சாம்பரில் திரண்ட சொற்கள் 8

 


 

15

வெளியே சுந்தரம் தூங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள் மலர். அது தூங்குகிற நேரமது. தூங்கி, விழித்த பின் படுக்கையில் கிடந்து என்ன செய்யுமோ? அப்போதும் தூங்குமென்றுதான் அவள் நினைத்திருக்கிறாள்.

கூடத்துள் அமைதி நிலவியிருந்தது. வெளி மரங்களில் குருவிகள் சில துயிலருண்டு கிலுகிலுத்து மறுபடி அமைதியாயின. தூரத்து நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களின் ‘சர்…’ரென்ற பேரிரைச்சல் அவ்வப்போது மெதுவாய் காற்றில் வந்தடைந்தது.

அத்தகு சூழ்நிலை அவளுக்குப் பிடிக்கும். மனப் பறவையை கதவு திறந்து அவள் வெளிவிடுகிற சமயமது. அவளே கூட்டின் கதவு திறந்து பறவையை வெளிவிடும் சுதந்திரப் பிரகடனப்படுத்தல் இல்லையது. பறவையே தன் கூடு திறந்து வெளிவந்து அவள் கால காலமும் உலவிய இடமெல்லாம் பறந்துசென்று , அவள் கண்ட கனவுகளெல்லாம் மீளக் கண்டு, அவளனுபவித்த இன்பம் துன்பம் ஏக்கம் ஆதியவற்றுள்ளெல்லாம் மீண்டும் திளைத்துவிட்டு திரும்ப ஒரு சத்தத்தில்   ‘டபக்’கென கூட்டுக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்டு கதவைச் சாத்திவிடும் பெற்றி கொண்டது.

அவளும் யதார்த்தத்தில் வந்து விழுந்து சமகால உடல் உபாதைகளையும் மன வேக்காடுகளையும் அனுபவிக்கத் துவங்கிவிடுவாள்.

அவளுக்குத் தெரியும், கடந்த சில தினங்களாய் சுந்தரம் தன் இயல்புமீறி சோர்ந்து திரிந்துகொண்டிருப்பது. இந் நாட்களில் அது புகைப்பதும் அதிகமென்பதை, வெளிக் கதவு திறந்து மூடும் சத்தங்களிலிருந்து அவள் அனுமானம் கொள்கிறாள்.

‘நன்றாகத்தான் வாங்கிக் கட்டிக்கொண்டது.’ அன்றொருநாள் தன் கடூர வார்த்தைகளிலான அபாண்டம் அதை உடைத்துவிட்டிருந்ததை அவள் தெரிந்தாள். அதுவொன்றும் நினையாப் பிரகாரம் உதிர்த்த வார்த்தைகளில்லை. திட்டமுடன் அதை உணரவைக்கவேண்டும் என்பதற்காகவே பிரயோகித்தாள்.

அவள் இழந்தவையும், அவளது துயரத்தின் விளைச்சல்களும் அவ்வாறிருக்க, அவர்மட்டும் ட்றம்பின் ஜனாதிபத்தியம்பற்றி வெகு அக்கறையாய் கனடிய தமிழ் வானொலியில் செய்தி கேட்டுக்கொண்டும், தமிழ்ப் பத்திரிகைகளையெல்லாம் மூட்டைகட்டி இழுத்து வந்து ‘உலக ஞானம்’ அடைந்துகொண்டுமிருப்பதில் அவளுக்கு ஒவ்வாமையுண்டு. ஏனெனில் அவர் சாடசியல்ல; பொறுப்பாளி. அப்போதைய அவள் நிலைக்கு சிறிதாகவோ பெரிதாகவோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணஸ்தர்.

‘நல்லய் வேணும்!’ அவளது அந்த அபிப்பிராயம் எப்போதும் மாறப்போவதில்லை.

