வீரபாண்டியன் மனைவி

 


:

வரலாற்று நாவல்களின் வரையறைகளை

பெருமளவு உடைத்த தமிழின் முன்னுதாரணம்

 

1

ஆள்பவரையும், அதிகாரத்தில் உள்ளவர்களையும், உயர்குடிப் பிறந்தோரையும் கதாபாத்திரங்களாய் புனைவுப் பரப்பில் ஆரம்பத்தில் கொண்டுவந்த நாவல்கள், பொதுமனிதனைப் பேசுபொருளாய்க் கொள்வதற்கு நீண்டகாலம் சென்றது. விசேஷித்த குணவியல்புகளும், அதிமானுடத் திறமைகளும், வித்தியாசமான சம்பவங்களும் பேசப்படுவதிலிருந்து விலக அவை பஞ்சிப்பட்டிருந்தன. அந்த நிலையை உருவாக்குவதற்கு காலத்தோடு முரணிக்கொண்டு பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நாவலாசிரியர்கள் எங்கும் எப்போதும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மறக்கப்பட முடியாதவர்கள்.

கல்விப் பரம்பலும், மத்தியதர சமூகமொன்றின் உருவாக்கமும், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் பத்திரிகை சஞ்சிகைகளின் வளர்ச்சியை உந்தியபோது, எழுத்துற்பத்தி நாளடைவில் அவசியமாகிப் போனது. நடப்பிலிருந்த இலக்கியக் கோட்பாடுகளுக்குத் தக அரசர்களின் வரலாறுகளும், வரலாற்றின் மேலான புனைந்துருவாக்கங்களும், வரலாற்று மீளுருவாக்கங்களும் நிறைந்திருந்த சூழலுக்குள் புதிய இலக்கிய வகையினமான நாவலும் சிக்கிக்கொண்டது.

எழுத்துருவ, மேடையாக்க நாடக உலகம்போல், புதிதாகத் தோன்றிய நாவலிலக்கியமும் அரச குல வரலாறுகளை, அரசர் அரசிகளின் ஆசாபாசங்களை, அவர்களது காதலும் காமமும் குரோதமும் காரணமாய் விரிந்த யுத்தங்களை தன் பேசுபொருளாக்கிய விதம் இவ்வண்ணமே நிகழ்ந்தது. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மத்திய காலத்திலிருந்தான குழப்பங்களும் யுத்தங்களும் ஆட்சியின் உறவுமுறைக் கோரல்களதும் மணவினை மறுப்புக்களினதும் காரணமாய் ஏற்பட்டவையென்பதை ஐரோப்பிய வரலாறு திட்பமாய்ச் சொல்லிநிற்கிறது. ‘ஹென்றிvi’ இனதும், ‘யூலியஸ் சீச’ரினதும், ‘இரு நகரங்களின் கதை’யினதும் தோற்றங்கள் தெளிவுபடுத்தும் விஷயமும் இதுவே.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுப் பின்னால் தமிழில் நாவலிலக்கியம் தோற்றமெடுத்தபோது மேற்கத்திய வழிமுறையிலேயே கதா வஸ்துகள் தமிழிலும் பெருக்கெடுத்தன. பத்திரிகை சஞ்சிகைகளின் அபரிமிதமான தோற்றம், தமிழ் வாசகர்களுக்கான தீனியான நாவல், தொடர்கதைகளாகிய எழுத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலையை உருவாக்கிற்று. சமூக நிலை அதற்கு இசைவான ஸ்திதியில் இருந்தது. அரசியல் நோக்கம் அதன்கூட இரகசியத்தில் பயணித்தது.

திராவிட மொழிகளின் தோற்றம் வளர்ச்சிகள்பற்றிய ஐரோப்பிய ஆய்வாளரின் புதிய கண்டடைவுகள் வெளியிடப்பட்டபோது, சமஸ்கிருதமே இந்திய உபகண்டத்தின் மூத்த மொழியென்றும் பல தென்னிந்திய மொழிகளுக்கு மூலமொழியென்றும் அதுவரை உரைக்கப்பட்டிருந்தவை தடமழியத் தொடங்கின. வெளிவந்த திராவிடச் சான்றுகள் பழங்காலத்தின் பீடு பெருமைகளை நிகழ்காலத்தில் இழந்திருந்த தமிழ்ச் சமூகத்தை வீறுகொண்டெழச் செய்தன. அந்த உணர்வு விகசிப்பை அச்சுலகம் தக்கபடி பயன்படுத்திக்கொண்டதெனவே கூறவேண்டும்.

மூடுண்டு கிடந்த வரலாற்றுப் பக்கங்களின் வெளிகள் புனைவினால் ஈடுகட்டப்பட்டன. புனைவும் வரலாறுமான கதைகள் ஒருசேர நின்று வாசக உலகத்தைக் கவர்ந்திழுத்தன. அவை வரலாறு தழுவிய கற்பனைக் கதைகளென்று தெரிந்துமே  அருண்மொழிவர்மனும், இளங்கோவும் வாசக உலகத்தின் மெய்க் கதாநாயகர்களாய் உலவிவந்தனர்.

