Friday, December 26, 2014

இலக்கியச் சந்திப்பு 3 ‘காலம்’ செல்வம் அருளானந்தம்

இலக்கியகாரனாக இருப்பது வரமா சாபமா என்று தெரியாமல் ஒரு விடயம் நடந்துகொண்டே இருக்கிறது

எழுத்து: கௌசலா
சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன்


1. புலம்பெயர்வதற்கு முன்னால் ஈழத்தில் உங்கள் இலக்கிய ஆர்வங்கள், ஈடுபாடுகள் எவ்வாறு இருந்தன, இலக்கியம் தவிர்ந்து பிற கலையார்வங்களுக்குக் காரணமாயிருந்தவை எவை என்பதிலிருந்து இந்த நேர்காணலை நாம் ஆரம்பிக்கலாம்.

முதலாவது இந்த நேர்காணலில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது.  ஏனென்றால் இதுவரை நாம் எதைச் சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி முன்னால் வந்து ஒரு இடைவெளியாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் நட்பார்ந்த நிலையில் அதை மறுக்கவும் முடியாது. இதுதான் என்னுடைய முதலாவது நேர்காணலாக இருக்கிறது. ஈழத்தில் இருக்கும்போது நான் ஒரு வாசகன் மட்டும்தான். வாசகன் என்று சொல்லப்போனால் தீவிரமான வாசகன் என்றும் சொல்வதற்கில்லை. வாசிக்கும் சூழ்நிலை வீட்டில் இருந்தது. அம்மா ஒரு பெரிய வாசகி. அதனால் வழமைபோல கல்கி, சாண்டில்யன், அகிலன், குமுதம், ஆனந்தவிகடன், ஈழத்தில சுதந்திரன், சுடர், வீரகேசரி இப்படியான சஞ்சிகைகளை வாசிக்கும் ஒரு சராசரி வாசகனாகவே இருந்தேன்.

 நான் ஒரு கத்தோலிக்க கிராமத்தை சேர்ந்தனான். நாங்கள் வீட்டில இரவில் செபமாலை முடிய கட்டாயம் அம்மானை வாசிப்போம். ஊரை எடுத்துக்கொண்டால்கூட இதுதான் நிலைமை. மொத்த ஊருமே இரவில அம்மானை வாசிச்சுக்கொண்டிருக்கும் என்றுகூடச் சொல்லலாம். அதைவிட தவக்காலத்தில் ‘பசாம்’ என்றொரு சடங்கிருக்கிறது. இரவிரவாக ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் வாசிப்பு நடக்கும். இரவில ஊரிலும் ஊரைச்சுற்றிய கிராமங்களிலும் வருசத்திற்கு நாலு, ஐந்து நாட்டுக் கூத்துக்களும், அதோடு நாடகங்களும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. இவையெல்லாம் ஒருமாதிரியான மனநிலையை என்னிடத்தில் ஏற்படுத்;தியிருந்ததாகவே இப்ப நினைக்கத் தோன்றுகிறது.

எனக்கு அந்தக் காலத்திலேயே இதொன்றுதான் எனக்குச் சரிவரும் என்றுபட்டது. அதாவது இலக்கியம் வாசிப்பது. அங்கிருக்கும்போது ஓரிரு தடவை ‘நான்’ என்றொரு சஞ்சிகை கிறிஸ்தவக் கல்லூரியினால் வெளிவருவது, அது இன்றும் வெளிவருவதாக நினைக்கிறேன், அதில் சில கட்டுரைகளை சும்மா எழுதிப்பார்த்திருக்கிறேன். அது பிரசுரமானது பெரிய மகிழ்ச்சியாயிருந்தது. என்னுடைய படைப்பு வந்ததென்று நீண்டகாலமாக அதைக் காவித் திரிந்துள்ளேன். இது 70களின் நடுப்பகுதி, பிற்பகுதி என்று ஞாபகம். அத்துடன் சுதந்திரனுக்கு எழுதிய ஒன்றிரெண்டு கடிதங்கள் வெளிவந்திருக்கவேண்டும். இதைத்தவிர ஈழத்தில் பெரிதாக நான் ஒன்றும் செய்யவில்லை. அதன்பிறகு நான் 81ன் பிற்பகுதியில் பிரான்சுக்கு குடிபெயர்ந்தேன்.

2. அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தை அல்லது இலங்கையைப் பொறுத்தவரையில் முற்போக்கு இலக்கியப் பிரச்சினை இருந்தது. இந்தப் பிரச்சினை உங்களை எவ்வாறேனும் பாதித்திருந்ததா? 

நாங்கள் ஒரு தமிழரசுக்கட்சி பாரம்பரியத்திலிருந்து வந்த ஆட்கள். எங்களுடைய சிந்திப்பு அந்த வழியிலேயே போய்க்கொண்டிருப்பதை தவிர்த்திருக்க முடியாதுதான். ஆனால் வாசிப்புகள் இருந்திருக்கு. மல்லிகை வாசித்திருந்தேன். …… வாசிக்கவில்லை. ஒருபோதும் கிடைக்கவில்லை. அகஸ்தியருடையவை, எஸ்.பொ வினுடையவை வாசித்திருக்கிறேன். ஆனாலும் முற்போக்குப் பத்திரிகைளில் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. எனக்கு தமிழரசுக்கட்சிப் பின்னணி இருந்தபடியால் தேசியப் பிரச்சினைபற்றிக் கதைக்காமல் வேறொன்றை எழுதிக்கொண்டிருக்கிறார்களே என்று. மற்றது சாதி பற்றி கதைத்தமை எனக்கொரு மனத்தாங்கலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.   பல மாற்றங்கள் வந்துள்ளன. அன்றிருந்த மனநிலை இன்றில்லை. பல மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால் அன்று அதற்கு ஆதரவாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

3. உங்கள் ஊரைப்பற்றி அதன் மண்மணம் வருவதுமாதிரி உங்கள் மனப்பதிவு என்ன? 

என்னுடைய ஊர் வந்து முற்றிலுமான ஒரு கத்தோலிக்க வெள்ளாளர் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமம். பெயர் கூறவிரும்பவில்லை. ஊரிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கு அப்பால் பெரியதொரு கடலும், கடற்கரையும் இருந்தன.  மிகவும் துக்கமாக இப்பவும் நினைப்பது என்னவென்றால், சைவ வேளாளர்தான் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு காரணமாக இருந்தது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தளவில் எனது அனுபவங்கள் சார்ந்து நான் கூறுவது கத்தோலிக்க வெள்ளாளர் மிகவும் கொடூரமாக நடந்திருக்கிறார்கள் என்பதே.

நான் கூறுவது எல்லோரையும் அல்ல. பெரும்பான்மையானவர்களை. கைநீட்டி சிலுவையில் அறைந்த இயேசுவுக்கு முன்னால், இருக்கிற இடத்தில சாதிக்கொரு இடம் பிரித்துக் கொடுத்திருந்த மனப்பான்மையை எவ்வாறு இந்த கிறிஸ்தவம் தாங்கிக் கொண்டது என்பது இன்றுவரையும் எனக்கு கேள்வியாகவே இருக்கிறது. அங்கை பறையர் சமூகம் எனப்பட்ட மக்களுக்கு இவங்கள் செய்த கொடுமைகள் மிகமிக துக்கத்தைத் தருவன.

நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள். படிக்கும் காலத்தில் இரண்டு கையையும் பிடிக்க சொல்லிவிட்டு ஒரு வெள்ளாம் மாஸ்ரர், அந்த கொள்ளிவால் எறும்பை பிடித்து சேட்டினுள் விடுவார். அச்சிறுவன் நெளிவதைப் பார்த்து வகுப்பு முழுவதும் சிரிக்கும். பாடசாலையில் கடைசிப்பாடம் என்னவென்றால் பாடசாலை முடிவடைந்ததும், வெள்ளாம் பெடியள் பறையர்பெடியளுக்கு அடிப்பது. அப்ப அவர்கள் பாடசாலை முடிய புத்தகங்கள் எல்லாம்; எடுத்துக்கொண்டு ஓடத் தயாராக இருப்பார்கள்.

இப்பிடித்தான் எங்கள் சமூகம் இருந்தது. ஒரு 60-70 வயதான பறைய சமூகத்து முதியவரை என்னுடன் நான்காம் வகுப்பு படிக்கும் பெடியன் ‘டேய்’ என்றுதான் கூப்பிடுவான். டேய் நல்லான், டேய் நீக்கிலான் என்று கூப்பிடுவான். இதை எந்த மனச்சாட்சியுமில்லாது அங்கிருந்த பெரியாக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஒருவர் வந்து இப்படி சொல்லக் கூடாது என்று சொன்னதில்லை. ஏனென்றால் ஆசிரியர்மாரே அப்படியாகத்தான் இருந்தினம். டேய் பறையா என்று ஆசிரியரே மாணவனைக் கூப்பிடும் வகுப்பில் நான் இருந்திருக்கிறேன்.

எங்கள் ஊரைச்சுற்றி வெள்ளாம் ஆக்கள், பள் ஆக்கள், பறையாம் ஆக்கள் என எல்லோரும் கத்தோலிக்க ஆக்களாக இருப்பார்கள். இந்தப் பறையாம்; ஆக்களை வெள்ளாம் ஆக்களும் ஒதுக்குவாங்கள், கரையாம் ஆக்களும் ஒதுக்குவார்கள். அதைவிட மோசம் பள் ஆக்களும் அவர்களை ஒதுக்குவார்கள். கடைசியாக அந்த சமூகம் ஈ.பி.ஆh.;எல்.எப்ஃ இன் கதையைக் கேட்டு கடைசியாக தங்களிடம் இருந்த அந்த மேளங்களை எல்லாம் சந்தியில் கொண்டுவந்து போட்டு எரிச்சுப்போட்டு இருந்தது.

2004ல் நான் அங்கே போகும் போது அச்சமூகம் அப்படியே குலைந்து போயிற்று. ஊர் மாறி, தேசம் மாறி எல்லாம் போயிற்று. விடுதலைப் போராட்டம் தொடங்கியதன் பின் அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது. அவர்களுக்கு எந்தக் குரலுமில்லை. ஆனால் கோயிலுக்கு காசு கட்டவேணும். மற்றவர்கள் கட்டுவதுபோலத்தான் கட்டவேண்டும். கோயிலின் பராமரிப்பு வேலை செய்யவேணும். ஆனா அவைக்கு எந்த உரிமையும் அங்கே இல்லை. இதுதான் எங்கள் கிராமம். அதைத் தவிர்த்துப் பார்த்தால் கலையும் பக்தியும் நிறைந்த ஒரு நல்ல கிராமம்தான்.

நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபையிடம்தான் அந்தக் கிராமம் இருந்தது. நிறையக் கட்டுக்பாடுகள் இருந்தன. வயல், கடல் ஊரின் நடுவில் யாழ்ப்பாணத்திலேயே மிக அழகான கோயில் என ஒரு அமைதியான சூழலுடனும் எனது ஊர் இருந்தது. இப்பொழுதுதான் அந்தக் கொடுமைகளை யோசிக்கிறேன். ஆனால் ஊரில் இருந்தபொழுது சந்தோசமாகவே இருந்துள்ளேன்.

எங்கள் வாழ்க்கை விடிய 6 மணிக்கு திருந்தாதி கேட்டால் 6:30க்கு கோயிலுக்கு செல்லவேண்டும். 6:30 பூசை முடிய திரும்ப வந்து 8:00 மணிக்கு பாடசாலை போக வேண்டும். பாடசாலையால் திரும்பியவுடன் மாலைத் திருந்தாதி மணி அடிக்கும்வரை கேட்பாரற்று வயல்வெளிகளிலும் கடற்கரைகளிலும் திரிவோம். இப்படியொரு வாழ்க்கை எங்கள் பிள்ளைகளுக்கு இல்லை என நினைக்கும்போது மிகவும் மனவருத்தமாயிருக்கிறது. எப்படித்தான் அந்த வாழ்க்கை குறையிருந்தாலும்  எங்கள் சந்ததிக்கு இனி எந்தக் காலத்திலும் அது கிடைக்கப்போவதில்லை. நாங்கள் பெரிதாக இழந்தது எதுவென்றால் இவைதான். நான் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழந்திருக்கிறேன். இந்த வாழ்க்கையோடு ஒப்பிடும்போது அந்த வாழ்க்கை, மண்ணோடு மனிசருக்கிருந்த உறவிருக்கல்லவா, அந்த உறவுடன் கூடிய வாழ்க்கை, அற்புதமானது.


 4. உங்கள் புலப்பெயர்வின் காரணம் என்ன?
 
நான் பிரான்சுக்கு 81 முடிவில வாறன். நாட்டில அப்ப போராட்டம் தொடங்கிவிட்டது. இயக்கங்கள் பெரியளவில அடையாளப்படுத்தப்படவில்லை. ஆயினும் போராட்டம் தொடங்கிவிட்டது. நான் புலம்பெயர்ந்த காரணம் உண்மையில் பொருளாதார நெருக்கடிதான். மற்றது இங்க தமிழருக்கு ஒரு வாழ்வில்லை என்றும் உறுதியாயிற்று. தமிழருக்கு வாழமுடியாதுதான். ஆனால் உடனடியாக வெளியேறியதற்கு பொருளாதாரம் தான் காரணம். அந்த அடிப்படையில்தான் வெளிநாட்டிற்கு புறப்பட்டு திசை தெரியாமல் நான் பிரான்சுக்கு சென்றிருந்தேன்.


5. அடுத்த கட்ட உங்கள் கலை இலக்கிய ஈடுபாட்டினை நீங்கள் புலம்பெயர்ந்ததன்         பின் கொள்ளலாமெனில் அதன் கூர்மையடைதலுக்கு எவற்றைக் காரணமாக நினைக்கிறீர்கள்?

வெளிக்கிட்டு வரேக்கெ, சொன்னா நம்பமாட்டீர்கள், ஒரு …. ஒரு பாரதியார் கவிதைப் புத்தகம்தான் இருந்தது. நான் பயணம் கூறச்செல்கையில் எங்கள் மாமி வீட்டு முற்றத்தில் பாரதியார் கவிதைப் புத்தகம் இருந்தது. அதை எடுக்கலாமா எனக் கேட்டேன். ‘ஓம்’ என்றார். எடுத்துவந்தேன். பிரான்சுக்கு வந்ததும் இதைத் தவிர வேறொன்றுமே வாசிக்க இருக்கவில்லை. ஊரில் யாழ்ப்பாண நூலகம் எரியுமட்டும் என்னிடம் நான்கைந்து புத்தகங்கள் தினசரி இருந்துகொண்டிருந்தன. இப்ப பிரான்சில பெரிய இடைவெளி. வாசிக்க ஒன்றுமில்லை. ஏனென்றால் நான் எதிர்கொண்ட பிரச்சினைகள் வரலாற்றில் தமிழன் எதிர்கொள்ளாத பிரச்சினைகள். ஏனென்றால் புதிய நாடு, புதிய மொழி, போக்குவரத்துப் பிரச்சினை, சாப்பாட்டுப் பிரச்சினை, கையில காசில்லாத பிரச்சினை, இந்தப் பிரச்சினைகளுக்குள் வாசிக்கவும் ஒன்றுமில்லாவிட்டால்; எழுத வேண்டும். எழுதவேணும் போல இருக்கும்போது இரவில ரொயிலெற்றுக்குள் இருந்து, அதில இதில என எங்காவது இருந்து எழுதவேணும். எழுதினாப்போல அதை வெளியிடுவதற்கு ஒன்றும் பத்திரிகை, சஞ்சிகையும் இல்லை.

அங்கு சந்தித்த நண்பர்கள் சிலருக்கோ இதற்கும் அவர்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இ;ல்லை. அவர்களும் என்னைப்போல அந்த புதிய நாட்டை எப்படி எதிர்கொள்வது என்பதில் சிக்கித் தவிச்சுக் கொண்டிருக்கிருந்தனர். ஒரு வேலை கிடைக்கமாட்டுது. எங்களுக்கு ‘பேப்பர்’ கிடைக்குமா என்ற பிரச்சினைகளுக்குள் தலை உடைச்சுக் கொண்டிருந்தது ஊரில புத்தகங்கள் வாசித்து பிரச்சினைகள் இல்லாமல் இருந்து வந்த எனக்கு பெரியதொரு அவலமா, மனப்போராட்டமா இருந்தது. எந்த நேரமும் திரும்பிப் போயிடவேண்டும், திரும்பிப் போயிடவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. அப்பதான் அங்கே காலப்போக்கில் - ஒரு 5-6 மாதங்களில் என்னை ஒத்த எண்ணம் உடையவர்களைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது.

அப்ப மெல்ல மெல்ல இயக்கங்களினுடைய கிளைகள் அங்கே நிறுவப்படுகிறது. அந்த நேரத்திலதான் தற்செயலாக ‘தமிழ்முரசு’ என்ற ஒரு சஞ்சிகையை இன்னொரு நண்பர் வீட்டிற்கு செல்கையில் பார்த்தேன். உடனே புத்தக அலுவலகத்துக்கு இந்தப் புத்தகத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு கடிதம் எழுதிப்போட்டேன். அப்போதுதான் முதன்முதலில் காலஞ்சென்ற நண்பர் உமாகாந்தனுடன் எனக்கு தொடர்பு ஏற்படுகிறது.

உமா காந்தனிடம் சென்றபொழுதுகளில் ஒரு சின்ன வெளிச்சம் வீசியது. எங்கள் உறவுதாண்டி என்னை ஒத்த கருத்துள்ளவர்களைச் சந்திப்பதற்கு உமாகாந்தன் ஒரு வெளிச்சத்தை தருகிறார். அந்தக் காலகட்டத்தில் எனக்கு வேறு விதமான ஒரு உறவுமுறையால் ஈரோஸ் அமைப்பினுடைய தொடர்பு ஏற்பட்டிருந்தது.

82ன் பிற்பகுதியாக இருக்கலாம், அங்கிருந்த ஈரோஸ் அமைப்பில் வந்து இணையும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ‘ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சந்தித்து மார்க்ஸியம் பற்றிய கலந்துரையாடல்கள் செய்கிறோம், நீங்கள் வாருங்கள்’ என அழைத்தார்கள். அப்பொழுது எனக்கும் அது ஒரு விடுதலைமாதிரித் தோன்றியது. இது உமாகாந்தனைச் சந்திப்பதற்கு முன்னரே நடைபெற்று விட்டது. அங்கு சென்று குகன் என்றொரு நண்பர் இருந்தார், இப்பொழுது அவர் டென்மார்க்கில் இருக்கிறார், அவர் ஈரோஸ் அமைப்பால் சில சில பயிற்சிகள் பெற்றவர். அங்கேதான் எனக்கு ஊரில் தெரியாத பல விடயங்களை, செய்திகளை, மார்க்ஸியம் பற்றிய அறிவுகளைப் பெற்றேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இவற்றை ஒரு வகுப்பாக எங்களுக்கு அவர் சொல்லித்தந்தார்.

பின்னர் உமாகாந்தனின் தொடர்பால் கலாமோகன், அருந்ததி, தேவதாசன், சபாலிங்கம் போன்ற நண்பர்களின் தொடர்புகள் கிடைத்தன. இதில் கலாமோகனது மிக முக்கியமான பாத்திரம். அவரை நான் நாட்டுக்கு வெளியே சந்தித்த ஒரு நல்ல கலைஞனாகக் கருதலாம். இருபத்தினான்கு மணித்தியாலமும் ஒரு இலக்கியகாரனாக நடக்கவேண்டும் என நினைக்கிற ஒரு ஆள். அதோடு அவருக்கு இன்னொரு சிறப்பிருந்தது. அந்த நேரத்தில் அவர் பிரன்சு மொழியை கொஞ்சம் கற்று, பேசக்கூடியவராக நான் காணும்போதே இருந்தார். அவர் எனக்குப் பிறகுதான் வந்திருக்க வேண்டும். ஆனாலும் பிரன்சு மொழியில் எங்களைவிட புலமையானவராய் இருந்தார். அவர் எனக்கு ஒரு நல்ல பாதிப்பைக் கொடுத்திருந்தார்.


6. இயக்க நெறிப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் போக்குகள், தமிழ்ப்பரப்பில் கவனத்தைக் குவித்துவந்த புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொல்லாடலை பலவீனப்படுத்தியதாகச் சொல்லமுடியுமா?

அப்படியென்று கூறமுடியாது. ஏனெனில் அந்தக்காலத்தில் வந்தவர்கள் எல்லோரும் ஏதோ கட்டத்தில ஏதோ ஒரு வகையில விடுதலைப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். குறிப்பாக என்னுடைய நண்பர்கள் அல்லது எழுத்து முயற்சியிலிருந்தவர்கள். பாரிசினுடைய அன்றைய தமிழ்ச் சூழல் தமிழ் இடதுசாரிகளின் கைகளிலேயே இருந்துள்ளது. ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் போன்றவர்களின் கைகளில். அந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக அங்கே இயங்கவில்லை. உத்தியோபூர்வகமாக இயங்கியவர்கள் ஈரோசும், ஈ.பி.ஆர்.எல். பின்னால் 83க் கலவரத்திற்கு பின்பு பெருந்தொகையான இளைஞர்கள் பாரிசுக்கு வரத்தொடங்கியதன் பின்னர் சூழல் மாறிவிட்டது.

ஏனெனில் முழுக்க முழுக்க தமிழ் தேசியம் தொடர்பானவர்கள் வந்து குவியத்தொடங்கிவிட்டனர். இதில் முக்கியமான ஒருவர் சபாலிங்கம். சபாலிங்கம் உண்மையில் ஒரு ஆரம்ப கட்டப் போராளி. அவருக்கு எந்த வாசிப்புகளும் இல்லை. ஆனால் திடீரென எங்களுடன் இணைந்தது அவரையும் இந்தப் புத்தகங்கள் பக்கம் திருப்பி விட்டது. ஏனென்றால் அவருக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது. அவர் ரெலோவில் இருந்தவர். அவருக்கு எந்தப் பொறுப்பையும் ரெலோ கொடுக்கவில்லை. அவர் சிறியுடன் கதைத்துப்பார்த்தார். ஏனோ அவர்கள் கொடுக்கவில்லை. அதன் மூலம் சபாலிங்கத்துக்கு ஒரு விரக்தி வந்து இந்தப் புத்தகங்கள் பக்கம் வருகிறார். ஏறத்தாழ அந்த நேரத்தில் நான் சபாலிங்கத்தை சந்திக்கும்பொழுது எங்கள் பத்மநாப ஐயரின் ஒரு மறுபதிப்பாகத் தெரிந்தார். ஏராளமான புத்தகங்கள் சேகரித்து, ஏராளமான விடயங்களுடன் இருந்தார். அத்துடன் புலம்பெயர்ந்தவர்களுக்கு கேஸ் எழுதுதல் எனும் வேலையையும் செய்துகொண்டிருந்தார்.

அவருடைய தொடர்பு கிடைத்ததன் பின்னர் பழையபடி எனக்கு புத்தகங்கள் வாசிக்கும் சூழல் உருவாகிறது. ஆனால் அவர் அரசியலில் ஈடுபாட்டோடிருந்தார். நான் அவரிடமே மு.தளையசிங்கம், நுஃமான் போன்றோரின் நூல்களைப் பெற்று வாசித்தேன். அவருக்கு அதில் எவ்வளவு ஈடுபாடு இருந்தது என்று தெரியாது. ஆனால் அந்தநேரத்தில் அவர் ஒரு முக்கியமான நபராக இருந்தார். காலப்போக்கில் திரும்பவும் இயக்கம் என செயலாற்றினார். புஸ்பராஜா போன்றோரும் வந்திருந்தனர்.

