Sunday, April 13, 2008

LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து

கப்ரியேல் கர்சியா மார்க்வெய்ஸின்
LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து


சமீபத்தில் நாவல்களை மூலக்கதைகளாகக் கொண்ட மூன்று சினிமாக்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இது வாய்ப்பானது ஓர் எதிர்பாராத அமைவில் ஏற்பட்டதுதான். முதலில் NO COUNTRY FOR OLD MEN. கொர்மாக் மக்கார்தியின் அதே தலைப்பிலான நாவலைச் சினிமாவாக்கியது. அடுத்தது கப்ரியேல் கர்ஸியா மார்க்வெய்ஸின் நாவலான LOVE IN THE TIME OF CHOLERA சினிமாவாகி வந்திருந்தது. மூன்றாவது ATONEMENT. இது இயன் மக்கீவானின் ATONEMENT நாவலைப் படமாக்கியது.

இவை மூன்றும் அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து ஆகிய மூன்று பெரும் நாடுகளை மய்யமாகக் கொண்டவை. மட்டுமில்லை, பெருவாரியான மற்றைய நாவல்கள் சினிமாவாகியபோது தலைப்பு மாற்றம் பெற்றதுபோலன்றி, இவை நாவலின் தலைப்புகளையே சினிமாவாக்கத்திலும் கொண்டிருந்தன. நாவலின் மூலத்திலிருந்து மிகவும் மாறுபட்டுவிடாதபடி இம் மூன்று சினிமாக்களும் எடுக்கப்பட்டிருந்ததை தலைப்புகள் சுட்டிநிற்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

ஒரு நாவலைப் படமாக்குவது எப்படியென்பதற்கு இம்மூன்றுமேகூட உதாரணமாகக் கூடியவை. ஆனாலும் மிகச் சமீபத்திலேயே மார்க்வெய்ஸின் Love In The Time of Cholera வை  வாசித்திருந்தாலும் , அதன் அதிர்வுகள் நீண்டகாலம் மனத்தில் அடைந்து கிடந்ததாலும் இதையே இங்கு சிலாகிப்புக்குரியதாய் நான் எடுத்துக்கொள்கிறேன்.

தமிழில் அகத்திணை சொல்லும் காதலின் விழுமியங்கள் அற்புதமானவையே. பனித்திணை நாடுகளிலும் பாலைத்திணை  நாடுகளிலுகூட இதற்கீடான காதல்கள் உண்டு. ரோமியோ-யூலியட், அன்ரனி-கிளியோபாட்ரா ஆகியோரின் காதல்கள் காவியமானவை. மார்க்வெய்ஸ் காட்டும் காதல் நவீன இலக்கியத் தளத்தில் அவைக்குச் சமாந்தரமாகப் பயணப்படக் கூடியது.

மார்க்வெய்ஸின் Love In The Time Of Cholera முதன்முதலாக ஸ்பானிய மொழியில் கொலம்பியாவில் வெளிவந்தது. 1985இல் இது வெளிவந்தபோதே பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இதை அணுகவேண்டிய முறை குறித்து விமர்சகர்கள் எச்சரிக்கைகூடச் செய்தார்கள். மார்க்வெய்ஸே அதுபற்றி இவ்வாறு கூறியுள்ளார்: ‘You have to be carefull not to fall into my trap.’ அத்தனைக்கு உணர்வோட்டமானதும், உணர்வுகளில் வாசகர்களைச் சிக்கவைக்கக்கூடியதுமாகும் இது. மோனா சிம்ப்சன் போன்ற விமர்சகர்கள் இதுபற்றி மிக ஆழமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இது அரசியலையோ, சமூகத்தையோபற்றிப் பேசவில்லை: மாறாக, காலத்தைப் பற்றிப் பேசுகிறது என்றிருக்கிறார் அவர்.

கரிபியன் கடலோர நகரமொன்றிலிருந்து மய்யம் கொள்கிறது நாவல். டாக்டர் யுவனெல் எர்பினோவின் யுத்தத்தில் முடமான நண்பரொருவர் முதுமையை வாழமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் மரண நிகழ்வுதான் அதன் ஆரம்பம். பின்னோட்டமாக சுமார் ஐம்பது ஆண்டுக் கால களத்துக்கு விரியும் நாவல், பிறகு நிகழ் தளத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளை விவரிக்கும். சாதாரணமான முக்கோணக் காதல்தான் நாவலின் கரு. எனினும் அது நகர்ந்துசெல்லும் வேகமும் காட்டும் காட்சிகளும் பிரமாண்டமானவை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களையும், இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று தசாப்தங்களையும் இணைக்கும் நாவலென்றும் இதனைக் கூறமுடியும். இந்த சுமார் அரை நூற்றாண்டுக் காலத்தில் ஒரு பதின்ம வயதுக் காதல், உயிர்பெற்றிருந்து அரை நூற்றாண்டு கழிந்த பின்னால் ஒரு சந்தர்ப்பத்தில் எவ்வாறு இணைந்துகொண்டது என்பதை விபரிக்கும் இந்நாவல் காட்டும் காதலின் இலக்கணம் வித்தியாசமானது. மட்டுமில்லை, அதிசயமானதும். இதுவே கொலரா பரவிப் படர்ந்ததுபோல் வாசக உலகத்தைப் பீடித்தது. தனக்குப் பிடித்த நாவலாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் இதைக் குறிப்பிட்டிருப்பதும் இத்தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டியது.

பெர்மினா டாஸாவுக்கும் புளோறென்ரினோ அரிஸாவுக்கும் தோன்றும் காதலுக்கு பெர்மினாவின் தந்தை காட்டும் தீவிர எதிர்ப்பு மட்டுமில்லை, பெர்மினாவே பின்னால் தன் நிகரற்ற அழகினுக்கு ஏற்ற மணமகனாக தந்திச் சேவை அலுவலகமொன்றில் பணிபுரியும் புளோறென்ரினோ இருக்க முடியாதென நம்பத் துவங்குவதும் அவளை டாக்டர் யுவனெல் எர்பினோவுக்கு மனைவியாக்குகிறது.

காலம் விரைந்து கழிகிறது. மறுபடி பெர்மினா அந்நகருக்கு வரும்வரையான காலத்தில் புளோறென்ரினோவின் அந்தஸ்து உயர்ந்து வெகு பணக்காரனாகி விடுகிறான். புளோறென்ரினோவை மறுபடி பார்க்கும் சந்தர்ப்பத்தில்கூட தன் கணவனான யுவனெலுடன் மாறாத காதல் கொண்டவளாகவே இருக்கிறாள் பெர்மினா. இந்நிலையில் யுவனெலின் மரணம் சம்பவிக்கிறது. இறுதிக் கிரியைகளை முடித்துவிட்டு வரும் பெர்மினாவிடம் புளோறென்ரினோ அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்துக்காக தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் காத்திருப்பதைக் கூறி தன் காதலை வெளிப்படுத்துகிறான். அவனை ஏசி விரட்டுகிறாள் பெர்மினா.

இருந்தும் தனக்குள் ஒழிந்திருக்கும் காதலின் ஒரு பொறியை உணர்வதின்மூலமாய் புளோறென்ரினோவின் தொடர்ந்த காதல் கடிதங்களுக்கு இறுதியாகப் பதிலெழுதத் தீர்மானிக்கிறாள் அவள். அவர்களது தொடர்பு பிள்ளைகள், மருமக்கள் வரை தெரியவருவதும், அதை உதாசீனம்செய்து பெர்மினா புளோறென்ரினோவைச் சந்தித்துவருவதும் மட்டுமில்லை, ஒரு கப்பல் உல்லாசப் பயணத்துக்கும் அவள் அவனுடன் தயாராகிறாள்.

அப் பயணத்தின்போதுதான் அவர்களது முதல் உடலுறவு நிகழ்கிறது. அப்போது அவர்களுக்கு வயது எழுபதுக்கும் மேல்.

இக்கதையை மூலமாய் வைத்து எடுக்கப்பட்ட சினிமாதான் 2007இல் வெளிவந்திருக்கிறது.

நாவலுக்கும் சினிமாவுக்குமிடையே பெரிய மாறுபாடுகள் இல்லையென்பதுதான் இதிலுள்ள விசேஷமே. ஆனால் புளோறென்ரினோவின் பாத்திரம் சற்றே உணர்வுகள் சார்ந்த வகையில் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாய் ஒரு தீவிர சினிமா ரசிகன் உணரவே செய்வான்.