வானொலி தவிர வேறு வீட்டுப் பொழுதுபோக்குச் சாதனங்கள் கடைப் பரப்பில் விற்பனைக்கில்லாதிருந்த அக் காலத்தில், பொழுதுபோக்கிற்கான எந்த எழுத்தையுமே வாசக உலகம் இச்சித்து மொய்த்தது. இதில் பெண் வாசகர்கள் அதிகமிருந்தார்களென ஒரு கணிப்பீடு சொல்லிற்று. பொழுதுபோக்குவதிலும், இழந்த இனமானத்தை மீளக் காண்பதிலும் வரலாற்றுச் சாயலான எழுத்துக்கள் பெரும் பங்காற்றின. தோன்றப்போகும் புதிய அரசியலின் விருப்பங்கள் இன்னும் அதன் மறைவில் இருந்துகொண்டிருந்தன என்பதை மறந்துவிடல் கூடாது.

தொடர்கதையென்பதும், தொடர் நாவலென்பதும் மேற்கின் இலக்கியத்தில்போலவே தமிழிலும் பெரிய வித்தியாசத்தை அப்போது கொண்டிருக்கவில்லை. மேற்குலகில் வெளிவந்த பல தொடர்களே பின்னால் நூலாக்கம் பெற்றபோது உலகத் தரம் வாய்ந்த நாவலிலக்கியங்களாய்ப் பரிமளித்தன என்பதை இங்கே ஞாபகம்கொள்வது தக்கது. இந்த நிலையில் தமிழில் 50களிலிருந்து பெருக்கெடுத்த தமிழ்த் தொடர்களின் தன்மையையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தமிழில் தீவிர, வெகுஜன எழுத்துக்களின் வகைமைப்பாடுபோல் வாசகப் பரப்பிலும், விமர்சனத்துறையிலம்கூட, அவை இருந்தன. மிகச் சிறிய அளவில் மூன்றாவது தளமொன்று இருந்ததையம் காணமுடிகிறது. தீவிர எழுத்துக்கு ‘மணிக்கொடி”யும், வெகுஜன எழுத்துக்கு ‘கல்கி’யும்போல், இந்த மூன்றாவது தரப்புக்கு ‘கலைமகள்’ இருந்ததென்கிறார் ‘மணிக்கொடி’ எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன். இவ்வாறான ஒரு தரப்பு எந்தத் துறையிலும் எப்போதும் இருந்து வந்ததென்பதும் உண்மையே. ஆயினும் பரவலான கவனிப்பை அது பெற்றிருக்க மாட்டாதென்பதே நிஜம். விமர்சனத் தளத்திலேயே இந்த தீவிர, வெகுஜன எழுத்தென்ற பகுப்பு திட்டமாய் இருந்திருப்பதையும் அறியமுடிகிறது.

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’, நா.பார்த்தசாரதியின் ‘பாண்டிமாதேவி’, ‘கபாடபுரம்’, அகிலனின் ‘வேங்கையின் மைந்தன்’, ‘வெற்றித் திருநகர்’, சாண்டில்யனின் ‘யவன ராணி’, ‘கடல்புறா’, விக்கிரமனின் ‘நந்திபுரத்து நாயகி’ போன்றவை வெகுஜன வாசகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தன. ஒரு நாற்பதாண்டுகளுக்கு வாசக உலகத்தை வரலாற்று நாவல் எழுத்தானது நிமிரமுடியாதபடி வைத்திருந்ததென்பது வெறும் வார்த்தையில்லை. பின்னால் படிப்படியாகக் குறைந்து இன்று வரலாற்றுப் புதினங்களின் காலமில்லை என்பதாக மட்டுமின்றி, அவ்வகையினம் தோன்றுவதேயில்லை என்னும்படி ஆகியிருக்கிறது. அதுவே சமூக நாவல்களின் வரவுக்கான வாசல்களை அகலத் திறந்துவிட்டது.

இவற்றில் ‘பொன்னியின் செல்வ’னின் கதாபாத்திரங்களின் காதலும் வீரமும் போரும் பெரும் பரவசத்தை வாசகர்களிடத்தில் ஏற்படுத்தியிருந்தது. இந்தளவு பரவசத்தை வேறு வரலாற்று நவீனங்கள் சாதித்தனவெனச் சொல்வதும் சிரமம். அருண்மொழிவர்மனும், வந்தியத்தேவனும், குந்தவையும் உயிரோடு நடமாடிய நிஜம் வாசகர்களில் விளைந்திருந்தது. ஆனால் கவனிகக்கப்படாத ஓருண்மை இருக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தீவிர விமர்சகர்களாலும், மார்க்சிய விமர்சகர்களாலும் வெகுகாலம் நாவலாகக்கூட கருதப்பட்டிருக்கவில்லை என்பதே அது.

