Sunday, March 10, 2019

உட்கனல்
நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிருந்த நினைவுகள் திடீரென சுழிப்பெடுத்துப் பெருகின.
      நாவற்குழிப் பாலம், செம்மணி உப்பளம், அப்பால் மயானவெளி தாண்டி நல்லூர்ப் பாதையில் முதல் வருகிற குடிமனைத் தொகுதி நாயன்மார்கட்டு. சுமார் இருபது வருஷங்களுக்கு முந்தி சுற்று மதிலும், வாசல் கொட்டகையும், வெளியே தெருமடமும் கொண்ட அந்த வீடிருந்த இடத்தில் அப்போது வேறொரு வீடு இருந்துகொண்டிருந்தது. மட்டுமில்லை. சற்றுத் தள்ளி நல்லூர்த் தெருவிலிருந்து அரியாலைக்கு கிளை பிரிந்த சந்தியிலிருந்த கிணற்றுக் கட்டும் மேடையும், அருகிலிருந்த சுமைதாங்கியும்கூட இல்லாது போயிருந்தன. இருந்தும்  செம்மணி தாண்டி கார் குடிமனைக்குள் பிரவேசித்ததுமே அந்த இடத்தை நவநீதம் துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டார்.
      அப்போதுள்ள, குடும்பத்தின் நிம்மதி, செழிப்பு எல்லாமும் ஒரு பொறியில் பஸ்மமாகவிருந்த ஒரு காலத்தை அப்போது அவர் எண்ணினார். அதிலிருந்தான மீட்சி அப்பொழுது இல்லாமல் போயிருக்கிற அந்த வீட்டிலேதான் சாத்தியமாயிற்று.
      புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்திருந்த காலத்தில் அவ்வப்போது அதை அவர் எண்ணினார். கச்சிதமாக நிலைமையை அனுசரித்த தனது சாமர்த்தியத்தை எண்ணி அப்போதெல்லாம் அவர் தன்னை மெச்சிக்கொள்ளத் தவறவில்லை. ஆயினும் வள்ளிநாயகி அந்த துரோகத்தை அனுசரித்துப் போன  புதிர் எப்போதும்போல் விடுபடாததாகவே அவரில் இருந்துகொண்டிருந்தது. அதுகூட பின்னர் பின்னராக நினைவின் எட்டாத் தொலைவுக்கு மெல்ல மெல்ல நகர்ந்து போயிருந்தது.
      திரும்பி அருகிலிருந்த மனைவியைப் பார்த்தார். அந்த இடத்தோடும், அங்கு நடந்த சம்பவங்களோடும் அவளுக்கு மிகுந்த தொடர்பிருந்தது. அந்த நிகழ்வுகளின் முக்கிய பாத்திரம் அவள். இருந்தும் கண்ணாடிப் பக்கமாக முகத்தை முழுவதுமாய்த் திருப்பி வெளியே பார்த்தபடி தன்னை அவரிலிருந்து ஒளித்துக் கொண்டிருந்தாள்.
      அவளது ஒதுக்கம் எது காரணத்தாலானதென நிச்சயிக்க முடியாதிருந்தபோதும் அவரது மனத்தில் ஒரு பதற்றம் இறங்கத் துவங்கியது. ஊர்காணும் அந்தப் பயணத்துக்கு தான் வரவில்லையென்றிருந்தவளை வற்புறுத்தி அழைத்து வந்தது வேண்டாத வினையாய் ஆகிவிட்டதோவென அவர் அஞ்சத் துவங்கினார்.
      நல்லூர் சென்றவர்கள் சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு ஒன்பது மணிக்கு முன்பாகவே மிருசுவிலில் தாங்கள் தங்கியிருந்த உறவினர் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். முன்னறையின் ஒற்றைக் கட்டிலில் அவரும், கீழே பாய்விரித்து அவளுமாய் சாப்பிட்டு வந்து படுத்திருந்தபோதுகூட கார்ப் பயணத்தில்போல் அவருக்கு முகத்தை மறைத்தபடியேதான் வள்ளிநாயகி திரும்பிப் படுத்திருந்தாள். 
      அவ்வாறு அந்த எண்பதுகளிலும் அவள் இருந்திருக்கிறாள். அவர்கள் உறவுக்குள் விரிசல் விழுந்துவிட்டதின் அடையாளம் அது. அது பெரிய பாதிப்பை அவரிடத்திலோ, அவரது குடும்ப ஸ்திரத்திலோ இனி எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தாதென்றபோதும் தனக்குள் அச்சம் துளிர்ப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை. அது தனது அன்றைய தந்திரங்களின் வெற்றியால் ஒரு சிக்கலான குடும்ப நிலைமை நேர்கண்டதென்ற தன் அதுவரை காலத்திய பெருமையின் தோல்வியாக முடியுமென்பதோடு, அதை முழுவதுமாய் நம்பிக்கொண்டு தன் மனைவி தன்னோடு இயல்பில் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கவில்லையென்ற தோல்வியாகவும் முடிந்துவிடும்.
      அவர் எல்லாம் எண்ணிப்பார்த்தார்.
      ஒருகாலத்தில் விசுவமடு, தருமபுரம் பகுதிகளுக்குச் சென்று செத்தல் மிளகாய்க் கொள்வனவும், கொழும்புக்கு மரக்கறி ஏற்றுமதியும் அவர் செய்துகொண்டிருந்தார். தூக்குத் தராசில் அவர் புரிந்துவைத்த சூக்குமத்தில் ஒன்றுக்கு இரண்டாக லாபத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது வியாபாரம். அது அவரது பழக்கத்தின் திசைமாற்று விசையாகவும் காலப்போக்கில் ஆகிப்போனது.
      இரவுகளில் தாமதமாக வருவதும், சில இரவுகளில் வராமலே இருந்துவிடுவதும்பற்றி வள்ளிநாயகி கேட்டபோதெல்லாம் நண்பர்களோடு கடுதாசி விளையாடுவதாக அவர் சொன்ன காரணத்தை அவள் ஆரம்பத்தில் சுணக்கத்தோடெனினும் நம்பவே செய்தாள். ஆனால் அதன் உண்மைக் காரணம் ஊரிலே சலசலக்கத் தொடங்கியபோது வள்ளிநாயகி சிதறிப்போனாள். அவரின் இரவு வெளித் தங்குகைகளுக்கு திட்டமாக தடைபோட்டாள். பிள்ளையின் தலையிலறைந்து, மீறினால் செத்துவிடுவேனென ஆணையிட்டாள். என்றைக்கு அவர் அவளது ஆணையை மீறியது தெரிந்தாளோ, அன்றைக்கே அவரைத் திரஸ்கரித்து குழந்தைகளோடு வீட்டைவிட்டு வெளியேறினாள்.
      தாய் வீடு போனவளுக்கு அயல் நகரத்திலும் மாநகரத்திலும் கணிசமாயிருந்த பல கண்கொத்திப் பாம்புகளின் கதைகளைச் சொல்லிற்று. அப்புக்காத்து பிரக்கிராஸி கிளார்க்குகளென பலர் அவற்றால் அழிந்தொழிந்து போனமைக்கு சாட்சியங்கள் காட்டிற்று. அவளெடுத்தது சரியான முடிவென பரிந்துரையும் செய்தது.
      ஆனால் மன்னாரிலிருந்து வந்த பெரியம்மா வேறுமாதிரிச் சொன்னாள். ‘காசு புழங்கிற ஆம்பிளயளுக்கு கடிக்காமயே விஷமேத்த சில பாம்புகளுக்குத் தெரியும், பிள்ளை. இந்தமாதிரிப் பாம்புகளிட்ட ஒருக்காப் போய் மாட்டியிட்டா கையில காசு தீருமட்டும் தங்கட பிடியை லேசில விட்டிடாதுகள். நீ எதுக்கும்  நாயன்மார்க்கட்டு பசுபதி அய்யரிட்ட நவநீதத்தை ஒருக்கா கொண்டுபோட்டு வா. எல்லாம் சரியாயிடும்.’
      ‘நவநீதம் நல்லாய்த்தான இருந்தது. பிறகெப்பிடி அதுக்கு புத்தி இந்தமாதிரிப் போச்சுது?  அது அந்த கண்கொத்தியளின்ர வேலையாய்த்தான் இருக்கும். பெரியம்மா சொன்னமாதிரி ஒருக்காச் செய்துபாரன்’ என்றாள் அம்மாவும்.
      ‘அது கண்கொத்தியளின்ர விஷமில்லை, அந்தாளின்ர அமர்’ என்று வாதம் புரிந்தாள் வள்ளிநாயகி. இரண்டு பிள்ளைகளோடு அவள் அந்தமாதிரி அவரை உதறியெறிந்துவிட்டு வந்து தன் வாழ்வைக் கழித்துவிட முடியாதென்று அம்மா அவளைத் துரத்திவிட்டாள்.
      அடுத்த நாள் காலையில் குழந்தைகளோடு வீடு வந்தாள் வள்ளிநாயகி. உள்ளே கூடத்துக்குள் நவநீதம் பாய்விரித்துப் படுத்திருந்தது.
      ‘உடம்புக்கென்ன?’
      ‘காய்ச்சல்.’
      ‘உது சும்மா காய்ச்சலாயிராது, விஷக் காய்ச்சலாய்த்தான் இருக்கும். காய்ச்சலுக்கு இப்ப பனடோல் குளிசை தாறன். விஷத்துக்கு நாளையிண்டைக்கு வெள்ளிக்கிழமை பசுபதி அய்யரிட்டதான் கூட்டிக்கொண்டு போப்போறன்.’
      தன் சிதைவை அவள் அவ்வாறு விளங்கியது கண்டு, அதுவே குடும்பத்தைக் கட்டாக வைத்திருக்கக்கூடிய சமயோசிதமாகத் துணிந்து சம்மதித்தார்.
      அவளும் தனக்கில்லாது தன் தாயாருக்கும், பெரிய தாயாருக்குமிருந்த  நம்பிக்கையைப் பரீட்சிக்கும் ஒரு முயற்சியாக அவரை ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் நல்லூர் கூட்டிவந்தாள்.
      அப்போது புதிதாய் முளைத்திருந்த அந்த பலசரக்குக் கடைக்கு எதிரேதான் பிரமாண்டமான சுற்று மதிலுக்குள்ளே பசுபரி ஐயரின் சிறிய கூரைபோட்ட சுண்ணாம்புக்கல் வீடு இருந்திருந்தது. காட்டுக் கல்லும், முருகைக் கல்லும் கலந்து கட்டப்பட்ட சுற்றுமதில் ஆளுயரத்திற்கு மேலானதாயிருந்தது. அதன்மேலே படிந்து படிந்து கருமையேறிக் கனத்துக் கிடந்த பாசியின் தடிப்பம் மதிலின் நூற்றாண்டு கடந்த வயதைச் சொல்லிக்கொண்டிருந்தது. மதிலுக்கு மேலால் தூங்கு செம்பரத்தம் பூக்கள் மாந்திரீகத்தின் இழைகளாய் வெளியே தொங்கி அசைந்துகொண்டிருந்தன.
      உள்ளே அவர் சென்றபோது கைமணி கிணுகிணுத்துக் கேட்டது. வீட்டின் பின்புறத்தில் தூண்டாமணிவிளக்குகள் மினுக்கியது. கோவிலின் அமைவும், மரங்களின் செறிவும் அவரை மெஸ்மரிசத்துக்கு உள்ளாக்கின. அவர் அவள் பின்னால் ஊர்ந்துபோனார்.
      நவநீதத்தை குளித்துவரச் சொன்ன அய்யர், எலுமிச்சம் பழம் சுற்றி வெட்டிப்பார்க்க, பிளந்து இரண்டாய்க் கிடந்த பழத்தின் விதைகளில் விஷத்தின் அளவும் வீர்யமும் கறுப்பாய்ப் படிந்திருக்கக் காணக்கிடந்தது.
