Tuesday, December 09, 2008

அறிஞர் \ பேரறிஞர் \ சி.என்

அறிஞர் \ பேரறிஞர் \ சி.என்
- தேவகாந்தன்-

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் திரு.சி.என்.அண்ணாத்துரையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழகத்தில் பரவலாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தி.மு.க.வின் அல்லது அதிலிருந்து பிரிந்த எந்தக் கட்சியினது முதல்வரையும்விட எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து மறைந்தவர் அவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் இந்த நேரத்திலாவது அவர்பற்றிய சரியான ஓர் அலசலைச் செய்யவேண்டியது ஒரு வரலாற்றுக் கடமையாக எஞ்சிநிற்கவே செய்கிறது.

ஆயினும் அதை இங்கே இப்போது நான் செய்யப்போவதில்லை. அவரை நினைவுகூரும் வண்ணம் சில விஷயங்களைக் குறிப்பிடுவதோடு, நம் நிகழ்கால நிலைமையில் அவரது வாழ்வனுபவம், குறிப்பாக அவர்; அரசியல்சார்ந்து எடுத்த சில முடிவுகள் எவ்வாறான எச்சரிக்ககைகளை எமக்கு விட்டுச்சென்றிருக்கின்றன என்பதைத் தொட்டுச்செல்வதையே செய்யவிருக்கின்றேன்.

அறிஞர் அண்ணா என்று ஊடகத் துறையினராலும், பேரறிஞர் அண்ணா என்று கழகத்தவராலும் அன்பாக அழைக்கப்பட்ட திரு. சி.என்.அண்ணாத்துரை, அவர் வாழ்ந்த காலகட்டத்தை வைத்துப் பார்க்கின்ற வேளையில் அவ் அடைமொழியினுக்குப் பொருத்தமானவராகத்தான் இயங்கியிருப்பதாகத் தெரிகிறது. அறியாமை, பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கைகளால் தமிழகம் குஷ்டரோகம் பீடித்ததுபோல் பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு அகன்ற நேரத்தில் அழுகிக்கொண்டிருந்தது என்று சொல்லமுடியும்.

‘நாட்டு மாந்தரெல்லாம் தம்போல் நரர்களென்று கருதார், ஆட்டு மந்தையாமென்று உலகை அரசர் எண்ணிவிட்டார்’ என்று பாரதி துரியோதனனின் அதிகார ஆட்சியின் கொடூரத்தைச் சொல்லியதை நாமறிவோம். ஆதலால் அரசரை  புதிதாக ஒன்றும் கற்பிதம் பண்ணவேண்டியதில்லை, நரர்களில் பெரும்பாலோர் ஆட்டுமந்தைகளாகவேதான் இருபதாம் நூற்றாண்டிலும், இன்னும் இருபத்தோராம் நூற்றாண்டிலும்கூட, வாழ்ந்துகொண்டிருப்பது உண்மையான விஷயம்.

ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் மட்டுமில்லை, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்கூட,  உண்மை நிலை இதுவே. நாம் புராதன காலத்திலிருந்து நகர்ந்துவந்த அளவுக்கு, நமது மனத்தில் உறைந்துகிடக்கும் வெறியுணர்வுகளிலிருந்தும், அறியாமைகளிலிருந்தும் வெகுதூரம் வந்துவிடவில்லையென்பதையே அன்றாடம் நடைபெறும் அரசியல் சமூக நிகழ்வுகள் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தநேரத்தில்தான் ராமசாமிப் பெரியார் என்ற பெருஞ்சுடர் எழுகிறது தமிழகத்தில். அப்பெருஞ் சுடரில் கிளைவிட்ட குஞ்சுகளில் ஒன்றாகத்தான் சி.என்.அண்ணாத்துரையின் தோற்றத்தினை நாம் இனங்காணவேண்டியிருக்கிறது. மேலைத்தேய அறிவுலகத்தினதும், சீர்திருத்த உலகத்தினதும் சிந்தனைச் சுடரில் தம் மனத்தைப் பறிகொடுத்த இவராலும், இவர்போன்றவர்களாலும் குறிப்பாக வெ.சாமிநாத சர்மா, சி.பி.சிற்றரசு போன்றவர்களால் தமிழகத்தின் சராசரி மனிதன் பகுத்தறிவின் மெல்லிய ஒளிக்கீற்றினைக் காணநேர்கிறது. மேடைப்பேச்சின் சாயலை ஒட்டிய ஓர் எழுத்துநடையை முன்னெடுத்த திராவிடச் சிந்தனை மிக்க இக்கூட்டத்திடையில் கலை, இலக்கியம் சார்ந்த திறமைகள் காரணமாய் சி.என்.அண்ணாத்துரை மிகவும் கவனிக்கவும், மெச்சவும் படுவது தவிர்க்கவியலாதபடி நேர்கிறது. இக் காரணத்தைச் சுட்டி அறிஞர் அல்லது பேரறிஞர் என்ற பட்டம் அண்ணாத்துரைக்குப் பொருத்தமானது என்றே வைத்துக்கொள்வோம். ஆனாலும் அதை ஒரு கலக மனம் இலேசுவில் ஒப்புக்கொண்டு அடங்கிக் கிடந்துவிட மாட்டாது.

படைப்பின் உன்னதம் கொண்ட ஒரு பேனாக்காரனுக்கு அரசியலின் அதிகாரம் தூசுபோல. அவன் தன் படைப்பாளுமைக் கர்வத்தில் அரசர்களைச் சிறுத்துப்போக வைக்கவே விரும்புவான். அதனால்தான்போலும், அப்போது ‘தீபம்’ இலக்கிய இதழை நடாத்திக்கொண்டிருந்த நா.பார்த்தசாரதி ஒருபோது சி.என்.அண்ணாத்துரையை சி.என்.அண்ணாத்துரை என்றே ஒரு பொதுமேடையில் பேசப்போக பெரும் வம்பாகிப்போகிறது. கழகத்தார் லேசுவில் விட்டுவிடவில்லை. மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார் நா.பா. அவர் மன்னிப்புக் கேட்கவில்லையென்பது வேறு விஷயம். ஆனால் அந்தளவுக்கு நிலைமை சூடாகிப்போய்விடும்.

அறுபதுகளின் ஆரம்பத்தில் தமிழுலகம் வெகு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த ஓர் இலக்கிய நிகழ்வுபற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்று திராவிட இயக்கத்தார் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேளை. இதற்கு மறுதலிப்பான பிரச்சாரமும் நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனாலும் இதை ஒரு விவாதத்தில் தீர்மானிக்க, மூன்று தொடர்கள் கொண்ட ஒரு விவாத மேடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொளுத்தவேண்டும் என்ற தரப்பில் வாதித்தோரில் முக்கியமானவர்கள் சி.என்.அண்ணாத்துரையும், சோமசுந்தர பாரதியும். எதிர்த்தரப்பில் பிரதிவாதித்தோரில் முக்கியமானவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி.

முதலிரு மேடைகளிலும் ராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என வாதித்தோரின் கரங்களே மேலோங்கியிருந்த நிலையில், மூன்றாவது மேடைக்கு ராஜகோபாலாச்சாரியார் சுகவீனமென்று காரணம் சொல்லி வராமலே நின்றுவிடுகிறார். கனல் பறக்கும் அவ் விவாதங்களின் தொகுப்பு பின்னால் ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. அத்தனைக்கு பேச்சாற்றல் மிக்கவர்தான் அண்ணாத்துரை.

அதை மேலும் இரு நிகழ்வுகள் வலுப்படுத்தி நிற்கும்.

அண்ணா நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் இந்தியைத் தேசியமொழி ஆக்குவது குறித்த சர்ச்சை எழுந்திருந்தது. நாடாளுமன்றத்திலும் அதுபற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நேரம். அப்போது இந்தியைத் தேசியமொழி ஆக்கநேர்வதற்கான காரணமாக அது பெரும்பான்மையினர் பேசும்மொழியென ஓர் அமைச்சர் காரணம்சொல்லி அமர்ந்ததும் பேச எழுந்த அண்ணா, பெரும்பான்மை என்பது எல்லா விஷயங்களிலும் பொருத்தமாக வராதென்றும், அப்படியானால் அதிகமாக இருப்பதால் காக்கையையே இந்தியாவின் தேசியப் பறவையாக வைத்திருக்கவேண்டுமே தவிர மயிலை ஆக்கியிருக்கக் கூடாதென்றும் தெரிவிக்க சபை பதிலிழந்து மவுனித்ததாம்.

இதுபோல இன்னுமொரு சம்பவம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நேரு கொடுத்த ஒரு வாக்குறுதியின் பேரில் முடிவுக்கு வந்திருந்தது. இது ஒரு போலியான நிலைமைதான். இந்தியை இந்தி பேசாத மாநிலங்களில் திணித்துவிடுவதற்கான முயற்சிகள் மெதுமெதுவாக நடந்துகொண்டுதான் இருந்தன பல்வேறு மட்டங்களில். ஆனாலும் அதற்கான எதிர் அல்லது பதில் நடவடிக்கைகளும் நடந்துகொண்டுதான் இருந்தன.

ஒருமுறை அண்ணா டெல்லி சென்றிருந்தபோது ஓர் அமைச்சர் மிகச் சாதுர்யமாக, ரயில்நிலையங்களில் பெயரை வடமாநிலத்தாரின் சிரமங்களைக் குறைக்க இந்தி எழுத்தில் போட்டுவிடுகிற தேவையிருக்கிறது,
ஒரு சொல்தானே, அதைப் பொருள்செய்யாமல் விட்டுவிடுங்களேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அண்ணா பதில்சொல்லியிருக்கிறார், ‘வேற்று மாநிலத்தார் புரிந்துகொள்வதற்கு ஆங்கிலச் சொல் இருக்கிறதுதானே, ரயில்நிலையத்தில் மட்டும் பெயரை இந்தியில் பொறிப்பதன்மூலம் என்ன பெரிய பிரயோசனம் வந்துவிடப் போகிறது, ஒரு சொல்தானே விட்டுவிடுங்களேன்’ என்று.

இவ்வாறு அண்ணாவின் சொற்சாதுர்யங்கள்பற்றி அவர் பேசி முடிந்த கணங்களிலேயே பத்திரிகைகள் வாயிலாக யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டே அறிந்து நாம் மெச்சிக்கொண்டிருந்தோம் அன்று. அத்தனைக்கு அண்ணா கூர்த்த மதி படைத்தவர் என்றே தெரிகிறது.

அண்ணா சம்பந்தப்பட்டதாக இன்னுமொரு வித்தியாசமான கதையும் பேச்சிலடிபடுவதுண்டு. அண்ணாவுக்கு நேரடியான திரையுலகத் தொடர்பிருந்தது. வேலைக்காரி, ஓர் இரவு போன்ற படங்களின் கதை வசனகர்த்தா அவர். அவைபோல் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட படங்கள் இன்றுகூட தமிழகத் திரையில் வருவதேயில்லை. ‘பாதை தெரியுது பார்’ என்ற ஒரு சினிமா தவிர பெயர்சொல்ல ஒரு படம் அங்கில்லை. அப்படியான சமூக அக்கறைகொண்ட இரு படங்களின் கதை வசனகர்த்தா என்பதாலேயே, அப்போது முன்னணி நட்சத்திரமாகவிருந்த பானுமதியோடு இணைத்து ஒரு கதை பரவிவந்தது. அதுபற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அண்ணா, ‘பானுமதி படிதாண்டாப் பத்தினியுமல்ல, நானும் முற்றும் துறந்து முனிவனல்ல’ என பதிலிறுத்தாராம். இந்தக் கதையில் எனக்குச் சந்தேகமுண்டு. ஆனாலும் இதை மறுப்பதோ, நிறுவுவதோ என் திட்டமல்ல. இது எனக்கு வேறொரு சம்பவத்தை நினைவுறுத்துவதால் இதைக் கூறினேன்.

‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ எனத் தொடங்கும் பாடல்பற்றிய கதையே அது.

பாண்டிய மன்னனுக்கு திடீரென சந்தேகமொன்று தோன்றுகிறது. அதாவது தனது மனைவியின் கூந்தலிலுள்ள மணம் இயற்கையானதா, செயற்கையானதா என்ற சந்தேகம். அதைத் தெளிவாக்கும் செய்யுளை எழுதும் புலவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்பெறும் என அவன் பிரசித்தம் செய்யச்செய்கிறான்.

அதற்கான பாடலைச் சிவனிடமிருந்து பெற்றுவருகிறான் தருமி என்ற புலவன். அதில் பிழை இருப்பதாகக் கூறி தமிழ்ச் சங்கத்தின் முதன்மைப் புலவன் நக்கீரன் பரிசைத் தடுக்கிறான். பின் சிவனே புலவன் வேடத்தில் வருவதும், நக்கீரன் அது தெரிந்தும் பணியாமல் தன் கருத்தைக் கூறுவதும், கோபமடையும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க வெப்பம் தாங்காமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் விழுந்து கிடந்து வருந்துவதும், பின் சிவன் கோபம் தணிந்து நக்கீரனது தமிழோடு விளையாடவே தான் அத் திருவிளையாடலைப் புரிந்ததாகக் கூறி நக்கீரனைக் கரைசேர்ப்பான். ‘திருவிளையாடல்’ படத்தில் நாகேஷ் , சிவாஜி, முத்துராமன் ஆகியோர் தருமி, சிவன், பாண்டியனாக நடித்து அசத்தியிருப்பார்கள்.

இந்தச் சம்பவத்திலும் உண்மை தெரியவருவதில்லை. அதாவது பாண்டியன் மனைவியின் கூந்தலுக்கு இயற்கை மணம் அல்லது செயற்கை மணம் எது உள்ளது எனத் தெரியவராது செய்யுளின் மூலம். அண்ணாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணா சொன்னதாகக் கூறப்படும் பதிலிலும் சம்பவ உண்மை தெரியவராது. ஆனாலும் கதை நீண்டகாலமாக நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை இதிலுள்ள புனைவுத் தன்மையால்தான் இக்கதை வாழ்கிறதோ என்றும் தோன்றுகிறது.

வாழுங் காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளரெனப் பெயர்பெற்றிருந்தவர் அண்ணா. அவர் காலத்தில் சமயச் சொற்பொழிவுக்கு பெயர்போனவர் கிருபானந்த வாரியார். அரசியல் பேச்சுக்கு நாஞ்சில் மனோகரன். இலக்கியப் பேச்சுக்கு ம.பொ.சி. இவர்களுக்கு இவர்களது துறையில் நூறு நூறு புள்ளிகள் கொடுக்க முடியும். அப்படியானால் அண்ணா எப்படிச் சிறந்த பேச்சாளர் ஆக முடியும்? இந்தக் கேள்விக்கு ஒருவர் சொன்னார்: ‘இவர்களுக்கு தம்தம் துறையிலேதான் சிறப்பு. ஆனால் அண்ணாவால் இந்த ஒவ்வொரு துறையிலுமே தொண்ணூறு புள்ளிகள் எடுக்கமுடியும். அதனால்தான் அண்ணா சிறந்த பேச்சாளர் எனப்பட்டார்.’

எனக்குள் உள்ள கேள்வி இதுதான். இவ்வளவு சிறப்பு மிக்க அண்ணா ஏன் அந்தளவுக்கான சிறப்பினை வரலாற்றில் பெறாதுபோனார்?

அவ்வளவு எளிமையாக வாழ்ந்த அண்ணா, அவ்வளவு கூர்த்த மதி படைத்த அண்ணா, இறுதியில் ஒரு கட்சி வட்டத்துள் மட்டும் நினைக்கப்படுபவராக ஆனது எப்படி?

