தேவிபாரதியின் ‘நொய்யல்’: மதிப்புரை

 

தேவிபாரதியின் ‘நொய்யல்’:

‘மொழியின் வேட்டைக் காடு’

-தேவகாந்தன்-

 

தன்னறம் அமைப்பின் வெளியீடாக ஓகஸ்ற் 2022இல் வெளிவந்திருக்கிறது தேவிபாரதியின் ‘நொய்யல்’ புதினம்.

‘நிழலின் தனிமை’ (டிச. 2011), ‘நட்ராஜ் மகராஜ்’ (மே 2016), ‘நீர் வழிப்படூஉம்’ (2020) ஆகியவற்றின் பின் வந்த அவரின் நான்காவது  புதினமான இது, இடையிடையிட்ட புகைப்படங்களையும், நான்கு பகுதிகளையும், 630 பக்கங்களையும் கொண்ட பெரும் படைப்பு.

‘கரைகொள்ளாமல் பொங்கிச் சீறும் நொய்யலின் ஹோவென்ற பேரிரைச்சலைத் தவிர வேறு ஓசைகளில்லை’ என பக்கம் 31இல் தொடங்கி, ‘இமைக்காத விழிகளுள் சடலம் உறைந்துநின்றது. அப்படியே கைகளில் அவளை ஏந்தினான். தழுவினான். பிறகு அது மூழ்கத் தொடங்கியது. அடியாழம்வரை சென்றது. பிறகு என்றென்றைக்குமாக இல்லாமல் போனது’ என பக்கம் 630இல் புதினம் முடிவடைகிறது.

இவ்வாறாமைந்த இப் பிரதி, ஏறக்குறைய இருபத்தெட்டு ஆண்டுகளாய் படைப்பாளியின் மனத்துள் கிடந்து தன்னை உருவாக்கியபடியும், சிறிது சிறிதாய் வடிவங்கொண்டு எழுத்தில் வந்தபடியுமிருந்த பிரதியென அறியமுடிகிறது. இக்காலத்தில் தனக்கான ஒரு நடையை உள்வாங்கி, ஆயிரம் பக்கங்களிலிருந்து அறுநூறு பக்கமளவில் கட்டிறுக்கமாக்கப்பட்ட இப் பிரதியில் வாசிப்பின்பம் பூரணமாய் நிறைந்துள்ளது. தன்னை நிதானமாய் வாசித்து வாசகர் முன்னகரும் தேவையைக் கொண்டிருப்பதுபோல், அதை போக சுகத்துடன் தொடரச் செய்யும் பிரதியாகவும் இது உருவாகியிருக்கிறது.

‘பிரதாப முதலியார் சரித்திரம்’ (1876) வெளிவந்து சற்றொப்ப ஒன்றரை நூற்றாண்டு தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் அதியுச்சம் தொட்ட நாவல்கள் சிலவேனும் நம்மிடையே உள்ளன. தமிழ் நாவலிலக்கியம் பயில்விலிருந்த காலத்தில் அது மேற்குலக நாவல் விதிகளின் அடியொட்டிச் சென்றிருந்தது. அப்போது அப் புதிய முயற்சி தமிழிலே மு.வ., அ.ச.ஞா. போன்ற பல கல்வியாளர்களாலும் ‘புதினம்’ எனவே பட்டது. தமிழ் நாவலிலக்கியம் தனக்கான வடிவமும் அமைப்பு விதிகளும் கொண்டபோது தொடர்ந்தும் அது புதினமாயிருக்கவில்லை. இதுவரையிருந்த நாவல் வகையினத்தின் போக்கு, உள்ளடக்கம், கட்டுமானம் ஆகியவற்றில் பழையனவற்றை உடைத்து ‘நொய்யல்’  புதிதுண்டாக்கியதிலிருந்து ஓர் இரண்டாம் கட்டத்தை மானசீகமாக்கி இது ‘புதின’மெனவும் படலாம்தான்.

