Tuesday, June 16, 2015

உண்மையைத் தேடுதல்….

உண்மையைத் தேடுதல்….
-தேவகாந்தன்

உண்மையைத் தேடுதலென்பது அகம் சார்ந்த வி~யமாக காலகாலமாகப் பார்க்கப்பட்டு வந்ததென்பiதைத்தான், இதுவரையான மனித குல சிந்தனை வரலாறு தெரிவிக்கின்றது. அந்த உண்மையைக் கண்டடைவதற்கான ஞானம் தனிதனிதனின் இருப்பும், வாழ்வும், மறைவும், மறைவின் பின்னான வாழ்வுமென்ற தளங்களில் தேடப்பட்டதை மதம் சார்ந்த ஞானிகளில் வெளிப்பட்ட கருத்துக்கள் தெளிவாகக் சொல்லிநிற்கின்றன.

சத்தியத்தைக் காண காந்தியடிகள் நடத்திய ஒரு பெரும்வாழ்வு சத்திய சோதனையாக அறியப்பட்டது. ஷஅஹம் பிரஹ்மாம் அஸ்மி’ என்ற வாக்கியத்தின் அடிச்சிந்தனையாய்த் தொடர்ந்த தேடல் அது.

தனிமனித உண்மையன்றியும் ஒரு உண்மை இருப்பதனை கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ சமூக உண்மையாக முன்வைத்தது.

சாதாரணன் இப்போது குழம்புகிறான், உண்மை என்பது எதுவென.
உண்மை எப்போதும் ஒவ்வொருகாலத்தின் தேவைக்குமேற்ப கட்டமைக்கப்பட்டு வந்ததென்பதே சமூக விஞ்ஞானத்தின் அறிகை. நேற்றைய சமூகத்தின் உண்மையல்ல, இன்றைய சமூகத்தில் இருப்பது. வரலாறானது எவ்வாறு அதிகாரத்தினால் எழுதப்பட்டதோ, அதுபோல் அதிகாரத்தை விரும்பிய குழுக்கான உண்மைகளையே அவை கட்டமைத்தன.

மதம் முடியைவிட அதிகாரத்தைக் கொண்டிருந்த காலத்திய உண்மையைவிட, முடி மதத்தைவிட அதிகாரம் கொண்டிருந்த பிற்காலத்தில் கட்டப்பட்ட உண்மை வேறாகவே இருந்தது. இதன்படி மகாபாரத காலத்து உண்மையைவிடவும் இராமாயண காலத்து உண்மை வேறாகவே இருந்திருக்க முடியும். தன்னகம் சார்ந்தே இன்றைய நவீன இலக்கியமும், சிந்தனையும் பார்க்கப்படுவது, மாறிய யுகத்தின் மாறாச் சிந்தனையது எச்சமாக காணப்பட முடியும்.

இன்றைய சமூகத்தின் உண்மைகூட எல்லா காலநிலைகளின் உண்மையைவிடவும் வேறானதே.

எது சரியென்ற கேள்வியைவிட, உண்மை காலகாலத்துக்கும் மாறியே வந்திருக்கிறது என்ற புரிதலே இங்கே முக்கியம்.

இந்த உண்மையென்பது எங்கே இருக்கிறதென்ற கேள்வி இனி முக்கியத்துவமானது.

சொல்லப்பட்ட எதுவும் உண்மையில்லை என்கிறார்கள். நிஜமான உண்மை இனிமேல்தான் கண்டடையப்பட வேண்டியதிருக்கிறது. அரசியலிலும், சமூகத்திலும், இலக்கியத்திலும், கலாச்சாரத்திலும் கவனத்திலெடுக்கப்படா பல உண்மைகள்.

எது நிஜமென்று நாம் மலைக்கிறோம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் வெறும் மூன்றாண்டுகளே கால்பதித்து மறைந்த ஒரு இருபதாம் நூற்றாண்டு மிகச் சிறந்த சிந்தனாவாதி ஒருவர் இருந்தார். புலப்பெயர்வுகளையும், அகதி நிலைமையையும், அவர்களின் கலாச்சார சிக்கல்களையும்பற்றி மிகநுட்பமாக அவர் சிந்தித்திருக்கிறார். அவர்தான் எட்வேர்ட் செயித் (1935-2003).

அவர் எழுதிய முக்கியமான கட்டுரையொன்றுண்டு. ‘பொதுப்புலத்தில் எழுத்தாளர் மற்றும் அறிவுஜீவிகள் என்பவர்களின் பாத்திரம்’ என்பது அது. பொதுவாக ஒரு சமூகம் அறிவுஜீவிகளைவிட எழுத்தாளர்களையே கொண்டாடுகிறது. அவர்களது படைப்பாற்றலின் காரணம் அது. அறிவுஜீவிகள் அந்தளவு தூரம் அச்சமூகத்தால் போற்றப்படுவதில்லை. காரணம் அவர்கள் விமர்சகர்கள் மட்டுமே. ஆனால் இருபத்தோராம் நூற்றாண்டில் எழுத்தாளர்-விமர்சகர் என்ற எல்லை அழிந்திருக்கிறது என்கிறார் எட்வேர்ட் செயித் அந்தக் கட்டுரையில். தமது கூற்றுக்கு ஆதாரமாக வோலே சோயிங்கா மற்றும் ஒக்ரோவியா பாஸ் ஆகியோரை அவர் குறிப்பிடுவார்.

இதை யோசிக்கும்போது துக்கப்பட நம் மத்தியில் நிறையவே வி~யங்கள் இருக்கின்றன.

திரும்பத் திரும்ப, எதிர்வினைகளைக் கண்டுகொள்ளாமல் சொன்னதைச் சொல்வதும், செய்வதைச் செய்வதும் சாதாரணமாக நடக்கிறது நம் சமூகத்தில். இது உண்மையை மறைத்து எடுக்கும் முயற்சியாக இருக்கிறபோதில், இதையேதான் உண்மையைத் தேடுபவர்களாலும் செய்யவேண்டி இருக்கிறது.

அகம் சார்ந்த பல வி~யங்கள் பேசியாகிவிட்டன. இனி புறம் சார்ந்து பேச நிறையத் தேவையிருக்கிறது.

நாம் இதுபற்றி யோசித்தாகவேண்டும்.

‘உண்மையைத் தேடுதல்’ என்ற இந்தப் பகுதி இ-குருவி வாசகர்களுடன் நான் கொள்ளும் இலக்கிய, சமூக, அரசியல் மற்றும் கலைகளின் கருத்துக்ளுக்கான சாளரம். என் வாசிப்பு, என் பயணம், என் சந்திப்பு, என் பங்கேற்பு என எதுவாயும் இச் சாளரத்தினூடாக வருவது இருக்கக்கூடும். ஆனால் உங்கள் சிந்னையை புரட்டிப் போடாவிட்டாலும் அதில் ஒரு துளியையேனும் சேர்க்கக் கூடியதாய் இப் பகுதி அமையுமென நிச்சயமாக நம்புகிறேன்.

தொடர்ந்து சாளரம்-1 இல் சந்திப்போம்.

000

இ - குருவி, ஜூன் 2015
.


ஏற்புரை…இலக்கியத் தோட்ட நாவல் விருது

இலக்கியத் தோட்ட நாவல் விருதுக்கான 3  நிமிட ஏற்புரை…

-தேவகாந்தன்-


வணக்கம்! கனவுச்சிறை நாவலுக்கு 2014ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது கிடைத்தமைக்காக  அவ்வமைப்பினைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும், நடுவர்களுக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச அளவில் மிக முக்கியமான தமிழ் விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருது ‘கனவுச் சிறை’ நாவலுக்கு கிடைத்தமைக்காக உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாவல் கதைகொண்டிருக்கும் காலம் 1981 தொடங்கி 2001 வரையான இருபத்தோராண்டுகள். எனினும் அது விரிந்திருக்கும் வெளி இலங்கைச் சரித்திரத்திரத்தில் இருபத்தொரு நுர்ற்றாண்டுகள். அரசியல், மதம், கலையென அது விகாசம்கொண்டிருக்கும் தன்மை இதில் முக்கியமானது. நொடி என்று கால அளவையின் மிகச் சிறிய பகுதி தமிழில் குறிக்கப்படுகிறது. அதையும் உன்னல் கால், உறுத்தல் அரை, முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்று என நான்காக வகுத்திருக்கிறது தொல்காப்பியம். ஆயிரம் பக்கங்கள்கொண்ட இந்த நாவலிலும், ஐந்து பாகங்கள், பதினொரு பகுதிகளென நுண்மையாக வகுக்கப்பெற்ற பல்வேறு பகுப்புக்கள். 1981, 1983, 1985 என இருபத்தோராண்டுக் காலம் பதினொரு காலப் பகுதிகளில் அமைகிறபோது, அது தழுவிச் செல்லவேண்டிய மேலும் பத்து வரு~ங்களான 1982,1984,1986 ஆகியவற்றின் கதை பின்னே நகர்ந்து செல்வதின் மூலம் வளைந்து வளைந்து செல்லும் நாகமாக தன்னை வடிவமைத்த நாவலும் இது. இந்த அமைப்பு நான் எழுதும்போதே நினையாப் பிரகாரமாய் அமைந்ததுதான். எனினும் அதுவே நாவலின் விசே~மான அம்சமாக பலராலும் சொல்லப்பட்டிருந்தது.

1981-2001 வரையான காலத்தைப்போல் 2009வரையான மீதி நிகழ்வுகளை எப்போது நாவலாக்கப் போகிறீர்கள் என்று சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அப்படியொரு அபிப்பிராயம் இல்லையென்று அவர்களுக்குப் பதில்கூறியிருந்தேன். உண்மையும் அதுதான். இந்த ‘கனவுச்சிறை’யை எழுத எப்படி என்னிடம் திட்டமிருக்கவில்லையோ, அப்படித்தான் அது. ‘தோன்றியது, எழுதினேன்’ என்பதுதானே விஷயம்!

திருப்பி திருப்பி கைகளாலே எழுதப்பட்டதில் சுமார் ஐம்பதாயிரம் முழுநீள பக்கங்கங்களை அழித்துவிட்டு, இரண்டாயிரம் பக்க கையெழுத்துப்  பிரதியாக இந்நாவல் இறுதியில் தேறியிருந்தது. ஒற்றைத் தொகுப்பாக 1998லேயே வந்திருக்க வாய்ப்பற்றுப் போனது இந்நாவலுக்கு. இது அரசியலைப் பேசுவதாக இருக்குமோ என்ற சில பதிப்பகங்களின் பயம் அதன் காரணமாக இருந்தது. இது அரசியலைப் பேசியதுதான். ஆனால் அது பேசியது அகதிகளுக்கான அரசியலாகவே இருந்தது.

பதினாறு ஆண்டுகளின் பின் அச் சாத்தியம் இன்று நிறைவேறியிருக்கிறது. அச் சாத்தியத்தை அளித்த காலச்சுவடு பதிப்பகத்துக்கும், அதற்கு நீண்டவொரு முன்னுரையை வழங்கிய திரு.தேவிபாரதிக்கும் என் நன்றிகள். தமிழ் இலக்கியத் தோட்டத்தினருக்கு மீண்டும் என் மனதார்ந்த நன்றிகள்.
வணக்கம்.
000

கனவுச்சிறை நாவலுக்கான தமிழ் இலக்கிய தோட்டவிருது விழா ஏற்புரை 
06.16.2015

கலாபன் கதை 2-6தேவதைகளின் கூண்டும்
பிசாசுகளின் வெளியும்


ஆயிரத்து தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் ஆரம்பம் அது. தைப்பொங்கல் முடிய வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தவனுக்கு ஞானக்கோன் ஏஜன்ஸியில் கப்பல் பொறியியலாளனாய்ப் பதிய சிரமமிருந்தாலும், முடிந்திருந்தது. முன்புபோல் இந்தியா சென்று கப்பலெடுக்கிற எண்ணத்தை, முந்திய கப்பலைவிட்டு விலகி வீடு வரும்போதே அவன் திரஸ்காரம் செய்திருந்தான்.
வத்தளையில் அவனூர் நண்பர்கள் சிலர் வீடொன்று எடுத்து தங்கியிருந்தார்கள். அவர்கள் அதிகமும் அரச நிறுவனங்களிலும், சிலர் பெயர்பெற்ற தனியார் நிறுவனங்களிலும் வேலைசெய்தனர். அவர்களோடு பெரும்பாலும் தன்னால் ஒத்துப்போக முடியுமென்று நம்பியவன் அங்கேசென்று அவர்களோடு தங்கினான். வாடகை, சமையல் உட்பட்ட செலவுகளை ஏழாக பகிர்ந்துகொள்வது என்பது தீர்மானம்.

ஊர் நண்பர்கள் அதிமாய் இருந்தது ஒருவிதத்தில் கலாபனுக்கு அனுசரணையாக இருந்தது என்றே கூறவேண்டும். லேசாக குடிப்பதற்கு மட்டுமே அவனால் அங்கே முடிந்திருந்தது. வேறு தேடல்கள், ஒருமாதமாகிவிட்டிருந்த அளவில் முளைகொள்ளப் பார்த்தபோதும், நண்பர்களுக்காகவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு அவன் காத்திருக்கவேண்டியதாயிற்று.

ஒருநாள் திடீரென ஒரு தந்தி அவன் பெயருக்கு ஞானக்கோன் ஏஜன்ஸியிலிருந்து வந்தது. விபரம் தெரிவிக்கப்பட்டிராவிட்டாலும் அதன் காரணத்தை கலாபனால் மட்டுமல்ல, அறை நண்பர்களாலுமே அனுமானிக்க முடிந்திருந்தது.

மறுநாள் காலையில் ஏஜன்ஸிக்கு சென்றான் கலாபன்.
அன்றிரவே அவன் கிளம்பி  பம்பாய் துறைமுகத்தில் நின்றிருக்கும் எம்.வி.பிறீஸர் கிங் கப்பலில் சேரவேண்டுமென்று சொன்னார்கள். ஏஜன்ஸிக்கு கையூட்டெதுவும் அவன் கொடுக்கவேண்டி இருக்காதாகையால் கலாபனுக்கு அந்த வேலையை மறுக்க காரணமிருக்கவில்லை.

வத்தளைக்கு திரும்பிய கலாபன் ஏறக்குறைய எல்லாம் தயார் நிலையிலேயே இருந்ததால், மாலையில் விமானப் பயண சீட்டு கிடைத்ததும், நண்பர்களுக்கு அடையாள விருந்தளிப்போடு அதிகாலை ஒன்றரை மணியளவில் கிளம்பவிருந்த  ஏர்லங்கா விமானத்திலேற பத்து மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையம் புறப்பட்டான்.