      அதில் அய்யரே ஆச்சரியப்பட்டபடிதான் நவநீதத்திற்கு காப்பு நூல் கட்டினார். குடும்பத்தையே மறக்கச் செய்யுமளவு நவநீதத்தின் மேல் வீசப்பட்டிருந்த கடூர வசியத்தினைச் சொல்லி, அவரை அடுத்த வெள்ளிவரை அங்கே தங்க வேண்டுமென்றார். ‘அதுக்குள்ள வசியத்தை முறிச்சிடுவன். ஆனா எந்தக் காரணத்தைக்கொண்டும் நவநீதம் கேற்றைத் தாண்டக்குடாது. இவரில ஏவிவிட்டிருக்கிற வசியத்தின்ர வீறு கொஞ்சங்கொஞ்சமாய்க் கழண்டு வெளிய ஓடியிட்டாலும், வாசலில அது ஆள் எப்ப வருமெண்டு காத்திருக்கும். இப்ப நான் கையிலே கட்டியிருக்கிற காப்பு ஒரளவுக்குத்தான் இவருக்குப் பாதுகாப்பு. சொல்லிப்போட்டன், கவனம்.’
      எல்லாம் கேட்ட நவநீதம் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு தலையை ஆட்டினார்.
      அந்த கோட்டைபோன்ற சுவர்களின் உள்ளிருந்த பழைய வீட்டுக்குள்ளே நவநீதம் எட்டு நாட்கள் தங்கி இருந்தார். ஏழாம் நாள் பகல்தவிர்ந்த நேரமெல்லாம்  வள்ளிநாயகியும் அவரோடு உடனிருந்தாள்.
      எல்லாம் நல்லமாதிரி நடந்துகொண்டிருந்த அந்த ஏழாம் நாள் பகலில், தாயார் வீட்டில் விட்டுவந்த வள்ளிநாயகியின் மூத்த பிள்ளை சைக்கிளில் மோதுண்டு காயம்பட்டிருக்கிறானென்ற செய்தியைக் கொண்டு அவளது தம்பி காசி அங்கே வந்தான்.
      செய்தியறிந்த அப்போதும் அவள் அவரைத் திரும்பியும் பாராமல் அவ்வண்ணமே இருந்திருந்தாள். அவரது எந்த உணர்வு வெளிப்பாட்டினையும்  முற்றுமாய் அவள் செய்த உதாசீனத்தின் அடையாளம் அது.
      பின்னால் வழக்கம்போல தனக்குள்ளே புலம்பினாள். ‘வீட்டு ஆம்பிள சரியா இருந்திருந்தா இந்த இடியெல்லாம் என்ர தலையில ஏன் வந்து விழப்போகுது?’
      அவர் மௌனமாய் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தார். அவளின் சீற்றத்தினது நியாயத்தை அவர் புரிந்திருப்பார்போல.
      அன்றிலிருந்து ஏழு நாட்கள் ஒழுங்கு எதுவும் பிசகவில்லை.
      ஆனால் வீட்டிலேதான் கெட்டது நடந்திருந்தது.
      செய்தி கொண்டுவந்த காசி, ‘நீ சனிக்கிழமை காலமயே எல்லாம் முடிச்சுக்கொண்டு வாக்கா. போட்ட தையலோட அவன் இப்ப விளையாடிக்கொண்டுதான் திரியுறான்’ எனச் சொன்னபோதும், வள்ளிநாயகியால் அடங்கியிருக்க முடியவில்லை. எப்படியும் மாலைக்குள் வந்துவிடுவதாக அய்யரம்மாவிடம் சொல்லிக்கொண்டு காசியுடன் வீடு புறப்பட்டாள்.
      அன்று மாலை அவள் பொழுது சாய்கிற வேளையில் வேர்த்து விறுவிறுத்து அவசர அவசரமாக  அய்யர் வீடு வந்தபோது நவநீதம் அங்கே காணப்படவில்லை.
      அய்யரம்மா சொன்னது கேட்டு வள்ளிநாயகி திடுக்கிட்டுப் போனாள்.
      தனது கட்டளையை மீறி நடக்குமிடத்தில் வெகுண்டு உடனேயே பையைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடும்படி விரட்டுவதுதான் பசுபதி அய்யரின் இயல்பு. அன்றைக்கு ஏனோ அவளைப் பார்த்தபடி திண்ணைக் கதிரையில் நிலைகுத்தி அமர்ந்திருந்தார். அவள் இதயமாய் நின்று துடித்துக்கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்திருக்கவேண்டும்.
      பிறகு அவளை கிட்ட வரச்சொன்னார்: ‘நீ அழவேண்டாம். வசியத்தின்ர வீறு குறைஞ்சுவாற கடைசிநேரத்தில இப்படித்தான் அது ஒரு மூச்சோட ஆளை வெளிய இழுத்துக்கொண்டு ஓடப்பாக்கும். எண்டாலும் இந்த ஆறு நாளாய் விட்டிருக்கிற காப்பு மந்திரம் கூடஇருக்கு. அது ஆளை திருப்பிக்கொண்டுவர தெண்டிச்சுக்கொண்டுதான் இருக்கும். எதுக்கும் காய்வெட்டுற  நேரம்மட்டும் இருந்து பார். நவநீதம் வந்தாலும் வரும்.’
      ‘இனி வேண்டாம், அய்யா’ என்றாள் அவள்.
      ‘ஏன்?’ அய்யர் திகைப்போடு கேட்டார்.
      ‘கூடித் திரியிற ஆக்களாலதான் அந்தமாதிரிக் கெட்ட சகவாசம் இந்த மனிஷனுக்கு வந்ததெண்டு நினச்சு இஞ்ச கூட்டிவந்தன். எல்லாம் நல்லமாதிரி முடியிறதுக்கு ரண்டு நாள் இருக்கேக்க இப்பிடி திரும்பவும் எடுபட்டு ஓடியிருக்கெண்டா, காப்புக் கட்டி வீட்டை கூட்டிக்கொண்டு போனாப் பிறகும் அந்தாள் திரும்ப அவளிட்ட ஓடும்.’
      அய்யர் மௌனமாயிருந்தார். பிறகு மனத்துள் என்ன கணக்குத் தீட்டினாரோ, அவளைக் கேட்டார்: ‘என்னில உனக்கு நம்பிக்கை இருக்கோ?’
      ‘நம்பித்தான அய்யா, இஞ்ச கூட்டிவந்தனான்.’
      ‘ம். காலடி மண், தலைமயிரை வைச்சுச் செய்யிற இந்தமாதிரி வசியங்களப்பற்றி எனக்குத் தெரியும். அதை அழிக்கிற விதமும் தெரியும். அதாலதான் சொல்லுறன். இது வசியம் முழுக்கவுமாய் முறியிற கடைசிநேரம். அதுதான் ஆளை இழுத்துக்கொண்டு இப்பிடி ஓடியிருக்கு. எண்டாலும் நவநீதம் தெளியிறதுக்கு ஒரு நொடிப் பொழுதிருக்கு. அதில தெளிஞ்சிட்டா, இண்டைக்கு காய் வெட்டிற நேரத்துக்குள்ள ஆள் இஞ்ச திரும்பிவரும். அப்பிடி வராட்டி… காலமை பையை எடுத்துக்கொண்டு நீ போ.’
      பசுபதி அய்யர் எழுந்து உள்ளே போய்விட்டார். அய்யரம்மா ஒரு பரிதாபமான பார்வையை அவளில் வீசியபடி அய்யரைப் பின்தொடர்ந்தாள்.
      அப்போது கேற் திறபட்ட சத்தம் கேட்டது.
      வள்ளிநாயகி திரும்பினாள். நவநீதம் வந்துகொண்டிருந்தார்.
      அவளது சிவந்த கண்களைப் பார்த்து சிரிக்கமுயன்றார். ‘உன்னையும் காணம்… விசராயிருந்திது… ஒரு சிகரட் பத்தலாமெண்டு வெளிய போனன்… சுத்திவர கடையொண்டயும் காணேல்லை… அப்பிடியே நடந்து போய்ப் பாத்தா… திரும்பிவாற பாதையை விட்டிட்டன்… அப்பிடியே அலைஞ்சு அலைஞ்சு…’
      அவரையே பார்த்தபடி நின்றிருந்தாள் வள்ளிநாயகி. நம்பினாளோ இல்லையோ, ஒன்றும் பேசவில்லை.
      வெள்ளிக்கிழமை காய்வெட்டி செய்யவேண்டிய இறுதி வசிய முறிப்புக் காரியங்களை முடித்து நவநீதத்தை அவள் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.
      1985க்குமேல் அவர்கள் நாட்டிலிருக்கவில்லை.
      அவருக்கு புதிர் இருந்தது. ஆனால் வள்ளிநாயகி எல்லாவற்றையும் மறந்துவிட்டாளென்றே அவர் அத்தனை காலமாய் நினைத்திருந்தார். அதற்கு மேலே மூன்றாவதொன்றின் பிறப்பு அதையே உறதிசெய்தது. ஜேர்மனி சென்ற பிறகு குடும்பச் செழிப்புக்கான அவளது உழைப்பின் பங்கு அதை மேலும் உறுதிப்படுத்தியது. அதன் பிரத்தியட்சம்தானே அன்றைக்கு அவர் காணும் குடும்ப ஸ்திதி, வளமான அந்த வாழ்க்கை எல்லாமும்.
      ஆனால் இப்போது அவருக்குள் சந்தேகம் முளைத்திருக்கிறது. அவள் அவரை மன்னித்திருக்கலாம், ஆனால் எதையும் மறந்திருக்கவில்லை.
      அந்த இடம் பழைய ஞாபகங்களை அவளில் கிளறிவிட்டிருக்க நிறைந்த வாய்ப்பு இருக்கிறது. அந்த நினைப்பில் எந்த மனைவியும்தான் அவ்வாறான மனவுளைச்சலில் தப்பிவிட முடியாது.  
      தலையை நிமிர்த்தி மனைவியிடம், “என்ன, நித்திரையோ?” என்றார் அனுங்கும் குரலில்.
      அவள் திரும்பாமலே அசைந்தாள். பிறகு, “இல்லை. சும்மாதான் கிடக்கிறன்” என்றாள்.
      “வேற ஒண்டுமில்லையே?”
      “வேறயென்ன இருக்கு?” அவள் திரும்பினாள். “அந்தச் சுடலைக்குள்ளதான அந்தளவு சனங்களையும் சாக்கொண்டு ஆமிக்காறன் புதைச்சு வைச்சான்? அதைத்தான் யோசிச்சுக்கொண்டு கிடந்தன்.”
      “ஓ… அதுவோ…?” என்றார் அவர், தான் அவசரப்பட்டு வேறு சாத்தியங்களை எண்ணிவிட்டதான துக்கம் வெளித் தோன்றிவிடாதவாறு. பின், “அதில ஒரு கொலையில சம்பந்தப்பட்ட ஆறு ஆமிப் பொலிசுக்கு தூக்குத் தண்டனையெல்லே கிடைச்சது, தெரியுமோ உனக்கு? கிரிஷாந்தியெண்ட அந்தப் பள்ளிக்குடப் பெட்டை…” என கட்டிலில் எழுந்திருந்து அவர் கதை சொல்லத் தொடங்கினார்.
      வள்ளிநாயகி கேட்டுக்கொண்டு கிடந்தாள். எத்தனை இரவுகளில் அவள் தூக்கம் இடறுப்பட்டாள்! எத்தனை கனவுகளில் அவளது மெல்லிய சிவந்த உடம்பின் வைரித்த, அழகு ஆளுமைகளை அர்த்தமற்றதாக்கிய பளபள பாம்புகள் மகுடியின்றி ஆடிப்போயின! அவள் அவரை மன்னித்திருந்தாலும் மறக்கவில்லை என்பதன் அடையாளங்களல்லவா அவை?
      பழைய சம்பவங்கள் கிளர்ந்தெழுந்த இடத்தில் இன்னும் வெம்மை கனன்றுகொண்டிருந்தது. ஆயினும் அந்தக் குடும்பத்தின் நன்மை கருதியே  அப்பொழுதும் வள்ளிநாயகி அக்கனலை உள்ளே அடக்கிக்கொண்டாள்.
      நவநீதம் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

