தேநீர்: முரண்களின் கலவை


 

1.

கவிதையின் ஊற்று பற்றிய, கவிதை எதுவென்பதுபற்றிய, அதன் தரம் தேரும் விமர்சனம்பற்றிய, ரசத்தைக் கண்டடையும் வழிகள்பற்றிய உசாவலானது கவிதையினளவான பழைமை வாய்ந்ததெனினும், புதிய உணர்வானுபவங்களின் மேலான அறிகைகளால் பழைய முடிவுகளின் சிதைவும், புதிய பரிமாணங்களின் தோற்றமும் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. ஆயினும் கவிதை வாசிப்பின் காலமும், மனோநிலையும் எந்த கலா ஊடகத்துக்கும்போல் கவிதைக்கும் பொதுவான அளவைகளென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையென்று தோன்றுகிறது.

எதுபற்றியும் கவிதை எழுகிறது. புல்பற்றி, மரம்பற்றி, மேகம்பற்றி, பிரபஞ்சம்பற்றி, மனிதன்பற்றி, மனித உறவுகள்பற்றி, இன்ப துன்பங்கள்பற்றி, வாழ்வும் மரணமும்பற்றியென அது அடக்கிக்கொண்டிராத பேசுபொருள் இல்லை. செய்யுளின் இலக்கணம் மீறப்படத் தொடங்கிய காலத்திலிருந்து இப்பொருள்கள் முதன்மை பெறுவதைக் காணமுடியும். கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மணி, ஞானக்கூத்தன், பிரமிள், பசுவய்யாபோன்றோரின் கவிதைகளின் உன்னிப்பு ஒரு வாசகரை மேற்கண்ட முடிவில்தான் கொண்டுவந்து சேர்க்கும்.

எனவே தேநீர்பற்றியும், கோப்பிபற்றியும், அவற்றின் சுவைப் பரவசத்தில் விரியும் உரையாடல்கள் முகிழ்த்தெழும் இணைவிழைச்சுச் சுகங்கள் இழப்புகள்பற்றியுமான தனி மனித அவஸ்தைகள் கவிதைகளாய் தமிழில் தோன்றுவதற்கு முன்னதாகவே மேற்கின் கவிதையுலகில் அவை பாடுபொருள்களாய் அமைந்துவிட்டன. Poetry in Motion: The Coffee Table Book (By Howard S.Milnar Anapolsky), Collective Works of the Sweet Tea Poetry Circle, A Cot Cup of Tea (Poetry Collection by Saeedeh SH) போன்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகளை உதாரணத்திற்குச் சுட்டலாம்.

நரம்பூக்கிகளான தேநீர் மற்றும் கோப்பி போன்றனவற்றின் அருந்துநிலைக் காலங்களும், பகிரும் விஷயங்களும், விதங்களும் அச்சொட்டாய் மேற்கில்போல் கிழக்கில் இல்லையெனினும், ஒரு கலாச்சாரமாய் அவை இருக்கவே செய்கின்றன. ஆயினும் வேறொரு குணமும் நிறமும் கொண்டவையாய் அவை. அதை இங்கே அழுத்தமாய்ச் சொல்லவேண்டும். கிழக்கின் பொருளாதார நிலையின் சமமின்மையால் தேநீர் அல்லது கோப்பி ஒரு தளத்தினரால் ஒருவிதமாய்க் காணப்படுகையில், மத்தியதர மேலடுக்கினரால் அது இன்னொரு விதமாய்ப் பார்க்கப்படுகிறது. உழைப்பின் சமூகநிலை வேறுபாடுகளுக்கிணைய அவை பாவிப்பின் எழுதாச் சட்டங்களாய் அமைந்துபோகின்றன. அதனால் தேநீர் என்னும்போது அதன் ருசி மணம் குணம் உற்பத்தி விநியோகம் மட்டுமில்லை, தேநீரின் கிளர்ச்சியில் விரியும் கண உணர்வுகள் நினைவுகளாய்ப் பதிவிறக்கம் கொள்வதும் முக்கியமாக நிகழ்கிறது. அவ்வாறுதான் அவை பதிவாகியிருக்கின்றன. அவ்வாறேதான் பதிவாகவும் முடியும். அதுவே மேலுள்ள தொகுப்புக்களிலிருந்தும் தெரிய வந்திருக்கின்றது.

