Friday, April 11, 2008

அதை அதுவாக 21

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 21

‘பெண்கவியாய் இருந்தால்தான் அவ்வாறெல்லாம் நினைத்திருக்க முடியுமோ?’


- தேவகாந்தன் -(51)

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
(காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல் 7) குறள் 1087

ஆண் மதயானையின் பார்வையை ஒடுங்க மறைக்கப் போடப்படும் முகபடாத்தினை நிகர்த்ததாய் இருக்கின்றது, மாதர்களின் நிமிர்ந்த முலைகளின் மேல் போடப்பட்ட துகில்.


‘படாஅ முலை’ என்பதிலிருந்து நிமிர்ந்த முலை பெறப்பட்டது.

மாதர் என்ற பொதுச் சொல்லால் குறிக்கப்பட்டிருப்பினும், இளம் பெண்கள்பற்றிச் சொல்லப்பட்ட குறளாகவே இதைக் கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட ஒரு பெண்ணைத் தினமும் பார்த்துப் பார்த்து, அவள் மீதான காதலாய் அது வளர்ந்து வளர்ந்து ஆசை நிலையை அடைந்துவிட்ட ஒருவனின் ஒருவகைப் பிதற்றலாகவே இலக்கியம் இதுபோன்ற பாடல்களை வகைசெய்திருக்கிறது.

படைப்பு, பாதிக்கப்பட்ட ஒருவனின் அனுபவத்தையே கூறுகிறதெனினும், அது ஒரு அறிதலாக ஆகிநிற்கிறது இங்கே.

ஒருத்தியைப் பெயர் சுட்டிக் குறித்துவிடாத இந்த அவதானம் தமிழரின் மன நாகரிகத்தின் அடையாளம்.

இதையே அகத்திணையாய் வகைசெய்தனர் அவர்.

காதல் விவகாரம்கூட பெயர் சுட்டப்பட்டவுடன் புறத்திணையாகிவிடுகிறது.

இந்தக் குறளைப் படித்தபோது எனக்கு சங்கப் பாடலொன்று ஞாபகத்துக்கு வந்தது.

‘நீ வெளியே வருகிறபோதெல்லாம் உன் அழகு என்னை என்ன பாடாய்ப் படுத்துகிறது பார்! இது உன்னுடைய தவறில்லைத்தான். உன்னை வெளியே செல்லவிட்ட உனது வீட்டாரின் தவறுமில்லை. பின்னே யாருடைய தவறென்கிறாய்? கொல்யானையின் இரு கூர்ங் கோட்டங்கள்போன்ற முலைகளை உடையவளாயிருக்கிற நீ, வெளியே வரும்போது முன்னே இன்னாள் வருகிறாள் என்று பறையறைந்துதான் செல்லவேண்டும் என ஆணை பிறப்பிக்காத அரசனே தவறுடையான்’ என்று ஒருத்திமீதான காதல் மீதூரப் பெற்ற ஒருவனின் கூற்றாக வரும் அப்பாடல்.

‘நீயும் தவறில்லை
நின்னைப் புறம் போதரல்விட்ட
நுமரும் தவறல்லர்…
பறையறைந்தல்லது செல்லற்க என்னா
இறையே தவறுடையான்’
என்ற சங்கப் பாடலின் அர்த்தத்தை மேற்கண்டவாறு விரிக்க முடியும்.

இது தவிர்க்;க முடியாதபடிக்கு இன்னொரு கேள்வியையும் கிளர்த்தும்.

மதயானையிடமிருந்து மக்களைக் காக்கத்தான் யானைக்கு முகபடாம். அதுபோல பெண்களிடமிருந்து ஆண்களைக் காக்கத்தான் பெண்களுக்கு மேலாடை! உண்மையில் காக்கப்படவேண்டியவர்கள் பெண்களாகவே இருந்திருப்பர். அதனால், ‘அழகான பெண்கள் நடமாடும் இவ் வீதியில் ஆண்கள் மதயானைகளுக்குப்போல தம் கண்களை மறைத்துத்தான் நடமாடவேண்டும்’ என்று ஆணை பிறப்பிக்கப்படுவதுதானே நியாயம்?

ஓ..ஒரு பெண்கவியாய் இருந்தால்தான் இவ்வாறெல்லாம் நினைத்திருக்க முடியுமோ என்னவோ.

000

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...