பெர்மினாவின் பிரிவின் பின் தான் அவளுக்காக காலமெல்லாம் பெண்சுகமற்று வாழவே புளோறென்ரினோ விருப்பப்படினும், அதன் மறுதலையாகவே வாழ்ந்து முடிக்கிறான். பெர்மினாபற்றிய அவனது நினைப்பை வெறும் இந்திய சினிமாத்தன காதல் தோல்வியாக நாவலிலும் சரி, சினிமாவிலும் சரி நம்மால் காணமுடியாமலே இருக்கும். ஆனாலும் எல்லையற்ற ஒரு காமவிழைச்சில் அவன் விழுந்தே கிடக்கிறான். காதலியின் நினைவினது தீராப் பொறி காரணமாவதாகவே வாசகன் அல்லது ரசிகன் உணர்த்தப் பெறுகிறான். அதுவரை அவன் 622 பெண்களோடு உடலுறவைக் கொண்டிருப்பானென்பது சாதாரணமானதல்ல. தணியாத காதலை அவன் தணிக்க எடுத்த முயற்சியாகவே பல்வேறு விமர்சகர்களாலும் இது பார்க்கப்பட்டது.

நவீன இலக்கிய உலகுக்கு மாந்திரீக யதார்த்தவாத நாவல்களை அளித்த கப்ரியேல் கர்ஸியா மார்க்வெய்ஸ் இந்த நாவலிலும் அந்த உத்தியையே பின்பற்றியிருக்கிறார். கொலராவாக ஆசிரியர் எதை உருவகித்தார் என்பதுபற்றி இன்றும் விமர்சகர்களிடையே அபிப்பிராய பேதமுண்டு. அவர் காதலின் வலியையே அவ்வாறு உருவகித்தார் என்று ஒருசாராரும், கொலம்பியா போன்ற ஒப்பீட்டளவில் வறிய நாடுகளில் காலரா என்ற பதமே அச்சம் தருவது, அதனால் வசதியீனங்களின் படிமமாக கொலராவை மார்க்வெய்ஸ் அமைத்தார் என்று ஒருசாராருமாய் அபிப்பிராயங்கள்.
நாவலில் இவ்வாறொரு நிறுதிட்டத்தை அடையமுடியாத் தன்மை, சினிமாவில் தெளிவுள்ளதாகக் காட்சியமைப்பாகியிருக்கும். இது சினிமா தவறிவிழுந்த இடமாகத் தெரியினும், மார்க்வெய்ஸின் மாந்திரீக யதார்த்தவாத நாவலைச் சினிமாவாக்கும் இடத்தில் இப்படியான இடர்ப்பாடுகளை ஒரு பிரதியமைப்பாளன் அல்லது நெறியாளுநன் இவ்வண்ணமே கையாள முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

கொலரா நோய்க்குப் பயந்து இடம்பெயர்ந்து வரும் குடும்பமாக பெர்மினாவின் குடும்பம் இருந்தபோதும், கொலரா வேறொன்றின் அடையாளமாய் நாவலில் இடம்பெறுவதாகவே கருதமுடிகிறது என்பது விமர்சகர்களின் கருத்து.
இவையெல்லாம்கொண்டு ஒட்டுமொத்தமாக நோக்குகையில், நாவலின் இணையாக சினிமா வரமுடியாதெனினும், அது அதுமாதிரியான சினிமாக்களுக்கு இணையாக இருப்பதாய்ச் சொல்லமுடிகிறது.

வெகுஜன சினிமாவா, இடைநிலைச் சினிமாவா, கலைச் சினிமாவா என இத் திரைப்படம் குறித்து ஒரு முடிவுக்கு வருவதில் இணக்கப்பாடின்மை தீவிர பார்வையாளர் மத்தியில் உண்டு. இம் மூன்று தன்மைகளும் சேர்ந்த ஒரு நல்ல சினிமா என்பதுதான் என் கணிப்பீடு.

இச் சினிமாவை நாவலுடன் பொருத்திப் பார்த்து தகைமை காண்கின்ற ஒரு முயற்சியே இது. நடிப்பு, நெறியாள்கை, ஒளி ஒலி அமைப்புக்கள்பற்றி இதில் நான் அதிகமும் ஒப்புமைக்குச் செல்லவில்லை என்பதையும் சொல்லவே வேண்டும்.

00000

தாய்வீடு 2008

நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்…

நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்…
-தேவகாந்தன்-

மண்ணுக்கும் மனித மனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாய்க் காலங்காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. மண்ணின் வளம் பயிர்களுக்கு மட்டுமில்லை, மனங்களுக்கும் ஏற்படுமென்பதை சொல்லித் தெரியாமல் உணர்வதற்கான தருணம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதபடி நிகழும். ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று சொல்லப்பட்டது சும்மா இல்லை. உணர்ந்துதான்.

ஒரு தசாப்தத்துக்கும் மேலான ஆண்டுகளை நான் தமிழ்நாட்டிலே கழித்திருக்கிறேன். இந்திய உபகண்டத்தின் பல்வேறு நிலப் பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன். இந்தியாவின் தென்கோணம் தொடங்கி வடகோணம் ஈறாக, கீழ்த் திசையிலிருந்து மேற்றிசைவரை என் பயணம் பல தடவைகளில் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் திருநெல்வேலிபோலவும், கேரளாவில் தலைச்சேரி போலவும் மிக அரிதான இடங்கள்  சிலவற்றையே என்னால் பார்க்க முடிந்திருக்கிறது.

திருநெல்வேலி எனக்குச் சின்ன வயதிலேயே பெயர்ப் பரிச்சயமான ஊர். திருநெல்வேலியிலேதான் பாஞ்சாலங்குறிச்சி இருக்கிறது. கட்டபொம்மனைப்பற்றிய சினிமா ஐம்பதுகளின் நடுப்பகுதியில் வெளிவந்தபோது ஞாபகத்தில் விழுந்த சொல், பின் எப்போதும் என் நினைவைவிட்டு அகலவில்லையென்றே தோன்றுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு ஜில்லாக்களில் திருநெல்வேலியை மட்டுமே திருநெல்வேலிச் சீமையென்று அழைக்கும் வழக்கு இந்தியாவில் பிரிட்டிஷ்காரரின் காலத்திலிருந்து தொடங்கியதுதான். ஆனாலும் காரணமில்லாமலில்லை. தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் வளம் கொழித்த பூமி திருநெல்வேலி. பாரதி பிறந்தது அங்கேதான். புதுமைப்பித்தன் பிறந்தது அங்கேதான். இன்னும் வண்ணதாசன், வண்ணநிலவன், தி.க.சி., சிதம்பர ரகுநாதன், ராஜமார்த்தாண்டன், வல்லிக்கண்ணன் எனப் பல்வேறு படைப்பாளிகளும், விமர்சகர்களும் பிறந்த ஊரும் அது.

மாரி காலம் முடிந்து, தாமிரபரணி பொங்கிப் பாயும் அழகைப் பார்க்கவேண்டும். கண்கொள்ளாக் காட்சி.

இந்தப் பெருக்கு இவர்களின் மனங்களில் இருக்கிறது. இது ஒரு தீவிரத்தின், கலகத்தின் அம்சமாகவே எனக்குத் தெரிகிறது.

அண்மையில் 'சென்னைச் சங்கமம்' நடந்து முடிந்திருப்பதாகவும், கிராமியக் கலைகளுக்கான அவ்விழாவில் கவிதை வாசிப்பு போன்ற பல்வேறு இலக்கியக் களங்கள் நடைபெற்றதாகவும் அறிய முடிந்ததிலிருந்து திருநெல்வேலி பற்றிய நினைப்பு மீண்டும் என்னுள் அலையடிக்க ஆரம்பித்துவிட்டது.

இலங்கையில் எமது 'திண்ணைவேலி'போல திருநெல்வேலி இருப்பதாலும், இந்த மாவட்டத்திலிருந்தே பல தமிழ்க் குடும்பங்கள் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இலங்கை மலைநாட்டில் குடியேற்றப்பட்டார்கள் என்ற அறிகை இருந்ததாலும் என்னுள் விழுந்த ஒரு பிரியம், இன்று பேரினவாதத்தால் இலங்கையில் திருநெல்வேலி பல்கலைக் கழகத் தமிழ் மாணவர்கள் குறிவைத்து அழிக்கப்படும் அவலத்தினால் அக்கறையாகியிருந்த தருணமாதலாலும் இந் நினைவின் அலையடிப்பு வெகு தீவிரம்பெற்று இருந்தது.

அதனால் திருநெல்வேலியும், அவ்வூர் சார்ந்த சில நண்பர்களும், அவர்களுக்கும் அந்த மண்ணுக்குமிடையில் இருந்த பண்புத் தொடர்புகளும் என்னில் இடையறா நினைப்புக்களாயின. அதுபற்றித்தான் இங்கே தெரிவிக்க வருகிறேன். இது தனிமனித சம்பவத்தின் பதிவு மட்டுமில்லை, இலக்கியப் பதிவுமாகும்.