கலாமோகனைத் தவிர்த்துப் பார்த்தால், கலாமோகனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ல் தொடர்பிருந்தது, மற்றவர்கள் எல்லோருக்கும் முக்கியம் வந்து இலக்கியம் அல்ல. ஈழவிடுதலைப் போராட்டம் என்றும் சொல்லமாட்டேன். தான், தான் சேர்ந்த இயக்கமே முக்கியமாக இருந்தது. இது இப்புலம்பெயர்ந்த இலக்கியத்துள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒருவரும் வந்து சுதந்திரமாக இயங்கவில்லை என்றுதான் நான் கூறுவேன்.  இலக்கியத்தை ஒரு வாகனமாகப் பாவிப்போம் என்ற பொதுவான ஒரு எண்ணம்தான் அவர்களிடத்தில் இருந்துள்ளது. கலாமோகனுக்கு எஸ்.பொன்னுத்துரையோடு தொடர்பிருந்தபடியால் கலாமோகன் இலக்கியத்தை ஒரு பகுதியாகச் செய்யலாம் என்று நினைத்தார். மற்றவர்கள், உமாகாந்தன் உட்பட, எல்லோரும் இலக்கியத்தை ஒரு வாகனமாக, எவ்வாறு மதமும் அரசியலும் வாகனமாக பாவித்ததோ அவ்வாறு இலக்கியத்தை இவர்கள் பாவிக்க வெளிக்கிட்டார்கள். அந்தளவில் உங்கள் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கு. அது தடையாகவும் இருந்திருக்கிறது என்றே இப்போது கருதுகிறேன்.


7. இது ஓரளவுக்கு உங்கள் இலக்கிய முயற்சிக்கான பின்புலத்தை உருவாக்கி இருக்கிறதா? அவ்வாறாயின் நீங்களே தொடக்கிய இலக்கிய முயற்சி என்ன?

அப்பொழுது ஏதாவது செய்தல் வேண்டும் என்பதற்காக ‘இரவுச் சூரியன்’ என்ற தலைப்பில் எல்லா இயக்கத்திலும் இருந்து இறந்த மூன்று போராளிகளை வைத்து ஒரு கவிதை எழுதி ‘தமிழ்முரசு’க்கு அனுப்பியிருந்தேன். அதற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருந்தது. அப்பொழுது பெரியதொரு அறியப்பட்ட கவிஞன் நீ… நீதான் கவிஞன் …என்றார்கள். கிட்டத்தட்ட நான் கனடாவரும்வரைக்கும் ஒவ்வொரு தமிழ்முரசிலும் கவிதையோ  கட்டுரையோ வெளிவந்துகொண்டிருந்தது. அப்படி இவர்களோடு நெருக்கமாக இருந்துகொண்டு நான் ஈரோஸ் அமைப்பில் வேலைசெய்தேன். அது அங்கு பிரச்சினையாக இருக்கவில்லை. ஈரோசுக்கு நான் தமிழ்முரசில் எழுதுவது இடைஞ்சலாக இருந்தது. என்னை அங்கே எழுதவேண்டாம், அவர்கள் சரியில்லை என எச்சரித்தார்கள்.

இப்போது போன்றதுமாதிரியான எச்சரிக்கையல்ல அது. கருத்தளவிலான மாறுபாட்டை உசிதமாகத் தெரிவிக்குமளவிற்கே அன்றைய மாறுகருத்துள்ளவர்கள் இருந்தார்கள்.

எனக்கு 86களில் திருமணம் நடக்கிறது. எனக்கு சில உறவினர் இருந்தனர். மனைவிக்கு யாருமில்லை. எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் முழுக்க ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் நண்பர்கள்தான். இவற்றை இப்பொழுது நினைத்துப் பார்த்தால், இலக்கியம் தவிர்த்துப் பார்த்தால், சிரிப்பாக இருக்கிறது. சபாலிங்கம் லட்டு செய்துகொண்டு வந்திருந்தார். உமாகாந்தன் கேக் செய்திருந்தார். கலாமோகன் கையால் எழுதிய திருமணப் பத்திரிகையை கொடுத்திருந்தார். என்னுடன் தொடர்புடனிருந்த பாண்டிச்சேரி நண்பர்கள் 80பேருக்கு சமைத்தார்கள். இப்பொழுது போலுள்ள வசதியல்ல அப்பொழுது. 80 பேருக்கு சமைப்பது என்பது கற்பனை செய்யமுடியாதது. சமைத்துக்கொண்டிருந்த பொழுது புகை வந்ததால் பொலிஸ் வந்து சாப்பாட்டைக் கொண்டுசென்று விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சமைக்கக் கூடாத இடத்தில் வைத்து சமைத்திருந்தார்கள். பின்னர் நண்பர்கள் சென்று பொலிசுடன் கதைத்து திரும்பப் பெற்று வந்தார்கள். இவ்வாறு பல நிகழ்வுகள்.

கத்தோலிக்க முறைப்படி மணம் முடித்தபடியால் மணப்பெண்ணுக்கு தலையில் வீல் எனப்படும் வலைத் துப்பட்டா போடவேண்டும். நண்பர் ஒருவர் தான் கொணர்வதாக கூறியிருந்தார். காலை 8:00மணியாகிறது, அவர் வரவில்லை. மணப்பெண் தான் தேவாலயத்திற்கு வரமுடியாது என்றுவிட்டார். இதைக்கூட எடுக்கவில்லையா என காலையிலே சச்சரவு தொடங்கியிருந்தது. பின்னர் நடா என்றொரு நாடகக்கார நண்பர் 7:55க்கு அதைக் கொணர்ந்து மனைவியை சமாதானப்படுத்தி கோயிலுக்கு அழைத்துவந்தார். கோயிலில் பாடகர் என்று யாரும் இல்லை. மனைவிக்கோ கோயில் பூசையில் ஒரு பாட்டாவது யாராவது பாடவேண்டும் என்று ஆசை. எனவே மனைவி தானே பாடிவிட்டார். ஆனால் பூசை பிரென்சு பாதிரியாரால் நடத்தப்பட்டது. நண்பர்களுக்கோ வினோதமாக இருந்தது.8. உங்கள் வாசிப்பு அப்போது எவ்வாறிருந்தது? நீங்கள் ஒரு தீவிர வாசகன் என்று கூறாதபடியால்..?

மனிதனுக்கு தனிச்சொத்து இல்லாமல் இருந்திருந்தால் எல்லாப்பிரச்சினையும் தீர்ந்திடும் என்ற எண்ணம் எனக்கு ஈரோஸ் தொடர்பால் அப்போது ஏற்பட்டிருந்தது. அப்பொழுது கிரு~;ணகுமார் என்பவரை உமாகாந்தன் வீட்டில் சந்தித்தேன். அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பின்னணி உள்ளவர். அவருக்கும் பத்மநாப ஐயருக்கும் உள்ள தொடர்பால் எனக்கு வேறு புத்தகங்கள் கிடைக்கத் தொடங்கின. ‘அலை’ போன்றவை கிடைத்தன. அதன்பின் ‘மரணத்துள் வாழ்வோம்’ கிடைத்தது. இப்பொழுது என் எண்ணங்களில் தளையசிங்கம் ஒரு முக்கியமானவராக வருகிறார். எனக்கு இன்றைக்கு ஒரு வேலையும் வீடும் கிடைத்தால் வாழ்க்கையில் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்திடுமோ என்ற கேள்வி வரும்போதுதான் எனது வாசனைத்தளம் மாறுகிறது.

அப்ப அலையில் மு.பொன்னம்பலம் ஜே.ஜே சில குறிப்புகள் என்ற புத்தகத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. யார் இவர், இவ்வாறு எல்லாம் எழுதுகிறார்கள் என்று நினைக்கையில் என் வாசனைத்தளம் மாறுகிறது. உள்ளடுக்குகளைத் தாண்டி நான் வெளியில கொஞ்சம் யோசிக்கிறன். அப்பொழுது கலாமோகனுக்கு பொன்னுத்துரையின் மகன் அனுப்பிய ஜே.ஜே சில குறிப்புகள் அவருக்கு வந்து கிடைக்கும்பொழுது பொன்னுத்துரையின் மகன் மித்தி கடலில் இறந்துபோகிறார். அப்ப கலாமோகன் அப்புத்தகத்தை வைத்து ஒரு கவிதையை எழுதி எனக்குக் காட்டுகிறார். அது என்னைப் பாதித்தது. அப்பொழுது கலாமோகனிடமோ,  வேறு யாரிடமோ ஜே.ஜே சில குறிப்புகளை பெற்று வாசித்தேன். அது எனக்கு ஒரு பெரிய பாதிப்பைக் கொடுத்தது. நான் அதற்கு முன் ஜெயகாந்தனை ஊரில் நூலகத்தில் வாசித்திருந்தேன். ஜானகிராமனை வாசித்திருந்தேன். எனக்கு சுந்தர ராமசாமி புதிதாக இருந்தது. ஜெயகாந்தனுக்குள்ளால் தான் வருகிறேன். அதன் பிறகு ஜானகிராமனிடம் மிகப்பெரிய பிரியம் வருகிறது. அந்த நேரத்தில்தான் நான் ஊரைவிட்டு வெளியேறினேன். அதற்கிடையில் எனக்கு வேறு யாருமில்லை. ஆனால் அவர்கள் என்னைக் குலுக்கவில்லை. நன்றாக எழுதுகிறார்கள் என்ற எண்ணம்; இருந்ததே தவிர என்னை அவர்கள் குலுக்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமியிடம் வரும்போதுதான் ஒரு அதிர்வு வருகிறது. வாழ்க்கை பற்றிய கேள்வி வருகிறது. வாழ்க்கை பற்றிய பார்வைகள் மாறுகிறது. அந்தத் தருணத்தில் தளையசிங்கத்தை வாசிக்கும்போது இன்னமும் அது பொருந்திப் போவதுபோல் இருக்கிறது. மார்க்ஸியமும் தேவை, ஆனால் அதைத்தாண்டியும் மனிதனுக்கு தேவை இருக்கிறது, அதனோடுமட்டும் திருப்பதிப்பட முடியாது என்ற எண்ணம் உருவாகிறது. அதனால்தான், அந்த நேரத்தில்தான் எனக்கு ஈரோஸோடு  பிரச்சினை உருவாகிறது.


9. உங்கள் கட்டடிடக் காடு கவிதை நூல் குறித்தும், அதன் சமகால பிற வெளியீடுகள் குறித்தும்…

தமிழ் முரசில் எனது கவிதைகள் வரும்போது உமாகாந்தனும் நானும் அது பற்றிக் கதைப்போம். அப்பொழுது வரதராஜப்பெருமாள் அங்கே வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். பையப் பைய ஈ.பி.ஆர்.எல்.எஃப் பக்கம் நான் சேர்ந்துகொண்டிருந்தேன். அதனால் சங்கே முழங்கு என்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப் இன் வருடாந்த கலைநிகழ்வி;ல் இடம்பெறும் கவிதா நிகழ்வில் எனது கவிதை முக்கியமாக இருக்கும். அவற்றைப் புத்தகமாகப் போடுதல் வேண்டும் என்று உமாகாந்தன் கேட்டார். நான் மறுத்தேன். ஏனென்றால் அவை எனக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாத காலத்தில் எழுதப்பட்டவை. ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை. ஒன்று எனது ஊரின் பிரிவு. இரண்டு அங்கே எதிர்கொண்ட பிரச்சினைகள். மூன்றாவது தேசவிடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தமை. இந்த மூன்றும் என்னை அலைத்துக் கொண்டிருந்தன. அப்பொழுது தனிப்பட்ட விதமாயும் மனஉளைச்சல். அந்நேரம் சபாலிங்கம் கூறினார், நான் ஏசியா என்றொரு புத்தக வெளியீடு கொண்டுவரப்போகிறேன், செல்வத்தின் பாட்டுத்தான் அதில் முதல் போடுவது என்று. நான் அதில் அக்கறைப் படவில்லை. புத்தகமாக வரும்போது அதன் பலவீனங்கள் எனக்குத் தெரியும். நான் அப்பொழுது வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் நான் இங்கே கனடாவுக்கு வந்ததன்பின்
சபாலிங்கம் தனது இரண்டாவது வெளியீடாக அதைச் செய்திருந்தார்.10. பிரான்ஸில் வளர்ந்துவந்த தமிழ் தீவிர கலை இலக்கிய முயற்சிகளில் பிரான்ஸிய இலக்கியப் புதுநெறிகளின் குறிப்பாக பின்அமைப்பியலின் செல்வாக்கு எவ்வாறு இருந்ததாகக் கருதுகிறீர்கள்?

இது கலாமோகனைப் பெரிதும் பாதித்திருந்திருக்கிறது.

பாரிசின் பெரிய நூலகத்தில் ஒரு பெரிய இந்தியப் படவிழா நடந்தது. கலாமோகனுக்கு விசயங்கள் தெரியும். இதில்தான் சல்வர்டோ டாலி தேத்தண்ணி குடித்திருந்தார். இதிலதான் பிகாசோ வந்து கோப்பி குடித்திருந்தார். இதுதான் பிகாசோவின் மாளிகை, இதில்தான் பிகாசோவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் கலாமோகன் பார்த்து வைத்திருந்திருக்கிறார். ஆனால் கலாமோகன் ஆழமாகச் செல்லவில்லை. கலாமோகன் இவற்றை எனக்கு காட்டித்தருவார்.

ஒருநாள் நான் நூலகத்திற்குச் சென்றேன். எனக்கு பிரென்சு வாசிக்கத் தெரியாது. இலட்சக்கணக்கான நூல்களில் இரண்டு தமிழ் புத்தகங்கள் இருக்கலாம். அந்தச் சூழலுக்காக மட்டும் அங்கே முன்னால் சென்று இருப்பேன். அந்தச் சூழலுக்குள் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் இந்நியப் படவிழா நடைபெறுவதாக விளம்பரம் பார்த்தேன். அப்பப்போ பத்திரிகைகளில் வருவதால் சத்தியஜித் ரே, மிர்ணாள் சென் போன்றோரின் பெயர்கள் பரிச்சயமாகியிருந்தன. போனால் அங்கே பிரெஞ்சு மொழியில் போடுவார்கள். ஒன்றும் விளங்காது. இருந்தும் நான் தொடர்ந்து போவேன்.  கிரு~;ணகுமார் ஒவ்வொரு நாளும் படவிழாவில் நிற்பார். கிரு~;ணகுமாரைப் பொறுத்தளவில் உமாகாந்தன் வீட்டில் சந்தித்தாலும் நான் அவருடன் நட்பாகவில்லை.

பிரெஞ்சுக்காரர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கு மொழி பிரச்சினை. ஆனால் இதற்குள் ஏதோ இருக்கிறது என தொடர்ந்து போய் வருகிறேன். ஒரு நாள், நாயக் என்று நினைக்கிறேன், அப்படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் உண்மையில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, இதில் என்ன இருக்கிறது, எழுந்து நின்றெல்லாம் கைதட்டுகிறார்கள் என்று கேட்டேன். கிரு~;ணகுமார் கொஞ்சம் விளங்கப்படுத்தியபின் உம்மோடு வரலாமா எனக்கேட்டார். உங்களோடு கதைக்கவேண்டும் என்றார். நான் அவரை யார் என்று கேட்டேன். அதற்கு நான் கைலாசபதி போன்றவர்களைத் தெரியும் என உரையாடல் தொடர்ந்து நட்பாகினோம்.

என்னை மறுபக்கத்தால் கொணர்ந்ததற்கு கிரு~ணகுமாருக்கு பெரும் பங்கிருக்கிறது. ஆனால் அவர் பெரிதாக எழுதுபவர் அல்லர். நல்ல வாசகன். கல்விப் பின்னணி உள்ளவர். நாங்கள் இருந்த காலத்தில் யாருக்குமே பின்னவீனத்துவம் பற்றி தெரியாது. அது பின்னுக்குத்தான் வந்தது. ஆகக் கூடினால் மாபசானைத் தெரியும். நான் இருந்த வீடடின் அண்மைய சப்வேக்கு பெயர் கப்ரியல் பெரி. இந்த சப்வேயில் எத்தனையோ வருடங்களாக நான் சென்று வந்துள்ளேன். ஆனால ஒரு மகசீனில எஸ்.வி.ராஜதுரை கப்பிரியல் பெரியின் கவிதை மொழிபெயர்ப்பைப் பார்த்ததன் பின்தான் ஓ நான் ஒரு கவிஞனின் சப்வேயில்தான் இருக்கிறேன், அதில்தான் எனது வீடு என்று பெருமைப்பட்டேன்.

இதுதான் அப்ப இருந்த பிரான்ஸ் சூழல். ஒருவருக்கும் நாம் ஒரு மிகப்பெரிய நாட்டில் இருக்கிறோம், ஒரு கலைப் பூமியில் இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லை. மொழிப் பிரச்சினையும் அவற்றை அணுகும் மன அவசங்கள் அன்று இல்லாதிருந்தமையும் அதற்குக் காரணம். ஒருவருக்கும் மொழியைப் படித்து வளரவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. எப்பவும் ‘எப்படி வந்த கடன் அடைப்பது? எப்படி மணம்முடிப்பது? எவ்வாறு குடும்பத்தைக் காப்பாற்றுவது?’ என்ற மனநிலைதான். அதைவிட இடைஞ்சலாக இருந்தது. ஈழவிடுதலைப் போராட்டம்.11. தொண்ணூறுகளின் ஆரம்பம் மேற்கைரோப்பிய நாடுகளில் இருந்த ஈழத் தமிழர் வாழ்நிலைக்கு ஒரு தளும்பலைக் கொடுத்தnனின், அதிலிருந்து தப்பிக்க இங்கிலாந்து நோக்கியும், வடஅமெரிக்காநோக்கியுமான ஓர் இரண்டாவது புலப்பெயர்வு நிகழ்ந்ததாகக் கொள்ள முடியும். உங்களது கனடாவுக்கான பெயர்வும் இது சுட்டியதா?

ஒன்று படித்தவர்களிடம் ஆங்கில மோகம் இருந்தது. பிரான்ஸ், ஜேர்மனியில் இருந்த பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழியில் படித்தால் ஊருக்குத் திரும்பும்போது இடைஞ்சல்.
இரண்டாவது, இந்த நாடுகளில் நிரந்தர வதிவிடம்; இறுதிவரை கொடுக்கமாட்டார்கள். எப்போதும் நீங்கள் அந்நியர்தான். நீங்கள் கனடாவில் வாழ்வதுபோன்று அங்கு வாழமுடியாது. நல்ல உதாரணம் பிரான்ஸில் இருக்கக்கூடிய பாண்டிச்சேரி மக்கள். அவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால் அவர்கள் இன்றுவரை பாண்டிச்சேரிக் கனவிலேயே இருக்கிறார்கள். வாழ்க்கையின் தரத்தில் கனடா ஒரு புண்ணிய பூமிதான். யுத்தத்தால் அகதியாக வெளியேறிய ஒருத்தன்  கௌரவமாக வாழ்வதற்குரிய இடம் கனடாதான். ஐரோப்பாவில் இருந்தபடியால் கூறுகிறேன்.12. கனடாவுக்கு தமிழர் புலப்பெயர்வு அதிகரித்த வேளையில் அதன் குவிமையம் மொன்றியலாக இருந்திருக்கிறது. பிரான்ஸ் மொழியின் பரிச்சயம் அதன் காரணமாக இருந்ததா? அல்லது வேறு காரணம் இருக்கிறதா?

ஆரம்பத்தில் எல்லோரும் மொன்றியோலில் வந்திருந்தோம். உண்மையில் தமிழர்களின் மையமாக மொன்றியலே அமைந்திருக்க வேண்டும். நான் வரும்பொழுது 87ல் மொன்றியலில் இரண்டு சஞ்சிகைகள் வந்துகொண்டிருந்தன. ‘தமிழ் எழில்’, ‘பார்வை’ என்றவை. சின்னதாக வேறுபல விடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தமிழ் ஒளி, தமிழ் ஒன்றியம், விடுதலைப்புலிகள் அமைப்பு என மூன்று முக்கியமான அமைப்புகள் இருந்தன. அப்ப நான் 3 மாதத்தில் ஒரு மகனுடன்தான் வந்திருந்தேன். தமிழ் ஒளி என்ற  ஒரு அமைப்பிலிருந்து ஒரு பத்திரிகை வந்தது. வந்து நான்கு நாட்களுக்குள் யாரிடமோ விசாரித்து அங்கே செல்லத் தொடங்கிவிட்டேன். அங்கேதான் பார்வை என்ற பெயரில் கையெழுத்துப் பிரதியில் மோசமான வடிவில் ஒரு சஞ்சிகையைக் கண்டேன். அதைத் தொடர யாரும் இல்லாததால் தொடராதிருந்தது. அங்கிருந்த ஒரே ஒரு தொடர்பு ‘மணிமுடிகள் தான் சாம்பலுக்குள்ளே அம்பும் வில்லுமா’ , ‘எனது கூவல்நிறைய எனது காலை வேண்டும்’ போன்ற கவிதைகளைத் தந்த ஹம்சத்வனி என்ற கவிஞர், அவர் இப்போது எழுதுவதில்லை, அவர்தான் விடயங்களை எங்கே பெறலாம் என்று கூறியிருந்தார். அந்நிலையில்தான் பார்வை என்ற சஞ்சிகையை நடத்தப் புறப்பட்டேன். அப்போது ஒன்றுமே இருக்கவில்லை. ஆக்கங்கள் இல்லை. பொருட்கள் இல்லை. ஒன்றுமே இல்லை. கையெழுத்து சஞ்சிகை. எனவே தளையசிங்கத்தை, சுந்தர ராமசாமியை, சிவத்தம்பியை திரும்பவும் போட்டு, உள்@ர் விடயங்கள் சிலவற்றையும் இலங்கையில் இருந்து சரிநிகர் அரவிந்தன் போன்றவர்கள் அனுப்பிய ஆக்கங்கள் சிலவற்றையும் இட்டு அப்பப்போ சிறிதாக எழுதக் கூடியவர்களையும் தேடி அச் சஞ்சிகையை நடத்தினேன். பெரும்பான்மையானவை மறுபிரசுரங்களே.

அதை விநியோகிக்கும்போது தொடர்பானவர்கள்தான் ஜயகரன், ஆனந்தபிரசாத், மூர்த்தி போன்றவர்கள். இவர்களும் எழுதத் தொடங்கிய பின் சஞ்சிகையின் தரம் மாறுகிறது. ‘தற்போது காலம் நடத்துகிறீர்கள். ஆனால் பார்வை தந்த பிரமிப்பு இதில் இல்லை. அதற்கு கனடா தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு’ என்று சிலர் கூறுகிறார்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அவை முழுவதும் மறுபிரசுரங்களும், பார்த்து எழுதியவையும்தான். தொடர்ச்சியாக நான் பதினைந்து இதழ்களைச் செய்திருக்கிறேன். அதில் பின்பு ஒரு சிக்கல் வருகிறது. பார்வைக்கு ஆனந்தபிரசாத் ஒவ்வொரு கவிதை தருவார். அவர் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கையில் நிகழ்ச்சிப் பிரச்சனையில் ஒருவருக்கொருவர் அடிபட்டுக்கொண்டனர்.