தமிழில் இவ்வாறான தொகுப்புகள் இல்லையெனவே தெரியவருகிறது. கூட்டாஞ்சோறு, நிலாச்சோறுபோன்ற இன்னும் உணர்வுகெழுமிய மக்களின் பல கூடற்காலங்களை தமிழ்ப் பரப்பு கொண்டிருப்பினும், தேநீர் கோப்பிபோன்ற அருந்தற் காலப் பகிர்வுகள் இல்லையென்று கொள்வதில் தப்பில்லை. ஒருவேளை அவ்வாறு உண்டெனினும் ‘தேநீர்: முரண்களின் கலவை’போல் இல்லை. இது வேறு; வேறொரு பரிமாணம்.

 

2

‘தேநீர்: முரண்களின் கலவை’ நூல் வெளிவந்தமை அறிந்தபின்னும் வாங்குவதற்கு நாளாயிற்று; வாங்கிய பின்பும் வாசிப்பைத் தொடங்குவதற்கு பல்வேறு காரணங்களில் நாளாயிற்று; வாசிக்கத் தொடங்கிய பின்பும் முடிப்பதற்கு நாளாயிற்று.  கருத்துக்கள் எளிமைப்படுத்தப்பட்ட கவிதைகளாக பிரதி இருக்கவில்லையென்பதை அதற்கான முதன்மைக் காரணமாய்ச் சொல்லவேண்டும். அதனால் அர்த்தங்கள் அச்சொட்டாய்ப் பிடிபடாத கவிதைகளையும் சொற்களின் ஈர்ப்போடு ஓடிக் கடந்துசென்று இயல்பான என் வாசிப்பு வேகத்தைத் தக்கவைக்க முடிந்தது. ஆனாலும் கவிதைகளில் இன்னும் பிடிபடாத உள்ளார்ந்த விஷயங்கள் இருப்பதை மனம் உணர்ந்திருந்தது. அதனால் ஒரு இரண்டாம் மூன்றாம் வாசிப்புக்களைச் செய்யவேண்டிய அவசியத்தைத் தவிர்க்க முடியாதிருந்தது. அப்போது பல கவிதைகளின் உயிராய் உள்ளடங்கியிருந்த அர்த்தங்கள் பிடிமானமாகின.

சில பல வருஷங்களின் முன்பானால் ‘இலக்கணச் சிறையுடைத்து வந்த கவிதையை மீண்டும் தளைப்படுத்தும் முயற்சி’யென இத் தொகுப்பை நான் உதாசீனம் செய்திருக்கவும்கூடும். இன்று அனுபவம் சார்ந்த அறிவு சொல்கிறது, இதுவும் வேண்டுமென்று. நீர்த்துப்போகும் பின்னடைவிலிருந்து கவிதையின் இலக்கியத் தர மீட்புக்கான வழியாக இதைக் காணமுடிகிறது. அதனால் நிதானமாக வாசித்து வாசகச் சுகத்தை அனுபவிக்க வழி பிறந்தது. ஆற்றுப்படுத்துதல் சங்க காலத்தில் மட்டுமல்ல, இப்போதுமுண்டுவென்ற நம்பிக்கையில், நான் சென்ற வழியையும் அடைந்த அனுபவத்தையும், ‘தாய்க்குத் தாய் தன் மணாளனோடாடிய சுகத்தைச் சொல்லெனில் சொல்லுமாறெங்ஙனே’ என்றபடியான மயக்குறு நிலை இருப்பினும் இந்த உரையீட்டில் பகிர முயல்கிறேன் – ஆற்றுப்படுத்த முனைகிறேன்.

 

3

‘தேநீர்: முரண்களின் கலவை’யினுள்ளான பிரவேசம் இலகுவாயிருக்கவில்லை என்பது ஏற்கனவே சொல்லப்பட்டது. மேலும் அது ஒரு ஒற்றைப் பிரதியாய்க் கொள்ளப்படும் அமைவோடும் இருந்திருக்கவில்லை. இதை ஒரு விசேஷத்தின் தன்மையாகவே இங்கு அடையாளமாக்குகிறேன். என்னளவில் வெவ்வேறு கலைத்துவ வகைப்பாடுகள்கொண்ட நான்கு  பிரதிகளின் ஒட்டுமானமாய் இந்நூல் விளங்குவதைச் சொல்லவேண்டும்.