'சென்னைச் சங்கம'த்தில் நடந்த கவிதை அமர்விற்குத் தலைமை வகித்தவர் கவிஞர் விக்கிரமாதித்யன் என்று அறிந்தபோது, மிக்க மகிழ்ச்சிப்பட்டேன். விக்கிரமாதித்யன் நல்ல கவிஞர் மட்டுமில்லை, எனது நண்பருமாவார். ‘சிம்மாசனம் இல்லாத ராஜா’ என்று இவரைப்பற்றி ஒருமுறை ஜெயமோகன் குறிப்பிட்டது உடனடியாக ஞாபகம் வருகிறது.

கவிதை உலகில் விக்கிரமாதித்யனின் நடை தனித்துவமானது. ஆனாலும் ஒரு கலகக்காரராக அவரை வாசக உலகம் அறிந்திருந்ததே தவிர, அவரது கவிதை ஆற்றலை அது பெரிதாகக் கண்டுகொள்ளவேயில்லை. அதனால்தான் ஜெயமோகன் அவ்வாறு கூறியிருந்தார். இப்போதாவது அரச எடுப்பின் அக் கிராமியக் கலைவிழாவில், நூறு கவிஞர்கள் கவிதை வாசித்த அமர்வுக்கு அவர் தலைமை தாங்கியது ஒரு ‘சிம்மாசனம்’ கிடைத்ததுபோலத்தான் என நினைத்ததே என் மகிழ்வுக்குக் காரணம்.

ஏறக்குறைய தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து எனக்கு கவிஞர் விக்கிரமாதித்யனை அறிமுகம். தொண்ணூற்றைந்துக்கு மேலே மிகநெருக்கமாகப் பழகியிருந்தோம். திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்ததும், நேரே வீடுவந்து என்னைச் சந்திக்கிற நண்பர் அவர். ஊரிலிருந்தாலும் கிழமைக்கு ஒருமுறையாவது கடிதமெழுதிவிடுவார். பெரும்பாலும் சுகதுக்கங்கள் விசாரிக்கிற கடிதங்களாக அவை இருப்பதில்லையென்பதுதான் அவற்றின் விசேஷம். தான் அப்போது தங்கியுள்ள ஊர்பற்றி, அங்குள்ள நண்பர்கள்பற்றி, அண்மையில் வெளிவந்த அல்லது வெளிவரவிருக்கும் நூல்கள் பற்றியதாகவே அவை இருக்கும். அவரது இயற்பெயர் நம்பிராஜன். நம்பியென்றே நான் அழைப்பேன்.

விக்கிரமாதித்தயன் கலக்காரர். அதுபோலவே சிறீரெங்கனும். விக்கிரமாதித்யன் அளவு சிறீரெங்கன் பிரபலமில்லை. ஆனாலும் கலகக் குணம் இருவருக்கும் பொது. இதுதான் பாரதியிடமிருந்தது. இதுதான் புதுமைப்பித்தனிடமும் இருந்தது.

சிறீரெங்கன் எனக்கு எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்தே நண்பர். சென்னையில் ஒரு காம்பவுண்ட்டுக்குள் வேறுவேறு வீடுகளில் நாம் குடியிருந்தோம். இடதுசாரிச் சிந்தனையாளர், நல்ல இலக்கிய வாசகர் என்ற இந்த அம்சங்களே நம் நட்புக்குக் காரணம். அவர் தனியார் கல்லூரியொன்றில் கணித ஆசிரியராக இருந்தவர். பல்வேறு தகைமைகள் இருந்தும் அவர் தன்னையொரு கணித ஆசிரியனாகவே எண்ணிக்கொண்டிருந்தார். எம்.ஏ. பட்டதாரியான அவரின் சிறப்புப் பாடம் கணிதம்தான். ஒரு ‘கீறு’ இருக்கிற சமயத்தில், தன்னை ஒரு கணிதவியலாளன் (Mathematician) என்றே அவர் சொல்வார்.

நான் நன்கு பழகிய நண்பர்களுள் மார்க்ஸீயத்தை மிக நுணுக்கமாய்த் தெரிந்தவர் அவர் மட்டும்தான். மூலதனத்தின் சிற்சில பகுதிகளையே அதுவரையில் நான் கற்றிருந்தேன். ஒரு பத்து வருஷ  காலத்தில் அவரிடமிருந்தே மீதிப் பகுதியை நான் படித்தறிந்தேன். அவரது படிப்பித்தல் முறை அபாரமானது. அவரது சொந்த இலக்கிய நயம் தேரும் திறமை, படிப்பித்தலில் கூடுதல் பலமாக இருந்து தொழிற்பட்டது. இப்போதும் மூலதனத்தை முற்றாக விளங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லமுடியாவிட்டாலும், அதைப் பெருமளவுக்கு அவரின் துணைகொண்டே நான் வாசித்தறிந்தேன் எனல்வேண்டும்.

கணிதம் தெரியாவிட்டால் மூலதனத்தை முழுவதுமாகப் புரிய முடியாது என்று வெட்டொன்று துண்டிரண்டாகக் கூறிய மனிதர் அவர். இன்றைய அரசியல் சதுரங்கக் களத்தில் காய் நகர்த்தல்களை நான் மார்க்ஸின் துணைகொண்டே புரிந்துகொள்கிறேன். அப்போதெல்லாம் சிறீரெங்கனை நான் நினைத்துக்கொள்கிறேன்.

மிக அண்மைக் காலம்வரை தமிழில் மார்க்ஸின் மூலதனம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவில்லை. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில்தான் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ சென்சரி புக் கவுஸின் மூலம் முதன்முதலில் வெளிவந்தது. அது திரு. தியாகு சிறையிலிருந்து ஆயுட்தண்டனையைக் கழித்த காலத்தில் செய்த மொழிபெயர்ப்பாகும். அது வெளிவந்த சிறிது காலத்திலேயே இன்னுமொருவர் செய்த மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளிவந்தது. இரண்டையும் வாசித்து, அவர்கள் மூலதனத்தைப் புரிவதில் செய்த தவறுகளை மூலதனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் மொழிபெயர்ப்புக்களை ஒருசேர வைத்து எடுத்துக்காட்டியிருக்கிறார் சிறீரெங்கன். நான் மட்டுமில்லை, பலரும் பயன் பெறவேண்டும், இதை நீங்கள் ஏன் எழுதக்கூடாது? என்று நான் கேட்டபோது, எழுதத்தான்வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். பின் ஏனோ செய்யாது விட்டுவிட்டார்.

லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் பங்குகொண்டிருந்த ‘சூர்யோதயா’ என்றொரு பெண்கள் பத்திரிகை சிறிதுகாலம் வெளிவந்துகொண்டிருந்தது சென்னையிலிருந்து. அப் பத்திரிகை சிறீரெங்கனின் வழிகாட்டலில்தான் நடந்தது. எனது ‘தீர்ப்பு’ சிறுகதை வெளிவந்தது அச் சஞ்சிகையில்தான். அதை வேற்றுமொழிப் பெண்கள் சஞ்சிகைகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புச் செய்து அவ்வாசிரியர் குழுவேதான் அனுப்பி, இந்தியா பூரா அது அறியப்பட்டதாய்ப் பின்னர் அறிந்திருக்கிறேன்.

அது நின்று போய்ச் சிறிதுகாலத்தில் ஒரு சிறுபத்திரிகை தொடங்கும் என் எண்ணத்தை சிறீரெங்கனுக்கு நான் சொல்லி சில வாரங்களுக்குள்ளேயே ‘புதியன’ என்றொரு சிறுபத்திரிகையை நண்பர் ஆரம்பித்துவிட்டார். என் ‘இலக்கு’ அதற்கு ஒரு மாதம் கழித்தே வெளிவந்தது. ஒரே அச்சகத்தில் அவை அச்சாக்கமானது மட்டுமில்லை, ஒரே முகவரியிலிருந்தும் வெளிவந்தன. ஒரு பத்திரிகைக்கு மற்றவர் உதவி ஆசியர்போல் வேலைசெய்தோம். வேறு எங்காவது இதுபோலச் சாத்தியம் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகமே.