ஆனந்தபிரசாத்துக்கு அங்கே அவர்கள் அடித்துக்  கொண்டது மிகவும் கவலையாக இருந்தது. அதற்கு ‘சந்திரமண்டலத்திற்குப் போனாலும் தமிழன் அடித்துக் கொள்ளுவான்’ என்று கவிதை எழுதினார். அந்தக் கவிதை வந்த பார்வையை நூலகத்தில் பார்த்த ஒருவர் அதற்குள்ளிலிருந்து இவரை எடுக்கவேண்டும் என்ற நோக்கில் உலகத்தமிழர் அமைப்பிடம் சென்று இவ்வாறு உங்களுக்கு எதிராக ஒரு சஞ்சிகை வருகிறது என்று கூறியிருக்கிறார். உண்மையில் அவர்களுக்கு இது பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் வாசித்ததும் இல்லை. உண்மையில் என்னிடமிருந்து ‘பார்வையை’ ப் பறிப்பதற்கே இவையெல்லாம் என்பது பின்னர் தெரிந்தது. அப்ப பொறுப்பானவர் கேட்டார் ,’அந்தக் கவிதையை எடுங்கோ’ என்றார். நானோ அவ்வாறு எடுக்கமுடியாது என்று கூறிவிட்டு அப்படியே ரொறன்ரோவோடு நின்றுவிட்டேன்.13. ரொறன்ரோ இப்போது அதிகமான புலம்பெயர்ந்த தமிழரின் வாழிடமாக இருக்கிறது. இதற்கான காரணமாக எது இருக்கக்கூடுமென நினைக்கிறீர்கள்?

ரொறன்ரோவுக்கு வருகிற காலமும் கிட்டத்தட்ட இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற காலமும் கிட்டத்த தட்ட ஒரே காலம் என நினைக்கிறேன். நான் வரும்பொழுது எனது நோக்கம் கொஞ்சம் ஒதுங்கி பிழைப்பு வழிகளைப் பார்ப்போம் என்றிருந்தது. ஆனால், அங்கிருந்து வந்தவுடன் இந்தச் சூழல் பெரிய அதிர்வாக இருந்தது. எல்லோரும் இரண்டு, மூன்று வேலை என்றிருந்தார்கள். காசு உழைச்சு ஒரு மனிசனாக வேண்டும் என்று சுற்றிவர உள்ள உறவுகளின் புத்திமதி. அவ்வேளை சும்மா இருப்பது என்பது கடினமாக இருந்தது. அவ்வேளை தேடகம் நண்பர்களின் தொடர்பு ஜயகரன் ஊடாகக் கிடைத்தது. வெலஸ்லி அன்ட் பார்லிமென்ற் சந்திப்பில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் அப்பொழுதான் கன்டாவிற்கு புதிதாக வந்திருந்த இளைஞர்களை சந்தித்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது. பல இளைஞர்கள் அப்பொழுதான் புதிதாக வந்து தாங்கள் நாட்டை மறக்க இயலாது, ஏதாவது செய்ய வேண்டும் என இருந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் வயது மூத்தவர்களாக தெரிந்திருக்கலாம். எங்கள் சொல்லை கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏதாவது செய்வம் ஆனால் எல்லாம் புத்தகம், கலை இலக்கியங்களுக்கூடாகவே செய்வோம் என நான், மூர்த்தி போன்றோர் முன்வைத்ததை ஏற்றுக்கொண்டார்கள். நான் சென்ற பின்னர் மூர்த்தி, செழியன் போன்றோரையும் இணைத்தேன். என்ன செய்வோம் என்றதற்கு நான் தேடல் என்றொரு சஞ்சிகை செய்வோம் என்றேன். உண்மையில் அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. செய்வம் அண்ணே, காசு பிரச்சினையில்லை என்றார்கள். அப்பொழுதுதான் கணினி அறிமுகமாகிக் கொண்டிருந்தது. எங்கே அச்சடிப்பது என்றால் அச்சகத்தில் கொடுத்து அடிப்போம் என்றார்கள். அச்சகத்தில் தமிழ் எழுத்தில்லையே என்றேன். அப்ப என்ன செய்யலாம் என்றனர். தமிழ் தட்டச்சு இயந்திரம் வாங்க வேண்டும் என்றேன்.  சம்மதித்தார்கள். ஒரு கிழமையில் இந்தியாவில் இருந்து அது வாங்கப்பட்டது. எப்படி தட்டச்சு செய்வதென்றே தெரியாது.

திடீரென ஒரு கடைக்குப் பின்னிருந்த கராஜ் ஒன்றை வாடகைக்குப்பெற்று தேடகம் என பெயரிட்டு அங்கே இந்த தேடல் என்ற பிரதியும் பார்வைக்கு வைக்கப்பட்டது. இது சரியாக அமிர்தலிங்கம் இறந்த அந்தக் கிழமைதான் இங்கே தேடகம் திறக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் சாராத வேறொரு அமைப்பு, விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் அமைப்பு உலகத்தில் முதல்தடவை நிறுவனரீதியாக ஆரம்பிக்கப்படுகிறது. அந்தக் கிழமை இதற்கு எந்த சம்பந்தமும் இல்லாது அந்த சந்தியில் தாயகம் என்ற சஞ்சிகையை சிறுவன் ஒருவன் விற்பனை செய்துகொண்டிருந்தான். அதுதான் நான் நினைக்கிறேன் கனடாவில் முதலில் கணணியில் ரைப் செய்து வெளிவந்த பத்திரிகை. அப்போதுதான் இது நல்ல விடயமாயிருக்கிறதே என அவரை தொடர்புகொண்டோம். அவர்தான் ஜோர்ஜ். பின் அவரின் உதவியுடன் தேடலையும் அச்சாக்க எண்ணி ஆசிரியர் குழுவில் நான், ஜயகரன், செழியன் இணைந்தோம்.

ஜோர்ஜினுடைய ஆதரவு எங்களுக்கும் எங்கள் ஆதரவு அவருக்கும் கிடைக்கிறது. ஜோர்ஜ் இங்கிருக்கும் தமிழிலக்கியப்போக்கிற்கு ஒரு முக்கிய காரணி. ஜோர்ஜிற்கு நல்ல தொழில்நுட்பம், ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஒரு பத்திரிகை கொண்டுவரவேண்டும் என்ற விருப்புத்தான் இருந்தது. ஆனால் அப்பொழுது இருந்தவர்கள் அவரைச் சினமூட்டி அவரை ஒரு புலியெதிர்ப்பாளராக உருவாக்கி விட்டார்கள். இது எனக்குத் தெரிந்தளவில். எனக்குப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஜோர்ஜ் உடன் பேசியபொழுது அவருக்கு கலை, இலக்கிய ஆழம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு சுயசிந்தனையாளன். ஒரு விடயத்தை எழுதினால் அதை வாசிப்பதற்கு என்ன தேவை என்றெல்லாம் மிக நன்றாக வரும்.  ஆசிரிய தலையங்கம் எழுதினால் மிக அருமையாக இருக்கும். பைபிளில் ஒரு வசனம் வருகிறது, ‘ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து அவர் சிறுவர்களுக்கும் பாவிகளுக்கும் வெளிப்படுத்தினார்’ என. யோசித்துப் பார்த்தால் நாங்கள் எவ்வளவுதான் புத்தகங்கள் என்று வாசித்தாலும் இவையெல்லாம் எங்களுக்கு வருவதில்லை. ஆனால் ஜோர்ஜ் இவையெல்லாம் இல்லாது சுயசிந்தனையில் எழுதுவதென்பது சிறப்பே. ஜோர்ஜிடம் இருந்தது ஒரு நேர்மை. இது அன்றைய நான் சந்தித் ஜோர்ஜ். ஆனால் அந்த வீச்சில் வந்திருந்தால் ஒரு நல்ல படைப்பாளியாக அவர் இருந்திருப்பார்.

இந்தப் பக்கம் நிறைய உற்சாகமான, மானிட நேயத்தை விரும்பிய இளைஞர்கள், நியாயமாக நடத்தல் வேண்டும் என விரும்பியவர்கள், இதைக் கலை, இலக்கிய ஈடுபாடு என்று நான் கூறமாட்டேன், இவ்வாறான போக்குள்ளவர்கள் இத்தேடகத்தை உருவாக்கி ஒரு மாற்றுக் கருத்தினது (இன்று அது சலிப்புற்ற வார்த்தை) அமைப்பாக்கினார்கள்.  89ல் உலகத்துத்  தமிழ் சமூகத்தினிடையில் எங்குமில்லாத ஒரு மாற்றுக் கருத்து மையம். மூன்று பத்திரிகைக்குப் பின் என்னை மெதுவாக வெளியேற்ற முனைந்தார்கள். ஏனெனில் நான் இலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தேன். ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனில்லை. இலக்கியத்தால் ஒன்றும் செய்ய இயலாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஓடியிருக்கவேண்டும். அதைக் குறிப்பாக அறிந்து நானும் செழியனும் மெதுவாக  தேடலைவிட்டு வெளியேறுகிறோம். அதுதான் உண்மை. ஆனால் அதற்கு இப்பொழுது சாட்சிகள் இல்லை. எனக்கு கலை, இலக்கியம்தான் முக்கியமானது. அதிலும் தீவிரஇலக்கிய தளத்தில் சிறுபத்திரிகை போன்ற தளமூடாக முதலில் சிறிதளவு மாற்றத்தையும் அதனூடு சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் கொண்டுவருதல் எனும் எண்ணத்தில் ‘காலம்’ சஞ்சிகையை வெளியிட முயற்சித்தேன். அது  தொடர்பான வேலைகளிற்கு நாட்டைவிட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களின் பின் நான் இலங்கைக்கு செல்கிறேன். அவ்வேளை இந்தியாவில் தங்கவேண்டியிருந்தது. இந்தியாவில் சி.மோகன் என்ற விமர்சகரின் உதவியோடு ‘காலம்’ என்ற சஞ்சிகையின் முதல் இதழ் 1990ல் இந்தியாவில் அச்சாகியது. அதில் கனடாவிலிருந்து குமார் மூர்த்தி, தயாபரன் என்று கூறப்படுகிற குமரன், செழியன், நான் என பலரின் விடயங்களைத் தாங்கி அது வெளிவந்தது.14. ‘பார்வை’ தன் சாத்தியப்பாடுகளை இழந்துவிட்டதாக ஏன் கருதினீர்கள்? அவ்வாறு கருதவில்லையெனில் காலம் என்ற பெயர் பார்வையைவிடவும் இறுக்கமான் உள்ளடக்க அர்த்தத்தைக் கொண்டிருக்கிறதாக நினைத்தீர்களா? 

உண்மையாக காலத்தைப் பிரதிபலிப்பது இலக்கியம் என்பதால் வைத்தேன். அதன்பின்னர் தாஸ்தாயெவ்ஸ்கி காலம் என்ற பத்திரிகையை வைத்திருந்ததையும் அறிந்தேன். இலக்கியத்தை முக்கியப்படுத்துவதற்காக இவ்விதழைக் கொணர்ந்தேன். 90ம் ஆண்டில் இரண்டு இதழ் வெளிவந்தது. இன்றுவரை 33 இதழ்கள் வெளிவந்துள்ளன.15. செறிவான இலக்கிய முயற்சிகளிலிருந்து கனடாவில் இருந்த தீவிர தமிழ்ப் படைப்பாளிகளின் அக்கறைகளை இயக்க அரசியல் ஊறுபடுத்தியதான ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. தேடகத்தின் முடக்கம் இதன் உதாரணமாக சொல்லப்படுகிறது. இது அப்படித்தானா என பல அபிப்பிராய பேதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன் கூரிய அரசியல் நிலைப்பாடுதான் ஒருபோது தீவிர படைப்பாளிகளின் மையமாக இருந்த அதன் சரிவை விரைவுபடுத்தியது என்பதில் உள்ள உண்மை என்ன?

இப்படியொரு கேள்விக்கு நான் பதில் சொல்வதைவிட இதை இவ்வாறு பார்க்கலாம். ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாறுதான் இப்படித் தொடர்ந்தது எனலாம். ஏனெனில் இலங்கையில் இலக்கியம் என்று சொல்லப்பட்டது அல்லது வலியுறுக்கப்பட்டது இவ்வாறுதான் இருந்தது. அதாவது அரசியலுக்குத்தான் இலக்கியம் இருந்தது. அதை அழகாக கூறினாலும் அதாவது சமூகவிடுதலைக்கு இலக்கியம் பயன்பட வேண்டும் என்று கூறினாலும் அதன் தொடர்ச்சியாகத்தான் இதையும், எல்லாவற்றையும் பார்க்கிறேன். எமது ஈழத்தமிழ் இலக்கியப்போக்கு இதுதான். சமயம் எவ்வாறு இலக்கியத்தைப் பாவித்ததோ, இன்று விடுதலைக்காக அல்லது விடுதலைக்கு எதிராக வேறு பலதிற்காகவும் இலக்கியத்தைப் பாவிக்கிறோம். இலக்கியம் என்பது வேறு ஒரு விடயம் என்பதை ஒரவரும் விளங்கிக் கொள்ளவில்லை. இலக்கியத்தில் அரசியல் வரலாம், இலக்கியத்தில் இயக்கங்கள் பற்றி வரலாம், இலக்கியத்தில் விடுதலைபற்றி வரலாம் ஆனால் இலக்கியம் என்பது வேறு ஒன்று என்பதை ஒருவரும் விளங்கிக் கொள்வதில்லை. தமிழில் இருக்கும் ஒரு பெரிய குறை இது. இதுவே காலத்தில் வைக்கும் கேள்விக்கும் ஒரு பதிலாக இருக்கும்.

என்னவென்றால்,  நாங்கள் ஒரு சிறிய விடயத்தைக் கூறிவிட்டு பெரிய விடயமாக நினைத்துக் கொண்டிருப்போம். சிறுவயதில் கூறுவதுபோன்று உலகில் பெரிய நடிகன் சிவாஜி என்போம். சிறந்த மொழி தமிழ் என்போம். இதற்கு எந்த ஆதாரமும் இருக்காது. இப்படி ஈழத்துக்கு இலக்கியம் மிக முக்கியம் என்போம.; அது முக்கியமா? எது முக்கியமோ அது அம்முக்கியத்தை அடைந்துள்ளது. தமிழ்நாடு திட்டமிட்டு எங்களை ஒததுக்கியது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது என்மேலும் வந்த குற்றச்சாட்டு. எங்கள் எழுத்துக்களை அவர்கள் போடுவதில்லை, அவர்கள் எழுத்துக்களை நீங்கள் போடுகிறீர்கள் என்பது.

இந்தக் கேள்விக்கு சரியான பதிலை நாங்கள் சொல்ல இயலாது. ஏனென்றால் தேடகத்தில் கலை இலக்கியம் பற்றிப் பேசுவதென்றால் அது ஒரு உள்ளார்ந்த உணர்வு விடயம். அதுபற்றிக் கதைப்பெதென்றால்… தேடகத்தில் நான் ஒரு அங்கத்தவர். ஆனாலும் சிலவற்றைப் பேசியே ஆகவேண்டும்.

தேடகம் ஒரு முக்கியமான முயற்சி. ஆனால் தேடகத்தில் என்ன பிரச்சினை என்று கூறினால்… கலை இலக்கிய மன்றம் என்று வைத்ததற்கு நானும் ஒரு காரணம். ஆனால் உற்சாகத்தினால் தாங்கள் ஏதோ பெரிதாகச் செய்யலாம் என்ற எண்ணத்தில், இருந்த பெயர் பொருத்தம் காணாது என்பதாக அதை மாற்றி ‘தமிழர் வகைதுறை நிலையம்’ என்ற பெயரை வைத்தனர். நாலுபட்ட கருத்துள்ள, வௌ;வேறு இயக்கங்களில் இருந்து மனவருத்தப்பட்டு வந்தவர்கள் ஒரு பொதுக்கருத்துக்காக பணிபுரிகையில் சில முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். இங்கும் அவ்வாறே ஏற்பட்டன.


16. தேடகம் தன் தோற்ற நியாயத்தை நிறைவேற்றவில்லை என்கிறீர்களா?

அவர்களின் சாதனைகள் பல இருக்கின்றன. இவர்களின் அதிமுக்கியமான செயற்பாடுகள் தேடல் என்ற பத்திரிகையை வெளியிட்டது, ஒரு மாற்றுக் கருத்து மையத்தை நடத்தியமை, தமிழருக்கான நூலகத்தை ஏற்படுத்தியமை, நவீன நாடகத்தின் தொடக்கத்தை ஆரம்பித்தமை, அந்தந்த நேரத்தில் எது முக்கியமோ தமது மனதிலுள்ள விருப்பு வெறுப்புகளை ஒத்திவைத்துவிட்டு பொது நன்மைக்காக செயற்பட்டமை. உதாரணத்திற்கு இந்தியன் ஆமி இலங்கைக்குச் சென்றிருந்த பொழுது முழுமையாக அதை எதிர்த்து தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுத்தனர். தேடகம் நிறுவனமாக இயங்கியது. விடுதலைப்புலிகளின் கருத்துக்குள் இல்லாவிடினும் விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்த எவராலும் தங்களைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறமுடியாத அளவுக்கு தேடகத்தின் பின்னணியில் நேர்மை இருந்தது. மனிதநேயப் பண்பிருந்தது. ஆனால் இடைக்காலத்தில் தேடகத்தினுள் இணைந்த வேறுபலர் அதைக் கைப்பற்றி பிரச்சனைப்பட்டு இன்று மீளவும் பழைய இடத்திற்கு வந்துள்ளது.


17. இன்று அவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது?

பழைய இடத்துக்கு வந்ததும் அவர்கள் செய்த முதல்வேலை விடுதலைப்புலிகள் மீதான தடையைப் பற்றிய விவாதத்தை முன்னெடுத்தமை. இன்றுவரை அந்த நேர்மை தொடர்கிறது. ஆனால் இதை விடுதலைப்புலிகளோ வேறுயாருமோ செய்யவில்லை. இன்றைக்கு அவ்வாறு இருந்திருக்காவிட்டால் தேடகம்தான் சிறீலங்காவிற்காக இயங்கும் மையமாக இருந்திருக்கும். ஏனென்றால் அமைப்பாக விடுதலைப்புலிகள் மீதான விமர்சனத்தோடு அவர்கள் இருந்தவர்கள். தொகையிலும் ஓரளவு கூடியவர்கள்.18. தொண்ணூறின் இறுதியிலிருந்து ஒரு புதிய வாசகப் பரப்பு உருவானதாகக் கொள்ளமுடியும். பிதரியை வாசித்து அதன் கட்டுமானத்தை, கருத்தைக் கட்டுடைத்த போக்கினை வாசக விமர்சனமாக அது இத் தீவிர வாசகப் பரப்பு ஏற்றுக்கொண்டது. படைப்பாளியை முற்றுமுழுதாக படைப்பிலிருந்து அந்நியமாக்கியது. ஆசிரியன் இறந்துவிட்டான் என்றது பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடு. இது ஒரு நவீன இலக்கியக் கோட்பாடாக சஞ்சரிக்க ஆரம்பித்த வேளையில் பதிப்பு முறையும் மாற்றம் கண்டது. ஆனாலும் அதுவே ஒரு அசுரப் பிறவியாக வளர்ந்து பதிப்பகத்தின் சர்வாதிகாரமாக உருவாகியிருப்பதாகச் சொல்லமுடியும். அதனால்தான் காலம் பதிப்பகத்தைத் தொடக்கினீர்களா?

தேடகத்தில் அன்று 20வயதில் ஆனந்த பிரசாத் நான் சந்தித்த நல்ல கலைஞன். காலம் ஆரம்பிக்கும்போது 100 டொலர் தந்து தானும் இருப்பதாக இணைந்தவர்;. அப்போது நான், ஆனந்தபிரசாத், செழியன். பின் ஆனந்தபிரசாத்தும் செழியனும் விலகிவிட்டனர். ஆனந்தபிரசாத்தின் கவிதைகளில் எனக்கு விருப்பம். மிக இலகுவான, நையாண்டியான, சந்தத்துடனான கவிதை. அதை தமிழ்நாட்டில் யாரும் வெளியிடப்போவதில்லை. அதனால்   சி.மோகனிடம் கேட்டு ‘அகதியின் பாடல்’ என்ற அவரது கவிதைப் புத்தகத்தை வெளியிட்டேன்.

இரண்டாவதாக மூர்த்தியினது புத்தகம். பின் மகாலிங்கத்தின் சிதைவுகள். காலம் 6 மகாகவி சிறப்பிதழாக செய்யதேன். பின் யாழ்ப்பாணத்தான் யாழ்ப்பாணத்தானைச் செய்கிறேன் என்றில்லாமல் இருக்க நீலாவணன் சிறப்பிதழ் செய்தேன். அவ்வேளை எஸ்.பொவிடம் நல்ல கட்டுரை ஒன்று எழுதித் தரும்படி கேட்டேன். அப்போது எஸ்.பொ அதை மித்ர பதிப்பகத்தின் ஊடாக புத்தகமாக போடுவதாகவும் குறிப்பிட்டளவு பணம் தரும்படியும் கேட்டிருந்தார். இவ்வாறாக ஆரம்பம் இருந்தது.

எனக்கு எப்பவுமே ஒரு பதிப்பகம் நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அது இன்னமும் சுமையானது. இந்த இலக்கிய வேலைகளால் நான் பெற்ற அனுபவம் நிறைய. இலக்கியத்தின் தீவிர பக்கத்தில் இயங்குகிறோம். வெளியிலும் மதிப்பில்லை. ஒரு பத்து பதினைந்து பேர் இலக்கியகாரராக ரொறன்ரோவில் இருக்கிறோம். நான் ஜீவனோபாயத்துக்காக வேலைசெய்த காலத்திற்கு கிட்டத்தட்ட 20 வருடமாக இயங்குகிறேன். ஒரு கிழமைப் பத்திரிகை நடத்தியிருந்தால் எத்தனைபேருக்கு என்னைத் தெரிந்திருக்கும், அது எவ்வளவு மோசமான பத்திரிகையாக இருந்திருந்தாலும்? இது மனவருத்தமல்ல. இயல்பைக் கூறுகிறேன்.

அவ்வாறே வீட்டிலும் மதிப்பில்லை. இது ஒரு வரமா சாபமா என்று தெரியாமல் ஒரு விடயம் நடந்துகொண்டே இருக்கிறது. இங்கு காலத்தில் எழுதும் ஒரு கவிஞன் கூறுவதுபோல் ‘நான்கு பக்கத்திலும் கடலால் சூழப்பட்டு’ என்பதாகத்தான் நிலமை இருக்கிறது. ‘கெழுறு பிடித்த கொக்கு மாதிரி’ என்ற பழமொழிபோல விழுங்கவும் ஏலாது துப்பவும் ஏலாது. நீங்கள் ஏன் விடியப்புறம் எழுந்து எழுதிக்கொண்டிருக்கறீர்கள் என யோசிப்பேன். இந்தவயதிலும் உங்களால் அதை விடமுடியாது இல்லையா? அதுதான். இலக்கியம் இல்லையென்றால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லையென்பது மாதிரி.