முதல் பிரதியாக இதன் உருவப்பாடு. முன் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை மிகுந்த சிரத்தையோடு கலாபூர்வமாக பிரதி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய சற்சதுர வடிவம் கொண்டிருந்தது பிரதி. அதன் அட்டைப் புற வர்ணத் தேர்வில்கூட மிக்க அவதானம் செலுத்தப்பட்டதாய் இருந்தது. எடுத்த எடுப்பிலேயே ஆதர்ஷம் பிரதியுள் புதைந்துபோயிருந்ததைக் காணமுடிந்திருந்தது.

இரண்டாவதாக, கவிதைகளின் முன்னிலும் அருகிலும் பின்னிலுமாய் அவற்றின் உள்ளுறை அர்த்தங்களைப் பிரதிபலிக்கும்வண்ணம் இடம்பெற்றிருந்த வைதேகியின் ஓவியங்களைச் சொல்லவேண்டும். மிகைப்பில்லாத வர்ணங்களே அவற்றை வடிவாக்கவும் செய்திருந்தன. நூலின் உள்ளடங்கிய பகுதியாக சித்திரங்கள் ஆகியிருந்தாலும், தனக்கான விசேஷத்தனத்தை அவை கொண்டிருந்தன.  ஒரு வடிவத்தின்  வர்ணம் அதே வடிவத்தின் இன்னொரு வர்ணத்தில் வேறோர் அர்த்தத்தைப் பதித்துப் போகிறது. அந்தவகையில் சித்திர வார்ப்பு அர்த்தமுள்ள ஒரு தனிப் பிரதியாகியிருந்தது.

மூன்றாவது பிரதியாக தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம். தமிழ்க் கவிதைகளின் கீழே பெரும்பாலும் அதே பக்கத்தில் அமைந்ததால் மட்டுமில்லை, தமிழில் சில அர்த்தங்களை முழுமையாகும்படி வெளிக்கொணர்ந்தது என்றாலும் பிழையில்லை. நெய்த நூலிலும் தைத்த நூல் வலியதாக இருக்கக்கூடாதென்ற  பழைய நியதியுண்டு. மொழியாக்கம் மூலத்தைக் கடந்திருந்ததென்பது தவறாக நினைக்கப்படும். ஆனால் மூலத்தை கைநழுவ விடாத அவதானம் ஒவ்வொரு கவிதையின் மொழிபெயர்ப்பிலும் காட்டப்பட்டதாய் நான் உணர்கிறேன். அந்தவகையில் அதுவொரு மீள வாசித்தலுக்கான ஜன்னலாக இருந்தவகையில் வித்யா ஶ்ரீநிவாசன் நினைக்கப்படவேண்டியவர் ஆகிறார்.

நான்காவதாக பா.அகிலனதும் கீத்தா சுகுமாரனதும் முப்பது முப்பதான அறுபது கவிதைகள். மேலே குறிப்பிடப்பட்ட பிரதிகளின் துணைவலிமையுடன் கடக்கப்பட்ட இக் கவிதைகளே முதன்மைப் பிரதியாய் நிற்கின்றன. சொல்லவந்த கருத்தைத் தவிர வேறெதுவும் கரிசனமற்று கவித்துவத்தின் மேனிலை விளையாட்டுக்கு முற்றிலுமாய் தம்மை ஆளாக்கியிருந்த கவிதைகள் அவை. அதில் புரிதல் இலேசுவாக இருக்கவில்லையெனினும், புரியப்பட்ட வேளைகளில் கவிதைப் பேரின்பம் செய்தனவென்ற நிஜத்தை இங்கே குறிப்பிடுதல் தக்கது.

புரிதலென்பது வாசக நிலை சார்ந்ததென்ற பின்நவீனத்துவக் கூற்றில் எனக்கு ஐயப்பாடு என்றும் இருந்ததில்லை. வாசகரே அர்த்தம் கோடுபவராக இருக்கிறார், அதனால் ஆசிரியர் இறந்தவர்போல் ஆகிறார் என்பதிலும் நான் மாறுபாடுகொள்ளவில்லை. அந்தவகையில் வாசகனாய் நான் புரிந்ததையே கவிஞர்களும் கருதியிருந்தார்களென்று நிச்சயம் பண்ண என்னால் முடியாது. எனதைவிட இன்னொரு வாசகரின் வாசிப்பு வேறொரு அர்த்தத்தை முன்வைக்க முடியுமென்ற நியாயப் புரிதலும் என்னிடத்திலுண்டு.

