்த உரிமை கிடையாது.’

பின்னால் தம்பு தலையிட வாய்ப் பேச்சு வலுத்தது. குடும்ப உறவுகளைக் கொச்சைப் படுத்துகிறமாதிரியான வார்த்தைகளும் வெளிவரத் துவங்க பெரிசுகள் சில தலையிட்டன. மத்தியஸ்தத்திற்கு மூத்தாம்பியைக் கூப்பிட்டார்கள். மூத்தாம்பி ஒரு காலத்தில் போரடியில் பெரிய விண்ணனாய் இருந்திருப்பார்போல. தனக்குத் தெரிந்த போரடி அனுபவத்தில் அந்தப் பிரச்னைக்கு அவர் சொன்ன முடிவை இரண்டு தரப்புமே ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் யுக்தமாய் ஒன்று சொன்னார்: ‘உனக்கும் வேண்டாம்; அவனுக்கும் வேண்டாம்; ரண்டுபேருக்கும் பொதுவில ஒண்டு சொல்லுறன். கேக்காட்டி ரண்டு பேருமே ஒதுங்கியிடவேணும். அதுக்குப் பிறகு ரண்டுபேருக்குமே களத்தில இடமில்லை.’

மத்தியஸ்தத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் முரண்டுபிடிக்கலாம்; மத்தியஸ்தத்தையே மறுதலித்துவிட முடியாது. ஆட்டகாரரின் மனநிலை எப்படியோ, ஆனால் சனம் விட்டுவிடாது.

மூத்தாம்பி தன் தீர்ப்பைச் சொன்னார்: ‘செல்லையன் கையானை விடத்தான் வேணும். ஆனா தம்பன் உடையாத தன்ர விடுகாயைத்தான் இந்த முறை கையானாய்ப் பாவிக்கவேணும்.’

இறுதியாக இருவரும் அந்த மத்தியஸ்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

தம்பு வயதாளியானாலும், தண்டுதரத்தில் குறைந்தவனில்லை. உடையாத விடுகாயை கையானாக மாற்றிக்கொண்டு வெகு நுட்பமாகத்தான் தனது அடியை இறக்கினான். ஆனால் செல்லையாவின் தேங்காய் விட்ட இடத்திலிருந்து துள்ளிப்போய் அப்பால் விழுந்து கிடந்திருந்தது. செல்லையாவின் கையான் உண்மையிலேயே திறமான காய்தான்.

செல்லையா ஹோ… ஹோவென்று அட்டகாசமாய்ச் சிரித்தான். தம்பு மேனி கோபத்தில் பற்றியெரிய நின்றுகொண்டிருந்தான்.

அடுத்த ஆட்டகாரராக கணேசனும் சின்னத்தம்பியும் களமிறங்கினார்கள். ஜனங்கள் இன்னும் முண்டியடித்தனர். ‘தள்ளி நில்லுங்கோ… தேங்காயுடைஞ்சால் சில்லுகள் பறக்கும்’ என்று பெரியவர்கள் அவ்வப்போது சொல்லியது கேட்கும் நிலைமையில் யாருமில்லை.

கணேசன் வெல்லுவதற்கு வந்தவன். அவனுக்கு அவசரமில்லை. அவன் விடுகாய்விடச் சம்மதித்து தனது காயை களத்தில் ஏற்றிவிட்டான். சின்னத்தம்பியின் வலிமையில் கணேசனின் விடுகாய் சிதறித் தெறித்தது. சின்னத்தம்பிக்கு பெரிய புளுகம். ஆனால் கணேசனுக்கு துக்கமுமில்லை, கோபமுமில்லை.

சின்னத்தம்பியே ஒல்லித் தேங்காய்போலத்தான். எலும்பைத் தோல் மூடியிருப்பதுபோல் தோன்றும் ஆறடி ஆகிருதி. ஆனாலும் அந்த உடம்பில் வலிமை பீறிட்டிருந்தது. சோர்ந்திருந்தால் நோஞ்சானும், உஷாராகிவிட்டால் இரும்பும் என்றுதான் கணக்கு. கணேசனின் மௌனம் கண்ட சின்னத்தம்பி மேலே பெரிதாக புளகமடைந்துவிடவில்லை. கணேசன் ஒரு சாதாரணமான ஒரு காயை ‘விட்டுப் பார்த்த’  தந்திரமதுவென அவன் தெரிந்துபோனான்.

பெயர்பெற்ற இவ்வகையான போரடிகாரரைவிட பம்பலாய் வீட்டுமரக் காய்களைக் கொண்டுவந்து போரடியில் கலந்துகொள்பவர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களது விளையாட்டு சிறிதுநேரத்தில் ஆரம்பமானது.

நேரம் கடந்துகொண்டு இருந்தது. ஆளுக்கு இருபத்தைந்து காய்களென ஒதுக்கப்பட்டிருந்த எண்ணிக்கையில் முக்கியமான போரடிகாரரெல்லாம் இப்பொழுது காயொழிந்து போனார்கள். கடைசியாக போன வருஷம்போலவே செல்லையாவும் கணேசனும் எஞ்சினார்கள்.

உச்சிவேளை ஆகியிருந்தது.