19. காலத்தை புலம்பெயர்ந்தவர்களின் பத்திரிகையாக நடத்துகிறீர்களா?

உண்மையில் எனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை. நாம் புலம்பெயர்ந்து இருப்பதால் அவ்வாறு எண்ணத்தோன்றும். ஆனால் நான் இதை ஒரு தமிழ் இலக்கியப் பத்திரிகையாகவே பார்க்கிறேன். தமிழ் இலக்கியப் பத்திரிகையிலும் ஒரு சிறு பத்திரிகையாகவே பார்க்கிறேன். ஈழத்து இலக்கியகாரர்களில் முக்கியமானவர்கள் என வாயால் சொல்லாது செய்கையால் காட்டவேண்டும்.  அதற்கு எல்லோரும் பார்க்கக்கூடிய இடத்தில் அவர்கள் எழுத்தை வரச்செய்தல்வேண்டும். எங்கள் படைப்புகள் நல்லதோ இல்லையோ இந்தியாவில் கிடைப்பது கடினம். இது இந்தியாவின் ஒரு அராஜகப் போக்கே தவிர வேறொன்றும் இல்லை. அங்கிருந்து படைப்புகள் இங்கே வரும். ஆனால் இங்கிருந்து படைப்புகள் அங்கே செல்வதில்லை. எடுத்துக்காட்டாக தெணியானின் படைப்புகள். தெணியான்பற்றி யாரும் பேசியது கிடையாது. தெணியானின் செயற்பாடுகள் பற்றி யாருக்கும் தெரியாது. தெணியானின் எழுத்துக்கள் செயற்பாடுகள் பற்றி ஜெயமோகனின் கட்டுரையோடு, வெங்கட் சாமிநாதனின் கட்டுரையோடு, அசோகமித்திரனின் கட்டுரையோடு இணைத்து நான் வெளியிடுகிறேன். அப்போது ‘ஓ இவர் ஒரு முக்கியமான படைப்பாளி அல்லது இல்லை’ என அறிகின்றனர்.

மகாகவியைப் பற்றி நான் வெளியிடும்போது, உங்கள் படைப்புகளோடு இணைத்து இந்தியாவில் வைத்து அச்சடித்து நான் தருகிறேன் பாருங்கள் என்கிறேன். வாயால் மட்டும் நாங்கள் திறம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் பெரிதாக எங்களை ஒதுக்கவில்லை.  சில மனக்குறைகள் இருக்கின்றன. அதாவது, ஈழத்தவர்களின் மொழி விளங்கவில்லை என்பது. கி.ரா. வின் இரண்டாவது கதையிலேயே எனக்கு அவரின் கரிசல் மொழி பிடிபட்டது. ஆனால் இன்றுவரையிலும்  ஈழத்தமிழ் கொஞ்சம் கடினமாது என்பது எரிச்சலூட்டுவாதாகும். இதைத் தவிர, கைலாசபதியை இன்றுவரை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். டானியலை ஒரு பகுதியினர் போற்றுகிறார்கள். தலித்தினுடைய முதல் எழுத்தாளர் என்கிறார்கள். மு. தளையசிங்கத்துக்கு பெரிய வாசக வட்டமும், அவரை ஒரு தத்துவவாதியாக ஏற்றுக்கொள்பவர்களும் அங்கே உள்ளனர். பாரதி, புதுமைப்பித்தனை மிஞ்சியவர் என்று கூறுபவர்கள் உள்ளனர். கைலாசபதிதான் தமிழ்மொழியில் சமுதாயத்துக்கும் மனிதனுக்குமான உறவை இலக்கியத்தில் விஞ்ஞானபூர்வமாக விளங்கிக் கொண்டவர் என்கின்றனர். தமிழ்நாட்டில்தான் கூறுகிறார்கள். இன்று சிவத்தம்பியை மிகப்பெரிய குருவாக ஏற்றுக் கொள்பவர்கள் உள்ளனர். இன்று சோபா சக்தியும் முத்தலிங்கமும் விற்பனையில் மிகப்பெரிய இடத்தில் உள்ளார்கள். இதிலெல்லாம் எங்களை ஒதுக்கியுள்ளார்கள் என்று எங்கும் காணமுடியாது.

திரும்ப திரும்ப என்னைக் காணும்போதெல்லாம் இது புலம்பெயர்ந்த இலக்கியம் இல்லை, இது தமிழ்நாட்டு இலக்கியம் என்போர் உளர். நான் எங்கும் இதை ஒரு புலம்பெயர்ந்த ஏடு என குறிப்பிடவில்லை. இது ஒரு தமிழ் இலக்கிய ஏடு. அவ்வளவே.

அந்தடிப்படையிலேயே நான் பார்க்கிறேன். ஆனால் நான் பிறந்த நாட்டின் எழுத்தாளர்கள் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எனக்கு வேறு கருத்துக்கிடையாது. சில வேளைகளில் நாங்கள் அவர்களை அறிந்திருக்கவில்லை. அதற்காக சில வேலைகளைச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் சிலதைச் செய்வது. நான் எஸ்.பொ.வுக்கு, ஏ.ஜே.க்கு, டொமினிக் ஜீவாவுக்கு, பத்மநாப ஐயருக்கு என இவர்களை அட்டைப்படமாக இட்டுத்தான் இந்தியாவில் இப்புத்தகங்களைச் செய்கிறேன். இப்பெயர்களை சிலவேளை இந்தியாவில் சிலர் கேள்விப்பட்டிருக்க மாட்டினம்.  புலம்பெயர்ந்து வந்து ஸ்காபுரோவுக்கோ, அல்லது மார்க்கத்துக்கோ ஒரு புத்தகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் ஒட்டுமொத்த தமிழ் என்றே பார்க்கிறேன்.


20. நாடகம், கூத்து இவற்றில் உள்ள உங்கள் ஆர்வம் பற்றிக் கூறுங்கள்!

உண்மையில் இவைபற்றி படித்ததோ, எந்தப் பின்னணியோ எனக்கு இருந்ததில்லை. பார்த்த அநுபவங்களே உண்டு. இங்கு ‘நிரபராதிகளின் காலத்தை’ இயக்கினேன். பின்னர் ஒரு அபத்த நாடகத்தை இயக்கினேன். அதுவும் வெற்றியாக வரும்போது தேடகம் நூலகம் எரிந்ததால் அது இடைநின்றது. அதன்பின் புராந்தகனைக் கொண்டு மகாலிங்கத்தின் ‘சிதைவுகள்’ வெளியீட்டின்போது ‘விட்டுவிடுதலையாகி’ எனும் நாடகத்தை அரங்கேற்றினேன்.

‘மனவெளி’ எனும் அமைப்பு எங்கள் வீட்டில்தான் உருவாகியது. இருந்தும் இரண்டாவது கூட்டத்தோடு நான் அங்கு செல்லவில்லை. மனவெளி நன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது நாடகத்திற்கானவர்கள் வெளிப்பட்டும், நாடகம் நன்றாகவும் போய்க்கொண்டிருந்தது. இருந்தும் நான் அதைவிட்டு விலகினேன்.

நாட்டுக் கூத்துபற்றி சிறுவயது முதலே வாசிப்பறிவும், பார்த்தறிவும் எனக்கிருந்தது. அதிலிருந்து இங்கு நடைபெற்ற ஒரு மனிதஉரிமைகள் மாநாட்டில் இலங்கையில் இருக்கும் இசையை மையமாக வைத்து நாட்டுக் கூத்து வடிவில் ஒரு நாடகம் செய்தேன். அது மிகவும் தோல்வியடைந்தது. அதன்பின் இலங்கையில் ஒரு அண்ணாவியாரைத் தொடர்புகொண்டு அங்கிருக்கும் நாட்டுக் கூத்து இராகங்களைத் தொகுத்து கொஞ்ச காசு செலவுசெய்து தென்மோடி நாட்டுக்கூத்தில் இருக்கும் பா வகைகளை வைத்து ஒரு சிடி வெளியிட்டேன். அதன் பின் ஒரு பெரிய கூத்து, கட்டபொம்மன் கூத்து, நான் நினைக்கிறேன் ரொறன்ரோவில் நடைபெற்ற தென்மோடி நாட்டுக்கூத்தில் மிகமுக்கியமானது, போட்டேன். இவை இரண்டும்தான் நான் கூத்தென்ற வகையில் செய்தவை.

விருப்பிருக்கிறது ஆனால் அவை இங்கிருக்கும் சூழுலில் பெரும் வேலைகள். கூத்தென்பது மிகவும் கடினமான விடயம். எங்கள் ஊர்களில் ஆடியில் கூத்தென்றால் தை மாதத்திலேயே கொப்பி போடுவர்கள். ஆறு மாதம் பழகுவார்கள். கூத்தென்றால் ஆடவேண்டும், பாடவேண்டும். அத்தோடு பி;ற்பாட்டு. இசையும் அதனுள் ஒரு கதையும் இருக்கவேண்டும். ஆனால் இங்கே அவை கடினம். நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் றெஜி, அன்ரன் போன்றவர்களும் கூத்தைச் செய்தார்கள். என்னைப் பொறுத்தளவில் அவை வெற்றியானவை. எனினும் இங்கே இவை எடுபடாது. ஒன்று, இது புதிய தலைமுறை. மற்றது,  கூத்து கத்தோலிக்க பின்னணியுள்ள கலை. அதை இங்கே வந்து கொக்குவில், கோண்டாவில் மக்களுக்கு போட்டுக் காண்பிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் கூத்துப்பற்றி எந்தப் பரிச்சயமும் இல்லாதவர்கள். கருநாடக இசையைக் கேட்பதென்றால் கொஞ்சமாவது பரிச்சயம் வேண்டும். அவ்வாறே நாட்டுக் கூத்தும். கேட்ட பரிச்சயம் இருக்கவேண்டும். ஆனால் இவற்றை தொடக்கி வைத்தது என்றளவில் எனக்கு ஒரு திருப்தி இருக்கிறது.21. நீங்கள் ஆரம்பகாலத்தில் வாசித்ததற்கும், இப்போது வாசிப்பதற்குமிடையில் தமிழ் இலக்கியப் Nபுhக்குக் குறித்து என்ன வேறுபாடுகளைக் காண்கிறீர்கள்?

ஒரு மாற்றமும் இல்லை. முதலாவது, வெற்றியென்றால் அது வாசிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அன்று ஜானகிராமனாயிருப்பினும், இன்று ஜெயமோகனாயிருப்பினும், வெற்றிகரமான எழுத்தாளர்கள் யாரின் பின்னணியைப் பார்த்தாலும் அவை வாசிக்கக் கூடியதாக இருப்பதே முக்கியம். எவ்வளவு புதிய புதிய தத்துவங்கள் எல்லாம் அது பின்நவீனத்துவமோ அல்லது அமைப்பியலோ தமிழுக்குள் வரலாம் போகலாம். அது பிரச்சினை அல்ல. சாருநிவேதிதாவின் சீரோ டிகிரியை பின்நவீனத்துவ நாவல் என்கிறோம். அது பிரச்சினை அல்ல. ஆனால் அது வாசிக்ககூடியதாக இருத்தல் வேண்டும். ஆழமும் விரிவும் இருக்கவேண்டும். வாசிக்கக் கூடியதே முக்கயம். பின்னரே ஆழம், விரிவு எல்லாம்.

ஒருவர் கூறினார் முன்னர் சுஜாதாவின் எழுத்துப் பிடித்தது, பின்னர் அவர் எழுத்து பிடிக்கவில்லையென்று. அவ்வாறே சாருவினதும். இதிலிருந்து என்ன கிடைக்கிறது?

நான் இதனுள் சுஜாதாவை சேர்க்கவில்லை. ஏனெனில் அவர் விஞ்ஞானம் தெரிந்த ஒரு சுவாரசியமான எழுத்தாளர். ஆனால் அவர் எழுதும்போது நிறையப் பேருக்கு தன் எழுத்துப் போகவேண்டும் என நினைக்கிறார் என்பது என் அபிப்பிராயம். அந்த நினைப்பு ஒரு எழுத்தாளனுக்கு வந்து விட்டால் அங்கே ஆத்மார்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. அதோடு ஆழமும் போய்விடுகிறது. ஒரு வாசகனாகச் சொல்கிறேன், எழுத்தாளனாக அல்ல.

ஆனால்; சாருநிவேதிதாவை நீங்கள் எஸ். ராமகிரு~;ணனுடன் ஒப்பிட முடியாது. சாரு ஒரு சுவாரசியமான எழுத்தாளர். இது எனது தனிப்பட்ட பார்வை. சாருநிவேதிதா ஆங்கிலம் தெரிந்து நிறைய வாசிக்கிறவர். ஆனால் ஜெயமோகனையோ, ராமகிரு~;ணனையோ அல்லது நாஞ்சில் நாடனையோ வாசிக்கும்போது இருக்கும் ஆத்மார்த்தம் வேறு. அது வந்து நீண்டகாலம் நின்றுபிடிக்கக் கூடியது. உடனடியாக சுவாரசியத்தைத் தரலாம். ஆத்மார்த்தம் அந்த எழுதில் இல்லாவிட்டால் அது நின்றுபிடிக்க முடியாது. இப்போ புதுமைப்பித்தனைக் கூறலாம். அவர் இவ்வளவு காலத்தின் பின்னும் நின்றுபிடிப்பதற்கு அந்த எழுத்துநடை மட்டுமல்ல, அந்த ஆத்மார்த்தமே காரணம். பாரதி ஏன் நின்றுபிடிப்பதற்குக் காரணமென்னவென்றால், மொழியின் இலகுநடை மட்டுமல்ல, அதிலுள்ள ஆத்மார்த்தமே. பொய்யானவை சிறிதுநோரம் நின்று பிடிக்கலாம். பின் போய்விடும்.22. இங்கேயுள்ள இன்றைய வாசகர்கள் பற்றி கூறுங்கள்.?

இங்கே பத்திரிகை, புத்தகம் விற்பதென்ற அளவில் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் யாரோ புதிது புதிதாக ஓரிருவர் வந்துகொண்டே இருப்பார்கள். நான் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கையில்  இரு இளைஞர்கள் வருவார்கள். அசோகமித்திரன் புத்தகம் இருக்கிறதா என்று கேட்பார்கள். ஆக இப்படித்தான் வலு குறைவாக, காலம் முழுக்க இருக்கிறது. தமிழ் பற்றி யோசிக்கும்போது எப்போது நாங்கள் மேன்மையடைந்திருந்தோம். எப்போது? ஆனால் நம்பிக்கை இருக்கிறது. ஏதோ புதுமை நடந்தது போல் ஒரு எட்டுப்போர் வருமிடத்தில் நாலுபேர் வராதுபோனால் யாரோ புதியவர்கள் வந்து செல்கிறார்கள். அவர்களால் நம்பிக்கை வருகிறது.23. ஈழப்போராட்டம் பற்றி………..

எங்கள் ஊரில் ஒரு பழமொழி ஒருவர் சொல்வார்: ‘தம்பி வருமென்றால் பயமாக்கிடக்கு. வந்துவிட்டால் சுகம்.’  என்னவென்றால் பைத்தியம். அவ்வாறே மே 18ற்குப் பின் தோன்றுகிறது மனநிலை. எனக்கு கூத்துபற்றிய நினைவுதான் வருகிறது. கூத்தில் வந்து பார்த்தீர்களானால் ஒவ்வொருவராக வந்து சேர்வார்கள். 11 மணிக்குத்தான் நிறையும். திடீரென மங்களம் பாடினால் எல்லோரும் எழுந்து சென்றுவிடுவார்கள். எங்கள் போராட்டமும் அப்படித்தான் இருந்துள்ளது. கூத்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மங்களம் பாடி முடிவடைந்துள்ளது. இடியும் புயலும் வந்து கொட்டைகையில் நடைபெற்றுக்கொண்டிருந்த கூத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டது. சனமெல்லாம் சிதறி ஓடிவிட்டது. நடித்துக் கொண்டிருந்தவர்களும் தங்கள் ஒப்பனை கரையக் கரைய ஓடிவிட்டார்கள். ஆனால் கூத்து திரும்ப போடத்தான் வேணும் வேறவகையில. மனிதன், தமிழன் என்ற வகையில் இது ஒரு கொடுமையான நிகழ்வு. எங்களுக்கு எங்கள் இயக்கப்பொடியள் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக ஆயுதங்கள் மாத்திரமல்ல. அந்த அகங்காரம். ஆயுதங்கள் வந்தவுடன் எங்கள் பெடியளுக்கு வந்த அகங்காரம். தோல்விக்கு அது காரணமல்ல. தோல்விக்கு பல காரணங்கள். இன்று ஒரு கையறுநிலையில் உள்ளோம். எத்தனை இழப்புகள்! எங்கள் கிராமத்தை எடுத்துப்பார்த்தால் எத்தனை விதவைகள்! எத்தனை பேர் கடலில் சென்று காணாமல் போனார்கள்!24. வன்னி இலக்கியம் என்ற கருத்தாக்கமொன்று உருவாகி வந்துகொண்டிருந்தது. கவிதை மைய உணர்வு வெளிப்பாட்டு ஊடகமாக இருந்தது. இந்தக் கவிஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிலாந்தன் நண்பன். கருணாகரன் ஒரு நவீன எழுத்தாளன். புதுவை இரத்தினதுரை மரபுசார்ந்த சந்தங்கள் கொண்ட எழுத்தாளன். அவரின் சில வரிகளை இரசித்துள்ளேன். ஆனால் கருணாகரன் நவீன கவிதையில் முக்கியமானவர். இன்றைக்கு அவர்கள் மிகப் பெரிய ஒரு வற்றாத கவலையையும் சூழலையும் அநுபவித்து வருகின்றனர். அவர்கள் குறித்து பெரிய விமர்சனங்களையோ சரி பிழைகளையோ சொல்;வதற்குரிய மனநிலை இப்போது இல்லை. பெரிய அவலப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்துள்ளார்கள். அவைபற்றி நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை.25. பொதுவாக அலசப்பட் ஒரு கேள்வி. இவ்வளவு அழிவு தமிழனத்துக்கு நடந்தும் அது பற்றி ஒரு படைப்பும் வெளிவரவில்லையே என்பது. 

இல்லை, அது வரும். அங்கிருந்தே நிச்சயமாக வரும். அதற்கான சூழல் தற்போது இல்லை எனலாம். ஆனால் நிச்சயமாக ஈழ அழிவுகள் குறித்த படைப்புகள் வெளிவரும். ஆனால் முப்பது வருட போராட்டம்பற்றிய படைப்புகளே இன்னமும் முழுமையாக, பெரிதாக வெளிவரவில்லை. சோபா சக்தியைப் பார்த்தால் போராட்டம் சம்பந்தமான படைப்புகள் பெரிதாக வரவில்லை. சோபா சக்தி அவற்றுள் தனக்கு சாதகமானதை கையாண்டு படைத்துள்ளார். விடுதலைப் புலிகளின் காலம் முடிவடைந்துள்ளது. வி.புலிகளை அழிப்பதற்கு எத்தனைவிதமான விடயங்களைப் பாவித்திருக்கிறோம். நாங்கள் தலித்தியம் பேசுவது வி.புலிகளை அடிப்பதற்கு, நாங்கள் பெண்ணியம் பேசுவது விடுதலைப் புலிகளை அடிப்பதற்கு. தனிப்பட்டவகைப் பாதிப்புகளை மனதில் வைத்துக்  கொண்டு நாங்கள் வி.பு எதிராகப் பேசுவதால் முற்போக்கு என்று காட்டிக்கொள்கிறோம். இவையெல்லாம் மிகவும் கவலைக்குரிய விடயங்கள். இவர்கள் விடுதலைப் போராட்டத்திலும் இல்லை. தாங்கள் கூறும் தலித்தியத்திலும் நம்பிக்கை இல்லை. இவர்களின் முதல் எண்ணம் புலி எதிர்ப்புத்தான். நானும் எனது வரலாற்றில் புலிக்கு சார்பாக நடந்ததில்லை. ஆனால் தமிழரசுக் கட்சி பாரம்பரியத்தில் வந்தனான். தமிழ் மக்கள் விடுதலை சம்பந்தமாக நேசிக்கும் ஒருவன். புலிகள் இந்த விடயங்களில் அதாவது தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றில் இவைபற்றிக் கூறுபவர்களைவிட நன்றாகத்தான் இருந்துள்ளார்கள். அது கண்கூடாகத் தெரிகிறது. நிறைவாக என்றில்லாவிட்டாலும் இதுபற்றி பேசிய புலம்பெயர்ந்தவர்களைவிட நன்றாகத்தான் செய்துள்ளார்கள். முக்கியமான வி~யம் என்னவென்றால், தோல்வி வெற்றி என்றில்லை, போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தங்கள் மக்களை நேசிக்கவில்லை. காந்திக்கும் பிரபாகரனுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் மிகவும் நேர்மையானவர்கள், சரியான கடுமையானவர்கள். ஒருவரிடம் ஆயுதம் இருந்தது. மற்றவரிடம் அது இல்லை. காந்தி ஆயுதத்தை எடுக்காது விட்டதற்கு, அது வெள்ளையரை எதிர்ப்பதைவிட தமது மக்களுக்கே திரும்பக்கூடும் என்ற பயத்தில்தான் என்று நான் நினைக்கிறேன்.

வேறுபாடு என்னவென்றால் ஈழத்தில் வி.புலிகளோ ஏனைய இயக்கங்களோ எந்த மக்களுக்காகப் போராட முற்பட்டார்களோ அம்மக்களை நேசிக்கவில்லை. நேசித்திருந்தால் போராட்ட வடிவம் மாறுபட்டிருக்கும்.

ஜெயமோகனில எனக்கு பிரியம் அதிகம். தமிழில் மிகமுக்கியமான எழுத்தாளர். ஆனாலும் அவரின் பெரும்பாலான கொள்கைகளில் எனக்கு உடன்பாடில்pலை. நான் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ வாசித்து அழுதேன். விஷ்ணுபுரமும் அவ்வாறே.  பி.தொ.நி.குரலும், ஏழாவது மனிதனும் எனக்கு மிகவும் பிடித்தவை. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. அடிக்கடி நான் ஜெயமோகனையும் சு.ரா.வையும் கூறுவதால் சிலர் கோபப்பட்டிருக்கிறார்கள். எனது வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த ஒருவர் திடீரென வெளியேறிய வேளையில், நான் விஷ்ணுபுரத்தை வாசிக்கும்படி வற்புறுத்தியதால் அவர் வெளியேறியதாக நகைச்சுவையாகக் கதையை கட்டிவிட்டார்கள். அவ்வளவுக்கு எனக்கு ஜெயமோகனின் எழுத்துப் பிடிக்கும். ஆனால் சு.ரா. இருந்திருந்தால் ஈழப்பிரச்சினை தொடர்பில் ஜெ.மோ வின் கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்.

