LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து

கப்ரியேல் கர்சியா மார்க்வெய்ஸின்
LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து


சமீபத்தில் நாவல்களை மூலக்கதைகளாகக் கொண்ட மூன்று சினிமாக்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இது வாய்ப்பானது ஓர் எதிர்பாராத அமைவில் ஏற்பட்டதுதான். முதலில் NO COUNTRY FOR OLD MEN. கொர்மாக் மக்கார்தியின் அதே தலைப்பிலான நாவலைச் சினிமாவாக்கியது. அடுத்தது கப்ரியேல் கர்ஸியா மார்க்வெய்ஸின் நாவலான LOVE IN THE TIME OF CHOLERA சினிமாவாகி வந்திருந்தது. மூன்றாவது ATONEMENT. இது இயன் மக்கீவானின் ATONEMENT நாவலைப் படமாக்கியது.

இவை மூன்றும் அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து ஆகிய மூன்று பெரும் நாடுகளை மய்யமாகக் கொண்டவை. மட்டுமில்லை, பெருவாரியான மற்றைய நாவல்கள் சினிமாவாகியபோது தலைப்பு மாற்றம் பெற்றதுபோலன்றி, இவை நாவலின் தலைப்புகளையே சினிமாவாக்கத்திலும் கொண்டிருந்தன. நாவலின் மூலத்திலிருந்து மிகவும் மாறுபட்டுவிடாதபடி இம் மூன்று சினிமாக்களும் எடுக்கப்பட்டிருந்ததை தலைப்புகள் சுட்டிநிற்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

ஒரு நாவலைப் படமாக்குவது எப்படியென்பதற்கு இம்மூன்றுமேகூட உதாரணமாகக் கூடியவை. ஆனாலும் மிகச் சமீபத்திலேயே மார்க்வெய்ஸின் Love In The Time of Cholera வை  வாசித்திருந்தாலும் , அதன் அதிர்வுகள் நீண்டகாலம் மனத்தில் அடைந்து கிடந்ததாலும் இதையே இங்கு சிலாகிப்புக்குரியதாய் நான் எடுத்துக்கொள்கிறேன்.

தமிழில் அகத்திணை சொல்லும் காதலின் விழுமியங்கள் அற்புதமானவையே. பனித்திணை நாடுகளிலும் பாலைத்திணை  நாடுகளிலுகூட இதற்கீடான காதல்கள் உண்டு. ரோமியோ-யூலியட், அன்ரனி-கிளியோபாட்ரா ஆகியோரின் காதல்கள் காவியமானவை. மார்க்வெய்ஸ் காட்டும் காதல் நவீன இலக்கியத் தளத்தில் அவைக்குச் சமாந்தரமாகப் பயணப்படக் கூடியது.

மார்க்வெய்ஸின் Love In The Time Of Cholera முதன்முதலாக ஸ்பானிய மொழியில் கொலம்பியாவில் வெளிவந்தது. 1985இல் இது வெளிவந்தபோதே பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இதை அணுகவேண்டிய முறை குறித்து விமர்சகர்கள் எச்சரிக்கைகூடச் செய்தார்கள். மார்க்வெய்ஸே அதுபற்றி இவ்வாறு கூறியுள்ளார்: ‘You have to be carefull not to fall into my trap.’ அத்தனைக்கு உணர்வோட்டமானதும், உணர்வுகளில் வாசகர்களைச் சிக்கவைக்கக்கூடியதுமாகும் இது. மோனா சிம்ப்சன் போன்ற விமர்சகர்கள் இதுபற்றி மிக ஆழமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இது அரசியலையோ, சமூகத்தையோபற்றிப் பேசவில்லை: மாறாக, காலத்தைப் பற்றிப் பேசுகிறது என்றிருக்கிறார் அவர்.