குண்டுகள் வெடிக்காத, மனிதப் பேரவலம் பெரிதாக நடைபெறாத காலமாக அது இருந்தது. ஆங்காங்கே தமிழ்ப் பகுதிகளில் வங்கிக் கொள்ளைகளும், பொலிஸ் நிலைய தாக்குதல்களும், கைத்துப்பாக்கிகள் மூலமான கொலைகளும் நடந்துகொண்டிருந்தாலும், ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகமும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. கலாபன் கட்டுநாயக்க விமானநிலையத்தை அடைவதில் எந்தத் தடங்கலும் இருக்கவில்லை.
அங்கிருந்து பம்பாயை அடையவும், பம்பாய் விமான நிலையத்தில் காத்திருந்த அங்குள்ள கப்பல் ஏஜன்ற் அவனைச் சந்தித்து உடனடியாகவே பம்பாய் துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலுக்கு அவனை எட்டு மணிக்குள்ளாக கொண்டுபோய்ச் சேர்த்தார்.

அவனுக்கான கபின் தயாராகவிருந்தது. மதியத்துக்கு மேல் கீழே எந்திர அறையைப் பார்க்கச் சென்றவன் கபினுக்குத் திரும்பியபோது, ஒரு தமிழ் இளைஞன் வாசலில் அவனைக் காத்துக்கொண்டு நின்றிருந்தான்.
நடா என்று பெயர்சொல்லி தன்னை அறிமுகப்படுத்திய அந்த தமிழிளைஞன், மிகுந்த சுயாதீனமெடுத்துக்கொண்டு கலாபனுடைய கபினுக்கு சென்றுவிட்டான். கலாபனுக்கு அதுமாதிரித் தொடர்புகள் விருப்பமில்லாதவை. அவற்றால் சிலசமயங்களில் அவன் சிரமங்களையும், துயரங்களையுமே அடைந்திருக்கிறான். ஆயினும் நடா இலங்கையனாக இருந்ததில் கலாபன் பெரிதாக தன் அதிருப்தியைக் காட்டிக்கொள்ளவில்லை. அவனும் மோசமான பேர்வழிபோல் தோன்றவுமில்லை.

கப்பலெடுக்க பம்பாய்க்கு வந்து மூன்று வருடங்களென்றான். கப்பல் அனுபவத்தைத் தவிர மற்றெல்லா அனுபவங்களையும் அந்த மூன்றாண்டுகளில் சம்பாதித்துள்ளதாக ஒரு துயரச் சிரிப்போடு சொன்னான்.
அன்று மாலை கலாபன் வெளியே சென்றபோது நடாவையும் அழைத்தே சென்றான். அவனிடமிருந்த தகவல்கள் மிகவும் வித்தியாசமானவையாக இருந்தன. அதைக் கிரகிக்க ஒரு பார்போல பொருத்தமான இடம் வேறெது இருக்கமுடியும்?

கலாபனுக்கு பம்பாய் பழைய இடம். ஆனாலும் கடந்த சில காலமாக அவன் பம்பாய்க்கு வந்திருக்கவில்லை. அது அந்த இடைக்காலத்தில் எவ்வளவோ மாறியிருந்தது. கட்டிடங்களாலும், தன்மையாலும். அதனால் கலாபனுக்கு அவனுதவி தேவையாயிருந்தது. அவன் பிரச்னையில்லாத, அதிகம் செலவு ஏற்படாத ஒரு றெஸ்ரோறன்ருக்கு இருவரும் போகலாமென்றான்.

சிறிதுநேரம் யோசித்துக்கொண்டிருந்த நடா கேட்டான்: “அண்ணை, ஆற்றயும் வீடாயிருந்தால் உங்களுக்குப் பறவாயில்லையோ?”

“ஆற்றயும் வீடெண்டா…?”

“எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆங்கிலோ இந்தியக் குடும்பம் இஞ்ச வி.ரி.யிலதான் இருக்கு. ஒரு வயதுபோன மனுசிக்கு ரண்டு பொம்பிளைப் பிள்ளையள். ஓண்டு கலியாணமாகி புருசன் விட்டிட்டுப் போட்டான். ஒரு பிள்ளையிருக்கு. மற்றப்பெட்டைக்கு கலியாணமாகேல்ல.”

“அப்பிடியான இடமெண்டா இன்னும் கூடுதலான பிரச்னைதானே வரும்.”
“ஒண்டும் வராதண்ணை. நான் இருக்கிறன்தானே, பயப்பிடாம வாருங்கோ.”
“போர்ட்டுக்கு கிட்ட இருக்கிறதால வாறன்.” கலாபன் அங்கே செல்ல இறுதியில் சம்மதித்தான்.

போர்ட்டுக்கு  அண்மையில் இருப்பதால் அங்கே செல்லலாமெனச் சொல்லியிருந்தாலும், கலாபனின் மனத்தில் வேறு நினைவுகளே ஓடியிருந்தன.

அந்த ஆங்கிலோ-இந்திய குடும்பத்தின் வீட்டுக்குச் சென்றபோது வேறு இரண்டு மூன்று பேர் அங்கேயிருந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உள்ளே சென்றதும், இந்தியிலோ மராத்தியிலோ அந்த பெரியன்ரியை அழைத்து தமக்கு விஸ்கி வாங்கித்தர சொன்னான் நடா.
கலாபனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, தன்னிடம் இந்திய ரூபாய் இல்லையென்பது. ஐம்பது டொலர் எடுத்துக்கொடுத்தான். பெரியம்மா எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு வெளியே சென்றாள். வெளிநாட்டுப் பணம் மிகச் சாதாரணமாக மாற்றக்கூடிய இடமாக வந்துவிட்டதா பம்பாய்? கலாபன் அதிசயித்தான்.

கலாபன் அந்த வீட்டை நோட்டமிட்டான்.

;ட’பட அமைந்த கூடம். இரண்டு அறைகள் இருந்தன. ஒரு பகுதியை சமையலறையாக பாவித்தார்கள். எண்ணெய் அடும்பும், மேடையும், சில்வர் பானை சட்டிகளும் இருந்தன.

கலாபனும் நடாவும் சிகரெட் புகைத்தனர். அது முடிவதற்குள் பெரியம்மா விஸ்கி போத்தலோடும், சிகரெட் பைக்கற்றோடும் வந்துவிட்டாள்.

பாதி போத்தல் முடிந்தளவில் நடா மிழற்றத் தொடங்கிவிட்டான். அதன்மேல் பம்பாயிலிருந்த இலங்கைத் தமிழிளைஞர்கள்பற்றி அறிவதில் கலாபனுக்குச் சிரமமிருக்கவில்லை. இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டம் மிகுந்த வீச்சு பெற்றிராத அந்தக் காலத்தில், பெரும்பாலான இளைஞர்கள் கப்பலெடுக்கவென்றே தம் மண்ணை நீங்கினர்.

ஒருகாலத்தில் வாழ்க்கை அழைத்த பக்கங்களுக்;கெல்லாம் ஓடியோடி தமிழினம் மாய்ந்த வரலாற்றை ரத்தம் சொட்டச் சொட்ட கவிதையாக்கினான் ஒரு கவிஞன். பாரதி என்றழைக்கப்பட்ட அந்த மகாகவிஞனின் கவிதைதான் கண்ணற்ற தீவில் தமிழகத்திலிருந்து சென்ற தமிழரடைந்த துயரவரலாற்றைச் சொன்னது. அடுத்து ‘துன்பக்கேணி’ என்றொரு கதையெழுதினான் இன்னொரு மகாகலைஞன். அதுவும் தமிழகத் தமிழர்கள் தம் மண் பிரிந்து இலங்கையின் மலைநாடு சென்று பட்ட கொடுமைகளை, அடைந்த துயரங்களையும் மரணங்களையும் பேசியது. 1970களில் இந்தியா வந்து அதன் அனைத்து துறைமுக நகரங்களிலும் வாழ்வைத் தொலைத்த இலங்கைத் தமிழிளைஞர்களின் கதைதான் இனி எழுதப்படவுள்ளது என நினைத்தான் கலாபன்.

சிவபாலனோடு நண்பனாகியதிலிருந்து அவனுக்கும் இலக்கியார்த்தமாய்ச் சிந்திக்க இப்போதெல்லாம் முடிந்திருந்தது.

நடா பெரியன்ரியை கூப்பிட்டு முட்டை வறுத்து தரச்சொன்னான்.

முட்டை வறுவல் வந்தது. இன்னொரு அரைப் போத்தல் விஸ்கி கேட்டான். பெரியன்ரி வாங்கிவந்து கொடுத்தாள். நடா குடிப்பதும், கதை சொல்வதுமாய். கலாபன் கேட்டபடியிருந்தான்.

ஒருபோது ஞாபகம்வர பெரியன்ரியின் மகள்களைப்பற்றிக் கேட்டான் கலாபன். “அவை வெளியில வரமாட்டினமோ?”

“இனித்தான் வருவினம். பிள்ளை நித்திரை கொள்ள ரீட்டா வருவாள். அதுக்குப் பிறகு கொஞ்சநேரத்தால ஜெஸ்மின் வருவாள்” என்ற நடா, கலாபன் தூண்டாமலே திரும்ப கதைக்குள் நுழைந்துவிட்டான்.

இப்போது நடாவுக்கு நன்கு போதையேறியிருந்தது தெரிந்தது. இனி பெரிதாக அவனிடமிருந்து பிதற்றல் தவிர வேறெதுவும் வெளிவராதென்பதை கலாபன் உணர்ந்தான். ஆனாலும் போக மனமில்லாதிருந்தது கூண்டுக்குள்ளிருக்கும் அந்த இரண்டு பெண்களையும் காணும்வரை.

பெரியன்ரி வெளியிலேயே அமர்ந்துகொண்டிருந்தாள். இன்னும் சிலர் வந்தார்கள் சிறிய குப்பிப் போத்தலுடன். சிறிதுநேரத்திலேயே குடித்துமுடித்து போயினர். அவர்கள் காசு கொடுத்ததைப்; பார்க்க கிளாஷுக்கு இத்தனை ரூபாயென்று பெரியன்ரி ஒரு தொகை வாங்குவதாக கலாபன் கருதினான்.
கலாபனுக்கு நடாவிடமிருந்து இன்னும் சில விஷயங்கள் உள்ளேயிருக்கும் அந்த இரண்டு பெண்களையும்பற்றி தெரியவேண்டியிருந்தது. அவன் கேட்டான்: “நடா, அந்த ரண்டு பிள்ளையளும் உண்மையில பெரியன்ரியின்ர பிள்ளையளோ?”

“எனக்குத் தெரியாதண்ணை. ஆனா அவளவையும் அன்ரியெண்டுதான் கூப்பிடுகினம். சொந்தக்காறராய் இருக்கும். அவ்வளவு நெருக்கம் அவைக்குள்ள. பெரியன்ரிக்கு தலையிடியெண்டாக்கூட அவளவை துடிச்சுப் போவாளவை. அவளவைக்கு ஒரு காச்சல், இருமலெண்டாலும் பெரியன்ரியும் அப்பிடித்தான்” என்றான் நடா.

“அவை நல்லாக்கள்தானோ? இல்லாட்டி அப்பிடியிப்பிடியோ?”
“இப்பவே பத்தரை மணியாச்சு. இனித்தான் வெளிய வருவினமெண்டேக்கயே உங்களுக்கு விளங்கியிருக்கவேணுமண்ணை. முதல்ல தமக்கை வருவா. பிறகு தங்கச்சியார் வருவா. சும்மா ஆக்களிட்ட போகமாட்டாளவை. எல்லாம் கப்பல்காறர்தான். சிலோன் பெடியள்தான் அதிகமாய் வாறது. ஆனா பாத்தா நம்பமாட்டியளண்ணை, இவளவை இப்பிடி நடக்கிறாளவையெண்டு.”

அப்போது அறைக்குள்ளிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். சேலை உடுத்தியிருந்தாள். தடிமனாக இருந்தாள். அந்த உயரத்துக்கு உருவம் பெரிதுதான். ஆனால் ஒரு பரு வந்த மறுகூட இன்றி முகம் பளீரென்று நி~;களங்கமாய் இருந்தது. முகத்தில் சலனத்தின் எந்தச் சாயலும் இல்லை. கண்டு அதிர்ந்துறைந்திருந்தான் கலாபன்.

அவனது பார்வையை எதிர்ப்பட மெல்லச் சிரித்தாள். பற்கள் மின்னின. இயல்பில் சிவந்த இதழ்களுக்கிடையில் அந்த வெண் பற்கள், பாரதி சொன்னதுபோல் ‘தின்பதற்கு மட்டுமல்ல, தின்னப்படுவதற்குமான பற்க’ளாய் இருந்தன. அந்த அழகு அவன் எதிர்பார்த்திராதது. தெய்வீகமான அழகு என ஏதாவதிருந்தால் அதுதான் அந்த அழகு என்பதில் கலாபனுக்கு உறுதியிருந்தது.

பெரியன்ரியுடன் கதைத்துவிட்டு திரும்ப அவளை நடா அழைத்தான்.
முதலில் தலையை அசைத்தாள். பின் மெதுமெதுவாக நடாவோடு பேசியபடியே வந்து கலாபனின் அருகில் அமர்ந்தாள்.

இனி நடாவின் உதவி அவனுக்குத் தேவையில்லை.

அவன் அவளைப் பார்த்து குடிக்கிறாயாவென்று விஸ்கி போத்தலைக் காட்டினான். உடனே தலையிட்டு, “நோ… நோ… பெரியன்ரி, ஏக் பியர் லேக்கியாவோ” என்றான் நடா.

“நீ பியர் குடிப்பதால்தான் இப்படி மொத்தமாக இருக்கிறாய். விஸ்கி குடித்தாயென்றால் இந்த உடம்பு கொஞ்சநாளிலேயே பாதியாய்க் குறைந்துவிடும்” என்றான் கலாபன்.

உடனே ரீட்டா பெரியன்ரியை கூப்பிட்டு தனக்கு பியர் வேண்டாமென்றும், அன்றைக்கு தான் விஸ்கியே குடிக்கப்போவதாகவும் சொன்னாள்.
ஒரு தடம் கலாபனை நோக்கி எறியப்பட்டாயிற்று.