ஒரு படைப்பாளிக்கு கட்சி, தேசம், மொழி போன்றவை முக்கியப்பட்டால் அவன் இலக்கியத் தரத்தில் சிறிது குறைந்தே போவான். நான் உட்பட. நீங்கள் ஏதாவது ஒன்றுக்கு கட்டுப்பட்டீர்களோ அங்கே குறைவு வந்துவிடும். தளையசிங்கம் மகத்தானவர். ஆனால் இறுதியில் வந்து சர்வோதயத்தோடு இணையும்போது திடீரென இவர் யார் என்னை அங்கே விடுவதற்கு என வரும். ஆனால் சு.ரா. இலங்கையில் இந்தியன் ஆமியின் கொடுமை நடக்கும்போது முதல்தடவையாக தனது பத்திரிகையில்தான் இந்தியன் ஆமியின் கொடுமைபற்றி வேறு புனைபெயரில் எழுதினார். அவருடன் இருந்த ஒருவர் கூறினார், அவர் தனித்தவர் பிடிபட்டிருந்தால் நொருக்கியிருப்பார்கள் என. அவர் தன்னை இந்தியனாகவோ, தமிழனாகவோ உணர்பவர் அல்ல.இலக்கியத்தோட்டம் பற்றி கூறுவீர்களா?26. இலக்கியத்தோட்டம் பற்றி

இலக்கியம் தொடர்பாக நல்ல விடயங்கள் நடைபெற்றால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் பின்நிற்பதில்லை. இலக்கியத்தோட்டத்தில் முத்துலிங்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. அதில் நானும் ஒருவன். அது இதுவரை செய்த பணிகள் தமிழுக்கு முக்கியமானவை. அதில் நானும் இருப்பதில் பெருமைப்படுகிறேன். இதைவிட அது பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அதிகாரமில்லை. அது ஒரு நல்ல முயற்சி.27. இது ஒரு நீண்ட நேர்காணலாக இருக்கப் போகிறது. முழுமையாக ஒருவரின் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது கூர் இதழின் விருப்பமாகும். அதனால் ஏற்படும் சிரமங்களைத் தாங்க அது தயாராகவே இருக்கிறது. காலம்பற்றி, காலம் தொடர்ந்து வெளிவருவது குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

ஆறு காலம் இதழ்கள் சி.மோகனின் வயல் அச்சுக் கூடத்தால் வெளிவந்தன. திடீரென இந்தியன் ஆமியின் பிரச்சினையால் மோகனையும் தொடர்புகொள்ள முடியாத சூழல் வந்தது. இதழை நிறுத்தவேண்டிய நிலை. இங்கே வெளியிடுவதென்றால் மிகவும் செலவாகும். மகாகவி இதழ் ஆயத்தம் செய்துவிட்டிருந்தேன். வெளியிடமுடியாத சூழலில்தான் தாம் சிவதாசன் முன்வந்தார்.

அவர் ஒரு வீடு விற்பனை முகவராக அறியப்பட்டாலும் இலக்கிய உலகில் அவரின் பங்களிப்பு முக்கியமானது. ‘யாழ் நூ’லை வெளியிட்டமையும், தளையசிங்கத்தின் முழுப்படைபுகளையும் தொகுப்பாகக் கொண்டுவந்தமையும் மறக்கப்பட முடியாதன. அவர் அவற்றில் நட்டமடைந்திருக்கலாம. ஆனால் அவ்விரண்டு புத்தகங்களின் வெளியீடும் முக்கியமானவை. அவர் எனது நண்பரும் கூட. அப்பொழுது அவரே ‘செல்வம் எனக்கு மைக்கு காசு தாருங்கள், நான் அச்சடித்துத் தருகிறேன்’ என்றார். நான் கைவிடவேண்டிய சூழலில் எனக்குக் கைதந்திருந்தார்.

பின்னர் ஜோர்ஜ்ஜிடம் ஒன்று செய்தேன். பின்னர் தேடகம் இளங்கோவிடம் ஒன்று செய்தேன். இவ்வேளையில்தான் மாற்கு மாஸ்ரர் பற்றி ஒரு இதழ் வெளியிடுவதற்காக டிஜி கருணாவிடம் சென்று கதைத்தபோது, ‘நான் எல்லா உதவியும் செய்து தருகிறேன். கொஞ்சம் காசு தாங்கோ’ என்று அதை வெளியிட உதவி செய்தார். கருணா ஒரு நல்ல கலைஞன். மட்டுமில்லை. மாற்கு மாஸ்ரரின் மாணவனும். ஐயர் கூறுவார். அந்தக் காலம் இதழிலிருந்து அது வேறு ஒரு பக்கத்தை எடுக்கிறது என்று. அவ்விதழ் மிக முக்கியமானது. 2000ல் அச்சிறப்பிதழ் வெளிவந்தது. இன்றுவரை மாற்கு மாஸ்ரர் பற்றிய நல்ல ஒரு பதிவாக உள்ளது அது.

இவ்வளவு வேலைப்பளுவில் சோர்வுகள் வரும்போது ஐயரையே யோசிப்பேன். அவர் எனக்கு ஒரு பெரிய பக்கபலம். எனக்கொரு முன்னோடி. அவரளவிற்கு செயலாற்றமுடியாது. அவர் எதையும் எழுதவில்லை. ஆனால் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அவரைக் கழித்துவிட்டு எதையும் காணமுடியாது. எனக்குப் பின்னால் இருந்து இயங்கும் ஒருவர் அவர். இங்கே நான் காலம் செய்வதற்கு எனக்கு உறுதுணையாக இருப்பவர் மகாலிங்கம். அவர் ஈழத்தில் ‘பூரணி’ என்ற சஞ்சிகையொன்றை நடத்தியிருந்தார். தளையசிங்கத்தின் பரம்பரையில் வந்தவர். இங்கு நடக்கும் விடயங்களில் எனக்கு அவரும் செழியனும் தான் துணை. செழியன் மூர்த்தியூடாகக் கிடைத்த கலை இலக்கியம் தாண்டிய ஒரு ஆத்மார்த்மமான நண்பர். நான் எனது பெயரை இட்டாலும் இவர்கள்தான்; காலம் இதழின் பின்  இருப்பவர்கள்.


000000

கூர் 2010Monday, December 22, 2014

பூக்கள் (உருவகக் கதை)

பூக்கள்


மல்லிகைக் கொடி சிரித்தது.

முற்றத்து மல்லிகைப் பந்தரிலே என்றைக்குமில்;லாதவாறு பூக்கள் இன்றைக்கு கொட்டிக்கிடக்கிறது. அந்த வைகறை வேளையிலே வீட்டின் தலைவி வந்து மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டு போகிறாள். இன்னும் சற்று நேரத்திலே அவளுடைய சுருண்ட கார்க் கூந்தலிலே அவை சரமாகத் தொங்கும். தங்கத்தில் இயன்ற அவளது மென் தோள்களிலும் சரிந்து கிடக்கும். இதை எண்ணுகிறபோது மல்லிகையின் மலர்ச்சி இன்னும் அதிகரிக்கிறது.

அதோ, கிணற்றடித் தோட்டத்திலே ஆயிரக்கணக்காக நிறைந்து கிடக்கின்றன கனகாம்பரப் பூக்கள். கனகாம்பரச் செடியின் முகத்திலும் மலர்ச்சி. தங்கச் சிறு ரதமாய் அசைந்துவந்த அந்த வீட்டின் பிஞ்சுக் குழந்தை, அதன் மஞ்சள் வர்ணத்தின் ஆசை மேலீட்டால் ஏற்பட்ட ஆவலோடும் கைகளை நீட்டிப் பறிக்கிறது.

தெய்வத்தின் கைகளிலே கிடக்கிற நினைப்பு அவைகளுக்கு. கனகாம்பரத்துக்கு மலர்ச்சி இன்னும் மேலோங்குகிறது.

ஆனால்…

அதோ, சிவந்த ஓடுகளுக்கு மேலாகத் தலை நீட்டி நிற்கின்ற மாமரத்தின் முகத்திலே இத்தனை ஆரவாரமான மலர்ச்சியைக் காணவில்லை. அதன் கொம்புகளிலும்தான் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. ஆயினும் அடக்கமான புன்முறுவலைத் தவிர வேறு ஆரவாரத்தைக் காணவில்லை.

மாமரத்தைப் பார்க்கிறபோது மல்லிகைக்கும் கனகாம்பரத்துக்கும் சிரிப்பு வருகிறது. மல்லிகைப் பூவை தலைவி தீண்டுகின்றாள், வண்டுகள் மொய்க்கின்றன, காண்போர் விரும்புகின்றனர். அதேபோல் கனகாம்பரப் பூவை குழந்தை விரும்புகின்றது. நறுமணமும் செந்தேனும் இல்லாவிட்டாலும் அதனுடைய அழகை யாரும் குறைசொல்லிவிட முடியாது. ஆனால் மாம்பூவினுக்கோ அழகுமில்லை, நிறைவான தேனுமில்லை. மொத்தத்தில் மனித வர்க்கத்தாலும், தேனி வர்க்கத்தாலும் புறக்கணிக்கப்பட்டுவிட்ட பூ என்பது மல்லிகையினதும் கனகாம்பரத்தினதும் எண்ணம். அதன் விளைவே அந்தச் சிரிப்பு.

மாமரம் அந்தச் சிரிப்புகளைப் பொருள்செய்யவே இல்லை. பழைய புன்முறுவலுடன் அமைதியாக இருக்கின்றது அது.

அன்றைய காலை மறைந்து மாலை மலர்ந்தது. மல்லிகைப் பூக்கள் முற்றத்திலே கொட்டிக் கிடக்கின்றன. கனகாம்பரப் பூக்கள் வாடி உதிர்ந்துவிட்டன. இவற்றின் இடத்தை நிரப்புவதுபோல் விண்ணிலே பூத்த நட்சத்திரப் பூக்கள் இந்தக் காட்சியைக் கண்டன. அவற்றின் இதயங்களிலே அற்ப ஆனந்தமும் சிறுமை எண்ணமும் கொண்டிருந்து மடிந்துவிட்ட அந்தப் பூக்களைப் பார்க்க அவ்வச் செடிகளின்மீது அனுதாபம் பூத்தது.

ஆனால், அதேசமயத்தில் மாமரத்தின் முகத்தில் மலர்ந்திருக்கின்ற மலர்ச்சிக்கும் காரணம் தெரியவில்லை. ஏன் இந்த அடக்கமான, அமைதியான சிரிப்பு?

வெள்ளி நிலா பவனிவரத் தொடங்கியது. தமது சந்தேகத்தை அவை கேட்டன.

 வெள்ளி நிலா பதில் கூறியது: ‘பூக்களின் சிறப்பு அவற்றின் மணத்திலோ, நிறைந்துள்ள தேனிலோ அல்லது மனங்கவரும் வனப்பிலோ அல்ல, தாம் நிலையாகி தம்முடைய இனத்தையும் நிலைப்பித்துவிட தாய்மைப் பொலிவு கொள்ளுகின்றனவே, அதிலேதான் தங்கியுள்ளது. மாம்பூவின் அல்லிகள் உதிரலாம். ஆனால் பூ நிலையாக இருந்து காயாகி, கனியாகி, விதையாகி ஒரு மரமாகவே விருத்தியாகிவிடும். பூவுக்கு இதுதான் உண்மையான பெருமையாக இருக்கமுடியும். மாமரத்தின் அடக்கமான மலர்ச்சிக்கு இந்த நினைப்பே காரணமாகும்.’

காரணத்தை அறிந்த வானப் பூக்கள் ஒருமுறை கண்ணைச் சிமிட்டிக்கொண்டன.

000

ஈழநாடு வாரமலர், 24.02.1969

Monday, December 15, 2014

நினைவேற்றம் முனை 3


நினைவேற்றம்
-தேவகாந்தன்


பனி  புகட்டினால், மழையிலே நனைந்தால், வெய்யில் பட்டால், தூசிக்குள் நின்றால் என எதற்குமே தும்மல் வந்து, தடிமனாக்கி, காய்ச்சலும் இருமலும் பிடித்துவிடுகிற ஒரு நோஞ்சான் பிள்ளையாகவே என் சின்ன வயது இருந்திருக்கிறது.

இது காரணமாகவே அண்டை அயல் வீடுகளிலே போய் விளையாட நான் அனுமதிக்கப்படவில்லை என் பெற்றோரால். சாதிபற்றிய காரணம் பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் தரத்ததாகவே இருந்தது.
பாடசாலை மெய்வல்லுநர்ப் போட்டிகளில் பங்குகொள்வது அது தேடிச் சென்று பங்குபற்றுகிற சூழ்நிலையில் அமையாததில் அதற்கு நான் அனுமதிக்கப்பட்டேன். இருந்தும் பத்து வயதுவரை என்னால் பெரிதாக எதனையும் செய்யமுடியவில்லை, இந்த வருத்தக்கார உடம்பு இருந்த காரணத்தால்.

இந்தா, இந்தமுறை விளையாட்டுப் போட்டியில் யூனியர் பிரிவில் சம்பியன் ஆகாவிட்டாலும்,இவனுக்கு எப்படியும் நூறு யார் ஓட்டத்திலோ, நீளம் பாய்தலிலோ முதலாம் அல்லது இரண்டாம் பரிசுகள் கிடைத்துவிடும் என்றிருக்கிற நிலையில், விளையாட்டுப் போட்டியிலன்று நான் சுகவீனமாகி எழும்பமுடியாது கிடந்த சம்பவங்கள்தான் என் வாழ்வில் அதிகமும் நேர்ந்திருக்கின்றன.

இவ்வாறு அடிக்கடி நோய் பிடித்துவிடும் உடம்பைக்கொண்ட எனக்கு படிப்புக்கூட அவ்வளவாக வரவில்லை. பள்ளிக்கு ஒழுங்கு குறைவாய் இருந்த காரணத்தோடு,எட்டு பாடங்களில் சராசரி ஐந்து ஆறு பாடங்களுக்கு மேல் என்னால் பரீட்சைக்குத் தோற்ற முடியாதே இருந்து வந்தது. இதனால் இருபத்தைந்து மாணவர்களைக் கொண்டிருந்த எனது வகுப்பில் என்னால் பத்துக்குக் கீழே இறங்கவே முடியவில்லை.

தவணைப் பரீட்சைகள் முடிந்ததும் பெரும்பாலும் லீவு வரும் எங்களுக்கு. இந்தக் காலத்தில் வீட்டுக்கு வரும் தெரிந்த மனிதர்கள் கேட்கிற கேள்வி பெரும்பாலும் ‘உங்கட மோன் இந்தமுறை எத்தினையாம் பிள்ளை?’ என்பதாக இருக்க, மிகவும் மனச் சங்கடத்தோடேயே என் தாய் பத்தோ, பதினொன்றோ, பன்னிரண்டோ என்பதைச் சொல்வாள். ஆயினும் என்மீது எந்த மனக்குறையையும் அவள் காட்டாத அளவுக்கு அவளுக்கு விளக்கம் இருந்தது. வருத்தக்காரப் பிள்ளையை பெற்று வைத்துக்கொண்டு அது  நன்றாகப் படிக்குதில்லையே என்று எப்படி கடிந்து  கொள்ளமுடியும்?

இந்தளவில் அந்தப் பகுதியிலே மூன்றாவது வீடாக எங்கள் வீட்டுக்கு வானொலி வந்தது. சிமென்ற் என்ற பெயருடைய ஒரு ஜேர்மன் வானொலி. பெரிதாகவும், கம்பீரமாகவும் இருந்தது. அதன் ஒலித் திறனும் அதிகம், ஊரே கேட்குமளவு தோனி. துல்லியமாய் இசையை இழுக்கும் வலிமையும் அதிகம். பாதிப்  பனை உயரத்தில் கட்டிய ஏரியலிலிருந்து காற்று வளம்மாறி வீசினாலும் ஒலியலைகளை வல்லபமாய் உள்ளிழுக்கக்கூடிய வானொலி அது.  அப்போது அதன் விலை முந்நூற்று அறுபது ரூபா. ஆயிரம் ரூபாவுக்கு ஒரு பாதிப் பழைய கார் அந்தக் காலத்தில் வாங்கமுடியும்.

காலையில் பத்து மணியிலிருந்து பதினொரு மணிவரையும், மாலையில் மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரையும் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பின் நேரம் முழுக்க சினிமாப் பாடல்களும், இசையும் கதையும், வானொலி நாடகங்களும்தான் இடம்பெறும். காலையிலிருந்து இரவு பத்தரை மணிவரை இடம்பெறும் இலங்கை வானொலியின் தேசிய சேவை ஒலிபரப்பில்தான் செய்திகளும், கர்நாடக இசையும், வீணை வயலின் போன்றவற்றின் இசை நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகின.

நாளுக்கு ஆறு மணிநேரமாவது வீட்;டில் வானொலி அலறாத நாளில்லை. சதா அதையே வைத்து முறுக்கிக்கொண்டிருக்கும் என்னை ஆதரவோடுதான் அம்மா,‘போய்க் கொஞ்சநேரமெண்டாலும் படி ராசா’ என்பாள். எப்படிப் படித்தென்ன? பத்துக்கு கீழே என்னால் இறங்க முடியாமலேதான் இருந்தது.
படிப்பும் அப்படி, விளையாட்டும் அப்படி என இருந்த பிள்ளையாயினும் அடிக்கடி நோய்வாய்ப்படுகிற பிள்ளையை யார்தான் மிகவும் கண்டிப்பாக நடத்திவிடுவார்கள்? நான் என் பாட்டிNலுயே நேரத்தைப் போக்காட்டினேன். ஆனாலும், விளையாட்டுமில்லாமல், படிப்பும் இல்லாமல் நேரத்தை எப்படித்தான் போக்காட்டிவிட முடியும்?

அவரவர்க்குமான சந்தர்ப்பங்கள் அமைந்துவரும் என்று சொல்வார்கள். எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. அதை அவரவரும் பயன்படுத்திக்கொள்கிற விதத்திலேதான் எதிர்காலம் பெரும்பாலும் அமைவதாக நான் கருதுகிறேன்.
பத்து வயதுவரை விளையாட்டிலும் ஈடு படாமல், படிப்பிலும் திறமையைக் காட்ட முடியாமல் சதா நோய் பிடித்த பிள்ளையாக இருந்த நான், என் எதிர்காலத்தை சீரமமைப்பதற்காய் எனக்கு அமைந்த சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன் என்றே நினைக்க இப்போது தோன்றுகிறது.

எங்கள் கடை முன்பகுதியிலே ஒரு பெரிய நீண்ட ‘வார் மேசை’போடப்பட்டிருந்தது. சாமான் கட்டுவதற்காக ஊரிலிருந்து  வாங்கப்பட்ட பழைய சஞ்சிகைகள், பத்திரிகைகளெல்லாம் இந்த வார் மேசைக்குக் கீழேதான் சாக்குகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அவையெல்லாவற்றையும் வாசிப்தற்கானவர்கள் அப்போது அங்கே இருந்திருக்கிறார்கள் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாக வரும்.

இதை அதிகமும் வாசித்தவர்கள் பெண்களாகவே இருந்திருப்பர் என்றும் அவர்கள் அக்காலத்தில் பேசிய பேச்சுக்களிலிருந்து ஒரு அனுமானத்துக்கு வரமுடிந்திருந்தது. வானொலி இல்லை, குடும்பங்களில் பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டுமென்ற பண்பாட்டுத் தளை, படலைகளில் நின்று பேசுவது, வேலிகளில் நின்று பேசுவது அநாகரிகமென்ற குடும்பக் கட்டுப்பாடுகள் யாவும் அவர்களுக்கான அந்த வாசிப்பு நிலையை உருவாக்கி வைத்திருக்கலாமென்று இன்று என்னால் நினைக்க முடிகிறது.

ஆனால் அன்று இவைபற்றி நான் யோசிக்க தேவையிருக்கவில்லை. என் பொழுதுபோக்கிற்காக ஒருநாள் எதிர்பாராதவிதத்தில் நான் ஒடுங்கிய இடம் இந்த பழைய சஞ்சிகைகள்தான். கல்கி, கலைமகள்,குமுதம், ஆனந்தவிகடன், குண்டூசி, பேசும்படம், கல்கண்டு, அம்புலிமாமா என படங்களும், கதைகளும், நகைச்சுவைத் துணுக்குகளும் மெல்ல மெல்லமாய் என் ஆதர்~மாகின. நான் வாசிக்க ஆரம்பித்துக்கொண்டிருந்தேன். இந்த நிலையிலேதான் வார் மேசையின் கீழ்க் கிடந்த பழைய சஞ்சிகைச் சாக்குகளை அவிழ்த்து தேடலில் இருந்த எனக்கு ஒரு பழைய மொத்தப் புத்தகம் கையில் கிடைத்தது. அதன் முன்பகுதி பக்கங்கள் சில இல்லாமலிருந்தன. எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் அதில் ஆறு அத்தியாயங்கள் இருந்திருக்கவில்லை. அது என்ன நூல் என்பதோ, பெயர் என்ன என்பதோ தானும் தெரியாமல், அதை  நான் வாசிக்க ஆரம்பித்தேன்.

ஏறக்குறைய இருநூறு பக்கங்கள் அந்த நூலிலே இருந்திருக்கலாம், அந்தப புத்தகத்தை பெரும்பாலும் நான் வாசித்து முடித்தேன் என்றே இன்று ஞாபகம் கொள்ள முடிகிறது. அது மகாபாரதக் கதையைச் சுருக்கிச் சொன்ன ‘வியாசர் பாரதம்’ என்று மிகப் பின்னாலேதான் நான் இனங்கண்டேன்.  மீண்டும் வாசிக்க எனக்கு பழைய நூல்கூட கிடைக்கவில்லை. பழையபடி சினிமாவுக்குள்ளும், நகைச்சுவை பகுதிகளுக்குள்ளும் நான் புகுந்துவிட்டேன்.

இந்தநேரத்திலேதான் என் பத்து வயதளவில் ஒரு குடும்பத் தகராறு காரணமாக என் தந்தையில் கொலை நிகழ்கிறது. மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் கொலை வழக்கு விசாரணையாகிறது. இம்மாதிரி வழக்குகளில் பெரும்பெயர் பெற்றிருந்த அப்புக்காத்து ஜீ.ஜீ.பொன்னம்பலம் எதிரிகளுக்காக வழக்காடவிருந்தார்.

நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால் வீட்டுக்கு வரும் தெரிந்தவர்களும், உறவினர்களும் பேசுகிற பேச்சில் ஜீ.ஜீ. என்ற அந்தப் பெயர் எனக்கு மனப்பதிவாகிப் போகிறது. அவர்பற்றிய பிரஸ்தாபங்கள், அவரது முந்தைய வழக்குகளில் சாட்சிகள் எவ்வாறு உழறிக்கொட்டினார்கள், சில சாட்சிகள் எவ்வாறு சாட்சிக் கூண்டுக்குள்ளேயே மயங்கி விழுந்தார்கள் என்றெல்லாம் அவர்கள் பேசுகிறபோது என்னையறியாமலே ஒரு பயம் என் மனத்துள் வந்து விழுந்துவிடுகிறது.

