எங்கள் காயங்களும் வெறுமைகளும் வேறுவிதமானவை:
எங்கள் காயங்களும் வெறுமைகளும் வேறுவிதமானவை: இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதை நூலை முன்வைத்து… சமீபத்தில் வெளிவந்த இளம் கவிஞர்களின் ஆக்கங்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின், குறிப்பாக கவிதைத் துறையின், எதிர்காலச் செல்நெறியைச் சுட்டிக்காட்டும் கூறுகள் புலப்பட ஆரம்பித்திருப்பதை ஒரு தீவிர வாசகர் எதிர்கண்டிருக்க முடியும். அவ்வாறான ஆக்கங்களில் இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ தொகுப்பை ஒரு முக்கிய வரவாக நான் காண்கிறேன். ‘நாடற்றவனின் குறிப்புகள்’ எல்லா கவிதைத் தொகுப்புகளையும் போலவே மோசமானது, சுமாரானது, நல்லது, மிகநல்லது என்ற பகுப்புகளுள் அடங்கக்கூடிய விதமாக அமைந்து, 53 கவிதைகளைக் கொண்டிருக்கிற நூல்தான். ஆனாலும் இது அழுத்தமாகக் காட்டிச் செல்லும் புதிய செல்நெறியால் கவனம் மிகப்பெறுகிறது. புலம்பெயர்ந்தோர் கவிதை தன் மரபோடு, தன் புதிய புலத்தின் கவிதைத் தன்மையை உணர்கிறதும், உள்வாங்குகிறதுமான காலகட்டமொன்று இயல்பில் இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறதை இத் தொகுப்பில் முக்கியமாகக் காணக்கிடந்தது. சென்ற நூற்றாண்டின் அந்திமம் வரை ஈழத்துப் புலம்பெயர்ந்த கவிஞர்களின் பாடுபொருள் பெர...