பின்னால் வெளிவந்த தி.ஜானகிராமனது ‘மோகமுள்’ நாவலுக்கும் இப்போது இருக்குமளவான விமர்சன அங்கீகாரம் அப்போது இருந்திருக்கவில்லை. காரணமாக எதைச் சொல்ல? வெகுஜனப் பத்திரிகையிலும், தொடராகவும் வெளிவந்ததான காரணங்கள் மேம்போக்கானவை. சரியான காரணத்தைக் காணுவது சிரமமாயினும், மூன்றாம் தர விமர்சனத்தின் வலுமின்மையையே இங்கே கவனத்தில் கொள்ளக்கூடியதாய் இருக்கிறது.

நாவல் இலக்கியம் தோன்றி வலுப்பெற்ற பின்னால் அதற்கான கோட்பாடுகள் வரையப்பெற்றன. நாவல்களின் சிறப்புக்களிலிருந்து அவை மேலும் மேலும் சீர்பட்டன. இருந்தாலும் ஒரு கதைப் படைப்பை நாவலென்றோ, நாவலில்லையென்றோ கூறுவதற்கோ, குறுநாவலென்றோ நெடுங்கதையென்றோ வகைப்படுத்துவதற்கோவான அதிகாரம் பெருமளவு கல்விப்புலம் சார்ந்த நிறுவன விமர்சகர்களிடையேதான் இருந்ததென்பது மிகையான கூற்றல்ல. இலங்கையை எடுத்துக்கொண்டால் இந்த உண்மையை இன்னும் சிறப்பாக விளங்கமுடியும். நிறுவனங்களின் பிடியிலிருந்து விமர்சன அதிகாரம் வெளியில் வந்த கணத்தில், நாவல் கோட்பாடுகள் மேலும் விருத்தியும் சீரும் பெற்றன. சிறந்த நாவல்களின் பட்டியல்கள் உருவாகின. இவற்றில் வாசகரீதியான விமர்சனங்களின் ஆற்றல் வாய்ந்த பங்களிப்புமுண்டு.

விமர்சனரீதியில் ஒதுக்கப்பட்டு பின்னால் வகைமைப்பாட்டால் விமர்சன அங்கீகார வட்டத்துள் சில நாவல்கள் வந்திருந்தாலும், ஶ்ரீவேணுகோபாலன், சோமு, கோவி மணிசேகரன் போன்றோருடையவை நியாயப்படி கவனம் பெறாமலே இருந்துவிட்டன. அரு.ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ போன்ற நூல்கள் யார் கவனத்திலும் படவில்லை. இலங்கையில் இலக்கிய வரலாறெழுதிகளில் சிலரும், விமர்சகர் சிலரும் கூடுதல் அழுத்தத்தை இந்த நாவலுக்குக் கொடுத்திருந்தனர்.

‘வீரபாண்டியன் மனைவி’ என்ற வரலாற்றுப் புதினத்தின் எனது மீள் வாசிப்பு அண்மையில் எதிர்பாராமல் நிகழ்ந்ததுதான். அப்போது ஓருண்மை புலனாயிற்று. எங்கோ ஒரு புலவன் இலக்கணக் கட்டிறுக்கத்தில் நெகிழ்ச்சியற்றிருந்த ஒரு யாப்பை உடைத்து இலக்கியத்திற்கு புதிய மடை திறக்கிறான். விருத்தப் பாவினத்தில் காவியம் புனைந்து ஒரு திறவை இலக்கியத்தில் கம்ப நாடன் செய்ததுபோல் இது. அதுபோல ‘வீரபாண்டின் மனைவி’ வரலாற்று நாவலென்ற தளத்தில் ஆற்றியிருப்பதும் ஒரு திறவு. அந்தளவு முன்மாதிரியை எந்த தமிழ் வரலாற்று நாவலாசிரியரும் செய்திருக்கவில்லை. இந்தளவு  கவனமிழப்பு தமிழ் நாவல் செழுமைக்கு நல்லதில்லையென்பதை முன்மொழிந்துகொண்டு, இந்தளவு விரிந்த பகைப்புலத்தில் காணவிருக்கும் ‘வீரபாண்டியன் மனைவி’பற்றி இனி நோக்கலாம்.

 

 

2

அரு.ராமநாதன் எழுதிய வரலாற்று நாவல்தான் ‘வீரபாண்டியன் மனைவி’. இலங்கையில் நான் இருக்கும்போது வாசிக்க பேரார்வப்பட்ட அந்நூலை, சென்னையில் இருக்கும்போதுதான் வாசிக்க முடிந்திருந்தது. அரு.ராமநாதனின் சொந்தப் பிரசுரமான பிரேமா பிரசுரத்தில் வாங்கி வாசித்தேன். ஆர்க்காடு வீதியில் கோடம்பாக்கம் மசூதிக்கு அருகில் மித்ர பதிப்பகம் இருந்த காலத்தில் எஸ்.பொ.வை சந்திக்க நட்பார்ந்த விருப்பங்கள் எழுந்து அங்கு செல்கிறபோது மித்ரவுக்கு மிக அண்மையிலுள்ள பிரேமா பிரசுரத்தையும் கடந்துசெல்ல நேரும். அவ்வாறான ஒருநாளில் பிரேமா பிரசுரத்தில் ‘வீரபாண்டியன் மனைவி’யையும் வாங்கினேன். வாசித்த பின்னால் இந் நாவல்பற்றி நானும் எஸ்.பொ.வும் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தியிருந்தோம்.  அவருக்கும் பிடித்ததாக அந் நாவல் இருந்தவகையில் அடிக்கடி அவ்வுரையாடல்கள் சிறிதுகாலம் நமக்குள் நிகழ்ந்தவண்ணமே இருந்தன.