‘புதியன’வில் எஸ்.என்.நாகராஜனின் ‘மார்க்சீயம்: கிழக்கும் மேற்கும்’ என்ற நூலுக்கு ஓர் ஆழமான விமர்சனம் எழுதியிருந்தார் சிறீரெங்கன். சில தொடர்களாக அது வெளிவந்தது. பரவலான கவனிப்பைப் பெற்றது. என்னோடு கலந்தாலோசித்து, விவாதித்துத்தான் அந்த விமர்சனக் கட்டுரையை அவர் எழுதினார். அதில் அவர் காட்டிய பொறுப்புணர்வு என்னை இப்போதும் பிரமிக்கவைக்கும்.

அந்த நண்பர் இப்போது உயிரோடு இல்லை. மிகவும் ஆற்றல் வாய்ந்த, மிக்க வாசிப்புப் பழக்கமுடைய, எவரோடும் அளவுக்கு அதிகமாக வார்த்தையாடாத அந்த நண்பர் நான் சென்னையிலிருக்கும்போதுதான் காலமானார். ஆனாலும் என் கடுமையான சுகவீனம் காரணமாய் நான் சிறிதுகாலம் ஒதுக்கத்திலிருந்த காரணத்தால், அச் சாவுபற்றி அறியக்கூட முடியாமல் போனது. அறிந்த சிறிதுகாலத்தில் நானும் இந்தியாவைவிட்டு இலங்கை சென்றுவிட்டேன்.

சிறீரெங்கனின் ஆவியே வந்து சஞ்சலம் செய்துகொண்டிருந்ததுபோலத்தான் அவரின் நினைவு என்னை வதைத்துக்கொண்டிருந்தது. அவர் சாகிற காலத்தில் மிகவும் மனநிம்மதியை இழந்திருந்தார் என்று பின்னர் அறிந்தேன். கிழமையின் பலநாட்களிலும் சேர்ந்துதான் குடிப்போம். ஆனாலும் இலக்கிய, அறிவார்ந்த, இடதுசாரி அரசியல், உலக நடப்புகள் தவிர உரையாடல் வேறு சாதாரண விஷயங்களில் சஞ்சரித்ததில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்.

அவரின் உருவம் அடிக்கடி என் மனக்கண்ணில் விழுந்துகொண்டிருந்தது. நீண்ட தலைமயிர். சடைத்த தாடி. காலையில் எண்ணெய் பூசி தோய்ந்துவிட்டு தலையை அழுந்த வாரிவிட்டாரென்றால், இரவுவரை அது கலையாது. விக்கிரமாதித்யனுக்கும் அதுமாதிரித் தோற்றம்தான். ஆனாலும் அது அவ்வப்போது நீண்ட தலைமுடி கட்டையாகவும், தாடி மீசை மட்டுமாகவும் மாறிக்கொண்டிருக்கும். ஆனால் சிறீரெங்கன் முதல் பார்த்த கோலத்திலேயே கடைசிவரை காட்சியாகியிருந்தார்.

எந்த விஷயத்திலுமுள்ள முரண் முதற் பார்வையிலேயே இவருக்கு எப்படித் தட்டுப்பட்டு விடுகிறதென்று பலமுறையும் எண்ணி நான் வியந்திருக்கிறேன். அது அவரது கலக மனத்துக்கு மட்டுமே சாத்தியமாவது என்றுதான் பின்னர் தெளிந்தேன். மண்ணின் குணம், மனிதர்களுக்கும் சேரும்தான்.
சிறீரெங்கன் ஒருவகையில் என் நண்பர். ஒருவகையில் பல விஷயங்களில் ஆலோசனை சொன்ன மந்திரி. ஒருவகையில் மார்க்ஸீயம் போதித்த ஆசிரியர். அவர் நினைவை நான் அலட்சியம் பண்ணிவிட முடியாது.

இந்தப் பதிவின் பின்னராவது அந்த என் மனச் சஞ்சலம் ஓரளவேனும் தணியும் என்று நம்புகிறேன்.

தாய்வீடு, 2007

00000

Friday, April 11, 2008

அதை அதுவாக 22

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 22

‘அறிய அறிய அறியாமையே மிகுகிறது. அனுபவிக்க அனுபவிக்க காமமே வெகுக்கிறது.’


- தேவகாந்தன் -


(52)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

(காமம், கனவு, குறிப்பறிதல் 5) குறள் 1095


குறிப்புப் புலப்படும்படி பார்க்க மட்டுமில்லை, திட்டமாய் அர்த்தம் தெரியும்படி அவள் கண்ணைச் சுழற்றிக் கொண்டு அமுக்கச் சிரிப்பும் செய்கிறாள்.


தமிழ் இலக்கியத்திலுள்ள களவியல் வாசிப்பு அற்புதமான சுகம் தருவது.

அதன் முழு சாரத்தையும் பெரும்பாலும் திருக்குறளிலே காணமுடியும். மிகவும் திட்ப நுட்பமாக அதில் காதலுணர்வுகள், செய்கைகள், அசைவுகளெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கவியின் அனுபவ சாரலில் நனைகிற பேரின்பம் நவீன வாசகனையும் அதிசயப்பட வைக்கும்.

கூட்டத்தில் தோழியரோடு நிற்கிறாள் அந்தப் பெண். சிரித்துப் பேசி ஏகாங்கியராய் அவர்கள்.

தூரத்தில் தன் தோழரோடு அவன்.

அவனை அவள் அறிவாள். அவனது அவாவும் அறிந்தவள்தான். ஆனாலும் போய்ப் பேசிவிட முடியுமா? ஊர், உறவுகள் என்ன சொல்லும்? நாணம்தான் விட்டுவிடுமா?

அவனோ அவள் சம்மதம் இல்லாவிட்டால் உயிர் தரிக்கலாற்றேன் என்பதுபோல கையற்று, ஏக்குற்று நிற்கிறான்.

அவள் அவனது ஏக்கத்தைப் பார்த்து, ‘கள்ளா, உன் ஆசை எனக்குத் தெரியும்… ஆனால் தோழியர் அப்பால் போனால்தானே, நான் என்ன செய்யட்டும்? என் எண்ணம் உனக்குப் புரிகிறதா?’ என்று மனத்துள் வேர்க்கிறாள்.

இவ்வளவும் அவள் சிரித்தலோடு செய்யும் கண்ணின் ‘சிறக்கணிப்’பில்தான் தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு காட்சியையே நாடகப் படுத்துவதுமாதிரியான வனப்புள்ள குறள்கள் திருக்குறளில் ஏராளம்.

ஏனைய அகத்திணை நூல்கள் காட்சியை நாடகப் பாங்கில் தத்ரூபமாக விரிக்கும்.

திருக்குறளில் காட்சியை விரிக்கும் பணி வாசகனுக்கானது.


(53)


அறிதொறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறு சேயிழை மாட்டு.

( காமம், களவு, புணர்ச்சி மகிழ்தல் 10) குறள் 1110


ஒரு வி~யத்தைப் புதிதாக அறிகிறபோது அதுபற்றிய அறியாமையே மேலும் பெருகுகிறது. அதுபோல செவ்விய ஆபரணங்களை அணிந்த இவளிடத்தில் இன்பத்தைத் துய்க்கத் துய்க்க இன்னுமின்னுமாய் அனுபவிக்கவேண்டுமென்ற தாபமே பிறக்கிறது.இன்மையிலிருந்துதான் அறிவு தோன்றும். தெரிந்ததைத் தெரிபவர் எவருமில்லை. தெரியாததைத் தெரிகிறபோது அதுபற்றிய அறியாமையே கூட வளர்கிறது.

கெடுவிலிருந்து இன்பம் பிறக்கிறது. தேடலில்லாத உறுதலில் இன்பம் கிடைப்பதில்லை.

அவள்பாலடையும் இன்பமும் அவனது கெடுவிலிருந்து பிறப்பதேயாகும்.

அதனால்தான் கெடு அழியாது நிற்கிறது, எவ்வளவு இன்பத்தை நுகர்ந்தபோதும்.

ஸென் ஞானி சொல்வதுபோல இதை இவ்வாறும் கூறலாம்: ‘அறிந்து முடிப்பவர் எவருமிலர். ஆறிய அறிய, அறியாமையே மிகுகிறது. கெடுவை அடக்கினவர் உண்டோ? அனுபவித்தாலும், கெடு அடங்குவதில்லை. அனுபவிக்க அனுபவிக்க அது வெகுக்கும், ஒருவனது அறியாமைபோல.’

000

அதை அதுவாக 21

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 21

‘பெண்கவியாய் இருந்தால்தான் அவ்வாறெல்லாம் நினைத்திருக்க முடியுமோ?’


- தேவகாந்தன் -(51)

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
(காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல் 7) குறள் 1087

ஆண் மதயானையின் பார்வையை ஒடுங்க மறைக்கப் போடப்படும் முகபடாத்தினை நிகர்த்ததாய் இருக்கின்றது, மாதர்களின் நிமிர்ந்த முலைகளின் மேல் போடப்பட்ட துகில்.


