சிறுகதை:: கறுப்புப் பூனை


கறுப்புப் பூனை



வெளியையும், வெளிச்சத்தையும், மனித நடமாட்டத்தின் அசைவையும், சத்தத்தையும்  தேடுபவர்போல் தன்னின் பெருமளவு நேரத்தையும் வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நிற்கிறார். பின்னர் தன் தேடலின் ஏமாற்றத்தில் ஓடும் வாகனங்களைப் பார்த்துவிட்டு ஒரு வெறுமையான மனநிலையுடன் வீட்டுக்குள் திரும்புகிறார். கனடாவுக்கு வதிவுரிமைபெற்று வந்த கடந்த ஆறு மாத காலத்தையும் குருசாமி அவ்வாறுதான் அல்லாடிக் கழித்துக்கொண்டிருக்கிறார். 

அந்த வீட்டின்மேல் மௌனமாயும், தனிமையாயும் தொங்கிக்கொண்டிருந்த இருண்மைகள் பகலிலுமே நிலைத்துக் கிடப்பனவாய்ப்பட்டது அவருக்கு. அங்கிங்கொன்றாக இருந்த வீடுகளும், ரொறன்ரோ ஏரியில் கலக்கவோடிய செந்நதியுடன் சேர விரைந்த சிற்றாற்றினையொட்டிக் கிடந்த செடிகளும், மரங்களும் அந்தத் தோற்றத்தை ஏற்படுத்தினவா அல்லது அந்த வீடே இயல்பில் மௌனத்துக்கும் தனிமைக்குமாய் விதிக்கப்பட்டதாவென யோசித்தவேளைகளிலும் அவருக்குப் புரிபடாதிருந்தது.

ஒரேயொரு முனைச் சிந்திப்பில் அதற்கான பதிலை அவர் கண்டடைந்திருக்க முடியும். அவர் விட்டுவந்த புலம் ஜன சத்தங்களாலும், அசைவுகளாலும் நள்ளிரவு வரையிலும்கூட உயிர்த்திருந்த பூமி என்பதைத் தொடர்புபடுத்தி அவர் யோசித்திருக்க வேண்டும். அவ்வகையில் காரணத்தை அறிந்திருந்தாலும் அந்த வித்தியாசத்தையே அவரால் உள்வாங்கியிருக்க முடியாமல்தான் இருந்திருக்கும். அந்த மண்ணில் அவர் வாழ்ந்த காலம் மிகப் பெரியது. பதினைந்து ஆண்டுகள்!

வடக்குத் தெற்காய் ஓடிய கென்னடி மற்றும் பேர்ச்மவுண்ட் தெருக்களை இடைவெட்டிக் கிடந்த ஹன்ரிங்வுட் ட்றைவ்வின் அந்தப் பகுதி போக்குவரத்துக் குறைந்தது. அப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த வேகமும் ஐம்பது கிலோ மீற்றர்தான். மட்டுமல்லாது, ஹன்ரிங்வுட் தெருவிலிருந்தும் கிளை பிரிந்த பாஸ்கல் என்ற சிறுதெருவிலேயே வீடு அமைந்திருந்ததில் நிசப்தமும், தனிமையும் கலைபடாத பகுதியாகவே அதன் சூழலும் விளங்கியது.

வலதுகைப் பக்கமிருந்த வீட்டில் ஒரு இத்தாலியக் குடும்பம் இருந்தது. காண்கிறபோது ‘ஹாய்!’ சொல்கிற, ஆண்டுக்கொருமுறை ‘ஹாப்பி கிறிஸ்ம’ஸ{ம்,‘ஹாப்பி நியூ இய’ரும் சொல்கிற அளவுக்கான பழக்கம் மட்டுமே கொண்டிருந்த குடும்பம். இடதுகைப் பக்கத்தில் இரண்டு காணிகள் தள்ளி ஒரு சீனக் குடும்பத்தின் வீடு. ஆண்டுக்கு இரண்டு தடவையாவது அந்த வீட்டில் குடியிருக்கும் குடும்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும். பார்வைப் பழக்கம் மட்டுமே அதனால் அவர்களோடு சாத்தியமாகவிருந்தது. பின்வீட்டில் ஒரு பிரெஞ்சுக் குடும்பம். ஒரு கிழவனும், கிழவியும் மட்டுமே வாழ்ந்துகொண்டிருந்தார்கள் அதில். அவர்களது நடமாட்டம் அவர்கள் வீட்டின் முன்புறத் தெருவான ஹீதர்சைட்டில் இருந்ததால், இந்தப் பகுதிக் குடியிருப்பவர்களால் அந்தக் குடும்பம்பற்றி பெரிதாக எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. இருந்துவிட்டு ஒருநாள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பங்கள் வந்திருந்து சத்தம் சந்தடிகளுடன் விருந்துகள் நடப்பது கேட்கும். இரண்டு மூன்று நாட்கள்தான். மேலே நிசப்தமும் தனிமையும் அந்தப் பகுதியை ஆக்கிரமித்துவிடும். 
முன் பக்கத்தில் சூழ மரங்கள் அடர்ந்து ஒரு துண்டுப் புல்வெளி.  அதன் பின்னாலுள்ள வீட்டில் ஒரு தமிழ்க் குடும்பம் நீண்ட காலமாகக் குடியிருந்தது. ஒன்றோ இரண்டோ வார இடைவெளியில் ரஞ்சினியும் பிள்ளைகளும் அங்கே போவதோ, அந்த வீட்டின் மூன்று பிள்ளைகளும் தாயாரும் இங்கே வருவதோ நெருங்கி வாழ்ந்த குடும்ப பாரியங்களிலிருந்து வந்து, இங்கே விரிந்த நிலப்பரப்பில் உறவுகளற்று தனித்தனியாக வாழும்படிக்காய் விதிக்கப்பட்ட நிலைமையின் ஒளடதமாய் நடக்கும். 

அன்றைய ஞாயிற்றுக் கிழமையிலும் அந்தத் தமிழ்க் குடும்பத்து பிள்ளைகளும் தாயாரும் அங்கே வந்திருந்தனர். 

நத்தார் வரவிருந்தது. புதுவருஷம் பிறக்கவிருந்தது. அதன்பின்பும் விடுமுறைக் காலம் முடிய மேலும் நான்கு தினங்கள் மிச்சமிருக்கும். இரட்டைக் குதூகலம் குழந்தைகளுக்கு.

தாயாரை குருசாமிக்கும், அவரது மனைவி தவமணிக்கும்கூட பழக்கமாகியிருந்தது. நல்ல மனுசிதான். கலகலப்பாக எல்லோருடனும் சிரித்துப் பேசும். மனத்தில் கபடின்மையின் அறிகுறியாக அந்தத் தன்மை எல்லாராலும் விரும்பப்படுவது. தவமணி கொஞ்சம் நாட்டுநிலைமை, கனடாத் தமிழ்ச் சமூகம்பற்றி பேசுவது அவளோடு மட்டும்தான். அவளுக்கு அந்த மனுஷியைப் பிடித்துப்போயிருந்தது.

தாயாரைப் பிடித்தமான தவமணிக்கு பிள்ளைகளைத்தான் பிடிக்கவில்லை. ஒரு ‘உர்’ பார்வையில் அவர்களைப் பார்ப்பதிலிருந்து குருசாமி அதைத் தெரிந்துகொண்டார்.