சுந்தரத்தின் அடிமனத்திலும் தாக்கங்கள் நோவுகள் நொம்பலங்கள் இருக்கக்கூடுமென்பதை அவள் மறுக்கவில்லை. அதுவொரு மூலச் செயற்பாட்டின் உபவிளைவுகளே அவள் பொறுத்து.

அவள் அதற்காக அவர்மீது ஓரளவு அனுதாபம் கொள்ளக்கூடும். ஓரொரு பொழுதில் வேறு காரணங்களில் அதை வெளிப்படுத்தவும் செய்திருக்கிறாள். ஆனால் அதற்காகச் செய்யமாட்டாள்.

சுந்தரம் எப்போதாவது அதை உணர்ந்திருப்பாரா?

அது சாத்தியமில்லை.

அவளின் மூடுண்ட இதயத்துள் இரகசியமாய் பீறிட்ட உணர்ச்சியது.

சுந்தரத்தை, அவள் அரை மூடி சலங்கை கட்டித் திரிந்த காலத்திலிருந்தே தன் வீட்டு உயர்ந்த விறாந்தையிலிருந்து அவன் வீட்டுப் படலையில் நித்தம் அவனைக் கண்டிருக்கிறாள். பிராயம் வளர நடனமாய் அவனைத் தெரிந்திருக்கிறாள். கூடி விளையாட வேறு சின்னதுகள் அக்கம்பக்கத்தில் இல்லாத காலத்திலும் அவன்கூட விளையாட அந்த வயதிலேயே ஓர் உந்துதல் அவள் அடைந்ததில்லை. நெற்றியிலும் பிடரியிலும் ஒழுகுமளவு தலைக்கு எண்ணெய் வைத்து, கன்ன உச்சி பிரித்து படிய வாரிய தலையோடு, நெற்றியில் பட்டையாய் அப்பிய வெண்ணீறுமாய் ஒரு வெங்கிணாந்திச் சிரிப்பை சுபாவமாய் முகத்தில் தரித்துக்கொண்டு தனக்கான கூட்டமோ தனித்த கூட்டாளியோவின்றி தன்னந்தனியனாய் மாங்காயோ தேங்காயோ கையில் வைத்து தன் பென்னாம்பெரிய பற்களால் காந்தியபடி எல்லா விளையாட்டுக்களையும் பராக்குப் பார்த்தபடி திரிந்த அந்த அடுப்புக் கரி உருவத்தின் லட்சணத்தை தான் விரும்பாததற்கு பின்னாளில் அவள் காரணங்களாய் எண்ணிக்கொண்டாள்.

மெய்தான். யாரும் பிரியம் கொள்ளுமளவோ, விளையாட்டில் கூட்டுச் சேருமளவோ உற்சாகமானவனாய் அவன் இருந்திருக்கவில்லை. அவனுக்கு சைக்கிளோட, றவுண்ட் றேஸ் விளையாட, கிளிக்கோடு மறிக்க, போளை அடிக்கக்கூடத் தெரிந்திருக்கவில்லை.

எல்லோர்போலவும்தான் அவளும் அவனை உதாசீனப்படுத்தினாள். வித்தியாசமென்னவெனில், எல்லோருக்கும் அவ்வப்போது கிடைத்த அவ் உதாசீனச் சந்தர்ப்பம், சற்றேறக்குறைய எதிர்த்த வீட்டுக்காரியான அவளுக்கு அடிக்கடி கிடைத்தது என்பதுதான். அவன் அவளது வாழ்நிலையால்கூட பொருள் செய்யுமளவு தகுதியானவனாய் இருந்திருக்கவில்லை. தோட்டம் செய்யும் தாய், சந்தை வியாபாரம் செய்யும் பாட்டியும் எவ்வளவு அந்தஸ்தோடு இருந்திருக்கமுடியும்?

