‘மாயினி’யும், நாவலும், எஸ்.பொ.வும்

 


எஸ்.பொ.வென இலக்கியவாதிகளாலும், ‘பொன்னு’வென நண்பர்களாலும் அழைக்கப்பட்ட எஸ்.பொன்னுத்துரை (1932-2014)யின் படைப்புகள்பற்றி 2006இலும் 2011இலுமாக என்னால் எழுதப்பட்ட இரண்டு வியாசங்கள் அண்மையில் வெளிவந்த எனது ‘எதிர்க் குரல்கள்’ தொகுப்பு நூலில் உள்ளன. சிறுகதை நாவல் நாடகம் அபுனைவெழுத்து மொழிபெயர்ப்பு மற்றும் விமர்சனமென அவரது படைப்புகள் அனைத்தின் மேலாகவுமான பார்வையாக இருந்தவகையில், முரண்ணிலைக் கருத்துக்களின் அழுத்தமான வெளிப்பாடின்றி, படைப்பின் தன்மைகள் எதார்த்தமாய்த் தம்மை வெளிப்படுத்தி நிற்கும் தளங்களாக அவை ஆக முடிந்திருந்தன. மேலும் அப்போது அவர் ஜீவியவந்தராகவும் இருந்தவகையில் மனக் கிலேசம் கொள்ளாது தீவிர அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதற்கான வெளியும் இருந்திருந்தது.

ஆனால் ‘ஜீவநதி’யின் காலவரையறை (2000-2020)க்கு உட்பட்டதாக அவரது ‘மாயினி’ நாவல் மட்டுமே தேறுகிறவகையில், அதை மய்யமாகக்கொண்ட ஒரு திறனாய்வானது எதிர்நிலை முடிவுகளை மிகத் தூக்கலாய்க் காட்டிவிடுமாகையால் ஒரு நிறைந்த அவதானம் அதில் தேவைப்படும்.

ரசனை நிலை மற்றும் காலநீட்சியின் முன்னிலைத்துவக் காரணங்களில் தொடர்ந்தேர்ச்சியாக ஒரு பிரதியின்மேல் குவிக்கப்பட்ட முடிவுகளை  மறுக்கும் தீவிர நோக்கிலான பின்அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை அளவியல் கருவிகளாகக் கொள்ளும் தருணம் அவசமானது. அதேவேளை அதை முன்னெடுத்தல்   விமர்சனச் செயற்பாட்டுக்கு அவசியமானது. இலங்கையின் எக் காலகட்டத்து விமர்சன நிலையைப் பொறுத்தும் இந்த அவசியம் இரட்டிப்பான தேவையைக் கொண்டதே.

இதையொரு முற் சூசக அறிவிப்பாக்கிக்கொண்டு எஸ்.பொன்னுத்துரையின் ‘மாயினி’ (2007)யை மேலும் புரிவதற்காக ஏனைய அவரது நாவல்களின் சுருக்க விபரங்களோடு அதன்மேல் இனி கவனம் செலுத்தலாம்.

‘தீ’ (1961), ‘சடங்கு’ (1966 ‘சுதந்திரன்’ இதழ்த் தொடர்), ‘மாயினி’ (2007) ஆகிய எஸ்.பொன்னுத்துரையின் மூன்று நாவல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. ‘வீரகேசரி’த் தொடராக பெப். 02 1967 தொடங்கி பெப். 17 1967 வரை வெளிவந்து இடைநின்றுபோன ‘யோகம்’ என்ற தலைப்புள்ள நாவலைக்  கணக்கெடுக்க வேண்டியதில்லை. மேலும் எஸ்.பொன்னுத்துரை உட்பட சில எழுத்தாளர் சேர்ந்து முயன்ற ‘வண்ணமலர்’, ‘சதுரங்கம்’, ‘மத்தாப்பு’, ‘மணிமகுடம்’ போன்ற குறுநாவல், நாவல் முயற்சிகளையும் ஒதுக்கி வைத்துவிடலாம். மீதமாகும் ஏனைய மூன்றில் கால எல்லைக்குட்படும் ‘மாயினி’யில் நாம் கவனக் குவிப்பை நிகழ்த்தலாம்.

1885 இல் ‘அஸன்பே சரித்திர’த்துடன் தொடங்கிய இலங்கை நாவல் வடிவமானது  தனது ஆரம்ப கால வளர்நிலைகள் தாண்டி சமூகம் அறவியல் உளவியல் மற்றும் பாலியல்கள் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் கருவியாக உருப்பெறுவதன் முன்பாகவே தன் வீச்சு குறைந்துபோனது. தமிழ்நாட்டிலும் அதற்கு சிறிது காலம் முன்பாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும்கூட நிலைமை இதுதான். இதை Edwin Muirஇன் Essays on Literature and Society என்ற நூலிலுள்ள The Decline of the Novel என்னும் கட்டுரை தெளிவுபடுத்தும்.