ரீட்டா கிளாஸ் எடுத்துவந்து விஸ்கி ஊற்றிக் குடிக்கவாரம்பித்தாள். “உனக்கு ஒன்று தெரியுமா? நான் ஆரம்பித்ததே விஸ்கியில்தான்.”

அப்போது ஜெஸ்மின் வந்தாள். மெலிந்து உயரமாக இருந்தாள். மிக இளமையாய்த் தோன்றினாள். நீளப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தாள். அழகும், லாவகமும் பொருந்திய அந்த உடம்பு ரீட்டாவுக்கு சமதையான பொலிவுகொண்டு விளங்கியது.

நீண்;டநேரமாக அவளையே கலாபன் கவனித்துக்கொண்டிருப்பது கண்ட ரீட்டா, அவளை அவன் விரும்பினால் அழைக்கலாம் என்ற ஊடு விடுவதுபோல் தனது கிளாஸ{டன் எழுந்து அங்காலே குடித்துக்கொண்டிருந்த இருவரையும் நோக்கிச் சென்று பேசிக்கொண்டு நின்றாள்.

இந்த விபரங்களெல்லாம் தெரியாமல் இருக்க முடியாது நடாவுக்கு. அவன் ஜெஸ்மினை அழைத்தான்;. கலாபன் உடனேயே வேண்டாமென்றுவிட்டான்.
சிறிதுநேரத்தில் இன்னும் இரண்டு இளைஞர்கள் வந்து அவளிடம் பியர் கேட்டனர். கடலோடிகளாய்த் தெரிந்தது. இலங்கை இளைஞர்களாகவும் தோன்றியது. “நேற்று இவங்கள் வந்து அவளோடதான் படுத்திட்டுப் போனாங்கள்” என்று கலாபனுக்கு கூறினான் நடா.

கலாபன் சிகரெட் எடுத்துப் புகைத்தான்.

அவனது சிந்தனை எங்கோ பறந்தது.

‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழி ஊரிலிருக்கிறது. அது ஆயிரமாயிரமாண்டுப் பழமையான மொழியும். இவ்வளவு அர்த்தத்தோடு இலக்கியத்திலும் இது ஏறியுள்ளது.

இவ்வளவு அரும்பாடுபட்டு செல்வத்தைச் சேர்ப்பது தானும், தன் குடும்பத்தாரும் வாழவும், ஈகைக்காகவுமென்று சங்க மருவிய காலத்து நூல் சொல்கிறது. இது சங்கமருவிய காலத்தில் மட்டுமில்லை, இன்றைக்கும் இருக்கவேண்டிய பண்புதானே? இன்றைய இலங்கை இளைஞர்கள் இவ்வாறு மதுவிலும், மாதுவிலுமாக திரைகடலோடிச் சம்பாதித்ததை செலவுசெய்வார்களானால் திரவியத்தை எவ்வாறு வீடுகொண்டுபோய்ச் சேர்க்கமுடியும்? தேடத்தானே திரைகடல் ஓடுகிறான்?

கலாபனது சிந்தனையை ரீட்டாவின் பிரசன்னம் கலைத்தது.

“என்ன யோசித்துக்கொண்டிருந்தாய்?” ரீட்டா கேட்டாள்.

“ஒன்றுமில்லை.”

“ம்.”

அவள் விஸ்கி ஊற்றி குடித்தாள். சற்றுநேரம் செல்ல கேட்டாள், “நீ இன்றைக்கு இங்கே தங்குவாயா?” என.

“நேற்றிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டு இன்று காலையில்தான் கப்பலில் சேர்ந்திருந்தேன்.”

“பயணக் களைப்பா?”

“ஓரளவு.”

“கப்பல் எப்போது புறப்படுகிறது?”

“நாளை மாலையில். துபாய்க்குச் செல்கிறது.”

“அங்கிருந்து எங்கே? ஏதாவது ஐரோப்பிய நாடொன்றுக்காயிருக்கும். நீ கவலைப்படத் தேவையில்லை.”

“இல்லை, திரும்பவும் இங்கேதான். பம்பாய், கல்கத்தா அல்லது மங்க@ர் எதுவாகவும் இருக்கும்.”

“இப்போது என்ன செய்யப்போகிறாய்?” என  ரீட்டா கேட்க, கலாபன் சிறிதுநேரம் யோசித்தான். அது பாலியல் தொழிலாளிக்கான தேவையின் அழைப்புத்தான். ஆனாலும் அவளோடு அன்றைய பொழுதுக்கு இன்;னுமொருவன் வந்து சேரக்கூடுமானாலும், அவள் உள்ளுள்ளாய் அக்கணம் அடைந்த ஒரு துக்கத்தின் இழை முகத்தில் கவிந்திருந்து அவள் அழகையே அழித்துக்கொண்டிருந்தது.

அதை அவன் அனுமதித்துவிட முடியாது. “நான் தங்குகிறேன்” என்றான் கலாபன்.

அப்போது அவள் முகம் மலர்ந்தவிதத்தில் கலாபன் மனம் குளிர்ந்தது.
அவர்கள் நேரமாக ஆக தனியுலகமாகிப் போனார்கள். பெரியன்ரி வந்து தூங்கி விழுந்துகொண்டிருந்த நடாவை எழுப்பி தங்குமிடத்துக்குச் செல்ல அனுப்பினாள். டாக்ஸியில் செல்ல கலாபனிடம் இருபது ரூபா வாங்கிக்கொண்டு நடா வெளியேறினான்.

அப்போது நடாவை இடிப்பதுபோல அவசரமாக ஒருவன் உள்ளே வந்தான். ஏதோ மராத்தியில் கத்தினான். பெரியன்ரி அலுமாரியைத் திறந்து எதையோ எடுத்துவந்து அவசரமாக நீட்டினாள். ரூபாய்கள். வாங்கி எண்ணிப்பார்த்துவிட்டு “அச்சா” என்றுவிட்டு வந்த வேகத்திலேயே வெளியேறினான் அவன்.

கலாபனால் கதையொன்றை அப்போதே புனைய முடிந்தது. அதுவல்ல அவனது விருப்பம். கதையைவிடவும் முக்கியமானது அதிலுள்ள உணர்வு. அதை ரீட்டாவால்மட்டுமே அந்தக் கதையில் செறிக்க முடியும்.
உள்ளே சென்ற பின்னால், “யாரவன்? பெரியன்ரி பணம் கொடுத்தாளே, அவன்தான்” என ரீட்டாவை கலாபன் வினவினான்.

“நீ கவனித்தாயா? ம்… அவன்தான் எனது விதியையும், என் தங்கையின் விதியையும் நிர்ணயித்தவன். எங்கோ பெற்றோர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்த எங்களை அவர்களிடமிருந்து பிரித்து, எங்கோ வைத்து வளர்த்து பிறகு இங்கே கொண்டுவந்து சேர்த்தவன் அவன்தான். விதியை எழுதியதனால் அவனே எங்கள் கடவுள்.”

அத்தனை சோகத்தை அவ்வளவு வார்த்தைகளில் ஏற்ற முடியுமா? கலாபன் அதிசயித்தான்.

அவனது கதைக்கு அப்போது உணர்வு கிடைத்தது.

000


தாய்வீடு, ஜூன் 2015
(கி.பி.அரவிந்தன் நினைவுக் கட்டுரை)

கனவின் மீதியைக் கொண்டலைந்த பயணத்தின் முடிவுதொடர்ந்தேர்ச்சியான சில முக்கிய ஆளுமைகளின் மரணங்களை கடந்த சில காலமாக இலங்கையின் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சந்தித்துவருகிறது. அந்தவகையில் கடந்த மார்ச் 08, 2015இல் நிகழ்ந்த கி.பி.அரவிந்தனின் மரணமும் இதன் முக்கியமானதொரு இழப்பாகக் கருதப்பட முடியும்.
இழப்புகள் ஏற்படுத்தும் கனிவுகளில் இறந்தவர்களின் தகைமைகள் ஒளிவட்டங்களாய்க் கீறப்படும் சூழலில், கி.பி.அரவிந்தனின் மறைவு நியாயமான அதிர்வுகளைக்கூட இலங்கைத் தமிழ்ச் சமூகத்திடையே ஏற்படுத்தவில்லையென்பது ஆச்சரியமான விஷயமல்ல. 1970களில் தொடங்கி 2009இல் முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்ற இலங்கையின் இனப் போராட்டம்பற்றி கி.பி.அரவிந்தனின் அவதானங்களில் வெளிப்பட்ட கருத்துக்கள் அச் சமூகத்தில் பரவசங்களை உருவாக்கக்கூடியவையாய் இருக்கவில்லையென்பது இதன் காரணமாய் இருக்கக்கூடும். அவர் வரலாற்றைக் கணிக்கும் நீரோட்டமாய் இருந்தாரென்பது, இனிமேலும் பரவசங்களை உருவாக்காமல் போக  வாய்ப்பிருக்குமென்றாலும், அவர்பற்றிய உண்;மை அதிலேதான் இருக்;கிறது.

கி.பி.அரவிந்தனின் மரணம் எதிர்பார்த்திராத திடீர் மரணமல்ல. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் புற்றுநோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டதிலிருந்தும், ஓராண்டுக்கு முன்னர் நடந்தேறிய சத்திர சிகிச்சையிலிருந்தும் அதிர்வுகளை மெல்லமெல்ல உதிர்த்துக்கொண்டே வந்திருந்தது.

செப்ரெம்பர் 17, 1953இல் பிறந்த கி.பி.அரவிந்தன் இறந்தது மார்ச் 08, 2015இல் ஆகும். இலங்கையின் வடமாகாணத்து நெடுந்தீவில் ஓர் இலங்கைத் தமிழனாய்ப் பிறந்ததுபோலவே, பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் சற்றொப்ப கால்நூற்றாண்டு வதிவுக்குப் பின்னரும் அவரது மரணம் ஒரு இலங்கைத் தமிழனாகவே நிகழ்ந்திருக்கிறதென்பது இன்னும் கனதியை அந்த மரணத்தில் ஏற்றுகிறது. அகதிநிலையை மாற்றி ஒரு பிரான்ஸ் குடிமகனாக மாற பிடிவாதமாக மறுத்துக்கொண்டிருந்தவர் அவர். ‘அகதியாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன். அல்லது அகதியாகவே செத்துப்போகிறேன்’ என்று சொன்னபடி ஒரு அகதியாகவே அவர் மரணித்திருக்கிறார்.

கி.பி.அரவிந்தன் எனக்கு மிகவும் பரிச்சயப்பட்ட மனிதரில்லை. 1978இல் தமிழ்நாட்டுக்கு வந்த அரவிந்தனைப்பற்றி நான் 1984இல் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னால்தான் அறிய நேர்ந்தேன். அவரது நண்பர்களாயிருந்த இலக்;கியவாதிகளே தொண்ணூறுகளில் எனது நண்பர்களுமானபோது, அவர்களின் பேச்சில் பிரஸ்தாபிக்கப்பட்ட ஆளுமைமிக்க அந்தப் போராளி தமிழ்நாட்டில் இருக்கவில்லை. குறிப்பாக கவிஞர் விக்கிரமாதித்யனுடன் அவருக்கு நெருங்கிய அறிமுகம் இருந்ததாய்த் தெரிகிறது. அவர்பற்றிய விக்கிரமாதித்யனின் நினைவுகளின் இடையீடுதான் அவரை நிறைவாக அறியும் ஆர்வத்தை என்னில் கிளப்பியிருக்கவேண்டும்.

‘இனி ஒரு வைகறை’, ‘முகங் கொள்’ ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் சென்னையில் ஜி.உமாபதி அரங்கில் தொண்ணூறுகளின் முதற்பாதியில் வெளியிடப்பட்டபொழுது நான் சென்னையில்தான் இருந்திருந்தேன். கி.பி.அரவிந்தனை ஒரு ஈழப் போராளியாய் மட்டும் அறிந்திருந்த எனக்கு அவரை ஓர் இலக்கியவாதியாகவும் அந்நூல்கள் அறிமுகப்படுத்தின.
கி.பி.அரவிந்தன் மீதான என் ஈடுபாடு இலக்கியார்த்தமானதெனினும், ஓர் இலங்கைத் தமிழனாய் என்னுள்ளிருந்த அரசியலுக்கு அவர் மிகநெருக்கமானவராக இருந்தாரென்பது அதன் ஒரு பகுதிக் காரணமாய் இருந்திருந்ததை இப்போது யோசிக்கப் புரிகிறது. இப்படி அவரை நேரில் அறிந்திராது அவரது கனவுகளை மட்டுமே அறிந்திருந்த வகையிலேயே அவர்பற்றிய இந்த நினைவை என்னால் ஏற்றமுடிகிறது. இது நேரில் அவரைத் தெரிந்திருந்த அல்லது அறிமுகமாயிருந்த பலபேரின் புரிதல்களைவிடவும், தூர இருந்தே அவதானத்தில் கொள்ளும் இந்தவகை மச்ச தரிசனம் மிக்க வீச்சானதாக இருக்க முடியுமென்றே நம்புகிறேன்.

இலங்கையின் இனப்போராட்ட வரலாற்றின் நீரோட்டமாக அவர் வாழ்ந்திருந்தார் என்பது சரியான ஒரு கூற்றே.

கிழக்குக்கான பிரயாணங்களும் வசிப்புகளும் கிறிஸ்தோபர் பிரான்ஸிஸ் என்ற இளைஞனின் இருவேறு சமூகங்களினுடனான அவனது ஊடாட்டத்தை மிகுப்பித்து, அரசியல்ரீதியான கருத்துக்களை வளர்ந்ததின் பின்னர் சரியான திசையில் எடுத்துச்செல்வதற்கு ஆதாரமாய் விளங்கியிருக்கின்றன.
எழுபதுகளின் ஆரம்பத்தில் யாழ் மீனாட்சி கணக்கியல் கல்லூரியில் அவன் தொடர்ந்த கற்கை, அதே நிறுவனத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த உரும்பிராய் சிவகுமாரனுடனான அறிமுகத்தை ஏற்படுத்தியது. 1972 மே 22இன் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிரான  துண்டறிக்கையை விநியோகிக்கையில் கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களில் மாணவர் பேரவையில் ஈடுபாடாகவிருந்த பிரான்ஸிஸ{ம் ஒருவனாக இருந்தான். சிறையிலிருந்தபோதுதான் சிவகுமாரனுடனான ஆழ்ந்த தொடர்பு அவனுக்கு ஏற்பட்டது.