அரு.ராமநாதன் தனது ‘காதல்’ பத்திரிகையில் ‘வீரபாண்டியன் மனைவி’யை ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக எழுதினார். ‘1940களில் மறுமலர்ச்சி இலக்கிய வேகத்தின் அலை சென்னையில் ஒடுங்கி, திருச்சி மாவட்டத்தில் புதிய எழுச்சியுடன் தலைதூக்கியது’ என்கிறார் வல்லிக்கண்ணன் தனது ‘தமிழில் சிறுபத்திரிகைகள்’ என்ற நூலில். திருச்சி மாவட்டத்திலேயே ‘காதல்’ பத்திரிகையும் வெளிவரத் தொடங்கியது. 'கலைமணி', ‘மர்மக் கதை’ போன்றவற்றையும் அரு.ராமநாதன் வெளியிட்டாரென அறிந்தபோது, ‘காதல்’ பத்திரிகைபற்றி பெரிதான அபிப்பிராயமேதும் என்னில் ஏற்பட்டுவிடவில்லை. ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறிய ‘ராஜராஜசோழன்’ நாடக ஆசிரியரென்பதும், முதல் தமிழ் சினிமாஸ்கோப் திரைப்படமான ‘ராஜராஜசோழ’னது கதை வசனகர்த்தா அவரேயென்பதும்கூட இலக்கியார்த்தமான எந்தப் பாதிப்பினையும் என்னில் செய்துவிடவில்லை. 'தமிழில் சிறுபத்திரிகை’ நூல் 1953இல் வெளிவரத் தொடங்கிய ‘காதல்’ பத்திரிகைபற்றி குறிப்பிடாதிருந்ததற்கும் தகுந்த காரணம் இருந்திருக்கக்கூடும். ஆனால் ‘வீரபாண்டியன் மனைவி’ அதில்தான் வெளிவந்திருந்தது. கல்கியின் ஐந்து பாக ‘பொன்னியின் செல்வன்’ தொடர்கதை ‘கல்கி’யில் 1950இல் வெளிவரத் தொடங்கியதற்கு சற்று பின்னராக இது. ஆனால் கதைக் கட்டுமானத்தில், உள்ளடக்கத்தில், பாவித்த மொழியில், மொழி கையாளப்பட்ட நடையில் இரண்டுக்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. எனினும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலானது கதையை எடுத்துச்சென்ற நேர்த்தியிலும், பாத்திர வார்ப்பிலும் இணையற்றதென்பதையும் மறுப்பதற்கில்லை.

இவ்வுரைக்கட்டின் முதன்மையான நோக்கம் இவ்விரு நாவல்களின் தனித்தன்மைகளது ஆய்வாக இல்லாதவரையில்  ‘பொன்னியின் செல்வ’னை இங்கே நிறுத்திவிட்டு ‘வீரபாண்டியன் மனைவி’யைத் தொடரலாம்.

 

3

கி.பி.1180இல் வீரபாண்டியன் ஆண்ட பாண்டியநாட்டை சோழவேந்தன் மூன்றாம் குலோத்துங்கள் படையெடுத்து வந்து முற்றுகைப் போரில் ஜெயம் கொண்டதிலிருந்து, அரசனும் அவனது மனைவி புவனமுழுதுடையாளும் சில அணுக்கர்களும் மெய்க்காவலர்களும் கொண்ட சிறிய படையோடு தப்பியோடி, நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த நெட்டூர்க் கோட்டைக்குள் மறைந்துகொள்கிறார்கள், மதுரைக் கோட்டைக்குள் அவர்களது இரு மகன்களும் அகப்பட்டுக்கொண்டிருந்த நிலையில்.

மூத்த மகன் பராக்கிரமன் இலங்கையரசன் மகளின் மகனாகவும், இளையவன் வீரகேரளன் சேரத்து ராஜகுமாரியின் மகனாகவும் இருக்கும் அவர்களை மீட்டுக் கொண்டுவரும் முயற்சியில் முடியிழந்த விரபாண்டியன் இருக்கிறான். கோட்டைக்குள் மூத்த பாண்டிய இளவரசன் ஒருபோது கொல்லப்பட்டுப் போக, பெரும் பிரயத்தனத்தில் வீரபாண்டியனின் ஆட்கள் வீரகேரளனை மீட்டு நெட்டூர்க் கோட்டையில் சேர்க்கிறார்கள். ஆனால் நெட்டூர்க் கோட்டையும் வீரபாண்டியன் அற்றிருந்த ஒரு வேளையில் சோழப் படையால் முற்றுகையிடப்பட்டு அரசி புவனமுழுதுடையாளும் குமாரனும் கைதுசெய்யப் படுகிறார்கள்.