அந்த அறிவு, அந்த விவேகம், அந்தச் சீரிய சமூகக் கருத்துக்களின் கொள்ளிடம் என்ற பிரக்கியாதி, கட்சியின் நலத்துக்காக தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டார் என்ற அவப்பெயரோடு ஏதோ ஒருவகையில் தொடர்புகொண்டிருந்திருக்கிறது. ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை இல்லையே’ என்று முழக்கமிட்டவர் பெரியார். அந்தப் பாசறையிலிருந்து வளர்ந்து வெளிவந்தவர், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று கடவுளை ஒருமையாகவேனும் ஒப்புக்கொண்டதற்கும் எம்மிடம் சமாதானம் இல்லை. வெளிப்படையாய் இல்லையெனினும், உள்ளுறையாக இவைபற்றிய அபிப்பிராயங்கள் காலத்தின் கவனத்தில் இருந்திருக்கிறது. அதுவே அவரது முழு ஆளுமையினையும் வரலாற்றில் தடம் பதியாது மங்கச்செய்யும் பேராற்றலாய்த் தொழிற்பட்டிருக்கிறது.

இது இன்னும் நிறைய யோசிக்கப்படவேண்டியதுதான்.

யோசிப்போம்.
000

தாய்வீடு  2008

Sunday, November 09, 2008

மக்கள் கவிஞன்

‘மக்கள் கவிஞன்’ 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- தேவகாந்தன் -


இப்போதெல்லாம் கார்களில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகியிருக்கிறது இசை. வானொலியில், குறுந் தகட்டிலென்று பலவாறாக அவை. சிலவற்றை அவற்றின் அர்த்தத்துக்காக, சிலவற்றை அவற்றின் இசைக்காகவென்று ரசிக்கவும் முடிகிறதுதான். ஆனாலும் இவற்றின் சமூகப் பொறுப்புப்பற்றி யோசிக்கையில் வெறுமைதான் எஞ்சுகிறது. பழையனவெல்லாம் நல்லனவுமல்ல, புதியனவெல்லாம் கெட்டனவுமல்ல என்ற புரிதல் எனக்கிருக்கிறது. ஆயினும் சில பழைய ஆளுமைகள்போல் புதியனவான ஆளுமைகள் தோன்றவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேதான் ஆகவேண்டும்.

தம் கொள்கைகளைக் கடைசிவரை காத்திருந்து, அவற்றோடு தம் வாழ்வை இணைத்துக்கொண்டவர்கள்தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களில், திரைப்படப் பாடலாசிரியர்களைப் பொறுத்தவரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம் முதன்மையானது. அவருக்குப் பின் இன்று நூற்றுக்கு மேற்பட்ட பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்படத் துறையிலே தோன்றியிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் பட்டுக்கோட்டையாரின் இடம் வெறுமையாகவே இருக்கிறது.

இளையராஜாவுக்கு இருக்கும் சிறப்புகளில் ஒன்று அவர் கிராமிய இசையை திரைப்படத் துறைக்குள் அதிகமாகவும் புகுத்தியவர் என்பது. அதுபோல் கிராமியப் பாடல்களை, அதன் அர்த்தங்களை திரைப்படத் துறைக்குள் புகுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மட்டுமில்லை, தான் சார்ந்த கொள்கையைக்கூட அவ்வப்போது திரைப்படப் பாடல்களில் புகுத்தி மக்களின் குரலை எதிரொலிக்கச் செய்தவர் அவர். அவரது எளிமையே சில பாடல்களில் மிகஅழகாக வந்து விழுந்திருக்கும்.

ஸ்ரீதர் ‘கல்யாண பரிசு’ திரைப்படத்தை உருவாக்கிய சமயம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம்தான் பாடல்களை எழுதி வாங்கவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டார். அதன்படி பாடலாசிரியரைச் சந்திக்க பட்டுக்கோட்டை போயிருக்கிறார்கள். அவர் முதலில் கதையைக் கேட்டிருக்கிறார். ஸ்ரீதர் மேலோட்டமாகக் கதையைக் கூறி முடிய கல்யாணசுந்தரம் சொல்லியிருக்கிறார், ‘சரி, பாடலை எழுதுங்கள்: காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் - கலங்குகிறான் அவளை நெஞ்சில் நிறுத்தி…’

தான் கதை சொன்ன இலகு பாணியிலேயே கல்யாணசுந்தரம் பாடலைச் சொன்னது திகைக்க வைத்திருக்கிறது ஸ்ரீதரை. பின்னாளில் இதை ஸ்ரீதரே மிக உருக்கமாகச் சொல்லி கல்யாணசுந்தரத்தின் திறமையைப் பதிந்துகொண்டிருக்கிறார்.

இடதுசாரிக் கருத்துக்களில் மிகத் தீவிரமான ஈடுபாடிருந்தது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு. ஒரு கலைஞன் மக்களை நோக்கிப் பயணிக்கிறானென்பதின் அர்த்தம், அவர்களது இருண்ட வாழ்வின் விடிவுக்கான பாதையில் சிரத்தைகொண்டு உழைப்பதுதானே.

எம்.ஜி.ஆர். நடித்து இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. அதில் நாடோடியான எம்.ஜி.ஆருக்கும் புரட்சிக்காரியான பானுமதிக்கும் ஒரு பாடல் வரும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமே அதை எழுதியிருந்தார். கேள்வி பதில் மாதிரியான வடிவத்தில் அப்பாடல் அமைந்திருப்பது அதன் சிறப்புகளில் ஒன்று.

அதில் பெண் கேள்வியாகக் கேட்பாள்: ‘காடு விளைந்தென்ன, நமக்கு கையும் காலும்தானே மிச்சமாக இருக்கிறது? இந்தப் பஞ்சைகள் வாழ்வதற்கு வழியே இல்லையா?’

அதற்கு ஆண் பாட்டிலே பதிலளிப்பான்: ‘தினம் கஞ்சி கஞ்சியென்றால் பானை நிறையாது, சிந்தித்து முன்னேற வேணுமடி.’

அந்த ‘சிந்தித்து முன்னேற வேணுமடி’ என்ற சொற்களில் எவ்வளவோ அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.

‘பொருளே இல்லார்க்குத் தொல்லையா
புதுவாழ்வே இல்லையா
இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா
இறைவா நீ சொல்லையா’

என்றுதான் வறுமையின் உச்சத்தை அக்காலத் திரைப்படப் பாடலாசிரியர்களால் வெளிக்கொணர முடிந்திருந்தது. வறுமையை நீக்க அவர்கள் அறிந்திருந்த ஒரேவழி இறைவனை அழைப்பதுதான். வறுமையை இல்லாது செய்ய இறைவன் சுடர் பிடிக்கவேண்டியிருந்தது. குசேலருக்கு கிருஷ்ணன் ‘அளப்பது’போல் இறைவனே வந்து அவரவர் வறுமையையும் தீர்ப்பதான மார்க்கம் தவிர வேறு மார்க்கம் அவர்களுக்குத் தெரியாதிருந்தது.

வறுமையை ஒழிக்க வேறு ஒரு மார்க்கம் இருக்கிறது என்ற கருத்தானது மார்க்சீயச் சிந்தனைகள் பரவ ஆரம்பித்த பின்னால்தான் பலருக்கும் தெரிய வந்தது. அவ்வாறு தெரிந்திருந்தவர்களிலும் சிலர்தான் தம் வாழ்வும், வளமும் அழிந்தாலும் கலங்காமல் அக் கொள்கைகளைக் கடைசிவரை தம் எழுத்துக்களிலும், பாடல்களிலும் எதிரொலிக்கச் செய்தார்கள்.

அவ்வாறானவர்களில் முதன்மையானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கஞ்சி…கஞ்சியென்று அழுதுகொண்டிருந்தால் பானை நிறைந்திடாது, அதைப் புரட்சிமூலம்தான் பெறவேண்டும் என்பது ‘சிந்தித்து முன்னேற வேண்டுமடி’ என்ற அவ்வரியின் கருத்து. அக் கருத்து உள்ளுறைந்து வருவதிலும் ஓர் அழகுண்டுதான். ஆனாலும் கல்யாணசுந்தரம் அதை அழகுக்காகவே சொல்லாமல் விட்டிருந்தார் என்று கொள்வதற்கில்லை. அக்கால கட்டத்தில் தென்னிந்தியா முழுவதும் வியாபித்திருந்த நக்ஸலைட்களுக்கெதிரான சட்ட வன்முறை காரணமாக அப்படியொரு பூடகத்தில் தன் கருத்தை வெளிப்டுத்தவேண்டிய நிலையே அவருக்கு இருந்திருக்க முடியும்.

தனது கருத்தை இன்னொரு படத்திலேதான் கொஞ்சமேனும் வெளிக்கொண்டுவர முடிந்தது பட்டுக்கோட்டையாருக்கு. அது ‘அரசிளங்குமரி’ படம். அதில் எம்.ஜி.ஆர் குழந்தையை வைத்துக்கொண்டு அதன் அழுகையைத் தணிப்பதற்காகப் பாடுவதுபோன்ற ஒரு காட்சி வரும். ‘சின்னப்பயலே… சின்னப்பயலே…’ என்று அப்பாடல் தொடங்கும். இந்தப் பாடலைக் கேட்கிறபோதெல்லாம் பாரதியாரின் ‘ஓடிவிளையாடு பாப்பா’ என்ற பாடல் எனக்கு நினைவுவரத் தவறுவதில்லை. ‘மோதி மிதித்துவிடு – பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்று குழந்தைகளுக்கு பாரதி கூறுவதுபோல்தான், கையிலுள்ள குழந்தைக்கு கதாநாயகன் சொல்லும் ‘தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டுசெய்யடா, தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா’ என்று வரும் சுந்தரத்தின் பாடல்வரிகளும் இருக்கின்றன.

இதிலேகூட தனியுடைமையை ஒழிக்கப் பாடுபடு என அறிவுரை சொல்வதாக மட்டும்தான் வருகிறது. தனியுடைமையை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் எதை ஸ்தாபிப்பது என்பதற்கு அதில் விடையிருக்காது.

அதற்கு, மேலும் சில காலம் செல்லவேண்டியிருந்தது கல்யாணசுந்தரத்துக்கு.

‘திருடாதே’ படம் வந்தது. அதிலும் கதாநாயகன் எம்.ஜி.ஆர்தான். அதிலும் சின்னப் பிள்ளைகளை நோக்கிப் பாடுவதுபோலத்தான் பாடல் வரும். ‘திருடாதே, பாப்பா திருடாதே’ என்று தொடங்குகிறது அப்பாடல். அதிலேதான் ‘இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால், பதுக்கிற வேலை இருக்காது’ என்று எல்லாம் பொதுவுடைமையாக வேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்பட்டிருக்கும்.

இன்று எத்தனையோ திரைப்படப் பாடலாசிரியர்களை தமிழ்ச் சினிமா உலகம் கண்டுவிட்டது. ஆனால் மக்களை நினைத்து, தன் கொள்கையை நினைத்துப் பாடல் எழுதுபவர்கள் அறவே இல்லாதிருப்பது தமிழ்ப்பட உலகத்தின் சாபம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை ‘பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’என்று ஒரு பிரபலம் புகழ்ந்திருக்கிறது. அது கண்ணதாசன் என்பதாய் ஞாபகம். அப்படி பாட்டின் வீறுசெறித்து தன் கொள்கையை எந்தெந்த வழிகளிலெல்லாமோ பிரசித்தம் செய்த அந்தத் தலைமகனின் இடம் இன்றும் வெறுமையாகத்தான் இருக்கிறது. அந்த ஆளுமைகள்போல் புதிய ஆளுமைகள் தோன்றவில்லையே ஏன்? மேட்டை இடிக்காமல் பள்ளத்தை நிரப்ப முடியாது என்பது புரியாத சங்கதியல்ல. அதை வெளியே சொல்வதற்கு எழுத்தாண்மை தேவை. அது கல்யாணசுந்தரத்திடம் இருந்தது. இன்றைய தலைமுறைப் பாடலாசிரியர்களிடம்…?

000
தாய்வீடு, நவம்பர் 2008

Sunday, November 02, 2008

கனடாத் தமிழ்ப்பட உலகத்துக்கான வெளியும் அதன் பின்னடைவுகளும்
பரந்தவெளித் தேசமான கனடாவில் தமிழ்ப் பட உலகத்துக்கான வெளி மிக விசாலமானது. ஒரு நிலைமாற்றுக் கால தமிழ்த் தலைமுறையினரின் சமூக, பொருளாதார, உளவியல் நிலைப்பாட்டுத் தளங்களிலிருந்து பல அம்சங்கள் முன்னெடுக்கப்பட முடியும். அதன் புலப்பெயர்வும், மண்ணின் ஞாபகங்களும், மனவடுக்களும், உறவுகளின் தொடர்பாடலும், அவர்களது துன்ப துயரங்களும் பல பெருங்கதையாடல்களுக்கான ஊற்றுக்களைக் கொண்டவை. ஆனால் அது ஒரு வரட்சியில் கிடப்பதே காணக்கூடியதாக உள்ளது. இதன் முக்கிய காரணிகளை மேலெழுந்தவாரியாகவேனும் அலசுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

அரங்க ஆட்டத்திலிருந்து ஒரு பாய்ச்சலாக சினிமா உருவெடுத்து வந்திருப்பினும், அதன் பல கூறுகளைச் சினிமாக் கலை நிராகரித்துவிட்டே தன் பாதையில் தொடர்ந்திருக்கிறது. 1885இல் பிரான்ஸிலும், ஜேர்மனியிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சினிமாவுக்கான கமெரா, புரொஜெக்டர் ஆகிய உபகரணங்கள் இருபதாம் நூற்றாண்டுக்கான பாய்ச்சலைத் தொடங்க அன்றே வழியைத் திறந்துவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் தமிழில் விரிந்தெழுந்ததுதான் திரைப்படத் துறை. அது இந்தியச் சினிமாவாக முழுமைகண்டது.

ஈழத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் அலாதியானது. ஆயினும் அது இவ்வி~யங்களில் தமிழகத்தின் முகம் பார்த்தே நடந்து வந்திருக்கிறது. ‘கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றும் ‘கலைகளுக்கெல்லாம் தாய் வீடு’ என்றும் கூறப்பட்டனவெல்லாம் பெரிதாக மிகைப்படுத்தப்பட்டனவல்ல. பரதத்துக்கும், தமிழிசைக்கும், கர்நாடக சங்கீதத்துக்கும் அது மிகுபெயர் பெற்றிருந்ததுதான்.

ஒரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தொடர்ந்துதான் ஒரு கலையரசு சொர்ணலிங்கம் ஈழப் பரப்பில் தோன்றமுடிந்தது. நடிகை ராஜகுமாரி, பிரமிள், பாலுமகேந்திரா என்று கலை இலக்கியம் சார்ந்து இயங்கியவர்கள் பெரும்பாலும் தமிழகத்தைத் தாய்வீடாகக் கொண்டு;தான் இருந்திருக்கிறார்கள். மாறாக, கல்வியாளர்கள் மட்டுமே தாம் கல்விகற்று, பணியாற்றிய இடமான தமிழ்நாட்டைவிட்டு (உண்மையில் அப்போது அது சென்னை ராஜதானி) மீண்டும் ஈழம்சென்று வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறார்கள் எனல் வேண்டும்.