திடீரென அயலில் அவன் பேசுபொருளாகும் ஒரு காலம் வந்தது. ஆறாம் வகுப்பில் நடக்கும் கல்வி உபகாரத் தேர்வுப் பரீட்சையில் அவன் சித்தியடைந்ததை பெரிய விஷயமாய் அவளது ஐயா வித்துவான் வீரகத்தியே வீட்டுக்கு வருவோர் போவோரிடம் புளுகிப் புளுகிச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அதுதான் கொஞ்சம் கவனம் நடனத்தின்மீது அவளுக்கு ஏற்பட்ட சமயம். அது எதிர்பாராத விதமாக ஒருவித பொறாமையாக மாறியதுதான் உண்மையில் நடந்தது. அந்த பொறாமையுடன்தான் அவன் வீட்டுக்கு பவளமாச்சியின் கதை கேட்க அவள் போனாள். அவன் காணப்படாத வேளைகள் ஓர் ஏக்கமாக தன்னில் கூர்மையடைவது கண்டபோது, அவள் அவனை முழுதுமாய் வெறுக்கப் பயின்றுகொண்டாள்.

அவன் வெளியே செல்ல புறப்பட்டு வந்த வேளைகளில் ‘வெய்யில் போ! மழை வா!’ பாட்டுப் பாடி மழையை வருவித்தாள். மழையென அவன் பயணம் தவிர்த்து நின்றபோது அவள் மறுதலையாக வெய்யிலைக் கூவியழைத்தாள். தன் வெறுப்பை அவள் பயில்வுசெய்த விதம் அவ்வாறாகயிருந்தது.

வீட்டார் எதிர்பார்த்திருந்த காலத்துக்கு முன்பாக பன்னிரண்டு வயதில் அவள் பூப்படைந்ததை மூன்று நாள் விழாவாக வித்துவான் வீரகத்தி ஒலிபெருக்கி, நாதஸ்வரம், பாட்டுக் கச்சேரியென விமரிசையாகக் கொண்டாடினார். அக் கொண்டாட்டம் அவளை வெட்கப்படுத்தியது. அப்போது அவள் உடலும் உணர்வுகளும் குறித்த பல விஷயங்கள் தெரிந்திருந்தாள். அக் கொண்டாட்ட நிகழ்வுக்கு இரண்டொரு வருஷங்கள் முன்னதாக கொழும்பில் இனக் கலவரம் மூண்ட காலத்தில் அங்கிருந்து ஆத்துப்பறந்து வந்து அங்கே அவளது அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரியும் கணவரும் தங்கியிருந்த ஆறு மாத காலத்து ஒரே அறையின் படுக்கையானது அவளை உடல் வளரும் முன்பாகவே உணர்வுகள் வளர்ந்ததாய் ஆக்கியிருந்தது.

அது, வேட்டி உடுத்த, அலைச்சலில் இன்னும் முகம் கரியாகிப்போன, தற்காலிக ஆசிரிய நியமனமெனினும் நாகரிகத்தின் எதுவித கூறுமற்ற நடனசுந்தரத்தின்மீது அவளுக்கு விருப்பமற்ற ஓர் அவதானத்தைப் பிறக்கவைத்தது. அவள் விரும்பாதபோதும் திடீர்திடீரென்ற எதிர்ப்படுகைகளும், தூரப் பார்வைகளும் ஒரு விருப்பத்தின் தருணமாக அமைந்துவருவதை அவளால் துல்லியமாக இனங்காண முடிந்தது. தான் அத் தருணத்தின் கைதியாவதை உறுதியாக அவள் மறுத்தாள். அதுதான் அவள் க.பொ.த. சாதாரண தரம் மூன்றாமாண்டில் கல்லூரி எதிரில் கண்ட வசீகரன்மீதான தன் அக்கறையை மெதுமெதுவாய் ஆழப்படுத்தியதன் காரணம்.

அதுவொரு காலம். ஆழ்ந்து யோசிக்கும் அவசியத்தை மறுதலித்து அவசரமாய் காதலென்ற வர்ணத்தை அப்பிக்கொண்டு தான் வேறொருத்தியான அவதாரம்.