சிறையிலிருந்து திரும்பிய பின் தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் என தொடர்கிறார்கள் நண்பர்கள். அஹிம்சை வழியில் சென்றுகொண்டிருந்த அவர்களின் ஆரம்பகால செயற்பாடுகள் வன்முறைக்கு மாறியமை எதிர்பாராதவிதமாகத்தான் நேர்ந்தது. 1974 தையில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸாரினால் விளைந்த களேபரத்தில் ஒன்பது பொதுமக்கள் மின்சாரம் தாக்கிப் பலியானார்கள். அதற்கான பழிவாங்கலாகத்தான் இளைஞர் பேரவை சாத்வீக வழிமுறையைக் கைவிட்டு ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகியது.

ஜுன் 05 1974ஆம் ஆண்டு சயனைட் அருந்தி உயிர்த் தியாகம் செய்யும் முதல் போராளியாக உரும்பிராய் சிவகுமாரன் மரணமானபோது அவன்கூட இருந்தவர்களில் பிரான்ஸிஸ{ம் ஒருவன். அதனால் தேடப்படுபர்களில் ஒருவனாகி ஒரு தலைறைவு வாழ்க்கையை   அவன் வாழ நேர்கிறான். இக்காலத்தில் அவன் தனக்குச் சூட்டிக்கொண்ட பெயரே சுந்தர் என்பது.
அவனது இரண்டாவது கைது பலவகையான குற்றச்சாட்டுகளில் 1976ம் ஆண்டு நடந்தது. ஏறக்குறைய ஓராண்டாகச் சிறையிலிருந்திருக்கிறான் சுந்தர். நெருக்கமானவனாகவும் ஆதர்~மானவனாகவும் இருந்த சிவகுமாரனின் மரணம் அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. 1978இல்  பயங்கரவாத தடைச்சட்டம் அமுலாவதைத் தொடர்ந்து, இளைஞர்களின் கைதுகளும், மாணவர்களின் கொலைப்பாடுகளும் தொடர்ந்தன. இளைஞர் பேரவை அந்நிலையில் முற்றாகச் செயலிழந்திருந்தது. சுந்தர் ஈரோஸ் அமைப்பில் சேர்ந்துகொண்டு தோழர் சுந்தர் ஆகிறான்.

வளர்ந்துவரும் நிலையிலேயே ஈரோஷு க்கு பாலஸ்தீன விடுதலை அமைப்போடு தொடர்பு ஏற்பட்டிருந்தது. 1978ன் கடைசிப் பகுதியில் லெபனானுக்கு அருளர் தலைமையில் சென்ற ஈரோஸ் குழுவில் தோழர் சுந்தரும் இடம்பெற்றிருந்தார்.

பெய்ரூட்டிலிருந்த பாலஸ்தீன அகதிமுகாங்களைப் பார்க்கவும், அதற்கும் மேலாக பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அரபாத்தை சந்திக்கவுமான சந்தர்ப்பம் அப்போதுதான் சுந்தருக்குக் கிடைத்தது. நவ.11,2004இல் யாசர் அரபாத் இறந்தபோது பாரிஸ் ரிரிஎன் தொலைக்காட்சியில் ‘யாசர் அரபாத்: ஒரு முடிவுறாத வரலாறு’ என்ற தலைப்பில் சுந்தர் ஆற்றிய உரை அற்புதமானது.

லெபனானிலிருந்து திரும்பிவரும் வழியிலேதான்   களச்செயற்பாட்டுக்காக தமிழகத்தில் தங்கும்படி இயக்கத்தால் சுந்தர் கேட்கப்படுவது. 1978-1988 வரையான நீண்ட காலத்தில் சுந்தரின் செயற்பாடு பெரும்பாலும் இயக்கவேலைகளாகவே இருந்தன.

ஏற்கனவே ஈரோஸ் இயக்கத்துள் முறுகல்நிலை இருந்தது. இந்தியாவின் போர்ப் பயிற்சியை ஏற்பதா வேண்டாமா என்ற வி~யத்தில் தொடங்கிய அந்த முறுகல் தொடர்ந்திருந்த நிலைமையிலும் இயக்கம் இயங்கியது. ஆனால் அது மேலும் இறுகுவதற்கு 1987இல் இடம்பெற்ற இந்திய-இலங்கை ஒப்பந்தம் காரணமாகிவிடுகிறது.

ஒப்பந்த நிறைவேற்றத்துக்குப் பின்னர் ஒப்பந்தத்தை ஏற்று போராட்ட இயக்கங்களின் ஆயுதங்களைத் திரும்ப ஒப்படைக்க இந்திய அரசு நிர்ப்பந்தம் செய்தது. போராளிகளும் இந்தியாவைவிட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டார்கள். ஆயுதங்களை ஒப்படைப்பதில் தோன்றிய கருத்துமாறுபாடு இயக்கத்தினுள் ஏற்கனவேயிருந்த முறுகல்நிலையை அதிகரிக்கச் செய்ததாகவே கருதமுடிகிறது. ஈரோஸின் ராணுவப் பிரிவு ஆயுதங்களை ஒப்படைக்க இறுதியில் முடிவெடுத்த நிலையில், ஆயுதத்தை ஒப்படைப்பதில்லை என்ற கருத்துள்ள சுந்தர் சென்னைப் பொதுக்குழுக் கூட்டத்தில் தன் இயக்க விலகலை எழுதிக்கொடுத்துவிட்டு மண்டபம் முகாமில் அகதியாகப் பதிந்துகொண்டு கப்பல்மூலம் இலங்கையை அடைந்தார். பதின்னான்கு ஆண்டுகள் ஒரு போராளியாக இருந்துவிட்டு வீடு திரும்பிய தன் நிலையை, ‘வீரமும் களத்தேவிட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான் என்னும் கம்பனின் வரிகள்போன்று வீடு திரும்பினேன்’ என்று ‘வெளிச்சம்’ நூறாவது இதழின் நேர்காணலில் அவர் கூறியிருப்பது சோகத்தை வரவழைப்பது.

1990இல் சுந்தர் பிரான்ஸ{க்குச் சென்றார். கி.பி.அரவிந்தனாக அவர் வெகுவாக அறியப்பட்டமை அங்கிருந்துதான் தொடர்கிறது.

அவரது கவிதை ஈடுபாடு, இலங்கையில் அவரது கல்வியினதும் கலைகளினதும் ஈடுபாட்டின் தொடர்ச்சியானதாகக் கொள்ளமுடியும். தீவிரமான இலக்கியத் தளமொன்றினை ஸ்தாபிப்பதற்காக இக்காலகட்டத்தில் அவரடைந்த பாடுகள் பெரிதாக வெளித்தெரிய வரவில்லை. நண்பர்க@டான அறிகையில் இத் தோல்வியின் விளைவாகவே பின்னாளில் ‘ஓசை’ போன்ற சஞ்சிகையாளர்களுடனான அணுக்கத்தை அவர் அதிகமாகப் பேணியிருந்தாரென்று கொள்ளமுடிகிறது.

அவரது அரசியல் வெறும் தமிழ்த் தேசியமாகவன்றி வெகுவாகப் பதப்பட்டிருந்தது அனுபவங்களாலும், வாசிப்புகளாலும். தந்தையின்மூலம் அம்பேத்கர், பெரியார் போன்றோரில் அவர் கொண்டிருந்த ஆதர்~மே தன் கருத்துநிலையில் உறுதிப்பாடடைய இவருக்குத் துணையாக நின்றிருந்ததாய்த் தெரிகிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முள்ளிவாய்க்காலுக்கு முன்னரே விரும்புகிற மாற்றம் அவரது அரசியலில் முக்கியமானது. வெகுவாக நிகழும் ஈழ மக்களின் மரணங்கள் அவரை ‘இனியொரு ஆயுதப் போராட்டம் வேண்டாம்’ என்றும் சொல்லவைத்தன.
அவர் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்தில் ‘பாலம்’ இதழில் எழுதிய கட்டுரை முக்கியமான வரைவு. அக்கட்டுரை பின்னர் 1992இல் வெளியான ‘முகங் கொள்’ என்ற கவிதை நூலின் பின்னிணைப்பாகவும் வெளிவந்திருந்தது. ‘விடைபெறும் நேரம்’ என்ற தலைப்பிலான அக்கட்டுரையில் அவர், ‘தமிழக மக்கள் இன்று வெறும் வீரவழிபாட்டிற்குள் மூழ்கி உள்ளனர்… ஈழத்தின் உள்ளக முரண்பாடுகள் உங்களுக்கு இங்கே மறைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அவற்றை வெளிப்படையாகவே உங்கள் முன் வைத்தோம்…தேசிய இனப் பிரச்னையின் கூர்மைக்குள் உள்ளக முரண்பாடுகள் மறைக்கப்பட்டிருந்தன’ என இலங்கையின் உள்ளக முரண்களைப்பற்றி தீர்க்கமாக எழுதினார்.

இனப் போராட்டத்தின் வெற்றிக்கான தடங்கல்களின் இதுபோன்ற  கவனிப்புகள் அவரது மொத்தக் கனவின் பெருமளவிலான அழிவின் காரணங்களைச் சொல்லிநிற்கின்றன. அவர் இயக்கத்திலிருந்தபோதும், அதற்கு முன்னரான காலப்பகுதியிலும்கூட, தன் சாதி காரணமாக பல்வேறுவிதமான மனக்காயங்களை  அவர் அடைந்திருந்தாரென ஊகிக்க முடிகிறது. ஒரு தலித் சமூகத்தில் பிறந்ததனால் அது காரணமாக ஏற்பட்ட சமூக அழுத்தங்களால் பெருவலி அடைந்தவர் அவர்.

1988இல் இயக்கத்தைவிட்டு வெளியேறியிருந்தாலும் 1989இல் ஈரோஸின் திட்டப் பிரகடன மாநாடு நடத்தப்பட்டபொழுது அதன் வெற்றிக்காக முழுவீச்சுடன் பாடுபட்டிருக்கிறார் அவர். ஒருவேளை இயக்க சார்பாக அவர் செயலாற்றிய கடைசி தருணமாக அதைக் கொள்ளலாம்.

அரசியலிலிருந்து தன் கனவுகளின் மீதியுடன் ஒதுங்கும் அரவிந்தனின் மீதியின் கனவாக இலக்கியம் ஆவது இங்கே நிகழ்கிறது. வேறொரு படிநிலை சார்ந்த போராளியாகவும், இலக்கியவாதியாகவும் அவரை உருவாக்கியது இந்த இலக்கியத்தின் உள்மனம் என்றாலும் பொருந்தும்தான்.

1991 மார்ச்சில் வெளிவந்த தன் முதலாவது கவிதைத் தொகுப்பான ‘இனி ஒரு வைகறை’யை ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதற் சயனைட் தற்கொலையாளியாகும் தன் நண்பன் சிவகுமாரனுக்கு அர்ப்பணமாக்கும் அவர் அதில் எழுதினார்,

‘1974 ஜுன் 5ல்
மரித்தவனுக்கும்
அவன் காவித் திரிந்த
அந்த
சயனைட் குப்பிக்கும்’ என.

நாற்பத்தெட்டு பக்கங்களில் பதினைந்து கவிதைகளுடன் வெளிவந்திருந்த அந்த நூலில் மிக அழகானது அதன் இறுதியில் வந்திருந்த தவறு-திருத்தம் பகுதியேயாகுமெனக் கருதுகிறேன். மிகப் பழையமுறையாக அது இருந்தபோதும் அந்த இலக்கியப் பொறுப்பை நான் நன்கு விரும்பினேன்.

‘முகங் கொள்’ளென்ற தொகுப்பு 1992 ஓகஸ்டில் வெளிவந்தது. கி.பி.அரவிந்தனின் நீண்ட கவிதைகள் கொண்ட தொகுப்பு அது. இலங்கைத் தமிழினத்தின் அரசியல் அவலத்தை மட்டுமல்லாது, வாழ்வின் அவலத்தையும் இக் கவிதைகள் பேசின. முகங்கொள், மாலை விழுந்த பின், முன்னிராப் பொழுதொன்றில், உறைதலாய் ஆகிய கவிதைகள் தம் உள்ளடக்க அடர்த்தியை மீறியும் நீளமாய் அமைந்தவை. இவை அக்காலகட்டத்தின் ஒரு கவிதைமாதிரியைத் தொடர்ந்தும், இனஅழிப்பின் கொடுமையையும், நிலமிழப்பின் துயரத்தையும் வலிமையுடன் எடுத்துரைத்தன.

‘கனவின் மீதி’ 1999 ஆகஸ்டில் வெளிவந்தது. இத் தொகுப்பின் கவிதைகள் பெரும்பாலும் அகதி வாழ்வின் சோகத்தை எடுத்துப் பேசுவன. ‘அகதிவாழ்வின் சோகம் திசையிழந்த நிலத்திலே காணப்படுகிறது’ என்ற பேரா.கா.சிவத்தம்பியின் கூற்றுக்கேற்ப அரவிந்தனின் திசையிழந்த வாழ்வின் அவலம் வெகுவாக இதில் காணப்படுகிறது. உலகமளாவிய அகதித்தனத்தை வன்மையாக விமர்சித்த கவிதைகள் அவை. அதனால்தான்போலும் அதற்கு முன்னுரை எழுதிய பேரா.கா.சிவத்தம்பி, ‘ஒரு நாட்டில் வாழுகின்ற ஒரு இனத்திலுள்ள ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளது’ என்றிருக்கிறார்.

லண்டன் கனாவும், அரசியல் தஞ்சமும் ஐம்பது ஐம்பது விகிதங்களாக இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வின் காரணங்களாக இருந்ததாய்க் கூறும் அரவிந்தனின் கணிப்பு பெரும்பாலும் சரியானதே. இந்தமாதிரி இலங்கைச் சமூகத்தின் அடியாதார வி~யங்களிலிருந்து இனப் பிரச்னையின் கூறுகளைக் கவனித்தமை ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் தன்மையாக அரவிந்தனில் காணப்பட முடியும். தமிழர் பிரதேசங்களில் வடக்கு மாகாணமே அதிகமும் அழிந்துபட்ட நகராக பரவலாகப் பேசப்பட்டபொழுது கிழக்கு அடைந்த துன்பத்தையும் துயரத்தையும் கூறி அம்மக்களுக்கான அனுதாபக் குரலையெழுப்பவும் தயங்கவில்லை அரவிந்தன். ‘வடமராட்சியின் துன்பத்தைவிடவும் கிழக்கு மாகாண விவசாயிகள் பெற்ற துன்பங்கள் கொடுமையானவை’ என அவர் ஒருபோது எழுதினார்.