நூலிலுள்ள அணிந்துரை, முன்னுரை, மதிப்பீட்டுரைகள்பற்றி சொல்லவும் சில விஷயங்கள் உள. ரசனையின் கட்டுக்கோப்பின் அடிப்படையிலான இம் மதிப்பீடுகள் உண்மையில் மிகவும் கச்சிதமாய் அமைந்திருந்தன. றியாஷ் லத்தீபின் அணிந்துரை நூலின் மொத்த மதிப்பீட்டை கவிதை நயத்திலன்றி, கவிதையாகவே வெளிப்படுத்தியிருந்தது. சாஷ் திரிவேதியின் முன்னுரை எல்லை கடந்துவிடாத அவதானத்துடன் இருந்தது. மம்தா சாகர், மிகயேலா மிஸ்கெலியுக்கின் மதிப்பீடுகள்கூட குறைந்த வரிகளில் ஆற்றல்வாய்ந்த கருத்துக்களை முன்வைத்திருந்தன. பிற புனைவிலக்கியப் பிரதிகளில் இவ்வகை முற்தேற்றங்களினை உடலின் வீக்கம்போல், வேண்டாது வளர்ந்த கழலைபோல் எண்ணுவேனானாலும், இந்தப் பிரதியில் அவற்றை ஒரு ‘மும்முலை’க் கோட்பாடாய், வித்தியாசத்தின் விசேஷமாய்க் கண்டிருந்தேன்.

 

4

பா.அகிலனது முப்பதும், கீத்தா சுகுமாரனது முப்பதுமாய் அண்ணளவாய்ச் சிறிதான அறுபது கவிதைகளைக்கொண்ட தொகுப்பிது. இத் தொகுப்பின் கவிதைகளில் புரிதலும் புரியாமையும்பற்றிய விவகாரம் தலையிடுவது தவிர்க்கமுடியாலே இருக்கும். அதனால் அவை சென்றிருந்த இலக்கியத் திசைபற்றி சில வார்த்தைகளை தெளிவுக்காக இங்கே முன்மொழிந்துவிடுவது சிறப்பு.

பல கவிதைகளின் விளக்கத்துக்கான சூட்சுமம் இதில் இருக்கிறது. ஒருவித முரணிலைகொண்ட கவிதைகள் இவை. கவிதையுள் இவ்வாறான முரணிலையைப் புகுத்துவது ஓர்  ஆங்கில கவிதை முறைமை. சேக்ஸ்பியரிலிருந்து ஜெரார்ட் ஹொப்பின்ஸ் ஈறாக ஜோன் அப்டைக்வரை இந்த (Dissonance ) கவிதை வகைமையைப் பெரிய அளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் உரையில் பயன்பட்ட அளவுகூட கவிதையில் இருந்ததாய்ச் சொல்ல முடியாது. ஆயினும் சி.மணி, நகுலன், பிரமிள் போன்றவர்களிடத்தில் ஓரளவு பயன்பாடு கொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருக்கிறது. முரண்களின் கலவையென்பது தேநீரில் செங்கரும் சாயமும் வெள்ளைப் பாலும் கலப்பதான  காட்சிப் புல முரண் மட்டுமில்லை, அது கடந்த உணர்நிலைக் கலப்பே இருக்கிறது.  ஓர் இலக்கிய உத்தியாக அது பயன்பாடு கொள்கையில் வெளிப்புல அர்த்தங்களை மீறிய நினைவின் அடுக்கிலுள்ள படிமங்கள் காட்சிப்படுகின்றன.