ஒரு வருஷ காலத்துள் அவள் பதிலெழுதாதிருந்த வேளையிலும் அவன் நூறு கடிதங்கள் எழுதினான். சிரிப்பைத் தவிர வேறு பரிமாற்றம் அவள் செய்தேயிருக்கவில்லை.

எல்லாம் எதனாலாயிற்று?

நடனசுந்தரத்தாலல்லவா?

அவள் மறக்கமாட்டாள்.

தான் ஒரு விளையாட்டுத் தனத்தின் இயங்கியாகயிருந்ததை அவள் ஐயா என்னமாதிரிக் கற்பனை பண்ணிவிட்டார்!

அவனது கடிதங்கள் அவளறையில் இருக்கக் கண்டவர் அன்றே தீர்மானமெடுத்தார், அவளை தஞ்சாவூர் அனுப்புவதற்கு.

‘அங்கே என்ன செய்வா’ளென்று புலம்பினாள் தாய்.

கணவனின் வார்த்தையெதுவுமற்ற பார்வையில் மகளின் பயணம்வரை அவள் வாய் திறக்கவில்லை.

எல்லோரும் எண்ணினார்கள், அவள் தஞ்சாவூரில் வீணை பயிலச் செல்வதாக. குடும்பத்தில் ஓரிருவர் மட்டுமே அறிந்தார்கள் அதன் உண்மைக் காரணம். அவளுக்கு என்ன தெரியும் வீணை இசைபற்றி? அல்லது அந்தக் குடும்பத்தில் யாருக்குத்தான் தெரியும் சங்கீதம் என்ன என்பதுபற்றி?

அழுது தன் களங்கமின்மையை வெளிப்படுத்த, தன் துன்பத்தை ஆற்றக்கூட, அவளுக்கு ஆள் இருக்கவில்லை. புவனேஸ் அப்பாவின் கையாள்மாதிரித்தான். அவளுக்கு கிடைத்தது ‘முள்ளெடுக்கிற’ துன்னாலைத் தங்கம்மாவின் மகள் சிவநாயகி மட்டும்தான்.

சிவநாயகிக்கு, மலருக்குத் தெரியும் எல்லாம் தெரிந்திருந்ததென்று. உடலும், உணர்வுகளும்பற்றி அவளைவிட இவளுக்கு வயது ஆறு வருஷம் அதிகமென்பதாலேயே அது சாத்தியமாயிற்றென்றில்லை. அவள் ஒரு வித்தியாசமான குடும்பத்தின் அங்கம். ஊர் இதுநாள்வரை பல விஷயங்களை மறந்து போயிற்றென்றாலும், கதைகள் இன்னும் உலாவருவதை முற்றாய் இழந்துவிடவில்லை.

அவள் நல்லவள். நட்புக்கு விசுவாசமானவள். நெஞ்சுரம் கொண்டவள். சந்தர்ப்பமேற்பட்டால் தானே கடிதங்களை வசீகரனிடமிருந்து அவனது வற்புறுத்துதலின்பேரில் வாங்கி மலரிடம் கொடுத்ததாக வித்துவான் வீரகத்திக்கு முன்னாலேயே சொல்லக்கூடியவள்.

இப்போது அவள் என்ன செய்துகொண்டிருப்பாள்? இருப்பாளா, இல்லாது போயிருப்பாளா? ஆறு வருஷங்களுக்கு முன்னால் இலங்கை சென்றிருந்தபோது விசாரிப்பில் அவள் கிடைக்கவில்லை. தகவல் மேலே தெரியவும் வழி இருந்திருக்கவில்லை.

பாவம் அவள்.