இதற்கான அரசியல் புலம் அப்போது இருந்ததுதான். இந்தியாவும் இலங்கையும் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்ப நாட்களில் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இருந்ததும், பின்னால் வௌ;வேறு நிர்வாகங்களானாலும் அடிமை நாடுகளாக பிரித்தானியர் ஆட்சியின் கீழேயே இருந்ததும் போக்குவரத்துச் சுலபத்தையும், பணமாற்றுச் சுலபத்தையும் ஏற்படுத்தி கலையார்வ மாணவர்களின் பாரிய படையெடுப்புக்கான நிலமாக்கிவிட்டது தமிழ்நாட்டை. அன்று கல்விக்கும் தமிழ்நாட்டையே பலர் தஞ்சம்கொண்டிருந்தனர். பி.ஏ., எம்.ஏ., பண்டிதர், வித்துவான் போன்ற இந்தியப் பட்டங்கள் பெற்றவர்கள் ஈழத்தில் ஒருகாலம் மிகவதிகம். இதுவொன்றும் மாச்சரியம்பாற் பட்டதல்ல. நிலைமை இவ்வண்ணமே இருந்தது அன்று.

இதற்கான கலைத் தகைமையையும், பாரம்பரியத்தையும் அது கொண்டிருந்தது என்பதில் எனக்கு இரண்டு அபிப்பிராயமில்லை. இன்றும் பரதத்துக்கும், கர்நாடக சங்கீதத்துக்கும் அது பயில்வுகொள்வதற்கான தக்க நிலமாகவேதான் இருந்தும் வருகிறது.

தேவதாசி முறைமை அங்கே நிலவியிருந்ததை இதற்கான ஒரு காரணமாகக் கூறலாமெனினும், அதற்கான அர்ப்பணிப்புகள்தான் அந்நிலத்தைக் கலையில் சிறந்த தமிழ்நாடாக்கி வைத்திருக்கிறது என்றால் தப்பில்லை. எனவே இந்தக் கலைகளுக்கான அணுக்கம் நியாயமானது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் திரைப்படத்துறை இதற்கு எதிர்மாறான நிலைமையைக் கொண்டிருக்கிறது. அது முற்றுமுழுதாக வணிகமயம் அடைந்துபோயிருக்கிறது. முழு இந்திய அளவிலான பணமுதலாளிகள் கூட்டமொன்று இத் திரைப்படத் துறையில் சர்வ ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. ஜெமினி, சிவாஜி பிலிம்ஸ், ஏவிஎம் போன்ற உள்@ர் முதலாளிகளின் கூட்டம் இன்றும் தமிழ்நாடு என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கான அரசியல் புலம் இங்கிருந்துதான் வெடிக்கிறது. இவர்கள் ஓரிரு தடவைகளில் வெற்றியும் பெறுகிறார்கள்தான். ‘சந்திரமுகி’யும், ‘சிவாஜி’யும் இமயமலை பாபாவின் அருளினால் கிடைத்த வெற்றிகளல்ல, மாறாக, ஒரு சங்கிலி வளையத்தின் கணுக்களாக இருந்ததனாலான வெற்றியே.

கேரளம் ஒரு ஆரோக்கியமான சினிமாக் கலாச்சாரத்துக்கான நிலமாக இருந்தது அண்மைக் காலம்வரை. இன்று அதுவும் நீர்த்துப்போய்விட்டது. எனினும் இடைத்தர சினிமாவுக்கான தளமாக அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்த் திரைப்படத்தின் சமகால நிலைமை என்ன? முழு வெகுஜன ரசனைக்கான படவுலகமாக நாறிப்போய்க் கிடக்கிறது. சிவாஜி பிலிம்ஸின் ‘சந்திரமுகி’ திரைப்படம் அமோக வெற்றிபெற்ற படம். அது ஒருவகையில் ‘மணிச்சித்திரத்தாளு’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். இருந்தும் ‘மணிச்சித்திரத்தாளு’வை பணவசூலில் தூக்கி விழுங்கிவிட்டது ‘சந்திரமுகி’. ஆனால் சினிமாவாக ஓரளவு தேறக்கூடியதாய் இருந்தது ‘மணிச்சித்திரத்தாளு’. வெகுஜன ரசனைப்படமாக சீரழிந்திருந்தது ‘சந்திரமுகி’.

இந்த நிகழ்வுகள் தமிழ்ப் படவுலகின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டப் போதுமானவை. இவ்வாறிருக்கையில் இதன் பிரதிபலிப்பாக தமிழ்படமெடுக்கும் முயற்சி எங்கே கொண்டுபோய்விடும்? தமிழ் நாட்டிலேயே இதற்கெதிரான மாற்றுப்பட முயற்சிகள் மும்முரமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அதனை மாதிரியில் கொள்கிறபோது விளைவு எப்படியிருக்கும்? கனடாவில் தமிழ்ப் பட முயற்சிகள் அனைத்தும் இதுநாள்வரையில் தமிழ்ப்பட மாதிரியில் அமைந்தவையாயே இருந்திருக்கின்றன. அவற்றின் தோல்வியின் பின்னணி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

தமிழ்த் திரைப்படம் இன்னும்தான் தன் புராதன கால பழக்கத்திலிருந்து மாறிக்கொள்ளவில்லை. அதன் ஆட்டங்களும் பாடல்களும் யதார்த்தத்துக்கு மாறானவை என்பதைவிட, சினிமா முறைமைக்கே மாறானவை. காதலன் காதலியரின் டூயட்டும், கனவுக் கன்னியரின் ஆரவார அணிவகுப்புமின்றி படங்கள் உருவாக முடியாதனவாக இருக்கின்றன அங்கே. சில திரைப்படங்களின் வெற்றியே இவ்வகைப் பாடல் ஆடல் காட்சிளினாலேயே சாத்தியமாகியிருப்பதையும் கூறவேண்டும். இவையெல்லாம் மொத்தமாக ஒன்றைத் தெளிவுபடுத்துகின்றன. திரைப்படங்கள் மக்களைக் கெடுத்தன. மக்கள் தம் பங்குக்கு திரைப்படங்களைக் கெடுத்தார்கள் என்றே சொல்லக்கிடக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில் விதூ~கமும், பாடல்களும், ஆடல் காட்சிகளும், கொலைகளும் அதற்கான பழிவாங்கல்களும் தவிர வேறு வி~யங்கள் இருப்பதாகக் காணப்படவில்லை. இதுவே வெகுஜன ரசனையாக வளர்க்கப்பட்டிருக்கிறது அங்கே. காமம் சொட்டச் சொட்ட பாடல் எழுதக் கூடியவர் கவிப்பேரரசாக அங்கேதான் கொண்டாடப்பட முடியும். இதை மறுக்கிற திரைப்படங்கள் அங்கே உருவாகியிருக்கின்றனதான். முன்னதானால் ‘பாதை தெரியுது பார்’ என்ற ஒரு திரைப்படத்தையும், அண்மையிலானால் ‘பாப்கோர்ண்’ என்ற படத்தையும் மாதிரிகளுக்காகச் சொல்லலாம். ‘பாதை தெரியுது பார்’ சிலநாட்கள் ஓடிற்று. ‘பாப்கோர்ண்’ ஒரேஒருநாள் மட்டும் சென்னைத் திரையரங்குகளில் ஓடியது. இந்த வயிற்றெரிச்சலை எங்கே போய்ச் சொல்ல? இத்தனைக்கு அது அப்போது பிரபல கதாநாயகியாகவிருந்த சிம்ரனும், மலையாளத்தின் சிறந்த நடிகருள் ஒருவரான மோகன்லாலும் நடித்த படம்.

‘கரை தேடும் அலைகள்’, ‘இனியவர்கள்’, ‘மனசு’, ‘தமிழிச்சி’, ‘கனெடியன்’ என்ற எந்த கனடாத் திரைப்படம் இந்த தமிழ்ப்பட அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை? உலகத்தில் இன்று எத்தனையோ நாடுகள் சினிமாவை தங்கள் கலாச்சார அம்சத்தின் வெளிப்பாட்டுச் சாதனமாக வெற்றிகரமாகக் கைக்கொண்டு கொண்டிருக்கின்றன. ஈரான், துருக்கி, மெக்ஸிக்கோ, ர~;யா என பலநாடுகள் சினிமாவில் சாதனைகளே படைத்துவருகின்றன. கொரியா மீந்தெழும் இன்னொரு நாடு இத்துறையில். மாதிரியாகக் கொள்ளக்கூடிய இந்நாட்டுப் படங்களை நமது கனடாத் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் எத்தனைபேர் பார்த்திருப்பார்களோ?

தொழில்நுட்ப உத்திகளின் வீச்சுடன் வெளிவரும் ஹொலிவுட் படங்கள் பார்வைக்கும், கணநேர உணர்வுத் தீனி போடுபவையாய் மட்டும் இருக்க, மாற்றுப் படங்கள் அல்லது கறுப்புப் படங்கள் மனத்துக்குத் தீனி போடுபவையாய் இருக்கின்றன. அண்மையில் வெளிவந்த ‘இத்தாலியன் போய்’, ‘மோட்டார்ச் சைக்கிள் டயரி’ போன்ற படங்களின் பாதிப்பு இன்றும் உணர்வில் கொள்ளப்படக் கூடியதாய் இருக்கின்றது. காரணம் அவை சினிமாத் தனத்துக்காக எடுக்கப்பட்ட படங்கள்.

சினிமாவுக்கும், திரைப்படத்துக்கும் உள்ள நுட்பமான பிரிகோட்டினை நாம் விளங்கிக்கொள்ளாதவரை, இச் சறுக்கலை நம்மால் தவிர்த்துக்கொள்ள முடியாதிருக்கும்தான். குறும்படங்களில்கூட நாம் கணிசமாகவேனும் முன்னேறியிருக்கிறோம் என்று கூறமுடியாதேயுள்ளது. கனடாவிலுள்ள சுயாதீன கலைப்பட இயக்கத்தினரின் சுலோகம் ‘நமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்’ என்பதாகும். அதன் இவ்வாண்டுக் குறும்படப் போட்டியில் விமர்சக பரிசுபெற்ற ‘வினை’ குறும்படம், அதன் ஒழுங்கமைவு சிதைந்த பட உத்திக்காகவே பரிசுபெற்றதாய்ச் சொல்லப்பட்டது. இந்த முயற்சிகள் அவசியமானவை.

நாம் எதைச் சொல்லவருகிறோம் என்ற தீர்க்கம், எப்படிச் சொல்வது என்கிற உத்தி, அதை வெளிப்படுத்துவதற்கான அர்ப்பணம் இல்லாவிட்டால், இப் பரந்தவெளித் தேசத்தில் தமிழ்த்திரைப்பட வரலாறு மங்கியேதான் இருக்கப்போகிறது.

(தமிழர் தகவல் ஆண்டு மலர் 2007)

00000

புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள்

தமிழ்ப் புனைகதைப் பரப்பில்
புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள்

இரு கவிதைத் தொகுப்புக்களை முன்வைத்து 

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிக்க எதிர்ப்பார்ப்போடும் நம்பிக்கையோடும் கவனிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற கருதுபொருள், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளின் பின்னரான இக் காலகட்டக் கணிப்பில் எந்தத் தளநிலையை அடைந்திருக்கிறது என்பதை ஒரு வரைகோட்டு விழுத்தலாக அமைத்துப் பார்க்கிறபோது, முன்பிருந்த எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் சறுக்கலடைந்து இருப்பதையே ஒருவரால் காணமுடியும். அதன் காரணங்களையும், காரணங்களின் பின்னணிகளையும் சுருக்கமாகவேனும் அலசுகின்ற தேவையிருக்கிறது.

தொண்ணூறுகளில் ஒரு நூலைத் தயாரிப்பதற்கான செலவை இந்திய ரூபாயில் வெளிநாட்டுப் பண மாற்றாகக் கணித்த நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது மிகவும் குறைவாகத் தென்பட்டதாயே கொள்ளக்கிடக்கிறது. ஒரு நூலை எவராவது எழுதிவிட்டிருந்தால் அதன் அச்சாக்கத்துக்கு பெரிய தடையேதும் ஏற்பட வாய்ப்பிருக்கவில்லை. அச்சாக்கமல்ல, எழுதுவதுதான் தேவையானதாக இருந்தது அன்றைய நிலையில். அதன்படி சிலபல நூல்களும் வெளிவந்தன. அவை வந்த சுவடுமில்லாமல் மறைந்தன. ஆக நம்பிக்கை அளிப்பனவாக எழுந்தவை அவர்களது சிறுபத்திரிகை முயற்சிகளே. பிரான்ஸ் அதற்கான ஒரு முக்கிய கேந்திரமாக இருந்தது.

இந்த அலையோடு எழுதத் துவங்கிய கலாமோகன், ஷோபா சக்தி போன்றவர்கள் இன்றும் பேசப்படுபவர்கள். புலம்பெயர்ந்தோரின் இலக்கிய ஊடகம் அதிகமும் கவிதையாகவிருந்தும், சிறுகதை நாவல்துறைகளிலேயே சாதனைகள் நிகழ்ந்தன. ஓரிரு நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். ஒன்று, ஷோபா சக்தியின் ‘கொரில்லா’. இன்னொன்று, விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’. ஈழத்தில் மிக்க காத்திரத் தன்மைபெற்று கவிதையானது வீச்சுடன் நடக்கவாரம்பித்திருந்த வேளையில், புலம்பெயர் சூழலில் புனைகதையே முக்கிய படைப்பாக்க ஊடகமாக இருந்திருக்கிறது.

இதுவொன்றும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட முயற்சிகளல்ல. இயல்பில் அமைந்தவை. துன்பியல் நாடகங்கள் மிக்க காத்திரத்துடன் மனத்தில் பதிந்துவிடுகின்றன. ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் துன்பியல் நாடகங்களே மிக்க இலக்கிய நயம்பொருந்தியன என விமர்சகர்கள் கூறுவர். கவிதைக்கும் அது ஆதாரத்தளம்தான். மண் இழக்கும் சோகம், உற்றார் உறவினர் குடும்பங்களை மரணம் காவுகொள்ளும் சோகமென பல சோகங்கள் பாடு பொருளாக இருந்தன கவிதைக்கு. மண்ணை இழக்கும் சோகத்தை ஆரம்ப காலக் கவிதைகள் பாடுபொருளாய்க் கொண்டிருந்தமை இவ்வண்ணமே நிகழ்ந்தது. ‘எங்கும் ஒலிக்கிறது காற்று, எனது நிலம்! எனது நிலம்!’ என்ற சேரனின் கவிதை வரிகளில் ஒரு மகத்தான சோகத்தின் பதிவு இருக்கிறது.

ஆனால் புலம்பெயர்ந்து வந்ததன் பின்னால் இந்தச் சோகம் ஒரு அவதி பற்றியதாக மாறிவிடுகிறது. இந்த அவதி புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் தளமாற்றத்தினால் விளைகிறது. நாடு மட்டுமில்லை, வீடும் விட்டு வந்தவர்கள் அவர்கள். வீடு எங்கேயும்தான் வாழ்க்கையின் ஆதாரம். வீடு இல்லாவிட்டாலும் வெப்ப வலய நாடுகளில் நடைபாதைகளில்கூட வாழ்ந்துவிடலாம்தான். கோயில் மடங்களில் படுத்தெழும்பிவிடலாம். ஆனால் தட்ப வலய நாடுகளில் நம் சமூகத்தவர்களுக்கு அது சாத்தியமாகாத ஒன்று. பிற சில சமூகத்தவர்கள் இன்றும் வீதிக்கரைகளில் வாழ்வு கழிப்பவராய் கனடாவிலேயே இருக்கிறார்கள். தொழில் புரிய முடியாதவர்களாய், பாலியல் தொழில் செய்பவர்களாய், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களாயுள்ள விளிம்பு நிலை மக்கள் இங்கும்தான் இருக்கிறார்கள். இவர்களில் அரசு அக்கறை காட்டுகிறதுதான். ஆனாலும் போதுமானதில்லையென்பது அவர்களது வாதம்.

