Posts

Showing posts from January, 2020

பாம்புக் கமம் - சிறுகதை

பாம்புக் கமத்தில் ஒரு வாரம் தங்கிவரலாமென்று சொல்லி நண்பன் கமலநாதன் என்னை அழைத்தபோது விருப்பமில்லாவிட்டாலும் எனக்கு மறுக்க முடியவில்லை.   அவசரமான எழுத்து வேலைகள் இருக்கின்றன என்று சறுக்க முயன்றபோது அங்கேயே வந்திருந்து செய்யென்றுவிட்டான் நண்பன்.  மேட்டு நில அந்த வயல் வீட்டிற்கு நாங்கள் ஒரு மதியத்தில் வந்துசேர்ந்தோம். பத்தாண்டுகளுக்கு உட்பட்டதானாலும் வீடு நீண்டகாலம் புழக்கமற்றுக் கிடந்ததில் ஒரு இருண்மையில் கிடந்திருந்ததாய்ப் பட்டது. பாம்புக் கமமென்ற பெயரும், அப்போதைய அதன் இருண்மையும் மனத்துள் எனக்கு சௌகரியத்தை விளைக்கவில்லை. அந்த   இடத்தை ஏன் பாம்புக் கமம் என்கிறார்களென கமலநாதனிடம் கேட்டபோது தெரியாதென்றுவிட்டான். அதுபற்றி மேலே எதுவும் யோசிக்காவிட்டாலும், இருளத் தொடங்குகிற வேளையில் பாம்புக் கம நினைவு எழுந்தது. அதுமாதிரியான வயற் பிரதேசங்களோடு அதிகம் தொடர்பற்ற எனக்கு, அந்தப் பெயரிலிருந்து எழுந்த கற்பிதங்கள் நூறு நூறாக என் மனத்துக்குள்ளே பாம்புகளை நெளியவைத்துவிட்டன. அதனால் பாம்புக் கமமென்ற பெயர்க் காரணத்தை அப்போதே அறிந்துவிடும் தவிப்பு எழுந்திருந்தாலும்,   றோட்டிலே போகிற