கலாபன் கதை: 11
இருந்தால் மனைவி! போனால் பரத்தை! 1985இல் வீடு திரும்பிய கலாபன் மறுபடி கப்பலெடுப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு புதிய கார் வாங்கி, அதை யாழ்ப்பாணம் முழுக்க முழுவேகத்தில் ஓடித்திரிந்து, ஒருமுறை பருத்தித்;துறை செல்லும் வழியில் ஒரு மினிவானுடன் விபத்துக்குள்ளாகி, இரண்டு மாதங்களாக கராஜ்ஜுக்கு அலைந்து திருத்தியெடுத்து, அடுத்த ஆறாவது மாதம் வந்த விலைக்கு அதை விற்று என்று பல சீரழிவுகளையும் அனுபவித்த பின்னர்தான் அதுவும் முடிந்திருந்தது. கலாபன் எங்கோ அடிபட்டிருந்தான் என்பதை சிலகாலமாகவே நான் புரிந்துகொண்;டிருந்தேன். மெல்லவோ விழுங்கவோ முடியாத ஓர் மனவலியின் விளைவே அந்த அவனது வரம்புமீறிய குடியென்று ஊகிக்க பெரிய அனுபவமொன்றும் வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் வெளிப்படப் பேசி அவனை ஆறுதல்படுத்த அந்த ஊகத்தில் தெரிந்த காரணம்மட்டும் போதுமாயிருக்கவில்லை. மனமென்பதுதான் என்ன? உடலின் எந்தவிதமான உறுப்பாக இல்லாதும், உணர்வுகளின் ஊற்றாய் முழு மனித வாழ்வியக்கத்துக்குக் காரணமாயுமிருக்கிற ஒரு புள்ளிதானே! அது பலருக்கு நீராலானதாய் அமைந்திருப்பது விந்தைகளின் உச்சம். நீர் சிறிய காற்றினலைவுக்கும் சலனமாக...