‘படாஅ முலை’ என்பதிலிருந்து நிமிர்ந்த முலை பெறப்பட்டது.

மாதர் என்ற பொதுச் சொல்லால் குறிக்கப்பட்டிருப்பினும், இளம் பெண்கள்பற்றிச் சொல்லப்பட்ட குறளாகவே இதைக் கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட ஒரு பெண்ணைத் தினமும் பார்த்துப் பார்த்து, அவள் மீதான காதலாய் அது வளர்ந்து வளர்ந்து ஆசை நிலையை அடைந்துவிட்ட ஒருவனின் ஒருவகைப் பிதற்றலாகவே இலக்கியம் இதுபோன்ற பாடல்களை வகைசெய்திருக்கிறது.

படைப்பு, பாதிக்கப்பட்ட ஒருவனின் அனுபவத்தையே கூறுகிறதெனினும், அது ஒரு அறிதலாக ஆகிநிற்கிறது இங்கே.

ஒருத்தியைப் பெயர் சுட்டிக் குறித்துவிடாத இந்த அவதானம் தமிழரின் மன நாகரிகத்தின் அடையாளம்.

இதையே அகத்திணையாய் வகைசெய்தனர் அவர்.

காதல் விவகாரம்கூட பெயர் சுட்டப்பட்டவுடன் புறத்திணையாகிவிடுகிறது.

இந்தக் குறளைப் படித்தபோது எனக்கு சங்கப் பாடலொன்று ஞாபகத்துக்கு வந்தது.

‘நீ வெளியே வருகிறபோதெல்லாம் உன் அழகு என்னை என்ன பாடாய்ப் படுத்துகிறது பார்! இது உன்னுடைய தவறில்லைத்தான். உன்னை வெளியே செல்லவிட்ட உனது வீட்டாரின் தவறுமில்லை. பின்னே யாருடைய தவறென்கிறாய்? கொல்யானையின் இரு கூர்ங் கோட்டங்கள்போன்ற முலைகளை உடையவளாயிருக்கிற நீ, வெளியே வரும்போது முன்னே இன்னாள் வருகிறாள் என்று பறையறைந்துதான் செல்லவேண்டும் என ஆணை பிறப்பிக்காத அரசனே தவறுடையான்’ என்று ஒருத்திமீதான காதல் மீதூரப் பெற்ற ஒருவனின் கூற்றாக வரும் அப்பாடல்.

‘நீயும் தவறில்லை
நின்னைப் புறம் போதரல்விட்ட
நுமரும் தவறல்லர்…
பறையறைந்தல்லது செல்லற்க என்னா
இறையே தவறுடையான்’
என்ற சங்கப் பாடலின் அர்த்தத்தை மேற்கண்டவாறு விரிக்க முடியும்.

இது தவிர்க்;க முடியாதபடிக்கு இன்னொரு கேள்வியையும் கிளர்த்தும்.

மதயானையிடமிருந்து மக்களைக் காக்கத்தான் யானைக்கு முகபடாம். அதுபோல பெண்களிடமிருந்து ஆண்களைக் காக்கத்தான் பெண்களுக்கு மேலாடை! உண்மையில் காக்கப்படவேண்டியவர்கள் பெண்களாகவே இருந்திருப்பர். அதனால், ‘அழகான பெண்கள் நடமாடும் இவ் வீதியில் ஆண்கள் மதயானைகளுக்குப்போல தம் கண்களை மறைத்துத்தான் நடமாடவேண்டும்’ என்று ஆணை பிறப்பிக்கப்படுவதுதானே நியாயம்?

ஓ..ஒரு பெண்கவியாய் இருந்தால்தான் இவ்வாறெல்லாம் நினைத்திருக்க முடியுமோ என்னவோ.

000

அதை அதுவாக 20

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 20

‘இரத்தல் இனிது என்று சொல்ல எவனால் முடியும், வள்ளுவனைத் தவிர?’


- தேவகாந்தன் -(50)

கரப்பிலா செஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏர் உடைத்து.
(பொருள், குடி, இரவு 3) குறள் 1053

உள்ளதை ஒளித்து வைக்காததும், ஈவதை ஒரு கடமையாகவும் கொண்ட நெஞ்சமிருக்கிறவருக்கு முன்னே நின்று இரப்பதைக்கூட தன்மானம் இழக்காமல் செய்யமுடியும்.


ஏர் என்பதற்கு அழகு என்றே பலரும் பொருள் கொண்டு உரை செய்துள்ளனர். கலைஞர் மு.கருணாநிதி அதற்குப் பெருமையென்று சரியாகவே பொருள் கொண்டிருக்கிறார்.

இரந்து உயிர்வாழ்தலே பலராலும் செய்ய முடிந்திருந்த ஒரு சமுதாயத்தில், இரத்தலைச் செய்யக் கூச்சப்படக்கூடாதெனச் சொல்வது அக் காலகட்டத்துக்குத் தர்மம்.

சாதாரணர்களின் ஜீவனோபாயம் நிலத்தில் தொழில் புரிதல் என்றிருந்த நிலைமையில், அச் சமூகத்தில் பல்லாயிரம் பேர் வேலையற்றும், பசி பட்டினியோடும் அலைந்திருப்பர் என்பதைச் சந்தேகிக்க வேண்டியதில்லை. அந்தச் சமூகத்தில் வாழ்ந்துவிட இரப்பதில் தவறில்லையென்பது கால அறம்.

‘இன்பம் ஒருவருக்கு இரத்தல்’ என்று கூறுகிற குறளே இருக்கிறது. அதற்கு அடுத்துவரும் குறள்தான் இது. இரக்கப் பின்னின்ற சமூகத்துக்கான நம்பிக்கையுரை இதுவெனக் கொள்ளலாம். அப்படியெனில்…இரக்கவும் மனமின்;றி மடிந்தவர்களைப்பற்றி இப் புலவன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். ஒருவேளை தன் கண்ணாரக் கண்டிருக்கவும் கூடும்.

எந்தச் சிந்தனா போக்குடைய கவிஞனும் ஏதோ ஒரு கட்டத்தில் தன் கவிக்குணம் மேவி, சிந்தனைப் போக்கையே தூக்கி வீசிவிடுகிறமாதிரி நடந்துவிடுகிற சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வள்ளுவன் இதற்கு விதிவிலக்கில்லை.

வாழு…வாழு…நன்கு வாழு.. பொருள் இந்த புவன வாழ்வுக்கு அவசியம்…கூடு…கூடி வாழ்…இன்பம் நுகர்…என்பதெல்லாம் அவன் சார்ந்த காலத்தினது சிந்தனா போக்குகளை மறுதலிக்கும் பொருண்மை மிக்கவை.

இரத்தல் இனிது என்று சொல்ல எவனால் முடியும், வள்ளுவனைத் தவிர? ஆனாலும் அதற்கு அவன் விதி சொல்லியிருக்கிறான் என்பதையும் மறக்கக்கூடாது. ‘கரப்பிலா நெஞ்சின் கடனறிவா’ராய் இரக்கப்படுபவர் இருக்கவேண்டும்.

வள்ளுவன் கூற்றுக்கள் சில வேளைகளில் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதுபோல் தோன்றும். ஒருசில பொழுதுகளில் அது வள்ளுவனின் கவிக்குணக் கிளர்ச்சிகளின் விளைவாக வரும். ஒருசில பொழுதுகளில், பிற உரையாசிரியர் கூற்றுக்களுள் போய் மழுங்கிவிடாமல் வள்ளுவனை, அவனது காலத்தை உணர்ந்த தகைமைகளோடு பிரதியுள் புகுந்தால் அவை முரண் இல்லையென்று விளங்கும்.

‘இரப்பது இனிது, இரந்துவிடு தக்கவரைக் காணின்’ என்றெல்லாம் இரக்கச் சொல்கிற இந்த வள்ளுவன்தான், ஒருவன் இரந்துதான் உயிர்வாழ முடியுமென்கிற நிலை ஏற்படுமானால் இந்த உலகைப் படைத்தவன் செத்தொழிந்து போகட்டும் என்று பின்னால் சாபமிடுகிறான். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ (குறள் 1062) என்பது அக் குறள்.

இது அதிசயமானதுதான் மேம்போக்கான நோக்குகைக்கு. ஆனால் தீர ஆராய்ந்தால் அதிலுள்ள நுட்பம் புரியும். ‘ஈதலும் துன்பமானது இரப்போர் இன்முகம் காணுமளவும்’ என்பான் ஒரு மன்னன் புறநானூற்றிலக்கியத்திலே. இவை கருதத் தக்கவை.