கரிபியன் கடலோர நகரமொன்றிலிருந்து மய்யம் கொள்கிறது நாவல். டாக்டர் யுவனெல் எர்பினோவின் யுத்தத்தில் முடமான நண்பரொருவர் முதுமையை வாழமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் மரண நிகழ்வுதான் அதன் ஆரம்பம். பின்னோட்டமாக சுமார் ஐம்பது ஆண்டுக் கால களத்துக்கு விரியும் நாவல், பிறகு நிகழ் தளத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளை விவரிக்கும். சாதாரணமான முக்கோணக் காதல்தான் நாவலின் கரு. எனினும் அது நகர்ந்துசெல்லும் வேகமும் காட்டும் காட்சிகளும் பிரமாண்டமானவை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களையும், இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று தசாப்தங்களையும் இணைக்கும் நாவலென்றும் இதனைக் கூறமுடியும். இந்த சுமார் அரை நூற்றாண்டுக் காலத்தில் ஒரு பதின்ம வயதுக் காதல், உயிர்பெற்றிருந்து அரை நூற்றாண்டு கழிந்த பின்னால் ஒரு சந்தர்ப்பத்தில் எவ்வாறு இணைந்துகொண்டது என்பதை விபரிக்கும் இந்நாவல் காட்டும் காதலின் இலக்கணம் வித்தியாசமானது. மட்டுமில்லை, அதிசயமானதும். இதுவே கொலரா பரவிப் படர்ந்ததுபோல் வாசக உலகத்தைப் பீடித்தது. தனக்குப் பிடித்த நாவலாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் இதைக் குறிப்பிட்டிருப்பதும் இத்தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டியது.

பெர்மினா டாஸாவுக்கும் புளோறென்ரினோ அரிஸாவுக்கும் தோன்றும் காதலுக்கு பெர்மினாவின் தந்தை காட்டும் தீவிர எதிர்ப்பு மட்டுமில்லை, பெர்மினாவே பின்னால் தன் நிகரற்ற அழகினுக்கு ஏற்ற மணமகனாக தந்திச் சேவை அலுவலகமொன்றில் பணிபுரியும் புளோறென்ரினோ இருக்க முடியாதென நம்பத் துவங்குவதும் அவளை டாக்டர் யுவனெல் எர்பினோவுக்கு மனைவியாக்குகிறது.

காலம் விரைந்து கழிகிறது. மறுபடி பெர்மினா அந்நகருக்கு வரும்வரையான காலத்தில் புளோறென்ரினோவின் அந்தஸ்து உயர்ந்து வெகு பணக்காரனாகி விடுகிறான். புளோறென்ரினோவை மறுபடி பார்க்கும் சந்தர்ப்பத்தில்கூட தன் கணவனான யுவனெலுடன் மாறாத காதல் கொண்டவளாகவே இருக்கிறாள் பெர்மினா. இந்நிலையில் யுவனெலின் மரணம் சம்பவிக்கிறது. இறுதிக் கிரியைகளை முடித்துவிட்டு வரும் பெர்மினாவிடம் புளோறென்ரினோ அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்துக்காக தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் காத்திருப்பதைக் கூறி தன் காதலை வெளிப்படுத்துகிறான். அவனை ஏசி விரட்டுகிறாள் பெர்மினா.

இருந்தும் தனக்குள் ஒழிந்திருக்கும் காதலின் ஒரு பொறியை உணர்வதின்மூலமாய் புளோறென்ரினோவின் தொடர்ந்த காதல் கடிதங்களுக்கு இறுதியாகப் பதிலெழுதத் தீர்மானிக்கிறாள் அவள். அவர்களது தொடர்பு பிள்ளைகள், மருமக்கள் வரை தெரியவருவதும், அதை உதாசீனம்செய்து பெர்மினா புளோறென்ரினோவைச் சந்தித்துவருவதும் மட்டுமில்லை, ஒரு கப்பல் உல்லாசப் பயணத்துக்கும் அவள் அவனுடன் தயாராகிறாள்.

அப் பயணத்தின்போதுதான் அவர்களது முதல் உடலுறவு நிகழ்கிறது. அப்போது அவர்களுக்கு வயது எழுபதுக்கும் மேல்.

இக்கதையை மூலமாய் வைத்து எடுக்கப்பட்ட சினிமாதான் 2007இல் வெளிவந்திருக்கிறது.

நாவலுக்கும் சினிமாவுக்குமிடையே பெரிய மாறுபாடுகள் இல்லையென்பதுதான் இதிலுள்ள விசேஷமே. ஆனால் புளோறென்ரினோவின் பாத்திரம் சற்றே உணர்வுகள் சார்ந்த வகையில் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாய் ஒரு தீவிர சினிமா ரசிகன் உணரவே செய்வான்.