நொய்யலென்பது தமிழ்நாட்டின் மேற்கெல்லையிலுள்ள ஒரு நதி; கானாறு; மழையில் பொங்கிப் பெருகி உருவெடுத்து, வெயிலில் காய்ந்து நடந்த வழி மணல் சிலிர்க்கும் பெற்றியது. இலங்கையின் வடபகுதியில் பாலியாறுபோல அது. இன்று வளமெல்லாம் அழிந்துபோய்விட்ட அந் நதி மிகு வளம்பெற்ற காலமொன்று இருந்ததென்றும், அப்போது அது காஞ்சி நதியென அழைக்கப்பட்டதென்றும் கூகுள் தேடலில் காணமுடிந்தது.

ஆறேழு ஆண்டுகளின் முன்னால் ஜுன் ஜுலை மாதமளவில் அதனை நான் வறள்கொண்ட வடிவத்தில் நேரில் கண்டிருக்கிறேன். வறண்ட பல நதிகளுள் அதுவும் ஒன்று. ஆனால் அண்மையில் ‘நொய்யல்’ நாவலை வாசித்து முடித்தபோது, வறள் காட்சியின் பிம்பம் மறைந்து, அது பெருகியெழும் பேருருவம் தரிசன வெளிக்கப்பாலான காட்சியாய் மனத்தில் நின்றடித்தது. தெய்வங்கள் அதில் ஊடாடின; பாத்திரங்கள் தலைகாட்டின; மனித வாழ்நிலையின் சாரம் தெரிந்தது. ஆயினும் இதை பூரணமாய் புரிந்தும் உணர்ந்தும் கொள்ள எனக்கோர் இரண்டாம் வாசிப்பும், இதுபற்றியெழுத ஒரு மூன்றாம் வாசிப்பும்கூட அவசியப்பட்டது.

இவ்வளவற்றின் பின்னாக, என்  வாசிப்பின் அனுபவங்களை  வாசக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, இந்தப் பதிவு.

1. ‘நொய்யல்’ புதினம் எதைப்பற்றிச் சொல்கிறது? பிரவாகித்தும், காய்ந்தும் கிடக்கும் நதியைப்பற்றியா? ஆயிரமாண்டுக் கால அதன் தோற்றம், எழுச்சி, வீழ்ச்சிபற்றிய காலங்களைப்பற்றியா? அவைபற்றியும்தான். ஆனால் அதன் முதன்மையான கரிசனம், அந் நதி தீரத்தில் வாழும், வாழ்ந்த மக்களைப்பற்றியதே.

அப்படியும் சொல்லிவிட முடியாது, தேனப்ப கவுண்டரின் குடும்பத்தை மய்யமாக வைத்து நதி தீர மக்களின் வாழ்நிலையைப் பேசுகிறதெனலாமா? எனின், ஒரு புறமான பார்வைதான் இதுவும். பல புறங்கள் அல்லது கோணங்களுள்ள இப் புதினத்தின் இன்னொரு புறத்திலிருந்து தனி நபர்களாய் சென்னி கவுண்டன், குமாரசாமி, பூபதி, வெள்ளியங்கிரி, குமரப்ப பண்டிதன், பிரதேச ராஜா, அவரது அணுக்க குழு, தொப்பளான் என பல பாத்திரங்கள் வீறுடன் கிளர்ந்தெழுகின்றன. ஒரு சில தவிர்ந்த இவைகளுள் பலவும் காமத்தில் இயங்கும், கொந்தளிக்கும், கொலைவெறிகொண்டு கொடூரமாகின்ற பாத்திரங்களாகவே புதினம் புனைந்திருக்கிறது.