அப்போது பிள்ளைகள் பப்பி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தன. அதை அவர்கள் ‘பப்பி கேம்’ என்றார்கள். என்ன விளையாட்டோ அது? ஒன்று வவ்…வவ்…எனச் சத்தமிட்டபடி ஒரு கையை பின்னால் வைத்து குட்டை வால்போல ஆட்டிக்கொண்டு தவழ்ந்தபடி ஓடும். மற்றதுகளும் வவ்…வவ்வென்றபடி அதன் பின்னால் ஓடித் திரியுங்கள். ஒன்றை ஒன்று பார்த்து சிலவேளை உறுமுவதுமுண்டு. கனடாவில் நாய்கள் கடிபட யாரும் விட்டுவிட மாட்டார்கள். அதனால் யாழ்ப்பாணத்தில் நாய்கள்போல அவர்கள் கடிபட்டுக்கொள்ளவில்லை. மற்றும்படி கனடா நாய்கள் செய்வதுபோல மரத்தடிகளில் நின்று  மோப்பம் பிடிப்பது, காலை உயர்த்தி மூத்திரம் போவது எல்லாம் செய்தார்கள். எல்லாம் பார்க்க தவமணிக்கு எரிச்சலெரிச்சலாக வந்துகொண்டிருந்தது. 

மதியமளவில் சாப்பாட்டு நேரத்துக்கு எல்லாக் குழந்தைகளும் ஒன்றாகவிருந்து சாப்பிட்டன. 

சாப்பாடு முடிந்ததும், பெரியவர்கள் சாப்பிடச் சென்றிருக்கையில், தனக்கு அப்போது பசிக்கவில்லை, பிறகு சாப்பிடுவதாகக் கூறிவிட்டு, தன் பேத்திகள் வர்~hவையும் நி~hவையும் கூப்பிட்டு தானமர்ந்திருந்த சோபாவில் தனக்கு அக்கம்பக்கமாய் அமரச் செய்து தழுவிக்கொண்டாள் தவமணி.

மற்ற மூன்று பிள்ளைகளும் எட்ட நின்றபடியே அவர்களுக்கு சைகைசெய்து பார்த்தன. கிட்ட வந்து சுற்றித் திரிந்து வரும்படி சுரண்டிப் பார்த்தன. வர்ஷாவும் நிஷாவும் எழுந்து போய்விட முடியாதபடி தவமணியின் தழுவல் தீர்க்கமாயிருந்தது. அவர்களும் சிரித்தும் நெளிந்தும்கொண்டு அப்பம்மாவின் தோளோடு சாய்ந்து அந்த அரவணைப்பை உடைக்க முயலாமலிருந்தனர்.

எதிர்வீட்டுப் பிள்ளைகள் ரஞ்சினியிடம் சென்று முறையிட்டன. 

‘அதுகளும் விளையாடத்தானே வாறதுகள், மாமி. பிள்ளையளை விடுங்கோ, கொஞ்சநேரம் விளையாடட்டும்’ என்றாள்.

‘இவ்வளவு நேரம் விளையாடினவைதானே!’ என்றுவிட்டு இருந்துவிட்டாள் தவமணி.

ரஞ்சினியின் முகம் இருள ஆரம்பித்தது. 

அது, அந்தக் குறுகிய காலத்தில் தவமணி ரஞ்சினியோடு மாறுபாடு கொள்ளும் நேசனுக்கும் நான்கு தடவைகள் கூடுதலான ஏழாவது சந்தர்ப்பம்.
எதிர்வீட்டுப் பெண்ணின் முகமும் லேசாக மாற்றமடைந்தது. நேசன் நடப்பவை அவதானமாகியிருந்தும், ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் எழுந்து போய்விட்டான்.

எல்லாம் கண்டிருந்த குருசாமிக்கு தவமணி மற்ற மூன்று பிள்ளைகளோடும் சேர்ந்து தனது பேரப் பிள்ளைகள் விளையாடுவதை விரும்பவில்லையென்பது புரிந்தது. ஆனால் அது அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதினாலா, அல்லது நாய் விளையாட்டு விளையாடுவதினாலா என்பதுதான் தெரியவில்லை.
தன் பேத்திகளை தன்னோடு தக்கபடி உறவாடாமல் தடுப்பது அந்த ஆங்கிலம்தானென்று அவள் அடிக்கடி புறுபுறுத்துத் திரிந்தவள். பரவலாக எல்லாத்; தமிழ்க் குடும்பங்களிலும் விழுந்திருந்த அந்த முதலாம் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்குமான இடைவெளி அங்கேயும் இருந்தது. ஓம், இல்லை, வேண்டாம், நல்லாயிருக்கு, நல்லாயில்லை, நான் சாப்பிட விருப்பம் என்று பத்து சொற்களைச் சொல்ல மட்டுமே தெரிந்திருந்த ஒரு தலைமுறை, பத்து ஆங்கிலச் சொற்களைக்கூட பேசப் பழக்கமற்ற மூத்த தலைமுறையுடன் பெரிதாக உறவாடிவிட மாட்டாது. குருசாமிக்கே அந்தக் குறையுண்டு. ஆனால் அவர் அவள்போல் தொணதொணத்துத் திரியவில்லை.
அன்று இரவுச் சாப்பாடு முடிந்து நேசன் ஏதோ வாசித்துக்கொண்டிருந்த வேளையில் தவமணி சென்று பேசிய பேச்சிலிருந்து குருசாமி அதன்  காரணத்தைக் கண்டுபிடித்தார்.

‘ஏன் நேசன், இந்தப் பிள்ளையளுக்கு வேற விளையாட்டொண்டும் தெரியாதோ? அதென்ன நாய் விளையாட்டு? ஒண்டு குரைச்சுக்கொண்டு ஓடுது, ஒண்டு வாலையாட்டிக்கொண்டு அதுக்குப் பின்னால ஓடுது, இன்னொண்டு மரத்தடிக்குப் போய் சுத்திச் சுத்தி வந்திட்டு காலை உயத்தி மூத்திரம் பெய்யுது. என்னெடா விளையாட்டு இது? இந்தமாதிரித்தான் நீங்களும் விளையாடினியளோ?’ என்று ஆரம்பித்தது தவமணியின் குரல்.

வாசிக்கிற நேரத்தில் யார் போய்க் குறுக்கிட்டாலும் நேசனுக்கு எரிச்சலாயிருக்கும். நல்ல மனநிலையில் இருந்திருப்பான்போல.
தாயாருக்கான அவனது பதில் இப்படியாக வந்தது: ‘அதில ஒண்டுமில்லையம்மா. இஞ்சத்தப் பிள்ளயள் இந்தமாதிரித்தான் விளைளயாடுதுகள். அதுகளுக்கு நாயெண்டால் நல்;ல விருப்பம். என்னையே நாயொண்டு வாங்கித் தரச்சொல்லி நச்சரிச்சுக்கொண்டு நிஷாவும் வர்ஷாவும் திரிஞ்சதுகள். பராமரிக்கேலாண்டு நான்தான் வேண்டாமெண்டிட்டன். விளையாடியாச்சும் தங்கட ஆசையை அதுகள் தீர்க்கட்டுமன்.’

‘நாயை நாங்கள் வீட்டு விறாந்தையிலகூட ஏற விடுறேல்ல.’

‘இந்த ஊரில வீட்டுக்குள்ள வைச்சு வளக்கிறது மட்டுமில்லை, படுக்கிற கட்டில்லகூட அதுகள ஏறிப் படுக்க விடுவினம்.’

‘எங்கட ஊரில நாயே எண்டு எங்களைப் பாத்து ஒராள் பேசியிட்டா, சும்மா விட்டிடுவமே? இஞ்சையென்னெண்டா நாய்மாதிரி விளையாடுதுகள். நான்தான் பெரிய நாய், நீ சின்ன நாயெண்டு போட்டிவேற. வேண்டாமப்பா, நாய் விளையாட்டு இனிமே இந்த வீட்டில வேண்டாம்.’
‘அப்ப, பூனை விளையாட்டு விளையாடலாமோ, அம்மா?’ என்று கேட்டு சிரிக்கிறான் நேசன்.