கீழ்க் கோர்ட்டில் வழக்கு விசாரணையாகவிருந்த அன்று நாங்கள் சாவகச்சேரி நகர் சென்று நீதிமன்றத்தில் காத்திருக்கிறோம். அதன் மஞ்சள் நிறச் சுவர்களோடுள்ள பிரமாண்டமான கட்டிடமே வியப்புத் தரக்கூடியது. முதல் முறையாக நீதிமன்றத்தின் உள்ளரங்கைப் பார்க்கும் எனக்கு பதற்றம் பிடிக்கிறது. எல்லோரும் வியந்துகொண்டிருந்த அந்த ஜீ,ஜீ. யாரென எனக்குத் தெரிந்திராவிட்டாலும், அவரது உருவ வர்ணிப்பில் கறுப்பு உருவமும், பெரிய கண்களும், அகன்ற நெற்றியுமுள்ள ஒரு ஆகிருதியை கற்பிதம்கொண்டு, அந்தளவு அப்புக்காத்துகள், பிரக்கிராசிமாருக்குள் அவரைக் கண்டுகொள்ள முடியும் என்பதுபோல நான் அங்குமிங்கும் பார்வையால் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நீதிமன்றம் கொள்ளாத கூட்டம். அந்த வழக்கையல்ல, ஜீஜீயைப் பார்க்க வந்த கூட்டம்தான் அது. என் தாத்தா முறையான ஒருவர் என்னருகே வந்து, ‘உன்னை ஆர் கேள்வி  கேட்டாலும் அந்த ஆளின்ர முகத்தைப் பாராதை, நீதவானைப் பாத்து பதில் சொல்லு. பயப்பிடாத. நாங்கள் உனக்குப் பின்னாலதான் இருப்பம்’ என்றுவிட்டு போகிறார்.

ஜீஜீயைப் பார்க்கவேண்டாமென்பதே ஒரு அச்சுறுத்தல்போல் என் மனத்தில் மேலும் பயம் வந்து கவிகிறது.

நீதிமன்றத்தில் குசுகுசு இரைச்சல்களை அடக்கிக்கொண்டு நீதிபதி பிரசன்னமாகிறார்.

முதல் வழக்கு எங்களது. முதல் சாட்சி நான்.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நீதிபதியைப் பார்த்துக்கொண்டே நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஜீஜீ ஒருபோது என்னிடம் சொல்கிறார், கேள்வி கேட்பது தானென்றும், தன்னைப் பார்த்துப் பதில்சொல்லும்படியும். நான் தவிக்கிறேன். நீதிபதியிலிருந்து பார்வையை மீட்கப் பயமாக இருக்கிறது. ஜீஜீயின் வற்புறுத்துதலில் எனக்கு தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறது. அவ்வப்போது அவ்வப்போது அவரைப் பார்ப்பதோடு ஒருவாறு சமாளித்து விசாரணையை முடிக்கிறேன்.

இரண்டாவது சாட்சிகள், மூன்றாவது சாட்சி விசாரிக்கப்படுகின்றன. மூன்றாவது சாட்சி ஜீ;ஜீயின் கேள்வியில் மயங்கி சாட்சிக் கூண்டுக்குள்ளேயே விழுகிறான்.

ஆயினும், இறுதியில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு பாரப்படுத்தப்படுகிறது.
ஜீ.ஜீ. வந்தால் கீழ்க் கோர்ட்டிலேயே வழக்கு தள்ளுபடியாகிவிடுமென்று அவருக்கு பெரிய பேர். அவ்வாறு அவர் ஆஜராகிய வழக்குகள் அந்தக் கோர்ட்டிலேயே தள்ளுபடியான கதைகள் நிறைய.

நான் எங்கள் உற்றம் சுற்றத்தார்  மத்தியில் ஹீரோவாகிவிடுகிறேன்.
வீடுசென்ற பின்னால் ஜீஜீயின் முகத்தைப் பார்த்து பதில்சொல்ல வேண்டாமென எனக்குச் சொன்ன பெரியவர், தான் சொன்னது பெரிய நன்மை விளைத்ததான எண்ணத்தோடு வந்து, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்க எவ்வளவு காலமாகுமென்று தெரியாது, ஒரு வருஷமாகலாம், இரண்டு வருஷங்களும் ஆகலாம், அந்த கால இடைவெளியில் நான் பல வி~யங்களை மறந்துவிடக்கூடுமென்றும், அதனால் விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு நான் சொன்ன பதில்களையும் ஒரு கொப்பியில் எழுதி வைக்கும்படி கூறுகிறார்.

கணவனை இழந்த துக்கமிருந்தாலும், எதிரிகளுக்கு தண்டனை கிடைக்கக்கூடிய சாத்தியத்தினால் ஓரளவு மனவமைதி கொண்டிருந்த அம்மாவும், ராசா, அப்பு சொல்லுறதுதான் சரி, நீ எல்லாத்தையும் ஒரு புதுக்கொப்பி எடுத்து எழுதிவை என்கிறாள்.

ஒரு வாரமாக அந்த விசாரணையை யோசித்து யோசித்து நான் எழுதுகிறேன். ஏறக்குறைய நாற்பது பக்க அந்தக் கொப்பியில் இருபத்தைந்து இருபத்தாறு பக்கங்களை எழுதிமுடிக்கப்;பட்டிருக்கின்றன.

நான் விசாரணையை எழுதி வைத்திருக்கிற விஷயம் ஊரில் பரவுகிறது. ‘பொடியன் கெட்டிக்காறன். விசாரணையை எழுதி வைச்சிருக்கிறான். எப்பிடியும் பத்துப் பத்து வருஷம் எதிரியளுக்கு கிடைக்கும்’ என்று சுற்றத்திடையே நம்பிக்கை வலுக்கிறது. நான் எழுதிவைத்த விசாரணையைப் பார்க்கவே சிலர் வருகிறார்கள்.

இருண்டு வருஷங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில் வழக்கு தள்ளுபடியே ஆகிறது.

அம்மா மற்றும் உறவினர் எல்லோருக்குமே அது பெரிய துக்கம். எனக்கும்தான். ஆனாலும், எனக்கு அந்த வழக்கு பெரிய ஆதாயத்தைச் செய்ததென்பதை பின்னாலேதான் நான் உணர்ந்தேன்.

பத்து வயதில் நான் எழுதிவைத்த அந்த ‘விசாரணை’.
முதலில் வாசிப்பு வந்தது. இப்போது எழுத்து வந்திருக்கிறது.

பகலில் மட்டுமாயே இருந்தது என் வாசிப்பு. நீண்டகாலம் மின்சாரமிருக்காததால் இரவு வாசிப்பு மண்ணெண்ணெய் விளக்கு வைத்துக்கொண்டே நடக்கச் சாத்தியமிருந்தது. பள்ளிக்கூட பாடங்களே இரவுக்கானவை என எனக்கு கண்டிப்பாய்ச் சொல்லப்பட்டிருந்தன. அதனால் என் வாசிப்புகளைதினசரியின் மாலைகளும், சனி ஞாயிறுகளும் அடைத்துக்கொண்டன.

இந்த பள்ளி சாரா திறமைகள் மேலும் மேலுமாய் என்னுள் எவ்வாறு விருத்தியாயின என்பதும், வயதுக்கதிகமான அனுபவங்களின் தாரியாய் நான் எவ்வாறு ஆனேன் என்பதும், இவ்வனுபவங்களில் என் குணாதிசயத்தை விரிவாக்கியதும் சேதப்படுத்தியதுமானவை இருந்திருந்தும், ஒரு சமூக மனிதனாய் நான் நிலைபெற்ற அதிசயமும் எப்படி நேர்ந்தன என்பதும் இனிமேலேதான் பார்க்கப்பட வேண்டியன.

மனிதர்களை சம்பவங்கள் கட்டமைக்கும், இந்த விதி, ஆண்டவன் கட்டளை எனப்படுவதல்ல, அது சமூகம் விதிக்கிற விதி. விதி வலியது.
000(பதிவுகள்.காம் , டிச. 2014)

Tuesday, December 09, 2014

நூல் விமர்சனம் -10 ‘ஊழிக் காலம்’தமிழ்க்கவியின்
‘ஊழிக் காலம்’
(நாவல்)புவிக் கோளத்தில் எங்கெங்கோ, என்றென்றோ நடந்த பல்வேறு ஊழிகளினை நிகர்த்த வன்னிப் போரின் நேர் தரிசனப் பதிவுகளாக மட்டுமே இந்நூல் அடங்கிப் போயிருப்பினும், இதன் ஊடுகளில் அடங்கியிருக்கும் சொல்லப்படாத உண்மைகள்தான் இதை முக்கியமான நூலாக்குகின்றதன.


‘ஊழிக்காலம்’ நூலை வாசிக்க ஆரம்பித்தபோது அதில் இயல்பான வேகத்தில் செல்வது எனக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அது களங்கொண்டிருந்த மண் எனதுமாகும். விளையப் போகிறது என்றிருந்த சோகம் அனைத்தும் விழுந்து மூடிய மண். அதனாலேயே அப்பிய துயரத்தோடு பயணத்தை நின்று நிதானமாகவே செய்ய நேர்ந்தது.

இலங்கையின் வடபகுதி பஸ்ஸிலும், ட்ராக்டரிலும், சைக்கிளிலும், நடையிலுமாய் நான் அலைந்து திரிந்து உள்வாங்கிய இடம். யுத்தத்திற்கு முன்னாலேதான். வன்னியின் குடியிருப்புகள் தெரிந்திருந்தன. குடியேற்றப் பகுதிகளின் நாற்சந்திகள் தெரிந்திருந்தன. அத் தெருக்களில் ஓடிய பஸ்களின் தட எண்கள், போக்குவரத்து நேரங்கள் தெரிந்திருந்தன. ஆனால் புதிதாக முழைத்த குடியிருப்புகளும், அவற்றின் விஸ்வரூபம்கொண்ட பெயர்களும் தெரிந்திருக்கவில்லை. இந்தப் பழகிய  மண்ணூடாக நூல்வழி செய்த பயணம் என்னை வெகுவாகத் தாமதிக்க வைத்ததற்கு இத் தெரியாத்தனங்களே முதல் காரணம்.

தோல்விகளை விழுங்கக் கொடுத்துக்கொண்டு மன்னாரிலிருந்து அரச படைகள் முன்னேறினால் என் மனக்கண்களில் அதன் அடுத்த அடைவு பூநகரிதான். அதைத் தாண்டினால் கிளிநொச்சி. ஆனால் நூல் எத்தனையோ இடங்களின் பெயர்களைத் தருகிறது. கதை நிகழ் காலத்தில் புலம்பெயர்ந்த மக்களால் எத்தனையோ கிராமங்கள் புதிது புதிதாய்த் தோன்றியதையும், பழைய கிராமங்கள் சிறுநகர்களென வளர்ந்திருப்பதையும் இடைத் தூரங்களின் அளவையும் நூல்  சொல்கிறபோது மலைப்பு ஏற்பட்டது.
‘பூநகரியிலிருந்து முப்பதாவது கிலோ மீற்றரில் வேராவில் கிராமம். நூற்பதாவது கிலோ மீற்றரில் ஜெயபுரம். கிராஞ்சி சாலைகள் எதிரும் புதிருமாகக் கடக்க, இன்னொரு ஏழு கிலோ மீற்றரில் கரியாலை. நாகபடுவான் நாச்சிக்குடாச் சாலைகள் எதிரும் புதிருமாக வரும் அந்த முனைதான் முழங்காவில். மன்னார்-பூநகரிச் சாலையில் ஒரு நகரத்தின் அந்தஸ்தோடு பரந்துள்ள விவசாயக் கிராமம் அது.’

முழங்காவில் கிராமத்தின் நகர அந்தஸ்தின் காரணம் நூலிலே வெளிப்படையாகச் சொல்லப்படாத போதிலும், நிகழ்வுகளை ஏற்கனவே தெரிந்திருந்த வாசகனால் உணர முடிகிறது. புலப்பெயர்வினால் உண்டாகும் மனிதாயத சோகம் வளர்ச்சியின் பின்னணியில் மறைந்திருக்கிறது. வாழ்ந்து அத் துயரங்களை அனுபவித்த மக்கள் இந்த வளர்ச்சியை உணர்ந்திருக்கவே முடியாது. ஆனால் அது வரலாறாய் நடந்திருக்கிறது. ஒரு வாசகன் கண்டடையும் இந்த உணர்வுகளே வாசிப்பின் இறுதிப் பயன்.

ஈழ இறுதிப் போரின் இறுதியில் சற்றொப்ப ஒரு வார காலத்தை தன் நிகழ்களமாக இந்நூல் கொண்டிருப்பினும், இறுதிப் போரின் பாதிப்புகளும், பல்வேறு நிகழ்வுகளும் இதில் விவரணை ஆகியிருக்கின்றன.
ஒருவகையில் நாவலாக இது விரிவடையாவிடினும் மக்களின் நாளாந்த வாழ்வின் சகல துன்ப துயரங்களும் பதிவாகியிருப்பதில் இந்நூல் சமகால ஈழ நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இனி இந்நூலின் இடைவெளிகளூடாக வாசகன் கண்டுகொள்ளக் கூடிய மூடுண்டு கிடக்கும் உண்மைகளுக்கு வருகையில் வரலாறு இனிமேல்தான் சொல்லப்பட வேண்டியதிருக்கிறது என்கிற நிஜம் வெளிக்கிறது.
நூலாசிரியரின் விவரணையிலேயே இயக்க ரீதியான செயற்பாடுகள் மனோரீதியாக சீணிக்கத் தொடங்கிவிட்டதைத் தெரிவிக்கின்றன. ‘மதுவின் தந்தை நீதிபதிப் பொறுப்பில் இருந்தான். உயர் பதவி நிரம்பவே தலைக்கனத்தை ஏற்படுத்தியிருந்தது. தன்னறிவும் இல்லாமல் சொன்னறிவும் இல்லாமல் அவனது தீர்ப்புகள் இருந்தன’ என்கிறார் (ப:19) ஆசிரியர் ஓரிடத்தில்.

இந்தமாதிரி விடுதலைப் புலிகளின் நீதித்துறை இயங்கியவிதம் தெரிய வருகையில், சோவியத் யூனியன் உயிரோடிருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரதும் அதன் உயர் பதவியாளரதும் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும், உச்சபட்ட வசதியான வாழ்முறைகளாலும் மக்கள் எவ்வளவு தூரம் கட்சியோடும் நிர்வாகத்தோடும் அந்நியப்பட்டும் வெறுத்தும் இருந்தார்களோ, அந்தளவுக்கு தமிழ் மக்களும் அந்நியமாகி, வெறுப்பு அடைந்திருந்தார்கள் என்ற வாய்மொழிகளை ஐயுறவேண்டிய அவசியம் குறைந்து போகின்றது.

இந்த முடிவை மேலும் ஒரு பருக்கையாக பின்வரும் பகுதி நிரூபிக்கின்றது: ‘விடுதலைப் புலிகள் போர்க்கள நடவடிக்கைகளோடு நிர்வாகத் துறைகளையும் எப்போது ஆரம்பித்தார்களோ, அப்போதே கணிசமான அனுபவம் மிக்க போராளிகளின் மனோநிலை மாற்றங்காண ஆரம்பித்துவிட்டது….’

இயக்க உயர்பதவிக்காரர் கிளிநொச்சியிலே காணிகள் வாங்கி விட்டிருப்பதை நூல் தெளிவாகவே சொல்கிறது. மட்டுமல்ல, இயக்ககாரியான பார்வதியின் மகன், இயக்க நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துகொண்டு இருந்துவிட்டு, அது பிடிக்காமல் கனடாவுக்குத்தான் போய்ச் சேர்கிறான். பார்வதி அவனது மனைவி ராணியையும் பிள்ளைகளையும் பராமரித்துக் கொண்டிருக்கிறாள்!
‘காலையிலே கிபிர் விமானங்கள் ஆனந்தபுரம் இரணைப்பாலைப் பகுதியை வட்டமிட்டு குண்டுகளைத் தள்ளின. பார்வதி இரணைப்பாலைக்குப் போக எண்ணியிருந்தாள். அவளுடைய கொஞ்சச் சேமிப்பு கிராமிய அபிவிருத்தி வங்கியில் இருந்தது. அது    முதலீட்டுச் சேமிப்பு. ராணியும் பிள்ளைகளும் தமிழீழ வைப்பகத்தில் சேமிப்பை வைத்திருந்தனர்’ என்பது இயக்கத் தொடர்பும், தீவிர ஆதரவுடையவர்களுடையதுமான வாழ்முறையாக இருந்திருப்பதை ஐயந்திரிபறத் தெரிவிக்கிறது.

வலிமை வாய்ந்த போராட்ட இயக்கமென சமீபகாலம்வரைகூட சர்வதேச அபிப்பிராயம் பெற்றிருந்த விடுதலைப் புலிகள் தோற்றதெவ்வாறென்று தமிழ்ப் புலங்களில் வியப்போடு கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கான விடை இங்கே இருக்கிறது.

மே-18 அளவில் இராணுவ பாதுகாப்பு வளையத்துள் பிரவேசிக்கும் பார்வதியை ‘அன்ரி’ என்று அன்பு செய்ய இராணுவத்தோடு இணைந்திருந்த சிலர் முன்வருவதும்கூட விடையின் ஒரு பகுதியை சூட்சுமமாய்க் கொண்டிருக்கிறது.

இன்னொன்றும் கவனமாகவேண்டும். நிலைமையிலோ  போர் உக்கிரம் அடைந்திருக்கிறது. வன்னியின் கிழக்கே மணலாறு, நாயாற்றுப் பகுதிகளிலிருந்து ராணுவம் முன்னேறுகிறது. இன்னொரு திசையில் முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய இடங்களை நோக்கியும் நவீன ஆயதங்களுடன் இராணுவம் முன்னேறுகிறது. இந்நிலையில் நடப்புகள் எவ்வாறு தோற்றம் காட்டுகின்றன?

‘ஸ்ரீலங்கா அரசு முதன்முதலாகப் பாதுகாப்பு வலயம் ஒன்றை அறிவித்தது. தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் தெற்கு ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டன….

‘நிவாரணப் பொருட்கள் ஒழுங்காக வந்தனதான். ஆனால் இரு வாரங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு, பதிவுகள் என்று மக்கள் இழுத்தடிக்கப்பட்டனர். அவர்கள் பதிவுகளைப் புதுப்பித்துக்கொண்டு நிவாரணங்களை எடுத்தனர்’ என (ப:66-67) நூல் தெரிவிக்கும் சம்பவங்கள் முக்கியமானவை.

அப்படியானால் அழிவுகளுக்கும், மிகுகொடுந் துயர்களுக்கும் ஆளாகியவர்கள் நந்திக்கடல்வரை விடுதலைப் புலிகளைப் பின்தொடர்ந்த அல்லது மனித கேடயங்களாய் இழுத்துச் செல்லப்பட்ட மக்களுக்கா ஏற்பட்டன? தமிழ்க்கவியின் எழுத்து எமக்கு போரின் முடிவு குறித்துச் சொல்லப்பட்டனவெல்லாம் உண்மையில்லை என்ற அறிகையை ருசுப்பிக்கின்றது.

எல்லா நிகழ்வுகளும் வரலாற்றின் ஆதாரங்களாகும் தன்மை வாய்ந்தனதான். ஆனால் எல்லா நிகழ்வுகளும் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டுத்தான் வரலாறு எழுதப்படுகிறதா என்ற கேள்வி என்னுள் நெடுங்காலமாக உண்டு. இல்லையென்ற பதிலை ஏற்கனவே நான் கண்டடைந்திருந்தாலும், அதை மீண்டும் உறுதி செய்கிறது ‘ஊழிக் காலம்’.

நூலின் அடுத்த கட்ட விசாரிப்பை இங்கிருந்து துவங்கலாம்.
ஈழ யுத்தத்தின் இறுதி நாட்களில் புயல்மழை அடிக்கிறது. ஒருநாள் எனினும் அதன் பாதிப்பு பயங்கரமாயிருக்கிறது. பங்கர்கள் நீர் நிறைந்து உயிரபயம் கொள்ளும் இடங்களெல்லாம் மறைந்து போகின்றன.

இத்தகு நிலையில் நூலில் ஒரு சந்தர்ப்பம் பின்வருமாறு விரிக்கப்படுகிறது:‘தினேஷ்  தன் தங்கையரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிப் புறப்பட்டான். ஆனால் தினேஷ்   தங்கைகளின் கொட்டிலை நெருங்கியபோது நிலைமை சாதகமாக இருக்கவில்லை. கட்டைக்காடு வட்டக்கச்சியிலிருந்து வெளியேறிய மக்களால் நிரம்பி வழிந்தது.

“அண்ணா, ரா ராவாய் நாங்கள் உந்த வாய்க்காலுக்கதான் கிடந்தனாங்கள். எல்லாச் சனமும் உதுக்கதான்.”

“ஷெல்லடியோ சொல்ல ஏலாது..”

மாறிமாறிப் புதினம் சொன்ன தங்கையரை விலக்கிவிட்டு,“வீட்டக் கழட்டி ஏத்துங்க..” என்று தினேஷ்  அவசரப்படுத்தினான்.’

தமிழ் மக்கள் செல்கிற இடமெல்லாம் கிணறுவெட்டிக் குடியேறுகிறவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆம். ஆனால், அவர்கள் இடம்விட்டு இடம்பெயர்கிறபோது மட்டும் கிணற்றை விட்டுவிட்டு வீட்டைக் கழற்றிக்கொண்டு போகிறவர்கள் என்று இனிமேல் சொல்லப்படலாம்.

இவ்வளவு மக்களின் இவ்வளவு சோகத்துள்ளும் மனித மனநிலைகளின் விசித்திரங்களை அவதானிக்கவும் நூலில் இடங்கள் இருக்கின்றன. ஒருவன் தன் தெரிந்தவர்களுக்கு சொல்லும் சில வார்த்தைகளூடாக அது வெளியாகிறது.

‘டோய்… துரையர்ட முன்னூறு மாட்டையும் சாச்சுக் கொணர்ந்து உதில ஒரு பட்டியில அடைச்சார். அதுகள் கள்ள மாடுகள். ராத்திரியே கட்டையத் தட்டிப்போட்டு அவ்வளவும் ஒட்டங்குளம் திரும்பிப் போயிற்றுதுகள்.’

இவ்வாறான அவதானங்களெல்லாம் மிக்க கவனத்துடன் பதிவாகியுள்ளன நூலில்.

மிக்க இயல்பான கடித நடையில் நூல் விபரங்களைச் சொல்லிச்சென்று முடிகையில், இரண்டு பாத்திரங்கள் மட்டும் மனத்தை அழுத்திக்கொண்டிருந்தன எனக்கு.

பார்வதிபோல் நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் களமுனையிலிருந்து தப்பிப் பிழைத்திருப்பது தெரிந்த விஷயம். அவரின் அவதிகள் அந்த நூற்றுக்கணக்கான பேர்களும் அடைந்த அதே அவதிதான். அதுமாதிரியான அவதிக் கணங்கள் கருணை ரவி, யோ.கர்ணன் போன்றோரின் சிறுகதைகளில் பதைக்க வைக்கும் விதத்தில் பதிவாகியிருக்கின்றன. இந்த நூலில் மறக்கமுடியாதவையாய் வரும் இந்த இரண்டு பாத்திரங்களும் மிகவும் விபரிப்புக்குள்ளாகாதவை. எந்த நூலிலும்கூட. ஒன்று, பாரி. மற்றது, பார்வதியின் கணவர் மணியம்.

