சாந்தனின் ‘சித்தன் சரித’த்தை முன்வைத்து ----


 

 

‘கதையென்ற சொல்லாடல் தமிழில் புனைவு என்பதாகவே காலங்காலமாய் வழங்கப்பட்டு வருகிறது’ என சீனிவாசன் நடராஜனின் ‘தாளடி’ நாவல் முன்னுரையில் மாலன் மிகச் சரியாகக் குறிப்பிடும் வரியோடு இந்த மதிப்புரையைத் தொடக்குவது சிறப்பு. புனைவு என்பதற்குரிய சங்கத் தமிழ்ச் சொல்லாய் ‘பொய்மொழி’ என்பதை புறநானூற்றிலிருந்து  தருகிறார் அவர். இம் முன்னெடுப்பு காலச்சுவடு வெளியீடாக 2021இல் வெளிவந்த சாந்தனின் ‘சித்தன் சரித’த்தின்  கணிப்பீட்டிற்கு அவசியமாகும் விதத்தை இவ்வுரையீட்டின் இறுதியில் வாசகரால் புரியமுடியுமென நம்புகிறேன்.

பெரும்பாலும் மனிதக் கரம் படும் எந்தக் கலையிலும் புனைவேறிவிடுமென்று சொல்லப்படுவதுண்டு. எந்தக் கலையுமே ‘போல’ செய்வதான பிரதியாக்கமில்லை.  போலச் செய்வதில் கலைஞனுக்கு இடமில்லாதவரையில் கலைத்துவம் சேர்வது எங்ஙனம்? அதனால்தான் எந்தக் கலையிலும் புனைவுண்டு எனப்படுகிறது.

நவீன இலக்கியங்களான சிறுகதை நாவல்கள் புனைவின் அதிகபட்ச உச்சம் தொடுபவை. நாவல்களில் சுயவரலாற்றுப் பாங்கு (Auto biographical Novel), ஆவணப் பாங்கு (Documentary Novel) என்ற வகைமைகளை இலக்கிய விமர்சனம் முன்மொழிகிறது. அவற்றிலும்தான் புனைவுண்டு என்கிறது பின்நவீனத்துவம். இதை ஒப்புக்கொள்ள முடியும். வரலாறு எழுதியலில்கூட அதன் இருண்மைகளையும் இடைவெளிகளையும் நிரவ புனைவு கைகொடுப்பதாக வரலாறெழுதிகள் இன்று ஒப்புக்கொள்கிறார்கள்.

‘சித்தன் சரிதம்’ தன்னை நாவலென்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிற ஒரு பிரதி. ஆயினும் அது ஒரு கதையையல்ல, பலரின் சம்பவங்களையே கொண்டிருக்கிறது. உள்ளோடிய ஒரு கதை உள்ளதாயினும், அது பெரும்பாலும் சித்தனென்ற பாத்திரத்தின் குணநல விஸ்தரிப்பின்றியே நகர்ந்திருக்கிறது. லோகேஸ்வரியென்ற பாத்திரம் இன்னும் உணர்வுரீதியான விளக்கம் பெற்றிருப்பதாகச் சொல்ல முடியும்.

‘சித்தன் சரித’த்தின் உண்மையான கதாபாத்திரங்களாய் காலத்தையும், இடத்தையும்தான் கொள்ளமுடிகிறது. படைப்பாளியின் நோக்கமும் இதுவென்று கொள்ளுமளவு அவையே வலுவானவையாயும் இருக்கின்றன. சற்றொப்ப 1940களிலிருந்து 1990கள்வரையான அரை நூற்றாண்டுக் காலத்தையும்,  யாழ் குடாநாட்டிலுள்ள எந்தக் கிராமத்தையும் மாதிரியாய்க் கொள்ளமுடியுமாயினும் பழையபுலம், இரட்டைக்குளம், குறிஞ்சிலி ஆகியவற்றோடு முக்கியமாக நிலவரையாக அல்லிப்புலத்தையும் இது கொண்டிருக்கிறதாய்க் கொள்ளலாம்.