தவமணியிடத்தில் மௌனம் தொடர்கிறது.

சிறிதுநேரத்தில், ‘ஓ…பூனை விளையாட்டு விளையாடலாமே. இனிமே பூனை விளையாட்டையே விளையாடச் சொல்லு’ என்றுவிட்டு தவமணி அப்பால் நகர்ந்துவிடுகிறாள்.

‘அவைக்கு பூனையில விருப்பமில்லை, அம்மா.’

‘அதென்னவோ எனக்குத் தெரியாது. இனிமே பூனை விளையாட்டுத்தான். நீதான் ஆயிரம் புத்தகங்கள் வாசிக்கிறியே, நல்ல நல்ல பூனைக் கதையள அதுகளுக்குச் சொன்னியெண்டா, அதுகளுக்கு பூனையில ஆசை வந்திடும்.’
‘எனக்கெல்லாம் கதை சொல்லிக்கொண்டிருக்க நேரமில்லை.’

‘கொஞ்சக் கொஞ்ச நேரம் பிள்ளையளுக்காய் ஒதுக்கேலாட்டி பிறகேன் பிள்ளையளப் பெத்தனிங்கள்?’

தவமணி அறைக்குச் செல்கிறாள்போலும். ‘வர்~h…! நி~h…! ராவில சாப்பிட்டாப் பிறகு அப்பா பூனைக் கதை சொல்லுவார், நீங்கள் கேட்டிட்டுத்தான் படுக்கப் போகவேணும், என்ன?’

‘சரி, அப்பம்மா.’

'அதுகளுக்குப் பூனைக் கதை விருப்பமில்லை.’ கத்துகிறான் தனியாய் நின்று நேசன்.

‘எங்களுக்கு விருப்பம், அப்பா, பூனைக் கதையும்’ என்கின்றன குழந்தைகள் அறைக்குள் இருந்தபடி. 

நேசன் நல்லாய் மாட்டுப்பட்டுக்கொண்டானென்று நினைத்துக்கொண்டார் குருசாமி.

இவ்வாறுதான் குளிர் இறுகிவரும் அந்த மார்கழி மாத இராக்காலங்களில் பூனைக் கதை சொல்லுதல் ஆரம்பமானது அங்கே.

பூனைக் கதைகள் கேட்பதில் பெரிய ஆர்வமேதும் இல்லாதபோதும் குருசாமியும் கேட்டார். அந்தளவுக்கு கதைகள் சுவாரஸ்யமாக இருந்தன.

முதல்நாள் அவன் கறுப்புப் பூனை என்ற தலைப்பிலான ஒரு கதை சொன்னான். அந்தக் கதையில் வரும் பூனையின் பெயர் புரூடோ. தன் வீட்டில் வளர்ந்த பூனையை விரும்பாத ஒருவன் எப்போதும் அதைத் திட்டியபடியே இருப்பான். போதையேறிய ஒரு தருணத்தில் அதைக் கொலைசெய்யவும் முயல்கிறான். அதன்மீது வாஞ்சையுள்ள அவனது மனைவி அதைத் தடுக்க, அக் குடிகாரன் மனைவியையே கொன்றுவிடுகிறான். தன் செயலின் பாரதூரத்தனத்தில் பயமடைந்த அவன் தனது மனைவியின் பிணத்தை சுவருக்குள் வைத்து சிமெந்து பூசி மறைத்துக் கட்டிவிடுகிறான். ஆனாலும் அவனுக்கே அச்செயல் மறந்துவிடாதபடி சுவருள்ளிருந்து கிளரும் பிறாண்டல் சத்தமொன்று அவனது நிம்மதியை அழிக்கிறது. அந்த வீட்டுப்பெண் காணாதுபோன செய்தி அக்கம்பக்கம் பரவி, அதுபற்றி விசாரணை நடத்த ஒருநாள் பொலிஸ் வருகிறது. சுவருள்ளிருந்து எழும் சத்தத்தை அதுவும் அவதானமாகிறது. சந்தேகித்த பொலிஸ் சுவரை இடிக்க, இன்னும் பிணத்துடன் உயிரோடிருந்த பூனை பாய்ந்து வெளியே வருகிறது. 
அதை எழுதியது எட்கார் அலன் போ என்றான் கடைசியில் நேசன்.
தனக்கே ஏதாவது பூனைக் கதை தெரியுமா என யோசித்துப் பார்த்தார் குருசாமி. ஓன்றும் ஞாபகமாகவில்லை. 

போன வருஷம் நடந்த சம்பவங்களே ஞாபகம் வருகின்றனவில்லை அவருக்கு. வைக்கிற இடம் தெரியாமல் வீடு முழுக்க சுழன்றுதிரிந்து ஒரு பொருளைத் தேடியெடுக்கிற நிலைமைதான் இன்றைக்கும். ‘எனக்குப் போய் சின்ன வயதில கேட்ட பூனைக் கதை எப்பிடி ஞாபகம் வந்திடப் போகுது? ஒருவேளை நான் பூனைக் கதையே கேட்டதில்லையோ?’ அவர் முயற்சியைக் கைவிட்டார்.

அடுத்தமுறை அவன் சொன்ன கதை றொபேர்ட் ஹீன்லீனின் ‘சுவர்களை ஊடுருவி நடக்கும் பூனை’யின் கதை.

பிக்செல் என்று அந்தக் கதையிலே வரும் ஒரு குட்டிப் பூனை சுவர்களையெல்லாம் ஊடுருவி வீட்டிலே நடந்து திரிகிறது. அதன் செய்கையில் வீட்டுக்காரன் அதிசயத்துப் போகிறான். ஒருமுறை இருமுறையல்ல, பிக்செல் அவ்வாறேதான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறது. அது எப்படியென்பது பின்னாலேதான் விளக்கப்படுகிறது, அவ்வாறான செய்கை இயலாதது என்பதை அறியாத அளவுக்கு பிக்செல் மிகவும் குட்டியானதெனச் சொல்வதன் மூலம்.
இப்போது குருசாமியின் ஞாபகத்திலே ஒரு கறுப்புப் பூனை வர ஆரம்பிக்கிறது. அது எட்கார் அலன் போவின் கறுப்புப் பூனையல்ல. மெலிந்த, அசிங்கமான ஒரு கறுப்புப் பூனை. அது பதுங்கிப் பதுங்கி அவர் மனத்தின் இடுக்குகளில் நடந்து திரிகிறது. ஒருநாள் பாட்டி வீட்டு முற்றத்தில் அது சட்டென ஓடிய காட்சி பொறியாக நினைவாகியது. இன்னொருமுறை ஒரு ஞாபகத் துகளாய், பாட்டி வீட்டுப் பரணில் படுத்திருந்து அது அவரையே தன் மங்கிய மஞ்சள் கண்களால் தீட்சண்யமாகப் பார்த்தபடி படுத்திருந்துவிட்டு டபக்கென எழுந்து அவரைக் கடந்து வாசலால் ஓடுகிற காட்சி.  

அவரது ஞாபகத்தில் கிளரும் அத்தனை காட்சிகளிலும் அது ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு விநாடியிலும் ஓடுகிறது. ஐந்து விநாடிகளிலும் அது ஓடிக்கொண்டிருக்கும் காட்சியே ஞாபகமாகிறது. 