 

 

 

 

 

 

16

1939 – 1945க்கு இடைப்பட்ட இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் திருகோணமலையில் ஜப்பான் குண்டு வீசிய நிகழ்வுக்குப் பிறகு, ஏற்கனவே கொழும்பு உட்பட்ட பெருநகர்களின் ஜனச் செறிவு ஐதாகியிருந்த நிலையில், திருகோணமலை ஆதிய துறைமுக நகர்கள் வெறுமைபற்றிப் போய்விட்டன. கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்க ஆளில்லைமாதிரியான வெறுமை. அந்த இடப்பெயர்ச்சியால் வடக்கே தென்மராட்சி மற்றும் வடமராட்சிபோன்ற பிரிவுகளில் மக்கள் தொகை திடீரென வெகுத்துப்போயிற்று.

முகமறியா மனிதர்கள் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் நடமாடுவத இயல்பாகக் கொண்டிருந்தது அக் காலம். அதில் குறிப்பிடக்கூடிய அம்சம் பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்து தப்பியோடிய ஆப்பிரிக்கர்கள் சிலரின் அப் பிரதேசத்திய அலைவாக இருந்தது. அது  கிராம மக்களை அச்சுறுத்தியது. உடல் உயிர் மானங்களின் அச்சுறுத்துகையாய் அதை அவர்கள் கண்டார்கள்.

ஜேர்மனியினதும் ஜப்பானினதும் தோல்வி உறுதிப்பாட்டுடன் யுத்தம் முடிவுற்றபோது துறைமுக நகர்களிலிருந்தும் பெருநகர்களிலிருந்தும் இடம்பெயர்ந்தவர்கள் தம் இடங்களைநோக்கி நகரவாரம்பித்தனர். ஆப்பிரிக்கர்களின் நினைப்பில் கெடுகலங்கியிருந்த கிராம மக்கள் நிம்மதி மூச்சுவிட்டனர். ‘காப்புலி’களின் அகல்வு அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டுக்கொடுத்தது.

1946, 1947ஆம் ஆண்டுகள் ‘காப்புலி’களைக் கண்டதாய், கண்டதைக் கேட்டதாய் ஆங்காங்கே கதைகள் கிளம்பியிருந்தாலும்,  மக்களின் நம்பிக்கையை அசைக்கக்கூடியனவாய் அவை இருக்கவில்லை.

துன்னாலையென்ற வடமராட்சிக் கடலேரியை அண்டிய கிராமமொன்றில் ஏற்கனவே கணவனையிழந்த நான்கு பெண்களின் தாயான சிவயோகத்தின் வாழ்வு, யுத்தம் விழுத்திய பொருளாதார நசிவென்கிற அதலபாதாளத்தில் அமுங்கிப்போய்க் கிடந்தது.

செம்மையாய் கருமையாய்க் கிடந்த அப் பகுதிக் ககளிப்பாங்கான மண், மட்பாண்ட வனைவுக்கேற்றதாய் இருந்தவகையில் அக் குயவத் தொழிலில் ஜீவனோபாயம் பெற்றுவந்த அந்தக் குடும்பம் அவள் கணவனின் மறைவின் பின்னாக திசைகெட்டுப் போயிற்று.

ஆயினும் சிவயோகம் தன் குடியிருப்பு வளவில் தோட்டமமைத்து வாழ்க்கையை நடத்தும் யுத்தத்தை அக் களிமண் நிலத்துடன் புரிந்துகொண்டிருந்தாள். பெண்பிள்ளைகளானாலும் வளர்ந்தவர்களாய் இருந்த வகையில் அவளது யுத்தம் தோல்வியின் எல்லையிலும் தொடர்ந்துகொண்டிருத்தல் சாத்தியமாயிற்று.

பொசுக்கும் அந்தப் பங்குனி வெய்யிலில் இறைப்பு நீர் உறுஞ்சப்பட்டுப் போய்விட, அவள் வைத்திருந்த ஐந்நூறு பாத்தி மிளகாய்க் கன்றுகளுக்கு வற்றுக் கிணற்றிலிருந்து நீரிறைத்தே அந்த ஐந்து ஜென்மமும் ஓய்ந்தது.