இது புனைவுக்கான ஒரு மொழியைக் கொண்டிருக்கவில்லை என்பது வாசக அவதானத்தில் தவறிவிட முடியாது. ஆயினும் அது தன் விவரணையை விபரமாக விளக்குவதற்கு எடுத்துக்கொண்ட மொழியானது ஒரு விசேஷித்த தன்மையைக் கொண்டதாகயிருக்கின்றது. அதன் நடைகூட கிட்டமுட்ட நாட்குறிப்பின் எழுத்துநடையாய் அங்கங்கே காணக்கிடப்பது அதனால்தான். இலங்கையின் சுமார் 140 ஆண்டுக் கால நாவல் வரலாற்றில் கையாளப்படாத தனித்துவம் கொண்டதாய் அந்த நடை இருக்கிறது. இந்நூலை பிரதியாக்குவதே அதன் முதல் பகுதியிலுள்ள மொழியும், நடையுமென்றாலும் தகும்.

நூலில் ஒரு மரணத்தின் நினைவலை இவ்வாறு எழுகிறது: ‘அப்புகூடச் சாக முடியுமென்று யார் நினைத்திருக்க முடியும்? அதுவும் இந்த வயதில், அதிலும் இப்படி? ஆனால் அது நடந்தது, இடி விழுந்த மாதிரி’ (பக்: 161) போன்ற உரைவீச்சுக்கொண்ட வரிகள் உளவாயினும், ஆவண வகை நாவலுக்கான ஒரு நடையைப் பிரதி கொண்டிருப்பதே அதன் சிறப்பாகவும் ஆகிநிற்கிறது.

பல்வேறு இலக்கிய வகைமைகளுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், அதிகமான சிறுகதைப் படைப்புக்களை வெளியிட்டிருக்கும் சாந்தனின் ‘ஒட்டுமா’ (1978) நாவலும், மற்றும் ‘விளிம்பில் உலாவுதல்’ (2007) குறுநாவல் தொகுப்பும் முக்கிய கவனம் பெற்றவை. கடந்த காலத்திய அவரது பயண நூல், சிறுகதை, நாவல் என்ற  படைப்பினங்களில் கையாளப்பட்ட எந்த நடையையும்விட ‘சித்தன் சரித’த்தின் நடை வேறுபட்டு நிற்பது நிஜமாகும். அந்த உயர்ச்சியின் பின்னணியில் அவர் கையாண்ட மொழியும் நடையும் இருக்கின்றன. காலத்தில் புழங்கிய சொற்களை நினைவிலிருந்து இழுத்துவந்து படைப்பில் நிரந்தரம் ஆக்கியதன்மூலம், தமிழின் மொழி வளத்தை    மிகுப்பிக்கும் பணியையும் சாந்தன்  நிறைவேற்றியிருக்கிறார் என்பதை இங்கே அடையாளப்படுத்தவேண்டும்.

இந் நாவல் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதலாவது பகுதி ‘பாலன் – விடலை’ எனவும், இரண்டாவது  ‘காளை’ எனவும், மூன்றாவது ‘முதுமகன்’ எனவும் மகுடமிடப்பட்டிருக்கின்றன. சித்தனின் பருவங்களைக்கொண்டு அமைந்த பகுதிகளேயானாலும், இரண்டாவதில் ஓரளவும், மூன்றாவது பகுதியில் சற்று அதிகமாகவும் மட்டுமே சித்தன் பாத்திரம் இடம்பெறுவது உண்மை. அவரை முழு உணர்வுள்ள பாத்திரமாய் நாவலில் காண முடிவதில்லை. இவ்வகை நாவலினத்துக்கு அந்தளவு உணர்வுபூர்வமான விஸ்தரிப்பு அவசியமுமில்லை. அல்லிப்புலத்தை மையமாக்கி விரியும் முதலாம் பகுதி தன்னுடைய விவரணைகளைச் சிறப்பாகவே செய்துவிடுகிறது. இரண்டாம் பகுதி சித்தனின் பாத்திரமாகவன்றி அக் கால கல்விநிலை சார்ந்து விவரணம் தருகிறது. மூன்றாவது பகுதி சித்தனின் பணியும், திருமணமும், பணியோய்வுமாக நிறைவெய்துகிறது.