தமிழர்களுக்கு இந்தமாதிரியெல்லாம் வாழ்ந்துவிட முடியாது. அவர்கள் வாழ்ந்துபார்த்தறியாத காலநிலை கொண்டதாயிருக்கிறது இந்த நாடு. இந்த வீடு என்பது தமிழர் வாழ்வில் மிக முக்கியமாய் அமைந்ததன் காரணம் இதுவேயாகும். இந்த வீடுபேறடைதலில் அமிழ்ந்துபோனது புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை. இப்போது அவர்களது வாழ்வு அவலத்திலல்ல, அவதியிலேயே மூழ்கிப்போய்க் கிடக்கிறது. இலக்கியம் மட்டுமில்லை, கலை கலாச்சார முயல்வுகளும்கூட ஒரு சரிவைச் சந்திக்கவே செய்திருக்கின்றன. இங்கே தமிழ்ச் சமூகத்தின் வாழ்நிலை கொண்டிருக்கும் இந்த அம்சம் முக்கியமானது. படைப்புக்கும் ரசனைக்குமான ஓய்வு இல்லாதிருக்கும் ஒரு சமூகம் என்னத்தை சாதித்துவிடப் போகிறது? இங்கே கவிதை சீரழிந்த கதை இதுதான். புனைவிலக்கியத்தின் வீச்சின்மைக்குமான அடிப்படையும் இதுவே.

புலம்பெயர் இலக்கியத்தின் மீதான சந்தேகம் முன்னரே கிளப்பப்பட்டது. இதுகுறித்து கறாரான கருத்துச் சொன்னவர்களில் முக்கியமானவர் தமிழகத்தில் ஜெயமோகன். ஈழத்தில் மு.பொன்னம்பலம். நான்கூட என் பல கட்டுரைகளிலும் புலம்பெயர் இலக்கியம் ஈழ இலக்கியத்தின் ஒரு துறையாக இனங்காணப்படுவதன் மூலமாகவே தன் வாழ்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமென வற்புறுத்தியிருந்தேன். அது நான் கனடா வருவதற்கான காலத்துக்கு முன்னர். இப்போது அந்தக் கருத்து வலுப்பெறப் பெற்றுள்ளேன்.

இந்தப் புரிதல்களோடு குறிப்பிடத்தகுந்த இரண்டு கவிதை நூல்களை இப்போது நாம் வாசிப்புச் செய்யலாம். ஒன்று ஐரோப்பியப் புலத்திலிருந்து 2005 மார்கழியில் வெளிவந்த றஞ்சினியின் ‘றஞ்சினி கவிதைகள்’. மற்றது கனடாப் புலத்திலிருந்து வெளிவந்திருக்கும் செழியனின் ‘கடலைவிட்டுப் போன மீன் குஞ்சுகள்’. இது 2007 ஆடியில் வெளிவந்தது.

இரண்டும் வெவ்வேறு பாடுபொருள்களைப் பேசுபவை. றஞ்சினியின் கவிதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தும், செழியனது பெரும்பாலும் போரின் அவலமும் பேசுபவை. இரண்டுமே ஓரளவில் தம் குடும்ப, சமூக தள நிலைமைகளை மீறி எழுந்தனவாகவே கொள்ளல்வேண்டும். அதற்கான அவர்களது அர்ப்பணிப்பு அதிகமானது என்பதை ஒருவரால் மிகச் சுலபமாக உணரமுடியும்.

செழியனை நான் நேரில் அறிவேன். அவரது கவிதைகளில் எனக்கு ஒரு ஆதர்ஷமே இருந்தது. 1980களில் கவிதையெழுத ஆரம்பித்தவர் செழியன். சிறுசிறு தொகுப்புகளாக அவரது கவிதைகள் வெளிவந்தபோது சிலவற்றைப் படித்துவிட்டு சில கிடைக்காமல் நான் கொண்ட வருத்தம் அதிகம். இப்போது அது ஒட்டுமொத்தமான தொகுப்பாக வெளிவந்திருக்கிற வேளையில் கவிதைகளை ரசனையோடு படிக்க முடிந்தது. றஞ்சினிபற்றி நிறைய நான் அறியேன். தொகுப்பாகு முன் அவரது சில கவிதைகளைப் பத்திரிகை, சஞ்சிகைகளில் வாசித்துக் கொண்ட பிரமிப்பில் நினைவில் நின்றவர். தொண்ணூறுகளில் கவிதையெழுத ஆரம்பித்ததாகக் கொள்ளலாம். இந்த வகைப்பாடு அவரது பாடுபொருளிலிருந்து நான் கொண்டதுதான்.

பெண்ணியம் என்பது ஒரு பெருந்துறை. அரசியல், சமூக, இலக்கியக் களங்களிலும், அவற்றின் செயற்பாட்டுப் புலத்திலும் கருத்துநிலை, சித்தாந்தப் பின்னணி கொண்டது. றஞ்சனியின் பெண்ணியம் பொதுப்புத்தி சார்ந்தது என்பது தெளிவாகவே கவிதைகளில் தெரிகிறது. மிக இறுக்கமான, இளக்கமான பெண்ணியச் சிந்தனைகள் உண்டு. முதலாளித்துவப் பெண்ணியச் சிந்தனைகளும், சோஷலிச பெண்ணியச் சிந்தனைகளும் வெவ்வேறு பரிமாணம் கொண்டவை. வெகு ஜனநாயகப்பட்ட பெண்ணியச் சிந்தனையும், நுகர்வுக் கலாச்சார பெண்ணியச் சிந்தனையும்கூட வேறுவேறுபட்டவை. இவைபற்றிய றஞ்சினியின் தெளிவின்மை கவிதைகளூடு பரந்துபடக் காணக்கிடக்கின்றது. றஞ்சினி உண்மையான காதலுக்காக ஏங்குவதும், காதல் துரோகத்தில் அல்லது பெண்ணாய்த் தன்னை மதிக்காத ஆணாதிக்க மனோபாவத்தில் குமுறுவதும் அவரது பல கவிதைகளின் உள்ளுறையாகியிருக்கின்றன. அவரது வாழ்நிலையிலிருந்து இந்த நிலைப்பாடு தோன்றியதாகவே நாம் பார்க்கவேண்டும்.

எனினும் இது முதன்மையாகக் கவனிக்கப்பட வேண்டியதில்லைத்தான். கவிதையின் தரமே முக்கியம். அவர் சொல்லவந்த விஷயம் கவிதையாகியிருக்கிறதா என்பதே பிரதானம்.

தொகுப்பின் பல படைப்புகளில் கவிதை இல்லை. இன்னும் பல சுமாரான படைப்புகளே. ஆனால் மீதிக் கவிதைகள் முக்கியமானவை. அவற்றில் ‘இனிய நண்பனுக்கு’, ‘தோற்ற மாயை’, ‘உன் தனிமை’, ‘விட்டுவிடுதலையாகி’, ‘கிருசாந்தி’, ‘என் ஜமெக்க காதலனுக்கு’, ‘காலம் மாற்றம் தலையிடி’ போன்றவை சிறந்த கவிதைகள். வீச்சோடும், அதற்கான மொழியோடும், தேவையான இடைவெளிகளையும்கொண்டு இவை. ‘இருப்பு’ கவிதை அற்புதனான வார்ப்பு. அது ஒரு பெண் என்பவள் யாரென்பதை மிகச் சிறந்த சிந்தனைத் திறனோடும், மிகச் சிறந்த மொழியினோடும் வெளிப்படுத்துகிறது. அது இது:

இருப்பு

எனது இயக்கம்
எனது ஆற்றல்
எனது சிந்தனை
எனது திறமை
அனைத்தும் எனக்கே
இருக்கக் கூடியவை
இவற்றை யாரிடமாவது இருந்து பெற்றிருந்தால்
நான் பெண்ணாக இருக்க முடியாது
நீங்கள் உருவாக்கிய
பெண்மை
எனது அடையாளமல்ல
நான் பெண்
பிறக்கும்போதே.

செழியனின் கவிதைகளது பொதுத்தன்மை மரணம், பிரிவு, தனிமையிரக்கம் ஆகியவையே. இவையே ஆரம்ப கால ஈழக் கவிதைகளின் பாடுபொருளாகவும் இருந்தன. அவ்வையின் கவிதைகளில் மண்ணும், உறவுகளின் பிரிவும் அற்புதமானவகையில் விழுந்திருக்கும். வன்னிப்புலம்பற்றிய வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகள் கவிதையின் உச்சம் எடுப்பவை. ஆனால் செழியனின் கவிதையின் தனித்துவம் கவிதை நயத்தோடு சேர்ந்தது. ‘மழை பெய்த நாள்’ செழியனின் சிறந்த கவிதைகளில் ஒன்று. ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை’ தொகுப்பில் தலைப்பற்று வந்த ‘மழை, உடைப்பெடுத்து, வயல்’ எனத் துவங்கும் கவிதை மனத்தை அதிர வைக்கும். அதில் வரும் அசாதாரணக் கேள்வி அப்படியானது.

மழை
உடைப்பெடுத்து
வயல்

சோளம்
நாற்று விழுந்து
உருண்டை மணிகள்

மகிழமரம்
புதர்
தாண்டி புதைமணல்
பாளம்வெடித்து
நாய்க்குடை காளான்

கிளை நுனியில்
நெல்லிக்காய்

நீ
எப்படி இருக்கிறாய்?

‘எழுதியே முடிப்போம்’ கவிதை அதன் முடிப்பிலும் அழகும், உணர்வும் செறிந்து நிற்பது. கவிதை மொழியென்பது நம் கடித மொழியிலிருந்தும் வேறானதல்ல. மாறாக ஒரு சொல்லை கவிதை மொழியாக்குவதே அது வந்து விழும் இடம்தான். இக் கவிதையில் வெறும் சொற்கள் இவ்வாறு விழுந்து கவிதைமொழி ஆகின்றன.


‘இருளுக்குப் பின்னும் அச்சமின்றி
ஓற்றையடிப் பாதையில்
சிறுவன்

இன்னமும் முகில்களுக்கு மேலே
தெரியும் நட்சத்திரங்கள்

எஞ்சியிருப்பவை
கரித்துண்டுகளாயினும்
எழுதியே முடிப்போம்.’

செழியனின் தனித்துவமே இத்தகைய கவிமொழியின் கண்டுபிடிப்பிலிருந்தேதான் ஆரம்பமாகிறது என்றாலும் பொருத்தமானதே. ‘அம்மாவுக்கு’ என்பது இத் தொகுப்பிலுள்ள இன்னுமொரு நல்ல கவிதை. ‘வாழ்க்கை நினைத்ததைப்போல் அழகாக இல்லை’ எனத் துவங்கும் அக் கவிதை ‘தவிப்புமட்டும் எஞ்சியிருக்கிறது, சொல்வதற்கு என்ன இருக்கிறது, அம்மா?’ என்று முடிகிறபோது நிகழ்கால வாழ்வு அனைவருக்கும் கொடுத்திருக்கும் வெறுமையே துலக்கமாய்த் தெரிவது.

செழியனுக்கு ஓர் அரசியல் இருக்கிறது, எல்லாருக்கும்போலவே. ஆனாலும் அது தூக்கலாய்த் தெரிவதில்லை அவரது கவிதைகளில். மரணங்களுக்காக அவர் அழுவது சிலவேளைகளில் அதிகமாக இருந்தபோதிலும் அவரது அரசியல் அங்கெல்லாம் அடையாளமாகாது. அப்படியே கவிதைத் தனத்தைக் கெடுக்காத விதமாக அது அடையாளமானால்தான் என்ன?

றஞ்சினியினதும், செழியனுடையதும் கவிதைகளுக்கான விமர்சனமல்ல நான் இங்கே வைத்திருப்பது. புலம்பெயர் சூழலில் கவிதை கொண்டிருக்கும் தளத்தின் அடையாளத்தைக் காண இவற்றின்மூலம் முயன்றிருக்கிறேன் என்பதே உண்மை.

இந்த அவதித்தனம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. இதையே இன்றைய புலம்பெயர்ந்தோர் கவிதைப் போக்காக நாம் கொள்ளமுடியும். புனைகதையில் பேசப்பட்ட இரண்டு நாவல்களும் ஈழத்தைக் களமாகக் கொண்டவை. அவற்றின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம். ஒருவேளை புனைகதையிலக்கியம் தளத்தைப் பேச வருங்காலத்தில் கவிதைபோல் தரமிறங்கவும் வாய்ப்புண்டு. புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தை ஈழ இலக்கியத்தின் ஒரு துறையாகப் பார்க்கவேண்டியதின் வலுவான நியாயம் இதிலிருந்தே பிறப்பதாக நான் காண்கிறேன்.

00000

பதிவுகள்.காம், 2008

Friday, October 24, 2008

எங்கள் காயங்களும் வெறுமைகளும் வேறுவிதமானவை:

எங்கள் காயங்களும் வெறுமைகளும் வேறுவிதமானவை:
இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதை நூலை 
முன்வைத்து…


சமீபத்தில் வெளிவந்த இளம் கவிஞர்களின் ஆக்கங்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின், குறிப்பாக கவிதைத் துறையின், எதிர்காலச் செல்நெறியைச் சுட்டிக்காட்டும் கூறுகள் புலப்பட ஆரம்பித்திருப்பதை ஒரு தீவிர வாசகர் எதிர்கண்டிருக்க முடியும். அவ்வாறான ஆக்கங்களில் இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ தொகுப்பை ஒரு முக்கிய வரவாக நான் காண்கிறேன்.

‘நாடற்றவனின் குறிப்புகள்’ எல்லா கவிதைத் தொகுப்புகளையும் போலவே மோசமானது, சுமாரானது, நல்லது, மிகநல்லது என்ற பகுப்புகளுள் அடங்கக்கூடிய விதமாக அமைந்து, 53 கவிதைகளைக் கொண்டிருக்கிற நூல்தான். ஆனாலும் இது அழுத்தமாகக் காட்டிச் செல்லும் புதிய செல்நெறியால் கவனம் மிகப்பெறுகிறது. புலம்பெயர்ந்தோர் கவிதை தன் மரபோடு, தன் புதிய புலத்தின் கவிதைத் தன்மையை உணர்கிறதும், உள்வாங்குகிறதுமான காலகட்டமொன்று இயல்பில் இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறதை இத் தொகுப்பில் முக்கியமாகக் காணக்கிடந்தது.

சென்ற நூற்றாண்டின் அந்திமம் வரை ஈழத்துப் புலம்பெயர்ந்த கவிஞர்களின் பாடுபொருள் பெரும்பாலும் தம் இழந்த மண்ணும், வாழ்வும், கலாச்சாரமும் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. எகிப்திலிருந்து இஸ்ரவேலரின் மறுதிரும்புகையின் போதான துயர்களைப் போன்றதோடுகூட இவர்களுக்கு ஒரு திரும்புகை இருந்துவிடாது என்பதை அரசியல் வலிதாய் உணர்த்தி நிற்கையில், இன்று மண்ணும் வாழ்வும் கலாச்சாரமும் பற்றிய ஏக்கம் அவற்றை இழந்ததனாலாய துயரங்களை வைத்துப் பார்க்கையில் இவர்கள் கவிதைகளில் பின்தள்ளப்பட்டிருப்பதாகவே சொல்லக்கூடியதாய் இருக்கிறது.