1930களில் உப்புச் சத்தியாக்கிரகத்தோடு தமிழில் உந்தியெழுந்த சிறுகதை வடிவமானது, சுமார் மூன்று  தசாப்தங்ககளாக  தொடர்ந்து இலக்கிய உலகில் முன்னுரிமை கொண்டிருந்தது. ஆனால் அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்து அது ஆழமான கருத்தியல் வெளிப்பாட்டுக்கான சாதனமாக இல்லாதிருப்பதாய் பல எழுத்தாளராலும் கருதப்பட்டது. ஆரம்பத்தில் சிறுகதைகள் மூலம் இலக்கிய உலகினுள் பிரவேசித்த கே.டானியல் பின்னால் தன் கருத்துநிலை வெளிப்பாட்டினுக்காய் நாவல் இலக்கியத்தினுள் பிரவேசித்ததை இங்கு சுட்டிக் காட்டலாம். இதுவே ஜெயகாந்தனிடத்திலும் நடந்தது. இதுவே எஸ்.பொன்னுத்துரையிடத்திலும் வெளிப்பட்டது. இவர்கள் சிறுகதைப் படைப்பாளிகளாய் இலக்கிய உலகில் முகிழ்ப்புக் கண்டவர்கள்.

அதுவொரு நாவலின் உந்நத காலமாய்த் தோன்றியது. தமிழிலும் சமூக சீர்திருத்த, புரட்சிகர நாவல்கள் வடிவமையத் தொடங்கின. அதுவரை புறமொதுக்கப்பட்டிருந்த பேசுபொருள்கள் முதனிலைக் கவனம் பெற்றன. இலங்கை நாவலிலக்கியமும் இந்த எழுச்சியிலிருந்து தவறிப் போகவில்லை.

1961இல் வெளிவந்தபோதே எதிர்விமர்சனங்கள் பரபரப்பாகச் செய்யப்பட்ட நாவலாயிருந்தது ‘தீ’. அதுவொரு அதிசயமான நிலைமையாகத் தோன்றியது. ஏனெனில் பாலியல் சார்  விஷயமொட்டிய படைப்புகள் வெளிவருமளவு தமிழ்ப் படைப்புலகம் ஓர் அகற்சியும், இணக்கவிசையும் கொண்டதாகயிருந்தும், அவ்வளவு ஆக்ரோஷமான எதிர்ப்புகள் ஏது சந்தர்ப்பத்திலும் அதிசயப்பட வைக்கும்தான். 

‘சடங்கு’ நூல் ஒரு குடும்பத்தை முன்னுதாரணமாகக்கொண்டு அக் கால வடக்கு மத்தியதர வர்க்கத்தின் கொழும்பு அரச ஊழியர் பிரச்னையின் ஒரு கூறை வலுவாகப் பிரஸ்தாபித்தது. ஆனால் அச் சமூகத்தின் வாழ்நிலையைப் பேச வந்திருப்பினும், அது அடியாதாரமாய்ப் பேசிய பிரச்னை பால்நிலை சார்ந்ததாக இருந்தது. அதனால்தான் கலாநிதி நா.சுப்பிரமணியன் தனது ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலில் அதை பால்நிலைக் கதையென்ற பகுதியில் அடக்கி விபரித்தார்.

ஆனால் இங்கே விமர்சனத்திற்கு எடுக்கப்பட்டுள்ள ‘மாயினி’ இத்தன்மைகள் வாய்ந்ததில்லை. அது வரலாறு சார்ந்து ஒரு கலை மனத்தினுடைய அவதியின் வெளிப்பாடாய் அமைந்துபோனது. அது வடிவமிழந்து வந்தது. ஒருவகையில் தன் உள் மறைக்க மூடுதுகில் அணிந்து வந்ததாய் அதைச் சொல்லமுடியும். அப்போது நாவலென அதை எண்ணும் விந்தை நடந்தது.