இவற்றில் வீறார்ந்தும், ஆவணப் பாங்கில் அமைந்தும் விளங்குவது முதலாவது பகுதியே. நாவலின் நடையும் மொழியும் சிறப்புப்பெறுவதும் இப் பகுதியிலேயே நிகழ்கிறது. இப் பகுதியில் கலாச்சாரப் பதிவின் செழுமை அதிகம். ஊர் எப்போதும் கலாச்சார கூறுகளின் மையமாகவே கருதப்படுவது. கொடியேற்றுதல் (பட்டம் விடுதல்), பேதி மருந்து குடித்தல், சனி முழுக்கு, பார்வை பார்த்தல், வீட்டு அத்திவாரம் போடுதல், புதுமனை குடிபுகுதல், கோயில் திருவிழாக்களென வாழ்முறையும் கலாச்சாரமும் நிறைவாகப் பேசப்படும் பகுதியும் இதுதான்.

நரசிம்மலு நாயுடு என்பவர் ‘தென்னிந்திய சரித்திரம்’ என்ற நூலை எழுதுகையில், நாயக்கர் கால சரித்திரத்தில் பல கால வெளிகளை எதிர்கொண்டார். அவற்றை ஈடுசெய்ய திரிகோணமலை த.சரணமுத்துப்பிள்ளையின் ‘மோகனாங்கி’ நாவல் தமக்கு பெரிதும் உதவியதாக அதில் குறிப்பிட்டுள்ளார். அதுபோல சமூகம் மொழி வரலாறு சார்ந்த ஆய்வுக்கான பல தகவல்களை ‘சித்தன் சரிதம்’ கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும், குறிப்பாக யாழ் குடாநாட்டுக்கும், இடையேயிருந்த நெருங்கிய ஊடாட்டத்தை சில தகவல்கள் வெளியிட்டுநிற்கின்றன. உதாரணமாக கேரளத்திலிருந்து வந்த சிலர் இங்கு உறைந்திருந்த தகவல் சொல்லப்படுகிறது.

நாவலின் 190ஆம் பக்கத்தில் இவ்வாறு வருகின்றது: ‘ஆறண்ணாவைப்போல் அந்தமாதிரிப் படங்கள் கீறக்கூடிய இன்னும் ஒரேயொருவனைத்தான் சித்தனுக்குத் தெரியும். அவன், திருவல்லம். மலையாளத்து ஆட்கள். மூன்று நாலு பரம்பரையாக யாழ்ப்பாணத்திலேயே வசிக்கிற குடும்பம். கேரளத்திலுள்ள தங்கள் ஊரின் பெயர் அது என்று திரு எப்போதும் சொல்வான்.’

அதுபோல தென்னிந்தியாவிலிருந்து வந்த ‘கொழும்புச் செட்டிகள்’பற்றியும், அவர்களது மனநிலைபற்றியும் 2:13ஆம் அதிகாரத்தில் விவரங்கள் உள.

இவ்வாறு வரலாற்றுக்கு, அதன் ஆய்வுத் தொடர்ச்சிக்கு, தேவையான மூலங்களை அளிக்கின்றது இது. இவை யாவும் சாதாரண கதைசொல்லும் நாவல்களைவிட உயர்ந்தவொரு தளத்திற்கு ‘சித்தன் சரித’த்தை உயர்த்துகின்றன.  

முதலாம் பகுதியில் 1958ஆம் ஆண்டுக் கலவரமும், இரண்டாம் மூன்றாம் பகுதிகளில் 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளின் கலவரங்கள் குறிப்பிடப்படுகின்றன. பாத்திரங்களின் உரையாடலிலும், ஆசிரிய கூற்றாகவும் அவை பிரதியில் இடம்பெறுகின்றன. இலங்கை வரலாற்றைக் குலுக்கிய வலிகாமத்தின் புலப்பெயர்வு மூன்றாம் பகுதியின் இறுதியில் இடம்பெறுகிறது. அதனால் இரண்டாம்  பகுதி நினைவோடையாக உருமாறிப் போக, மூன்றாம் பகுதி சமகால வரலாற்றுப் பதிவாக வடிவம்கொள்கிறது. ஆயினும் அதன் பிரதம வெளிப்பாட்டுக் கூறு முதலாம் பகுதியின் விவரணையாகவே இருக்கிறது.