மதுரைக் கோட்டையில் சிறை வைக்கப்படும் அவர்களைத் தப்புவிக்க வீரபாண்டியனும்  அவனது ஆட்களும் எடுக்கும் பல்வேறுவிதமான முயற்சிகளும் நாவல் முடிவுவரையிலும்கூட கைகூடுவதில்லை. ‘வீரபாண்டியனின் மனைவி’ நாவலின் கதையை ‘பாண்டிய அரசியைச் சிறை மீட்க எடுக்கும் முயற்சிகளும்  தோல்விகளும்’ என சுருக்கமாகச் சொல்லிவிடலாம். ஏறக்குறைய 1350 பக்க மூன்று பாக நாவலின் மைய விவகாரம் இதுதான். ஆனால் பாண்டிய மண்ணை தமது சொந்த மண்போல் அறிந்திராத சோழப் படைகளிடமிருந்து பாண்டிய அரசியையும், இளவரசனையும் தப்புவிக்க வீரபாண்டியனும் பாண்டிய உதவிக்கு வந்த இலங்கைப் படைச் சேனாதிபதி ஈழவராயனும் இடும் திட்டங்கள் இறுதிநேரத்தில் தோல்வியுறுபவையானாலும் அற்புதமான விபரிப்புகளைக் கொண்டவை.

வீரபாண்டியனும் புவனமுழுதுடையாளும் கதா சாகரத்தின் முக்கியமான பாத்திரங்களாக இருந்தாலும், முதன்மையான பாத்திரங்களாக வாள்நிலை கொண்டான் என்ற பட்டப்பெயரைப் பெற்ற சோழ உளவுப்படை அதிகாரியான ஜெகநாத கச்சிராயனையும், சோழநாட்டு வெற்றிக்கு பெரும் காரணமாகும் வீரன் வீரசேகரனையம், பாண்டிய நாட்டுப் பெண் ஊர்மிளாவையும் தயங்காது சொல்லிவிடலாம். நாவல் முழுக்கவும், நாவலின் முக்கியமான சம்பவங்களூடாகவும் கலந்திருப்பவர்கள் அவர்கள். கூட அகல்யா, சிவகாமி, பொம்மையரசனாய் முடிசூட்டப்பட்ட விக்கிரம பாண்டியனின் மனைவி போன்றோரும் ஜீவியவந்தராய் நாவலில் வலம்வருகிறார்கள். இத்தனை சிறந்த பாத்திரங்களுள் வாசக மனத்தைவிட்டு நீங்காமலிருப்பவையாக ஜெகநாதன், வீரசேகரன், ஊர்மிளா ஆகியோரைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை.

நயவஞ்சகமும் சுயநலமும் அதை மறைக்காத வெளிப்படைத் தனமும் கொண்ட வித்தியாசமான பாத்திரம்  ஜெகநாதன். அவன் நாவல் முழுக்க அலைவது மட்டுமல்ல, பெருமளவுக்கு நாவலை நடத்துபவனாகவும் இருக்கிறான். அரசியலென்பது  உண்மையில் எவ்வாறிருக்கிறதென்பதைப் புரிந்தவனாக இருக்கிறான் அவன். அதில் புனிதமெதுவும் இல்லை, அதிகாரத்தைத் தக்கவைக்க ஆடும் சூதாட்டமே என்பது அவனது அபிப்பிராயமாக இருக்கிறது. அதை பலவேளைகளிலும் அவ்வாறு சொல்லப்படுபவர்களுக்காய்  நீரூபித்துக்கொண்டே போகிறான் அவன்.

இக் கதைநிகழ் காலமான பன்னிரண்டாம் நூற்றாண்டில் வலிமையின் உச்சத்திலிருக்கும் சோழ சாம்ராஜ்யத்தை அழிப்பதே, தன் குலத்தார்க்கு நேர்ந்த பழைய சம்பவங்களின் காரணங்கள் சுட்டி, அவனது திட்டமாக இருக்கிறது. அதுவே தனது நோக்கமென்பதை வீரசேகரன், சம்புவராயர் போன்ற நண்பர்களிடத்தில் கூறவும் அவன் தயங்குவதில்லை. இன்னொரு சகுனியாக அவன் கதையில் அலைவதை வாசகர் காணத் தவறமாட்டார். அவனுரைக்கும் தத்துவங்கள் அறத்தின்பால் படாதவையெனினும், நிகழும் சம்பவங்களால்  அவை நிஜமெனவே கடைசியில் நிரூபணமாகின்றன. கல்கியின் ‘சிவகாமியின் சபத’ நாகநந்தியைவிடவுமே புரிந்துகொள்ளப்பட முடியாத செயற் தத்துவங்களோடு  ஜெகநாதன் அலைகிறானென்றாலும் மிகையில்லை.