அந்த நேர்மையை தன் இலக்கியத்திலும் ஏற்றியதுதான் அரவிந்தன் நம் மதிப்புக்குரியவராக ஆவதற்குக் காரணமாகிறது.

ஆரம்பத்தில் ‘ஓசை’ இதழின் ஆரம்ப கர்த்தாக்களுடன் இணைந்து இயங்கிய அரவிந்தன், பின்னால் ‘மௌனம்’ என்ற சஞ்சிகையைத் தாமே துவக்கி சிறிதுகாலம் நடாத்திவந்தார். அவர் பங்குபெற்றிருந்த அப்பால்தமிழ் குழுமத்தின் வழியாக உருவாக்கிய அப்பால்தமிழ் இணையதளத்தின் மூலம் பல கவிஞர்களை, எழுத்தாளர்களை உருவாக்கியமை அவரது இலக்கிய தாகத்தின் ஒரு பகுதி. அதில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து ‘பாரிஸ் கதைகள்’ என்ற பெயரில் வெளியிடவும் செய்தார். இறுதியாக வெளிவந்த ‘இருப்பும் விருப்பும்’ என்ற நூல் அவரது நேர்காணல், கட்டுரைகளின் தொகுப்பு. காக்கைச் சிறகினிலே இதழின் நெறியாளர்களில் ஒருவராகவும் இருந்து அவர் ஆற்றிய பணி வியக்கத்தக்கது.

இயக்கத்திலிருந்து அவர் வெளியேறியமை அவரை செயல்முடக்கமானவராக மாற்றிவிட்டதென்பது உண்மைதான். ஆனாலும் இலங்கைத் தமிழ்த் சமூகத்தின் அரசியலை வெகு ஆர்வமாகவும், ஆழமாகவும் அவர் கவனித்துவந்தார். அதனால்தான் இலங்கையின் இறுதியுத்த முடிவுபற்றி, ‘சிறிலங்கா(வோ) தனது வெற்றிக்காக மிகநுட்பமாய்த் திட்டமிட்டது. உலக நாடுகளிடையேயான முரண்பாடுகளை திறமையுடன் கையாண்டார்கள். ராஜதந்திர காய்நகர்த்தலில் தங்களது 2500 ஆண்டுகால முதிர்ச்சியை அவர்கள் பெற்றிருந்தார்கள். எங்களின் ராஜதந்திர பாரம்பரியம் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை. போராட்ட வழிமுறைக்குள் அரசியலையும் நாம் இணைக்கவில்லை’ என ‘ஆழி’ இதழுக்கான நேர்காணலில் தெரிவித்தார்.
மீதியிலிருந்து விரிந்த இலக்கியக் கனவின் செயற்பாடுகள்  தொடர்ந்திருந்ததோடு,  அரசியல் அவதானியாகவுமிருந்த அரவிந்தன், சொல்வளம் மிக்க சிறந்த மேடைப் பேச்சாளியாகவும் திகழ்ந்தார். இன்று அந்தக் குரல் மௌனம் கொண்டுவிட்டது.

000

காலச்சுவடு, ஏப்ரல் 2015
(திருத்தப்பட்டது)
கலாபன் கதை(2) 5


கொழும்புத் துறைமுகத்தில்
சரிந்து நிமிர்ந்த கனவு
-தேவகாந்தன்-

சிங்கப்பூரை அடைந்த கப்பல் இரண்டு நாட்கள் தங்கிற்று துறைமுகத்தில். நாட்டை, குறைந்தபட்சம் நகரை, சுற்றிப்பார்க்க புதிய கடலோடிகளுக்கு குறைந்தபட்ச நேரம்கூடக் கிடைக்கவில்லை. அடையாளமாக ஒரு முன்தொகையாக இருபது வெள்ளிகள் ஆளுக்கு கிடைத்தன. அதைக்கொண்டு செய்துவிட சிங்கப்பூர்போன்ற நாட்டில் பெரிதாக எதுவுமில்லை. கலாபனின் கணக்குப்படி அது அவனது ஆறாவது சிங்கப்பூர் வருகை. தவனங்கள் பெரும்பாலும் அடங்கியிருக்கச் சம்மதித்தன.

மூன்றாம் நாள் அதிகாலையில் என்ஜின் புறப்பட தயார்நிலையில் வைக்கப்பட்டது. எட்டு மணியளவில் அது எடுத்துவந்து கல்லணை வாயில் கடந்து கடலில் விடப்பட்டது. அவ்வளவு மர்மமான ஒரு பயணத்தை கலாபன் அத்தனை வரு~ கால அனுபவத்தில் எதிர்கொண்டதில்லை. கப்பல் எங்கே போகிறது? அதனுடைய அடுத்த துறைமுகம் எது? ஆசியாவா, ஐரோப்பாவா, ஆபிரிக்காவா, அமெரிக்காவா?

பூடகத்துள் பயணம் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில் ஒருநாள் எதிர்ப்பட்ட றேடியோ அலுவலரை கலாபன் அடுத்த துறைமுகம் எது என விசாரித்தான். அம்மாதிரி வி~யங்கள் வெளியே தெரியவேண்டாமென சிலவேளைகளில் றேடியோ அலுவலர்களிடம் சொல்லிவைக்கப்படுவது உண்டு. அந்த வி~யத்திலும் அவ்வாறான ஒரு தடை றேடியோ அலுவலருக்கு இடப்பட்டிருந்தது. ஆனாலும் தம் தனிமையை உறுதிப்படுத்திக்கொண்டு, ‘நம்பமாட்டாய், கப்பல் கொழும்புக்குப் போகிறது. யாரிடமும் சொல்லிவிடாதே’ என மெதுவாக றேடியோ அலுவலர் கூறிச் சென்றார்.

கலாபனுக்கு பெரிய அந்தரமாகப் போய்விட்டது. கடவுளே, இந்த விஷயம் முன்னரே தெரியாமல் போய்விட்டதே. மனைவி பிள்ளைகளைப் பார்த்து ஆறு மாதங்களாகின்றன. தெரிந்திருந்தால் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு கொழும்பிலுள்ள அவளுடைய சித்தப்பா வீட்டுக்கு வரச்சொல்லி தகவல் அனுப்பியிருக்கலாமே. ஒருமுறை பார்த்தால் எவ்வளவு சந்தோ~மாயிருக்கும்! இரண்டு நாட்கள் பிள்ளைகளோடும் மனைவியோடும் கூடவிருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வீணாகப்போய்விட்டதே எனப் பிரலாபப்பட்டான் கலாபன்.

ஏழாவது ஆண்டாக கப்பலில் வேலைசெய்கிறான் அவன். ஒருபோதும் அவன் வேலைசெய்த எந்தக் கப்பலுமே கொழும்பு வந்ததில்லை. காலித் துறைமுகத்தைக் கடந்துபோன சமயங்களுண்டு. இரவிலானால் அதன் வெளிச்சவீட்டு விளக்கைத்தான் அவன் கண்டிருக்கிறான். தன் குடும்பத்தாரை அழைத்து கப்பலைக் காட்ட முடியாத கவலை கலாபனிடத்தில் கனகாலமாய் இருந்தது. அவர்களுக்கு கப்பல் தெரிந்திருந்தது. ஆனால் கப்பலின் இயங்குமுறை, அதில் வாழும் அனுபவம் தெரியாது. இப்பொழுது அவன் வேலைசெய்யும் கப்பலே கொழும்புக்கு வருகிறது. அழைத்துவந்து காட்டி எவ்வளவு சந்தோ~மாக அவர்களை அனுப்பியிருக்க முடியும். கலாபனின் நினைவுகள் பொங்கிக்கொண்டே இருந்தன.

கப்பலின் பயணம் வரும்வழியில்போலவே சீராக இருக்கவில்லை. கடலின் கொந்தளிப்பில் பாதி சரக்கேற்றிய கப்பல் மந்த கதியில் அலைகளோடாடியபடியே சென்று கொண்டிருந்தது. இது கப்பலின் வெளி நிலைமையென்றால், உள்ளக நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. புதிய கப்பலோடிகள் வரும்போது இருந்ததுபோலவே தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டும், வாந்தியெடுத்துக்கொண்டும், தலைச்சுற்றில் ஆங்காங்கே படுத்துக்கொண்டும் செல்லும் நிலையே தொடர்ந்தது.
கப்பல் பயணவழிக் கண்காணிப்பை கப்ரனிலிருந்து, முதல் கப்பல் அலுவலர், இரண்டாம் கப்;பல் அலுவலரென உயர் எல்லா அலுவலர்கள்வரை பகலும் இரவுமாய்ச் செய்யநேர்ந்தது. ஆனாலும் வரும்போதிருந்த உணர்ச்சிக் கொந்தளிப்புப்போல் போகும்போது இருக்கவில்லையென்பதை காணமுடிந்த கலாபனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.

மூன்றாம் நாள் ஒரு மாலை நேரத்தில் கப்பல் கொழும்புத் துறைமுகத்தினெதிரே நின்று நங்கூரமிட்டது.

கலாபன் மனது துள்ளி மகிழ்ந்தது. எப்படியும் ஏஜென்ற் ஒன்பது, பத்து மணிக்கிடையில் கப்பலுக்கு வருகின்ற சந்தர்ப்பம் நிச்சயமாகவே ஏற்படும். அப்போது ஏஜென்ரிடம் நிலைமையைச் சொல்லி ஒரு தந்தியை எழுதிக்கொடுத்து அதை உடனடியாகவே அனுப்பக் கேட்கலாம். துறைமுகத்தில் இடம் கிடைக்காமல் மேலும் ஒருநாள் கப்பல் அந்தமாதிரியே தங்க நேரிட்டால், கப்பல் துறைமுகம் செல்கிற நாளில் மனைவி பிள்ளைகளைப் பார்க்கிற சந்தர்ப்பம் நிச்சயமாக அவனுக்கு ஏற்படும்.
கபினுக்குச் செல்வதும், விஸ்கி அருந்துவதும், பின் வெளியே வந்து சிகரெட் புகைத்தபடி கப்பலைநோக்கி ஏதாவது வள்ளம் வருகிறதா என நோக்குவதுமாக கலாபன் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தான்.    அவனது கை வீசும் காற்றில் சட்டைப் பையில் வைத்துள்ள தந்தி வாசகமும் விலாசமும் எழுதிய துண்டு பறந்துவிடாமல் இருக்கிறதா என அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கொண்டது.

பத்து மணியானது… பத்தரையானது… இன்னும் ஏஜென்றின் வள்ளம் வரவேயில்லை. கண்ணுக்கெட்டிய தூரத்தில்கூட கடலில் எந்த வெளிச்சத்தின் கப்பலைநோக்கிய நகர்வும் இல்லை. அன்றைக்கு ஏஜென்ற் வராதநிலையில் நாளை மாலையில் கப்பல் துறைமுகத்துக்குப் போனாலும் ஒரு தந்தி எதுவித பிரயோசனத்தையும் செய்துவிடாது. அதற்குமேல் தந்தி ஊர் போய், மனைவி ரயிலோ பஸ்ஸோ எடுத்து கொழும்பு வருவதும், கலாபன் அவர்களைக் காண்பதும் நடக்கமுடியாத காரியங்கள். ஏஜென்ற் அப்போது வந்தால் மட்டும்தான் எதுவுமே சாத்தியமாகும்.

அக் கையறு நிலையில் ‘மருதடிப் பிள்ளையாரே, நீர்தான் ஏதாவது வழிசெய்யவேணும்’ என்று உள்ளத்துள் பிரார்த்தித்தான் கலாபன்.
யோசிக்க அவனுக்கே பின்னர் அது ஆச்சரியத்தை விளைத்தது. எப்போது அவ்வாறான நம்பிக்கையில் அவன் கடவுளைப் பிரார்த்தித்திருக்;கிறான்? தானே நோயில் விழுந்தபோதுகூட ‘ஒண்டுக்கும் பயப்பிடவேண்டாம், பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வாட்டில விடுங்கோ’ என்று சொன்னவன்தானே அவன்? அவனுக்கு எப்போது, எப்படி, ஏன் இந்த மனநிலை வந்தது? குடும்பமென்பது அவ்வளவு பாந்தமானதா? அது உடலுண்ர்வு என்பதையும் மீறி அன்பும், அரவணைப்பும், தேடுகையும், அக்கறையும் கொண்டுள்ளதா?

வேறொரு சமயத்திலானால் ஒரு துறைமுகத்தின் முன்னால் அவன் எவ்வளவு கூத்தாடியிருப்பான்? எந்த இடத்தில் இன்பம் நிறையக் கொட்டிக்கிடக்கிறது என எத்தனை தேடலோட்டங்களுக்கு மனம் திட்டமிட்டிருக்கும்? ஆனால் அப்போது தங்கிநிற்கப்போகிற இரண்டு நாட்களில் தன் குடும்பத்தை ஒருமுறை பார்த்துவிட அவன் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தான்.

அதோ… தூரத்தில் ஒரு வெளிச்சப் புள்ளியின் நகர்வு. நிச்சயமாக வள்ளம்தான். அலைகளில் குதித்துக் குதித்து வந்துகொண்டிருந்தது. ஆனாலும் சுற்றிவர மூன்று கப்பல்கள் நங்கூரமிட்டு நிற்கிற சமயத்தில் எந்தக் கப்பலை நோக்கி அது வந்துகொண்டிருக்கிறது என்ற தவிப்பாகிப் போனது அவனுக்கு. ஆம், அது அவர்களது கப்பலைநோக்கித்தான் வருகிறதென்பது இப்போது அவனுக்கு நிச்சயமானது. இன்னொரு தடைக்கல் உண்டு அவனது முழுச் சந்தோ~த்துக்குமிடையில். அது… ஏஜென்றின் வள்ளமாக இருக்கவேண்டும்.
வள்ளம் கப்பலை நெருங்கிய அளவில் தொங்கு படிக்கட்டு இறக்கப்பட்டது. ஒரு இளைஞன் கீழே நின்றிருக்கையிலேயே அவனைக் கண்டு கையசைத்தான். கலாபனுக்கு இப்போது நிச்சயமாகிவிட்டது, அது ஏஜென்ற்தானென்பது. தன்போலொரு காத்திருப்பை சில ஏஜென்றுகளால் உணரமுடிகிறதுதான். அக் கையசைப்பு சும்மா, ஹாய்! சொல்லுகிறதுக்கானதல்ல. கடிதத்திற்கோ, வேறெதற்கோ காத்திருக்கும் ஒரு உயிரின் துடிப்பை ஆறுதல்படுத்துவது அது. வருபவன் நல்லவனாகவும் இருப்பானென நினைத்தான் கலாபன்.