இந்த Dissonance என்பது ஆரம்பத்தில் மேற்கத்தய சங்கீதத்திலேயே பயில்விலிருந்தது. காலப்போக்கில்தான் கவிதைத் துறைக்குப் பரவி வந்தது. அப்போது ஹைக்கூ கவிதைபோன்றதென பலரையும் அதன் குறுகிய அடியளவும், உணர்வு முரண்களின் கலவையாக இருப்பதும் மெய்யாகவே கருதவைத்தது. ஆங்கிலக் கவிதை வரலாற்றில் பெரும்பாதிப்பை நிகழ்த்தாவிட்டாலும், பின்னால் ரசனையாளர்களுக்கு பேரின்பம் அளிப்பதான கவிதை வகையினமாக இது ஆகியிருந்ததென்கிறார்கள் ஆங்கிலக் கவிதை விமர்சகர்கள். இந்த திறப்புடன்தான் பா.அகிலனதும், கீத்தா சுகுமாரனதும் கவிதைக்குள் பிரவேசிக்கவேண்டும்.

 

5.

முதலில் இடம்பெற்றிருக்கின்ற கவிதைகள் பா.அகிலனுடையவை.

முதன் முதலில் வெங்கட் சாமிநாதன் மூலம்தான் பா.அகிலனது கவிதைகள் எனக்குப் பரிச்சயமாகின. அகிலனின் கையெழுத்துக் கவிதைகளிலிருந்து அவற்றை அவர் சிலாகித்திருந்தார். அன்றிலிருந்து அப் பரிச்சயம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவரது பதுங்கு குழி நாட்க’ளிலிருந்து ‘அம்மை’ ‘சமரகவிகள்’ ஈறான நூல்களின் பல கவிதைகள் நீண்ட காலம் என் மனத்தை அதிர்வு செய்திருந்துகொண்டு இருந்திருக்கின்றன. அவற்றிலிருந்து ‘தேநீர்: முரண்களின் கலவை’ சற்று வித்தியாசமானது. பொதுவாக சொற்களின் கனதியோடு கூடியவையாக அவரது ஏனைய கவிதைகள் இருந்தபோது, இதுமட்டும் தன்னை சொற்களின் வழி மிக இறுக்கமாகக் கட்டமைந்த கவிதையாக்கிக்கொண்டிருந்தது.

இரண்டடி மூன்றடி நான்கடி ஆறடியென குறைந்த அடிகளைக்கொண்ட இக் கவிதைகள், ஒரு நல்ல வாசகருக்கு நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலிய சங்கத் தமிழ்த் தொகுப்புகளை நினைவுறுத்தாமல் போகாது. இது அவையல்ல. இரண்டுக்குமிடையே இரண்டாயிரமாண்டுக் காலவெளி இருக்கிறது. மட்டுமல்ல, கவிதையின் – இலக்கியத்தின் – சமூகத் தளமே இன்று வேறாகியிருக்கிறது. இலக்கியம் சமூகத்திற்காகவென்ற கருதுகோளில் முக்கியத்துவம் இருக்கிறது. ஆனாலும் இலக்கியமென்பது இலக்கியத்தின் நோக்கத்திற்கானது என்ற கருத்தியலும் மறுக்கப்பட முடியாதது. அடியளவுக் குறுக்கம், சொற்களின் அடர்த்தி, வரிகளுக்கிடையேயுள்ள வெளி ஆதியன இவற்றின் பொதுக் குணங்களாக இருப்பதனாலேயே பெரிய ஒற்றுமைகளை இரண்டினுக்குமிடையே கண்டுவிடமுடியாது.

நான் யாருமேயில்லையென்ற பிரசித்தத்துடன் தொடங்கும் முதலாவதாக வரும் நாலடிக் கவிதை, மழையிராவைத் தொடர்ந்த ஒரு குளிர்காலையில் சுயம் (Subject) தன்னை தேநீராய் வெளிப்படுத்துகிறது. தேநீரின் தேவையைச் சுட்டலாம். தேநீரே தேவையுணர்ந்து அர்ப்பணிப்புடன் சுயமாய்க் காத்திருப்பதென்பது விசேஷமான விபரிப்பு.