நாவலின் விசேஷித்த தன்மைகளும், குறைபாடான அம்சங்களும் சந்திக்கும் புள்ளியும் இதுதான். சம பலத்துடன் படைப்பைக் கொண்டுவந்து சேர்த்ததில் படைப்பாளியின்  திறமை காணக் கிடக்கிறது. ஒரு சாதாரண நனைவிடை தோய்தலாகவும் நிகழ்வுப் பதிவாகவும் ஆகியிருக்கவேண்டிய நூல், நாவலாக உருமாறும் விந்தை இங்கேதான் சம்பவிக்கிறது. காலத்தையும் இடத்தையும் பாத்திரங்களாக்கி அதில் லோகேஸ்வரி, பரிகாரி அப்பு, குருவன், பிந்து, சட்டிச் சாமிபோன்ற அற்புதமான மனிதர்களை உலவவிட்டதன் மூலம் இதை படைப்பாளி சாதித்திருக்கிறாரெனச் சொல்லமுடியும்.

யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம்பெற்ற ஒரு சமூகத்தின் கதையையே இது பேசுகிறதென்றாலும், பெரும்பான்மைச் சமூகத்தின் வாழ்வியல், கலாசார, அரசியல் பாங்கினை முடிந்தளவு இலக்கியப் பிரத்தியட்சமாக்குகிறது நாவல்.

நாவல் கொழும்பு, கட்டுபெத்த, மாவனல்ல, கண்டியென பிற மாவட்டங்களுக்கும் பயணிக்கிறதானாலும், காலத்தின் பதிவை, வாழ்முறையின் துலக்கத்தையும் வீச்சையும் செப்பமாகக் காட்ட அது யாழ் மாநிலத்தையே தேர்ந்தெடுக்கிறது.

மூன்றாம் பகுதியில், ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல், மகாஇடப்பெயர்வான வலிகாமப் பெயர்ச்சி வர்ணிக்கப்படுகிறது. அந்த இடப்பெயர்விலுள்ள வலி நாவலில் போதுமான அளவு வெளிப்படவில்லையென்றே கருதக்கிடக்கிறது. இடம்பெயர்பவர்களில் காணப்படவேண்டிய அவல உணர்வு, குதூகலமாய் அவர்கள் மனத்துள் அமுங்கிக் கிடக்கிறது. ஆனால் இடம்பெயர்ந்தவர்களில் சிலர் ஊர் திரும்பி தம் வீடுகளதும் நிலத்தினதும் சீர்கேடுகளைக் கண்டதில் அடைந்த அவலம் வெகுசிறப்பாகப் பதிவாகியுள்ளது.

நாவலின் சிறப்பான இன்னுமோர் அம்சம் அது வெகு அவதானமாக மெய்ப்புநோக்குகை செய்யப்பட்டிருப்பதுபற்றி கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். மிக அபூர்வமாக ஓரிரு சொற்பிழைகள். மேலும் காற்புள்ளி, முக்காற்புள்ளி, நிறுத்தக் குறி ஆதியனவும் தகுந்த சந்திகளில் இடம்பெறுவதையும் சொல்லவேண்டும். தொகையளவில் காற்புள்ளிகள் அதிகமாய் இடம்பெறுகின்றன நாவலர் பதிப்புப்போல. வாசிப்பில் ஐயம் எழுவதைத் தவிர்க்கும்விதமான அத் தேவையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்னுமொரு விஷயமும் இந் நாவலில் அவதானப்படவுண்டு.