வாஞ்சைகள் வாழ்வின் எந்தத் தருணங்களிலும் இழக்கப்பட முடியாதனவாய் இருப்பதற்கு பாரி சாட்சி. ‘கிளிநொச்சியிலிருந்து வந்த ஒரு வாரத்தில் ஒருநாள் காலை ‘மியாவ்’ என்ற குரலுடன் பார்வதியைநோக்கி ஓடிவந்தது பாரி. குட்டிப் பேரன் கண்ணன் பாய்ந்துவந்து அள்ளி எடுத்துக் கொஞ்சினான். எல்லோருக்கும் ஆச்சரியம், அது எப்படித் தேடிக் கண்டுபிடித்து வந்தது என்று.’
வளர்ப்பு மிருகங்களையும் விட்டு நீங்குவதற்கான மனிதர்களது அவலத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதே அவலங்களுக்கிடையே அவர்கள் வளர்த்த பூனை பாரி அவர்களைத் தேடிவந்ததை எப்படி விளங்குவது? மிருகங்களிடத்தில் உள்ள அந்த வாஞ்சை வெளிப்படும் இடம் மெய்சிலிர்க்க வைப்பது.

உயிர் காக்கும் அத்தனை மனித சாத்தியங்களையும் உபயோகிக்கும் அந்தரம் கொண்டவர்களாக அவர்கள். பங்கரைப் பலப்படுத்தி அங்கேயே தங்குவதா அல்லது அந்த இடத்தையும்விட்டு ஓடுவதா என்பதை அனுபவங்கள் மூலமாகவன்றி, அந்நந்த நேரத்து உள்ளுணர்வின்படி தீர்மானிக்கவேண்டிய இக்கட்டான நிலைமை. பார்வதி முடிவெடுத்து விடுகிறாள். ஆனால் முடிவே இல்லாதவராய் அல்லது எந்த முடிவுமே வேண்டாதவராய் ஒரு பாரம்போல் அமைந்திருக்கிறார் மணியம்.

நூலில் மணியம் குறிப்படப்படுமிடத்தில் அந்த ‘த்தார்’ என்னை நெருடியது. ஆனாலும் அந்த நெருடலினூடேயும் அந்த வரி காத்திரமாய் இறங்கி  பாத்திரத்தை நித்தியமாக்குகிறது.

அந்த வரி: ‘பார்வதியின் கணவர் மணியத்தார் எதுவுமே நடவாததுபோல தாடியைத் தடவிக்கொண்டு கிடந்தார்.’

இவ்வாறான ஜென்மங்களும் உண்டு. ஆனாலும் அவற்றின் சாசுவதத்தை ஒரு வரி ஆக்கிய விந்தையை வெகுவாக நூலில் ரசிக்க முடியும்.

00000


தாய்வீடு , டிசம்பர்  2014

Tuesday, December 02, 2014

கலித்தொகைக் காட்சி: 8


‘திங்களைத்  தேன்கூடென எண்ணி 
ஏணிகட்டும் குறிஞ்சிநில  மக்கள்’
இலக்கியத்தில் கற்பனை என்பதுபற்றி மேலைநாட்டு விமர்சகர்களிலிருந்து, அவர்களது சிந்தனை அடித்தளத்தில் நின்று இவவ்வகையில் சிந்திக்கின்ற தமிழ்நாட்டு விமர்சகர்கள்வரை ஒத்த அபிப்பிராயம் நிலவுவதாகத் தெரியவில்லை.

இலக்கியத்தில் எந்தளவுக்குக் கற்பனையைப் புகுத்தலாம் என்பதுபற்றியும், இலக்கியத்தில் கற்பனையைப் புகுத்தலாமா கூடாதா என்பதுபற்றியும் பலமான விவாதங்கள் கிளம்பி ஓய்ந்திருக்கின்றன.
யதார்த்தமான கற்பனையை இலக்கியத்தில் புகுத்துவது இலக்கியரசனைக்கு அவசியமானது என்ற கருத்தைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இலக்கிய விமர்சனம் பண்படுத்தப்பட்டு செழித்து வளர்ந்துள்ள இன்றைய இருபதாம் நூற்றாண்டு முடிவு இது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலித்தொகைக் காலத்திலே கற்பனை ஒன்று வருகின்றது. அது யதார்த்தமானதா என்று கேட்டால் இல்லையென ஒரேயடியாகப் பதில் சொல்லிவிட முடியும். ஆனால் அது இனிமை பயக்கிறதாஎன்று கேட்டால் இனிமை பயக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

குறிஞ்சிநிலத்திலே புணர்தல் நிகழ்தற்கும், அது பகற்குறி, இருவுக்குறிஎன்பதோடு மட்டும் நில்லாமல் திருமணம்வரை முடிதற்கும் தோழி பெரும் காரணகர்த்தாவாக இருப்பாள். ஒருதலைவியின் திருமணத்தை முடிக்கவேண்டி தலைவியின் பெற்றோருடன் உரையாடுகிறாள் தோழி. அப்போது தலைவனின் மலையழகுச் சிறப்பை கற்பனை நயம் தோன்றக் கூறி நயக்கிறாள் அவள்.

தோழியின் பொறுப்பை எம்மால் உணர்ந்துகொள்ள முடிந்தால் இந்தக் கருத்தைக் கூறுகின்ற தோழியின் நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும். தோழியின் நோக்கம் தலைவனுடையமலைச் சிறப்பைக் கூறுவதோடுஅவனது குடும்பத்தின் பெருமையையும் கூறிவிடுவதேயாகும்.
தோழி கூறுகிறாள்:

வானூர் மதியம் வரைசேரின்
அவ்வரைத்
தேனின் இறாஅல் என
ஏணி இழைத்திருக்கும்
கானகல் நாடன் மகன்

‘ஆம், தலைவனை யாரென்று நினைத்தீர்கள்? வெண்மதி மலையிலே பவனிவருகிறபோது அதன் தோற்றம் மலைகளிலே வளர்ந்துள்ள சந்தனமரங்களில் தொங்குகின்ற தேன்கூட்டினைப்போல் இருக்கும். அதைக் கண்டு மகிழ்ந்த மலைநாட்டவர் அந்தத் தேன் கூட்டை எடுப்பதற்காக ஏணிகட்டி எடுத்துவைப்பர். அத்தகைய நிலவளமுள்ள குறிஞ்சிநிலத் தலைவன்.’

 தோழி கூறுவதாக அமைந்த அப் பாடலின் கருத்து இது.
‘மழை நுழை திங்கள்’அப்படி தேன்கூட்டைப்போல  காட்சிதருதல் சாத்தியமே. ஆனால் அதைக் கைப்பற்ற ஏணி இழைத்துவைக்கின்ற மலைஞரின் செயல் நகைப்பை விளைக்கின்றது. இந்த நகைப்பு ஆங்கிலத்தில் சொல்லுகின்ற ‘ஸடயர்’ என்பதன் பண்பினால் ஏற்படுவதல்ல என்பதையும் நாம் மறக்கக்கூடாது.  இது வரம்புமீறிய கற்பனையாகும்.

மலைவாழ்நர் மதுவுண்டு களிக்கக்கூடிய வாய்ப்பு  இருத்தலினாலும், காதல் மயக்கம் கொள்ளும் புணர்தல் பண்பு குறிஞ்சிநில ஒழுக்கமாக இருப்பதனாலும் இந்தக் கற்பனையின் கருத்தை ஓரளவு பகுத்துப் பார்த்து ஏற்கவும் முடிகின்றது.

அழகிய நங்கைஒருத்தி வீதிவழியே வந்ததை காளை ஒருவன் கண்டு காதல் கொண்டான். அவளோ காதலுணர்வு பெறாத இளம்பெண். ஆதலால் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. வேதனைமீதூர்ந்த தலைவன் ஆற்றாமையுடன் கூறுகிறான்:

பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீஅறியாய்
யாதொன்றும் வாய் வாளாது இறந்துஈவாய்! கேள் இனி

என்று அவளைஅழைத்து ‘உன்மீதும் குற்றமில்லை, உன்னைவெளியே போய்வரவிட்ட உன்னைப் பெற்றவர் மீதும் குற்றமில்லை. மதங்கொண்ட யானை நீர்த் துறைக்கு வரும்போது பறையறைந்தே வருதல் வேண்டும் என்று விதிசெய்ததுபோல் உன் வரவை அறிவிக்கவேண்டுமென்று சட்டமிடாத இந்த நாட்டு மன்னனே தவறுடையான்’ எனக் கூறினான்.

அந்தப் பாடல் இது:
நீயும் தவறில்லைநின்னைப் புறங்கடை
போதரவிட்டநுமரும் தவறிலர்
நிறையழிகொல்யானைநீர்க்குவிட்டாங்கு
பறையறைந்தல்லதுசெல்லற்கஎன்னா இறையேதவறுடையான்
(குறிஞ்சிக் கலி- 20)

இவ்வாறு மன்னன்மீதே தவறென ஒரு தலைவன் உரைக்க, இன்னொரு தலைவன் இன்னொரு பாடலில், ‘ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை’ என்று தண்டனைக்குரிய தவறுசெய்தவர் யாரென்பதைக் கூறுகிறான். தலைவியைச் செல்வச் செழிப்புடன் வளர்த்து அவளுக்குச் செல்வச் செருக்கைக் கொடுத்த பெற்றோரே தவறுடையவர் என்றும், எனவே  தான் ஒறுப்பதானால் தலைவியின் பெற்றோரையே  ஒறுப்பேன் என்றும் அவன் உரைக்கின்றான்.

இந்த இரு தலைவர்களில் ஒருவன் மன்னனைத் தவறுடையவன் எனக் கூறுகிறான். இன்னொருவன் தலைவியின் பெற்றோர் தவறுடையர் எனக் கணிக்கின்றான். காதல் கைகூடாமையே இவர்கள் தவறுகண்டுபிடிக்கக் காரணமாயமைகின்றது. இவ்வாறு வருகின்றபாடல்கள் கைக்கிளைஎன்னும் திணையின் பாற்படும் என  தமிழ் இலக்கியமரபு  செப்புகின்றது.

000

ஈழநாடுவாரமலர்,18.03.1969

கலித்தொகைக் காட்சி: 7


‘எமனைஎதிர்த்துநிற்கும் வீரமிக்கதலைவன்’
சங்ககாலத்திலிருந்தவீரமதவழிபாடு
-தேவகாந்தன்

வேங்கடம் முதல் குமரிவரை பரந்துபட்ட தமிழ் மண்ணிலே ஆடவர், பெண்டிர் அனைவருக்குமே வீரம் ஒரு பொதுமதமாக விளங்கியது. சங்ககாலத்திலிருந்த இந்த மதநெறியை வீரமதமாக மக்கள் போற்றினர். பின்னாளில் வீரம் என்பது ஒரு வெறியாகவும்,  கொலைச் செயலாகவும் கருதப்பட்டதோடு  வீரமத வழிபாடு  மறைந்து  பக்தி மதவாழிபாடு தோன்றியது.  தமிழினத்தின் வீழ்ச்சி  களப்பரரின் ஆட்சியோடு தொடங்குவதும்  கவனிக்கத் தக்கது.

‘நாமார்க்கும்  குடியல்லோம்’ என்று  அரசஆணையை  எதிர்த்து போர்த் துவஜம் தூக்கிய  முதற் தமிழ் மகன் நாவுக்கரசர், ‘நமனை  அஞ்சோம்’ என்று கூறுகிறார். அரன் நிழலைச் சரண் அடைந்த அந்த நெஞ்சத்திலே கூற்றுவனுக்கு எதிர்நிற்கும் ஆற்றல் மிக்கிருந்தது. போற்றுதலுக்குரியதுதான் இது. ஆனால்,  வீரமதத்தை  வழிபாட்டு  நெறியாகக் கொண்டுச ங்ககாலத்திலேயே  யமனுக்கு எதிராக நெஞ்சுநிமிர்த்தி நின்ற சங்கத் தமிழ்மகனை, குறிஞ்சிக்கலி  நமக்குக் காட்டுகின்றது  எனக் கூறின் வியப்புத் தரும்.

ஆம், வீரத்தை மதமாகவழிபட்ட சங்ககாலத்திலே யமனுக்கு எதிராககநிற்கிறான் ஒரு தமிழ்மகன். போர் என்று கூறி இயமனே வந்தாலும் அவனுக்கு அஞ்சிநிற்காதவன் தலைவன் என்று, தலைவனின் பண்பை விளக்கவந்த  குறிஞ்சிக்கலியின் ஏழாம் பாடலிலே  புலவர் கூறுகின்றார். ‘பகையெனின் கூற்றம் வரினும் தொலையான்’  என்பது அப்பாடல் அடி.

இந்தஅஞ்சாமை, எறியும் வேலுக்கெதிரே இமையாக் கண்ணுடைய வீரத்தினால் விளைந்தது. இதுவே தூயவீரம். இத்தகைய  வீரம் பிற்காலத்தில் இகழப்பட, பக்திமதம் தோன்றியது. இந்த மதவழிபாட்டுக் காலத்தில் தமிழினம் வீரத்தை மறந்ததுபோலவே நாட்டினை மறந்தது, இனத்தை மறந்தது, மொழியை மறந்தது. இந்த தூங்கிவிட்டஉணர்ச்சிகளைத் தட்டியெழுப்புவதற்கே ஒரு பாரதி தேவைப்படும்  அளவுக்கு  தங்கள் வரலாற்றை மறந்துவிட்டனர் தமிழர். பக்திமதம் பரவியதாலும், வீரமதம் மறைந்ததாலும் தமிழ்மக்கள் மத்தியிலேற்பட்ட  துயரவரலாறு இதுவாகும்.

தலைவனைப் பிரிந்துவிட்டால் தலைவியின் நிலை  எப்படி இருக்கும் என்பதையெல்லாம் கலித்தொகைக் காட்சி ஏற்கனவே விளக்கியிருக்கின்றது. இவ்வாறு துயருழக்கின்ற தலைவி, தலைவனைக் கண்டன்றி ஆறுதல் கொள்ளாள். தளர்ந்த தோள்களும், நெகிழ்ந்த முன்கைகளும் மீண்டும் அந்த நிலையை அடைய தலைவனே எதிர்வரவேண்டும். அப்போதுதான் இது சாத்தியமாகும்.

ஆனால், குறிஞ்சிக் கலியின் ஏழாம் செய்யுள் நமக்கு வேறுமாதிரியான ஒரு காட்சியைக் காட்டுகின்றது.  தலைவனைக் காணாதநிலையில் தோழியிடம் தலைவி கூறுகிறாள், ‘தலைவனின் பெருமையைப் பாடுவாயாக, அதனாலாவது கொஞ் சநிம்மதியேனும் கிடைக்கிறதா பார்ப்போம்’ என்று.

 உடனே தோழி தலைவனின் அருங் குணங்களைப் பாடுகின்றாள். ‘தன் நாட்டார்க்குத் தோற்றலை  நாணாதவன்’ என்றெல்லாம் அவள் பாட தலைவியின் தோள்கள் பழைய நிலையைஅடைந்தனவாம்.

அதை விளக்குகின்ற பாடலடி இது:
அவர் திறம் பாடஎன் தோழிக்கு
வாடியமென்தோள் வீங்கின’ (குறிஞ்சிக் கலி 7)
அவனுடையபெருமைககளின் நினைப்பே தலைவியின் நிலையை மாற்றினவென்றால் தலைவனின் கீர்த்தியும், தலைவியின் நெஞ்சமும், தோழியின் திறமும் எமக்குப் புலனாகின்றதன்றோ?

000

ஈழநாடுவாரமார், 03.03.1969
கலித்தொகைக் காட்சி: 6


‘அறம் அல்லவற்றைச் செய்தால் இயற்கையேபொய்த்துவிடும்’

-தேவகாந்தன்


அகனைந்திணையின்படி குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கம் புணர்தல் ஆகும். கலித்தொகையில் இத்திணைக்குரிய இடம் இரண்டாவது. பாலைக்கலியின் பிரிவுத்துயரிலே வாடிய  தமிழ் நெஞ்சங்கள் மலைச் சாரல் அழகையும், அம்மலைகளினடியிலே தவழுகின்ற இளம் குழவியான  தேன் நிலவின் எழிலையும், அதுபற்றிய  புலவனின் கற்பனையையும்,  தலைவியர் கற்பையும், சமுதாய நெறியையும், வாழ்க்கை முறையையும் கண்டு களிப்படையமுடியும்.

‘குறிஞ்சிபாடக் கபிலன்’ என்பது முதுமொழி. குறிஞ்சிக் கலியைப் பாடியிருப்பவரும் கபிலரே என்று சில தமிழாராய்ச்சி வல்லுனர் துணிந்துள்ளனர். இன்னும் சிலர் தொகுக்கப்பட்ட அச் செய்யுட்களைப் பல புலவர் பாடினர் என்பர்.  இது ஆய்வுக்குரிய  விடயம். ஆகவே அவ்வாராய்ச்சியை  விடுத்து இங்கு காட்சிகளைக் கவனிப்போம்.

தமிழிலக்கியங்களை எடுத்துப் பொதுவாக நோக்கினால் ஐந்து ஒழுக்கங்களிலும் ஒருவகைப் பிரிவின் துயரே   காணக்கிடக்கின்றது. தலைவனும் தலைவியும்  ஒருவரை  ஒருவர் சந்திப்பதற்கும் பின்னர் அவர்கள் சந்திக்கும் பகற்குறி இரவுக்குறி  நிகழ்தற்கும் மலைநாட்டிலுள்ள தினப்புனங்கள்  மிக்க  உதவிசெய்யக்  கூடியன. இவ்விடங்களில் ஒருவரை ஒருவர் கண்டு விரும்பியபின் அவர்கள் பிரியவேண்டி  வரும். சிலபோது  தம்முள்ளே  புணர்ந்த  பின்னரும் அப் பிரிவு  ஏற்படலாம். தலைவனே தலைவியைச் சந்திக்க  வராத  நேரங்களும்,  வரமுடியாத கஷ்டங்களும் ஏற்படும். இவ்வளவு  துயரங்களையும் தோழி  நீக்குவதே  குறிஞ்சிக் கலியிலுள்ள  பாடல்களின் முக்கியமான  தன்மையாகும்.

ஆயலோட்டி  நின்ற இளம் யுவதி  தலைவனை  ஒருநாள் தினப் புனத்திலே கண்டாள். தலைவனும் அவளைப் பார்த்தான். கண்ணோடு கண்ணிணை நோக்கினால் வாய்ச் சொற்கள் பயனில்லாதன என்ற குறளின் இலக்கணம், அக்குன்றுதோறும் குமரன் ஆடும் நிலத்திலே இலக்கியமாகி  மிளிர்ந்தது.  களவோடுமட்டும் நிற்பதால் சமுதாயம் இகழக்கூடும் அவர்களது உறவினை. எனவே அதைக் கற்பொழுக்கமாக மாற்றிவிட  தலைவி நினைக்கிறாள். தன் கருத்தைத் தோழிக்குக் கூறுகிறாள். இனிமேல் திருமணத்தை நிறைவேற்ற வேண்டியபொறுப்பு தோழிக்காய் விடுகிறது.

இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதோழி  ஒரு யுக்தி மூலம் அவர்களது திருமணத்தை நிறைவேற்ற நினைக்கிறாள்.  அதன்படிஅத் திருமணத்தை நிறைவேற்றியும் வைக்கிறாள்.

தோழிதலைவியின் பெற்றோரிடத்திலே கூறியது இது: ‘தலைவி நீராடிக்கொண்டிருந்தாள். அப்போது கால் தளர்ந்து கண் மயங்கி ஓடுகின்ற ஆற்று நீரோடு மெய் உருளப்பட்டாள். அங்கே வந்த தலைவன் திடீரென அவ்வாற்றிலே பாய்ந்து  அவளைக் காப்பாற்றிக் கரைசேர்த்தான்.

‘பூணாகம் உறத் தழீஇப் போதந்தான் அகன்அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் எம்தோழி
அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே’
ஆனாள்.(அவன் கரைசேர்த்தபோது  அவளுடைய  மெய் அவனுடையமெய்யோடுஅணைந்ததினால் அவனையே திருமணம் செய்யவேன்டுமென்ற  நோக்கம்கொண்டு கற்புநிலை  சிறந்தாள்).’

இவ்வாறு கூறியதோழி, தலைவியின் பெற்றோர் இத்திருமணத்திற்கு மறுத்தால் விளையக்கூடியதையும் எச்சரிக்கிறாள்.
‘வள்ளி கீழ்வீழா, வரைமிசைத் தேன்தொடாஅ, கொல்லைகுரல்வாங்கிஈனா, மலைவாழ்நர் அல்ல செய்தொழுகலான்.’
மலைவாழும் குடியோரே, குறிஞ்சிநில மங்கையர் கற்புநெறியில் நிற்பதால்தான் உலகமே இயங்குகின்றது. மலைநாட்டு இளைஞரின் கைவேல் குறிதவறாமைக்கும் அவர்களுடைய கற்பே காரணம்.  இத்தகைய மகளிரின் கற்புநிலை பிறழ  நீவிர் நடந்தால் வள்ளிக் கொடியில் கிழங்குவிழாது, மலையிலே தேனீ தேன்தொடாது  போய்விடும். எனவே இதற்குச் சம்மதிப்பீர் என்ற அவளது எச்சரிக்கையைக் கேட்ட பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இம் மகிழ்ச்சியைத் தோழி தலைவிக்குக் கூறி மகிழ்வதாக குறிஞ்சிக் கலியின் இப் பாடல்அமைந்திருக்கிறது.
0000
ஈழநாடுவாரமலர், 16.02.1969

கலித்தொகைக் காட்சி: 5


‘குடும்பதத்துவத்தை விளக்கும்
பாலைநிலத்து யானைகள்’தலைவனைப் பிரிந்ததலைவியர் ‘அறன் இன்றி அயல் தூற்றும்’ நிலையில் மாத்திரமல்ல, சமுதாயத்திலே புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், ஆதரவற்று நடுவீதியிலே கிடப்பவர்களாகவும் கூட ஆகிவிடுகின்றனர். பெண்மை மென்மையானதாகவும், ஆண்மை வன்மையானதாகவும் இருக்கின்றவேளையில், மென்தன்மையுடைய பெண்ணுக்கு ஆணே பாதுகாப்பளிக்க வருகின்றான். இந்நிலையில் தலைவன் பிரிந்துவிட்டால் தலைவியின் நிலை ஆதரவற்றதாவதில் ஆச்சரியமில்லை.

‘தோள்நலம் உண்டுதுறக்கப்பட்டோர்
வேணீர் உண்டகுடைஓர் அன்னர்,
நல்குநர் புரிந்துநலன் உணப்பட்டோர்
அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர்,
கூடினர் பிரிந்துகுணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓர் அன்னர்’

என்று கலித்தொகையின் இருபத்திரண்டாம் செய்யுள் கூறுகிறது.
ஆம், தலைவனைப் பிரிந்த தலைவியர் நீர் அருந்திய பின் வீசப்பட்ட ஓலையில் முடைந்த பாத்திரமாகவும், மக்கள் பிரிந்துவிட வெறிச்சோடிக் கிடக்கும் பாழ்பட்டகிராமமாகவும், வெளியே வீசப்பட்ட வாடிய மாலையாகவும் கணிக்கப்படுவர். அந்த நிலையில் பயனற்று, வெறுத்து, நல்ல தன்மையிழந்து கிடக்கும் அந்தநிலையை, நாம் பார்க்கிறபோது, தலைவியரின் வாட்டம் நன்குபுரியும். வாடிய மாலையை யாரும் தீண்டுவதில்லைப்போல் இவர்களும் சமுதாயத்திலே புறக்கணிக்கப்பட்டவர்களாக  வாழவேண்டிவரும்.