000

ஞானம் மார்ச் 2019Pictures

Wednesday, November 14, 2018

எம்மா- சிறுகதை

எம்மா
-தேவகாந்தன்-

அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவைக்க அவளால் கூடவில்லை. அங்கேயே நடந்திருந்ததும், வெவ்வேறு இடங்களில் நடந்ததாய்க் கேட்டிருந்ததுமான அதுபோன்ற சம்பவங்கள்கூட எம்மாவுக்கும் சண்முகநாதனுக்குமிடையே உள்ளோடியிருந்த மனவுணர்வைப் புரிந்துகொள்ள போதுமானவையல்ல என்பதாய் அவளுக்குத் தெரிந்தது. பழகியவர்களும் புரிந்திட முடியாதளவு அதில் புதிர்கள் நிறைந்து கிடந்தன.
      அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஆறு வருஷ அனுபவத்தில் ஒரு ஆணினதும் பெண்ணினதுமான நெருக்கத்தில் எழுந்த கதைகள் வெறும் வதந்திகளாய்க் கரைந்தழிந்ததை அவள் நிறையக் கண்டிருந்தாள். இருந்தும் அவர்கள் விஷயத்தில் ஏதோவொன்று இருக்கவே செய்கிறதென்று மனத்துள் குடைந்துகொண்டிருந்த எண்ணத்தை அவளால் துடைக்க முடியவில்லை.
      கடந்த சில மாதங்களாகவெனினும் எம்மாவோடு நெருக்கமான பழக்கமுண்டு லட்சுமிக்கு. வீடுகள் அண்மையில் இருந்ததில், வாகன வசதியற்றவர்களுக்கு அந்தச் சமீபத்தின் வெளிகூட சிரமத்தில் கடக்கவேண்டியதாயிருந்தும், வார இறுதி நாட்களில்  ரிம் ஹோர்டனிலோ, வோல் மார்ட்டிலோ அல்லது அணித்தாயிருந்த பிறைஸ் சொப்பரிலோ அவர்கள் சந்தித்துக்கொள்வதுண்டு. பிள்ளைகளின் பிறந்தநாள்களிலும், நத்தார் புதுவருஷம் உயிர்த்த ஞாயிறுபோன்ற விசேஷ தினங்களிலும் வீடுகளிலே கூடிக்கொள்ளவும் செய்தார்கள். இன்னும் அந்நியமாயிருந்த ஆங்கிலத்திலான உரையாடல் மூலம் தங்கள் குடும்பங்களைப்பற்றி, நாட்டைப் பிரிந்துவந்த காரணங்கள்பற்றி, இறுதியாக கனடா வந்து சேரும்வரை பட்ட அவலங்கள்பற்றியெல்லாம் அவர்கள் பேசியிருக்கிறார்கள். இலங்கையில் இருந்ததுபோன்ற இனக்கொடுமையை  ஆர்மீனியா  நெடுங்காலத்துக்கு அனுபவித்திருந்தது. அதிலிருந்து தப்பிப் பிழைத்து ஒரு குழந்தையோடு கனடா வந்து சேர்வதொன்றும் எம்மாவுக்கு இலகுவான காரியமாய் இருக்கவில்லை. இலங்கையிலிருந்து இருபத்திரண்டு வயதில் தன்னந்தனியனாய் இந்தியாவென்றும் சிங்கப்பூரென்றும் தாய்லாந்தென்றும் அலைந்துழன்று லட்சுமி கனடா வந்துசேர்ந்த கஷ்டங்களை  பெரும்பாலும் அது நிகர்திருந்தது.
      கணவனால் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் காரணங்கள் துரத்த எம்மா நாட்டைவிட்டு வெளியேறியிருக்க, லட்சுமிக்கு கனடா வந்த பிறகு நடந்த திருமணத்திற்கு பிரிவு விதியாகியிருந்தது. வேறு பெண்ணோடுள்ள தன் கணவனின் தொடர்பு உறுதிப்பட்ட நாளில் குடும்பத்தில் வெடித்துப் பெருகிய கலகம் பொலிஸ்வரை சென்று அன்று இரவே லட்சுமியின் கணவனை வீட்டைவிட்டு வெளியேற்ற அவள் தனியனாகியிருந்தாள். பிரிவு பின்னால் சட்டரீதியாகவும் உறுதியாயிற்று.
      ஏறக்குறைய ஒரேவிதமான தனித்தாயர் வாழ்க்கை இருவருக்கும். ஒரேவிதமான கஷ்ரங்களின் எதிர்ப்படுகைகள். இவையே கூடி வேலைசெய்யும் அவ்விருவருக்குமிடையில் மிகுந்த அந்நியோன்யத்தை ஏற்படுத்தியிருந்தன.
      இருந்தும் சண்முகநாதன்மேல் கிளர்ந்திருக்கக்கூடிய விருப்பம் ஈர்ப்புவென எதுபற்றியும் எம்மா அவளுடன்  என்றும் பிரஸ்தாபித்ததில்லை. அதுமாதிரியான இணக்கங்களை அனுமதித்துவிடாத ஒரு தொழிற்சாலையின் நடைமுறை விதிகளினால் மறைக்கப்பட்ட அவ்வுணர்வுகள் தெறிக்கும் கணங்களில் உருக்கொள்ளும் அனுமானங்களும், உள்ளே அசைந்து திரியும் வதந்திகளும் விசை கொள்கிறபோது லட்சுமியே எம்மாவிடம் கேட்டிருக்கிறாள். சிரிப்புக்கான விஷயம்போல் பாவித்து எம்மா அதற்கு 'ஒன்றுமேயில்லை, குழம்பாதே'யென பதிலளிக்கவும் செய்திருக்கிறாள்.
      ஆனால் லட்சுமிக்கு இப்போது மறுபடி சந்தேகம் வந்திருக்கிறது, எம்மா அந்த வதந்திகளுக்கும், உருத் தோற்றங்களுக்கும் பின்னாலுள்ள உறவின் உண்மையை தன் சிரிப்பால் போர்த்து மறைத்துவிட்டிருந்ததாக.
      முதல்நாள் வெள்ளிக்கிழமை தொழிற்சாலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நடந்த அச்சம்பவம் குறித்து லட்சுமியின் நிலைப்பாடு அவளுடைய சிநேகிகளுடையதைவிட, குறிப்பாக மணியக்கா மற்றும் வர்த்தினியினதைவிட, வேறாகவே இருந்தது. ஏதோ தமக்குள்ளான ஒப்பந்தத்தை எம்மா மீறினாள்போல வெடித்துச் சினந்து சண்முகநாதன் எம்மாவைத் தூற்றியதற்காக அவள் அவனைக் கோபிப்பாளே தவிர,  எம்மாவை அல்ல.
      எம்மாமீதான அவளது கோபமெல்லாம், அவ்வளவு கொதிநிலை அடையும்படியான உண்மையொன்று அதில் இருந்திருந்தும், தன்னிடத்தில் அதை முற்றுமாய் மறைத்திருந்தாளே என்பதில்தான்.
      வேலை முடிந்து வீடு திரும்பியவளுக்கு செய்ய நிறைய வேலைகளிருந்த கவனத்தைமீறி அன்றைய வேலைத்தல சம்பவத்தைச் சுற்றியே மனது அலைந்துகொண்டிருந்தது.
      சண்முகநாதன்மீது அவளுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. தொழிற்சாலையில் பத்து வருஷங்களாக வேலை செய்யும் அனுபவத்தை,  ஒரு முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளும் மற்ற ஆண்கள் போலன்றி, அதிகமாக பெண்களே வேலைசெய்யும் அத் தொழிற்சாலையில் அவன் கண்ணியமாக நடந்துகொண்டான்.
      நெருங்கி வேலைசெய்ய நேரும் இருபாலார் உடல்களிலும் அவ்வாறான தொழிற்கூடங்களில் ஒரு சபல அலையின் வீச்சுக்கு எப்போதும் குறைவிருப்பதில்லை. அதன் அதிர்வலைகள் எப்போதாவதெனினும் தம்மிருப்பை வெளிப்படுத்தவே செய்கின்றன. இறுக்கமான நெருக்கமொன்று அவர்களுக்குள் இருக்கிறதோவென்ற சந்தேகம் பலருக்கும் ஏற்கனவே இருந்திருந்தது. அவர்கள் அதில் நிச்சயம்கொண்டு  சிரிக்கும்படியாகவே அன்றைய சம்பவம் நடந்திருந்தது. ஆனால் லட்சுமியோ திகைத்து நின்றிருந்தாள். அந்த விஷயம் அவளுக்கு லேசானதில்லை.
      சின்ன விஷயங்களுக்குக்கூட வெடித்தெழும் இயல்புகொண்டவள் எம்மா. அங்கே வேலைசெய்ய வந்த அத்தனை சிறிய காலத்துள் அவள் பலபேரோடு வாக்குவாதப்பட்டு கதைபேச்சுக்களை அறுத்திருக்கிறாள். அது அன்றுவரையிலும்கூட சிலரோடு தொடர்ந்துகொண்டிருக்கிறது. கனடா வந்த ஆறு ஆண்டுகளில் செய்த பத்து வேலைகளில் ஒன்பதன் இழப்பு, முன்பின் யோசியாது அநீதியான எதையும் தூக்கியெறிந்து அவள் வெடித்ததின் காரணமாகவே சம்பவித்தது. அதில் பாதிக்குமேல் மற்றவர்களுக்கானதாகவே அவை இருந்தன. ஆனால் அன்று அந்தளவு கடூரமான வார்த்தைகள் தன்மேல் எறியப்பட்டபொழுதில் வெப்ப வலயத்தில் ஒரு மெழுகுச் சிலையின் உருகுநிலைக்கு முன்னான ஸ்திதியில் தகதகத்துக்கொண்டு தன் ஆளுமை சிதைய மௌனமாய் எம்மா நின்றிருந்தாளே, ஏன்? அவனும் அவ்வாறான வெடிப்பைக் காட்டுமளவு உள்ளுள்ளாகவேனும் ஒரு பாத்தியதையை சுவீகரித்தவனாய்த்தான் தென்பட்டிருந்தான். அவனது வெடிப்பும் அவளது மௌனம்போலவே கதைகளைப் பின்புலத்தில் கொண்டிருந்ததின் சாட்சியமென லட்சுமி எண்ணினாள்.
      புதிர்கள் விளைந்துகொண்டிருந்தவளின் மனத்தில் இன்னொரு முகம் தோன்றியது. அடித்த அந்தப் புயலில் மேற்பார்வையாளருக்கு என்ன பங்கிருக்கிறது? அவள் அதை நினைத்தே ஆகவேண்டும். ஏனெனில் அவன் எம்மாவின் வேலைகளில் அதிகமாகவும் குற்றமே கண்டுகொண்டிருந்தவன். அவளது வேலை நிரந்தரத்தை அதனால் கேள்விக்கு உள்ளாக்கிக்கொண்டு இருந்தவன். இதற்குப் பின்னாலுள்ள இவன் கதை என்ன? இந்த மூவர் கதைகளின் மோதலா வேலைத்தலத்தில் அன்றடித்த புயல்?
      அன்றைய வெள்ளிக்கிழமை வழக்கமாக வேலைசெய்வதில் இல்லாமல் தூரத்து மெஷின் ஒன்றிலே வேலைசெய்யும் கட்டாயம் எம்மாவுக்கு நேர்ந்துவிட்டது. போகும்போது லட்சுமியைப் பார்த்து 'கஷ்ரம்! கஷ்ரம்' என்பதுபோல் தலையிலே தட்டி அலுத்துக்கொண்டுதான் அவளும் போயிருந்தாள்.
      சனி ஞாயிறு விடுமுறை கொண்ட அத் தொழிற்சாலையில் கிழமை நாளின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையின் கடைசி ஒரு மணி நேரத்தை மெஷின்களையும் வேலைத்தலத்தையும் துடைத்து துப்பரவுசெய்வதற்காக ஒதுக்கியிருந்தார்கள்.
      அன்று துப்புரவுப் பணிக்காக இரண்டு மணியளவில் மெஷின்கள் நிறுத்தப்பட்ட நிமிஷத்திலிருந்து எம்மா  எங்கும் பார்வையில் தட்டுப்படவில்லை. அவ்வாறான துப்புரவுப்பணியிலிருந்தான ஒதுக்கம் அவ்வப்போது மேற்பார்வையாளரின் அனுசரணையாளர்களுக்கு கிடைப்பதுதான்.
      தன்னுடைய மெஷினிலிருந்து எம்மா சென்றதில், அவளால் அதைத் தவிர்த்திருக்க முடியாதெனத் தெரிந்திருந்தபோதும், வெகுநேரமாய் கடுகடுத்துக்கொண்டிருந்த சண்முகநாதன், மெஷின்கள் நிறுத்தப்பட்டு வெகுநேரமாகியும் எம்மா காணப்படாததில், அவள் எங்கேயென்று ஒருமுறை லட்சுமியை வந்து விசாரித்துப் போனான். 'காணேல்லை. ஒஃபீசுக்கு போயிருப்பாவோ தெரியா' என பதிலளித்திருந்தாள் அவள். நேரமாகவாக அவன் தன்னிலை இழந்திருந்ததின் அடையாளமாக கூடவும், பக்கத்திலும் வேலைசெய்தவர்களோடெல்லாம் சண்முகநாதன் சினந்துகொண்டிருந்தான். 'சண்ணோட வேலைசெய்யிறது வலு சுகம்' என்று சொல்லிக்கொண்டிருந்த வர்த்தினிமேலேயே பலதடவைகள் வெடித்துப் பாய்ந்துவிட்டான். ஒருபோது அவள் அழுகையை அடக்கமுடியாமல் குலுங்கினாள்.
      மூன்று மணிக்கு சிறிதுநேரம் முன்பாகத்தான்  எம்மா மறுபடி அங்கே காணப்பட்டாள்.
      எம்மா கிட்ட வர, சண்முகநாதனின் பெருந்தொனி கூடத்தையே அதிர வைப்பதுபோல் வெடித்தெழுந்தது. வீடு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்த அத்தனைபேருமே திடுக்கிட்டுத் திரும்பினார்கள்.  