2. நாட்டார் கதை வழக்கிலுள்ள பெண்கள் அல்லது பெண் தெய்வங்களின் பதிவு புதினத்தில் அற்புதமானது. நதியின் வரலாற்றோடு கலந்துள்ள நதி தீர மக்களின் வாழ்முறையில் ஐதீகத்திலிருந்து தொன்மங்களாய், நாட்டார் தெய்வங்களாய் கிளரும் தேவனாத்தா, சாமியாத்தா, காருச்சி போன்றவை புதிய புதிய அர்த்தங்களோடு வாசகரை அணுகுகின்றன. தமிழ்நாட்டு மேற்கெல்லையிலுள்ள இந் நொய்யல் நதி தீர மக்களது ஒரு பக்க வாழ்வின் ஆசை, ஏக்கம், துன்ப துயரங்கள் எல்லாம் அடங்காப் பசியும், காமமுமாய் இப் புதினத்தில் பிரவாகிக்கின்றன.

3. அவர்களுக்கான மற விழுமியங்களாய் நாட்ராயன் போன்ற ஆண் தெய்வ கோயில்களின் இருப்பும் வழிபாடும்கூட புதினத்தால் விளக்கிச் செல்லப்படுகின்றது. பொன்னர், சங்கரின் கதை மெச்சப்படுகிறது. நாட்டார்கதையிலிருந்து, வரலாறு தழுவிய கதையாகி, மறுபடி அவர்கள் நாட்டார் கதாமாந்தராய் உருவெடுக்கும் விபரீதம் தடைப்பட்டிருக்கிறது.

4. மனித மாண்புடன் இயங்கும் தேனப்ப கவுண்டர், சென்னி கவுண்டன், வெள்ளி கவுண்டர், குமரப்ப பண்டிதன்போன்ற பலவாய பாத்திரங்களில், மிகவும் கவனம் கொண்ட படைப்பாகக் காணக் கிடப்பது வெள்ளியங்கிரி. காமத்தைக் காதலாகக் கரைத்து இறுதியில் கனவாயெழும் காருச்சியின் நினைவுகள் நீரின் அடியாழ்ந்து புதைந்துபோக வைப்பவன் வெள்ளியங்கிரியாகவே இருக்கிறான். குடும்பத்தார் அனைவராலும் விரும்பப்பட்ட, கல்வி கற்றவனாய்ப் போற்றப்பட்ட வெள்ளியங்கிரியின் வாழ்வு, காருச்சியின் நினைவில் அழிவது காவிய சோகமானது.

தன் கதையை இத் தகு பாத்திரங்களின் கதைகளாகவும்,       அவற்றை இணைக்கும் நொய்யலின் ஜீவிதம் பெருங்கதையாகவும் பிரதியில் உருவெடுக்கின்றது.

5. இவ்வகைக் கதையாடலையும், கட்டமைப்பையும் உயர இன்னும் உயரவென எடுத்துச் செல்வது பிரதியின் நடையும், அது பாவித்த மொழியும்தான்.

செவ்வியல் பாங்கான நடையும் மொழியும்கொண்டு உருவாகாத இப் புதினம், ஓர் உத்தேசத்துடன்தான் தன் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது எனலாம். மீறலை அவசியமான அழகான தருணங்களிலெல்லாம் செய்ய பிரதி தவறவேயில்லை. தன்னை மொழியால் அமைப்பதனாலேயே தன்னை நிச்சயமான ஒரு பிரதியாய் இது வாசகர் முன் பிரசன்னப்படுகிறது.

6. இதன் உரை வடிவ மொழியின் திறனிதுவெனில், இன்னும் வலுவான வட்டாரப் பேச்சு மொழி இதன் இன்னுமொரு சிறப்பாகின்றது.

அவ் வட்டாரத்தைச் சேர்ந்த, அம் மொழி ஏற்கனவே அறிமுகமான வாசகர்க்கு எளிதாகக்கூடிய மொழிப் பாவனையே இப்பிரதியில் கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. எனினும் பிற வாசகரை வெளியே விட்டு இப் பேச்சுமொழி தன்னை உள்ளே வைத்துக்கொண்டு வாசலைப் பூட்டிவிடுவதில்லை. நிதானமான வாசிப்பில், எந்த வட்டார மொழியும்போல், அது  எவர்க்கும்  பிடிமானமாகிப் போகிறது.

