Posts

Showing posts from January, 2024

மாய வருத்தத்தின் மந்திர முடிச்சு (சிறுகதை)

  தூரத்தில், விரிவானின் எல்லையில் விழுந்த புள்ளியில் ஒரு கருமை திகைந்தெழுந்து திணிவது கண்டு, மாளிகையின் மேல்மாடத்தில் நின்றிருந்த அல்மினாவின் உள்ளத்தில் குதூகலத்தின் அரும்புகள் சட்டெனத் தெறித்தன. ‘கமால் அப்துல்லாவா?’ இல்லை, அவனில்லை; அவனாகயிருக்காது; அவன் வரமாட்டான்; இத்தனையாண்டுகள் வராதிருப்பவன் இனியும் வரப்போவதில்லை; வருவது எதிர்வுகூறப்பட்ட மணற்புயலாய்த்தான் இருக்கும்; ஆயினும் அவனாகயிருந்தால் நல்லதுதான்; கண்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தமாதிரி ஆகுமென அவள் எண்ணினாள். சுற்றிலும் பாலை விரிந்த அம் மணல் வெளியில் லிபியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளை அண்டியதாய், ஆயினும் சுலபமான அடைதல் சாத்தியமின்றியும், எல்லை நிர்ணயமின்றியும், பசுமைகொண்ட சில நிலத் தீவுகள் இருந்துகொண்டுதான் இன்னும் இருக்கச்செய்தன. இத்தாலியரும், இஸ்பானியரும், பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் ஆபிரிக்க கண்டத்தைக் குறிவைத்தபோது, சில நல்லதுகள் நடந்தன. சூயஸ் கால்வாய் அவற்றிலொன்று. நடுவில் கிடந்த நிலத்தை தோண்டி கடலாக்கி மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைத்து அய்ரோப்பாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமான சுருக்க வழி அண்மையில்த