      அப்போது வேலைநேரம் முடிவதற்கு ஐந்து நிமிஷங்கள் முன்பான சமிக்ஞை மணி அலறியது. உறைவுநிலை கலைந்தவர்கள் மெல்ல வாசலைநோக்கி நகரத் தொடங்கினர்.
      வேலை முடிந்து செல்லும் நேரத்தில் பெண்கள் கூட்டத்தில் நின்று எப்போதும் கலகலத்துக்கொண்டிருக்கும் எம்மா, மின்னல் தாக்கிக் கருகிய மரம்போல இறுதி மணியொலிப்பைக் காத்தபடி உள்வாசலில் தனியே நின்றிருந்தாள்.
      அன்று பஸ் எடுக்க லட்சுமியோடும் அவள் கூடச் செல்லவில்லை. வீடு செல்ல அதிக நேரமெடுக்கும் மாறுதிசையில்  வந்த பஸ் எடுத்துக்கொண்டு அவளுக்கு முன்னாலேயே போய்விட்டாள்.
      அவளோடு உரையாடாமல் சில விஷயங்களில் தன்னால் எவ்வளவு யோசித்தாலும் தெளிவுபெற்றுவிட முடியாதென்பது லட்சுமிக்குத் தெரிந்தது. அது வெளிப்பார்வைக்குத் தெரிந்துவிடாத பல நுட்பங்களை உடையதாயிருந்தது.
      அவள் எம்மாவுக்கு போனெடுத்து மறுநாள்  தாங்கள் அவசியம் சந்திக்கவேண்டுமென்றாள்.
      ஆறு மணியளவில் சந்திக்க சம்மதித்தாள் எம்மா.
      மறுநாள் மாலை ஆறு மணியளவில் ரிம்ஹோர்டனில் இருவரும் சந்தித்தனர்.
      முதல்நாள் நடந்த  சம்பவத்துக்கு எம்மா அன்றைக்கும் அழுதாளா? அவ்வளவுக்கு அவளது முகம் நீண்டநேரம் அழுத அதைப்பு கொண்டிருந்தது. பாவம்தான்! அவ்வளவு மோசமான வார்த்தைகளைத் தாங்கிவிடுவது ஒரு வெள்ளைத் தோலிக்குக்கூட வலி நிறைந்ததாகவே இருந்திருக்குமென எண்ணினாலும், அவளைத் தேற்றுவதைப் பின்போட்டுவிட்டு தன் சந்தேகங்களைத் தீர்க்க முனைந்தாள் லட்சுமி. “நான் கேட்கப்போகிற கேள்விக்கு  வழக்கம்போல இன்று சிரித்துக்கொண்டு பதில்சொல்ல உன்னால் முடியாமலிருக்குமென்று எனக்குத் தெரியும். முன்பு ஒன்றோ இரண்டோ முறை  கேட்ட அதே கேள்விதான் இது. நீயும் பதில் சொல்லியிருக்கிறாய்தான். இல்லை இல்லையென்று நீ ஆயிரம் தரம் சொல்லியிருந்தாலும் இன்றைக்கு அந்தப் பதிலில் எனக்கு சந்தேகம் வந்திருக்கிறது. அதனால் எங்கள் நட்பை நீ கனம் பண்ணுகிறவளாய் இருந்தால் என் கேள்விக்கு உண்மையான பதிலைச் சொல்லு. நான் என்ன சொல்கிறேன் என்பதை நீ சரியாக விளங்கிக்கொண்டாயா, எம்மா?
               "ம்… கேள்.”
               "சண்மீது.. அதுதான் சான்… உனக்கு விருப்பமேதாவது இருக்கிறதா?”
      எம்மா கோப்பியைக் குடித்தபடி சிறிதுநேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள். எதிரே இருப்பவள் அவளது நெருங்கிய தோழி. அதே கேள்வியை அவ்வளவு அழுத்தமில்லாமல் முன்பு அவள் கேட்டபோது சிரித்து மழுப்பி அவளை சமாளித்ததுபோல் அன்றைக்கு முடிந்துவிடாதென்பதை எம்மாவால் உணர முடிந்தது. பலரினதும் ஊகங்களை ருசுப்பிப்பதும், பலருக்கு ஊகங்களை உருவாக்குவதுமான சம்பவமே முதல்நாள் நடந்திருக்கிறது. லட்சுமிக்கும் எந்தளவிலோ அது ருசுவாகியிருக்கிறது. அவளது பார்வை, இறுகிய முகபாவங்கள் எல்லாம் அதையே உறுதிசெய்துகொண்டு இருக்கின்றன. 'சரி, அந்தரங்கத்தைத் திறக்கிற நேரம் வந்துவிட்ட'தென எம்மா முடிவுபண்ணினாள். பின் ஆமென்று சுணக்கமாகத் தலையசைத்தாள்.
               "வெளிப்படையாகவே அவனிடம் இதைச் சொல்லியிருக்கிறாயா?”
      சிரிக்க வராதென்று தெரிந்தும் எம்மா ஒரு முயற்சி மேற்கொண்டாள். வராதுபோக தலைகுனிந்தபடி கோப்பிக் கப்பை கையில் பிடித்து தணிந்துவரும் அதன் சூட்டை உணருவதுபோல் உருட்டியபடி இருந்தாள். பின் பதிலை தலையசைத்தாள். இல்லை!
      "ஏன்? அவன் உன்னை விரும்புவது விரும்பாதது உனக்குத் தெரிந்திருக்கவில்லையா?"
      "தெரிந்துதான் இருந்தது. ஆனாலும் சொல்லவில்லை" என்று தொடங்கி தன் மனத்தை ஒரு நிறை பனிப் பொழிவின் கனதியோடு சொல்லிமுடித்தாள். ஒரு பிரசங்கதையே அவள் செய்ததுபோல் இருந்தது. இடையிட்ட லட்சுமியின் கேள்விகளுக்கும் வேகமறாது பதிலளித்தாள். ஒரு கட்டத்தில் உறவுகளின் விசித்திர சேர்மானங்களைச் சொல்லியதோடு எல்லாம் கொட்டப்பட்டுவிட்ட வெறுமையுடன் அவள் தணிந்தாள்.
      லட்சுமியால் நம்பமுடியவில்லை. ஒருவர்மீது ஒருவர் கொள்ளக்கூடிய அதிக விருப்பம், அதீத விருப்பம் ஆகியனவற்றின் இருப்பையே அவள் அப்போதுதான் அறிகிறாள். அவற்றின் அர்தமும் அவளுக்கு அன்றேதான் தெரியவந்திருக்கிறது. லட்சுமியின் மனமெங்கும் அதிர்வலைகள் பரந்தன.
      அந்த உரையாடல் இவ்வாறு இருந்தது:
               'சான் என்னை விரும்பியது எனக்குத் தெரியும், லக்சோ. வேலைசெய்ய வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே அதை நான் தெரிந்துகொண்டேன்.  எனக்கும் ஒரு விருப்பம் அவனது அணுகுதல்களில், ஆதரவான கதைகளில் இருந்ததென்பதை இனி நான் மறைக்கப்போவதில்லை. ஒரு வாரத்துக்குள்ளாக அந்த ஈர்ப்பு என்னில் தீவிரமாகியும் போனது. நம்பமாட்டாய், நான் கனவுகள் காணவே தொடங்கிவிட்டேன். கனடாவுக்கு நான் ஓடிவந்ததே அவனுக்காகத்தான்போல நான் உள்ளமெல்லாம் சிலிர்த்திருந்தேன். இருந்தும்  என் விருப்பத்தை வாய் திறந்து என்றைக்கும் நான் அவனிடத்தில்  தெரியப்படுத்தியதில்லை.'
               'ஏன்?'
               'ஏனென்றால், தன் விருப்பத்தை அவன் என்னிடத்தில் சொல்லாதிருந்தான். அவனே அதை என்னிடத்தில் முதலில் சொல்லவேண்டுமென்று நான் எதிர்பார்த்தேன்.'
               'அதிலென்ன வித்தியாசமிருக்கிறது?'
      'அவன் கல்யாணமாகாதவன். நான் கல்யாணமாகி ஒரு குழந்தையோடு இருக்கிறவள். சட்டப்படியான இணைவு என்ற எல்லையை நோக்கி நகராமல் ஒரு ஈர்ப்பு… ஒரு விருப்பம்… ரகசியமான சில ஸ்பரிசங்களோடுமட்டும் அடங்கிக்கொண்டு என்னால் இருந்துவிட முடியாது.'
               'இப்போதெல்லாம் அதிகமாகவும் சேர்ந்து வாழ்தல்தானே நடைமுறை… உங்கள் விருப்பம் அந்த எல்லைக்குக்கூட செல்லாதென எப்படித் தீர்மானித்தாய்?
               'என்னால் முடிந்திருந்தது, லக்சோ. ஒருசில வாரங்களிற்கு உள்ளாகவே முடிந்திருந்தது. அவனது கண்களிலும், உடம்பிலும் திமிர்த்த வேட்கையில் அதை நான் கண்டேன். அவனது அதீதமான விருப்பம், லக்சோ. என்னை அப்படியே விழுங்கிவிடுகிற… கபளீகரம் செய்துவிடுகிற… விருப்பமாய் அது இருந்தது. அது எதார்த்தத்தில் ஆழமாக ஆதாரம் கொள்ளாதது. இவ்வாறாக தொழிற்சாலைகளில் ஓய்வுநேர பொழுதுபோக்குப்போல சில அன்புகள் தலையெடுக்கும். அந்த அளவிகந்ததும் உடனடிச் சுகம் தேடுவதுமான விருப்பங்களை, ஒருவரையொருவர் முழுமையாகத் தெரிந்து உருவாகும் அளவான விருப்பங்களிலிருந்து வேறுபிரித்துக் காண ஒரு நம்பிக்கையான, நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கையை எதிர்பார்க்கும் எவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.'
      சொல்வதில் அவளது சிரமங்கள் வெளித்தெறித்து காட்ட முயன்றன. அதில் அவள் கரிசனம் கொஞ்சமும் கொள்ளவில்லை. வார்த்தைகள் தடுமாறியபடி விழுந்துகொண்டிருந்தன. 'அளவான விருப்பத்துக்கும் அதீதமான விருப்பத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை காதலுக்கும் காமத்துக்கும் இடையேயான வித்தியாசமாகத்தான் நான் காண்கிறேன். அவனுக்கு எனது முடிந்துபோன திருமண வாழ்க்கை, இப்போது நான் வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்க்கைத் தரம், எனக்கு குழந்தை இருக்கிற விஷயம், அதற்கு எட்டு வயதாகிறது… பள்ளி செல்கிறது… மூன்றாவது பாரம் படிக்கிறது… என்பதுபற்றிக்கூட ஒன்றும்   தெரிந்திருக்கவில்லை. தெரிந்துகொள்கிற முனைப்பும் அவன் என்றும் காட்டியதில்லை. இது எதுவுமே தெரிந்திராத ஒருவனின் என்மீதான விருப்பம் எதுவாக இருக்குமென்று நீ நினைக்கிறாய்? அந்த நிலையில் நான் உன்னைக் காதலிக்கிறேனென்று  ஓடிப்போய் என்னால் சொல்லிவிட முடியுமா, சொல்லு?
      வாசிப்புப் பழக்கம்கூட அவளிடம் பெரிதாக இருக்கவில்லை. அவள் அறிந்துகொண்ட அரசியலும் வெளியுலகும் சார்ந்த விஷயங்கள் அவளால் காட்சியூடகங்கள் மூலம் தெரிந்துகொள்ளப்பட்டவையே. இருந்தும் என்னமாதிரி மூடுண்டு கிடந்த ஒரு உணர்வின் வெளியை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டாள்!
      லட்சுமிக்கு அந்தத் திகைப்பிலிருந்து மீள வெகுநேரம் பிடித்தது.
      அவளது பார்வையில் தவறிய அம்சம் அது. ஆயினும் அவளால் விளங்கமுடியாத பகுதி இன்னும் அதில் இருந்தது. “அப்படியானால் தன்னை  விரும்புவதாக  அவன் எண்ணும்படி தொடர்ந்தும் நீ பழகியிருக்கத் தேவையில்லையே?
      அவள் தன்னைப்பற்றி நிறையவே யோசித்திருக்கிறாள் என்பது தெரிந்தது எம்மாவுக்கு.நீண்டநாளாய் வேலை செய்கிறவனும், திறமான வேலைகாரனுமான அவனோடு வேலைசெய்ய எனக்கு விருப்பமில்லையென நான் கூறிவிட முடியுமா, ம்? மேலும், அவன்மீதான விருப்பம் இன்னும் என்னுள் இருந்துகொண்டிருக்கிறதை எனக்கே நான் மறைத்துவிடுவது எப்படி?  அவனது உள் அறிந்த பின்னாலும் அவனிலிருந்து என்னால் முழுவதுமாய் ஒதுங்க முடியாதிருந்தது.”
               "சரி. அவ்வாறு இருக்கிறபோது சுப்பர்வைசருடன் ஏன் அந்தமாதிரிப் பழகினாய்?”
               "எந்தமாதிரி…?”
               "நெருக்கமாக நின்று… சிரித்து…”