அவ்வைகூட ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று ஒருபோதும், ‘ஐயம் இட்டுண்’ என்று இன்னொருபோதுமாய்ப் புகன்றிருக்கிறாள்தான். இதுவும் முரணில்லை.

இரப்போர் பக்கம்நின்று சொன்னதே ஏற்பதிகழ்ச்சியானது என்ற கருத்து. இரக்கப்பட்டோர் பக்கலில் நின்று சொன்னது கொடுத்துச் சாப்பிடு என்ற கருத்து.

இறைவன் கெட்டழியட்டும் என்று சபித்ததும், இரந்தும் உயிர் வாழ் என்று போதம் சொன்னதும் எல்லாம் முரண்களில்லை. இரந்தாவது வாழ்ந்துவிடு, வாழ்தல் இனிது என்பதே வள்ளுவ அறம். இது உணர்ச்சி மேவுகைகளின் கவிக்குண வெளிப்பாடுமில்லை.

அப்படியானால் வள்ளுவனின் நிலைப்பாடென்ன என்று கேள்வியெழும். அதற்குப் பதில் இரண்டும்தான் என்பேன் நான். வாழ் நிலைமைகளை வைத்துக்கொண்டு வழிகளைக் கண்டடைந்தவன் அவன். அவையும் கவிகளாய் வந்திறங்கின என்பதுதான் வள்ளுவனின் பெருமை. வறுமை தீர்வதற்கான விஞ்ஞான சித்தாந்தம் பின்னாலேதான் வரவிருந்தது.

மனுக்குலத்தின் வறுமை தீர்க்கும் சிந்தனையைச் செய்ய இந்த உலகம் வள்ளுவனுக்கும் பின் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு வரு~ங்கள் கார்ல் மார்க்ஸ் என்ற முனிவனுக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது என்பதே வரலாறு.

அடுத்து வரப்போவது காமத்துப்பால். இதை இன்பத்துப்பாலெனவும் சொல்வர். எனினும் காமத்துப்பாலெனலே எனக்கு உவப்பு. ஏனெனில் அது சங்கத் தமிழ்ச் சொல். விருப்பம், விரும்புதல் என்ற பொருள்களில் சங்கக் கவிதைகளில் பவனிவந்த வார்த்தை.

தமிழின் காமம் இருவர் மனம் சார்ந்திருந்த உன்னதத்தை வள்ளுவனூடாய் அதில் பார்க்கலாம்.


000

அதை அதுவாக 19

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 19


‘உரைகாரரின் திரிப்புகள் பல குறள்களின் அர்த்தங்களையே மாற்றிவிட்டிருக்கின்றன.’


- தேவகாந்தன் -(48)

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
(பொருள், குடியியல், மானம் 4) குறள் 964


தன் நிலைமையிலிருந்து தாழ்ந்துவிட்ட மனிதனை ஒருவரும் மதிக்கமாட்டார்கள்.


தலையிலுள்ளபோதுதான் கூந்தல் அல்லது சிகை. இழிந்துவிட்டால் மயிர். கூந்தலைப் பேணலாம். மயிரைச் சீண்டுவார் இல்லை.

அதுபோலத்தான் தம் நிலையில் மாறாதிருக்கும்வரையில்தான் ஒருதருக்கு மதிப்பு. நிலை பிறழ்ந்துவிட்டால் மதிப்பே இல்லை.

இழிந்த என்ற சொல்தான் இங்கே முக்கியம்.

இழிதல் என்பது உதிர்தல். கெடுதல் என்ற அர்த்தமும் உண்டு. மேலேயுள்ள குறளிலுள்ள முதலாவது ‘இழிந்த’, உதிர்தல் என்ற அர்த்தமுடையது. இரண்டாவது ‘இழிந்த’, கெடுதல் என்று பொருள்படும்.

நிலைகெட்டவர் இந் நிலவுலகில் மதிக்கப்படுவதில்லையென்பது நிஜமேயானாலும், இங்கே சந்தர்ப்பவசத்தால் நிலை கெடலை வள்ளுவன் குறிக்கவில்லை. அப்போதுகூட நிலை சீண்டுவாரற்றதாகவே இருக்கும்தான். ஆனாலும் அவன் இங்கே குறிப்பது தகுதியில்லாதவற்றைச் செய்வதின் மூலம் நிலை பிறழ்தலைப் பற்றியே.

ஒருபோதும் மனிதன் தன்னிலை கெட்டுவிடக்கூடாது என்பதே இக் குறளின் போதனை.


(48)

பிறக்கொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
( பொருள், குடியியல், பெருமை 2) குறள் 972

பிறப்பால் சகல உயிரும் சமம். தொழிற் பாகுபாடுகள் காரணமாய் பிறப்பில் சிறப்பேதும் ஏற்படுவதில்லை.


பொருட்பாலின் குடியியல் சார்ந்த அதிகாரம் இது. இதை ஒழிபியல் என்று கூறும் பரிமேலழகர் உரையின் பழைய கழகப் பதிப்பு.

கழகப் பதிப்பில் பொருட்பாலில் இயலே மூன்றுதான் வரும்.

மு.வ. தெளிவுரையில் பொருட்பாலில் ஏழு இயல்கள். இதுவும் கழகப் பதிப்புத்தான்.

வேறு உரை நூல்களும் ஏழு இயல்களாகவே வகுக்கும்.

இந் நிலையில் இயல்கள் வகுக்கப்பட்டதுபோல் அவரவரும் தம்தம் கருத்துக்கேற்ப குறளிலும் திரிபுகளைச் செய்யவில்லையென்று எவ்வாறு நம்புவது?

ஆனாலும் இது இங்கே முக்கியமில்லை. குறளின் கருத்தே கவனிக்கப்படவேண்டியது.

பிறப்பால் பேதமில்லை, செய்யும் தொழிலே பேதத்தை உண்டாக்கிறதென்ற அர்த்தத்தையே பரிமேலழகரிலிருந்து மு.வ. ஊடாக அண்மைக் காலத்திய குறளின் உரைகாரர்வரை கொண்டிருக்கிறதானது வள்ளுவன் சொன்னதற்கே எத்தகைய முரண்!

‘பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும். செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வா’ என்று பார்ப்பதில் என்ன சிரமம் இருந்தது?

‘பிறப்பால் சகல உயிரும் சமம். செய்தொழில் வேறுபாடுகள் எந்தச் சிறப்பையும் எவ்வுயிர்க்கும் ஏற்படுத்திவிடா’ என்பதே நேர் அர்த்தம்.

சற்றே கோணலாகப் பார்த்தாலுங்கூட இதற்கு எதிர்மாறான அர்த்தம் வந்துவிடாது. வாழ்க உரைகாரர்!

‘செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்க லாதார்’ என்றொரு குறள். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள், அவ்வாறு செய்ய இயலாதவர்கள் சிறியவர்கள் என்பது இதன் பொருள். முன்பகுதியை ஏற்றுக்கொள்ள முடிகிற அதேவேளை, செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய முடியாதவர்கள் சிறியர் என்ற அர்த்தத்தைத் தரும் பகுதியையுமா ஏற்றுக்கொள்ளமுடியும்?

உண்மையில் ஒரு எழுத்தின் திரிபே இந்த அளப்பரிய கருத்து மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது காண்கையில் வியப்பாயிருக்கிறது. இரண்டாவது அடியின் முதற் சீரில் ‘கு’ வரவேண்டிய இடத்தில் ‘க’ வந்ததே இதற்குக் காரணம். அப்படியாயின் ‘செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்குரிய செய்க லாதார்’ என்பதாக குறள் இருந்திருக்கவேண்டும்.

அரிய காரியங்களைச் செய்வோர் பெரியோர், இயலக் கூடிய காரியங்களையும் செய்யாதவர்கள் சிறியர் என்பதாய்த் தவிர வள்ளுவன் வேறு அர்த்தம் கொண்டிருக்க முடியமா?

‘எல்லாத் திரிப்பும் திரிப்பல்ல திருக்குறளில் உரைகாரர் திரித்ததே திரிப்பு’
என்று கத்திவிடலாம் போலிருக்கிறது எனக்கு.
000

அதை அதுவாக 18

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 18


‘தனிமனிதனதும், அரசியலதும் நீதிகள் வௌ;வேறானவை.’


- தேவகாந்தன் -
(46)

வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா
மேலியார்மேல் மேக பகை.
(பொருள், நட்பு, பகைமாட்சி 1) குறள் 861


தன்னினும் வலியாரோடு மாறுபாடு கொள்ளுதலைத் தவிர்க்கவேண்டும். மெலியாரோடு மாறுபாடு கொள்ளுதலை ஓம்பவேண்டும்.