‘அவள் உடைந்த தேகத்தால்’ எனத் துவங்கும் நாலாவது கவிதை, தன் ஆறாவது அடியில் முடிகிறபோது உள்ளடங்கிய ரௌத்திரத்தைக் கொண்டிருக்கும். விருப்பார்வத்துடன் இருக்கவேண்டிய வாழ்க்கை கட்டாயமாகி அது அலுத்துப்போகிற ஒரு தருணத்தில் உணர்வுகள் ஒன்றிப் போகமுடியாத இருபேரின் மனநிலைகளில் ரௌத்திரம் தவிர வேறுணர்வுகள் பிறப்பது சாத்தியமில்லை. இது பெண்ணியக் குரலாய் ஒலிக்காவிட்டாலும், அநீதி விளைக்கப்பட்ட பெண்ணின் குரலாய் சமையலறையிலிருந்து ஒலிக்கிறது.

ஆறாம் கவிதை சமூகத்தின் தள நிலைமைகளினை மௌனமாய்ச் சபிப்பதாகும். தேநீரின் உருவமென்ன எனக் கேட்டு விரியும் அக் கவிதை, ‘நெடுத்து உருண்ட போத்தல் அல்லது வளைந்த சிரட்டை \ என்றான் தரைக்கு விரட்டப்பட்டவன்’ என்று முடிகிறபோது சமூகத்தின் இருவேறு தளங்களின் இருப்புக்கான நியாயத்தை எதுவித கோஷமுமின்றி விசாரிக்கிறது.

பன்னிரண்டாம் கவிதை ஆவி பறக்கும் தேநீருக்கு சாயத்தைத் தரும் வஸ்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் தொழிலாளர் படும் பாட்டிலிருந்து, அவர்களது செந்நீரிலிருந்து பிறப்பதாய்ப்  பேசுகிறது.

அதுபோலவே தேநீரின் வேரைத் தேடுகிறது பதினேழாவது கவிதை. தேயிலையின் வரலாற்றுச் சோகத்தின் நினைவூட்டலாகிறது  அது.

‘தேநீர் ஒரு நூல் \ அது முடிவதில்லை’ என்கிறது இரண்டடிகளைக் கொண்ட ஒரு கவிதையின் பெரும்பாகம். வாசக மனத்தின் இயல்புக்குத் தக அர்த்தங்களை விரிக்கும் வெளி அநாயாசமாகவே  கவிதையில் அமைந்துவிடுகிறது. துணி தைக்கும் நூல், வாசிக்கும் நூல் எதுவாக எடுத்துக்கொண்டாலும் கவிதையின் அர்த்தம் இங்கே வேறுபடுவதில்லை. மேலும் இந்த இரண்டடிப் பெரும்பாகம்  இந்த நிமிஷம்வரை ஒரு உரைநடைக் குறிப்பாகவே இருக்கவும் செய்கிறது. ‘விமலா அக்கா’ என்ற வெறும் விளி  வார்த்தைகளால் அது பூரணப்படும்போதுதான் கவிதை மாயம் பிறக்கிறது.

இப்போது கவிதையை முழுதாகப் பார்க்கலாம்:

‘தேநீர் ஒரு நூல்;

அது முடிவதில்லை, விமலா அக்கா.’

பா.அகிலனது கவிதைகளில் வரலாற்றின் துரோகங்கள் மட்டுமில்லை, தேநீரின் நிறமும் மணமும்கூடப் பேசப்படுகின்றன. முப்பது கவிதைகளும் முப்பது விதங்களெனினும், அவை பேசுவது இழப்புகளதும் சந்தோஷங்களினதும் முரண் கலவையாகவே இருக்கிறது.

 

6

இவற்றினைத் தொடரும் கீத்தா சுகுமாரனின் கவிதைகளுடனான தொடர்பு எனக்கு அவரது ‘ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை’ (2014) என்ற காலச்சுவடு வெளியீடான அவரது கவிதைத் தொகுப்பிலிருந்தே ஆரம்பித்திருந்தாலும், அவரது வித்தியாசமான கவிதைப் பாங்கும் எடுக்கும் கவிதைப் பொருட்களும் பெண்ணிலைப் பார்வையும் என் வாசிப்புக்கு மிக இதம் செய்பவையாய் இருந்தன. அந்தச் சிறப்புகள் இந்தத் தொகுதியிலுள்ள பல கவிதைகளிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கின்றன. தம் அர்த்தத்தால், வீறார்ந்த வரிகளால், அடர்த்தியால் வாசகரை முன்னகர்த்திக்கொண்டும், முன்னகர்ந்துகொண்டுமே பிரதியில் அவை இருக்கின்றன.  