               "அது ஒரு விஷயமா, லக்சோ? ஒரே இடத்தில் வேலை செய்கிறவர்கள் கதைப்பது, சிரிப்பது, கதைக்காமலிருப்பது, முகத்தைச் சிடுசிடுவென வைத்திருப்பதெல்லாம் எவ்வாறு ஒருவரின் விருப்பமோ விருப்பமின்மையோ ஆகமுடியும்? அவன் தொட்டுத் தொட்டுத்தான் என்னோடு பேசுவான், சிலவேளை நான்கூட அவனோடு அப்படித்தான் பேசியிருக்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, லக்சோ. ஆனாலும் அந்தச் சாதாரணமான செயற்பாடுகளை ஒரு திட்டமான நாடகமாகவே நான் புரிந்தேன். அப்படிச் செய்திருக்கக்கூடாதென்று இப்போது தெரிகிறது. ஆனாலும் வேறு வழியில்லை. அதுவொரு நிர்ப்பந்தம்.
               "யாருடைய நிர்ப்பந்தம்?
               "யாரினதுமில்லை. வாழ்க்கையின் நிர்ப்பந்தம். எவருக்கும் ஒரு வேலை அவசியமெனச் சொல்லிக்கொண்டிருக்கிற இங்குள்ள வாழ்க்கையின் நிர்ப்பந்தமே அது. அந்தவகையில் நான் இப்போது பார்க்கிற வேலை எனக்கு மிகமுக்கியமானது, லக்சோ. சம்பளம் ஒழுங்காகக் கிடைக்காத பல கம்பெனிகளிலே நான் வேலைசெய்து களைத்திருக்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் சம்பளத்தைப் பெற ஏஜன்ரின் அலுவலகம் போய் ஒன்றரை இரண்டு மணத்தியாலங்களென கால்கடுக்க  காத்து நின்றிருக்கிறேன். அந்த வாரச் சம்பளம் கிடைக்காமல் அடுத்த வெள்ளிவரை செலவுக்கு வழியில்லாமல்  சிரமப்பட்டிருக்கிறேன். நானே சில வேலைகளை ரோஷத்தில் தூக்கியெறிந்துவிட்டு மேலே வேலை தேடியலைந்து சலிப்பேறியிருக்கிறேன். உனக்கு இந்தமாதிரி அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா, லக்சோ? அவ்வாறு நான் நொந்துபோயிருக்கிற நேரத்தில்தான் இந்த வேலை எனக்குக் கிடைத்தது. சானுக்கு விருப்பமில்லையென்று சுப்பர்வைசருடன், அவனது நோக்கம் தெரிந்திருந்தாலும், கதைக்காமலும் முரண்டிக்கொண்டும் இந்த வேலையை என்னால் தக்கவைக்க முடிந்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஆறு மாதங்களாகியும் கிடைக்காத வேலை நிரந்தரம் வரப்போகும் இந்தக் கோடை விடுமுறையோடு கிடைக்கவிருக்கிற சமயத்தில் அப்படியொரு முறுகல் நிலை ஏற்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். நான் விரும்பவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னரே கிடைத்திருக்கவேண்டிய வேலைநிரந்தரம் விலகிப்போனதற்கு நான் அவனது அணுகுமுறைக்குக் காட்டிய எதிர்ப்பே காரணமென்பது யாருக்குத் தெரியும்? அதனால்தான் சான் விரும்பமாட்டானென்று தெரிந்திருந்தும் சுப்பர்வைசருடன் அந்தமாதிரி நடந்துகொண்டேன். நிரந்தரமான ஒரு வேலை… திட்டமான ஒரு சம்பளம்… இவற்றின்மீதுதான் இங்கே ஒரு வாழ்க்கை எவருக்கும் உழன்றுகொண்டிருக்கிறது, மறந்துவிடாதே.
      லட்சுமியால் அவளை இப்போது ஓரளவு புரிய முடியும்போல இருந்தது. ஆனாலும் இன்னும் ஒரு புதிர் அங்கே இருக்கிறது. “சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால் தொடர்ந்தும் ஏன்  சுப்பர்வைசர் கோபம் கொள்கிற அளவுக்கு சானுடன் பழகவேண்டும்? உள்ளுக்குள்ளே விருப்பமிருந்தது என்றுமட்டும் சொல்லிவிடாதே."
      எம்மா லட்சுமியைப் பார்த்தபடி சிறிதுநேரம் இருந்தாள். பிறகு, "ம்…" என்று தன்னைச் சுதாரித்தாள். "சொன்னால் நம்பமாட்டாய். அதன் உண்மை என்னவென்றால் அந்த இருவரின் அபிமானமும் எனக்கு அவசியமாயிருந்தது."
      இப்போது லட்சுமியில் சிறிது கோபமேறத் துவங்கியது. ஒருவரது சுயாதீனத்தில் இந்தவகை மிக அருவருப்பானது. அவளால் ஒப்புக்கொண்டுவிட முடியாதது. அதை எம்மா உணர்ந்திருந்தாளா? அவள் கேட்டாள்: "இருவரையும் விரும்புவதாகக் காட்டிய உன் நாடகம் உண்மையில் தரக்குறைவானதாகவும், சான் அந்தமாதிரி உன்னைத் திட்டித் தீர்ப்பதற்குக் காரணமானதாகவும் இருந்ததை நீ எதுவுமாக நினைக்கவில்லையா, எம்மா? உன் குணநலம் நேற்று மிகவும் கேவலமாக நிந்தைப்படுத்தப்பட்டது என்பதையாவது நீ உணர்கிறாயா?”
      எம்மா யோசித்தாள். சிறிது கோப்பியை உறிஞ்சினாள். பிறகு  பலஹீனமாகச் சிரித்தாள். ஒருவர் கொண்டிருக்கக்கூடிய மொத்த அவலத்தினதும் பருண்மையாக அது தோன்றியது லட்சுமிக்கு.
      பின் தனது மௌனமுடைத்து சொன்னாள்: நான் அவன்மீது செலுத்திய விருப்பத்தின் பரிசாக அதைக் கொள்வதைத் தவிர வேறு நான் என்ன செய்யமுடியும்? ஒருவிதமான தேவையின் அணுக்கமொன்று ஆரம்பத்தில் என்னிடத்தில் இருந்திருந்தாலும், அவனை நான் தெரிந்துகொண்ட கணத்திலிருந்து எல்லை கடவாததும், எல்லை கடக்க விடாததுமான ஒரு அவதானத்தில் நின்றுதான் பழகிக்கொண்டிருந்தேன். காயாகவோ பழமாகவோ முடியாத ஒரு பூவின் மலர்வாக அந்த அபிலாசை இப்போதும் அவன்மீது இருக்கிறதுதான். அது என் கனவென்று வைத்துக்கொள்ளேன். மனிதர்கள் கனவு காணக்கூடாதா, என்ன? ஆனால் அந்த என்  மனவுணர்வை வெளிக்காட்டும்படி, அவனுக்குப் பிடித்த கேக் வகைகளாக வீட்டிலே செய்துவந்து கொடுக்காமல் இருந்திருக்கலாம்தான்இவ்வளவு காலமாக எந்த ஆண்சுகமும் இல்லாமல் வாழ்ந்துவிட்ட எனக்கு அது பெரிய காரியமாகவும் இருந்திருக்காது. ஒருவேளை அவனைக் கண்டு திமிறத் துவங்கிய என் ஆசைகள் அடங்க மறுத்து இருந்துவிட்டனவோ என்னவோ? மனம்கூட சொல்கிறபடி கேட்காத புதிர் கொண்டது, லக்சோ. எவரது மனதும்தான். அது மென்மையானதோ கடினமானதோ,  நுட்பமாகவே இருக்கிறது. எப்படியோ, அது என்னுடைய பிழையென்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததுதான். ம்…! தெரிந்தும்தான் அதைச் செய்தேன்."
      திடுக்கிட்டாள் லட்சுமி. "தெரிந்துகொண்டுமா செய்தாய்? என்னால் உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை, எம்மா." 
      "அது கஷ்டம்தான், லக்சோ. மனத்துக்குள் எவ்வளவு விகாசம் கொண்டிருந்தாலும் பாதி வாழ்க்கையைத்தான் நாமெல்லோரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதில் பாதியையேனும் சொல்ல எனக்கு மொழி இல்லாமல் இருக்கிறது. எஞ்சியதை எப்படியோ சொல்லித் தொலைக்கிறேன், சிரமப்பட்டென்றாலும் புரிந்துகொள், தோழி. உண்மையில் ஒரு தேவை…  ஒரேயொரு தேவைதான்… தொடர்ந்தும் என்னை அவ்வாறு இயங்க வைத்தது."
               "நிர்ப்பந்தம், அவசியமென்று சொல்லிச் சொல்லி எல்லாவற்றிற்கும் பணிந்து போய்விட்டாய்.  இப்போது ஒரு தேவைக்குப் பணிந்துபோனதாய்ச் சொல்லப்போகிறாயா?"
      "இப்போது பார், லக்சோ,  சுப்பர்வைசருடன் நான் சரஸமாகப் பழகத் துணிந்தேனென்றால், அதற்கு என்னிடமிருந்த ஒரே பலம் சான் அங்கே இருக்கிறானென்பதுதான். அவன் ஒருவகையில் எனக்கொரு பாதுகாப்பாக அங்கே இருந்தான். நிர்ப்பந்தங்களால் எவரும் என்னை அணுகமுடியாத நெருப்பு வளையமாக இருந்தான். தொட்டும் பட்டும் சிரித்தும் பேசுவதை நான் இளகிவிட்டேனென கொண்டுவிட்டாலும் சுப்பர்வைசர் நெருங்கமுடியாதபடி எல்லைக் காவலனாக அவன்தான் இருந்தான். உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் அதுதான் உண்மை. சானின் பலமும் உக்கிரமும்தான் இப்போதும் என்னை அங்கே காவல்செய்துகொண்டு இருக்கின்றன.
      நீண்டநேரமாயிற்று லட்சுமியின் உறைவு தெளிய.
      'வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானதென எவரும் பரவசப்பட்டுக்கொள்ளட்டும். ஆனால் அது பயங்கரங்களையும் கூடவே கொண்டிருக்கிறது. அதை மிக அவதானமாக வாழ்ந்து கழிக்கவேண்டிய நிலைமைதான் எல்லோருக்கும் இருக்கிறது. எனக்கோ எம்மாவுக்கோ எம்போன்ற வேறு பெண்களுக்கோ அது இன்னும் சிக்கலானது. மேலும் சிக்கலானது ஒரு தனித்தாய்க்கு. அவள் ஒருவகையில் வேரில் பழுத்த பழம்போல நினைக்கப்பட்டு விடுகிறாள். உறவுக்கு ஏங்கும் உணர்ச்சிகளின் சாத்தியம் அவளை எவரின் இலக்காகவும் ஆக்கிவிடுகின்றது.'
      ஒரு புரிதலின் அமைதி லட்சுமியில் விழுந்தது.
               "என்ன, லக்சோ, பேச்சைக் காணவில்லை?"
               “ம்உன்னுடைய அந்தத் தேவைதான் மூலப்பிரச்னையாய் எல்லாக் குழப்பங்களையும் உள்ளடக்கிக்கொண்டு இருந்திருக்கிறது. நேற்றைய ரஸாபாசம் அதன் ஒரு விளைவுதானே? ஒரு அவசியத்திலானதாக உன் நடத்தையை ஏற்கமுடியுமாயினும், நானே அவ்வாறு என்றைக்கும் ஒழுகிவிடமாட்டேன் என்றுதான் எனக்குத் தோன்றுகிறதுஎன்றாள் லட்சுமி.
      சிறிதுநேரம் கோப்பியைக் குடித்தபடி எம்மா இருந்தாள்வெளியே சென்றுவர அந்தரம்பட்டவள்போல் தோன்றினாள். கோப்பியின் பின் அவளுக்கு சிகரெட் புகைக்கவேண்டியதாலாய் அது இருக்கலாம். ஆனாலும் இன்னும் அமர்ந்திருந்தபடியே சொன்னாள்: “நீ சொல்வது சரிதான். பெரும்பாலான இந்தியப் பெண்களால் அவ்வாறெல்லாம் நடந்துவிட முடியாது. ஏற்றுக்கொள்வதே பலருக்கு கஷ்ரமாக இருக்கும். ஆனாலும் இதை எம்மாவாகிய என்னுடைய தேவை என்பதாக இல்லாமல், ஒரு பெண்ணுடையதாக  உன்னால் பார்க்கமுடிந்தால் நீ இன்னும் தெளிவடைந்துவிடுவாய். அவ்வாறு நான் செய்யாது விட்டிருந்தால் அந்த இரண்டு பேரில் யாராவது ஒருவனால் வெறும் பெண்ணுடலாய் நான் பாவிக்கப்பட்டிருக்கும் அபாயமும் நேர்ந்திருக்கலாம். சிலவேளை இரண்டுபேராலுமே. வாழ்வின் தேவையை நிறைவேற்றச் செல்கையில்  ஒரு பெண்ணாய் என் தப்புகைக்கான வழி எனக்கு இதுவாக இருந்துவிட்டது. அவ்வளவுதான். தனித்தாயாய் வாழும் ஒரு பெண்ணைநோக்கிய இந்தவகை அபாயங்களை எது செய்து சமாளித்தால்தான் என்ன, ம்?
      இனி அதுபற்றிப் பேச எதுவுமில்லைப்போல் இருவரிடையிலும் ஒரு நிறைவின் மௌனம் விழுந்தது.
000