மேலே வந்த ஏஜென்ற் ‘லங்காவத?’ என்றதற்கு, கலாபன், ‘ஒவ்’ என்றான். ஏஜென்ற் மேலே சென்றான்.

இன்னொரு விஸ்கியை குடித்துவிட்டு அறையை மேலோட்டமாய் ஒதுங்கவைத்துக்கொண்டு அவன் அவசரமாக வெளியே வந்தான்.

ஏஜென்ற் அதிகநேரம் மேலே தாமதிக்கவில்லை. கீழே வந்தவனிடம் கலாபன் தன் அவசரத்தைச் சொல்லி, அந்த துண்டிலுள்ள செய்தியை அவசரத் தந்தியில் அன்றிரவே அனுப்பிவிட முடியுமா எனக் கேட்டான். ஏஜென்ற் கண்டிப்பாக அனுப்புவதாகக் கூறி அதை வாங்கினான். கலாபன் அவனை கபினுக்கு வரக்கேட்டான், சிறிதுநேரம் இருந்துவிட்டுப் போகலாமேயென.
விளங்கிக்கொண்ட ஏஜென்ற், ‘வெலாவ ந. மே பி அற் போர்ட் ருமாறோ நைற்’ என்று கூறிவிட்டு இறங்கினான். தன் கையிலிருந்த ஐந்து அமெரிக்கன் டொலர் தாளை அவனிடம் நீட்டி தன்னிடம் இலங்கை ரூபா இல்லையென்றான் கலாபன். பரவாயில்லையெனக் கூறிவிட்டு இறங்கிவிட்டான் அவன்.

கலாபன் கத்திக் கேட்டான்: ‘நம மொகத?’

‘லால்…லால் பெரெரா.’

வள்ளம் கப்பலைவிட்டு விலகும்வரை அந்த இடத்திலேயே நின்றிருந்தான் கலாபன். மறுபடியும் கையை அசைத்துவிட்டு ஏஜென்ற் நிற்க வள்ளம் சீறிக்கொண்டு பறந்தது.

அந்தளவு அவசரமாகப் போகிறவன் கொழும்பு தந்தி தொலைத் தொடர்பு அலுவலகம் சென்று தனது தந்தியை அனுப்புவானா என்று மனத்துள் குடைந்த கேள்வியுடனேயே கலாபன் படுக்கச் சென்றான்.

தூக்கம் பிடிக்காத இரவைக் கழித்துவிட்டு காலையில் வெளியே வந்தான் கலாபன். இயல்பிலில்லாத ஒரு தடுமாற்றத்திலும், பதட்டத்திலும் உள்ளக நிலை இருப்பதுபோல் ஒரு தோற்றம். மேல்மட்டத்திலேதான். காலையில் எதிர்ப்பட்ட முதன்மைப் பொறியியலாளர் மிக்க சந்தோஷமான மனநிலையில் அவனைக் கடந்து சென்றபோது சிரித்தபடி காலை வந்தனம் சொன்னார். அந்தளவு சந்தோஷத்தோடு பதில் வந்தனம் சொல்லத்தான் கலாபன் நினைத்தான். வந்தனம் வந்தது. ஆனால் சந்தோ~ம் வரவில்லை.
அலுவலரின் மெஸ்ஷு க்கு சென்றான். முதன்மை அலுவலர் ஆம்லெட் போட்டுக்கொண்டிருந்தார். அவரும் அளவுக்கு மீறிய மகிழ்ச்சியோடு இருப்பதாகவே தோன்றியது கலாபனுக்கு.

ஒன்றும் புரியாதவனாக, மெஸ் ஊழியன் தலைச்சுற்றில் வேலைசெய்ய இயலாதிருந்ததால் தாம்தாமுமே காலையுணவைச் செய்யவேண்டிய சூழ்நிலை அவர்களிடத்தில் எவ்வாறு அந்தளவு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்;க முடியுமென்று, மனத்தைக் குடைந்தவாறே கோப்பி போட்டு எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அப்போதுதான் எதிரே வந்த றேடியோ அலுவலர் கலாபனிடம் சொன்னான்: ‘ லண்டனிலிருந்து கப்பல் கம்பெனி; உரிமையாளர்களில் ஒருவரே கொழும்பு வந்திருக்கிறார். பம்பாயில் எடுக்கப்பட்ட முழு கடலோடிகளும் இங்கே இறக்கப்பட்டு புதிய கடலோடிகள் எடுக்கப்படவிருக்கிறார்கள். எல்லாருமே மாலைதீவுக் கடலோடிகளாம்.’

‘உண்மையாகவா?’ கலாபன் அதிர்ந்தபடி கேட்டான்.

‘நூறு வீதம். நாளை காலை எட்டு மணிக்கு கப்பல் உள்ளே செல்ல தயார்நிலையில் இருக்கும். அனேகமாக பத்து மணிக்கு துறைமுகத்தினுள்ளே இருப்போம். பதினொரு மணிக்குள் கப்பலின் புதிய ஊழியர்கள் வந்துவிடுவார்கள்’ என்றான் றேடியோ அலுவலர்.

கலாபனால் தொடர்ந்தும் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை.
கோப்பியையும் குடிக்க முடியவில்லை.

அவனுக்கு அப்போது விஸ்கி வேண்டியிருந்தது.

கோப்பியை அப்படியே கொண்டுபோய் ஊற்றி கப்பை அலம்பிவைத்துவிட்டு அறைக்கு வந்து விஸ்கி போத்தலை எடுத்தான்.

பம்பாயில் எடுக்கப்பட்ட கடலோடிகள் அனைவரும், ஏறக்குறைய இருபத்தி மூன்று பேர் அவர்களில், கொழும்புத் துறைமுகத்தில் இறக்கப்படுகிறார்களென்றால், அவனும் பெட்டியைத் தூக்கவேண்டித்தான் வரும்.
அவன் கேட்டபடி லால் பெரெரா அந்த தந்தியை உடனடியாகவே அனுப்பியிருந்தால், அன்று மாலை ரயிலோ பஸ்ஸோ எடுத்து பிள்ளைகளுடன் புறப்பட்டுவிடுவாள் அவனது மனைவி. அவர்கள் வந்தால் அவ்வாறான புதிய சூழ்நிலையில் இயல்பாய் ஏற்படக்கூடிய துக்கத்தைவிடவுமே அது பயங்கரமாகவிருக்கும்.

அவர்கள் வருவது அவனை அழைத்துக்கொண்டு போவதற்கேமாதிரி ஆகிவிடும் அது. அவனால் அதைத் தாங்கமுடியாது.

வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் அப்படியான ஒரு நிலைமையை அவன் தாங்குவான். ‘கப்பல் கொழும்புக்கு வந்திருக்கிறது. இரண்டு நாட்கள் நிற்கும். உடனடியாக பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வந்து உன் சித்தப்பா வீட்டில் தங்கியிரு. எங்களது கப்பல் ஏஜென்ஸி லேடி மக்லறன்ஸ். அது கொல்பிட்டியில் இருக்கிறது. கேட்டால் யாரும் சொல்வார்கள். வந்தவுடன் கொழும்பு ஏஜென்றின் அலுவலகத்தை அறிந்து வந்த விபரத்தை சொல்லிவிடு’ என்றல்லவா அவசர தந்தி அனுப்ப ஏஜென்றை கேட்டிருந்தான்.
‘மருதடிப் பிள்ளையாரே, அந்தத் தந்தியை அவன் அனுப்பாதிருக்;கவேண்டுமே!’

கலாபன் பெரும்பாலும் அன்று முழுவதும் போதையிலேயே இருந்தான்.
இரவானது. கடல் கொந்தளிப்பு அடங்கியிருந்தது சிறிது. தூரத்தே தெரியும் ஒளிப்புள்ளிகளைக் கண்டபடி நின்றுகொண்டிருந்தான் அவன்.
ஒரு சில மணி நேரங்கள் அவனது சந்தோஷத்தைச் சிதறவைத்துவிட்டதோடு, துக்கத்தையும், அவமானத்தையும்கூட சேர்த்துச் சுமத்திவிட்டதேயென நினைக்க கலாபனுக்கு கண் கலங்கியது. அந்தக் கப்பல் வேலை முடிவதன் முன் தன் வீட்டு வேலைகள் முடிந்துவிடுமென நம்பியிருந்தான். அத்திவாரத்துடன் நின்றிருந்த வேலைகள் விறுவிறுவெனத் தொடங்கி தன் கனவு வீடு தான் திரும்பிவரும்போது தன்னை வரவேற்க நிமிர்ந்து நிற்குமென அவன் கனவு கண்டுகொண்டிருந்தான்.

அந்த கனவு மாளிகைதான் அப்போது சரியத் தொடங்கியிருந்தது.
இரவை எப்படியோ கழித்தான் கலாபன்.

காலையில் சிவந்த கண்களுடன் வெளியே வந்தான்.

துறைமுகத்துள் செல்ல தயாராய் நின்றிருந்தது கப்பல்.

அது அவனது வேலைநேரம் இல்லாதபடியால் அவன் எந்திர அறை செல்லவேண்டியிருக்;கவில்லை.

இரவுப் போதையை சமாளிக்க மேலும் குடிக்கத்தான் வேண்டும்.
அதை அவன் செய்தான்.

அப்;போது ஏஜென்ற் வள்ளம் வந்தது.

ஏஜென்ற் வர கலாபன் கேட்டான், ‘இரவு அந்த தந்தியை அனுப்பினாயா?’ என்று.

‘அதற்குப் பதிலுமே கிடைத்துவிட்டது. இப்போது உன்னுடைய குடும்பம் கொழும்பில். அவர்கள் தங்கள் உறவினர் வீட்டில் இருப்பதாக உன்னிடம் சொல்லக் கேட்டார்கள்’ என்றான் ஏஜென்ற்.

கலாபன் நன்றி கூறினான்.

அது அவன் அப்போது விரும்பியிராத ஒரு உதவிக்கானது.

ஏஜென்ற் சென்ற சிறிதுநேரத்தில் கப்பல் துறைமுகத்தைநோக்கி நகர ஆரம்பித்தது.

மத்தியானமளவில் கப்பலை துறைமுக மேடையில் கட்டினார்கள்.

அதற்கு மேலே நடந்த, நடக்கும் காரியங்களை அறிய கலாபன் விரும்பவில்லை. ஒரு மணியளவில் புதிய கடலோடிகளை அழைத்துக்கொண்டு ஏஜென்ற் வந்தான். முதல் அலுவலர் அவரவருக்குமான வேலையை சொன்னார்.

கம்பெனி உரிமையாளர் வந்தார். கப்ரினும் அவரும் மெஸ்ஸிலிருந்து பேசிக்கொண்டிருந்தனர். கலாபன் உள்ளே எதுவோ எடுத்துக்கொண்டு வெளியே வருகிறபோது, கப்பரின் மூன்றாவது பொறியியலாளன் என்று ஏதோ சொன்னது கேட்டது. பின் தொடர்ந்த உரையாடல் அவனுக்குக் கேட்கவில்லை.
சுற்றுவெளி நடைபாதையில் நின்று சிகரெட் புகைத்துக்கொண்டு இருக்கையில் அப்போது இரண்டாவது பொறியியலாளர் வந்தார். ‘இப்படி நிற்காதே, கலாபா. கப்பல் கம்பெனி உரிமையாளனே வந்திருக்கிறான். நீ வேலை உடையைக்கூட இன்னும் போடவில்லை. உடுப்பை மாற்றிக்கொண்டு வேலை செய்வதுபோல் பாசாங்காவது செய்’ என்றான் அவன்.
‘இல்லை, நிக்கோ. எனக்கு பெட்டியை அடுக்கி தயார்செய்ய வேண்டியிருக்கிறது’ என்றான் கலாபன்.

‘ஏன்’ என்றான் நிக்கோ.

கலாபனுக்கு ஆத்திரம் வந்தது. ‘இரண்டு மணிக்கு இறங்கவிருக்கிறேன். அதுவரைக்கும்கூட நான் வேலை செய்யவேண்டுமா? என்னால் முடியாது. வேண்டுமானால் கம்பெனி என் ஒருநாள் சம்பளத்தைப் பிடித்துக்கொள்ளட்டும்.’

‘நீ என்ன சொல்கிறாயென்றே எனக்குப் புரியவில்லை. பெட்டியை அடுக்கவேண்டும் என்றாய். ஏனென்று கேட்டால், ஒரு நாள் சம்பளத்தைக் கழி என்கிறாய். உண்மையில் உன்னுடைய பிரச்னைதான் என்ன?’ என்றான் நிக்கோ.

அது எங்கேயோ இடிக்கிறதை கலாபன் உணர்ந்தான்.

மனத்தில் தெம்பு வந்தது. சொன்னான்: ‘பம்பாயில் ஏறிய அத்தனை பேருமே இங்கே இறக்கப்படுகிறார்களாமே!’

‘அது உண்மைதான். அதற்கென்ன? புதிதாக எடுக்கப்பட்ட அத்தனைபேரும் இறக்கப்படுகிறார்கள், ஆனால் உன்;னைத் தவிர.’

அந்த ஆடி மாத வெக்கையில் தெறித்தது அலையடித்த கடல்நீரா, வான் சுரந்த மழைநீரா?

கலாபனின் மனத்தில் மகிழ்ச்சி கொடிகட்டி ஏறியது.

‘ரஞ்சி, கனவு நிமிர்ந்துவிட்டது’ என்று கத்தவேண்டும் போலிருந்தது.

இருந்தாலும் அடக்கிக்கொண்டு, ‘நிச்சம்தானா, நிக்கோ’ என்றான்.

‘நிச்சயம்தான். கப்ரினிடம் சிங்கப்பூரில் வைத்தே சொல்லிவிட்டேனே, இந்தளவு பழைய கப்பலில் உன்னைப்போலொரு வேலை தெரிந்தவன் இல்லாவிட்டால் நானும் இறங்கிவிடுவேனேன்று. ஒன்றும் யோசியாதே, கீழே இறங்கு’ என்றுவிட்டு நிக்கோ அப்பால் நகர்ந்தான்.

உடனேயே கபினுக்குப் போய் ஓவரோல் எனப்படுகிற வேலை உடுப்பை அணிந்துகொண்டு கீழே இறங்கினான் கலாபன்.