இரவில் படுக்கையில் படுத்திருக்கும்போது மட்டுமல்ல, பகலில் ஓய்வாக இருக்கும் சமயங்களில்கூட அந்தக் கறுப்புப் பூனையின் மனப் பிரசன்னம் அவரிடத்தில் எழுந்துகொண்டேயிருக்கிறது. சமயங்களில் அவர் சஞ்சலமாகிப் போகிறார். அந்தப் பூனை குறித்த துயரமேதேனும் அவரிடத்தில் உறைந்திருக்கக் கூடுமோ? அதன் தோற்றம் நினைவில் வரும் வேளையிலெல்லாம் மனத்தின் ஏதோவொரு இடத்தில் வலி எழுந்து உள்ளம் முழுக்க வியாபிப்பதுபோலத் தோன்றுகிறது அவருக்கு.   ‘பூனையின்ர ஒரு மயிர் கொட்டுண்டா ஆயிரம் பிராமணரைச் சாக்கொண்ட பாவமடா’ என யாரோ அவருக்கோ, வேறு யாருக்கோ, எப்போதோ சொல்லிய ஒலித் துகள்கள் தூசிதட்டி வெளியே வருகின்றன.

அவருக்குக் காரணம் விளங்கவில்லை. சுவருள் பிணத்தோடு வைத்துக் கட்டப்பட்ட அலன் போவின் பூனை உயிரோடு வருவதுபோன்ற ஒரு அதிசயக் காட்சியா அது? அப்படி அவரால் நினைத்து அடங்கிவிட முடியவில்லை. அந்தக் கறுப்புப் பூனை ஓடும் காட்சியின் பின்னணிகள், எப்போதும் அவருக்கு மிகப் பழக்கமான பாட்டியின் வீட்டு முற்றமாகவும், உள்ளறையின் பரணாகவுமே இருக்கின்றன. 

தொடர்ந்து அவரது நேரம் முழுக்க அந்தக் கறுப்புப் பூனையின் ஞாபக மீட்பாகவே போய்விடுகிறது. வலி எழுந்தபோதும் அதன் ஒவ்வொரு காலடி அசைவுகளிலிருந்தும் அதன் நிஜம், கற்பனைகளில் ஒரு நிச்சயத்தை அடைய அவர் முயல்கிறார்.

ஒரு தருணத்தில் அது பாட்டி வீட்டில் தன் சின்ன வயதுக் காலத்தில் வளர்ந்த பூனையாக  நினைவாகிறது அவருக்கு.

‘ஆகா, எத்தினை வருஷம்! அம்பது வரு~ம்…? அம்பத்தஞ்சு…?’
அவருக்கு ஒன்பது அல்;லது பத்து வயதிருக்கலாம். பக்கத்து வளவில் தனியாகக் குடியிருந்த அப்பாவழிப் பாட்டி ஒரு பூனை வளர்த்தாள். அவளே எங்கிருந்தோ பிடித்துவந்து வளர்க்க ஆரம்பித்த பூனையல்ல. தானாகவே எங்கிருந்தோ வந்து ஒண்டிக்கொண்ட பூனை.

குரு பாட்டி வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகிறவனில்லை. பள்ளிக்கூடம் முடிந்தால் வீடு, மாலையில் அம்மாவோடு ஆட்டுக்கு குழை ஒடிக்கப் போதல், நல்ல தண்ணீர் அள்ள அவள் வயலுக்குப் போகும்போது தானுமே ஒரு சருவப் பானையை எடுத்துக்கொண்டு கூடிச் செல்லுதல்கள்தான் அவனது மாலைப் பொழுதுபோக்கு. பின் படிப்புத்தான்.

சனி ஞாயிறுகளில்கூட பாட்டி வீடு அவன் போவதில்லை. அங்கே யார் இருக்கிறார்கள், அவன் பேச அல்லது விளையாட? அந்த வீடு சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் பாட்டியே எதற்காகவாவது நூறு முறை கத்திக் கத்தி கூப்பிட்டு தொண்டை காய்ந்த வேளைகளில்தான் ஏற்பட்டது.

ஒருநாள் பூனையை பாட்டியோடு கண்ட பிறகுதான் அந்த வீட்டுக்கு அவனது வருகை அடிக்கடி ஏற்பட்டது. மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால், ‘அம்மா, நான் பாட்டி வீட்டிலை போயிருந்து படிக்கப் போறன்’ என்றுவிட்டு ஒரு புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு போய்விடுவான். 

மாலைகளும், சனி ஞாயிறுகளும் குருவுக்கு பூனையைப் பார்க்கப் போவதிலேயே கழிந்துகொண்டிருந்தன. ஆயினும் ஒருநாள்கூட அவன் அதைத் தூக்கிவைத்து விளையாடியதில்லை.

ஏதோ ஒரு தடை அதன் அளவுக்கதிகமான மெலிவினாலோ, ஐதான  குத்திட்ட மயிர்களினாலோ, இறுக்கமான கறுப்பினாலோ, அதன் மிகுந்த எச்சரிக்கைத்தனமான நடையினாலோ, மங்கிய அதன் மஞ்சட் கண்களினாலோ அவன் மனத்தில் வந்து விழுந்திருந்தது. 
அது ஒரு மெல்லிய வெறுப்பாக வளர்ந்திருந்தபோதும், எப்போதும் அதன்  அருகில் குந்தியிருந்து அதனையே பார்த்துக்கொண்டிருந்தான் குரு. அதில் அவனுக்குச் சலிப்பே ஏற்படவில்லை. 

‘இந்த  வடிவில்லாத பூனையை ஏன் ஆச்சி வளக்கிறியள்?’ என்று ஒருநாள் கேட்டதற்கு, ‘நானெங்கையடா வளக்கிறன்? அதுவாய் வந்துது, அதுவாய் அங்கையிங்கை போகுது, தன்ரபாட்டில படுத்திருந்திட்டு எழும்புது. சாப்பிடுற நேரத்தில மெல்ல மெல்லமாய் வந்து எட்டத்தில நிண்டு என்னையே பாத்துக்கொண்டு நிக்க பாவம் பாத்து நான் கொஞ்சம் கிள்ளி வைக்கிறன். அதையும் பயந்து பயந்து வந்துதான் திண்டிட்டுப் போகுது. ஒருநாள்ப்பட்டு அது வாய் திறந்து கத்தினதில்லை, தெரியுமோ? மீன் வெட்டேக்க கூட அது கத்திறேல்ல. அது நிண்டா என்ன, போனா என்னெண்டு விட்டிட்டு இருக்கிறன். உனக்கு விருப்பமில்லையெண்டா பிடிச்சுக்கொண்டு போய் எங்கனயாச்சும் விட்டுட்டு வாவன்’  என்றாள் பாட்டி தன் வேலைகளைக் கவனிக்க அங்குமிங்குமாய் நடந்தபடி.

பூனை மெல்ல மெல்ல பாட்டியைப் பின்தொடர்ந்து நடக்க தானும் நகர்ந்து நகர்ந்து குரு அதையே கவனித்துக்கொண்டிருந்து அவள் சொல்வதைக் கேட்டான்.

அப்படியான அபிப்பிராயமெதுவும் அவனிடத்தில் இல்லை.
மாதங்கள் சிலவற்றின் பின் கறுப்புப் பூனை சிறிது வளர்ந்திருந்தது. குருவின் பூனைமேலான ஆதர்ஷம் சிறிது குறைந்திருந்தது அந்தளவில். பூனைக்காக இல்லாவிட்டாலும் பாட்டி வீடு போய் சிறிதுநேரம் அவளோடு கதைத்துக்கொண்டிருப்பது குருவின் பொழுதுபோக்காக ஆகியிருந்தது அப்போதெல்லாம்.

ஒருநாள் பூனையைக் கவனித்துக்கொண்டிருந்த குரு பாட்டியைக் கேட்டான்: ‘ஏன் ஆச்சி, இந்தப் பூனை இந்தமாதிரி சாய்ஞ்சு சாய்ஞ்சு நடக்குது? ஏன் நேராய் நடக்கமாட்டனெண்ணுது? பூஸ்ஸ்…பூஸ்ஸ் எண்டு கூப்பிட்டாலும் திரும்பிப் பாக்குதில்லை?’