நட்பு இயலில், பகைமாட்சி அதிகாரத்தில் வரும் முதலாவது குறள் இது.

நீதி, அறம் என்பதெல்லாம் எங்கும், என்றும், எல்லா வி~யங்களிலும் ஒன்றாய் இருப்பதில்லை. தனிமனித நீதியும், அரசு சார்ந்த நீதியும் ஒரே வி~யத்திலேயே பிரிந்து நின்றுதான் பேசும். யுத்தத்துக்கான நியதிகளும், யுத்த காலத்துக்கான நடைமுறை விதிகளும் பெரும்பாலும் சர்வாதிகார ஆட்சியை நிகர்த்துவிடும் ஜனநாயக நாடுகளில்கூட. இவை திருக்குறளின் காலத்திலிருந்தே நியாயப்படுத்தப்பட்டு வருவதுதான் விசித்திரம்.

அறத்துப் பாலில் அருளுடைமை என்கிற அதிகாரத்தில் வரும் கடைசிக் குறள் இது: ‘வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார் மேற்செல்லு மிடத்து.’

மெலியாரை வருத்த முன்செல்லும்போது தான் தன்னைவிட வலியார்முன் அஞ்சிநிற்கும் நிலையை ஒருவன் எண்ணிப் பார்க்கவேண்டும் என்பது இதன் பொருள்.

இது தனிமனிதர்க்கானது.

ஆனால் இதே வலியார்-மெலியார் வி~யம் அரசியலாகிறபோது விதி, தலைகீழாகி விடுகின்றது. அதைச் சொல்வதுதான் இந்தக் குறள்.

தன்னின் வலியாரோடு மாறுபாடுகொள்வதைத் தவிர்க்கவேண்டுமென்பது சரிதான். ஆனால் தன்னின் மெலியாரோடு மாறுபாடு கொள்ளவேண்டுமென்பது என்ன நியாயம்?

இதுதான் அரசியல்.

வியட்னாமியருக்கு விண்கல பரிசோதனைக்காக எச்சரிக்கை. திபெத்தினை ஆக்கிரமித்துள்ள சீனத்துடன் வியாபார மேவுகை. ஜோர்ஜ் பு~; இந்தத் திருக்குறளைத் தெரிந்திருக்கவில்லையென்று யார் நிச்சயமாகச் சொல்ல ஏலும்?(46)

தன்துணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

(பொருள், நட்பு, பகைத்திறம் தெரிதல் 5) குறள் 875

தான் துணையின்றி, பகை இரண்டாய் இருக்கும்பட்சத்தில் , அவற்றிலொன்றைத் தன் துணையாகக் கொள்வதே சிறந்த தந்திரம்.

இதை, இன்றைய அரசியலின் கேடுகெட்ட தந்திரமென்று நாம் தயங்காமல் உரைப்போம். ஆனால் இதையே வள்ளுவன் சிறந்த ராஜதந்திரமாகக் கொள்ளுகிறான்.

தான் துணையில்லாமல் தனியாகவும், பகை இரண்டாகவும் இருக்கும் நிலைமையில் அப்பகையை ஒன்று சேராமல் தடுப்பது முதல் வேலையாகும். அப்போதும் பாதி வெற்றிதான் கிடைக்கும். அவற்றிலொன்றைத் தன் துணையாக்கிக் கொள்வதோ வெற்றியை நிச்சயப்படுத்தியேவிடும்.

மூவரசு, ஏகப்பட்ட குறுநில முடிகள் இருந்த பழந்தமிழகம், நிறைந்த அமைதிப் பூங்காவாய் இருந்ததென்று சொல்லச் சான்றுகளில்லை. சிறு வலிமைகளையெல்லாம் அடக்கிவைக்கவும், தீராத யுத்தங்களினால் மக்களுக்கு இன்னல் விளைவதைத் தவிர்க்கவும் வள்ளுவன் அத்தகைய யுக்தங்களைச் சொல்கிறானென்று கருதுவது நம் கருத்தை வள்ளுவன்மேல் ஏற்றும் குற்றமாகிவிடும்.

மனத்தின் அடியுணர்வுகள் ஒவ்வொன்றோடும் மனிதனை விரும்பிய புலவன், அவ் மனவுணர்வுகள் சார்ந்து அரசியலறத்தைச் சொல்லவில்லையென்பது சற்று நெருடலாகவே இருக்கிறது எனக்கு.

000

அதை அதுவாக 17

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 17


‘மனிதாபிமானி ஒருவனுக்கு நாடு கனவுகளின் பரப்பாகிவிடாது.’


- தேவகாந்தன் -(44)

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
(பொருள், அங்கம், குறிப்பறிதல் 6) குறள் 706துன்னை நெருங்கும் எப்பொருளையும் பளிங்கு பிரதிபலித்துக் காட்டிவிடும். ஒருவர் நெகிழ்ச்சியில் உருவாகும் உணர்வை முகம் காட்டிவிடும்.


இன்பத்துப் பாலில் களவியலில் ஒரு குறிப்பறிதல் (அதி. 110) வருகிறது. அது சொல்லும் குறிப்பறிதலின் அம்சங்கள் வேறு. ஆறிதல் முறையும் வேறு.

இது பொருட்பாலின் அங்கவியலில் வருவது. ஆவ்வியலுக்கான அம்சங்களே இக் குறளில் இருக்கும்.

ஏவ்வளவுதான் கண்ணோட்டம்பற்றி, குறிப்பறிதல் பற்றிச் சொன்னாலும், அதில் எல்லோரும் வல்லவராய் ஆகிவிடுவதில்லை என்பதுதான் நிஜம்.

அது ஒரு தனி அவதானம்.

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று அவ்வை சொல்வது, உண்மையேயாயினும், மேலோட்டமானது. ‘பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்’(குறள் 709) என்று வள்ளுவன் சற்று ஆழமாய் இறங்குகிற குறளும் உண்டுதான்.

எனினும் 704 ஆம் குறள்தான் இந்தக் குறிப்பறிதல்பற்றி மிக்க விரிவாய்ப் பேசுவது.

ஆதில் இத்தகு திறமையுள்ளவரை ‘குறித்தது கூறாமைக் கொள்வார்’ என்பான் வள்ளுவன். தம் மனத்திலிருப்பதை ஒருவர் கூறாமலே தெரிந்துகொள்ளும் தன்மையர் என்று இதற்கு அர்த்தம்.

ஆவ்வாறு தெரிந்துகொள்ளும் விரிந்த பரப்பு, முகம்.

அதிலுள்;ள கண்கள் உணர்வுகளின் ஒளி மையப் புள்ளிகள்.(45)

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
(பொருள், அரணியல், நாடு 1) குறள் 731


குறையாத விளைச்சலும், தக்க மனிதரும், கொடுத்தாலும் குறையாத செல்வம் உடையவர்களும் சேர்ந்திருப்பதே நாடு.


‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!’ என்கிறது ஒரு சங்கப் பாடல். நூடாக இருந்தாலும் சரி, காடாக இருந்தாலும் சரி, மேடாக இருந்தாலும் சரி, பள்ளமாக இருந்தாலும் சரி எங்N கநல்ல மனிதர்கள் இருக்கிறார்களோ, அந் நிலமே நன்னிலம் என்பது அப்பாடல் மேலும் விரிவாய்ச் சொல்வது.

ஆனால் வள்ளுவனுடைய நாட்டுக்கு விளைச்சல் முக்கியம். இன்னும் சற்று மேலே போய் முயற்சி செய்யாமலே வளம்தரும் வளப்பமுடையதே நாடு என்பான் அவன்.

‘வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்’ என்பது கவிக் கனவு.

வுறட்சியும் வெள்ளமும் பஞ்சமும் பசியும் பட்டினியும் பழந் தமிழகத்திலும் இருந்திருக்கின்றன. அது கண்டு நெஞ்சு கொதித்திருக்கிறான் வள்ளுவன். அவ்வாறு கொதிநிலைப்பட்ட உள்ளத்திலிருந்துதான் ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகிற்றினானே’ என்ற மாதிரியான சாபங்கள் பிறக்கமுடியும்.

ஆத் தகு மனிதாபிமானி ஒருவனுக்கு நாடு வெகுத்த கனவுகளின் பரப்பாகிவிடாது. கும்ப நாடனுக்கு ஆனது. வுள்ளுவனுக்கு ஆகவில்லை.

நாடு என்பது நாடா வளத்தது என்ற வள்ளுவனின் தீர்மானகரம்கூட ஒருவகைக் கனவுதான்.