இன்று புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களே அதைப் பிரச்சினையென உணராதபோதிலும், புலம்பெயர்ந்ததினாலான மூலத்திலிருந்து கிளர்ந்திருப்பவை என்பதை சமூக அக்கறையாளரால் எளிதில் உணரமுடியும். அதனால் இந்த பழையனவற்றின் இழப்பும், புதிய புலத்தின் உழல்வும், ஒரு நவ கலாச்சாரக் கலப்பினால் அவைபற்றிய உணர்வும் கூடியோ குறைந்தோ அவர்கள் படைப்புக்களில் அழுத்தமாவதை தவிர்க்கவே முடியாதிருக்கும்தான். இச் செல்நெறியின் ஆகக் கூடிய உதாரணமாகும் தொகுப்புகளில் முதன்மையானது ‘நாடற்றவனின் குறிப்புகள்’ என்பதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை.

சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம், ஒளவை போன்றவர்களுடைய கவிதைகளின் பாடுபொருளைவிட, கி.பி.அரவிந்தன், பா.அ.ஜயகரன், திருமாவளவன், செழியன் போன்றோரினதை விடவுமே, இளங்கோ, தான்யா, பிரதீபா, தமிழ்நதி, ஆழியாள், றஞ்சினி ஆகிய புதிய தலைமுறையினரின் பாடுபொருள் வித்தியாசமானது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் முன்னையவர்களினதைவிட விரிவானது. ஒருபொருளிலிருந்து இன்னொரு பொருளாய் சூக்கும மாற்றமுற்றது. பெண்ணிலை வாதக் கருத்துக்களும், புகலிடத்தின் அவலங்களும், பல்வேறு சமூகங்களின் இதுபோன்ற துயரங்களின் அவதானிப்பும், அதனாலேயே இப் பொதுத் துயரத்துக்கு மூலாதாரம் கண்டு ஒன்றிணையும் எத்தனிப்பும் இவர்களின் கவிதைகளில் விரவிக் கிடக்கின்றன. தமிழ்ச் சமூகமென்ற ஒற்றைத் தடத்திலிருந்து விலகி உலகமளாவ எத்தனிப்பது.
புகலிட அவலங்கள் அனாதியானவை. விவிலியம் இது குறித்த முதலாவது பதிவின் சாட்சியமெனக் கூறமுடியும். சங்ககாலத்துப் பாணர் பாடினிகளின் பாடல்களில் தெரிவது இதுபோன்ற துயரத்தின் ஒரு சாயல்தான்.

அப் பகுதிக்கு புதிதாக வந்த பாணன்தான் அவன். முதல்நாளிரவு அவன் ஓர் இல்லிலிருந்து பாடியிருக்கிறான். அதைச் சுட்டும் விதத்திலேயே அவன் ஒரு பெண்ணால் அவமானப்படுத்தப்படுவதாக ஒரு சங்கப் பாடல் உண்டு. அதன் கருத்து இது: ‘நேற்றிரவு ஒரு சத்தம் எழுந்துகொண்டிருந்தது எங்கிருந்தோ. அதைக் கேட்ட என் அன்னை பேய் கத்துகிறது என்றாள். என் தங்கையோ, நாய் குரைக்கிறது என்றாள். நான்தான் நீ பாடுகிறாய் என்று சொன்னேன்.’

‘பேயென்றாள் அன்னைதான்|பேதை என் தங்கையும்|நாயென்றாள், நீயென்றேன் நான்’ என்று வருவதான அடிகள் கலித்தொகையில் உள்ளதாக ஞாபகம்.

இதைவிட ஒரு பாடும் பரதேசியை அவமானப்படுத்தும் வார்த்தைகள் இருக்கமுடியுமா? தமிழ்ப் பரப்பில் அலைந்துழல்வின் மேலான அவலத்தின் முதல் பதிவாக இதைக் கொள்ள முடியும்.

அலைந்துழல்வு சங்கமளாவிய பழைமை எனினும் இன்றைய புதுமையும்தான். புதுமையற்ற பழைய அனுபவங்களில் புதுமையைக் காண்பதே கவிதை அல்லது இலக்கியத்தின் நோக்கம் என்று வ்லோவ்ஸ்கி சொல்லிய வாசகங்களை வைத்து நோக்குகையில் இந்த உண்மை இன்னும் உறுதிப்படும். ஆனாலும் இது தனிப்பட்ட படைப்பாளியின் ஆக்கத் திறனின் அம்சமாகவும் இருக்கிறது என்பதும் உண்மையே. அதை இளங்கோவின் கவிதைகளினூடாக அலசலாம்.

காதலில் காமத்தையும், காமத்தில் காதலையும் பிரிவறக் காணும் திணைக் காலத்திலிருந்து உருவான தமிழ் மரபு, முதன்முறையாக தெளிவான வேறுபாடுகளுடன் இளங்கோவின் கவிதைகளில் காட்டப்படுகிறது.

நினைவுகளின் செட்டையைக் கழற்றிவிட்டு
இறகுகளின் மிருதுவான போர்வைக்குள்
நடுநடுங்கியபடி விரகமெழும்
உறைபனிக் காலம்

நேற்று நடந்தவையெதுவும்
என்னைப் பாதிக்காதெனும் திமிருடன்
கொஞ்சம் கொச்சைத் தமிழும்
அதிகம் ஆங்கிலமும்
நாவில் சுழலும் அன்புத் தோழியுடன்
மரபுகளைச் சிதைத்தபடி
கலவியும் கிறங்கலுமாய்
கழிகிறது வாழ்வு’
என்பதிலும்,

குடித்துக் கிறங்கி
உனையணைத்த பின்னிரா வேளையில்’
என்பதிலும்,

‘உடல்கள் உராய்ந்து
ஆசைத்தீ கனன்றெரிந்த
மாலைப்பொழுதொன்றின் பிற்பாடு’
என்பதிலும் தெரிவது காமம்பற்றிய அனுபவப் பகிர்வுகளே. அவை காதலோடு பின்னமற்றவையாய் மயங்கவைக்கப்படவில்லை இங்கே. அது ஒரு வித்தியாசமான இலக்கியப் பிரிவாகவே தன்னை வெளிப்படுத்தும்.

பாலைத் திணையின் ஒழுக்கம் பிரிதல் ஆகும். கணவன் வாழ்வின் ஆதாரமான பொருள் தேடச் செல்லுதலை மய்யமாய்க் கொண்டு இது வரையறைபட்டது. இதில் பெண் கணவன் சொல்லிச்சென்ற காலம்வரை காத்திருத்தலே பெருவழக்கு. சிலவேளை பெண்டிரும் உடன்செல்லுதல் உண்டு. இதை உடன்போக்குப் பாலையெனக் கூறுகிறது திணைப் பகுப்பு. அதுபோல் இளங்கோ காட்டும் பிரிவை ‘உடன்பாட்டுப் பிரிவு’ என வகை செய்யலாம்போலப் படுகிறது. காதலனும் காதலியும் தம் உறவு கைகூடப் போவதில்லையெனத் தெரிந்து பிரிவை மிக்க இயல்பானதுபோல் கொண்டு தம் உறவை அறுத்து அகல்வர். தமிழ்க் கவிதைப் பரப்பில் இந்தத் துறை புலம்பெயர் கவிதையின் பாடுபொருளாக அமைவதைக் கவனிக்கவேண்டும். நிலைபேறுள்ள தனி மனிதர்களின் ஒழுக்கவியலாக இது இல்லை. அலைந்துழல்வோரின் ஒரு கூறாகவே இதைக் காணமுடிகிறது.

‘இனியென்ன
எதிரெதிர்த் திசைகளில் எம் பயணமும்
தற்செயலாய்ச் சந்திக்கையில்
சின்னதாய்ச் சிரிப்பும்

இவைபோதும் எனக்கும்
உனக்கும்’
என்ற வரிகளும்,

‘நாளைக்குப் பயணம் கனடாவிற்கெனக் கூறி
பார்வையைத் தூரத்தில் தொலைத்த பொழுதில்
நெருங்கிவந்து இதழ் பதித்தகன்றாய்

நான் நிசப்தமாயினேன்
நின்ற புள்ளியில்
நீயோ நடந்துசென்றாய்
திரும்பிப் பாராது
இனி நிலைப்பதற்கு
உறவெதுவும் இல்லாமற்போல்’
என்ற வரிகள் இடம்பெறும் ‘பனையும் அரசமரமும்’ என்ற ஒரு முழுக் கவிதையுமே இந்த நவஅறத்தைத்தான் சொல்கின்றன.

தொகுப்பில் உள்ள 2000, 2001, 2002ஆம் ஆண்டுகளுக்கான கவிதைகளில்தான் இத்தகைய போக்கினைக் காணக்கிடக்கின்றது என்பதையும் இங்கே மனங்கொள்ள வேண்டும். ஆனால் 2005, 2006 ஆம் ஆண்டுகளுக்கான கவிதைகள் தம்தொனியை சடுதியில் மாற்றத் தொடங்கிவிடுகின்றன.

2002 க்குப் பின் 2003, 2004ஆம் ஆண்டுகளின் கவிதைகளைக் காணாதிருக்கும் இத் தொகுப்பில் 2005 உம், 2006உம் ஊருக்குத் திரும்பிவிடும் மனம் ஆங்குள்ள வதைபாடுகளைப் பாடத் தொடங்கிவிடுகிறது. இவை ‘எங்கள் காயங்களும் வலிகளும் வித்தியாசமானவை’யென ஆணித்தரமாய் நிறுவுபவை. நினைவுகள் வலியை ஏற்படுத்தும். எவருக்கும் இயல்பானது இந்நிலைமை. ஆனால் மரணத்தை ஏங்குமளவுக்கு இந் நினைவுகள் வதையாவது இளங்கோவின் கவிதைகளில் உள்ள விசேஷம். மதுவிலும், மாதர்களிலும் தம் வலிகளை மறந்து திரிந்த கவிஞர்கள் இருக்கிறார்கள். மரண வலிகொண்டு மறைந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் இளங்கோ சொல்லும் முறையானது இதில் தனித்துவமானது. வாழ்தலின் நியதியோடு மரணத்தை ஏங்கும் வதை இது.

‘தடயங்களின்றி
இந்த ஆண்டு, இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்பகின்றேன்
எனது மரணத்தை’
என்றும்,

‘தேவதைகளைக் கொன்ற
சாத்தான்கள் நுழைந்த திசை
வெளுக்கத் தொடங்கையில் மட்டும்
மறக்க முடிவதில்லை
இது
தற்கொலை செய்வதற்குரிய
தருணம் என்பதை’
என்றும் கூறும் வரிகள் மரணத்தை யாசிக்கும் வலி படர்ந்திருப்பதன் அடையாளங்கள்.

மேலும், ‘சாத்தானின் காற்று | நள்ளிரவைச் சிலுவையில்அறைய | அதிர்கிறது | பாவஞ்செய்தவர்களின் வீட்டு யன்னல்கள்’, ‘மதுக் குவளையின் விளிம்பிலமர்ந்த | எலுமிச்சையாய் | நிலவு மிதக்குமோர் பொழுதில்’ போன்ற வரிகளில் இந்தத் தலைமுறைக்கேயுரித்தான புதிய உவமானங்கள் மின்னுகின்றன.

மட்டுமில்லை. 2005, 2006ஆம் ஆண்டுக் கவிதைகளே கவிதைத் தரம் கூடியவையுமாகும். மொழியின் அதியுயர்ந்த சாத்தியப்பாட்டை இளங்கோ அளவில் அவை அடைந்துள்ளதோடு, உத்திவகையாலும் மேனிலை கொண்டிருக்கின்றன. அதே வாழ்விலும் சூழ்நிலையிலும் வாழ்ந்துகொண்டுதான் இந்த வகையான பின்நவீனத்துவ உத்திகளுள் ஒருவரால் பிரவேசிக்கமுடியும். ‘கரையொதுங்கும் புறாவின் சிறகுகள்’, ‘ஆழப் புதையுண்ட வேர்கள்’ போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இத் தொகுப்பில் குறைகளே இல்லாமலில்லை. ஆனாலும் அதை வேறுவிதமாகக் கூறலாமென எண்ணுகின்றேன்.

ஒரு தொகுப்பில் பல உணர்வுகளும் கொண்ட கவிதைகள் இடம்பெறலாம். ஆனாலும் அந்த உணர்வுகள் ஒரே கவிதையில் புலப்பாடடையும்போது விகற்பமாய்த் தோன்றும். பூவுக்குள் புரட்சி தோன்றுவதுபோல, அறச் சீற்றம் கொள்ளும் தருணத்தில் புணர்ச்சி விழைவு சுண்டத் தொடங்கிவிடுகிறது இளங்கோவின் கவிதைகளில்.

இதற்கு படைப்பாளியின் மனம் அந்தக் கணத்திலேனும் நிறுதிட்டம் கொள்ளாதிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இது அனுபவக் குறைவாக, இலக்கற்ற சிந்தனைத் தொகுப்புள்ள வெறும் வாசிப்பு மனம் கொண்டதாக மட்டுமே இனங்காணப்படும். அந்தக் குறையை இப் படைப்பாளி கொண்டிருந்ததை தொகுப்பைப் பன்முறை வாசித்த வேளையிலும் என்னால் உணர முடிந்திருந்தது. இது முக்கியமாகச் சீர்செய்யப்படவேண்டிய ஒரு குறைபாடாக எனக்குத் தெரிகிறது. அதுவரை இன்னும் சிறந்த கவிதைகளை நாம் இளங்கோவிடத்தில் எதிர்பார்ப்பதில் ஞாயமில்லை.


00000

தாய்வீடு அக்டோபர் 2008

தான் பயிலாத கவசதாரிகள்

தான் பயிலாத கவசதாரிகள்

கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலக மகா யுத்தங்கள் இரண்டும் முடிவுற்ற காலங்கள், சமூக அக்றையுள்ள படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் மீது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டு மறைந்துபோயிருந்தன. ஏர்னெஸ்ட் ஹேமிங்வே, வேர்ஜீனியா வூல்ஃப் போன்றோர் தற்கொலையே செய்துகொண்டார்கள். உலகமளாவி விரிந்திருந்த மனஅவலத்தின் பதியப்பட்டுள்ள சாட்சியங்கள் மட்டுமே இவை. பதியப்படாத அவலங்கள் இன்னும் எத்தனை எத்தனையோவாக இருந்திருக்க முடியும்.

அந்த அளவுக்கு படைப்பு இயலில் மனமீடுபட்டிருந்தவர்களும் சாதாரண மக்ளைப்போல தம் கையறுநிலைக் காலங்களில் இவ்வாறுதான் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பது யோசிக்க சற்று வியப்பாக இருக்கலாம் நமக்கு. ஆனால், தம் உலகமளாவ விரிந்துள்ள எதிர்பார்ப்புக்களும், மனித சமுதாயம்மீதான அக்கறைகளும் தம் கண்முன்னால் சரிந்துகொண்டிருப்பதைக் காணச் சகிக்க முடியாத இவர்களால் இப்படித்தான் நடந்துகொள்ள முடிந்திருக்கிறது.

அரசுகள் ஒன்றைச் சொல்லிக்கொண்டு வேறொன்றைச் செய்துகொண்டிருந்தன. சுதந்திரம் என்பது தமக்கானது மட்டுமே என்பதான அர்த்தமாக குறுக்கிக்  காணப்பட்டது. அழிவுகளில் தமக்கு மட்டுமானவையே கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டன. விரிந்துகொண்டிருந்த செய்தித்துறையைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த அல்லது தமக்கு ஆதரவானவர்களாகக் கொண்டிருந்த இவர்களால் இப்படி வெகு இலகுவாக தம் ஆதிக்கப் போரினை, சுதந்திரத்துக்கானது அல்லது நாஜிகளுக்கெதிரானது என்பதாகப் பரப்புரை செய்ய முடிந்தது. அதைக் கண்டு வெகுண்டெழும் தனிமனித மனங்கள் இந்நிலையில் உடைந்துபோவது தவிர்க்கப்பட முடியாததுதான்.