இரண்டு நாட்களுக்கு முன் இறைப்புக் கண்டிருந்த மிளகாய்க் கன்றுகள் முதல்நாளே மதியத்தில் வாடிப்போய் நின்றதை மனம் பதைக்கக் கண்ட சிவயோகம், மறுநாள் கண்டிப்பாய் நீரிறைக்கவேண்டுமென நிச்சயித்துக்கொண்டாள்.

அன்று காலை கண் விழித்தவளுக்கு இறைப்பு என்பதே முதல் எண்ணத்தில் நின்றிருந்தது. ஒரு வார வெளிக் கூலிவேலையிருந்த யோகேஸ்வரி படலை கடக்க, மற்ற மூன்று பிள்ளைகளுடன் சிவயோகம் குடிசைப் பின்புறமுள்ள அவர்களது தோட்டத்துக்கு வந்தாள். காய்ந்து கருகியென்றாலும் இன்னும் உயிர் தரித்திருந்த வாழைகளுக்கு நீர் பாய்ச்சுவதும், கிணற்று நீரைப் பொறுத்து அவளது திட்டமாயிருந்தது.

சிவயோகம் துலாக் கொடியை இழுத்து பட்டையைக் கட்டி நீரிறைக்கத் தயாராகிக்கொண்டிருக்கையில், மண்வெட்டி எடுக்கச் சென்றிருந்த கடைசிப் பெண் காளீஸ்வரியின் ‘அம்மா!’வென்ற அலறல் பின் வேலியோரமிருந்த காவல் கொட்டில் பக்கமிருந்து எழுந்தது கேட்டாள்.

கைப் பிடியில் துலாக் கொடியைப் பற்றியிருந்த வண்ணம் அவசரமாய்த் திரும்பியவளின் எண்ணத்தில் மண்வெட்டிதான் களவு போய்விட்டது என்பதாகவே இருந்தது. ஒறுவாய்ப் பட்ட அந்த மம்பட்டியும் இல்லாமல் இனி என்னதான் செய்வது என்ற அவலமும் பட்டாள்.

ஆனால் காளீஸ்வரியின் கையினால் காவல் கொட்டிலின் உள்ளினைச் சுட்டியபடி ஸ்தம்பித்திருந்த தோற்றம், ‘பாம்பு, கீம்போ?’வென பின்னர் கருத வைத்து அவளை உடனடியாய் துலாக் கொடியை வீசிவிட்டு கொட்டிலைநோக்கி பறக்கவைத்தது.

அங்கே, காளீஸ்வரியின் விரல் சுட்டிய திசையில் கொட்டிலின் உள்ளினை நோக்கியவள் திகைத்துப்போனாள். அவளது கால்கள் கீரைத் தண்டுகளாய்த் துவளத் துவங்கின. மயக்கமாவதிலிருந்து தன்னைச் சுதாரித்துக்கொண்டு குறண்டிக் கிடந்த அந்தக் கருவுருவை உற்றுநோக்கினாள்.

‘காப்பிலிதான்.’ அவளுக்குச் சந்தேகமில்லை.

சுருண்டபடியே  மூன்று முழ நீளமிருந்த அந்த உருவம் எழுந்தால் ஆறு முழத்துக்கு உயரமாயிருக்குமென அவள் கணித்தாள். ஈச்சம் கன்றை வட்டோடு முறித்து தலையில் வைத்தமாதிரி மயிர் புலுண்டிப்போய் நீட்டி நீட்டி அடர்ந்து நின்றிருந்தது. காலடி அரவத்தில் அவனது மூடிக் கிடந்த கண்கள் திறந்தன. வெண்விழிகள் இருளிலிருந்து பளீரிட்டன.

சட்டென காளீஸ்வரியின் கைகளைப் பற்றியபடி திரும்பி ஓட சிவயோகம் எத்தனிக்கையில் அவனது அனுங்கல் தன் காதில் விழுந்தாள்.

சிவயோகத்தின் கால்கள் நின்றன.

அவன் நோய்ப்பட்டுக் கிடக்கிறான்.