அடுத்து முக்கியமான பாத்திரங்களாய் எனக்குத் தோன்றுபவை வீரசேகரனும் ஊர்மிளாவுமாகும்.

வீரசேகரன் சோழநாட்டான். மதுரை முற்றுகையில் தன் சாமர்த்தியத்தால் ஒருபுறக் கோட்டைக் கதவுகளைத் திறந்து சோழ வெற்றிக்குக் காரணமானவன். ஆனால் ஊர்மிளா பாண்டிய நாட்டாள். காதல் வீரம் கடமை உணர்வுகளுக்காய் தம்மை அர்பணிக்கும் பாத்திரங்களாக இவை வருகின்றன. சிறையிலுள்ள பாண்டிய அரசன் மனைவியைச் சிறை மீட்க முயன்ற வீரபாண்டியனுக்கு உடந்தையாய் இருந்ததாக சோழ அதிகாரிகளால் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்;டு மரண தண்டனை பெறுகிற பாத்திரங்களும் இவை. வீரசேகரனைக் காப்பாற்ற அவனது நண்பனான ஜெகநாதன் எவ்வளவோ முயற்சிகள் செய்வான். ஒன்றும் கைகூடுவதில்லை. கடைசியில் அக்கால வழக்கப்படி வேழத்தால் தலை எற்றப்பட்டு இருவரது மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.

வீரசேகரனும் ஊர்மிளையும் கொண்டிருந்ததும்கூட வித்தியாசமான காதல்தான். ஏற்கனவே  ஒருத்தியின் கணவனாக அவனும், ஒருத்தனின் மனைவியாக அவளும் இருக்கிற நிலையில், ஒரு நள்ளிரவில் நிகழும் இருவரின் முதல் சந்திப்பிலிருந்து முதலீர்ப்பு உண்டாகி, பின் அது விருப்பமாகி, பின்னால் அது உள்ளடங்கிய காதலாகிறது அவர்களுக்குள். தன் கணவன் இறக்கும்வரை தன் இதயத்தை அவள் முழுமையாய் அவனுக்குத் திறந்து காட்டுவதுமில்லை. பின்னால் அவர்கள் நாட்டைவிட்டு தப்பியோடும் நிமித்தம் தலைமறைவாகிறார்கள். மணஞ்செய்துகொண்டு இலங்கையோ வேறெங்கோ சென்று வாழவும் திட்டமிடுகிறார்கள். ஆனால் விதிவசத்தால் அதுவொன்றும் நிறைவேறுவதில்லை. முடிவில் யானையால் தலைகள் இடறப்பெற்று அவர்கள் தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.

வீரசேகரனுக்கு நாவலில் நேர்ந்த இந்தச் சோகம் உண்மையில் பதைக்கவைப்பது. சோழ நாட்டானாயிருந்தும், தேசபக்தியும் ராஜபக்தியும் உடையவனாயிருந்தும், ஒரு தருணத்தில் அனைத்தையும் துச்சமாகக் கருதி, சிறையிலிருக்கும் பாண்டிய அரசி சோழ நாட்டிற்கு அனுப்பப்படும்பொழுது, அங்கு குலோத்துங்க சோழனால் அவள் கற்பழிக்கப்படலாம் அல்லது சோழ அரசி முன்னிலையில் பலர் காண வேளமேற்றவும்படலாம் என்று நினைத்தே அவன் சிறை மீட்புக்கு அவன் உதவிசெய்கிறான். வேளமேற்றப்படுதல் என்பது, சாமரம் வீசுதலும் அரச நங்கையரின் கால்களைப் பிடித்துவிடுதலும் ஆகிய செயல்களை பலர் முன் செய்யவைத்து அவமானப்பட வைக்கும் ஒரு தண்டனை முறையாக அக்காலத்தில் இருந்திருக்கிறது. எவளாயிருந்தாலும் ஒரு பெண்ணின் மானம் காக்கப்படவேண்டுமென எண்ணி தன் கடமைகளை காற்றிலுருட்டிய வீரசேகரன் வாசகர்களால் என்றென்றும் நினைக்கப்படுவான்.

ஊர்மிளாவின் கதாபாத்திரமும் நினைவுகூரத் தக்கவொன்று.  அவள் பழைய பாண்டிய அரசியை மீட்கும் இரகசியப் படையாளி. அந்தப் படையணியிலேதான் காத்தவராயன் என்ற பெயரில் அவளது கணவனும் இருப்பான். தமது சதித் திட்டத்தின் காரிய அனுகூலங்களை வீரசேகரனிடமிருந்து பெறுவதற்காக, தன் மனைவியான ஊர்மிளா அவனிலிருந்து  விலகிக்கொண்டிருக்கிற வேளையிலும், அவனது விருப்பத்திற்கு அனுசரணையாக இருப்பதாகப் பாசாங்கு செய்யும்படி தன் கணவனாலேயே வற்புறுத்தப்படுவாள். கணவன்-மனைவியான அவர்கள் ராஜ காரியத்தை முன்னிட்டான ஒரு சங்கற்பத்தில் கணவன் மனைவியாக வாழாமலிருப்பது மட்டுமல்ல, ஊர்மிளா தாலிகூட அணியாதிருப்பாள். இருந்தும் கணவனின் வற்புறுத்தலை மீறமுடியாமல் ஊர்மிளா அவன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டாலும், அதனால் உண்டாகும் ஆசையுணர்வின் நெருக்குவாரத்திற்கு அவள் பலவேளைகளிலும் ஆளாகியிருப்பாள். அதிலிருந்து மீள்வதும், பிறகு அந்த மனநிலைக்கு ஆளாவதுமாய் அவளது மன அலைக்கழிப்பு நாவலில் அற்புதமாய் வர்ணிக்கப்பட்டிருக்கும்.