அன்றைக்கு அவன் கடிதமெழுதவேண்டி இருக்கவில்லை. தன் கனவு நிமிர்ந்த விதத்தை அவன் நேரடியாகவே தன் மனைவியிடம் சொல்வான்.

000

தாய்வீடு மே 2015

கலாபன் கதை:2-4
பம்பாய் துறைமுகத்தில் கொடியேறிய கனவு
-தேவகாந்தன்-

ஓராண்டின் பின் கப்பலிலிருந்து விலகி வந்த கலாபன், ஒன்றரை மாதங்களை ஊரில் கழித்திருப்பான். மேலே மறுபடி கப்பலெடுக்க குறையாக நின்றிருந்த அவனது வீடு அவனைக் கலைத்துக்கொண்டிருந்தது. கலாபன் புறப்பட்டான். கொழும்பில் நின்று முன்புபோல் காலத்தை விரயமாக்க அவன் எண்;ணியிருக்கவில்லை. இந்தியாவில் பம்பாய் அல்லது கல்கத்தா  செல்வதே அவனுடைய திட்டமாக இருந்தது. இந்திய விசா கிடைப்பதற்கு ஏற்பட்டது சிறு தாமதமெனினும், ஒரு கப்பல்காரனாய் சில பல ஆசைகள் தவிர்க்க முடியாதபடி அந்தத் தனிமையைப் பற்றிப்பிடித்துக்கொண்டு அவனில் சந்நதம் ஆடிவிடுகின்றன. அதைத் தவிர்க்க அவன் பெரும் சிரமமே படவேண்டியிருந்தது.

அன்று விசாவுக்கு கடவுச்சீட்டை கொடுத்துவிட்டு இந்திய தூதுவராலயத்தைவிட்டு வெளியே வர உள்ளே வா! என்பதுபோல அழைத்துக்கொண்டிருந்தது றெஸ்ரோறன்ற் நிப்பொன். தங்குமறைகளும் உள்ள இடமது. முன்பும் அங்கே அவன் போயிருக்கிறான் தனியாகவும், சிலவேளைகளில் நண்பர்களுடனும். பகலில் பாரில் போயிருந்து குடித்து, சாப்பிட்டதைவிட, இரவிலே சென்று குடித்து அறையெடுத்து தங்கிவந்த நாட்கள்தான் அவனுக்கு அதிகம்.

போகும்போது நிதானமாக இருந்தவன் திரும்பும்போது நிதானமாக இல்லை. ஆயினும் வீட்டிலிருக்கும்போது எடுத்திருந்த தீர்மானங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதென்று அவன் முடிவுகட்டியிருந்தான். அதனால் மனம்படி போகாமல் நேரே நடந்து ஒரு ராக்ஸியை அமர்த்திக்கொண்டு கொட்டாஞ்சேனையிலிருந்த தன் பருத்தித்துறை நண்பனின் அறைக்கு வந்து சேர்ந்தான்.

அடுத்த வாரம்வரை தன்னை ஒரு வேலிக்குள்போல் போட்டு அவனேதான் காவல் செய்தான்.

மறுநாள் அவனது விசா கிடைத்தது.

மேலும் இரண்டு நாட்களில் விமானமெடுத்து பம்பாயைச் சென்றடைந்தான்.
தன்னைக் காக்க அவனெடுத்த முயற்சிகளில் ஒன்று முதிர் காலைவரை தூங்கி, மதியத்தில் பார்சல் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, மாலையில் குளித்து கோவிலுக்குச் செல்வது. அஷ்டலட்சுமி கோவில் பம்பாயில் பிரபலமானது. அவன் இரண்டு வாரங்களை அந்த நேரசூசிகையின்படிதான் கழித்தான்.

ஆனாலும் உள்ளே ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருந்தது. தன் சகல வலிமையையும் ஒரு வன்முறையோடு அது பிரயோகித்தது. கலாபன் தப்பியோடிக்கொண்டு இருந்தான்.

கப்பல் முகவர் எவரையும் அணுகுகின்ற திட்டமெதுவும் இல்லாதிருந்தது கலாபனுக்கு. அதனால் காலைகளில் பம்பாய் வரும் கப்பல்களை அறிந்து அவற்றின் கப்ரின்மாருடன் கதைத்து நேரில் வேலைகேட்க அவன் ஆரம்பித்தான். ஒரு வாரமாயிற்று. இரண்டு வரங்கள் ஆயின. ஒருபலனும் கிடைப்பதாயில்லை. சில கப்பல்களுள் செல்லவே க~;ரமாயிருந்தது.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை. அஷ்டலட்சுமி கோவிலுக்குப் போய்விட்டு துறைமுகம் சென்றான் கலாபன். கிரேக்க பதிவுக்கொடி பறந்துகொண்டிருந்த ஒரு பெரிய கப்பல் நின்றுகொண்டிருந்தது. மிக நல்ல கம்பெனிகளின் கப்பல்களில் கப்பல் ஊழியர்களையோ, அலுவலர்களையோ கம்பெனியின் முகவர்மூலம் தெரிந்தெடுப்பார்களே தவிர கப்பலிலேயே ஏறி  வேலை பெற வருபவர்களுக்குக் கொடுத்துவிட மாட்டார்கள். அந்தக் கம்பெனிக்கான ஒரு ஊழியர் குழு அவர்களிடம் எப்போதும் தயாராக இருப்பது அதன் காரணமாகவிருக்கலாம்.

செல்லத் தடையில்லாததால் உள்ளே சென்ற கலாபன், முதலில் விசாரிக்கலாமேயென கப்பலில் யாராவது வேலைசெய்யும் இலங்கையர் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டான். மேனிலை அதிகாரிகள் வேலைசெய்யும் தளத்தைவிட சாதாரண கடலோடிகள் தங்குமிடத்தில் அதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது கருதி கீழே செல்ல படியிறங்கினான்.
அப்போதுதான் பிற்காலத்தில் நீண்டகாலமாய் கடிதத்தொடர்பு வைத்திருந்த வல்வெட்டித்துறை ஸ்ரீதரனை அவன் கண்டது. தன்னுடைய அறையிலிருந்து தூ~ணைகளை உதிர்த்துக்கொண்டு வெளியே வந்தான் ஒருவன். வேலைசெய்யும் கொழுப்பு பிரண்ட உடுப்போடு இருந்தான். கலாபன் தன்னை அறிமுகப் படுத்தினான். இன்னோரு அறையில் அங்கே வேலைசெய்யும் இன்னும் சில தமிழ்ப் பெடியள் குடித்துக்கொண்டிருப்பதாகக் கூறி கலாபனை அங்கே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தான் ஸ்ரீதரன்.

ஏற்கனவே அவன் கடலோடியாய் வேலைசெய்து அனுபவம் வாய்ந்தவனாய் இருந்தவகையில் அவனது நட்பை ஏற்க அவர்களுக்கும் தடையிருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் இலங்கைத் தமிழனாக இருந்தான். ஆயினும் அங்கே கப்ரின் வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லையென்றும், கம்பெனியே அதைச் செய்வதென்றும் கூறி கம்பெனி அலுவலக முகவரி கொடுத்தார்கள். பின் அவர்களின் குடிச் சமாவில் அவனும் கலந்துகொள்வது தவிர்க்கமுடியாதபடி நடந்தது.

மாலையில் ஸ்ரீதரன் வேலை முடித்து வந்தபின்னால் சமா இன்னும் மும்முரமடைந்தது. கலாபன் அங்கேயே சாப்பிட்டான். எட்டு மணிக்கு மேலே கடலோடிகள் உல்லாசத்துக்குப் புறப்பட கலாபனும் கலந்துகொள்ள நேர்ந்தது. அந்த நேரத்தில் அந்தத் தெரிவை கலாபன் மனமுவந்துதான் செய்தான்.
அவர்கள் அழைத்துச் சென்ற இடத்தை கலாபனுக்கும் தெரிந்திருந்தது.

ஆனால் அவர்களுக்கான தரகன் வேறொருவனாய் இருந்தான். வயது கூடிய ஒரு மலையாளி அவன். தமிழும் சரளமாகக் கதைத்தான். பம்பாய் புறநகரில் அன்றைக்கு அந்தக் கடலோடிகளால் தெருக்கள் விடிய விடிய அதிர்ந்துகொண்டிருந்தன. தெரிவுகளை முடித்து பணமும் கொடுத்த பின் தெருவில் நின்று பழைய கதைகளையெல்லாம் உருவியெடுத்து சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் அவர்கள். கலாபன் அதில் கலந்துகொள்ளாவிட்டாலும், எதுவென்றாலும் செய்யுங்கள், நான் என் தெரிவைக் காணப்போகிறேன் என்றுவிட்டு போகமுடியாத நிலையில் இருந்தான்.

அப்போது குட்டி ராக்ஸியை நிறுத்திவிட்டு கலாபனைநோக்கி வந்தான்.
குட்டி இலங்கைத் தமிழ்ப் பெடியன்தான். கப்பலெடுக்க வந்து வரு~ங்களை அங்கே கழித்துவிட்டு ஏதேதோ வியாபாரங்களைச் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு அதில் நல்ல வருமானமும் இருந்ததாய்த் தெரிந்தது. அவன் குடிப்பதில்லை. சிகரெட் புகைப்பதில்லை. மேலாக, பெண் வி~யங்களுக்குப் போகாதவனாகவும் இருந்தான். மாதுங்காவில் எங்கோ அறையெடுத்துத் தங்கியிருந்தான். ரயிலில் ஏற்பட்ட சிநேகிதம்தான் குட்டிக்கும் கலாபனுக்குமிடையில். அவனது நன்னடத்தை காரணமாகவும், நல்ல மனது காரணமாகவும் குட்டியில் மரியாதையுண்டு கலாபனுக்கு. அதுவே ஒருவர்மீதான ஒருவரின் நட்புக்கு நடைபாதையானது.
அதனால் குட்டி வந்த காரணத்தைச் சென்று விசாரிக்க, குட்டி அவனைத் தேடியே வந்ததாகக் கூறினான்.

‘ஏன்? என்ன விஷயம்?’

‘கப்பலொண்டு நாளைக்கு காலமை பம்பாய் ஹார்பரிலயிருந்து வெளிக்கிடுகிது. புஃல் குறூவும் புது ஆக்கள். புதிசாய் வாங்கி இப்பதான் என்ஜின் வேலையெல்லாம் முடிச்சிட்டு சிங்கப்பூர் வெளிக்கிடுகிது. தேர்ட் இன்ஜினியர் ஒராள் வேணுமெண்டு ஏஜன்ற் நாய்மாதிரி அலையிறான். நேற்று பின்னேரம் சந்திச்ச நேரத்தில உங்களைப்பற்றி சொன்னன், அண்ணை. காலமை வெள்ளன கூட்டிக்கொண்டு வாவெண்டான். வாருங்கோ போவம்.’
‘காலமைதான, குட்டி? சரியாய் எட்டு மணிக்கு நான் ஹார்பரில நிப்பன். நீங்கள் போங்கோ.’

‘விடிய இன்னும் ரண்டு மணத்தியாலம்தான் இருக்கு. ராராவாய் உங்களை எங்கயெல்லாமோ தேடியிட்டு இப்ப இஞ்சவந்து கண்டுபிடிச்சிருக்கிறன். இன்னும் ஒரு கண் நித்திரை கொள்ளேல்ல, அண்ணை. ராக்ஸியும் காத்துக்கொண்டு நிக்குது, சாட்டொண்டும் சொல்லாமல் வாருங்கோ. நீங்களாயில்லாட்டி மயிரைத்தான் இந்தமாதிரி இடங்களுக்கு நான் வந்திருப்பன்.’  கூறியபடி கலாபனை அழைப்பதுபோல் இழுத்துக்கொண்டு போய் ராக்ஸியில் ஏற்றிவிட்டான் குட்டி.

குட்டியிடமிருந்து திமிற முடியாதிருந்தது கலாபனால். அவனும் தள்ளாடுகிற நிலைமையில் இருந்ததால் எதிர்ப்பைவிட்டு, ‘இன்னும் ரண்டு மணி நேரத்தில எப்பிடியும் நான் ஹார்பருக்கு வந்திடுறன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். ‘என்னை நம்பமாட்டியோ, குட்டி?’ என்று கேட்டுக்கொண்டே கலாபன் வெளியே பார்த்தான், அப்போதுதான் தெரிந்தது ராக்ஸி ஏற்கனவே துறைமுகத்துள் வந்துவிட்டிருந்தமை.

அவர்கள் சைக்கிள் ரீவாலாவிடம் ரீ வாங்கிக் குடித்தனர். கலாபன் சிகரெட் புகைத்தான்.

வானம் பலபலவென விடிந்துகொண்டிருந்தது.

பம்பாய் தன் முழுவீச்சான இயக்கத்தைத் தொடங்குகிற நேரம் அதுதான்.
நினைத்துச் சென்ற காரியம் முடியாத வேட்கை இன்னும் கலாபனுள் தகித்துக்கொண்டிருந்தது.

அப்போது ஏஜன்ற் வந்தான்.

கலாபனின் நிலையைப் பார்த்ததுமே ஏஜன்ற் குட்டியிடம் குடித்திருக்கிறார் போலிருக்கிறதே! என்று கேட்டான். அதற்கு குட்டி, ‘கப்பல்காறன் குடிச்சிருக்கிறதில என்ன பிரச்சினை, ஏஜன்ற்? அவன் நம்பர் வண் வேலைகாறன். அவனை எப்பிடியும் ஏத்திவிடுற எண்ணத்தில சொல்லேல்லை. திரியாத இடமெல்லாம் திரிஞ்சு அவனை உனக்காகத்தான் இப்ப கூட்டிவந்திருக்கிறன். விருப்பமெண்டா எடு, இல்லாட்டிச் சொல்லு, இப்பவே கொண்டுபோய் அவனைக் கூட்டிவந்த இடத்தில விட்டிட்டு வந்திடுறன்’ என்றான்.

ஏஜன்றுக்கு ஒரு மூன்றாவது கப்பல் இன்ஜினியர் அவசியமாகவும், அவசரமாகவும் தேவைப்பட்ட நேரமது. கப்பல் வெளிக்கிடுவதற்கு முன் அதை அவன் செய்யாவிட்டால் கப்பல் கம்பெனிகூட நினைக்கலாம் அவன் தங்கள் தேவையை நிறைவேற்ற முடியாதவனென.