ஆனால் நம்மைச் சுற்றி பன்மடங்கு அதிகமான கொடுமைகள்  நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இன்றைய நிலையிலும் இவ்வாறு நடந்துவிடுமென்று பெரிதாக எதிர்பார்க்க முடியாது. நுகர் கலாச்சாரம், ஏகபோக முதலாளித்துவம் வளரவும் வாழவுமான சகல தந்திரோபாயங்களுடனும் கூடிய கருத்தாக்கத்தை முன்வைத்திருக்கிறது. முன்கூட்டிய ஒரு நிகழ்ச்சிரலின் அடிப்படையில் அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் வனப்பில் உண்மை பொய்யாகவும், பொய் மெய்யாகவுமோ, நல்லது கெட்டதாகவும், கெட்டது நல்லதாகவுமோ மறுதலையான தோற்றங்களைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. தமது இயற்கை வளங்களைக் காக்கின்ற முயற்சிகளும், தம் தேசத்து கனிம எண்ணெய் வளங்களையும் தமக்கானது என்று கொள்ளும் போக்குகளும், சுதந்திரத்துக்கான விடுதலைக்கான போராட்டங்களும் இவ்வாறுதான் பயங்கரவாதமாகக் கட்டமைக்கப்பட்டு உலா விடப்பட்டிருக்கின்றன. அதற்கு ஆதரவான குரல்கள் எழுவதை நுகர்பொருட் கலாச்சாரத்தின் அடிப்படையில் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஈராக்கிற்கு எதிரான ஐக்கிய அமெரிக்காவின் யுத்தம், உண்மையில் பயங்கரவாதத்திற்கெதிரான ஒரு பயங்கரவாதம் தவிர வேறல்ல. இதைப் புரிந்துகொள்வதற்கு தம் தகவல் கிரகிப்பை முதலாளித்துவ தொலைக்காட்சி, வானொலி, தினசரிப் பத்திரிகைகளில் கொண்டிருப்பவர்களால் நிச்சயமாக முடியாது. நிகழ்வின் உண்மையென்பது சொல்லப்படுவதற்கு மறுபக்கத்தில் இருக்கிறது என்ற தர்க்கம் இதைப் புரிய மிக அவசியம்.
9|11 சம்பவத்தை எவ்வாறு நாம் விளங்கிக்கொண்டிருக்கிறோம்? பயங்கரவாதிகளின் ஜனநாயகம்மீதான தாக்குதலாகவன்றி வேறெதுவாக?

பயங்கரவாதம் என்பது மனித சமுதாயத்தின்மீது பயங்கரத்தையே விளைவிக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையே. இது அதன் புறம் மட்டுமே. அதற்கு ஓர் அகமும் இருக்கிறது. இந்த அகம்தான் செய்தியின் மறுபக்கம். ‘Terrorism  is the war of  poor and the war is terrorism of  rich’ என்ற பெயர்பெற்ற வார்த்தையின் உண்மை இங்கே கண்டடையப்படக்கூடும்.

தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் என்பது கடந்த நூற்றாண்டுச் சம்பவங்களாகிவிட்டன. அத்தியாவசிய சேவைகள் என்ற முறைப்படுத்தலில் இந்த வேலைநிறுத்தத்தின் முடிவை நிகழ்த்தியிருக்கின்றன அரசுகள். போக்குவரத்துச் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதா இல்லையா என்ற விவாதம் இப்போது ரொறன்ரோவில் நடந்துகொண்டிருக்கிறது.

வேலைநிறுத்த உரிமையென்பது திட்டமிடப்பட்ட சட்டவாக்கத்தில் உருவானதில்லை. அமெரிக்க நிலக்கரி, ரயில்வே, எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் தொழிலாளிகளால் உயிரும் இரத்தமும் தசையும் சிந்திச் சுவீகரிக்கப்பெற்ற உரிமை. உலகநாடுகள் பலவற்றிலும் முறையாகத்தான் பயன்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இன்று பல்வேறு நாடுகளில் இந்த உரிமையில்லை தொழிலாளருக்கு. ரிரிசி தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே நடைபெற்ற அண்மைய ஒரு கூட்டத்தின்போது, தொழிலாளரின் வேலைநிறுத்த உரிமையை அங்கீகரிக்கும் வகையில் போக்குவரத்துச் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்துவதை ஒப்புக்கொள்ளப் போவதில்லையென நிர்வாகம் தொழிற்சங்கங்களுக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறதான தகவல் மனச் சமாதானத்தைத் தருகிறது. ஆனாலும் பல்வேறு நாடுகள் இந்த உரிமையை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டன. அப்படியானால் இது குறித்து எழும் ஆவேசங்கள் எப்படியாகச் சென்று முடிவடையும் என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

1973 இல் நிர்மாணமான அந்த வர்த்தக இரட்டை மாடிக் கட்டிடங்கள் குறியீடுபூர்வமானவை. உலக அதிகார மய்யத்தின் குறியீடுகள் அவை. அதனால்தான் இரட்டைக் கோபுரத் தகர்வினைப்பற்றி ஒருமுறை கூறவந்தபோது சிந்தனையாளர் ழான் போத்ரியா, ‘வரலாற்றினதும் அதிகாரத்தினதும் விளையாட்டு அனைத்தும் இந்த நிகழ்வினால் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆய்வின் சூழலும் அதன் விதிகளும்கூட இந்த ஒற்றை நிகழ்வினால் பாதிக்கப்பட்டுவிட்டன’ என்று கூறினார்.

அப்படியானால் இந்த இரட்டை மாடிக் கட்டிடங்களின் அழிவில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 1300 அடிகளுக்கு மேலான உயரமாக வளர்ந்து வானைத் தொட்டுக்கொண்டிருந்த கட்டிடங்கள் இவை. ஒரு சதுரமான அடித்தளத்திலிருந்தது அவற்றின் நிர்மாணம். ஒன்றெயொன்று பார்த்தபடி இக் கட்டிடங்கள். ஒன்றையொன்று பிரதியெடுத்ததுபோலவும் இருந்தன இவை. இவை கட்டிமுடிக்கப்பெற்றதும் நியூயார்க் நகரின் அமைப்பே மாறிவிட்டதாக ஒரு கட்டிடக் கலை நிபுணர் கூறினார். ஆம், அதுவரையிருந்த நகரின் அமைப்பை முழுமையாக மாற்றிய வடிவங்கள்தாம் இவை. கண்ணாடியாலும் இரும்பினாலும் சீமெந்தினாலும் அமைந்து உயர்ந்தெழுந்த ராக்பெல்லர் கட்டிடங்களும் நியூயார்க் நகரில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்த இரட்டைக் கோபுரங்கள் முகப்புகள் அற்றவை. அதாவது முகங்கள் அற்றவை. அதனால்தான் ஏகபோகத்தினதும், போட்டியின்மையினதும் குறியீடுகளாக இவைகளால் நிமிர்ந்து நிற்க முடிந்திருந்தது. இந்த இரட்டைக் கூர்ங்கோபுரங்கள் குருட்டுத்தனமானவை என்று குறிப்பிடுகிறார் போத்ரியா. தம்மளவில் மூடிக்கொண்டவை. உலகத்தைநோக்கித் திறக்காதவை.

அதனால்தான் இவை தாக்குதற் குறிகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இந்த விளக்கங்களெல்லாம் நமக்கு இல்லை. ஆனாலும் நாம் நினைக்கிறோம், நாம் அனைத்தையும் தெரிந்துகொண்டிருப்பதாக.

நம் அறிவு நுகர்பொருட் கலாச்சாரத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அதனால்தான் செய்தியின் அடியினாக, சொல்லப்பட்டதை நம்பும் பிராணியாக நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். அந்த விசுவாசத்துக்காகவே சில எலும்புத் துண்டுகள், சிலவேளை சிறிய அளவான இறைச்சியுடன் வீசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் படைப்பாளிகள், சிந்தனாவாதிகள் போன்றோர் நம் தலைமுறையில் தற்கொலை செய்யப்போவதில்லை அல்லது செய்வதில்லையென்று சொன்னேன்.

பாரத யுத்தம் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் பத்து நாளில் பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை தான் சண்டைசெய்ய மாட்டேன் எனக் கூறி கர்ணன் யுத்தத்திற்குச் செல்லவில்லை. பீஷ்ம மரணத்தின் பின் கர்ணனுக்கும் துரோணருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துரோணர் யுத்தம் செய்யாது விட்டுவிடுகிறார் சில நாட்கள். ஆனால் தான் பலமிழந்து நிற்பதாகக் கூறி அவரை யுத்தம் செய்ய வரும்படி துரியோதனன் இரந்து கேட்டதற்காய் அவனைப் பாதுகாக்க தன் மார்புக் கவசம் போதும் எனவும், அதை எத்தகைய சிறந்த வில்லாளியாலும் பிளக்க முடியாது எனவும் கூறி தன் கவசத்தைக் கொடுத்துவிடுகிறார் துரோணர். துரியோதனன் அதை அணிந்துகொண்டு போய் யுத்தம் செய்து அன்றைய பொழுதுக்கு உயிரோடு திரும்புவதாகக் கதை.

இந்தப் பகுதிக் கதை கூறும் அத்தியாயம் வியாச முனியின் மகாபாரதத்துப்படியான ராஜகோபாலாச்சாரியின் பாரதக் கதையில் ‘தான் பயிலாத கவச தராணம்’ எனப் பெயர்பெற்றிருக்கும்.

பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், பின்நவீனத்துவமெல்லாம் மிக உன்னதமான கருத்தாக்கங்கள். தம் சமூக விருத்தியை மட்டுமன்றி, உலக மாந்தர் அனைவருக்குமான சுதந்திரத்தையும் சுபீட்சத்தையும் யாசித்துக்கொண்டிருப்பவை. நடைமுறையிலிருந்து  விலகி, புதிய நடைமுறைகள் படைக்க முனைபவை. ஆனால் இவற்றின் பெயர்கள் இன்று சிலரின் முகத்திரைகளாகி விட்டிருக்கின்றன. தேசிய இன விடுதலைகளுக்கும், நிரந்தர சமாதானங்களுக்கும் எதிராகத் தம் குரலைக் காட்ட முனைந்திருப்பது எனக்கு இந்த பாரதக் கதையினையே ஞாபகப்படுத்துகிறது. இதை ‘பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று’ என்றும் சொல்லலாம்தான்.

இப்படியான நடைமுறையாளர் இருக்கிற இடத்தில் நமக்கு முந்திய காலத்துச் சிந்தனையாளர்களுக்கு சமூக அவலங்களாலும், அரசுகளின் வல்லாதிக்கங்களாலும் ஏற்பட்டதுபோன்ற தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், மனச் சிதைவுகள் வருமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக எனக்கில்லை.

00000

தாய்வீடு, செப்.2008)

Saturday, August 16, 2008

சே குவேரா: ஒரு புரட்சியாளனின் உண்மைக் கதை
--------------------------------------------------------------------------------------------------------
வரலாற்றுச் சோகங்கள்


கடந்த இரண்டாயிரமாண்டுச் சரித்திரம் பல்வேறு புதைபொருள் ஆய்வுகள், மற்றும் நவீன அறிவியல் ரீதியிலான அறிமுறைகளால் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றிலிருந்து எமக்கு இக்காலகட்டத்திய அண்ணளவான வரலாறு கிடைத்திருப்பதாகச் சொல்ல முடியும். இதன் உண்மைத் தன்மை சந்தேகத்துக்கு உரியதாயினும், சொல்லப்பட்ட அந்த வரலாற்றினடியாகவே இச் சந்தேகங்கள் தோற்றமெடுக்கின்றன என்பதும் கவனம் கொள்ளப்படவேண்டும். உண்மையின் தவிர்க்கவியலா அழுத்தம் காரணமாய் இவ்வரலாறுகள் மாற்றியெழுதப்பட்டும் வருகின்றன. இல்லையெனில் மாற்றுவரலாறாய் விஸ்வரூபமெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த வரலாறு முழுக்க அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிற நன்மைகளும், நல்லவர்களும் அழிக்கப்பட்ட சோகங்கள்தான் விரவிக்கிடக்கின்றன.

வரலாறு அறிந்துள்ள முதல் புரட்சியாளன் யேசுநாதர்தான். அந்த மரிப்பு – கொலைப்பாடு – தாங்கொணாத் துக்கம். கொடுமையின் உச்சம். அதைச் சினிமா மொழியில் வெளிக்கொண்டுவந்தது ‘THE PASSION OF CHRIST’. மனித இனம் இன்றும் யேசுநாதர் சிலுவையையே கடவுளாய் வணங்கி ஆன்ம வேதனை தணிகிறது.

அன்றைய கத்தோலிக்க மதத்துக்கு எதிராகக் குரலெழுப்பிய எராஸ்மஸ் எரித்துக் கொல்லப்பட்டான். மன்பதைக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவன் பிளேட்டோ. சிந்தனையென்பது உண்மையை அறிவதற்கான கதவமென்பதை உணர்ந்து, தமக்கெதிரான கலகமாக அச் செயற்பாட்டை எண்ண முடிந்ததில், அன்றைய கிரேக்க அதிகார வர்க்கம் அவனை நஞ்சுகொடுத்துக் கொலைசெய்தது. அறிவுலகத்தின் தலைசிறந்த பண்டைய சிந்தனாவாதியென இன்றும் உலகம் அவனைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

நவீன காலத்தில் அமெரிக்காவில் கறுப்பினத்தாரின் வாழ்வுரிமையை ஊர்ஜிதம்செய்யும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த ஜோர்ஜ் வாஷிங்டன் சுடப்பட்டதும், அதிகார மமதைகொண்டு தொடங்கப்பட்ட வியட்னாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவிருந்த ஜோன் எப். கென்னடி கொல்லப்பட்டதுமான சம்பவங்கள் மறக்கப்பட முடியாதன.
அமெரிக்கக் கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டும் வெகுகாலமில்லை. மகாத்மா என அழைக்கப்படும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி இந்துத்துவ வெறியினால் கொலை செய்யப்பட்டதை நம் அண்டைய தேசச் சரித்திரமாக நாமறிந்திருக்கிறோம்.

இத்தனை கொலைகளில் யேசுநாதரின் கொலைக்கு நிகரானது ஏர்னெஸ்ட் சே குவேரா என்ற ஆர்ஜென்ரீனாக்காரனின் கொலை. உலகம் முழுவதையும் தன் ஆயுத பலத்தால் அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவின் சதிவலைப் பின்னலினால் இது நடந்தது. தென்னமெரிக்காவின் அறியாமை, வறுமை, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராக அப் பகுதியையே சோஷலிச மார்க்கம் நிறைந்த பூமியாக ஆக்கிவிட தன் தேசம்விட்டு வெளியேறி கியூபாவிலும், பொலிவியாவிலும், இன்னும் மற்றுமுள தென்னமெரிக்க மண்டலம் முழுவதிலுமே புரட்சியைக் கிளர்த்திவிட உழைத்த சேவினது மறைவுபோல் கொண்டாடப்படும் வரலாற்றுக் கதாநாயகன் நிகழ் சரித்திரத்தில் இல்லை.

பாபா சாகேப் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து ஆளும் வர்க்கத்துச் சாதிவெறியர்களுக்கு எதிராக இடையறாக் கருத்து யுத்தம் நடத்திக்கொண்டிருந்தவர். இன்றைக்கு அவர் பாதையில்தான் இந்தியாவின் தலித்திய இயக்கங்கள் ஏறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றன. இருந்தும் எந்த வர்க்கத்துக்கெதிராக தலித்துக்கள் போராட்டம் நடத்துகின்றார்களோ, அந்த தலித்துக்களின் போராட்டங்களுக்கு சிந்தனைத் திறன் அளித்த அதே அம்பேத்கரை நினைவுகூர்ந்து ஆளும் வர்க்கங்களே நினைவுதினம் கொண்டாடுகின்றமை வரலாற்றின் முரண்நகை.

