Friday, April 11, 2008

அதை அதுவாக 22

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 22

‘அறிய அறிய அறியாமையே மிகுகிறது. அனுபவிக்க அனுபவிக்க காமமே வெகுக்கிறது.’


- தேவகாந்தன் -


(52)

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

(காமம், கனவு, குறிப்பறிதல் 5) குறள் 1095


குறிப்புப் புலப்படும்படி பார்க்க மட்டுமில்லை, திட்டமாய் அர்த்தம் தெரியும்படி அவள் கண்ணைச் சுழற்றிக் கொண்டு அமுக்கச் சிரிப்பும் செய்கிறாள்.


தமிழ் இலக்கியத்திலுள்ள களவியல் வாசிப்பு அற்புதமான சுகம் தருவது.

அதன் முழு சாரத்தையும் பெரும்பாலும் திருக்குறளிலே காணமுடியும். மிகவும் திட்ப நுட்பமாக அதில் காதலுணர்வுகள், செய்கைகள், அசைவுகளெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கவியின் அனுபவ சாரலில் நனைகிற பேரின்பம் நவீன வாசகனையும் அதிசயப்பட வைக்கும்.

கூட்டத்தில் தோழியரோடு நிற்கிறாள் அந்தப் பெண். சிரித்துப் பேசி ஏகாங்கியராய் அவர்கள்.

தூரத்தில் தன் தோழரோடு அவன்.

அவனை அவள் அறிவாள். அவனது அவாவும் அறிந்தவள்தான். ஆனாலும் போய்ப் பேசிவிட முடியுமா? ஊர், உறவுகள் என்ன சொல்லும்? நாணம்தான் விட்டுவிடுமா?

அவனோ அவள் சம்மதம் இல்லாவிட்டால் உயிர் தரிக்கலாற்றேன் என்பதுபோல கையற்று, ஏக்குற்று நிற்கிறான்.

அவள் அவனது ஏக்கத்தைப் பார்த்து, ‘கள்ளா, உன் ஆசை எனக்குத் தெரியும்… ஆனால் தோழியர் அப்பால் போனால்தானே, நான் என்ன செய்யட்டும்? என் எண்ணம் உனக்குப் புரிகிறதா?’ என்று மனத்துள் வேர்க்கிறாள்.

இவ்வளவும் அவள் சிரித்தலோடு செய்யும் கண்ணின் ‘சிறக்கணிப்’பில்தான் தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு காட்சியையே நாடகப் படுத்துவதுமாதிரியான வனப்புள்ள குறள்கள் திருக்குறளில் ஏராளம்.

ஏனைய அகத்திணை நூல்கள் காட்சியை நாடகப் பாங்கில் தத்ரூபமாக விரிக்கும்.

திருக்குறளில் காட்சியை விரிக்கும் பணி வாசகனுக்கானது.


(53)


அறிதொறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறு சேயிழை மாட்டு.

( காமம், களவு, புணர்ச்சி மகிழ்தல் 10) குறள் 1110


ஒரு வி~யத்தைப் புதிதாக அறிகிறபோது அதுபற்றிய அறியாமையே மேலும் பெருகுகிறது. அதுபோல செவ்விய ஆபரணங்களை அணிந்த இவளிடத்தில் இன்பத்தைத் துய்க்கத் துய்க்க இன்னுமின்னுமாய் அனுபவிக்கவேண்டுமென்ற தாபமே பிறக்கிறது.இன்மையிலிருந்துதான் அறிவு தோன்றும். தெரிந்ததைத் தெரிபவர் எவருமில்லை. தெரியாததைத் தெரிகிறபோது அதுபற்றிய அறியாமையே கூட வளர்கிறது.

கெடுவிலிருந்து இன்பம் பிறக்கிறது. தேடலில்லாத உறுதலில் இன்பம் கிடைப்பதில்லை.

அவள்பாலடையும் இன்பமும் அவனது கெடுவிலிருந்து பிறப்பதேயாகும்.

அதனால்தான் கெடு அழியாது நிற்கிறது, எவ்வளவு இன்பத்தை நுகர்ந்தபோதும்.

ஸென் ஞானி சொல்வதுபோல இதை இவ்வாறும் கூறலாம்: ‘அறிந்து முடிப்பவர் எவருமிலர். ஆறிய அறிய, அறியாமையே மிகுகிறது. கெடுவை அடக்கினவர் உண்டோ? அனுபவித்தாலும், கெடு அடங்குவதில்லை. அனுபவிக்க அனுபவிக்க அது வெகுக்கும், ஒருவனது அறியாமைபோல.’

000

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...