‘மாயினி’ நூலின் வடிவம் எதுவெனக் கேட்டால் பதிலிறுப்பது சாதாரணமாக இயன்றுவிடுவதில்லை. அது தன்னளவில் பரீட்சார்த்தப் படைப்பாக இருந்தும் எதுவித கிலேசமுமின்றி தன்னையொரு தமிழில் முன்னோடியற்ற அரசியல் முதல் நாவல் என்று சொல்லியது. ஆயினும் அந்தப் பதிலிலும்  நம்பிக்கைகொள்ள முடிவதில்லை. அதனால்தான் ‘மாயினி என்ன? நாவலா? அது சுவைஞனின் தளம்’ என்ற பிரதியின் முன்னீட்டில் எஸ்.பொன்னுத்துரை கூறும் வரிகளைத் துணைக்கழைக்கவேண்டி உள்ளது. இதன் விளக்கம் அது வடிவங்கடந்த வடிவம் என்பதே.

நீண்டகாலமாக நாவலெனவே குறிப்பிடப்பட்டு வந்திருக்கும் ‘சடங்கு’ உண்மையில் ஒரு குறுநாவல் வகைமைக்குள் அடங்கிப்போவதே. அக் கால ‘இலக்கிய வழக்கப்படி’ அது நாவலாகக் கொள்ளப்பட்டு வந்திருப்பினும், அது நாவலாக விகாசம்பெறாத குறுநாவல் படைப்புத்தான். அதே அபிப்பிராயத்தை ‘தீ’யின்மேலும் வைக்க முடியும். ஆனால் ‘தீ’யானது நாவலென மேன்மேலும் கொள்ளப்படும் நூல்களைப்போன்றாவது இருக்கின்றது. ‘மாயினி’ அந்தவகை அனுகூலமும் அற்றது.

ஒரு புனைவுப் பிரதி குறுநாவலாகவா நாவலாகவா இருக்கிறதென்பதைவிடவும், அந்த இரண்டிலொரு வடிவத்தை அது கண்டிப்பாகக் கொண்டிருக்கவேண்டும் என்பது என் தரப்பு.

இந்த இடத்தில் சிறிது புள்ளிவிளக்கமாய் குறுநாவல், நாவலென்ற இந்த இரண்டு வகைமைகளையும் காண்பது தக்கது.

கடவுள் வாழ்த்தை முதலில் உடைத்தாய், ஒப்பற்ற குணங்களுள்ள ஒரு தலைவனைக் கொண்டதாய், நாடு நகர்களின் வர்ணனையோடும், அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றின் உறுதிப் பயனளிக்கும் விசேஷம்கொண்டும் இயற்றப்படுவதே பெருங்காப்பியமென்றும், அவற்றில் ஒன்றோ பலவோ குறைந்தவை சிறுகாப்பியமெனப்படும் எனவும் தண்டியலங்காரம் சொன்னதுபோன்ற ஒரு கறாரான வரையறையை குறுநாவல் – நாவல் விஷயத்தில் அளித்துவிட முடியாது. அது மிக நுட்பமாக அணுகிப் பார்க்கப்பட வேண்டியது.

‘Novella என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தக் குறுநாவலானது படைப்பாளிக்கு மிகவும் சிரமம் தருகிற  ஒரு வடிவமாகும். அதனாலேயே மிக அபூர்வமாக அவற்றின் படைப்பாக்கங்களும் பல்வேறு மொழிகளிலும் இருந்திருக்கின்றன. சிறுகதைபோலன்றி தன் தரிசனத்தின் கவனங்களை ஒரு நாவலைப்போல இதனால் பரக்கவிட முடியும். ஆனால் ஒரு நாவலின் விகாசத்தை எடுக்காமல் வாழ்வின் முழுப் பரப்பையும் காட்டுவதாய் அது அமைந்திருக்கவேண்டும். நாவலின் கவனங்களை உள்ளடக்கி, சிறுகதையின் வீறுகொண்டதாய் அமையாத நீளக் கதை அப்போது நெடுங்கதை எனப்படும்.

மிக நீண்ட கதைகளை நாவலாகவும், நீண்ட கதைகளை குறுநாவலாகவும் கொள்ளும் பொத்தம்பொதுவான விதிகள் மாறி, நிறுதிட்டமான விதிகள் நாவலின் வளர்நிலைக் காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் கடைக் கால்வரை  வரையப்பட்டு வந்துள்ளன. புதிய சித்தாந்தங்களும் கருத்துநிலைகளும் அவ் விதிகளை இன்று பெருமளவு மாற்றிப்போட்டுள்ளன.