தமிழ்ப் பெண்ணின் மானம் கற்பு என்றெல்லாம் அக்கால வரலாற்று நாவல்கள் பேசியபோது, வாழ்க்கைக்கான அறத்தைப் பேசிய நாவலாக ‘வீரபாண்டியன் மனைவி’ இருந்திருக்கிறது. தமிழ்க் காதலையல்ல, அது காட்டியது மானிடக் காதலை.

பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கதைக் களத்தில் மணவிலக்கு பற்றியும், மறுமணம்பற்றியும் பேசுகிற நாவல் இதுவாகவே இருக்கமுடியும். கொஞ்சம் கூடுதலான புரட்சித்தனமாகத் தோன்றக்கூடுமாயினும், அக்காலத்தின் பவுத்திரத்தால் மூடுண்டு கிடந்த சாதாரண மனிதவுணர்வாக இதைக் கொள்ளமுடியும். இவ்வாறான கருத்தாட்சிகள் நாவலுக்கு வலுக் கூட்டியபொழுது, ஏகாதிபத்தியம்போன்ற பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்த சொற்களின் பாவனைகள் அதற்கு உதவிசெய்வதாக இருக்கவில்லை என்பதையும் மறக்காமல் குறிப்பிடவேண்டும்.

‘வண்மை இல்லை ஓர் வறுமையின்மையால்’ என்ற அக்கால சமூக பொருளாதாரத்தின் நிலை கம்பன் கண்ட கனவின் வெளிப்பாடு என்பார்கள் தமிழறிஞர்கள். அதையே வாசக தரிசனமாக்கினார்கள் பல எழுத்தாளர்களும். அழகான நள்ளிரவின் மேல் விடியல் கனத்திருக்கிறது; அறக்கடன் முடிக்க மக்கள் இன்னும் எழுந்திராத பொழுது; அந்தப் பொழுதை அரு.ராமநாதனால் மட்டும்தான் ‘வீரபாண்டியன் மனைவி’யில் பின்வருமாறு எழுத முடிந்தது:

‘பொழுது விடிவதற்குரிய கடைச் சாமம் வெகுவேகமாகக் கரைந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்துக்குள் ஆங்காங்கே கோழிகள் கூவத் தலைப்பட்டன. வைகறைக்கு முன்னுள்ள இருட்டில் பஜனை பாடுவோரும், பதநீர் விற்போரும், தொழிலாளரும், முக்காடிட்டுத் தலைகுனிந்து செல்லும் இரவு ராணிகளும் தெருக்களில் தென்படலானார்கள் ( பாகம் 3, பக்: 103).

சோழநாட்டிலே குலோத்துங்கன் அரசவையில் கம்பரால் ராமாயணம் அரங்கேற்றப்பட்டிருந்த காலமாக இருந்தது நாவலின் கதைக் காலம். அதனால்தான் மிகத் துணிச்சலாக அதிலிருந்து பொருத்தமான வரிகளைத் தேர்ந்து அத்தியாயங்களின் முகப்பு வரிகளாக இட படைப்பாளிக்கு வாய்ப்பாகியிருக்கிறது. உட்பிரதியாய் ராமாயணம் வளர்ந்ததாய் அடையாளப்படுத்த முடியாவிட்டாலும், விபீஷணன், கைகேயி, இராவணன் ஆதியோரை நாவல் பாத்திரங்களில் அடையாளம் காணும்படி படைப்பாளி செய்கிறார்.  இவ்வண்ணம் நோக்கினால் ராம காதை ஆங்காங்கே விளக்கமாகிறதுதான்.

நாவலில் ஆண் பாத்திரங்கள் மட்டுமின்றி, பெண் பாத்திரங்கள்கூட பெரும்பாலும் வர்ணனை கொண்டிருக்கவில்லை. பிறை நெற்றியும், கயற் கண்களும், பவள அதரங்களும், அலையென புரள் கூந்தலும்கொண்ட பெண்கள் அப்போதும் பாண்டிய நாட்டில்  இருந்திருக்கலாம். அதுபோலவே திரண்ட புஜங்களும், விரிந்த மார்பும், ஏறு நோக்கும்கொண்ட ஆண்களும் அங்கே வாழ்ந்திருக்க முடியும். ஆனால் சூரிய சந்திரோதயங்களில்போல், இரவு வானத்தில் நீந்தும் நிலாவில்போல், மினுக்கும் நட்சத்திரங்களில்போல் அவற்றிலும் படைப்பாளி பெரும் கவனமோ ஈர்ப்போ கொண்டு தன்னை மினக்கெடுத்திக் கொள்ளவில்லையென்பது பெரிய விஷயம்.  