பேச்சு மொழியை படைப்பாளி கையாண்ட விதம் அற்புதமானது. பிரதியின் முக்கியமான அம்சங்களுள் ஒன்றாய் அது தன்னை முன்னிறுத்துகிறது. வட்டார எழுத்துமொழியில் அதன் சொற்களைக் கடைந்தெடுத்து சுலபமாக அர்த்தம் காண வைத்துவிட முடியும். ஆனால் பேச்சோசையை வரிப்படுத்துகையில் மிகுந்த சாமர்த்தியத்தை அது படைப்பாளியிடமிருந்து எதிர்பார்க்கிறது. அவ்வெதிர்பார்ப்பை இம்மியளவு குறையாமல் அளிக்கிறார் தேவிபாரதி.

7. பிரதியின் கட்டுமானம், நடை, மொழி, பாத்திரவுருவாக்கமளவு உரையாடல் மொழியும் ஒரு நவீன பிரதிக்கு அத்தியாவசியம் என்பதை வற்புறுத்தும் தமிழின் சிறந்த பிரதிகளுள் ஒன்றாகிறது ‘நொய்யல்’.

ஒவ்வொரு வட்டார மொழியுமே ஒரு நளின போக்கை, லலித அசைவைக் கொண்டிருக்கிறதெனச் சொல்லமுடியும். அதை முடிந்தளவு பேச்சோசை பிசகாமல் பதிவாக்கும் படைப்பாளி தமிழ்மொழிக்கொரு கொடை. நொய்யல் கரை மாந்தர்கள் கால காலமாய் உரையாடிய மொழி இதுவேயெனினும், அது  காலத்தின் நீட்சியில் செழுமையும் பெறும். அதுபோல் அதற்கு அர்த்தவிழப்பு, புதுவர்த்தவேற்றம், அர்த்த விரிவாக்கமென பலவும் சம்பவிக்கும்.

இந்த வித்தியாசத்தையும் பிரதியில் குழப்பமின்றி அனுபவிக்க முடிகிறது. வெள்ளியங்கிரியின் பேச்சுக்கும், ஏனைய பாத்திரங்களின் பேச்சுக்குமிடையே ஊடாடி நிற்கும் வித்தியாசங்கள் தெளிவானவை. தேவிபாரதி பெரும் மொழிக் கொடையாளியாவது இங்ஙனம்தான்.

8. நாட்டார் கதைப் பாடல், தேவராட்ட வழிபாடு, நாட்டுக்கூத்து இசை வடிவங்கள்கொண்ட பாடல்கள் பிரதியில் உட்செறிக்கப்பட்டுள்ளன. கூர்த்த இரவுகளில், அவற்றை இடையறுக்கும் வெளிச்சப் புள்ளிகளூடே பறையினதும், உடுக்கினதும் ஒலியை பிரதியின் நடையும் மொழியும் எதார்த்தமாய் செவியில் விழப் பண்ணுகின்றன. நாட்டார் கதையாடலின் பிரதியாகும் ‘நொய்யல்’ அதனால் வெகுவாய் வலிமை பெறுகிறது.

9. கதைசொல்லிகள் பொங்கா நாவிதன், அருக்காணியக்கா, வெள்ளியங்கிரி ஆகியோர் வழி, கதைகளினை விரித்துக்கொண்டே செல்கின்றது ‘நொய்யல்’. அவை உட்பிரதிகளின் மாயத் தன்மையைச் செய்கின்றன.

10. தம் சமூகத்தின் வாழ்நிலை, நோக்கு, ஆதர்ஷமான செயற்பாங்கு, அர்ப்பண மனோநிலையுள்ள சிலரே நாட்டார் கதையாடற் பாத்திரங்களாய் நிலைபெறுகிறார்களென நாட்டாரியல் ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. அவ்வாறான பாத்திரங்களை நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைமைகளிலிருந்து மீட்டு மறுபடி மானிடர்களாய் உலாவவிடுகிறது பிரதி.