‘ஆருக்குத் தெரியும்? ஒருவேளை குறுட்டுப் பூனையோ என்னமோ!’ என்றாள் பாட்டி.

மேலே கேள்வி இல்லாமல் விட்டுவிட்டான் குரு. ஆனால் அன்றைக்கு இரவு அவனுக்கு கேள்வி வந்தது. ‘குறுட்டுப் பூனையெண்டா, அப்ப என்னமாதிரி ஒண்டிலயும் இடிச்சுக்கொள்ளாமல் நடக்கேலும்?’

குரு மறுநாள் அந்தக் கேள்வியைக் கேட்டதற்கு, ‘பூனையின்ர மூஞ்சையில ரண்டு பக்கமும் நீட்டிக்கொண்டிருக்கிற மீசையால தடவித் தடவி நடக்கேலும்’ என்றாள் பாட்டி.

அப்போது நன்கு புரியாவிட்டாலும், கேள்விக்குப் பதில் கிடைத்ததில் திருப்தியடைந்து பேசாமல் விட்டுவிட்டான் அவன்.

குருசாமியின் நினைவுலகுக்கு அப்பால் நேசன் ‘சியாமிய பூனை’யின் கதை சொல்லிக்கொண்டிருந்தான். எழுதும் திறன் வாய்ந்த அந்தப் பூனையின் அற்புதத்தில் ஆச்சரியமாகி ‘ம்’ கொட்டியவாறு வர்~hவும், நி~hவும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தனர்.

பாட்டியின் வீட்டிலிருந்த பூனை குருடு என்பது ஞாபகமாகியதிலிருந்து தன் மனத்தில் வந்து போய்க்கொண்டிருந்த கறுப்புப் பூனையைப்பற்றி முழுவதுமாக ஞாபகமாக முடியுமென்ற நம்பிக்கை வந்துவிட்டது அவருக்கு.  ஆனால், அவர்தான் அதை அப்போதைக்கு அல்லது எப்போதைக்குமே விரும்பாதவர்போல தள்ளிப்போடும்படியாக வேறுவேறு யோசனைகளையும், வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்.

இந்தநிலையில் மறுநாள் புதுவருஷம் பிறக்கவிருந்தது.

காலையில் படுக்கையிலிருந்து எழுந்து குருசாமி கூடத்துக்கு வந்தார்.  நேசன் ரஞ்சினி இருவரும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து ஆர்வமாகச் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார்கள். போக்குவரத்துப் பாதிப்பு, மின்தடை என்பதான செய்திபோல் தோன்றியது.

வாசலுக்கு வந்து வெளியைப் பார்ந்த குருசாமி திகைத்துப்போனார். இடுப்பளவு உயரத்துக்கு வெண்பனி கொட்டியிருந்தது. காற்று அதை அடித்துப் பரப்ப முனைவதுபோல் ஆங்காரத்துடன் முயன்றுகொண்டிருந்தது. அதற்கு மறுத்தான் கொடுப்பதுபோல் பனி மேலும்மேலுமாய்க் கொட்டிக்கொண்டிருந்தது. மனைகள், மரங்களெல்லாம் பளிங்கு அப்பினபோல் உறைபனி அப்பப்பட்டுக் கிடந்தன. அக்கம் பக்கத்தில் வெளியே விடப்பட்டிருந்த வாகனங்களில் வெண்பொதிச் சுமைகள் ஏற்றப்பட்டனபோல் மூன்றடி உயரப் பனி எழுந்து நின்றுகொண்டிருந்தது. நேசன் இண்;டைக்கு வேலைக்குப் போனமாதிரித்தான்! என நினைத்துக்கொண்டார் அவர். முகத்தில் அடிப்பதுபோல் குளிர்காற்று வீச சட்டென கதவைச் சாத்திக்கொண்டு உள்வாங்கினார்.

அன்று என்ன நாள் என்பதை உறுதிப்படுத்த கலண்டரைத் திரும்பிப் பார்த்தார். அன்றைக்கு நாள் 31 டிசம்பர் 2013 செவ்வாய்க் கிழமை. 

பனி கொட்டாத நத்தாரை வெள்ளையர்கள் கறுப்பு நத்தார் என்பார்கள். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகள் கறுப்பு நத்தார்களாகவே போயிருந்தன. இந்த நத்தார் வெள்ளை நத்தார் எனச் சொல்லும்படி நிறைந்த வெண்பனித் தூவலில் பிறந்திருந்தது. ஆனாலும் மறுநாள் வரவிருந்த வருஷப் பிறப்பு கொடும்பனிக் கடலுள் அவர்களை இறக்கிவிட்டிருக்கிறது.

நேசனின் முகத்திலிருந்தே அப்போதைய பனி மிக மோசமான நிலைமைகளை விளைத்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர் கண்டார். ‘இப்பிடி கொட்டிக்கொண்டிருக்கே பனி!’ என்றார் ஒரு பேச்சுக்காக. 
‘வழக்கமாய்க் கொட்டுற பனி இல்லை, ஐயா, இது. இது உறைபனி. கொட்டேக்கையே உறையத் துவங்கியிடும். மரங்களில பட்டா பிடிச்சு தொங்கிக்கொண்டு கிடக்கும். கீழ வந்தா நிலத்தில பாளமாய்ப் படிஞ்சிடும். பனி தள்ளுறமாதிரி இதைத் தள்ளவும் ஏலாது. உருகிறமட்டும் காத்திருக்கவேணும்.’

‘இப்ப நீங்கள் போடுற உப்புக்கு கரையாதோ?’

‘கரையும். எண்டாலும் இந்தளவு பனிக்கு எவ்வளவு உப்பையெண்டு கொட்டேலும்?’

‘வேலை என்ன மாதிரி?’

‘றோட்டுகள் என்னமாதிரியெண்டு தெரியேல்லை. வெளிக்கிட்டாத்தான் தெரியும். பிள்ளையளுக்கு லீவுதானே, பிரச்சினையில்லை.’

நேசன் அன்று வேலைக்குச் செல்லவில்லை. பாதி வழியில் திரும்பி வந்துவிட்டான். 

மதியச் சாப்பாட்டுக்கு மேலே ‘ஸினோ அடி’த்த அலுப்பில்போலும் நேசன் படுக்கப் போய்விட்டான். ரஞ்சினி ஏதோ குசினியுள் அடுக்கி, கூட்டி, துடைத்து அலுவலாயிருந்தாள். குருசாமி கதவைத் திறந்து வெளியே வருவதும், உள்ளே வந்தமர்ந்து உறைபனியால் விளைந்த சேதாரங்களை, அவசரகால நடவடிக்கையில் அரசினது மீட்புப் பணிகளை செய்தியில் பார்ப்பதுமாய் இருந்தார். சாப்பிட்ட பின் சோபாவில் வந்தமர்ந்த தவமணி இன்னும் உறைவு கலைந்து எழுந்திருக்கவில்லை.

அப்போது திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டது.

‘என்ன, பிள்ளை, இது?;’ என்றார் குருசாமி.

‘கரண்டு போட்டுதுபோலை, மாமா. இப்ப வந்திடும்’ என்றாள் ரஞ்சினி.
‘அஞ்சோ பத்தோ நிமிசத்தில வந்திடும்தான், இதென்ன இந்தியாவே, மணிக்கணக்காய் நாள்க் கணக்காய் காத்திருக்க?’ என்றெண்ணியவாறு கூடத்துள் அமர்ந்திருந்தார் குருசாமி. சன் தொலைக்காட்சியில் அன்றைய சினிமா தொடங்குகிற நேரமானது. அப்போதும் மின்சாரம் வரவில்லை. 
நேசன் எழுந்து படுக்கையறையிலிருந்து வந்தான். எப்போது மின்சாரம் நின்றது என்ற அவனது கேள்விக்கு, இரண்டு மணத்தியாலங்களாகிவிட்டதாய் ரஞ்சினி பதில் சொன்னாள்.