 நன்றி: தீராநதி, அக். 2018

Tuesday, September 18, 2018

'தனிமனித அவலத்தின் நினைவுகள்
கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.'
பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…
-தேவகாந்தன்-மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே 'பதுங்கு குழி நாட்கள்' தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு 'சரமகவிகள்' வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். 'அம்மை' தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது.

      'அம்மை' தொகுப்பை புரட்டியதுமே என் மனத்தில் ஞாபகமானது சோ.ப.வின் 'தென்னிலங்கைக் கவிதைகள்' மொழிபெயர்ப்பு நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்த 22 பக்க முன்னுரை.  'அம்மை'யிலும் கீதா சுகுமாரனின் அதைவிட நீண்ட பின்னுரையொன்று இடம்பெற்றிருக்கிறது. பா.அகிலனின் மூன்று கவிதைத் தொகுப்புகளினையும் உள்ளடக்கி பல தளங்களினூடாகவும் அலசிய ஆய்வு அது. எனினும் பின்னுரையின் தேவை பின்னாலேதான் ஏற்படுகிறது. அப்போது 'அம்மை' கவிதைகள் குறித்து வாசகன் இன்னும் கூடுதல் வெளிச்சம் பெறுகிறான்.

       ஈழக் கவிதையாக வரலாற்றின் அடுக்கில் வைத்தும், இதிலிருந்து கிளைத்த புலம்பெயர் கவிதையென்ற புதிய வகையினத்துடன் ஒப்பவைத்தும், தமிழ்க் கவிதையானதால் தமிழக கவிதைகளுடனும் 'அம்மை' நோக்கப்படலாம். அது 'அம்மை'பற்றிய அகல்விரிவான ஒரு பார்வையைத் தருமென்பது மெய்யே. ஆனாலும் கவிதையென்ற ஒற்றைத் தளத்தில் இது அடையக்கூடிய பேறுகள் முக்கியமானவை. அதனால் இவ்வொப்பீடுகளின் கவனிப்பு அகன்றுவிடாதவாறு கவிதையின் நயம் காண்பதே எனது எண்ணம்.
     
      நாற்பத்திரண்டு கவிதைகளைக்கொண்ட 'அம்மை' இருபத்தொன்பது கவிதைகளைக் கொண்ட 'காணாமற் போனாள்' என்றாகவும், மீதி பதின்மூன்று கவிதைகள் 'மழை'யென்றாகவும் அமைவுபெற்றிருக்கின்றது. ஆயினும் துல்லியமாய் வித்தியாசப்படும் பொருள்களைப் பேசுகிற கவிதைகளை இவை கொண்டில்லை. ஒரே விஷயத்தை அடிநாதமாய்க்கொண்டு வெவ்வேறு கதிகளிலும் ஆழங்களிலும் பேசுகிறவையாகவே அவை பெரும்பாலும் இருக்கின்றன. வேறுவேறு உணர்ச்சிகளைப் பேசுகிற கவிதைகளை தொகுப்பு உள்ளடக்கியிருப்பினும் அவை 'மழை'யென்கிற இரண்டாம் பகுதியிலேயே அதிகமாயும் உள்ளன. இந்த இரண்டு வகைக் கவிதைகளுக்கிடையிலும் கவிதைநிலை சார்ந்த வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அது அவை வெளிப்படுத்தும் கருத்துக்களின் காரணத்தாலாகும்.

      தனதும், பிறரதுமான போர்க்கால அனுபவங்களிலிருந்து சுழித்தெழுந்த இத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் ஊற்று மன உடல்ரீதியாக அடைந்த அவலங்களினதும் வடுக்களினதும் மய்யத்திலிருந்தே பீரிட்டெழுகிறது. கைகால்கள் போன்ற பொறிகள் மட்டுமில்லை, புலன்களும்கூட இழக்கப்பட்டன. மிகக்கொடூரமான மனித அவலம் சம்பவித்தது. ஆனால் அந்த அவல உணர்வுகள் மீளுதல் சாத்தியமற்ற நிர்கதியின் இருளாய் உறைவடைந்து மேலும் பகுக்கக்கூடிய திண்மமாய் 'அம்மை' கவிதைகளில் மாற்றம் பெறுகின்றன.

      போர்க்கால அவலங்களில் அமிழ்ந்துகிடந்து அவற்றின் உடலியற் துன்பங்களையும், மனோவியல் பாதிப்புகளையும் பொதுவில் பேசுகிற நிலையொன்று இருக்கிறது. இது வெளிப்படையானது. இன்னொன்று, தன்னை அவலத்தின் பின்னால் மறைந்திருந்துகொண்டு குரல்மட்டும் கொடுத்துக்கொள்கிற ஒரு நிலை.

      ஒரு போர் மனித மனநிலையில் விளைக்கும் சிதைவுகளை  அவல(Trauma)மென்ற ஒற்றைப்படைச் சொல்லில் அடக்கிவிடுவது எப்போதும் சரியாவதில்லை. அது உடம்பில் ரணமாக, மனத்தில் திகிலாக எப்போதும் பாதிக்கப்பட்டவரின் சகல உணர்வுகளையும் இடைஞ்சல் படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வகை அவலத்தின் அனுபவமாய்த் திரளும் நினைவு அவரை மெல்லமெல்லத் தின்று தீர்த்தும்விடுகின்றது. வெற்றியின் உவகையும், தோல்வியின் வடுவும் தம்மை இனங்காட்டுகிற புள்ளி இது.

      மனத்தையும் நினைவையும் இங்கு வேறுபடுத்திப் பார்க்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவை இரண்டு விதங்களில் தொழிற்படுகின்ற காரணத்தால் இந்தப் பகுப்பு அவசியமென்று தோன்றுகிறது. நினைவு தனிமனித நிலையின் அம்சமாய் துக்கம், வலிகளைச் சுமந்துகொண்டு இருக்கிறவேளையில், மனம் ஒரு கட்டத்தில் கூட்டுச் சமூகநிலையின் கோலம் கொண்டுவிடுகிறது. அது ஞாபகங்களாலல்ல, கருதுகோள்களாலும் கனவுகளாலும் கட்டமைக்கப்படுகிறது. அப்போது தனிமனித அவலத்தின் நினைவலைகள் கூட்டுமனநிலையில் அவமானத்தின் எரி வடுக்களாக உறைக்கின்றன.