இவ்வளவையும் நினைந்த  தலைவி  தன்னைப் பிரிந்துசெல்லத் துணிந்துவிட்ட தலைவனின் செலவைத் தடுத்துவிட  முயற்சிக்கிறாள். தன்னால் இயன்றவரை  தன் பரிதாபநிலையை விளக்குகின்றாள்.
“நீஎன்னைப் பிரிந்துசெல்லுகின் ற பாலைநில  வழியிலே மரத்திலே சுற்றிப் படர்ந்தகொடி  வாடியிருப்தையும், நீர் அற்றுப்போய் விட்ட குளத்திலே வாடிக்கிடக்கின்ற  அணிமலர்களையும் காண்பாய். அவையெல்லாம் என்னைப்போல  உருவுகொண்டு  வந்து  உன்னை இடைவழியிலேயே தடுத்துவிடும்.  அதனால் செல்லுகின்ற  வினை முற்றாது நீதிரும்பிவரவேண்டிய  நிலையும்,  அப்படித் திரும்பிவருவதால்  ஊரிலே  ஏற்படக்கூடிய  அவச் சொல்லைச்  சந்திக்கவேண்டிய  நிலையும்  வரும். எனவே உன் செலவைத் தடுத்து  பிரிவுத் துயரினால் வாடவிருக்கும் என்னைக் காப்பாற்று.”

இவ்வாறு பலவும் கூறியும் தலைவனைத் தடுக்கமுடியவில்லை. தடுக்கமுடியவில்லை  என்பதால் விட்டுவிட  முடியுமோ? துயருழப்பவள் தலைவியன்றோ?  எனவே  எப்படியாவது தடுத்துவிடுவதே  என்ற தீர்மானத்துடன் மீண்டும் தொடர்ந்து  சொல்கிறாள்.

இதுவரையும் அவளுடைய கூற்றிலே பிரிவினாலேற்படக்கூடிய  அவளது துயரையே  காணக்கூடியதாக இருந்தது. இப்போதோவெனில் இந்தப் பிரிவினால் தலைவனே  வருந்தக்கூடிய நிலையும் உருவாகும் என்று கூறுகிறாள்.

பாலைநில  வழியிலே காதலரைக் காணமுடியாது. ஆனால், காதல் உணர்வு மேலிட்ட  மிருகங்களைக் காணமுடியும். அந்த  மிருகங்கள் தம் அன்புணர்வைக் காட்டி  பிரிவுத்  துயரை  தலைவனும் அடையுமாறு செய்துவிடும் என்பதாகக் கூறுகின்றாள்.

“ ‘அன்புகொள் மடப்பெடைஅசைஇய  வருத்தத்தை  மென்சிறகரால் ஆற்றும் புறவு’என்றும்,  ‘இன்னிழல் இன்மையால் வருந்திய  மடப்பிணைக்கு  தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலை’ என்றும் தலைவ நீயே முன்பு கூறியிருக்கிறாய். மேலும், ‘துடியடிக் கயந்தலை கலக்கிய  சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு’ என்றும் சொல்லியிருக்கிறாய். இந்தவழியில் நீ செல்லும்போது இத்தகைய காட்சிகளெல்லாம் உன் துணையைப் பிரிந்த  பிரிவுணர்ச்சியைத் தூண்டுமே. மிருகங்களுக்குள்ள  காதலுணர்வு  மனிதர்களுக்கற்றதேனோ? தம்மை  வருத்திக்கொண்டு இவை தம் துணைக்கு இன்பம் கொடுக்கின்றன. நீயோ  உன்னையும் என்னையும் வருத்திக்கொண்டு  பிரிந்துபோக  விரும்புகிறாய்.  பிரியாமல் இருந்து  எம் இருவருக்குமே இன்பம்செய்ய  மாட்டாயா?” என்று  கேட்டாள்.

தலைவியின் இந்தவேண்டுகோளுக்கு  தலைவன் இணங்கினானோ இல்லையோ, அதுவேறுவிஷயம். ஆனால், ‘துடியடிக் கயந்தலை கலக்கிய’ என்று வரும்அடிகள் குடும்பம் என்னும் வார்த்தையின் பெரிய தத்துவத்தையே விளக்கிவிடுகின்றன.

குட்டி யானை,பிடி ஒன்று,தலைவனான களிறு ஒன்று. ஆக மொத்தம் மூன்று பேரைக்கொண்ட சிறிய குடும்பம் அது. பாலைநிலத்திலே  நீரைத் தேடி அலைந்த அந்த மூன்று  யானைகளும் ஓரிடத்தே  சிறிய  நீரைக் கண்டன. கண்டதும் நடை தளர்ந்து, மெய் தளர்ந்து நின்ற யானைகள் முந்திவந்து  நீரை எடுக்க  நினைக்கவில்லை. முதலில் குட்டியானையைப் பருக விடுகின்றன. ‘துடியடிக் கயந்தலை கலக்கிய’ என்பதிலிருந்து  குட்டியானையே  முதலில் குடித்தது என்பது புலனாகிறது.

அடுத்து  நீரருந்திய  யானை பெண் யானையே.  தன்னுடைய துணை அருந்தும்வரை  காத்திருந்து  அதன் பின்னரே  ஆண் யானை  நீரருந்துகிறது. இதை,  ‘பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு’ என்ற அடி தெளிவாகக் காட்டுகின்றது.

000

ஈழநாடுவாரமலர், 01.02.1969Friday, November 28, 2014

தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம்

மார்க்ஸியர், இடதுசாரிகள், தேசியவாதம்:
தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம்எப்போதும் கேட்பதற்குப் புதிது புதிதாக கேள்விகள் பிறந்துகொண்டே இருக்கின்றன. இது சுவாரஸ்யமானதும், அதேவேளை முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். புதிய கண்டுபிடிப்புக்களும், புதிய சிந்தனைகளின் தோற்றமும் இந்தக் கேள்விகளின் அவசியத்தை மனிதர்கள் மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன என்பதாக இதற்கான விடையை நாம் கண்டடைய முடியும். தேசியவாதம் அல்லது தமிழ்த் தேசியவாதம் குறித்து இன்றெழுந்திருக்கும் கேள்விகளும் புதிய சூழ்நிலைமைகளின் தாக்கத்தினால் விளைந்தவையே என்பது தெளிவு.

தேசியவாதம் என்ற கருத்தாக்கம் ஓரளவு முதலாளித்துவ அமைப்பின் ஆதிக்கம் அரசியலில் வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் உருவானதென்றாலும், அது குறித்த சிந்தனை பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு மேலேயே அரசியற் புலத்தில் காலூன்றிவிட்டது. சரியாகச் சொன்னால் பதினெட்டாம் நூற்றாண்டின் எழுபதுகளில். இந்தச் சொல்லை ஒரு கருத்துருவத்தின் வெளிப்பாட்டுக்காக செதுக்கியெடுத்தவர் ஜோஹன் கொட்பிறைட் ஹெடர் என்பவர். எவ்வாறு  போஸ்ட் மாடனிஸம் என்ற சொல், வரலாற்றாசிரியர் ஆர்னால்ட் ரொயின்பீ என்பவர் அக்கால அரசியற் சூழமைவைக் குறிக்கப் பயன்படுத்திய Post Mordern era என்ற சொல்லிலிருந்து பிறப்பெடுத்ததோ, அதுபோல இது நடந்தது. இதுபோன்ற கருதுகோள் முன்னெடுப்புக்கள் காலங்காலமாக வரலாற்றில் நிகழ்ந்தே வந்துள்ளன என்பதை நாம் நினைவிற்கொள்ளல் வேண்டும்.

எல்லைகளும், இறைமைகளும் யுத்தம் காரணமாகவோ, மணவினைகள் காரணமாகவோ மாறிமாறி அமைந்துகொண்டிருந்த சூழ்நிலையில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை தேசியவாதம் என்ற கருத்தாடல் வலுப்பெற்றிராத நிலைமையே அய்ரோப்பாவில் இருந்துவந்தது. ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா ஆகிய இந்த நான்கு நாடுகளுக்குமிடையில் இருந்த மணவினைத் தொடர்பாடலின் கதைகளாகவே மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பின்னான மூன்று நான்கு நூற்றாண்டுகளின் வரலாறுகளும் விளங்கின.

இந்த நிலைமையில் பிரான்சிய, மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அமெரிக்கப் புரட்சிகள் நாடுகள்பற்றிய கருத்துமானங்களை வெகுவாக மாற்றிவைக்கின்றன. ஒரு தேசம் என்பது புவியியற் கட்டமைப்புக்கொண்டதான, இனத்துவம் சார்ந்ததான, இறைமை கொண்டதான விதிகள் வலுப்பெறத் தொடங்குகின்றன. புறவிதிகளாக ஒரு நாடு சிதைந்து பலவாதலும், பல நாடுகள் இணைந்து ஒன்றாதலுமான நிகழ்வுகளும் நடக்கவே செய்கின்றன. வரைபடத்தில் புதிய எல்லைகளோடு தோன்றிய ஜேர்மனியும், இத்தாலியும் இதற்கொரு தக்க சான்று.

இக் கருத்தாடல் நிலைபெறத் தொடங்கி ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே இதன் கொடூர முகத்தை உலகம் ஜேர்மனியில் கண்டது. அதன் பெயர் நாஜிசம்.

நாஜிசம் என்பது Natioinal Socialisn ஆகவே கருதப்பட்டது. நாடு தழுவிய வரையறையை வகுக்க இந்த தேசியவாதம் உதவியபோதும், நாடுகள் சார்ந்தளவில் இது தேசப்பற்று என்ற உணர்வோட்டமுள்ள கருதுகோளாக முதலாம் உலக மகா யுத்த காலத்தில் இருந்தது. தேசியவாதத்தை அதன் தன்மைகள் சார்ந்து ஏழு என்றும், இன்னும் அதிகமாகவும்கூட சில அரசியலாய்வாளர் வகைப்படுத்தியுள்ளனர்.

முதலாம் இரண்டாம் மகாயுத்தங்களுக்குப் பிறகு தேசியவாதத்தின் தன்மை பெரிதும் மாற்றமடைந்துள்ளது. இதற்கு உலகமயமாதல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இன்னும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இனக்குழுமங்களுக்கு மேலான அடக்குமுறைகளின் எதிர் எழுச்சியாகவும் இந்தத் தேசியவாதம் முன்னெழுந்தது. அந்த வகையில்  இனம்சார் தேசியவாதங்கள் இன்று முக்கியமானவையாகப் பேசப்படுகின்றன. வெறுக்கப்படும் தேசிய வாதங்களாக இந்துத்துவ தேசியவாதம், புத்தத்துவ தேசியவாதங்களைக் கொள்ளலாம். பல்கலாச்சார நாடொன்றில் இருக்கக்கூடிய அல்லது இருக்கவேண்டிய தேசியவாதத்ததை  உiஎiஉ யெவழையெடளைஅ Civic Nationalism என்று கூற முடியும். அதற்கு உதாரணமாக கனடாவைக் காட்டலாம்.

தமிழ்த் தேசியவாதம் இந்தவகைப்பாடுகளில் ஒரு கூறு. அது பெருந்தேசியவாதத்துக்கு எதிராக சிறுதேசியவாதம் எடுத்த இருத்தலுக்கான எடுகோள் மட்டுமே.

இவ்வளவையும் ஓர் அறிகைக்காக இங்கே கூறிக்கொண்டு, ‘வியூகம்’ சஞ்சிகையின் முதலாவது கட்டுரையான ‘தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்’ என்ற கட்டுரைக்கு வரலாம். அது நீண்ட ஒரு கட்டுரை. முப்பத்து மூன்று பக்கங்கள். தேசபக்தன் எழுதியது. அந்தக் கட்டுரையை மய்யமாக வைத்துக்கொண்டே எனது கட்டுரை விரியும்.

இலங்கையில் நடைபெற்ற விடுதலை யுத்தமும், அதன் தோல்வியும், தமிழரின் இன்றைய நிலையும் குறித்த பிரச்னைகளைப் பின்புலமாகக்கொண்டு ‘இனியொரு’ இணைய தளத்தில் சபா நாவலன் எழுதிய ‘ஈழத் தமிழ் பேசும் மக்கள் ஒரு தனித் தேசிய இனம்?’ என்ற கட்டுரையின் எதிர்வினையாக தேசபக்தனால் எழுதப்பட்டுள்ள கட்டுரை இது.
தேசியம், சுயநிர்ணய உரிமை, உலகமயமாதல், தமிழ்த் தேசியம் என்ற தளங்களில் இது வியாபித்து நாவலனது கட்டுரைக்கான தன் எதிர்வினையை முன்வைக்கிறது. நாவலனது கட்டுரையைப் பெரும்பாலும் அங்கீகரித்து அதன் சில கூறுகளுக்கே கட்டுரை தன் மறுப்பினை, மறுவியாக்கியானங்களைக் கூறுவதாகக் கொள்ளவேண்டும். அதிர்ஷ்டவசமாக நான் சபா நாவலனது கட்டுரையை வாசிக்க நேரவில்லை. தேசபக்தனின் கட்டுரையைக்கொண்டே சபா நாவலன் தன் கட்டுரையில் என்ன கூறியிருக்க முடியுமெனத்தான் அனுமானிக்க முடிகிறது. என்றாலும் அது இங்கே எனக்கு முக்கியமில்லை. ‘பல்தேசிய நிறுவனங்கள் உருவாக தேசிய அரசுகள் அழிந்துவிடும், அதாவது தேசியவாதங்கள் மறைந்துவிடுமென்று சபா நாவலன் கூறுவதனை, ‘பல்தேசிய நிறுவன அரசுகள் தோன்றும்போது தேசியம் அழிந்துவிடுமெனில், ஏன் கடவுச் சீட்டுமுறை இன்னும்  இருக்கிறது?’ என தேசபக்தன் கேட்டு மறுப்பது சிறுபிள்ளைத்தனமானது.

அய்ரோப்பிய ஒன்றியம் ஆரம்பமான பொழுதில் அதில் சில விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளே இருந்தன. இன்னும் இஸ்பெயினைச் சேர்த்துக்கொள்வதற்கும் தயக்கங்கள் இருந்தன. பிரிட்டன் பின்னால் இணைவதற்கு வெகுதயக்கம் காட்டியதென்பதும் இரகசியமானதல்ல. ஆனால் இன்று இருபத்தேழு நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன. இந்த இருபத்தேழு நாடுகளுக்கும் ஒன்றியத்திலிருக்கும் ஒரு பிரஜை விசா இன்றிப் பயணித்துவிட முடியும். இந்த இடத்தில் கடவுச்சீட்டு என்பது ஒரு அடையாளம் மட்டும்தான். இனிவரும் காலங்களில் கடவுச் சீட்டு முறைகூட இல்லாது போய்விடலாம்.

பல்நிறுவன அரசுகளிடையே இது சாத்தியப்படும் வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன. உலகமயமாதல் மூலமோ அல்லது வேறு காரணிகள் மூலமோ அரசுகள் அற்றுவிடா என்பதுதான் அறியக்கிடப்பது. அதிலும் முதலாளித்துவ முறைமை ஒரு வளையத்தை இட்டுக்கொண்டே செல்லும். அது கட்டமைப்புக்குள் அடங்கும்வரையே அதனை அனுமதிக்கும் என்பதுதான் முக்கியமான விஷயம். அய்ரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இன்னும் இழுபறியிலேயே இருப்பதை இதற்கு ஆதாரமாகச் சொல்லமுடியும்.

ஆனால் தேசபக்தன் செய்கிற வாதமே பிழையென்றில்லை. அரசுகள் இருக்கவும், அரசுகளின் தேசியங்கள் இருக்கவும்தான் இந்த வகையான அரசியலில் இடமிருக்கிறது என்பது மூலதனத்தின் வலுவைப் பார்த்தால் புரிந்துவிடும் சங்கதி.

தேசபக்கதனை மறுக்கிற இன்னொரு இடம் இருக்கிறது. இது கட்டுரையின் கடைசிப் பகுதியில் வருவதெனினும், பொருள் குறித்து அதை இங்கே சொல்லிவிடுதல் சிறப்பு.

‘மார்க்சியம் பற்றிய எமது புரிதல்களையும் நாம் கேள்விக்குள்ளாக்கும் நேரத்தை அடைகிறோம். மார்க்சியம் என்பது ஒரு விஞ்ஞானம் என்கிறோம். சமூகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறோம். அப்படியானால் அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம், மற்றும் அறிவுத்துறையின் ஏனைய கிளைகளில் ஏற்படும் கோட்பாட்டு வளர்ச்சிகளுக்கு இணையாக நாமும் எமது கோட்பாட்டுச் சாதனங்களை தொடர்ந்தும் புதிதாக உருவாக்கிக்கொள்ளவும், வரலாறு புத்தம் புதிதாக முன்வைக்கும் வளமான பிரச்னைகளில் அவற்றை பரீட்சித்துப் பார்க்கவும், எமக்குப் போதியளவு திறமையும் துணிவும் இருக்கவேண்டும்’ என்கிறார் தேசபக்தன். மார்க்சியம் தேங்கிவிட்டது என்பதற்கு ஒப்பானது இது. மார்க்சியம் ஏன் வளரவேண்டும்? அதை நிறுவனமயமானதாக ஆக்குவதன் நோக்கம் என்ன? அதையே அதிகாரத்தின் மையமாக ஆக்கிவிடுவதில் மேலதிகமாக சுதந்திரத்தை இழப்பதற்கான வாய்ப்புத்தானே அதிகமாகிறது? அதை அரசியலைப் புரிந்துகொள்ளும், சமூக நிலைமைகளை வரையறைப்படுத்திக்கொள்ளும் ஒரு சித்தாந்தமாகப் பார்க்கவேண்டுமே தவிர, நிறுவனங்களை உருவாக்குவதற்கான கொள்கைச் சித்தாந்தமாக அல்ல. இந்தத் தளத்தில் மார்க்ஸியம் எவருக்கும்தான் ஒரு சிந்தனைத் தளத்ததை அளித்துநிற்கிறது.

குமாரி ஜெயவர்தன Feminism and Nationalism in the Third World  நூலில் கூறுவார், ‘மேற்குலக பெண்ணிய தேசியவாத முறைமைகளுக்கும் மூன்றாமுலக நாடுகளிலுள்ள பெண்ணிய தேசியங்களுக்குமிடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன’ என. அதுபோல் மேற்குலகத்தின் தேசிய வரையறைப்புகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளான இலங்கை போன்றனவற்றின் தேசியம் பற்றிய கருதுகோள்களுக்குமிடையே வித்தியாசங்கள் உண்டு. அந்த வகையில் இலங்கையில் தமிழ்த் தேசியம் தன் தோற்றத்துக்கான மூலகாரணிகளை விசேடமாகக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியத்தின் தோற்றத்தை பேரினவாதத்தின் அடக்குமுறைக்கெதிரான விழிப்புணர்வாகக் கொள்ளப்பட முடியமா? முடியுமென்றுதான் தெரிகிறது.

இலங்கைத் தேசியம் உருவாவதன் முன்னம், இலங்கை இன்னும் பிரித்தானியாவின் கீழ் இருந்துகொண்டிருந்த போதிலேயே, சிங்கள இனத்துவத் தேசியம் விழிப்புணர்வு பெற்றுவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காலனித்துவ ஆட்சிக்கெதிரான கலக மனநிலை இலங்கையில் முகிழ்த்ததாகக் கொண்டால் அதில் முக்கியமாக இருக்கக்கூடியவர் அநகாரிக தர்மபால. அவர் 1920களில் கூறினார் பிரிட்டிஷாரின் கல்விமுறைபற்றி, ‘யு டியளவயசன நனரஉயவழைn றiவாழரவ ய ளழடனை கழரனெயவழைnA Bastard Education without Solid Foundation’ என. அவர் குறிப்பிட்டது சிங்கள இனத்து இளைஞர்களைக் கருத்திற்கொண்டதே என்பதை அவரது மற்றைய கட்டுரைகளை நோக்குகையில் தெரியவரும். பிரிட்டிஷ் கல்விமுறையானது A genetation of bastard டையும்  Interlectial paraiahs ஐயும் உருவாக்குமென ஆனந்த குமாரசாமி 1946 இல் கூறுவதற்கு  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே அநகாரிக தர்மபால இவ்வாறு கூறியிருந்தார். அன்றிலிருந்து தொடர்ந்தேர்ச்சியாக வளர்ச்சி பெற்றதே சிங்களத் தேசியம் அல்லது சிங்கள இனத்துவ வாதம்.

ஆயினும் இந்த இனத்துவத் தேசியம் சமூக உயர் வகுப்பாரிடையே தமிழ்-சிங்கள இன பேதமின்றி ஒன்றிணைவதை ஆரம்பத்தில் தடுக்கவில்லையென்பதையும், சிங்களர் மத்தியிலிருந்த கரவா, கொவி சாதி முறைமை பற்றியும், அதில் அதிகாரத்துக்கான யுத்தம் நடந்ததுபற்றியும் தேசபக்தன் கட்டுரையில் சரியாகவே சொல்லிச் செல்கிறார். தமிழ்த் தேசியம் உருவான வரலாறும் சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. சபா நாவலன் இந்தத் தமிழ்த் தேசிய விழிப்பை ஒப்புக்கொள்ளக் காட்டிய சுணக்கம் தேசபக்தனை இவ்வளவு விரிவாக இந்த விஷயத்தை அணுகவைத்ததா தெரியவில்லை.

ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு பிரச்னை இருக்கவே செய்கிறது. அதுவே இனிவரும் காலத்தில் முக்கியமானதும் முதன்மையானதும் ஆன பிரச்னையாக இருக்கப்போகிறது. அதுதான், ஒருவர் இடதுசாரியாகவும் அதேவேளை தமிழ்த் தேசியவாதியாகவும் இருப்பது எப்படி என்ற கேள்வி. இந்தியாவில் இந்துத்துவ அரசியல். இலங்கையில் புத்தத்துவ அரசியல். இந்துத்துவ அரசியலை வேதங்கள், ஆகமங்கள், வழிவழியான நியமங்கள் வரையறுக்கின்றன. புத்தத்துவ அரசியலை பௌத்த மடங்கள் வரையறுக்கின்றன. இதில் முளைப்பது சிங்களத் தேசியம். அதை எதிர்க்கிறது தமிழ்த் தேசியம். ஓர் இடதுசாரி இங்கே எந்த இடத்தில் வருகிறான்? ஒடுக்கப்பட்ட இனத்தின் சார்பாகவா, இல்லையா?

நிறுவனமயப்பட்ட கட்சி சார்பான இடதுசாரிகளிடமிருந்து இதற்கான பதில் இலேசுவில் கிடைத்துவிடாது. ஆனால் சிந்தனை முறைமையால் ஒரு மார்க்ஸியவாதியாக இருப்பவன் தனது பதிலைத் தயங்காது சொல்லமுடியும். அது தமிழ்த் தேசியம் குறித்து சார்பான நிலைப்பாட்டையே கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

0000

(கடந்த டிசம்பர் 13, 2010 ஞாயிற்றுக் கிழமை ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற ‘வியூகம்’ இதழ் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம்)
000
'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...