தேநீர் தயாரிக்க அடுப்புமில்லை. எல்லாரும் கூடத்துள் வட்டமாக சோபாவிலும், நாற்காலியுமாய் அமர்ந்து மின்சாரத்தை அந்த நிசப்தத்துள் காத்திருந்தார்கள். 

நேசன் சொன்னான், ‘ஐயா, அடிக்கடி கதவைத் திறந்துகொண்டு வெளிய போகாதயுங்கோ. இப்ப இருக்கிற கதகதப்பும் போச்சுதெண்டால் கதை கந்தல்தான். கரண்டு வராட்டி ராவைக்கு நித்திரை கொள்ளவும் ஏலாமப் போயிடும், கவனம்’ என்று.

அடுப்பு மேடையில் கொக்கொகோலா ரின்கள் மூன்றினை அடுக்கிய அடுப்பில் கேத்திலை வைத்து கீழே நான்கு மெழுகுதிரிகளைக் கொளுத்தி உண்டாக்கிய சுடுதண்ணீரில் கோப்பி போட்டாள் ரஞ்சினி. தண்ணீரைச் சுடவைத்த முறை குழந்தைகளினதை மட்டுமல்ல, பெரியவர்களின் உறைவையும் கலைத்து வீட்டில் ஒரு கலகலப்பை உண்டாக்கியது.

இருளவாரம்பித்தது.

இருளுவதற்கு முன் எல்லாரும் சாப்பாட்டையும் முடித்தார்கள்.

மின்கலங்களில் இயங்கும் விளக்கொன்றினை கராஜ்ஜுள்ளிருந்து எடுத்து வந்தான் நேசன். மெழுகுவர்த்தி வெளிச்சமும் மின்கல விளக்கின் ஒளியுமாய் வெளிச்சம் வந்த புதிய முறை, மின்சாரமில்லையென்கிற கவலையை மறக்கச் செய்து அனைவரையுமே ஒரு சந்தோ~மான மனநிலைக்குள் தள்ளியது. குழந்தைகள் கலகலப்பாய்க் கதைத்தன, சிரித்தன. பெரியவர்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். எப்படியோ போன வாரத்தில் நேசன் சொன்ன ‘பூனையின் கண்’ என்ற கதை அங்கே பிரஸ்தாபமாகியது. நல்ல கதையென்றாள் வர்ஷா. பயங்கரமென்று நடுங்கிக் காட்டினாள் நிஷா. 

குருசாமியும் அதைக் கேட்டிருக்கிறார். முப்பது பூனைகளை வளர்க்கும் மூதாட்டி செல்வி மல்கிரேவ் என்பவளை அந்தப் பூனைகளே ஒருறாள் கடித்துத் தின்றுவடுவதுபற்றிய கதை அது. கேட்கும்போதே அவருக்கு உடம்பு பதறியது. பிள்ளைகளுக்கு இப்படியான கதைகளையா சொல்வதென மறுநாள் நேசனைக் கண்டிக்கவேண்டுமென்றும் நினைத்திருந்தார். அதைத் தவமணியின் காதில் விழும்படி பிரஸ்தாபித்தபோது, எப்படியானதாய் இருந்தாலும் பூனைக் கதையாய் இருந்தால் சரியென்றுவிட்டாள் அவள். 
பாட்டி வீட்டுக் கறுப்புப் பூனைக்கு நேர்ந்த கதி, அவருள்ளுமே மறதியாகிப் போயிருந்த அந்தச் சம்பவம் அவர் விருப்பத்துக்கும் மாறாக மீள் ஞாபகமாகியது அவருக்கு.

அந்த முறை அடைவைப்பில் இறக்கிய கோழி, மூன்று குஞ்சுகளோடு திரிந்துகொண்டிருந்தது. பாட்டிக்கு அவ்வாறான ஒரு அவமானம் காலத்திலும் நிகழ்ந்ததில்லை. அந்த வெப்பிராயத்தில்போலும் இருபத்தைந்து ‘வைற் லைக்கோன்’ குஞ்சுகள் வாங்கி வளர்க்க ஆரம்பித்திருந்தாள். 
அன்று ஒரு சனிக்கிழமை. பாட்டிக்கு சந்தைக்குப் போகவேண்டியிருந்தது. குருவைத்தான் அழைத்து வீட்டிலே இருக்கச் சொல்லிவிட்டு புறப்பட்;டாள். ‘அப்பன், கோழிக்குஞ்சுகள் கவனம். பலகையைத் தட்டிப்போட்டு பூனை கரப்புக்குள்ள பாய்ஞ்சிடப்போகுது’ என அதற்கு முன் குருவை எச்சரிக்க அவள் மறக்கவில்லை.

‘அது குறுட்டுப் பூனைதான, ஆச்சி.’

‘அது அரைக் குறுடாய் இருந்திட்டா…?’

முற்றத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் விழுந்த குரு எதிலெதிலோ பராக்காகிப் போனான். ஒருபோது கோழிக் குஞ்சுகள் கரப்புக்குள் கலகலத்துக் கேட்டது. குருவுக்கு காதில் விழுந்ததாயில்லை. மறுபடி கத்திக் களேபரம் செய்தன. கடைசியாகப் பார்த்த சினிமாப் படத்துக் காதல் காட்சியில்போல், உயரமும் சிவப்பும் அழகியுமான சகவகுப்பு மாணவி சந்திராவோடு டூயட் பாடிக்கொண்டிருந்தான் அவன்.

மறுபடி குஞ்சுகளின் கீச்சிடுகையில்தான் அவனுக்குப் பிரக்ஞை திரும்பியது. ‘ஐயோ, கோழிக் குஞ்சுகள்!’ என்றலறியபடி ஓடிப் போனால், கரப்புக்கு மேலே வைக்கப்பட்டிருந்த பலகைத் துண்டைக் கீழே விழுத்திவிட்டு உள்நுழைந்திருந்த கறுப்புப் பூனை குஞ்சுகளைக் ஹதம் பண்ணிக்கொண்டிருந்தது. 

அவை கலகலத்து கீச்சிட்ட வேளைகளில் கனவுள் மயங்கிக் கிடந்துவிட்ட தற்கோபம் அவனை வெறியனாக்கியது. பக்கத்தில் மண்வெட்டி கழன்று கிடத்த பிடியை எடுத்து, பத்துக் குஞ்சுகளுக்கு மேல் சப்பித் துப்பிவிட்டு ஒரு குஞ்சைக் கவ்வியபடி ஓடிக்கொண்டிருந்த கறுப்புப் பூனையை நோக்கி எட்டி விசுக்கினான்.

பொத்தென்று விழுந்தது பூனை.  

திரும்பி ஓடிப்போய் மீந்த குஞ்சுகளை எண்ணினான். பதின்னான்கு. மஞ்சள் பச்சை சிவப்பாய் வர்ணம் பூசப்பட்டிருந்த ஒன்பது குஞ்சுகளின் உடல்கள் சிதைந்துபோய்க் கிடந்தன. அவனுக்கு உடம்பு பதறியது. கையிலிருந்த மண்வெட்டிப் பிடியை ஓங்கியபடி மீண்டும் பூனையை நோக்கி ஓடினான். 
அதற்கு அவசியமேயில்லை. பூனை முதல் அடியிலேயே செத்திருந்தது.
வேலி வழியாக யாரும் பார்க்கிறார்களோ என்று கவனித்தான் குரு. யாருமில்லை. விறுவிறுவென பிடியில் மண்வெட்டியைப் பொருத்திக்கொண்டு மாதுளை மரத்தடிக்குச் சென்றான். பாத்திக்குள் கிடங்கு வெட்டிவிட்டு வந்து செத்த பூனையையும், கோழிக் குஞ்சுகளையும் கொண்டுபோய்ப் போட்டு மண்ணை இழுத்து மூடினான். மாதுளைப் பாத்தியைச் சரியாகக் கட்டிவிட்டு தண்ணீரூற்றிய பின் அமைதியாக வந்து கட்டிலில் அமர்ந்தான்.