‘எழுதிக்கொண்டிருக்கிறேன்

நீங்கள் பார்க்கிறீர்கள்

எவருமற்ற சமையலறையில்

கலந்து இன்னும் இறங்காத தேயிலைச் சாயத்துக்காக

ஏங்கிக் கொதித்துக் குமிழ்களாய் அவிழும்

நீரை’

என்ற அவரது முதற் கவிதையில் வரும் நீரின் கொதிப்புக்குப் பின்னாலிருக்கிறது ஒரு மனக் கொதிப்பு.

சமையலறையின் தனிமையிலிருந்து இன்னும் தேநீருக்காகக் காத்திருந்தபடி எழுதிக்கொண்டிருப்பதுவரை அவலத்தின் விரிந்தெழுகையே நிகழ்கிறது. அங்கே அவலமில்லையேல் கவிதையில்லை. அந்த அவலமே கவிதையைப் பிறப்பிக்கிறது. புரிதலின் சிரமத்திற்குக் காரணமாயிருக்கும் இந்த அம்சம் புரியப்படும்போது இலகுவாகத் தோன்றுவது மட்டுமல்ல, மேலான கவிதையின்பத்தையும் நிகழ்த்திக் காட்டுகிறது.

‘எல்லைகளின் விளிம்பில்

உனக்குப் புரியாத மொழியில் நானும்

எனக்கு விளங்காத சொல்லில்

 நீயும் உரையாடுகையில்

நமக்கிடையில் ஆறிக்கொண்டிருக்கிறது

ஒரு கோப்பைத் தேநீர்’

என்ற கவிதையில் இந்த முரணும் கலப்பும் இலக்கியார்த்தமாய்ச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது; உரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது புரியாத மொழியில்; எது தேவை என்பதில் தீர்மானமேதும் கிடைப்பதில்லை; அதுவும் ஒரு முரணும் கலப்பும்தான்.

‘கலிபோர்னியா, சிங்கப்பூர், லண்டன்

எல்லா நகரங்களளிலும் தேநீர்க் கோப்பையைப் பற்றும்

உடல்கள் தேடுகின்றன

பரிச்சயமான எலும்பின் வடிவங்களை

தோலின்  மடிப்புகளை

கண்களில் ததும்பும் ஊரின் மீதத்தை’

என்ற கவிதை ஊரின் தவிப்பைச் சொல்வதில் மாயத்தின் விசைபெற்று சோகமாய்ப் வழிகிறது. தேநீர் ஒரு கலாச்சார அடையாளம் கீழ்த்திசை மக்களின் வாழ்வில். அவர்கள் கோப்பி குடிப்பதில்லையாவென விதண்டாவாதம் பேசக்கூடாது. தீ சுடுமென்பது நிஜத்தின் உரையாக வெளிவருகிறபோது, தீ இனிது என்பது புனைவுடன் கவிதையாகிறது என்பார் ந.பிச்சமூர்த்தி. இந்தவகையான கவிநிலைப் பகுப்பு அது. கீழ்த்திசை மக்களின் அக் கலாச்சாரக் கூறு மேற்கத்திய நாடுகளிலும் தொடர்ந்து தம் கைபற்றியிருக்கும் தேநீருடன் பரிச்சயமான முகங்களை, ஊரின் நினைவலைகள் இன்னும் மீதமாகிக் கிடக்கும் கண்களை தேடுகிறார்கள் நிலமிழந்து ஓடியவர்கள்.

தேநீர் கீழ்த்திசைக் கலாசாரத்தின் ஓர் அடையாளமாகிறபோது, அவர்கள் அருந்தும் கோப்பிகூட தேநீரே ஆகிவிடும் தவிர்க்க முடியாமை நிகழ்கையில், குளிர் மேற்றிசையின் சூழ்நிலை அடையாளமாகுவதை ஒத்துப்போகலாம். அப்போது குளிரிலிருந்து தேநீர் அருந்தியபடி அறிந்தவர் தெரிந்தவர் ஊராரைத் தேடும் புலம் இழந்தவரின் முனைப்பை கற்பனைசெய்து பாருங்கள். அத் துயரார் படிமம் ஒரு அளப்பிலாச் சோகத்தின் வார்படமாகிவிடுகிறது.  கீத்தா சுகுமாரனின் கவிதை அதைச் செய்கிறது.