சே குவேரா கொல்லப்பட்டமை உலகமளாவிய துக்கத்தைக் கிளப்பியது. உண்மையினதும், புரட்சியினதும் ஆதரவாளர்களின் கதாநாயகனாக சே வளர்வதைத் தடுக்கவே முடியாத நிலை அதிகார வர்க்கத்துக்கு. அம்பேத்கர்போல் சே அரசாங்கங்களால் கொண்டாடப்படவில்லையெனினும், வேறுவிதமாக சேவினது மறைவு கவுரவிக்கப்படுகிறது. ஒரு புரட்சியாளனின் உருவப்படம் பொருந்திய பெனியன்கள் கோடிகோடியாய் விற்கப்பட்டமை உலக வரலாற்றில் எங்கேயும் நடைபெறவில்லை, எப்போதும் நிகழவில்லை. ஒருவகையில் சே என்றும் நினைவுகூரப்படும் புரட்சியாளன், சிலுவையில் தன்னை மரிக்கக் கொடுத்த யேசுநாதர்போல்.

அவர் வியாபார நோக்கங்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது எந்தவகையிலும் அவர்மீதான அன்பையும், கவுரவத்தையும் உண்மை ஓர்ந்த மனிதர்களிடத்தில் அகற்றிவிடவில்லை. அதிகார வர்க்கம் அம்பேத்கர் நினைவு நாளைக் கொண்டாடுவதின் உள்நோக்கம் புரியப்படக் கூடியது. அதுபோல் சேவினது உருவம் வியாபார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுவதும் புரிந்துகொள்ளப்படக் கூடியதே. அதிகார வர்க்கங்களின் இக் காயடிப்பு முயற்சிகளினால் அவர்களது முதன்மையும், முக்கியத்துவமும் உலக மக்கள் பார்வையில் நீர்த்துப்போவற்குப் பதிலாக, இன்னும் வலிமைகொண்டு மேற்கிளம்பவே செய்தன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஒன்று சொல்லத் தோன்றுகிறது: ‘கொல்லப்படுபவர்கள் பாக்கியவான்கள்.’

இம் மாபெரும் புரட்சியாளன்பற்றி பல்வேறு சினிமாக்கள் வந்துள்ளன. ஆயிரக் கணக்கான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ‘மோட்டார்ச் சைக்கிள் டயரி’ என்ற சினிமா சேவின் இளமைக்கால வரலாற்றை, ஒருவகையில் தென்னமெரிக்காவின் சமகால வரலாற்றையுமே, சொல்லிய சினிமா. தென்னமெரிக்க நாடுகள் சிலவற்றில் பயணம் செய்து சே எழுதிய நாட்குறிப்பினது அடிப்படையில் அச்சினிமாவின் பிரதியாக்கம் இருந்தது.

சே பற்றிய நூல்களில் குறிப்பிடக்கூடியது அண்மையில் வெளிவந்துள்ள JhON LEE ANDERSON எழுதிய ‘CHE GUEVARA: A REVOLUTIONARY LIFE’. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் சினிமாதான் ‘THE TRUE STORY OF CHE GUEVARA’. இதை விவரணப்படமா, சினிமாவா எனச் சொல்லமுடியாதிருப்பது இப்படவாக்கத்தின் தனித்தன்மை.

அண்மையில் டிவிடியில் வெளிவந்திருந்தது. பார்த்தேன். அதிர்ந்துபோனேன். ஆனாலும் அதனடியில் இந்த உலகம், இந்த வாழ்க்கைபற்றிய ஒரு நம்பிக்கையிழையும் சேர்ந்து பிறந்தது. இதுபற்றி ஒரு நண்பருக்குச் சொன்னதும் எல்லா வாடகை DVD க்கடைகளிலும் தேடிவிட்டு கிடைக்கவில்லை என்றார். நானும் தேடிப்பார்த்தேன். நான் முன்னர் எடுத்த கடையில் அதன் ஒரிஜினல் கவர்கூட காணக்கிடைக்கவில்லை. என்ன நடந்தது என்று யூகிப்பதும் சிரமம்தான். இது மறைந்ததற்குப் பின்னால் ஒரு கதையே இருக்கக்கூடும். அப்படி எதுவுமேயில்லாமலும் இருக்கலாம்தான். ஆனால் இந்த  நல்ல சினிமா பார்வையாளர்களின் மத்தியில் ஒரு களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘அவர் ஒஃப் த பர்னாசெஸ்’ என்றொரு ஆர்ஜென்ரீனிய படம் வெளிவந்திருந்தது. நூற்றெண்பது மணத்தியாலங்கள் படப்பிடிப்புச் செய்து, எண்பது மணத்தியாலங்களுக்குக் குறைத்து, கடைசியில் நாலு மணி இருபது நிமிஷங்களுக்கு எடிட்டிங் செய்து, மூன்று பாகங்களாய் வெளிவந்திருந்த ஒரு அரசியற் சினிமா அது. இரகசியமாய்த் தயாரிக்கப்பட்டது. ஏறக்குறைய ‘புத்தரின் பெயரினால்’ (IN THE NAME OF THE BUDDHA) என்ற சமகால இலங்கையர் கதைபற்றிய இந்திய சினிமாபோல அது.

இப்போது இன்னும் இரண்டு சே பற்றிய குறும்படங்கள் அல்லது விவரணத் தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளிவந்திருப்பதாய்த் தெரியவருகிறது. அண்மையில் தயாரிக்கப்பட்டவை. ஆனாலும் இன்னும் எனக்கு பார்க்கக் கிடைக்கவில்லை. இவைபற்றிய விமர்சனங்களையே சஞ்சிகைளில் பார்த்தேன். இவைபற்றிச் சொல்லப்பட்ட குறைபாடுகளில் முக்கியமானது சே குவேரா சோவியத் ரஷ்யாவுடனும் செஞ்சீனாவுடனும் கொண்டிருந்த தொடர்புகள்பற்றி யாதொரு பிரஸ்தாபமும் இந்த இரண்டு தமிழ் விவரணப் படங்களிலும் இல்லையென்பது. அவற்றை நிவர்த்தி செய்வதாயிருந்தது ‘THE TRUE STORY OF CHE GUEVARA’.

நாற்பதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘அவர் ஒஃப் த பர்னாசஸ்’ படத்தின் இறுதியில் சில நிமிடங்கள் காட்டப்பட்ட இறந்த சேவின் படம் மிகத் துன்பம் செய்வதாயிருந்தது. ஆனால் THE TRUE STORY OF CHE GUEVARA விலிருந்த கூடுதலான விவரணம் என்னவெனில், சே குவேரா உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் எந்தத் திசையில் செல்லவேண்டுமென்பதைத் தீர்மானித்து, அதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட எதிர் அணியைத்  திரட்டும் முயற்சியாக செஞ்சீனத்தை அணுகி மாஓ சே துங்கினைச் சந்தித்தமையாகும்.

பொலிவியாவில் கொல்லப்பட்டு புதைக்கப்பெற்ற சேவின் உடல் அறுபதுக்களின் இறுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இரண்டு மணிக்கட்டுகளும் அற்றதாக அது இருந்தது. வெட்டியெடுக்கப்பட்ட மணிக்கட்டுக்கள் எங்கே சென்றன  என்பதற்கான விடை, இந்த சே பற்றிய விவரணப்படத்தில் சாட்சிகளின் மூலமாக முன்வைக்கப்படுகிறது.
சே மறைந்திருக்கலாம். ஆனால் அவரது ஞாபகங்கள் உலகின் மனச்சாட்சி பயிலும் உலகங்களில் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது என்பதை படத்தில் காண்கிறபோது மானிடம் பாடும் மனித ஜீவன்கள் மரணத்தைத் தழுவுவதில்லையென மனம் எக்காளமிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெறுபவர்கள் உண்மையில் பாக்கியவான்கள்.000

தாய்வீடு, ஆவணி  2008

Sunday, June 22, 2008

என் நினைவில் சுஜாதா

என் நினைவில் சுஜாதா

ஆண்டுத் தொடக்கத்தில் அந்த மரிப்பு நிகழ்ந்தது. திரு. சுஜாதாவின் மறைவை முதன்முதல் கேள்விப்பட்டபோது அதிர்ச்சிதான் அடைந்தேன். ஆனாலும் மெல்ல அந்த நினைப்பு மனத்தைவிட்டு அகன்று அகன்று போய்க்கொண்டிருந்துவிட்டது. அவரது ஞாபகங்களைப் பதிவாக்கவேண்டுமென்ற எண்ணம் பெரிதாக என்னை அலைக்கழிக்கவில்லை.

சுஜாதா மறைந்து இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. உயிர்மை, காலச்சுவடு இதழ்கள் அவருக்கான நினைவுப் பக்கங்களையும் வெளியிட்டுவிட்டன. இன்னும் ஆனந்தவிகடன் போன்ற வாராந்தரிகளில் அவர்பற்றிய ஞாபகங்கள் அவ்வப்போது பகிரப்படுவதோடு, அவரது எழுத்துக்களும் ஒரு தேர்வில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இப்போது பார்த்து எனக்கு இப்படியொரு தவிப்பு எழுந்திருக்கிறது.

சிலவேளைகளில் மனத்துக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நினைவுகளை ஒன்றுதிரட்டிப் பார்க்கும்போது திடுக்கிடும்படியாய் ஆகிவிடுகிறதுதான். சிலரது ஞாபகங்களும் அப்படியே. நம்மோடு மிகநெருக்கமில்லையென்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒருவகையில் அவர்களுடனான பழக்கம் ஆழமாக இருந்திருப்பதை எண்ணி வியக்கின்ற தருணம் வாழ்க்கையில் எப்போதாவது ஒருவருக்கு ஏற்படவே செய்திருக்கும்.
என் கதையும் அதுதான்.

சுஜாதா தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய ஆளுமை. திரைப்படத் துறையிலும் அவருக்கு அதேயளவான மதிப்பும் மரியாதையும் இருந்தது. தினமணி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற நிறுவனங்களின் கதவுகள்போலவே, சுஜாதாவுக்கு ஏவிஎம்’மினதும், ஜெமினியினதும் கதவுகளும்கூட திறக்கும்.

மறக்கமுடியாத சில உன்னதமான சிறுகதைகளின் கர்த்தாவாய் இருந்ததோடு, சங்க இலக்கிய ஆர்வமும் அதுபற்றிய அறிவும் கொண்டவராய் அவர் விளங்கினார். நற்றிணை, சிலப்பதிகாரம், திருக்குறள் போன்றவற்றிற்கான அறிமுகமாய் அவர் இலகு தமிழில் செய்த இனிய எழுத்துக்கள் இன்றைக்கு தமிழிலக்கியப் பயிற்சி அற்றவர்களுக்கும் இளைய தலைமுறையினர்க்கும் நிறையவே உதவக்கூடியவை.

எழுத்துலகிலும் திரையுலகிலும் நிகரான செல்வாக்குப் பெற்றிருந்த திரு.சுஜாதாவின், எழுத்துக்களை, திரையாக்கங்களை மதிப்பிடாமல் ஒரு சக மனிதனாய், ஒரு இலக்கியவாதியை மதிக்கும் பண்புடையவராய் எப்படி அவர் இருந்தார் என்பதை என் அனுபவங்களினூடாகத் தொட்டுக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

தமிழ் நாட்டில் நான் தங்கியிருந்த காலத்தில் கணையாழி கவிதை அரங்குகளில்தான் சுஜாதாவை நான் முதன் முதலாகப் பார்த்தேன். ஆனாலும் ஓரிரு வார்த்தைகள் பேசியது தவிர, வேறு பெரிதான பழக்கமேதும் எமக்கிடையே ஏற்பட்டுவிடவில்லை.

அம்பலம் மிஞ்சிகை(அம்பலம்.கொம்) வெளியாகி இரண்டாவது ஆண்டிலென்று நினைக்கிறேன். இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்த நண்பரொருவர், ‘சுஜாதா உங்களைச் சந்திக்கவேண்டுமென்று நீண்டகாலமாகத் தேடிக்கொண்டிருக்கிறார், அண்மையில் என்னைச் சந்தித்தபோதுகூட முகவரி அல்லது தொலைபேசி எண் கேட்டார், நான் இரண்டுமே அவருக்கில்லை, ஆனால் இம்மாத இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியும், அப்போது உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என்று கூறிவந்தேன்’ என்றார். சுஜாதா என்ன விஷயமாக என்னைச் சந்திக்க விரும்பினார் என்று நண்பருக்குத் தெரிந்திருக்கவில்லை.

வீட்டில் தொலைபேசி இல்லாததோடு, அடிக்கடி வீடு மாறும் அவஸ்தையிலும் இருந்த நான் இப்படித்தான் சிலபோது முகவரி இல்லாதவனாக ஆகியிருப்பேன். அப்படியான தருணங்களில் என்னைச் சந்திக்கக்கூடிய ஒரே இடம் இலக்கியக் கூட்டங்களாகவே இருக்கும். என்னை நண்பர் சந்தித்து விபரம் தெரிவித்தபோது மிகவும் காலதாமதமாகியிருந்தது. இருந்தாலும் மவுண்ட் ரோடு செல்ல நேர்ந்த ஒருநாள் அம்பலம் இணைய தள அலுவலகம் சென்று சுஜாதாவைச் சந்தித்தேன்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படப் பிரதியாக்கத்தில் நான் இலங்கைத் தமிழ் சார்ந்த பகுதியில் சுஜாதாவோடு வேலை செய்யும் சந்தர்ப்பம் அவ்வாறுதான் நேர்ந்தது.

இது நிகழ்ந்து சில மாதங்களின் பின் மீண்டுமொரு முறை சுஜாதாவிடமிருந்து அழைப்பு. நேரில் பார்த்தபோது, ‘இப்போது அங்கு டயலக் கோச்சாக இருப்பவரை வைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் ரி-ரிக்கார்டிங்கை முடிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களால் அந்த வேலையைச் செய்துகொடுக்க முடியுமா?’ என்று கேட்டார்.

நான் கண்டிப்பாக முடியாது என்று மறுத்தேன். திரையுலகின் போக்கு எனக்குத் தெரியும், அங்கு பணத்துக்கும் பகட்டுக்கும் இருக்கும் மதிப்புப்போல் மனிதருக்கு இருப்பதில்லை, ஒரு இலக்கியவாதியாய் என் கவுரவம் எனக்கு முக்கியமென்பதுவே நான் மறுப்பிற்குச் சொன்ன காரணம்.

அப்படியெதுவும் நேராமல் தான் பார்த்துக்கொள்வதாய் எனக்கு உத்தரவாதம் தந்தார் சுஜாதா. நானும் ரி-ரிகார்டிங் நடைபெற்ற ஸ்ரூடியோவுக்கு மறுநாள் சென்றேன். சென்றேன் என்றால் போதுமானதில்லை. ஸ்ரூடியோவிலிருந்து கார் வந்து அழைத்துச் சென்றது. அன்று பத்து மணியளவிலேயே தயாரிப்பாளர்களில் ஒருவராகிய திருமதி. சுஹாசினி வந்து என்னைப் பார்த்ததோடு, என் கவுரவம் குறையாமல் நடத்தப்படுவதற்கான அறிவுறுத்தல்களையும் உதவி இயக்குநர்களிடம் கூறிச் சென்றார்.