ஒரு விடு தேங்காயும் ஒரு கையானும் கொண்டு கணேசனும், ஒரு கையானடன்மட்டும்  செல்லையாவும் களத்தில் நிற்கிறார்கள்.

செல்லையா கையானை  விடு காயாய் களத்தில் உருட்டிவிட்டுவிட்டு உச்சபட்ச உணர்வுக் கெழுமலில் நின்றுகொண்டிருக்கிறான். கணேசனின் முகத்தில் அதுவரையில்லாத ஒரு ரகசிய முறுவல் மின்னி மறைகிறது. சுற்றிச் சுற்றி வந்து வளம் பார்த்தாகிவிட்டது. ஆனாலும் இன்னும் மெதுவாக சுழன்று வந்தகொண்டிருக்கிறான். உச்சி வெய்யில் யார் கவனத்திலும் இல்லை. எல்லார் கவனமும் கணேசனிலும் செல்லையாவிலும் மாறி மாறிப் பதிகின்றது. திடீரென கோவில் முகட்டிலிருந்து கணேசன் குதித்ததுபோல் இருந்தது. அவன் எம்பியது யாரும் கண்டிருக்கவில்லை. அப்படியே ஓங்கிய கையோடு காற்றிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான் கணேசன். அவன் நிலத்தில் விழுந்த அதே சமயத்தில் அவனது வலது கரம் செல்லையாவின் கையானில் பதிந்தது.

 தப்…பென்று ஒரு சத்தம். ‘கணேசன்ர கையான் உடைஞ்சிட்டுது’ என்ற யாரோவின் கூச்சல்,  அந்த மௌன வலயத்துள்  பேரொலியாய்க் கேட்டது.

 நிமிர்ந்தெழும்பிய கணேசன் ஆச்சரியத்தோடு தனது கையானை திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். பின் தலையை ஆட்டுகிறான்.

மூத்தாம்பி கிட்ட வந்து பார்த்துவிட்டு, ‘உடைஞ்சது செல்லையன்ரதான். இந்தமுறை கணேசன் வெண்டிட்டான்’ என்று போட்டியின் முடிவை அறிவிக்கிறார்.

கூட்டம் மெதுமெதுவாக கலையத் துவங்கியது. ஊர் நாய்கள் சில வந்து ‘டீக்… டீக்’ என்ற அதட்டல்களையும் மீறி உடைத்துப் போட்ட  கும்பியிலிருந்து தேங்காய்ப் பாதிகளைக் கவ்விக்கொண்டு ஓடின. சிறுவர்கள் இன்னும் உடைந்த தேங்காய்த் துண்டுகளை வைத்து காந்திக்கொண்டிருந்தார்கள்.  

ஐயாவும் என்னைக் கூட்டிக்கொண்டு வீடு வந்துவிட்டார். வீட்டிலே புத்தாண்டுக் கொண்டாட்டம் மேலேதான் தொடங்கியது. அம்மா புறுபுறுத்தபடி பின்னேரத்தில் மதியச் சமையலை முடித்தாள்.

இரவாகிற நேரத்தில் செய்தியொன்று பரந்து வந்தது, வீடு புகுந்து கணேசனின் மண்டையை செல்லையா உடைத்துவிட்டதாக. மறுநாள் முதிர்காலையில் இரண்டு பொலிஸ்காரர் சைக்கிளில் பனையடிப் பிள்ளையார் கோவிலடி போவதைக் கண்டபோது செய்தியின் உண்மை மட்டுமன்றி, விஷயத்தின் பாரதூரத்தனமும் உறுதியானது.

‘அண்ணை… பசி குடலைப் பிடுங்கிது’ என்ற ஓட்டோ ட்றைவரின் குரலில் என் கனவு கலைந்தது. பொய்யுருக் கொண்டுவந்த போரடிகாரர் காற்றில் கரைந்தனர். அதுபோல் எஸ்.பொ.வும் மறைந்துபோயிருந்தார்.

நான் பனையடிப் பிள்ளையார் கோவிலிலிருந்து புறப்பட்டபோது துக்கமாய் உணர்ந்தேன். கோயில் கிணற்றின் இன்சுவை நீர் தன்மையிழந்தது துக்கமாயில்லை. அரியமலர் அவள் வீட்டில் இல்லாமல் எங்கோ போய் மறைந்தது துக்கமாயில்லை. ஆனால் அந்த நிலத்தில் போரடி மறைந்ததுதான் துக்கமாய் விரிந்தது.

மூன்று தலைமுறை முந்தியவர்கள் கண்டு களித்த, விளையாடிய அந்த விளையாட்டை இரண்டு தலைமுறை முந்தியவர்கள் கேள்வியில் பட்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறையினர் அதுபற்றி அறியக்கூட மாட்டார்கள். வயல்களில் சூடடிப்பின் நித்தியத்துவமும் முக்கியத்துவமும்போல் ஊர்களின் கோயில் வீதிகளில் போரடி இருந்தது. அவ்வாறு இருந்ததென்பதை அழியாத இலக்கியமாய்ப் பதிவாக்க எத்தனைபேரால் முடியப்போகிறது?

0

 தாய்வீடு, ஜுலை 2020

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்