பாட்டி வந்தபோது குஞ்சுகளைப் பூனை கடித்துத் துப்பிவிட்டதை கண்ணீர் ஒழுக ஒழுகக் கூறினான். அவனழுகையில் பாட்டிக்கு குஞ்சுகளின் இறப்பின் வலி மறந்துபோனது. ‘அதுக்கென்ன செய்யிறது, வேணுமெண்டே விட்டிட்டுப் பாத்துக்கொண்டிருந்தனீ?’யென அவனை அவள் தேற்றினாள்.

‘இப்ப அந்தக் கரிப்பூனை எங்க, அப்பு?’

‘உடனயே அடிச்சுக் கலைச்சுப்போட்டன், ஆச்சி.’

குருசாமி தான் ஒரு கணம் கொடூரனாகவிருந்ததை, அதனால் பூனை இறந்துபோனதை பெரும்பாலும் மறந்தேபோனார். 

குருவுக்கே மாதுளை மரத்தடி சென்ற பொழுதுகளில்கூட கறுப்புப் பூனை ஞாபகமாகியதில்லை. அது அவன் பாட்டிக்குச் சொன்னதுபோலத்தான் நடந்தது. கோழிக் குஞ்சுகளைக் கொன்ற கோபத்தில் அதை அவன் அடித்து அங்கிருந்து விரட்டிவிட்டான். 

வலிய அந்த நினைப்பே நிஜத்தில் நடப்பானதாக மனத்தில் பதிந்திருந்து,  சுமார் ஐம்பது ஐம்பத்தைந்து வருட காலத்துக்குப் பின்னில், பூனைக் கதை கூறலின் ஆரம்பத்துடன் அது ஞாபகமாகிருக்கிறது அவருக்கு.

‘இனியென்ன, காத்திருந்தாப்போல கரண்டு வரப்போகுதே? படுக்கப் போவம்’ என்று எழுந்தான் நேசன். ரஞ்சினியும் எழுந்தாள். மின்விளக்கு இல்லாத நிலையில் தனியே படுக்கவேண்டாமென பிள்ளைகளைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றனர். 

மெழுகுதிரியை எடுத்துக்கொண்டு தவமணி அறைக்குச் சென்றாள். 
குருசாமி இன்னும் சோபாவில் அமர்ந்தபடி.

‘ஏன், படுக்கேல்லையே, ஐயா?’ என்ற நேசனின் குரலுக்கு, ‘ஹோலுக்குள்ள வெளிச்சமாய்த்தான கிடக்கு. கொஞ்சநேரம் இருந்திட்டுப் போறன். இப்ப போய்ப் படுத்தாப்போலயென்ன நித்திரை வரப்போகுதே?’ என்றார் குருசாமி.
பூனைகள் உலவும் மனமாகிப்போனது எவ்வாறென ஒரு கணம் அவர் நினைக்க விரும்பினார். அத்தனை வருட காலத்தில் அந்த உண்மை மனதுள் புதையுண்டு, நினைப்பே நிகழ்வானதாய் நின்றிருந்த அதிசயத்தை ஒருமுறை எண்ணினார். பூனைக் கதைகளை,  குறிப்பாக அந்த ‘கறுப்புப் பூனை’க் கதையை, கேட்டிராவிட்டால் தனக்கு அவ்வாறான மனவுழல்வு நேரிட்டிராது என நம்பினார். அந்த மன அவலத்தை மறப்பதெப்படியென அவஸ்தைப்பட்டார். கறுப்புப் பூனை ஓடித்தான் போனதென அப்போதும் நம்பத் தலைப்பட்டார். முடியவில்லை. ஐம்பது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பல்ல, இப்போதுதான் அந்தக் கறுப்புப் பூனை முதலும் முடிவுமாய் அவருக்குள் செத்த வலியெழுந்தது.

மன வலியோடேயே படுக்க எழுந்து சென்றார்.

இருளும் குளிரும் மெல்ல மெல்லமாய்க் கனக்கத் துவங்கின.
போர்வையை இறுக்கமாக இழுத்துப் போர்த்தினார்.
‘நாளைக்கெண்டாலும் கரண்டு வந்திடுமோ?’ நினைத்தபடியே தூங்கிப்போனார். 

என்ன நேரமிருக்குமோ, திடீரென்று அவருக்கு விழிப்பு வந்தது. கறுப்புப் பூனையொன்று தன்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதில்  திடுக்கிட்டு விழிப்பாகியதைத் தெரிந்தார் அவர். கனவு அறுந்தும் காட்சி அறாமல் எதிரேயுள்ள ஜன்னலின் வெளியே எம்பி முகத்தை வைத்துக்கொண்டு அந்த மெலிந்த, அசிங்கமான கறுப்புப் பூனை அப்போதும் தன்னை உற்றுப் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாகவே தோன்றியது அவருக்கு. கனவும் நினைவும் பேதமறக் கலந்த அந்த நிலையில், குருட்டுப் பூனையால் அந்தளவு துல்லியமாகப் பார்க்கமுடியாதே என்ற சாத்தியத்தை  மனத்தில் எழுப்பியபோதும், கட்புலனாக காட்சி விரிந்துகொண்டிருப்பதையே அவர் கண்டார். பதற்றத்தில் எழுந்து தட்டுத்தடுமாறி ஜன்னலை அடைந்தபோது பூனை அங்கே இல்லை.

வானத்து வெளிச்சம் வெண்பனியில் படிந்ததாலான தெறிப்பொளியில் வெளி இருந்தது. ஜன்னல் கதவைத் திறந்து மெல்ல எட்டிப்பார்த்தார். எந்தக் கறுப்பினது அசைவும் இல்லை. 

கதவை இழுத்து மூடிவிட்டு திரும்பிவந்து படுத்தார்.
மறுநாள் மதியமளவும்கூட மின்சாரம் வரவில்லை. 
ஊரே அடங்கிப்போயிருந்தது. குளிரும் நிசப்தமுமாய் வீடு அந்த புதுவரு~ நாளில் உறைந்திருந்தது. 

இனியும் பிள்ளைகளை அங்கே வைத்திருப்பது நல்லதல்லவென, மார்க்கத்திலுள்ள ரஞ்சினியின் தமக்கை வீட்டில் மின்சாரமிருப்பது தெரிந்துகொண்டு, கொண்டுபோய் விட்டுவர முடிவெடுத்தான் நேசன்.
அவ்வாறு விட்டுவருகையில், எரிவாயுச் சிலிண்டரும், அடுப்பும், அன்றைய மதியத்துக்கான றெஸ்ரோறன்ற் சாப்பாடும் வாங்கிவந்தான். எரிவாயு அடுப்பை மூட்டி அறைகள் இரண்டும் முதலில் கதகதப்படைய வைக்கப்பட்டன. மின்சாரம் தடைப்பட்டிருந்த பல இடங்களில் மின்சார விநியோகம் ஏற்பட்டு விட்டதாகவும், விரைவில் தங்கள் பகுதிக்கு மின்சாரம் வந்துவிடுமென்றும் தானறிந்த விபரங்களிலிருந்து நம்பிக்கை தெரிவித்தான். அன்றைக்கும் மின்சாரம் வரவில்லையேல் பல்வேறு குடும்பங்களையும்போல கடைத்தொகுதிக் கட்டிடம் ஏதாவதொன்றில் இரவுப் படுக்கையை வைத்துக்கொள்ளலாம் என்றான்.