ஆனாலும் அது சோற்றுக் கனவு.

000

அதை அதுவாக 16

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 16


‘கவிக் கனவுகளின்போது எண்ணுச்சங்கள் அடையப்படுகின்றன.’


- தேவகாந்தன் -
(42)


பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
(பொருள், அங்கவியல், அமைச்சு 9) குறள் 639


கேடு நினைக்கின்ற ஒரு மந்திரிக்கு எழுபது கோடி பகைவர் சமம்.


இங்கே என்னில் சுடர் விரிக்கும் சொல் ‘எழுபது கோடி’ என்பது.

பாரதி காலத்தில் பாரதத்தின் ஜனத்; தொகையே முப்பது கோடிதான். ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்ற பாடலடி அதையே சொல்கிறது. சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தின் ஜனத்தொகை சில லட்சங்களையே கொண்டிருத்தல் கூடும். இந்தச் சில லட்சங்களில் வாழ்ந்துகொண்டுதான் ‘எழுபது கோடி’ என்ற ஓர் எண்ணின் உச்சம் பிறந்திருக்கிறது வள்ளுவனுக்கு.

இது ஒரு கனவு…எண் பற்றிய கனவு… எண் உச்சம்.

மகிமைப் படுத்தப்பட்டுள்ள சில ஏழுகள் நம்மிடையே உண்டு. ஏழு நிறங்கள், ஏழு சமுத்திரங்கள், எழு சுரங்கள், எழு பிறவிகள் என்பன உதாரணங்களாகக்கூடிய சில.
‘ஏரெழுபது’ என்று ஓர் இடைக்கால நூல் ஒட்டக்கூத்தர் பாடியதாக உண்டு. இவற்றோடு எவ்விதத்திலும் தொடர்புறாதது வள்ளுவனின் இந்த எழுபது.

‘எழுபது கோடி’யென்பது அவன் அடைந்த எண் உச்சம்…எண்ணின் பிரமாண்டம்.

‘ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல’ என்ற குறளில் ஒரு கோடி வரும்.

இந்தப் பாடலில், இந்தப் பொழுதில் அவனடைந்த எண்ணுச்சம் இது.

ஆங்கிலக் கல்விபற்றிக் கூறுகையில் பாரதி சொல்வான், ‘நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்’ என்று. அங்கே அந்தப் பொழுதில் நாற்பதாயிரம் ஒரு எண்ணுச்சம் பாரதிக்கு.

கவிக் கனவுகளின்போது இவ் எண்ணுச்சங்கள் அடையப்படுகின்றன.


(43)


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.
(பொருள், அங்கம், சொல்வன்மை 5) குறள் 645

இன்னொருவர் அதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாத அளவுக்கு ஒருவர் பேச்சு இருக்கவேண்டும்.


சொல் வன்மையென்பது இங்கே எழுத்து சார்ந்தது அல்ல. நாவு சார்ந்தது.

நா நலம் மிகப் பெற்றவன் அனுமன். அதற்கு உதாரணங்கள் கம்பராமாயணத்தில் மிகப் பல. அதிலொன்று ‘கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்ற பாடல்.

‘நா காக்க’ என்று முன்பு சொல்லியிருக்கிறான் வள்ளுவனே. காவாது போனால் ‘சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ என்பது அவனது எச்சரிக்கை.

இந்த அதிகாரத்திலும் அம்மாதிரி ஓர் எச்சரிக்கையுண்டு. ‘ஆக்கமும் கேடும் அதனால் வரும்’ என்பது அது.

இவையெல்லாம் சொல்மேலிருக்கவேண்டிய பொது அவதானங்கள்.

இந்தக் குறளில் உள்ளதோ, விதி!

சொல் ஒன்று சொல்லப்பட்டால் அதை வெல்லும் சொல் இல்லையென்று ஆதல் வேண்டும். மொழி மீதான, சிந்தனையின் மீதான, இவற்றின் பயில்வுகள்மீதான ஆர்வம் வள்ளுவனுக்கு எவ்வாறு இருந்தது என யோசிக்கும்போது வியப்பு பிறக்கிறது.

இவை அறநூல் செய்பவனின் அவதானங்களில்லை.

000

அதை அதுவாக 15-1

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 15-1

‘தகுந்த மகிழ்ச்சியே எனினும் அளவாகத் திளைக்கவேண்டும்.’

- தேவகாந்தன் -


(40)

அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
(பொருள், அரசு, தெரிந்துதெளிதல் 3) குறள் 503


அரிய நூல்களைத் தெளிவாகக் கற்றவரிடத்திலும்கூட நன்கு கவனித்தால் சிறிது அறியாமை இருப்பது தெரியவரும்.


அவர்கள் அரிய நூல்களைக் கற்றவர்கள். அவற்றையும் நன்கு கற்றவர்கள். அப்படியானவர்களிடத்தில்கூட அரிதாகவேனும் சிறிது அறியாமை இருக்கவே செய்கிறது. எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் இந்த வரையறைக்குள் அடங்கியவராகவே இருப்பர்.

இதை வேறொரு கோணத்தில் விளக்குகிறது அடுத்த குறள். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்பது அது.

ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் தெரிந்து அவற்றுள் எது மிகையாக உள்ளதோ அவரை அத் தன்மைத்தவராய்த் தேரவேண்டும் அல்லது தள்ளவேண்டும். சொல்லப்போனால் இந்த இரண்டு குறள்களும் ஒரே அர்த்தத்தின் இரண்டு பகுதிகளே.

இன்மை எவரில் இல்லை? அவரவரும் படிக்கும் படிப்பு, பழகும் பண்பு, மனத்தின் வலிமை அளவுக்கு அது அழிந்துகொண்டு வரும். மறைந்துவிடாது முற்றாக.

குற்றமற்ற செயல் புரிவதில் வல்லவன் நள மகாராஜன். அவனே, தன் புறங்கால் நனையாமல் கால்கை கழுவி ஒருநாள் குறைச்செயல் புரிந்தான். சனி தோ~ம் அவனைப் பிடித்த கிராமிய வியப்பு இது.

ஆனாலும் ஒரு வி~யம் உண்மை. எவரும் குற்றங் குறைகளின்றித் தவிர்ந்துவிட முடியாது. செம்பில் களிம்பு இயற்கை. விளக்கிப் பாதுகாப்பதின் மூலமாகவே அதை ஒளிவிடவைக்க முடிகிறது.

மனிதர்கள் இதன் இயல்பில் வேறல்லர்.

(41)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து.
(பொருள், அரசு, பொச்சாவாமை 9) குறள் 539

தமக்குரியதான மகிழ்ச்சியே என்றாலும், அதில் மூழ்குகிறபோது, அவ்வாறு மூழ்கிக் கடமை மறதியில் கெட்டவரை நினைத்துக்கொள்ளவேண்டும்.

பொச்சாப்பு – மறதி – புகழைக் கொல்லும். மறதியுள்ளவர்க்கு எதுவுமே நன்றாக அமையாது. அதனால் மறதி கூடாதென்கிறான் வள்ளுவன்.

‘அரிய என்று ஆகாத இல்லை…’ (குறள் 537), ‘உள்ளியது எய்தல் எளிது…’ (குறள் 540) என்ற குறள்களில் எதையும் அடைய முடியுமென்ற வைரக் குரலைக் கேட்கிறோம். அதைக்சுட மறதியின் கெடுதியை வற்புறுத்தவே பாவிக்கிற அருமையை இங்கே நினைக்கவேண்டும். அதேவேளை வள்ளுவன் மேலே சொன்ன மறதி இதுவல்லவென்பதையும் கருதவேண்டியிருக்கிறது.

இந்த மறதியானது இயல்பில் வரும் மறதியல்ல. அது அடிக்கடியும் வந்துவிடாது. வள்ளுவன் சுட்டுகிற மறதி உவகை மகிழ்ச்சியிலிருந்து பிறக்கிறது.

அனுபவிக்கத் தகுந்த மகிழ்ச்சியேயெனினும் அதனுள் அளவாகத் திளைக்கவேண்டும். ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ என்று சக்தியை அறிதல் பற்றிக் கூறுகிற அதிகாரத்தில் ஒரு குறள் சொல்லும்.

கரும்பு இனிக்கிறதென்று வேரோடு பிடுங்கித் தின்னக்கூடாது என்பதும் இதையே ஒருவகையில் தெரிவிக்கிறதெனலாம்.

அதனால் மகிழ்ச்சியில் மைந்துறும்போது, அவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்துக் கெட்டவர்களை நினைத்துக்கொள்ள வேண்டும்.

இதுவே வள்ளுவ எச்சரிக்கை.

000

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...