Posts

சிறுகதை:: ‘மென்கொலை’

 ‘மென்கொலை’  ஒரு நுண்கிரகம்போல தன்னிலை கெடாச் சுழற்சியில் தன்னைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்த அந்த ஒற்றை உயிர் அவன் பார்வையிலிருந்தும், உணர்கையிலிருந்தும் நீண்டநேரமாக மறைந்திருந்தது. அதனுடைய இன்மையை நிச்சயமாக அவன் உணர்ந்திருந்தான். ஆனாலும் அது எப்படிச் சாத்தியமாயிற்று என்பது தெரியாத புதிர் அந்த நிஜத்தை முற்றாக அங்கீகரிக்க முடியாமல் அவனைச் செய்துகொண்டிருந்தது. கடந்த பல நாள்களின் இரவுகளை, பகல்களையும்தான், ஒரு பயங்கரத்தில் நிறைத்;திருந்த அந்த ஜீவராசி, எத்தனையோ அவன் கொலை முயற்சிகளிலும் தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, ‘எங்கு போனாலும் உன்னை விடமாட்டேன்’ என்பதுபோல் தேசம்விட்டு தேசம் வந்துகூட அவனைத் தொல்லைப் படுத்திக்கொண்டிருந்தது. கடித்துக் குதறிக்கொண்டிருந்தது. சொல்லப்போனால் இழுத்து மூடிக்கொண்டு பெரிய நிம்மதியோடு இப்போது அவன் தூங்கியபடி இருந்திருக்கலாம். கடந்த ஒரு மாதத்தக்கும் சற்று மேலாக அவனது தூக்கத்தில் விழுந்திருந்த விரிசல்களை நிரப்பக் கிடைத்திருக்கிற நல்ல தருணம் இது. ஆனால் நள்ளிரவு கடந்த அந்தநேரத்தில், அந்த மெல்லிய ஒளித்தெறிப்பு நீண்டநேரப் பரிச்சயத்தில் போதுமான வெளிச...

நினைவேற்றம் 4

   முனை 4 ஐயாவின் மரணத்துக்குப் பிறகு எனக்கு மிச்சமாகிப் போனவை அவரது நினைவும், அவர் பாவித்த ஒரு பழைய சைக்கிளும்தான். முன்பே சைக்கிள் எடுத்து ஓடித்திரிய வீட்டிலே எனக்குக் கட்டுப்பாடிருந்தது. இப்போது அம்மா பெரும்பாலும் தன் சோகத்துள் இருந்த நிலையில் நான் கட்டறுத்தவனாய் திசையெங்கும் அலைந்து திரிந்தேன்.   இப்பவோ அப்பவோ ஒருபொழுதில் என் குடும்பத்தாருடன் காரிலும், பஸ்ஸிலுமாய் நான் கலகலத்துச் சென்ற பாதைகளின் காடும், வயலும், வெளியும் பேசிய மௌனத்தின் சுவை என் அலைவின் தனிமையில் எனக்குச் சுகிப்பாயிற்று. மாலையின் மஞ்சள் வெளிச்சங்களில் மட்டுமில்லை, நிலாவின் மென்னொளி இரவுகளும்கூட என் அலைதல் காலமாயிற்று. கதைகளிலும், கட்டுரைகளிலும் வாசித்து ரசித்த நிலக் காட்சிகளின் நிதர்சனம் மேலும்மேலுமாக இயற்கையின்மீதான என் ருசியினை ஏற்றிற்று. பள்ளிப் பாடங்கள் தவிர்ந்த புத்தக வாசிப்பும், பள்ளிக்குச் செல்லாமலே மேற்கொண்ட ஊர் அலைவும் எனக்குள் ஒரு புதிய உலகத்தைத் திறந்தபோதும், அதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாதவனாகத்தான் நான் இருந்தேனென்று நினைக்கிறேன். ஒரு இலக்கு நோக்கியல்லாமல் வெறும் அலைதலாக அது ...

சிறுகதை:: கறுப்புப் பூனை

கறுப்புப் பூனை வெளியையும், வெளிச்சத்தையும், மனித நடமாட்டத்தின் அசைவையும், சத்தத்தையும்  தேடுபவர்போல் தன்னின் பெருமளவு நேரத்தையும் வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நிற்கிறார். பின்னர் தன் தேடலின் ஏமாற்றத்தில் ஓடும் வாகனங்களைப் பார்த்துவிட்டு ஒரு வெறுமையான மனநிலையுடன் வீட்டுக்குள் திரும்புகிறார். கனடாவுக்கு வதிவுரிமைபெற்று வந்த கடந்த ஆறு மாத காலத்தையும் குருசாமி அவ்வாறுதான் அல்லாடிக் கழித்துக்கொண்டிருக்கிறார்.  அந்த வீட்டின்மேல் மௌனமாயும், தனிமையாயும் தொங்கிக்கொண்டிருந்த இருண்மைகள் பகலிலுமே நிலைத்துக் கிடப்பனவாய்ப்பட்டது அவருக்கு. அங்கிங்கொன்றாக இருந்த வீடுகளும், ரொறன்ரோ ஏரியில் கலக்கவோடிய செந்நதியுடன் சேர விரைந்த சிற்றாற்றினையொட்டிக் கிடந்த செடிகளும், மரங்களும் அந்தத் தோற்றத்தை ஏற்படுத்தினவா அல்லது அந்த வீடே இயல்பில் மௌனத்துக்கும் தனிமைக்குமாய் விதிக்கப்பட்டதாவென யோசித்தவேளைகளிலும் அவருக்குப் புரிபடாதிருந்தது. ஒரேயொரு முனைச் சிந்திப்பில் அதற்கான பதிலை அவர் கண்டடைந்திருக்க முடியும். அவர் விட்டுவந்த புலம் ஜன சத்தங்களாலும், அசைவுகளாலும் நள்ளிரவு வரையி...