நாட்டாரியலுக்கு ‘நொய்யல்’ வழங்குகிற உபயமெனவும் இதனைக் கருதமுடியும். நாயக்கர் கால சரித்திரத்தின் விடுபட்ட பகுதிகளையும் இடைவெளிகளையும் நாவலாசிரியர் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் ‘மோகனாங்கி’ நாவல் தர்க்கரீதியாய் நிரவுவதற்கு ஏதுவாயிருந்ததுபோல், ‘நொய்ய’லின் இந்த நாட்டாரியலுக்கான பங்களிப்பு தோன்றுகிறது.

எல்லை கடந்த சாத்தியங்களை நிகழ்த்தும் அவைதீக தெய்வங்கள்போல், குறிப்பாக மதுரைவீரன், நாட்ராயன் ஆதிய நாட்டார் தெய்வங்கள்போல், தன் சமூகத்தின் நலனுக்காய், அறவிழுமியங்களுக்காய் தியாகிகளாகும் பல பாத்திரங்கள் அமரபுக் கதைகளாய், நாட்டார் கதைகளாய், பின்னர் ஐதீகங்களாய், அதன் பின் தொன்மங்களாய் நிலைபெறுகின்றன.

இது காரணமாய் ‘நொய்யல்’ சிறப்புப் பெறுகிற வேளையில், இதனை வெகு அவதானமாக வாசகர் அணுகவேண்டுமென்ற எச்சரிக்கையும் அவசியமாகின்றது. நாட்டார் தெய்வ மரபுக் கதைகளை பதிவாக்கும்போதே,  புனைவின் வழி உருவாகும் பாத்திரங்களை, நாட்டார் தெய்வங்களாக உருப்படுத்தும்  சாத்தியங்களும் இப் பிரதியில்  உள்ளன. அதைத் திட்டமிடலாகவன்றி படைப்பாளுமையின் வீறோங்கும் சமயங்களில் பெரும்பாலும் நிகழ்த்திவிடக்கூடும்.  அது நாட்டார் கதையியலின் பெருங்கேடாக அமையமுடியும்.

11. விமர்சனம்பற்றிய வகைப்பாடுகளை சென்ற நூற்றாண்டின் விமர்சனக் கோட்பாடுகள் விரிவாயுரைத்துள்ளன. தமிழில் பல விமர்சனங்களும் இன்று இரசனைமுறை விமர்ச்;னமாய்க் குறுகிவிட்டனவென்பர்.

இவ்வகையான புதினங்களை மேற்கத்திய விமர்சனம் Traditional Approach,  Psychological Approach, Mythological Approach, Architypal Approach   மற்றும் Exponental Approach என்பவையாக வகுத்துக்காணும். ‘நொய்ய’லை கட்டுக்கதையியல், மாந்திரீகவியல் என்பவற்றுள் தயங்காது அடக்கிவிடவே ஒரு விமர்சகன் எண்ணுவான். பிரதியின் பன்முக வீச்சும் கட்டுமான முறைமையும் அதை ஒற்றை வகைமைக்குள் கறாராக அடைத்துவிடுவதை சாத்தியமற்றதாகச் செய்கிறது.

12. ‘நொய்யல்’மீதான விமர்சனங்கள் பலவும் பல வகையினமாய் வெளிவந்துள்ளபோதும், ஒற்றை விமர்சனம்கூட அதையொரு மாந்திரீக யதார்த்தவாதப் பிரதியாய்க் கண்டதை நான் சந்தித்திருக்கவில்லை முன்னுரையில் ஜெயமோகன் மட்டுமே இதுபற்றி விரிவாகவும் ஆழமாகவும் பேசுகிறார்.

இதுவரை நீர்ப் படுகை, நீர்ப் பெருக்கு சார்ந்து வெளிவந்த பிரதிகளுள் இதனோடு ஒப்பவைத்துப் பார்க்கக்கூடியது சோ.தருமனின் ‘சூல்’ (2016) நாவல். அது, நீரில் தொடங்கி, நீரால் உருளைக்குடியெனும் கிராமம் அழிவதை விவரிப்பது. பாவனை மொழியும் கரிசல்காட்டு மொழியாகவேயிருக்கும். ஐதீகங்களின்மேல் கட்டப்பட்ட பெருங்கதையமைப்பும் அது கொண்டிருக்கும். ஆயினும் அப்பிரதியை மாந்திரீக யதார்த்தவாதத் திசையில் வைத்து நோக்குவதும் சாத்தியமில்லை. ஆனால் ‘நொய்யல்’ அதுவாக வைத்து நோக்கவே பெரிதளவும் வற்புறுத்துகிறது.