பன்னிரண்டாம் கவிதை ஒரு தளத்தில் விரிந்து இன்னொரு தளத்திற்குப் பரந்து எழுவதைக் காண்மிக்கிறது. ஒன்று இனிமையும், மற்றது கசப்பும், சாஷ் திரிவேதி முன்னுரையில் எழுதியதுபோல் ‘வியர்வையின் உப்புக்கரிப்பும், றோஸ் இதழ்களின் நறுமணமும்’ சேர்ந்த கவிதையாகிவிடுகிறது.

‘கூடத்தில் தேநிரைத் தந்தபின்

மீண்டும் சோம்பும் ஆரஞ்சுத் தோலும்

தேயிலையோடு அவியும் சமையலறையில்

முள்ளந்தண்டிலிருந்து இடுப்பின் வியர்வையிலிருந்து

பெயரும் கதைகளை அவர்கள் அருந்தினர் ரகசியமாய்’

என்பது ஒரு கவிதை.

இங்கே கூடத்தில் தேநீரைப் பரிமாறிவிட்டு வந்தது யாரெனச் சொல்லப்படவில்லை. அவள் என்பதை வருவித்துக்கொள்ளலாம். அப்போது தம் பார்வை மொய்க்கும் இடுப்புப் பகுதியிலும் முள்ளந்தண்டுப் பகுதியிலும் சுரக்கும் வியர்வையிலிருந்து கதைகளைக் காண்கிறார்கள் தேநீர் சுவைப்போர். அதாவது பெண் எந்த ஊர் தேசம் கண்டத்திலும் எதிர்கொள்ளும் வேலை – கடமை – பொறுப்பு ஆதியாம் பெயர்களில் சுமத்தப்படும் பளுவினை உணர்கிறார்கள். இதுபோன்ற ஒரு கவிதையில் மேலெழுந்தவாரியான ரசனை ஒருவரை இவ்வாறான கருத்தையடைதலுக்கே இட்டுச் செல்லும். ஆனால் கவிதையின் இறுதி வார்த்தையைக்கொண்டு உடலின் விரச தரிசனக் களிப்பை  மாற்றீடு செய்துபார்க்க முடியும். தேநீர் அவ்வேளை மதுவாகிவிடுகிறது. முரண்தான்; ஆனாலும் கவிதையின் தன்மை அதுவாகவேயிருக்கிறது.

 

7

‘தேநீர்: முரண்களின் கலவை’யிலுள்ள கவிதைகள் இவ்வண்ணம் பல்வேறு அர்த்த வியாபகம் கொள்வதைக் கண்டு ரசிப்புற நிறைய வெளிகளைக் கொண்டிருக்கின்றன. இதில் அழுத்திக் கூறப்படவேண்டிய முக்கியமான விஷயம், Dissonance வகைக் கவிதைகளுக்கு தமிழில் இவை முன்னுதாரணமாகி இருக்கின்றன என்பதுதான். இவ்வகை முரண்நிலைக் கவிதைகள் ஆங்கிலக் கவிஞர் பிறவுணிங்கின் (Browning) கவிதைகள்போல் திட்டமிட்டமாதிரியிலும் அமைக்கலாம். ஆனால் இயல்பாக வந்து பொருந்துமிடங்களில் கவிதை அதன் உச்சத்தைத் தொடும் என்கிறார்கள். பா.அகிலனதும் கீத்தா சுகுமாரனதும் இத் தொகுப்பின் கவிதைகளிலேயே இரண்டுக்குமான உதாரணங்கள் இருக்கின்றன.

Dissonance என்ற முரணியல் வகைமையில் கவிதைகள் அமைக்கப்படுகையில் ஒரு வட்டத்துள் அடைபடும் நெருக்கடியை அது சந்திக்கக்கூடும். ஆயினும் அவ்வாறான குறைப்பாடுகள் இதன்மேல் சுமத்தப்பட்டதாய்த் தெரியவில்லை.

மொத்தத்தில் வெவ்வேறு வகைப் பிரதிகளின் சங்கமிப்பான இத் தொகுப்பில் கவிதை தன்னிலைப் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறதென துணிந்து சொல்ல முடியும்.

0

தாய்வீடு, பெப். 2022

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்