ஏஜன்ற் ஒரு ஓரமாக நின்றிருந்த கலாபனை அணுகினான்: ‘தயவுசெய்து சொல்லு, நீ முந்தி கப்பலில தேர்ட் என்ஜினியராய் வேலை செய்திருக்கிறாயா?’

‘அங்க நிண்டு என்ர சேர்டிபிகற்களை நீ புரட்டிப் புரட்டிப் பார்த்தாய்தானே?’ என்றான் கலாபன்.

‘உண்மைபோல தோன்றக்கூடிய இதுமாதிரி சேர்டிபிகேற்கள் உள்ள நூறு பேரை உனக்கு என்னால காட்ட ஏலும். ஆனா உண்;மையான அனுபவமுள்ள ஆள்தான் எனக்கு வேணும். எனக்கு சேர்டிபிகேற்கூட வேண்டாம். நீ வாயால சொல்லு, உனக்கு அனுபவம் இருக்கா?’

அவனது பரிதாப நிலையைக் கண்டே கலாபன் பொறுமையாகச் சொன்னான்: ‘ஒண்டுக்கும் யோசிக்காதே. எனக்கு மூன்று வரு~ அனுபவமிருக்கிறது. முதலில் எனது மாதச் சம்பளம் என்னவென்று சொல்லு? மேலதிக வேலைக்கு மணத்தியாலக் கூலி என்ன?’

‘இந்தக் கம்பெனியில் மேலதிக வேலை நேரமில்லை. எல்லா பிழைகளையும் செல்லுகிற துறைமுகங்களில் அவர்கள் செய்துகொள்வார்கள். உனது சம்பளம் தொளாயிரம் அமெரிக்க டொலர்கள்.’

‘உங்களுக்கு அனுபவமுள்ள ஊழியரும் தேவை, அதேநேரத்தில் சம்பளமும் குறைவாக ஆள் வேண்டுமென்றால் எப்படி? மேலதிக நேரமும் இல்லாத நிலையில் ஆயிரத்து இருநூறு இல்லாவிட்டால் எனக்கு க~;ரம்’ என கலாபன், அவனுள் இன்னுமிருந்த விஸ்கி, முரண்டுபிடிக்க நேர்ந்தமை தொடர்ந்து நிகழ்ந்தது.

எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான் குட்டி. அவனுக்கு கலாபன் அவ்வாறு கதைத்தது விருப்பமாக இருந்ததுபோலவே தோன்றியது. வேலை தேடியலைந்து எந்தச் சம்பளத்துக்கும் வேலைசெய்ய துறைமுகத்தில் ஒரு கூட்டம் அலைந்துகொண்டிருந்த நிலையில், தனக்கான சம்பளத்துக்கு ஒருவன் இழுபறிப்படுவது அவனின் வேலைத்திறமையை ஒருவகையில் காட்டுகிறதுதான்.

‘இது இன்றைய சூழ்நிலையில் ஒரு மூன்றாவது இன்ஜினியருக்கான சரியான சம்பளம்தான். என்றாலும் நீ கேட்கிற படியால் ஆயிரமாக வாங்கிக்கொள்.’
‘ஆயிரத்து இருநூறு டொலர் ஒரு நல்ல கம்பெனிக்கு பணமே இல்லை, ஏஜன்ற். நீங்கள் தாராளமாய் அந்தச் சம்பளத்தை எனக்குத் தரலாம். அதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டி இருக்காது என்றைக்கும்.’

கடைசியில் ஆயிரத்து நூறுக்கு ஒப்பந்தம் கைச்சாத்தானது துறைமுகத்தில் வைத்தே.

அடுத்த சிறிதுநேரத்தில் அவன் கப்பல் கப்ரினின் முன் நிறுத்தப்பட்டான். கப்பலைக் கிளப்பும் அவசரத்திலிருந்த கப்ரின் உடனேயே சரியென்றுவிட்டான்.

கலாபன் தனக்கு ஒதுக்கப்பட்ட கபினுக்குச் சென்றான். அப்போது பிரதம பொறியாளர் வழியில் வந்தார். ஏஜன்ற் புதிய மூன்றாவது பொறியாளர் என அறிமுகப்படுத்தி வைத்தான். கைகொடுத்துச் சென்ற பிரதம கப்பல் பொறியாளரின் முகம் திருப்தியாயிருக்கவில்லை என்பது கலாபனுக்குத் தெரிந்தது.

குட்டி சென்று அவனது சூட்கேஸை அறையிலிருந்து எடுத்துவந்து கொடுத்தான். ஏஜன்ற் கலாபனின் கடவுச் சீட்டை வாங்கிப்போய் குடியகல்வு அலுவலகத்தில் அவன் நாட்டைவிட்டு விலகலின் அடையாள முத்திரையை இட்டுவந்தான்.

பகல் பத்து மணியளவில் கப்பலை துறைமுகத்திலிருந்து எடுத்துவிடும் அலுவலர் வர எம்.வி.சவூதி மோர்னிங் ஸ்ரார் என்ற அந்த பனாமாப் பதிவுக் கப்பல் சிங்கப்பூருக்கான தன் கடற்பயணத்தைத் தொடக்கியது.
கப்பல் புறப்பட்ட நேரத்தில் அது தனது வேலைநேரமாக இல்லாதபோதும் கலாபன் கீழேதான் நின்றிருந்தான். பழகியவர்கள், குறிப்பாக இரண்டாவது பொறியாளர் செய்த ஆயத்தங்களை, முறைகளை கூடச்சென்று கவனித்தான். கப்பல் சீரான வேகம்பெற பிரதம பொறியாளரைத் தொடர்ந்து மேலே வந்த கலாபன் மெஸ்ஸ{க்குச் சென்று மதிய உணவை உண்டான். பெயருக்குத்தான். அவனது மண்டை இன்னும் முதல்நாளிரவின் போதையால் விண்விண்ணென்று கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த பிரதம பொறியாளர் கலாபனைப் பார்த்த பார்வையில் முதன்முதலாக அவர் முகத்தில் முறுவல் கண்டான் கலாபன். அவன் கப்பல் புறப்படுகிற நேரத்தில் தான் அறியவேண்டிய வி~யங்கள் குறித்து காட்டிய அக்கறை அவரைத் திருப்திப்படுத்தியிருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான்.
அவன் கீழே இறங்கியபோது அவனது வேலைநேரம் தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. தனக்கு ஒரு மின்கல விளக்கு வேண்டுமென்று சொன்னதோடு இரண்டாவது பொறியாளரின் விளக்கையே எடுத்துச் சென்று கப்பலின் எந்திர அறையில் மிகமுக்கியமான மோட்டார்களையும், சூடாக்கிகளையும் அதுபோல் சிலவற்றின் குளிராக்கிகளையும் பார்த்துவந்தான்.

கப்பல் பொறியியல் அறிவென்பது வெறும் கணிதங்களால்மட்டும் அடைந்துவிடுவதில்லை. அது முக்கியமாக மூன்று அம்சங்களில் தங்கியிருக்;கிறது. முதலாவது, கப்பலில் வேலைசெய்த அனுபவம். இரண்டாவதாக, கப்பலோடியின் சமயோசிதம். மூன்றாவதாக, கப்பல் பொறிமுறைபற்றிய அடிப்படை அறிவு. இந்த மூன்றுமுள்ள ஒரு கடலோடி ஒரு நல்ல ஊழியனாகமுடியும் என்பதை கலாபன் ஏற்கனவே அறிந்திருந்தான். அவற்றை அடையவும் அவன்   சளைக்காது முயன்றுகொண்டிருந்தான். ஒருவேளை அடுத்த ஆண்டு அவன் கப்பல்வேலைக்கே போகவேண்டாத ஒரு சூழ்நிலை ஏற்படுமென்றாலும், இந்த ஆண்டில் தன் அடைதல்களின் முயற்சியை அவன் கைவிட்டுவிடமாட்டான். எந்தத் துறையானாலும் அதனறிவைத் தேடுகின்ற தாகமொன்று ஏற்பட்டுவிடின், அதை வெகுசுலமாகத் தணித்துவிட முடியாதுதான்.
கடற் பயணத்தில் ஒருவாரம் கழிந்தது.

கப்ரின், முதலாவது அலுவலர், பிரதம கப்பற் பொறியாளர், இரண்டாவது பொறியாளர், மின் அலுவலர் என அந்தக் கப்பலில் ஐந்து முக்கியமான பொறுப்புகளிலும் உள்ளவர்கள் போலந்துக்காரராயிருந்தனர். கலாபன், ஐந்தாம் பொறியாளரான சிவநேசன் மற்றும் உணவுப்பகுதிப் பொறுப்பாளரும், அலுவலர் மெஸ்ஸின் பரிசாரகரும் இலங்கைத் தமிழர்கள். வானொலித் தகவல் தொடர்புப் பகுதி பொறுப்பாளரும், இரண்டாம் அலுவலரும் இந்தியர்கள். மீதி இருபத்தொரு கடலோடிகளும் பம்பாய்த் துறைமுகத்தில் புதிதாக எடுக்கப்பட்டவர்கள். அந்த முதல் வாரத்திலேயே பிரதம அலுவலருக்கு அவர்களின் வேலைத் திறமையில் நம்பிக்கையில்லாது போயிருந்ததை மெஸ்ஸில் நிகழ்ந்த பேச்சுக்களில் அவதானிக்க முடிந்திருந்தது கலாபனால்.

அது அவனுக்கு அக்கறையில்லாத விஷயம்.

போலந்துக்காரர்களுக்கு கடமை தவறுவது, கடமையின் உதாசீனங்கள் வெகுவாகப் பிடிப்பதில்லை என்பதை அவன் கண்டிருந்தான் அந்த ஒரு வாரத்தில். அதுபற்றியும்கூட அவனுக்கு அக்கறையில்லை. தன்னுடைய வேலைகளை ஆகக்கூடுதலான திருப்தியேற்படும்வரை செய்வது அவனது இயல்பாக ஆகியிருந்தது. பொறுப்பு வீடுபற்றிய வி~யத்தில் இருந்ததோ என்னவோ, ஆனால் வேலையில் அது அளவைவிடச் சற்று அதிகமாகவே அவனுக்கு இருந்தது.

வேலை நேரத்தில் அவன்  படிகளின் வழியில் இறங்குகிறபோது எந்திரத்தின் மூடியினூடாக அதைக் குளிர்வித்து அதன் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க உள்ளே செல்வதினதும், சூட்டைக் கிரகித்துக்கொண்டு வெளியே வருவதினதும் நீர்க் குழாய்களை அவன் தடவியபடி வருவான். அதுபோலவே எந்திரத்தின் இயங்குதலை இலகுவாக்குவதோடு அவற்றின் சூட்டை உறிஞ்சவும் செலுத்தப்படும் எண்ணெய்க் குழாய்களையும் தடவியபடி வருவான். இதைக்கொண்டு அவன் அவற்றின் வெப்பநிலையைக் கவனிக்காமல் வருவதாக பிரதம பொறியியலாளர் எண்ணியிருப்பார்போல. ஒருநாள் அவனிடமே அவர் கேட்டார்: ‘நீ கேட்டபடி உனக்கு ஒரு லைற் தந்திருக்கிறதுதானே? ஆனால் நீ எப்போதும் வெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் நீரினதோ, எண்ணெயினதோ வெப்பத்தை அவற்றின் வெப்ப அளப்பிகள்மூலம் சரியாகப் பார்க்காமல் வருகிறாயே, ஏன்?’ என்று கேட்டார்.
‘என் கண்ணைவிட இந்தக் கைகள்தான் அவற்றோடு அதிகமாகப் பழகுகின்றன. என் காதுகள்தான் எந்த அறிகருவியைவிடவும் இந்த எந்திரங்களோடு கூடுதலான பரிச்சயமாயிருக்கின்றன. என் உடம்புபோல இந்த எந்திரம் எனக்கு. இதைத் தொட்டாலே இதன் இயல்புநிலையின் சிறிது மாற்றத்;தையும் என்னால் அறிந்துவிட முடியும். என் காது இதன் சத்தங்களோடு பரிச்சயமாயிருக்கிறது. இது இயங்குவது ஒரு தாளத்தில். இந்தத் தாளத்தில் ஒரு சிறிய மாற்றத்;தைக்கூட என் காதுகள் உடனேயே கிரகித்துவிடும். யோசிக்காதீர்கள், என் வேலைநேரத்தில் எந்த மாறுபாட்டையும் நான் மற்றவர்களுக்கு விட்டுப்போகமாட்டேன்’ என்றான்.
அந்தப் பதில் இரண்டாவது பொறியாளரை மிகவும் தொட்டிருக்கவேண்டும். ‘இதுபற்றி விஞ்ஞானபூர்வமாக எனக்குச் சொல்ல இருக்கிறதுதான். ஆனாலும் உன் கரிசனையையும், நீ இந்த எந்திரத்தோடு கொண்டுள்ள உறவையும் நான் மதிக்கிறேன்’ என்றார்.

சிங்கப்பூரை அடைகிறவரையில் அந்த ஆடிமாதக் காற்று தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. வெறுமையான கப்பலை தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று தூக்கித் தூக்கி எறிந்தது. பழக்கமானவர்கள் தப்பினார்கள். கப்பலுக்கு புதிதானவர்கள்தான் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய பம்பாயில் எடுக்கப்பட்ட எல்லா பங்களாதே~pகளும் அந்தக் கொந்தளிப்பில் கடற்கிறுதியால் பாதிக்கப்பெற்று நடக்கவும் முடியாமல் விழுந்துவிழுந்து கிடந்தார்கள்.

வேலைநேரத்தில் கீழே நின்றிருக்கும் பொழுதுகளில் அவன் மனம் ஊர் தேடிப் பறந்தது. கட்டத் தொடங்கிய வீடு வேலைகள் முடியாமல் குறையாக இருந்த தோற்றத்தின் அவலத்தைக் கண்டது. இப்போது கிடைத்திரு;க்கிற இந்த வேலை அதை விரைவில் முடித்துவைக்குமென நம்பினான் அவன். ஒரு வரு~த்தின் பின் அது நிமிர்ந்து பூரணமாய்; நின்று தன்னை வரவேற்கப் போவதையும், மனைவியும், அம்மாவும், குழந்தைகளும், இன்னும் நெருங்கிய நண்பர்களும் அதனால் பெறப்போகிற மகிழ்ச்சியும் கண்ணில் தோன்றி அவனைப் பரவசப்படுத்திக்கொண்டிருந்தன
எப்படியோ மேலும் மூன்று நான்கு நாட்களில் கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தை அடைந்தது.

000
தாய்வீடு, ஏப் . 2015

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...