கடுஞ் சூறையின் வரவும், வரப்போகும் வறட்சியிலிருந்து தப்ப குமரப்ப பண்டிதனின் ஆரூடத்தில் ஆழ் கிணறு தோண்டியும் ஊற்று கண்டடைய முடியாதுபோக, முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில், ஒருநாள் அண்டம் நடுங்க ஈரலிப்புள்ள புள்ளியிலிருந்து பெருவெள்ளம் பொங்கி அடித்து வரும் நொய்யலின் பாய்ச்சலும் சிறு நாட்டார் தெய்வங்களின் கோபங்கள் தாபங்கள் மட்டுமில்லை, வரவிருக்கும் சம்பவங்களின் முன்னறிவிக்கைகளுமாகும்.

லத்தீனமெரிக்க நாடுகளில் மாந்திரீக யதார்த்தவாதம் (மாயா யதார்த்தவாதம்) பயில்வாகியதே, அது ஒன்றைச் சொல்லி இன்னொன்றை அர்த்தப் படுத்துவதற்கான ஊடு இருப்பதுகொண்டுதான். பெருமளவும் அரசியல் நாவல்களில் அரசியலாரின் கண்களில் இக் கருத்துக்களை மூட இவை உதவியாயிருந்தனவென்பர்.

பெருஞ்சூறையினதும், வெள்ளப்பெருக்கினதும் அலைக்கழிப்புகள் இப் புதினத்தை மாந்திரீக யதார்த்தவாத அலகுகள் கொண்டதாய் மாற்றிவிடுவதை அவதானிக்கமுடியும். இயல்பில் அதன்  மறைபுலத்தில் ஒளிந்திருக்கும் அரசியல், வெளிப்படையான இயற்கை உற்பாதங்களுக்கும் தெய்வீகத்துக்குமிடையிலான தர்க்கமாய் இதில் முனைப்பெடுக்கிறது. ‘நடப்பியலையும் விடுகற்பனையையும் கலத்தல், இடையிடையே கனவுகளை உட்பொதிதல், நனவிலி மனக்கோலங்களை வெளிப்படுத்தல், தொன்மங்களையும் தேவதைக் கதைகளையும் இணைத்தல் முதலிய நுட்பங்கள் மாயவித்தை நடப்பியல் புனைவுகளிலே இடம்பெறும்’ என்கிறார் சபா.ஜெயராசா (கலை இலக்கியக் களஞ்சியம், பக்:112, சேமமடு பதிப்பகம், 2011). இத்தகைய அம்சங்கள் பலவற்றின் இருப்பினைக்கொண்டு, ஒரு மாந்திரீக யதார்த்தவாத தமிழ்ப் பிரதியாய் இதை அடையாளப்படுத்த முடியும்.

தன்னாயுதம்கொண்டு படைப்பாளி வேட்டைக்குப் புறப்பட்டிருந்தார். வேட்டைகளில் வேழ வேட்டை, புலி வேட்டை, சிங்க வேட்டை, மான் வேட்டை, முயல் வேட்டை, உடும்பு வேட்டை, அணில் வேட்டையென பல உள. தேவிபாரதியின் வேட்டையில் கிடைத்த மிருகமெது? ஒவ்வொரு வாசகரும் வெவ்வேறு மிருகத்தைக் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை வேழமல்லாவிடினும் வீழ்த்திய உருப்படி மகா பெரிதென்றே படுகிறது.

வேழம் பிழைத்த வேலேந்தலும் இனிதுதான்.

0

நன்றி:


உயிர்எழுத்து, ஜுன் 2023

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்