செங்கைஆழியானின் ‘வாடைக் காற்று’ நாவல் வீரகேசரிப் பிரசுரமாக 1973இல் வெளிவந்தது. அதில் நெடுந்தீவு மக்களில் சிலருக்கு வெள்ளையினத்தவரின்  உடலம்சங்கள் இருப்பதற்குக் கூறப்பட்ட காரணத்தினால் படைப்பாளிக்கு எதிராக அவ்வூர் ஆக்ரோஷங்கொண்டு எழுந்தது. வெள்ளையின உடற் சாய்ங்கல்களின் வெளிப்பாட்டிற்கான காரணம் ஆய்வுரீதியானதல்ல ; யூகமானது. அதை கற்பனை ஊரொன்றில் ஏற்றிக்காட்டினாலும் புனைவின் வீச்சாகப் பொறுத்துப்போக வாசகருக்கு முடிந்திருக்கும். ஆனால் வாழும் ஊரொன்றுபற்றிய அவ்வகை அபிப்பிராயம் கேள்விக்குரியது. அதற்கான எதிர்ப்பு நியாயமானது. ஆனால் கருத்தின் எதிர்ப்பாகமட்டும் அது இருப்பது கட்டாயம். விவாத நிலையில் அப் பிரச்னை தீர்க்கப்பட்டாலும் படாவிட்டாலும் இந்த நிலைப்பாடு எழுத்தாண்மையின் சுதந்திரத்திற்கு முக்கியமானது. தமிழகத்தில் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கு இதுவே நடந்தது.

அத்தகு பிரச்னையொன்றை ‘சித்தன் சரிதம்’ துணிகரமாக முன்வைத்திருக்கிறது. இது குறித்து நாவலில் வரும் வரிகள் இவை:

‘செம்பட்டை மயிர், அல்லது பூனைக்கண், அல்லது நல்ல வெள்ளை நிறம் என்ற ஒவ்வொன்றோடும் சிற்சிலபேரை சிப்பித்திட்டியில் சித்தன் கண்டிருக்கிறான். “ஓ ஓ?”

“அது  உனக்குச் சொன்னா என்ன, தம்பி? அந்தப் போத்துக்கீசப் பறங்கி …யள்தான் காரணம்! அந்த நாயள்!” சித்தனுக்குப் புரிந்தது. மாரியப்புவின் கோபத்தின் நியாயமும்.

“சில அப்பாவிப் பெண்புரசை வெருட்டி, வில்லங்கப்படுத்தி, அலங்கோலம் பண்ணி!” தலையை நீட்டி வெற்றிலைச் சாற்றை வெறுப்புடன் துப்பினார்.’ (பக்:200)

2.6 ஆம் அதிகாரத்தில் வரும் சிப்பித்திட்டி, மட்டிக்குளி ஆகிய கடலோரக் கிராமங்களின் வர்ணிப்பு அற்புதமாக வந்திருந்தது. சிப்பித்திட்டி மக்களின் உழைப்பும் முயற்சியும் போற்றப்படும் விதமாகவே பதிவாகியுள்ளன. ஆனால் அப் பகுதிகளில் சிலபேரிடம் காணப்படும் பறங்கியின உடலம்சங்களின் காரண விளக்கம் மாரியப்பு வாயிலிருந்தே வருவதானாலும், பெண்களின் இணக்கமின்றியே நிகழ்வதாய்த் தெரிவிப்பதானாலும் அது எந்த நியாயத்தோடும் பொருந்திப்போக மறுக்கவே செய்யும்.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருக்கக்கூடியதாய் சொல்லப்படும் இச் சம்பவம் குறித்த ஐதீகங்கள் அவ்வூரில் இருந்திருக்கக்கூடும். அது குறித்து தெரியவந்திருப்பின் அதை வெளிப்படுத்துவதற்கான வெளிகள் வேறு விதங்களில் இருக்கின்றன. விவரணமாகச் சென்ற தன்மையிலிருந்து பிரதி மீண்டு புனைவுக்கு \ மீபுனைவுக்கு ஏறியிருக்கவேண்டிய தருணம் இது. ‘இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம்’ மற்றும் ‘உலக இலக்கிய’த்தைத் தந்த படைப்பாளி இதை ஒப்புக்கொள்வாரென நம்பலாம்.

மொத்தத்தில் இலங்கையின் நாவலிலக்கியம் பெருமைப்படக்கூடிய ஆக்கம் ‘சித்தன் சரிதம்’. அதனளவு உயரத்தை இலங்கையின் ஆவண வகைத் தமிழ் நாவலெதுவும் இதுவரை அடைந்திருக்கவில்லை என்பது மிகையான கூற்றல்ல.

***

 

 தாய்வீடு, ஏப்.2022


 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்