நாவலின் மூன்று பாகங்களிலுமுள்ள 125 அத்தியாயங்களுமே ‘ம’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வித்தையைப் பொருட்படுத்தாவிட்டாலும், நாவல் பேசும் முக்கியமான மேலுமொரு விஷயத்தைப்பற்றி இங்கு குறிப்பிடவாவது செய்யவேண்டும்.

நாவலின் பல கருத்துக்களும் சம்பவ விவரிப்புக்களாயன்றி உரையாடல்களாகவே இருப்பதைச் சொல்லவேண்டும். பாத்திரங்கள் செயற்பாட்டிலன்றி உரையாடலில் ஆர்வம் கூடியிருந்ததால்தான் அவர்களின் தோல்விகளும் நேர்ந்தனவோவென வாசகரை எண்ணவைக்குமளவு உரையாடல் அதிகம். மேலும் சில இடங்களில் நீண்ட உரையாடல்களாய் அமைந்திருந்ததில் வாசிப்பில் அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லையென்பதையும் சேர்த்தே சொல்லவேண்டும். ஆனாலும் அதன் ஒட்டுமொத்தமான மதிப்பீடு வித்தியாசமானது.

அது கேள்வி கேட்காத அம்சமே நாவலில் இல்லையென்று ஆகியிருக்கிறது. அகம் சார்ந்த காதலுறவுகளில், புறம் சார்ந்த சமூக மதிப்பீடுகளில் அது விழுத்திய கேள்விகளைவிட, வெட்டுகள் அதிகம். அதனால்தான் வடிவமிருக்க  அதன் உள்ளுறுப்புகளையெல்லாம் அது மாற்றக்கூடியதான வினையாற்றியது. அது போதுமானதில்லை, இன்றைய அளவைகளின்படி. ஆனாலும் அதுவே அன்று செல்திசை காட்டிய அடையாளக் கல்லாகயிருந்தது.

 

4

தொண்ணூறுகளில்போல் ‘வீரபாண்டியன் மனைவி’யில் இன்று வாசிப்பின் ரசனையைக்கொள்ள முடியவில்லையென்றாலும், பல வரலாற்று நாவல்களின் வாசிப்பைவிடவும் சிறப்பாகயிருந்ததைச் சொல்லவேண்டும். அதேநேரம் மனத்தில் இன்னும் புதைந்திருக்கிற,  தமிழ்மொழிபெயர்ப்பில் வெளிவந்த இன்னுமோர் இந்திய நாவலைத் தவறாது இங்கே குறிப்பிடுவது அவசியமெனக் கருதுகிறேன்.

அது மாஸ்தி வெங்கடேஸ அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’ (1974)என்ற ஹேமா ஆனந்ததீர்த்தனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த  நூலாகும். அது கன்னட மூலத்தில் 1956இல் வெளிவந்திருந்தது.

நவீன வரலாற்றுக் கால நவீனமென்று அதைச் சொல்லலாம். இற்றைக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் இறுதிக் காலத்தில் இந்திய அரசுகள் எவ்வாறு தாங்களாகவும் வலுக்கட்டாயமாகவும் அதிகாரத்தை இழந்துபோகும்படி செய்யப்பட்டன என்பதை, குடகு நாட்டின் வீர ராஜேந்திரனது அரசினை உதாரணமாக்கி விரித்துரைக்கிற நாவலிது. வீரராஜேந்திரன், ராணி கவுரம்மாஜி, அவளின் தங்கையான தேவம்மாஜி, அரசனின் மகள், மைத்துனன் சென்னபசவன், அமைச்சர் போபண்ணா, நண்பன் பசவனென நிறைந்த உயிரோட்டமான பாத்திரங்களுடன் இத் துன்பியல் நாவல் எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கான ஒரு மொழியைப் பாவனைக்கு எடுத்திருந்தது மட்டுமல்ல, எந்தத் தயக்கமுமின்றி அரண்மனையிலுள்ள குடிகாரரினதும், மேகநோய்க்காரரினதும் நாகரிகம் கடந்த வார்த்தைப் பிரயோகங்களையும் மாஸ்தி கையாண்டிருக்கிறார்.

ஏறக்குறைய தன் சமகாலத்தில் வெளிவந்த ‘சிக்கவீர ராஜேந்திர’னளவு, தமிழ் நாவலான  ‘வீரபாண்டியன் மனைவி’ இல்லாவிட்டாலும், அதற்கு இணையாகச் சொல்ல வேறு தமிழ் நாவல்கள் இல்லையென்பதும் நிஜம்.

0

தாய்வீடு, மார்ச் 2022

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்