இன்றைய வாழ்வியலின் எந்தப் பிரச்னையையாவது ஒரு நாவல் முன்வைக்கிறதா, அதற்கான விடையைக் கண்டடையும் ஒரு வாசலையேனும் திறந்துள்ளதா என்பதிலேயே வாசக கவனம் இன்று முனைப்பாய் இருக்கிறது. மேலும் வாசிப்பே அர்த்தங்கோடலைச் செய்வதான கருத்தாக்கமும் நிறைபேறடையத் துவங்கியுள்ளது. அது பிரதியின் அர்த்தம் ஆசிரியனிலிருந்து அல்ல, வாசகனின் வாசிப்பிலிருந்தே முகிழ்ப்பதான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. ‘ஆசிரியனைக் கொன்று வாசகன் பிறக்கிறான்’ என்று அண்மையில் புழக்கத்திற்கு வந்திருக்கும்  பின்நவீனத்துவ சொலவடையின் அர்த்தம் இதுதான். ஒரு நாவலின் உட் பிரதிக் கூறுகளும் இன்றைய வாசகனிடத்தில் கூடிய கவனம் பெற்றிருக்கின்றன. பழைய அபிப்பிராயங்கள் இன்று மறுவிசாரணைப் படுகின்றன. குறுநிலம் தாண்டி சர்வ வியாபகமாய் இன்றைய இலக்கிய விசாரம் இருக்கின்றது. இவற்றை ஞாபகத்தில் கொண்டே பிரதித் தன்மையின் கூறுகளில் கவனம் குவிக்கவேண்டி இருக்கிறான் விமர்சகன். ‘மாயினி’ இதற்கு விலக்கில்லை.

அதையொரு விவகாரமாகவே  இவ் உரைக்கட்டு தன் விசாரணையில் கொள்கிறது. பிரதியின் கட்டமைப்பு, மொழிநடை, மொழிப் பாவனை மற்றும் அர்த்தம் கொள்ளும் விகாசம் ஆகியவையும் முக்கியமானவையென்ற திடம் அதற்குண்டு. இவற்றை எதிர்கொள்ள ‘மாயினி’யால் முடியுமா என்பதே இங்குள்ள விசாரணை.

392 பக்கங்களைக் கொண்ட இந் நூலின் முதலாவது பகுதி ‘மாயி’யாகவும் இரண்டாம் பகுதி ‘மாயினி’யாகவும் பேர் சூட்டப்பட்டுள்ளன. அதன் கதை இதுதான்:

சித்த வைத்திய முறைப்படியாக காலம் கடந்து பயணிக்கச் செய்யும் ஒரு மருந்து (செந்தூரம்) தயாரிக்க  நந்தன் எனப்படும் நந்த மித்திர பண்டார, களனி கங்கைக் கரையெங்கும் முகிலி தேடி அலைகிறான். அவனே தன் இனவரைவியல் தெரியாதவனாய் தான் ஒரு மலையாளியா, தமிழனாவென்ற தேடுதல் கொண்டவனாயும் இருக்கிறான்.  

ஒருபோது அவனுக்கு அம் மூலிகைச் செடியும் அகப்படச் செய்ய அதன் வேரைத் துணித்து எடுத்துக்கொள்கிறான். இப்போது ஆய்வில் தனக்குத் துணை செய்யக்கூடிய தகுந்த உதவி தேவையாவதால், அதற்கேற்றவள் தன் தோழி மல்லிகாவேயெனத் துணிந்து நந்தன் அவளை நாடுகிறான். பின் செந்தூரத்தை தயாரித்து அதை அவன் உட்கொள்வதோடு ‘மாயினி’யின் முதலாம் பாகம் முற்றுகிறது.

புனைவற்ற ஓர் இலங்கை வரலாற்றை அறிவதே நந்தனது ஆசையாக – அவனூடாக எஸ்.பொன்னுத்துரையினதாக இருப்பினும், கடல்கோள், இலங்கைத் தோற்றமெல்லாம் புனைவின் வழியான விபரிப்புகளாக ஆகிவிடுகின்றன. குமரிக் கண்டம், பஃறுளியாறு யாவும் இலக்கிய வெளிச் சான்றுகள் தவிர விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் அற்றவையென்பதை பிரதி மறந்துபோகிறது.

இனவரையான ஈர்ப்புடன் ஒரு வரலாற்றுத் தேடல் எதுவித நன்மையையும் அளித்துவிட முடியாதென்பது உரை மரபுகளிலிருந்து தமிழினம் பெற்றுள்ள பாடம். அதை எஸ்.பொன்னுத்துரை உதாசீனம் செய்தது மகா பாவம்.

மகாவம்சம் எழுதிய மகாநாம, அவருக்கு வரலாற்றின் வழி காட்டிய பிராமணர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், குசுமாசன தேவி, விமலதர்ம சூரியன், மாயாதுன்னை, ஏகலப்பொலவென சரித்திரம் முழுக்க திசையழிந்து பறக்கிறது நூல்.