      இந்த வேற்றுமை 'அம்மை' தொகுப்பில் பகுதியாகப் பிரித்துப் பார்க்குமளவு அவ்வளவு தெளிவற்றவைதான். ஆனாலும் அவை இத் தொகுப்பில் இருக்கின்றனவென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

      இவற்றுக்கான உதாரணக் கவிதைகளினை நூலிலிருந்து காணவேண்டும்.

நிலக்காட்சி: இரணைப்பாலை

அப்புறம் பிணக்காடு
தசையொட்டிய சுவர்கள்
இரத்தச் சூடடங்கா அவயவத் துண்டுகள்

ஏவுகணைகளின் பலவாய வெடிப்புகளுக்கு நடுவில்
உயிரைக் கையிற்கொண்டோடியபோது
நிலத்திருந்து நெடுத்து மறித்ததொரு குரல்

ஆடையிலா அப்பெண்ணின் மேலுடல் கண்டபோது
கீழுடலிலா வெற்றிடத்தில்
இரண்டேயிரண்டு எலும்பு நீளங்களைக்
கண்டேன், கண்டேன்.


தோற்றவர்கள் 02

இப்போது இங்கேயுள்ளோம்

கைகளின்றி உண்டு
கண்களின்றிப் பார்த்து
மரக்கால்களால் அடி நகர்ந்து

இங்கேயுள்ளோம்
உங்கள் பட்டொளிப் பதாகைகளின் கீழே
நாங்கள் தான் அது

இங்கேயுள்ளோம்
உமது குடையின் கீழ்
ஆறாப் புண்களின் சீறுஞ் சீழ் மேல்
வாரி நெருப்பை விடாதிறைத்தபடி

மிக நிமிர்ந்து
உம்மைப் பார்த்தபடி
நாங்கள் தான் அது

தோற்றுப் போனவர்கள்.

      இந்த இரண்டு கவிதைகளிலும் முதலாவதான 'நிலக்காட்சி: இரணைப்பாலை'யில் காட்சியின் அவலம் வரிவடிவங்களாய் எழுந்திருக்கையில், இரண்டாவதான 'தோற்றுப்போனவர்கள் 02'ல் யுத்த முடிவில் எதிர்கொண்ட நம்பிக்கையின் தகர்வும் தோல்வியின் அவமானமும்கொண்டதாய் எழுத்துக்கள் நிமிர்ந்திருக்கின்றன.

      முதலாவதுவகைக் கவிதையின் பாடுபொருளான அவலத்துக்கு இலங்கைக் கவிதை மரபில் சற்றொப்ப முப்பதாண்டுகளுக்கு மேலான வரலாறுண்டு. இரண்டாவது வகையினம் 2009இன் இறுதி யுத்தத்துக்குப் பின்னான காலத்தினைப் பாடுபொருளாகக்கொண்டு எழுந்திருக்கிறது. சமகால இலங்கைக் கவிதைகள் அவலத்தினைப் பாடுபொருளாய் நீண்டகாலம் கொண்டுவிட்டனவென்ற அயலகக் குரலின் பின்னணி இங்கே இருக்கிறது. அதுவே எதார்த்தமாக, அதுவே வரலாற்றுக்குத் தேவையான பதிவாக உள்ளபோதும் கவிதை வாசகன் ஒரு நீண்டகாலத்தை அவ்வாறான அனுபவப் பகிர்வில் அயர்ச்சி அடைகிறான். அது அத்தனை காலத்தில் சுதாரித்து மேலெழுந்து தன்னை நிறுதிட்டப்படுத்தி இருக்கவேண்டும். சுதாரிப்பதோடு மேல்வீழ்ந்த அவலங்களையும் வடுக்களையும் ஒரு தத்துவார்த்தப் புலத்தில் பொருத்தி காரண காரியங்களை வகுத்துப் பார்த்திருக்கவேண்டும். இந்த இரண்டும் ஈழக் கவிதைப்புலத்தில் நிகழவில்லை. அது துர்பாக்கியமானது.

      தொகுப்பிலிருக்கிற முதலாவது பகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகளின்  பண்பும், இரண்டாவது பகுதியின் சில கவிதைகளின் பண்பும் இந்த வரையறைக்குள் அடங்குகின்றன. ஈழக் கவிதைகளை இந்த இடத்தில் வடக்கு, கிழக்கென்று அவை வெளிப்படுத்திய அர்த்தங்களின் மேலாய் இரண்டாகப் பிரிக்க முடியும்போல் எனக்குத் தோன்றுகிறது. யதார்த்தன், யாத்ரீகன், துவாரகன், மயூரரூபன், சிந்தாந்தன், தானா விஷ்ணு, தீபச்செல்வன், கருணாகரன் போன்றவர்களது கவிதைகளில் அவலத்தின் குரல்  பேரலையாய் எழுந்துகொண்டிருந்த பொழுதில், கிழக்கிலே அனார், நவாஸ் சௌபிபோன்ற கவிஞர்களின் குரலில் அவலத்தின் பின்னால் அதற்கான காரிய காரணத் தேடலும் இருந்திருந்தது. இது ஒரு திரவநிலைத் தோற்றம். அறுதியாக அவ்வாறான ஒரு கோட்டை கிழித்துவிட முடியாதுதான். வடக்கின் பல கவிஞர்களது குரலில் பல புலம்பெயர் கவிஞர்களது குரலில்போல் யுத்தத்தின் எதிர்ப்புக்கூட இருந்திருக்கிறது. ஆனால் வடக்கினதும் கிழக்கினதும் கவிதை நிலைகளைப் பிரித்துப் பார்க்கிறபோது அப்படியில்லையென்று அதை  மறுத்து சமர்ப்பிக்க வலுவான நியாயங்கள் இல்லை.

      ஆயினும் அதைக் குற்றமென்றோ குறையென்றோ சொல்லிவிடவும் முடியாது. நீண்ட காலத்துக்கும் ஒலிக்கக்கூடியதான பெரும்பாதிப்பே அவர்கள்மீது வந்து விழுந்ததென்பது நிஜம். சமூகத்தின் இந்த கூட்டு மனநிலையின் வெளிப்பாடு அதன் அடுத்த கட்டமாக ஒரு செயற்பாட்டுத் தளத்தை அடைகிறபோதுதான் ஒரு மாற்றத்தை கவிதை காணமுடியும். இப்போதுள்ள முழுவதுமாய் வீழ்ந்துள்ளதான நிலை, கவிதையிலாவது அதன் அடுத்த கட்ட வாழ்வியக்கமாக உருக்கொண்டிருக்கவேண்டும். உடனடி நிவாரணியொன்று கண்டடையப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

      காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் எந்த அழிவின் அம்சத்தைவிடவும் நீண்டகாலத்துக்கு மனதைத் தொடரக்கூடியது. 'அம்மை'யின் முதலாம் பகுதியின் பெரும்பாலான கவிதைகளின் சோகம் இந்தப் பொருளிலிருந்தே குரலெடுக்கிறது. அதன் தலைப்புகூட 'காணாமற் போனாள்'. இது ஒருவகையில் மனவடுவையும் மீறி சம்பந்தப்பட்டோரை சிதறச் செய்துவிடுகிற ஒரு அம்சம்தான். உயிரோடு உடம்பையும் இழத்தலென்பது கொடுமைகளின் உச்சம். அதேவேளை இருப்போரின் வாழ்வும் முக்கியமானதென்பது நமது புரிதலாக இருக்கவேண்டும். வாழ்வு நந்தவனத்து ஆண்டியிடத்துக் கிடைத்த தோண்டியாகவே எப்போதும் இருந்துவருகிறதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

      இத்தகைய மனவடு அழுத்தம்பெற்று மேலே செல்லச் செல்ல பித்தாக மாறிவிடுகிற ஒரு புள்ளியிருக்கிறது. தொகுப்பின் இரண்டாம் பகுதியின் சில கவிதைகளில் பித்தக நிலைகொள்ளும் தன்னிலைகளைக் காணமுடிகிறது. அதேவேளை, அதைக்கடந்தும் சூன்யத்தின் பித்துநிலை கொள்கிற தன்னிலைகளும் இங்கே உலவுகின்றன.

      'மழை' பகுதி மயக்கம் கொண்டுள்ளது. அது கார்முகிலிலிருந்து சொரியும் மழை மட்டுமல்ல, அனுதாபம், அன்பு என பொழியும் மழையாகவும் படிமம் கொள்ளக்கூடியது. மழையின் வறட்சியில் வனங்கள் எரிவதுபோல், அன்பின் வறட்சியில் மனங்கள் எரிவதைச் சில கவிதைகள் கோடு காட்டுகின்றன. 'கோடைமழை' கவிதையை அவ்வாறாக விரித்துக் காணமுடியும். 'தாமரைச்செல்வியை நினைதல் 01', 'மழை', 'மாமழை', 'மழைவேனில்' ஆகிய கவிதைகளும் படிமமாய் இன்னும் விரிந்த பொருள் தரக்கூடியவைதான்.

      உறவுகள்கொள்ளும் விசித்திர உணர்வுநிலைகளை சில கவிதைகள் விரிக்கின்றன. தன்னையும் தன் உறவையும் வேறுபடுத்திக் காணவியலா தூரத்திற்கு நகர்ந்து செல்பவையாயும் இவற்றில் சில உள. இது இன்னொரு வகையான பித்தகநிலை.

உருக்குலைய இனியேதும் இல்லையென்ற போதிலும்
மனத் தசைகளில் கீறிய சித்திரங்களைப் பார்த்து
வியந்து சிரித்துப் பரிகசிக்கிறேன் நான்
அவள் ஒரு பித்தனைக் காண்கிறாள்
என்ற அடிகளில் (பெரிடப்படவில்லை 01) முன்னதற்கான உதாரணமுண்டு.

நானற்றேன்
நீ மட்டும் எஞ்சினாய்;
நீதான் நானில்லை இது என்றாய்

ஒர் குளிர் வாடை வீசியடங்கியது

நானுமில்லை நீயுமில்லை எனில்?
தேகக் கோதுடைத்து
திரண்ட எண்ணவெளி நின்றவர் யார்?
என்ற வரிகளை (தாமரைச்செல்வியை எழுதுதல்) இரண்டாவதற்கான எடுத்துக்காட்டாகவும் சொல்லல்கூடும். 'அவன் தேவதைகளைக் கற்பித்தான்\ விநோதனானான் \ வேறொரு உலகத்தை விரித்துப் படுத்தான்' (மழைவேனில்) இறுதியானதற்கு எடுகோள்.

      இந்த மூன்று எடுத்துக்காட்டுகளுமேகூட இரண்டாவது பகுதியான மழையிலேயே வருகின்றன.

      எந்த ஒரு எழுத்தும் மௌனமாகக்கூட இருக்கும், ஆனால் அரசியலற்று இருந்துவிடாது எனச் சொல்லப்படுகிறது. பிரதியைக் கட்டுடைத்தல் செய்கிறபோது வெளிப்படுவது ஆசிரியனின் அரசியல்தான். அதுதான் எவ்வாறு அவாவாகத் தொழிற்பட்டுள்ளதென்பதை விளக்கமாய்க் காட்டுகிறது. அரசியலொன்றும் விலக்கப்பட்ட கனியல்ல, உரைநடைக்குப்போலவே கவிதைக்கும். ஆனாலும் உரைநடையைவிட கவிதையில் அரசியல் மிகுந்த உக்கிரத்துடன் வெளிவரும்; ஒளித்துவைத்தபோதும் தன்னை அடையாளம் தெரியும்படி வெளியே தலையை நீட்டும். இக்காரணம் சுட்டியே கலகக்காரக் கவிஞர்கள் அரசின் இரும்புக் கரம்கொண்டு எங்கெங்கும் நசுக்கப்படுகிறார்கள்.

