Posts

Showing posts from February, 2023

சாம்பரில் திரண்ட சொற்கள் - 10

Image
  அன்று முழுக்க பனி கொட்டிக்கொண்டிருந்தது. பஞ்சுப் பொதியை அவிழ்த்து கவிழ்த்து வைத்துக் குலுக்குவதுபோல் காற்றில் அலைப்புண்ணாத பனி இறங்கியது. நிலக் கீழ் வீட்டின் தன் அறையில் சோபாவில் அமர்ந்திருந்தபடி எல்லாம் சிவயோகமலராலும் கண்டுகொள்ள முடிந்திருந்தது. நிலத்தில் படியத் துவங்கிய பனி ஜன்னலின் கீழ்மட்டத்தை எட்டுமளவு உயர்ந்துவிட்டிருந்தது. இவ்வாறு தொடர்ந்து பெய்தால் கண்ணாடியை மூடும் திரையாகிவிடவும் கூடும். அப்போது அவளிருந்த அறைக்கு கல்லறையென்றில்லாமல் வேறு பெயர் என்ன? ஜீவசமாதி! மலருக்கு மனம் துண்ணென்றது. உடம்பில் ஒரு பதற்றம். ஆரம்பத்திலிருந்தே அம்மாதிரி வீட்டில் குடியேறுவதை அவர் மறுத்து வந்திருந்தாலும், சுந்தரத்தின் பொருளாதார அனுகூலத்தின் விளக்கத்தில் நடராஜசிவம் ஒத்துக்கொண்டுவிட மறுப்பதில் தனக்கான ஆதாரம்   அவர் அற்றுப்போனார். இன்னும் கொஞ்சம் அழுத்தமாய்   தான் இருந்திருக்கலாமென அப்போது நினைத்தார். நிலைமைக்குத் தகுந்ததான அந்த முடிவை, மேலே பெரிய பிணக்கின்றி அவர் ஒத்துக்கொண்ட முதல்   சந்தர்ப்பம் அதுவாகவே இருந்தது. வெளியே பனித் தூவல் கண்டதுமே உடனடியாக வெளியே ஓடிச்செல்ல மனம் உந்துதல்கொண்டது.