அது பசி மயக்க அனுக்கமல்ல; நோயில் விடுத்த கையறு சமிக்ஞை.

அன்று ஓர் அமாவாசை விரத நாளாயிருந்தது. அந் நாளில், குறண்டிப்போய்க் கிடந்த அந்தக் காப்பிரியைக் கண்டதிலிருந்து, அவள் வாழ்க்கை பல முனைகளில் மாறிப்போயிற்று.

மிகச் சுலபமாக அக்கம் பக்கத்து சனங்களைத் திரட்டி அந்த மனிதனை அவளால் வெளியேற்றியிருக்க முடியும். ஆனால் அந்த நோயுற்றுக் கிடந்த மனிதனின் பளீரிட்டுக் கிடந்த கண்களின் இறைஞ்சுதலை அவள் புரிந்தாள். அது அவளை அவ்வாறு செய்வதிலிருந்து தடுத்தது.

காப்பிரி குணமாகும்வரை காவல் கொட்டிலில் கிடந்தான். ஒருவேளை கஞ்சி ஊற்றினாள். மூன்றாம் நாள் ஓர் அதிகாலையில் ஒரு வார்த்தையின்றி வெளியே போனவன் இரவாகிற நேரத்தில் நான்கு உரிக்காத தேங்காய்களைப் பிணைத்து தோளில் போட்டுக்கொண்டு, இரண்டு தடி மரவள்ளிக் கிழங்குடன் திரும்பிவந்தான்.

ஆச்சரியத்துடன் சிவயோகமும் பெண்களும் பார்த்து நிற்க, தன் நெஞ்சை விரிந்த கைகளால் தட்டி, ‘ரூமி! ரூமி!’ என்றான்.

அவனது பெயர் ரூமியென அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

அன்றுமுதல் குடிசைத் தாழ்வாரத்தில் படுத்தான்.

காலையில் எழுந்து வெளியேறி இரவு விழத் திரும்பினான்.

ஒருநாள் காக்கி லோங்சும் நீல சேர்ட்டும் அணிந்து வந்தான். குளித்திருந்தான். தன் தலையிலிருந்த ஈச்சம் புதரை வெட்டி ஒழுங்குபடுத்தியிருந்தான். அந்தக் கறுப்பு முகத்திற்கு தாடி மீசை நன்றாயிருக்காதென எண்ணிப்போலும் ஒட்ட மழித்திருந்தான். கையிலிருந்த மாட்டுத் தாள் பார்சலை நீட்ட, எட்ட நின்று வாங்கிய யோகேஸ்வரி பிரித்துப் பார்த்தாள். நிறைய கோயில் புக்கை.

அன்று ஒரு நிலாக் காலமாய் இருந்ததில், அவன் தனக்கு வேண்டாமென்றுவிட, ஐவரும் முற்றத்திலிருந்து பகிர்ந்து சாப்பிட்டார்கள். பின் செய்யவிருந்த வேலைகளைப் பேசினார்கள். கிணற்றில் சேறள்ளவேண்டி இருப்பதையும், மாரிக்குள் குடிசை வேயவேண்டியும் அதற்காக தென்னோலை தேடி பின்னி வைக்கவேண்டி இருப்பதையும் சிவயோகம் சொன்னாள்.

விளங்கியோ விளங்காமலோ ரூமி எல்லாம் கூர்ந்து கேட்டபடியிருந்தான்.

முன்னிலா மறையத் துவங்கியது.

அவர்கள் குடிசைக்குள் சென்று படுத்தார்கள். எந்நேரமும் சிரித்தபடியிருக்கும் ரூமியில் அவர்களுக்கு பயம் ஏற்கனவே போய்விட்டிருந்தது.

சிவயோகத்துக்கு உடனடியாகவே தூக்கம் வந்தது.

மற்றவர்களும் முழிப்பாயிருந்த சிலமன் இல்லை.

உறக்கம் ஆழமாய் விழுந்திருந்த ஒருபொழுதில் செத்தை அரைவு கேட்டாள் சிவயோகம்.

