Posts

Showing posts from March, 2021

நினைவேற்றம்: ‘தந்தையொடு கல்வி போம்!’

  ஒருநாள் வசந்தாக்காவின் சீற்றத்தை காரணம் புரியாமலே எதிர்கொண்ட பின்னால், ஓர் உறைவோடு வீடு திரும்பியது ஞாபகமிருக்கிறது. மறுநாள் நேரத்தைக் கழிக்க வழியற்று திசைழிந்ததுபோல் நின்றிருந்தேன். ஏது செய்யவும் கூடவில்லை.   அலைந்து திரிவதற்கும் பெரிதாக மனம் பிடிக்காதிருந்தது. இவ்வாறு எதையும் செய்யமுடியாமல் மனம் உழன்றுகொண்டிருப்பதன் காரணம், இதைதான் செய்யவேண்டுமென்று மனம் குறியற்றுப் போயிருப்பதேயென நான் மெல்ல உணரத் தலைப்பட்டேன். மாலைகளில் அம்மாவுக்கு உதவியாக வீட்டுவேலைகள் செய்துகொடுத்தேன். அது பயன் செய்தது. அதனால் பொழுதுபட்டுவிட்டால் படிப்பது, வாசிப்பது தவிர வேறு வேலைகள் இருக்கவில்லை. எனது இந்த திடீர் மாற்றத்தை அம்மா கவனித்திருக்க வேண்டும். என் தறுதலைப் போக்கினால் அதுவரை காலமாய் அவர் எவ்வளவு மன ஈறலை அடைந்திருந்தாரென்பதை, அதுமுதற்கொண்டு தெரியவாரம்பித்த   அவரது முகப் பிரகாசத்தில் கண்டு தெளிந்தேன். அதை மிகுப்பிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து விளைந்தன. என் சிறுபிள்ளைப் பருவத்தில் என்னைப் பீடித்திருந்த நோய்கள் சிறுகச் சிறுக அகன்று பதின்னான்கு பதினைந்து வயதளவில் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்க