பின்னால் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்கவுடனான நேர்காணலும், சிறிமாவோ பண்டார நாயக்க ஹிட்லர் சந்திப்பும் நடைபெறுகின்றன. பண்டார நாயக்க, சிறிமாவோ, சந்திரிகாவுடன் அனுர பண்டார நாயக்கவின் பிரசன்னமும் நூலில் இடம்பெறுகின்றன. அது பெரும்பகுதியாகவும் இருந்துவிடுகிறது. நீண்ட காலம் தேசத்தின் பொறுப்பு மிகுந்த ஆட்சிப் பகுதியில் இருந்தவர்களென்பதால் அது நியாயமாகக் கொள்ளப்படலாம். இலங்கைத் தலைவர்கள்போல் காந்தி, நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகிய இந்தியத் தலைவர்களும் நூலிலே வந்துபோகிறார்கள். இவற்றோடு நந்தனின் மல்லிகாவுடனான காதல் ஓர் அவசியம்போல.

வரலாற்றில் வரும் சிங்களப் பெண்கள்மீது ஒரு குரோதத்தோடு வரும் பௌதிக வர்ணனைகளும் உடலுறவுகளும் நூலின் அவசியம் கடந்தும் சென்றிருக்கின்றன. ஆனால் எஸ்.பொன்னுத்துரையின் மகா திறமை அதிலேதான் இருக்கிறதென்ற உண்மை அங்கே இருக்கிறது.

நந்தனின் காலப் பயணத்தில் அவன் சந்திக்கும் கடைசி மனிதராக ஹிட்லரே இருக்கிறான். அத்துடன் நந்தனின் செந்தூரத்தினது ஆற்றலும் மெதுமெதுவாகச் சக்தியை இழக்கிறது. மல்லிகை (மல்லிகா) வாசத்தை நந்தன் உணருகிறான். கதை முடிகிறது. இது எதுவாகவும் இருக்கட்டும், நாவலாக இல்லையென்பதை ஓங்கி இங்கே உரைக்க முடியும்.

ஆனால்…

மாயினி எதுவுமே இல்லையா எனில், வரலாற்றுக் கனவும், மொழியின் வீர்யமும் அதிலுள்ளன. எஸ்.பொன்னுத்துரைக்கு சொற் காமம் உண்டு. லா.ச.ராமாமிர்தத்தினதுபோன்ற சொல்லுபாசனை கொண்டவர் அவர். இதுபற்றி அவர் நிறைய இடங்களிலே சொல்லியும், எழுதியும்கூட, வந்திருக்கிறார். மௌனிபோல் சொற்களைக் கவனம் வைத்திருந்து தகுந்த இடங்களில் பிரயோகிக்கும் ஆற்றல் அவருக்கு நிறையவுண்டு. அது இந்நூலில் நன்கு தொழிலாற்றியிருக்கிறது. மொழி பிரதியாக இதை பெருமளவு தாங்காவிடினும், சுவையாக பக்கம் முழுதும் செறிந்திருக்கிறது. படைப்பாளி தன் நினைப்பில் தோற்றிருக்கிறார் என்றாலும், எங்கோ வென்றிருக்கிறாரென்ற உண்மையும் அதனுடன் இருக்கிறது.

அவரது அனைத்து நாவல், குறுநாவல், சிறுகதைகளிலும் தன் மண்ணின் மணத்தை செறியப் பண்ணியவர் எஸ்.பொன்னுத்துரை. அவரது பாத்திர உரையாடல் மொழி அத்தனை வீரியம் கொண்டது. அந்த ரசிப்புக்கு இந்த நூல் இடம் வைக்கவில்லை.  

நந்தனது வாழ்வின் ஒவ்வொரு விசாரணையின் போதும் நூலாசிரியரே இடைப் புகுந்து அது சார்ந்த ஒரு சரித்திரக் குறிப்பை சொல்லிச் சென்றுவிடல் நிகழ்கிறது. அவை நூலின் ஓட்டத்துடன் ஒன்றவிடாது வாசகனைப் பின்னின்று இழுப்பதோடு, ஒரு பள்ளி ஆசிரிய அதிகாரத்துவத்தையும் எடுத்துக்கொள்கிறது.

தானொரு நல்லாசான் என்பதை நிரூபித்தவளவு தானொரு சிறந்த கலைஞனென்பதை எஸ்.பொன்னுத்துரை இந் நூலில் நிரூபிக்கவில்லை.

ஜீவநதி, நாவல்மலர், 2021 

0

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்