நெடிதாய்க் கிளர்ந்த மூச்சொலி கேட்டாள்.

முனங்கல்களும் எழுந்தன.

சிவயோகத்துக்கு அவைபற்றித் தெரிந்திருந்தன. அவள் தன் தேகத்தில் தீ மூளுவதை தூக்கத்திலும் உணர்ந்தாள்.

தானே எரியத் துவங்கியிருந்ததில் அருகே திரும்பிப் பார்க்க சிவயோகம் தவறினாள்.

முழு நிலாக்கள் சில வந்துபோயின.

மாரி வந்தது.

ஒரு மாலை பிடித்த மழை இரவிரவாய்ப் பெய்தது. நனைந்து வந்த ரூமி தன்னத் துடைத்துக்கொண்டு வாசலில் குந்தியிருந்தான். பிறகொருபொழுதில் நுணுந்தி நுணுந்தி குடிசைக்குள் சென்று படுத்தான். யாரும் அசையக்கூடச் செய்யவில்லை. உள்ளே ஆழ்ந்த அமைதி.

நடுச் சாமத்தின்மேல் நெஞ்சிரைத்த மூச்சும், பாயரைவும், அடங்கிய முனகலும் சிவயோகம் கேட்டாள்.

தசையில் தீப்பிடித்தவள் தன் கனவுகளுள் அழுந்திக் கிடந்தாள்.

காலம் கழிந்தது. தோட்டம் ரூமியின் உழைப்பில் குடும்பத்தைப் பராமரிக்குமளவு வரும்படி தருவதாய் ஆனது.

ஒரு காலை கண் விழித்த பெண்கள் அதிர்ச்சியடையும்படி கண்டார்கள், வழக்கமாய் ரூமி படுக்கும் செத்தையோரம் வெறுமையாய்க் கிடக்க.

குடிசையின் பின்னால் தேடியவர்கள் கண்களிலும் ரூமி காணப்படவில்லை.

யோகேஸ்வரி அந்த அதிர்விலிருந்து தெளிந்தாள்; நாகேஸ்வரி தெளிந்தாள்; தங்கேஸ்வரியும் காளீஸ்வரியும்கூட தெளிந்தனர். ஆனால் சிவயோகம்மட்டும் தெளியவில்லை. அப்போது அவள் கர்ப்பமாகயிருந்தாள்.

சிவயோகத்தின் கடைசிக் குழந்தைதான் சிவநாயகி.

எவ்வளவோ அவமானங்களைக் கடந்து அது வளரவேண்டியிருந்தது. ஊர் எல்லாம் மறக்க முயற்சித்தது. ஆனால் அவளது புளி நிற புலுட்டைத் தலைமயிர் கட்டுக்கடங்காமல் பறந்துகொண்டிருந்து கதைகளை உயிர்ப்புள்ளதாக்கியது.

ஆனால் காலம் கருணைகொண்டு ஓர் ஒழுங்கு செய்தது.

சிவநாயகியை சிரமத்தில் பெற சிவயோகத்தால் முடிந்தது. ஆனால் நஞ்சுக்கொடி விழவில்லை. மூன்று நாளில் அவளுடல் நீலம் பாரித்துவிட்டது. மந்திகை ஆஸ்பத்திரிக்கு வண்டி கட்டி கொண்டுபோனார்கள். சிவயோகம் மருந்தேதும் பயனின்றி இறந்துபோனாள்.

அவளது தங்க கைம்பெண் தங்கம்மாவில் சிவநாயகியை வளர்க்கும் பொறுப்புச் சுமந்தது. மற்றைய பெண்கள் தம் வழியெடுத்து எங்கெங்கோ போய்ச் சேர்ந்தனர்.

எல்லாரும் எல்லாம் மறந்தனர்.

ஆனால் சிவநாயகியிடம் தன் கதை இருந்தது.


(தொடரும்)

தாய்வீடு, டிச.2022

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்