      ஆக, உள்ளோடிய அரசியலாக இருப்பதுமட்டுமல்ல, வெளிப்படையான அரசியல் பேசுவதாகக்கூட பிரதி இருக்கட்டும். 'என் எழுத்துக்களுக்கு ஒரு கூர்மையான சிறுபான்மை அரசியலுண்டு என நினைக்கிறேன்' என்ற பா.அகிலனின் கலைக்கொள்கைப் பிரகடனத்தில் (பின்னுரை பக்:63)  தயக்கம் தெரிகிறது. அது தேவையில்லை. அதில் அரசிலுண்டுதான். அவரது அரசியலை அவர் பேசுகிறார். ஆனாலும் வரலாற்றுப் பதிவெழுத்துக்களின் சாங்கம் கவிதையின் கழுத்தை நசிக்குமளவு அனுமதித்துவிடாதிருந்தால் சரிதான்.

      இலங்கையில் தங்கியிருந்த கவிஞர்களுக்கு மட்டுமே 2009இன் பின்னான காலத்தினை அச்சொட்டாகப் பாடும் வாய்ப்பு கூடியிருக்கிறது. இது புலம்பெயர் கவிஞர்களுக்குச் சாத்தியமில்லை. அவை இயக்க முரண்களையும், யுத்தத்தின் அழிவுகளையும் அவலங்களையும் நிலமிழத்தலையும் அலைந்துழல்வையும் பாடியதுபோல் இறுதியுத்தத்தின் அழிவுகளையோ அவலங்ளையோ விளைந்த ஆறா வடுக்களையோ உரைத்தல் கூடிவிடாது. தமிழக நிலைமையோடும் ஈழத்தின் இந்தவகைக் கவிதைகளை ஒப்பிட்டு எழுத்திவிடுதல் சாத்தியமில்லை. ஆயினும் கவிதைத்தனத்தில் சில கவிதைகளோடு உள்ளுள்ளாகவேனும் மனம் ஒப்பீட்டில் முனைவது தவிர்க்க முடியாதது.

      கவிதையே மொழியின் உயர்ந்தபட்ச சாத்தியத்தின் அடைதலெனக் கூறுகிறார்கள். அதை நவீனகவிதையாய், புதுக்கவிதையாய் பரந்த தமிழுலகு கண்டுகொண்டிருக்கிறது. இன்றைய நவீன கவிதைதான், புதுக்கவிதையின் துளிர்ப்பு அறுந்து புதியவொரு தளத்தில் மிதந்துகொண்டு இருக்கிறதெனவும் கூறப்படுகிறது. இந்த வடிவ ஆய்வுக்குள் புகாமல் மேலோட்டமாய் ஓரிரண்டு ஒப்பீடுகளுடன் இதை முடித்துக்கொள்வது சிலாக்கியம்.

      தமிழ்நாட்டில் சமீபத்தில் எழுபத்தொரு கவிதைகளைக்கொண்ட எஸ்.சண்முகத்தின் 'ஈர்ப்பின் பெருமலர்' என்கிற தொகுப்பு போதிவனம் வெளியீடாக வந்திருக்கிறது. இதை அண்மையில் வெளிவந்த முக்கியமான கவிதைத் தொகுப்புகளிலொன்று என நான் எண்ணுகிறேன். இந்த எழுபத்தொரு தலைப்பற்ற கவிதைகளும் நீண்ட, இடைத்தரமான, சிறியவென பல அளவினதான இருக்கின்றன. தலைப்பற்ற கவிதைகள் இன்னுமின்னும் கூடுதலான அவதானிப்பை வாசகனிடத்தில் கோரிக்கொண்டு இருப்பவை. தன்னிச்சையாக முன்னனுமானமின்றி வாசகன் கவிதையுள் புக வாய்ப்பாக அமைபவையும். அது 'ஈர்ப்பின் பெருமல'ரில் கூடிவந்திருக்கிறது.

      இயல்பாகவே மரபார்ந்த சொற்களை ஓரளவு தன் பாவிப்பிலிருந்து ஒதுக்கிக்கொண்டு சீரிய, தீவிர சொல்லெடுத்து பிறந்திருக்கும் இக் கவிதைகள்  தலைப்புமற்ற வரிசை எண்களுமற்ற இந்த அடுக்கில் மேலும் இறுக்கத்தைச் சேர்த்துவிடுகின்றனவென்பது மெய்யே. ஆனால் அது உண்மையில் இறுக்கமல்ல, வாசகனின் முழுக் கவனத்தையும் கவிதைத் தலைவி தனக்கென கேட்பதாகவே கொள்ளவேண்டும். கரணம் தப்பினால் மரணம்போல, இங்கே கவிதை கவனம் தப்பினால் புதிர் என்றாகிவிடக்கூடும்.

      கவிதைகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் வெவ்வேறாயினும் அவை கட்டமைக்கும் கவிதையுடல் ஒத்த தன்மை கொண்டுள்ளதாய் நான் காண்கிறேன். பா.அகிலனின் கவிதைகளிலும் இந்த கவிதையிறுக்கம் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அது முன்னரே சுட்டிக்காட்டியதுபோல் இறுக்கம்கூட இல்லை, வாசகனின் முழுக் கவனத்தையும் அவாவி நிற்றலேயாகும். எஸ்.சண்முகத்தின் சொற்குதம்போல் பா.அகிலனதும் குறிப்பிடக்கூடியது. அது ஈழத்தில் மு.பொ. கொள்ளும் பிடிவாதமான கருத்துச் செறிவையும் கட்டிறுக்கத்தையும் (காலி லீலை) வேறுபட்ட இயல்பிலும், புழக்கத்திலும் ஆற்றும் செயற்பாட்டுத் தனம் கொண்டதாயிருக்கிறது.

வேறொரு நாளும்
இன்னும் பலநாளும்
பின்பொரு நாளும் வந்தனவாயினும்
'இழந்த நாளெல்லாம் திரும்பியேகா' என
இன்னொருவனிடம் இவனும்
இவனிடத்து அவளும் கூறினர் (பெயரிடப்படவில்லை 02) என்றும்,

பரந்து விரிந்த கூடங்களில் தனித்தலைந்தாள்
நட்சத்திரங்களின் வெற்றொளிமீது
தேய்ந்த நிலாமீது வெறுப்புக் கொண்டாள்
பனி அவள் துயர்மீது விடாது பெய்தது
பைத்தியமானாள் (சுதேஷனா) என்றும் வருகையில் சொற்செட்டுடன் கவிதை உருக்கொள்வதைக் காணமுடியும். சித்த இலக்கியத்தினின்று வெகுவாய் விலகிப்போய்விடாத தோற்றம் இது.

      'யானைச் சட்டை எனும் கவிதை' எனும் கவிதை தொகுப்பிலுள்ள 'அம்மை' கவிதையைவிடவும் விஷேசமானது. அது சுருங்கிய வரிகளில் எடுத்திருக்கும் விகாசம் பிரமாண்டமானது. சங்கக் கவிதைகளில் கண்ட பிரகாசமும் வரிகளில் வெடித்தெழுகிறது. அது இது:

யானைச் சட்டை எனும் கவிதை

மஞ்சளில் ஒரு ஊதா நிறத்து யானை
மேலே இன்னொரு கொட்டைப் பாக்குக் குருவி
குருத்துப் பச்சைப் புற்களில்
செந்நிறத்தும் நீலநிறத்தும் சிறுபூக்கள்
இருண்டு வரிகளிற் பயணஞ் செய்யும் நீரலைகள்

பெட்டியுள் இருக்கிறது இப்போதும்
நீ கழற்றி வீசிய
சிறு பராயத்து 'யானைச் சட்டை'.

இயக்கத்துக்கு ஓடி விட்டதை, இயக்கத்தால் பிடித்துக்கொண்டு போகப்பட்டுவிட்டதை, காணாமலாக்கப்பட்டதை, திருமணமாகிப் போய்விட்டதை, விரும்பியவருடன் ஓடிவிட்டதையென பல கதைகளை இந்த வரிகளின் ஊடுகளிலிருந்து புனைய முடியும். அத்தனைக்கு இவற்றினுள் பொதிந்திருக்கும் கதைகள் அனந்தம்.

      இந்தத் தொகுப்பிலுள்ள பா.அகிலனின் இன்னும் சில கவி விசேஷங்களை இனிக் காணலாம்.

      'யுத்த ஆடைகளின் மெய்யுருக்கள்', 'அம்மை', 'கோடை மழை'போன்ற ஒருசில கவிதைகள் தவிர மீதி யாவும் அளவில் சிறியன. உணர்வலைகளின் வீச்சைமட்டும் காட்டி பின்னணியை ஊகமாய்த் தெரிவிக்கும் திறன் அச் சீறடிப் பாடல்களுக்கு உண்டுவென நினைக்கிறேன். மேலும் இவற்றின் இன்னொரு சிறப்பம்சம் இவற்றின் இறுதி அடிகள்.

பின்னர் தரப்பட்டது குருதி காய்ந்தொட்டிய பிணம்
புதிதாகச் சூடிக் கொள்ளவென்றொரு பெயர்
முடிவடையாதவொரு கண்ணீர்த் தெரு (விதவைக் கவிதை 01) என்றும்,

நகரா நாட்களை நகர்த்தி
மரணத்துக்குக் காத்துக் கிடந்தாள் தாய் (ஒளிப்படத் தொகுப்பேடு) என்றும்,

எல்லாப்பொழுதும் என் பின்னால் யாரோ வருகிறார்கள்
ஒளித்து என்னை வைக்க ஓர் இடமுண்டா உலகத்தில்? (அவள்) என்றும்,

நேசமொன்றுக்காய்
வாழ்வெறிந்து மரணமேற்றுப் போனார்கள்
என்பது உன் சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளதா? (அன்ரிகனி) என்றும்,

அவள் சிற்றுடல் சுருண்டெழுந்து
விண்ணேறி
பத்ம வியூகத்துள் வீழ்ந்தபோது இருளுச்சியை அடைந்தது (சுபத்திரா) என்றும்,

அவன் பாவக் கடல் பெருகி
அவன் குரல் வாங்கியழித்து பாழில் மிதந்தது (விம்பம்) என்றும் வரும் ஈற்றடிகள் மிக நேர்த்தியாய் அமைந்து, சுள்ளிடும் ஒரு விசையோடு கவிதையை முடித்துவைக்கின்றன. சில இடங்களில் கவிதையே அந்த அடிகளுடன்தான் உயிர்பெறுகிறதென்றும் சொல்ல முடியும்.

      'கணவன் உயிர்வேண்டி போனாள்… போனாள் முடிவின்றிப் போனாளெ போனாள்' எனவும், 'இரண்டேயிரண்டு எலும்பு நீளங்களைக் கண்டேன்… கண்டேன்' எனவும் வருமிடங்கள்கூட இசை நிரப்பவல்ல, இந்த சுரீர் உறைப்பை விளைக்க சொல்லின் மீளுருக் கொள்வனதாகக் கருதமுடியும்.

      இந்தக் கவிதைகள் நேற்றுப்போல் இன்று இல்லை. புதிதுபுதிதான கருத்துக்களையும், புதிது புதிதான அனுபவங்களையும் வாசகனுக்கு உத்தரவாதம் செய்கிறது தொகுப்பு. அதன்மூலம் பல்வேறு கவிதைச் சிந்தனைகளை, பல்வேறு வாசிப்புச் சுகங்களைத் தந்தமைக்காக பா.அகிலனுக்கு என் நன்றிகள்.


       0000

பதிவுகள்.கொம், 

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...