ரஞ்சினி அதை விரும்பவில்லை. ‘என்னால அங்கயெல்லாம் வந்து படுக்கேலாது. கொஞ்சம் கணப்பு இருந்தாலே போதும், நான் இஞ்சை படுத்திடுவன்’ என்றாள்.

குருசாமிக்கு நேசனின் முடிவு விருப்பாயிருந்தது. வெளிச்சத்தில் அவர்; முதல்நாளிரவு அடைந்த வதைபோல அடைய வேண்டியிராதென நம்பினார். ஆனாலும் ரஞ்சினி அதை விரும்பாதவரையில் அவர் அதை வற்புறுத்தவில்லை.

அப்போது தந்தையைப் பார்த்து, ‘என்னையா, ஒருமாதிரி இருக்கிறியள்?’ என்று நேசன் கேட்டான். ‘ஒண்டுமில்லையே. எல்லாம் இந்தக் குளிர்தான். பழக்கமில்லையெல்லே, அதுதான்’ என்று மழுப்பினார் குருசாமி.
அன்று சாப்பிட்டு படுக்கைக்குப் போகும் நேரம்வரையும் மின்சாரம் வரவில்லை. மறுநாள் வந்துவிடுமென்ற நம்பிக்கையோடு அன்றும் அனைவரும் படுக்கைக்குப் போயினர்.

குளிர் தடித்த போர்வைகளை ஊடுருவி மட்டுமில்லை, திடவுருவெடுத்து போர்வையை இழுத்து விலக்கிக்கொண்டு அவரவரையும் தழுவிக்கொண்டு கூடப்படுத்திருப்பதுபோல் அனைவரும் உணர்ந்துகொண்டிருந்தனர்.

 ஒருபொழுதில் ஒற்றைப் போர்வைக்குள் தவமணியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்தாலென்ன என்றுகூட எண்ணிவிட்டார் குருசாமி.

பிறகு எப்படியோ தூங்கினார்.

பழிவாங்க நினைக்கிற பூனை எந்த அசாத்தியங்களையும் உடைத்துக்கொண்டு வந்தேதான் தீருமென்று அவருக்கு நினைப்போடுகிறது. அவர் படுத்துக்கொண்டிருந்தபடி பார்க்கிறார். நிழலொன்று ஜன்னல் கண்ணாடியில் அசைகிறது. உற்றுப் பார்க்கிறார். அந்த அசிங்கமான கறுப்புப் பூனைதான். ஜன்னல் கதவை ஊடுருவிக்கொண்டு அது அறைக்குள்ளே மெதுவாக நுழைகிறது. ஜன்னலின் உள்விளிம்பில் அமர்ந்து அவரையே உற்றுப்பார்த்தபடி இருக்கிறது. அவரது கால்களையா, முகத்தையா அது குறிவைக்கிறது? இரண்டையுமே என்றுதான் படுகிறது. ஆனாலும் கால்களை இழுக்க அவர் முயற்சிக்கிறார். அரங்க மறுத்து இரும்புக் கனதியில் கிடக்கின்றன அவை. அவ்வாறு பார்த்துக்கொண்டிருந்த பூனை ஒரு சீறலோடு திடீரென அவரைநோக்கிப் பாய்கிறது. 

‘ஆ…பூனை…பூனை!’யென அலறியபடி அவர் பாய்ந்தெழும்பி எதிலோ இடறுப்படுகிறார்.

விழித்துக்கொண்ட தவமணி ‘என்ன… என்ன…?’ வென அவரை உசுப்பி வினவுகிறாள். 

அவர் எதையும் பொருட்படுத்தாது அவசரமாய் மெழுகுதிரியைக் கொளுத்திக்கொண்டு அறைக்குள் தேடுகிறார். ஒவ்வொரு மூலைமூலையாகவும், பின்னர் கட்டிலுக்கடியிலுமாக. பூனையில்லை. அலுமாரிக்குப் பின்னாலும் இல்லை.

‘சொல்லுங்கோப்பா, என்ன பாக்கிறியள், இப்பிடி அலறியடிச்சு எழும்பிக்கொண்டு?’

‘பூனை உள்ளுக்க வந்திட்டுதப்பா. அதுதான் அந்தக் குறுட்டுப் பூனை.’
‘கதவு சாத்தியிருக்கு. ஜன்னல் சாத்தியிருக்கு. பூனையெதுவும் என்னெண்டு வரும்?’

‘பூனையள் கதவுக்குள்ளாலயும் வரும்’ என்று சொல்ல எண்ணினார். திகைப்பில் சொல்ல வரவில்லை.

‘பூனைக் கதையளக் கேட்டுக் கேட்டு, பூனைக் கனவு காணத் துவங்கியிட்டியள்போல. போங்கோ, போய்ப் படுங்கோ.’

அவர் அவசரமாக வெளிச்சத்தைத் திருப்பி சாரத்தைத் தூக்கிக்கொண்டு காலைப் பார்த்தார். பூனையின் நகக் கிழிப்பு இரண்டு கோடுகளாய் இடது கணுக்காலின் மேல் கிடந்தது.

அவரது சதிரம் உறைந்தது.

காலையில் நேசன், ரஞ்சினி, தவமணி எல்லாரும் தேநீர் அருந்தியபடி கூடத்துள் அமர்ந்திருந்தார்கள். ‘இண்டைக்கும் கரண்டு வராட்டி அம்மாவையும் ஐயாவையும் குமரன்ர வீட்டிலை கொண்டுபோய் பின்னேரம் விட எண்ணியிருக்கிறன்’ என்றான் நேசன். ‘குளிர் பழக்கமில்லாத ஆக்கள், அதுதான் சரி’ என்றாள் ரஞ்சினியும்.

குருசாமிக்கு அந்த முடிவு உவப்பாய் இருந்தது. வெளிச்சமிருக்கும் இடத்துக்குப் போனால் இந்தமாதிரி இரவுகளின் கறுப்புப் பூனை உபத்திரவம் இல்லாமலிருக்கலாம் என்ற எண்ணம்போலும்.

அவர் எழுந்து வெளியே வந்தார்.

சொல்லி வைத்ததுபோல மின்விளக்குகள் குபீரென எரிந்தன.
கூய்…எனக் கூவினாள் ரஞ்சினி.

மின்சார விநியோகம் அந்தப் பகுதிக்கு ஏற்பட்டுவிட்டது.
அவர் திரும்பி வரக் கண்டு ஒரு சிடுசிடுப்போடு சொன்னாள் தவமணி: ‘முதல்ல உந்த கை நிகத்தை வெட்டுங்கோப்பா. ரா ராவாய் வறுக் வறுக்கெண்டு சொறிஞ்சபடி. பக்கத்தில கிடக்கேலாமக் கிடக்கு.’
அவர் சிரிக்க முயன்றார்.

காலில் ஏற்பட்டிருந்த நகக் கீறல்கள் அவரது சொந்தக் கைகளால் ஏற்பட்டதா, குருட்டுப் பூனையால் ஏற்பட்டதா என்ற கலக்கம் இனி அவருக்கு அவசியமில்லை. 

ஏனெனில் வெளிச்சம் வந்துவிட்டது.

வெளிச்சத்தில் குருட்டுப் பூனைகள் வருவதில்லையென மனம் நம்பியிருந்தது.

000

காலச்சுவடு, பெப் . 2015





Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்