பெர்மினாவின் பிரிவின் பின் தான் அவளுக்காக காலமெல்லாம் பெண்சுகமற்று வாழவே புளோறென்ரினோ விருப்பப்படினும், அதன் மறுதலையாகவே வாழ்ந்து முடிக்கிறான். பெர்மினாபற்றிய அவனது நினைப்பை வெறும் இந்திய சினிமாத்தன காதல் தோல்வியாக நாவலிலும் சரி, சினிமாவிலும் சரி நம்மால் காணமுடியாமலே இருக்கும். ஆனாலும் எல்லையற்ற ஒரு காமவிழைச்சில் அவன் விழுந்தே கிடக்கிறான். காதலியின் நினைவினது தீராப் பொறி காரணமாவதாகவே வாசகன் அல்லது ரசிகன் உணர்த்தப் பெறுகிறான். அதுவரை அவன் 622 பெண்களோடு உடலுறவைக் கொண்டிருப்பானென்பது சாதாரணமானதல்ல. தணியாத காதலை அவன் தணிக்க எடுத்த முயற்சியாகவே பல்வேறு விமர்சகர்களாலும் இது பார்க்கப்பட்டது.

நவீன இலக்கிய உலகுக்கு மாந்திரீக யதார்த்தவாத நாவல்களை அளித்த கப்ரியேல் கர்ஸியா மார்க்வெய்ஸ் இந்த நாவலிலும் அந்த உத்தியையே பின்பற்றியிருக்கிறார். கொலராவாக ஆசிரியர் எதை உருவகித்தார் என்பதுபற்றி இன்றும் விமர்சகர்களிடையே அபிப்பிராய பேதமுண்டு. அவர் காதலின் வலியையே அவ்வாறு உருவகித்தார் என்று ஒருசாராரும், கொலம்பியா போன்ற ஒப்பீட்டளவில் வறிய நாடுகளில் காலரா என்ற பதமே அச்சம் தருவது, அதனால் வசதியீனங்களின் படிமமாக கொலராவை மார்க்வெய்ஸ் அமைத்தார் என்று ஒருசாராருமாய் அபிப்பிராயங்கள்.
நாவலில் இவ்வாறொரு நிறுதிட்டத்தை அடையமுடியாத் தன்மை, சினிமாவில் தெளிவுள்ளதாகக் காட்சியமைப்பாகியிருக்கும். இது சினிமா தவறிவிழுந்த இடமாகத் தெரியினும், மார்க்வெய்ஸின் மாந்திரீக யதார்த்தவாத நாவலைச் சினிமாவாக்கும் இடத்தில் இப்படியான இடர்ப்பாடுகளை ஒரு பிரதியமைப்பாளன் அல்லது நெறியாளுநன் இவ்வண்ணமே கையாள முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

கொலரா நோய்க்குப் பயந்து இடம்பெயர்ந்து வரும் குடும்பமாக பெர்மினாவின் குடும்பம் இருந்தபோதும், கொலரா வேறொன்றின் அடையாளமாய் நாவலில் இடம்பெறுவதாகவே கருதமுடிகிறது என்பது விமர்சகர்களின் கருத்து.
இவையெல்லாம்கொண்டு ஒட்டுமொத்தமாக நோக்குகையில், நாவலின் இணையாக சினிமா வரமுடியாதெனினும், அது அதுமாதிரியான சினிமாக்களுக்கு இணையாக இருப்பதாய்ச் சொல்லமுடிகிறது.

வெகுஜன சினிமாவா, இடைநிலைச் சினிமாவா, கலைச் சினிமாவா என இத் திரைப்படம் குறித்து ஒரு முடிவுக்கு வருவதில் இணக்கப்பாடின்மை தீவிர பார்வையாளர் மத்தியில் உண்டு. இம் மூன்று தன்மைகளும் சேர்ந்த ஒரு நல்ல சினிமா என்பதுதான் என் கணிப்பீடு.

இச் சினிமாவை நாவலுடன் பொருத்திப் பார்த்து தகைமை காண்கின்ற ஒரு முயற்சியே இது. நடிப்பு, நெறியாள்கை, ஒளி ஒலி அமைப்புக்கள்பற்றி இதில் நான் அதிகமும் ஒப்புமைக்குச் செல்லவில்லை என்பதையும் சொல்லவே வேண்டும்.

0

தாய்வீடு 2008

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்