சுஜாதா சொன்னதையெல்லாம் எங்கே நினைவில் வைத்திருக்கப்போகிறார், ஏதாவது கவுரவப் பிரச்சினையெழுந்தால் பேசாமல் நடையைக் கட்டவேண்டியதுதான் என்பதே என் எண்ணமாக அதுவரை இருந்தது. ஆனால் சொன்னதை மறக்காமல், ஒரு இலக்கியவாதி மனம் வெந்துவிடக்கூடாதென்பதை மிக ஞாபகமாக வைத்திருந்து அவர் செய்த ஏற்பாடு என்னை சிலிர்க்கவைத்துவிட்டது.

இன்னொரு சந்தர்ப்பம்.

இன்னும் சுஜாதாவின் அந்த முகமும், பார்வையும் நினைவழியாமல் என்னுள்.
மோப்பக் குழையும் அனிச்சம்போல் மிக மென்மையும் நளினமும் கொண்ட மனங்களும் இருக்கின்றன. அனிச்ச மலரை நான் பார்த்ததுமில்லை, உணர்ந்ததுமில்லை. ஆனால் சில அற்புதமான மனங்களைச் சந்தித்திருக்கிறேன். அவற்றுளொன்று சுஜாதாவினது.
ஒருமுறை சுஜாதாவை வீட்டிலே சந்தித்து அவரோடு கூடிக்கொண்டு இயக்குநர் மணிரத்தினத்தைச் சந்திக்கச் செல்வதாக இருந்தது. ஒரு காலை வேளை பத்து மணியளவில் சுஜாதா வீடு சென்றேன்.

சுஜாதா அவசரமாக அப்போதுதான் வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார். நான் சென்றதும் உள்ளே வந்தமரும்படி கூறிவிட்டு எடுத்துச் செல்லவேண்டிய சில கோப்புக்களைச் சரிபார்த்தும், சில தாள்களை தேடியும் கண்டுபிடித்து உள்ளே வைத்துக்கொண்டும் சுஜாதாவிருக்க, அவரது மனைவி அப்போது சோபாவிலேதான் உட்கார்ந்திருந்தவர், என்னைப் பார்த்து, ‘பாருங்கள், தேவகாந்தன்! எப்போதும் இப்படித்தான். ஓய்வென்பதே இல்லை. மூன்று நான்கு மணிநேரம்கூடத் தூங்குவது கிடையாது. சாப்பாடுகூட அப்படித்தான். இப்போது உங்களோடு வருவதற்கு நேரமாகிவிட்டதென்று காலையில் எதுவும் சாப்பிடாமல்தான் வரப்போகிறார். நீங்கள் சாப்பிட்டு வந்தீர்களா?’ என்று கேட்டார். நான் சாப்பிட்டு வந்ததாகத்தான் சொன்னேன். ‘பரவாயில்லை. கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிட்டால், அவரும் ஒரு இட்லியாவது சாப்பிட்டுவிட்டு வருவார்’ என்றார் அவர்.

எனக்கு ஒருமாதிரிப் போய்விட்டது. இதய சத்திர சிகிச்சை முடிந்து தேறிக்கொண்டிருப்பவர் சுஜாதா. அவருக்காகவேனும் சாப்பிடலாம்தான். ஆனால் ஒரு வீட்டில் அந்தமாதிரி ஏதுகாரணத்தால் செய்வதும் ஒரு கவுரவக் குறைவு. சாப்பிட்டுச் சென்றிருந்த வேளையிலும், சாப்பிடும்படியும், கொஞ்சமாகச் சாப்பிடுங்கள் என்றும் உபசாரம் பண்ணியிருந்தால், நான் சிலவேளை மனம்நோகாமல் சாப்பிட்டிருக்கக்கூடும். ஆனால் இன்னொருவர் சாப்பிடுவதற்காக தான் அங்கே சாப்பிட நேர்வதை தன்மானமுள்ள மனது பொறுக்காது. இருந்தாலும் சுஜாதாவின் உடல்நிலையைக் கருதி சாப்பிடவே முடிவுசெய்தேன். பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைகிறதை நயத்தக்க நாகரீகமாக நம்புகிறவன் நான்.

அப்போது என் முகத்தில் ஏதோ பட்டுப்பூச்சி மொய்ப்பதுபோல் உணர்விலாகி நிமிர, சுஜாதாவின் கண்கள் என்மீது படிந்தும் மிதந்தும் விலகியுமாய் சஞ்சரித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தக் கண்களில் இருந்த உணர்வு என்னவென்பதை இப்போதும் என்னால் அறுதியிட்டு உரைக்க முடியவில்லைத்தான். என் மீதிலான இரக்கம், சுயஇரக்கம் என்பதில் எது அது? வகையுரைக்க முடியாவிட்டாலும் அது அபூர்வமானவோர் உணர்வு.

நான் ஒன்றோ இரண்டோ இட்லி சாப்பிட்டேன். சுஜாதா ஒரு இட்லி சாப்பிட்டார் என்று ஞாபகம். அதுவும் நின்ற நிலையில் தாள்களைச் சரிபார்த்து வைத்துக்கொண்டே.

கோப்பி குடிக்கிறபோதுதான் சுஜாதாவின் மனைவி சொன்னார், ‘தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள், தேவகாந்தன். சுஜாதா சாப்பிடவேண்டுமென்பதற்காக அல்ல, நீங்கள் சாப்பிடவேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்’ என்றார்.

நான் அதிர்ந்துபோனேன்.

அப்போது சுஜாதாவின் முகத்தைப் பார்த்தேன். விகசித்துப்போய்க் கிடந்தது.
மனிதனாக வாழ்வது சுலபம். மனிதனாக ஒழுகுவது சிலபேரால்தான் முடிகிறது. அதுவும் சிலநேரங்களில்.

000

தாய்வீடு, கனடா 

இயல் விருது

இயல் விருது1.

எந்தப் பரிசின் பின்னணியிலும் ஒரு அதிகார நுண்ணரசியல் உள்ளூர ஓடியிருக்கும் என்பது சரியான வார்த்தைதான். மிகப்பெரும் இலக்கியப் பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கலின் பின்னணியிலும், அதன் தெள்ளத் தெளிவான நுண்ணரசியலின் வெளிப்பாட்டை ஒருவரால் உணர முடியும். பல்வேறு தருணங்களிலும் கம்யூனிச நாடுகளாயின் அவ்வரசியல் கட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் நாடுகளாயின் இஸ்லாத்தின் இறுகிய சமூக அரசியல் தீவிரப் போக்குகளை மறுதலித்தும் எழுந்த இலக்கிய மயப்படுத்தப்பட்ட எழுத்துக்களே பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இவ் அமைப்பின் 1901ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்துவரும் நூற்றாண்டுக் கால வரலாறு தெரிவித்து நிற்கின்றது.

புலிச்சர் (Pulitzer ), புக்கர், க்ரொஸ் வேர்ட் என்பவை மட்டுமல்லாது, கனடாவின் அதிகூடிய பரிசுத் தொகையை (ஒரு லட்சம் கனடா டொலர், தேர்வு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை) பிரெஞ்சுமொழியில் படைக்கும் எழுத்தாளருக்கு அவரின் வாழ்நாள் சாதனையை முன்வைத்து வழங்கும் கில்-கொர்பெய்(Gilles- Corbei) விருது, இருபத்தையாயிரம் டொலர்களை ஆண்டுதோறும் அவ்வாண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய ஆக்கத்துக்காக வழங்கும். கில்லர் அமைப்பின் பரிசளிப்புகள்கூட இந்த நுண்ணரசியலின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டதாகச் சொல்லமுடியாதேயுள்ளது.

இலங்கை சாகித்திய மண்டல அமைப்பானாலும் சரி, இந்திய சாகித்திய நிறுவனமானாலும் சரி, வேண்டப்பட்டவர்களுக்கான அரசியல்வாதிகளின் பரிந்துரைப்பிலேயே பல காலமும் பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருப்பதை நாம் நிதர்சனத்தில் கண்டிருக்கிறோம். எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், சு.வில்வரத்தினம் போன்ற சிறந்த படைப்பாளிகள் இலங்கையில் பரிசு பெறாது போனதற்கும், அதுபோல் இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளியான சுந்தர ராமசாமி போன்ற பலர் தாம் வாழும்காலத்திலேயே பரிசுபெறாது போனதற்கும் வேறு காரணங்களை நாம் கண்டுவிடமுடியாது. ஐந்து முறை மகாத்மா காந்தியின் பெயர் சமாதான விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தும் அவரது பெயர் தெரிவாகாமலே போனமை, நோபல் பரிசுத் தேர்வாளர்களின் மேற்கத்தியச் சிந்தனைக் குறைபாடு காரணமான பெரும் அவமானமாய் இன்றும் அதன்மேல் படிந்தேயிருக்கிறது. தமிழ்நாட்டில் ராஜராஜன் பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசுகளிலும் இந்தப் பின்னணியின் குறைந்த நிலைச் செயற்பாடுகள் இருக்கவே செய்கின்றன.

ஒரு படைப்பு எந்தச் சமூகத்துக்குத் தரப்படுகிறதோ அந்தச் சமூகத்திலிருந்து அந்தப் படைப்பிற்கான அங்கீகாரத்தை ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பது இயல்பானது. படைப்பு எந்தச் சமூகத்தில் முகிழ்க்கிறதோ, அந்தச் சமூகம் பரிசு கொடுக்கும் தகுதியோடும் இருக்கவேண்டும். பரிசின் பின்னால் நுண்ணரசியல் இயங்குகிறது என்பது பரிசே தேவையில்லையென்பதாக ஆகிவிடக்கூடாது. பரிசு ஒரு சிறந்த படைப்புக்கான கவுரவம்.

2.

கனடா இலக்கியத் தோட்டம் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரு நிறைவை நோக்கிய பாதையில் தன்னைச் செலுத்தி வந்திருக்கிறது என்பது ஓரளவேனும் அந்த அமைப்பின் இயங்குமுறையைத் தெரிந்திருப்பவர்களுக்கு புரியப்கூடிய சங்கதி. இதையே விருதுபெற்றோரின் பட்டியலும் சுட்டிநிற்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கியப் பரிசுகளையும், மற்றும் தமிழ்க் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த பரிசினையும் இலக்கியத் தோட்டம் அறிவித்து வரினும், அதன் முதன்மையான பணி இயல் விருது வழங்கலாகவே எனக்குப் படுகிறது. அது தமிழ்மொழி சார்ந்த ஒருவரின் வாழ்நாள் சாதனைக்கானது. இயல்விருது என்ற பதச்சேர்க்கையே ஒரு ஸ்தூலக் கனதியடைந்து தன் உன்னதத்தின் அவாவுகையை வெளிப்படுத்தி நிற்பதும் கவனிக்கப்படவேண்டும்.

2001 ஆம் ஆண்டில் அமைப்பாகிச் செயற்பட ஆரம்பித்த இலக்கியத் தோட்டம், தன் முதல் இயல் விருதை திரு. சுந்தர ராமசாமிக்கு அறிவிக்கிறது. பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமியின் படைப்பிலக்கிய ஆற்றல் சந்தேகத்துக்கு இடமற்றது. அவரது சிறுகதைகளையும், பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளையும் நீக்கிவைத்துப் பார்த்தால், அவரது நாவல்கள் ஒரு காலகட்டத்தின் சிறந்த படைப்பாளியாக அவரை நிறுத்திவைக்கப் போதுமானவை. ஜே.ஜே. சில குறிப்புக்கள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், ஒரு புளியமரத்தின் கதை ஆகிய மூன்றும் இந்த வரிசைத் தரத்திலேயே தமிழின் சிறந்த படைப்புக்கள்தான். அவரது கட்டுரைகளும் நாவல்கள் அளவுக்கு முக்கியமானவை. காற்றில் கலந்த பேரோசையிலுள்ள கட்டுரைகள், கட்டுரைத்தனத்தை மீறி கலைத்துவம் மிக்க படைப்புக்களாகவே இருக்கும். இந்த வகையில் இயல்விருதுக்கான இலக்கியத் தோட்டத்தின் தேர்வு மிகச் சரியானதாகவே இருந்தது.

அடுத்த இயல்விருது பெற்றவர் இலங்கையைச் சேர்ந்த திரு. கே.கணேஷ். திரு.கே.கணேஷ்  பிரச்சினைக்குரிய மனிதரல்ல என்றபடியாலும், அவர் மலையகத்தைச் சேர்ந்தவரானபடியாலும் ஒரு இடஒதுக்கீட்டில்போல அவருக்கான பரிசு கேள்விகளைக் கிளர்த்தவில்லை. இதையடுத்து பரிசு பெறுகிறவர் வெங்கட் சாமிநாதன். தமிழகத்திலிருந்து தெரிவாகும் அடுத்தவரும் பிராமணர் என்றமாதிரியான ஒரு சலசலப்பு வெ.சா. விஷயத்தில் எழுந்தது. அதுவல்லாமல் அவருக்கான பரிசை அப்போது கேள்விப் படுத்தியவர்களில் முக்கியமான ஒருவர் கலாநிதி எம்.ஏ. நுஃமான். படைப்பிலக்கியத்துறை சாராதவராயினும், அவரது கடும் விமர்சனம் புதுக்கவிதையின் வளர்ச்சிக் காலத்தில் முக்கியமாகவே கருதப்பட்டது. அக்கிரகாரத்தில் கழுதைபோன்ற அற்புதமான திரைப்படப் பிரதியாக்ககாரரும் அவர்தான். இந்தவகையிலும் அந்தப் பரிசு தகுதியானவருக்கே போய்ச் சேர்ந்தது என எடுக்கலாம்.

அடுத்து திரு.இ.பத்மநாபஐயர். ஐயர் என்று பெயரிலேயே அடையாளம் வைத்துக்கொண்டுள்ளது தவிர இவர் என்ன செய்தார் பரிசுக்கு? என்று அப்போதும் பரவலான கேள்விகள் பிறந்தன. இதற்கெதிரான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. மற்றது சிற்றிதழ் வெளிப்படையாகவே தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.
ஆனால் பத்மநாபஐயர் இலங்கை, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தமிழ் இலக்கியம் குறித்துச் செய்த சேவை ஒப்புமிக்கு இல்லாதது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அவர் ஒருவகையில் தமிழ்க் கொண்டோடியாகவே இருந்தார்.

அடுத்து ஜோர்ஜ் எல். ஹார்ட். ஏறக்குறைய சங்கத் தமிழை ஆங்கில மாணவர்களுக்கும், ஆங்கிலத்தில் பயிலும் மாணவர்களுக்கும், ஆங்கில இலக்கியவாதிகளுக்கும் முன்னால் எடுத்துவைத்த பெரும்பணியினைச் செய்தவர் திரு.ஹார்ட். இது ஏறக்குறைய ‘மால்குடி’ திரு. ராமானுஜத்தின் பணிக்கிணையானது.

ஈழ அரங்காடலில் தனித்துவமும் புதுமையும் புகுத்திய திரு.தாசீஸியஸுக்கு அடுத்த இயல்விருது வழங்கப்பட்டது. இப்போது 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருது திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமுக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பின் மூலம் தமிழின் நவீன இலக்கியத்தை அவர் ஆங்கில இலக்கிய உலகத்துக்கு அளித்திருப்பதின் வாழ்நாள் சாதனைக்காக இத் தேர்வு நடந்ததாய் அறிவிப்புத் தெரிவிக்கிறது.

3.

ஆங்கிலத்தில் புதுமைப்பித்தனையும், மௌனியையும், சுந்தர ராமசாமியையும், அம்பையையும், அசோகமித்திரனையும், பாமாவையும் இன்று தமிழ் அறியாத உலகம் அவரது மொழிபெயர்ப்புக்களின் ஊடாகவே அறிந்துகொள்கிறது என்பது முக்கியமானது. தமிழ்ச் சிறுகதையின் மகாஉச்சம் தொட்டவன் புதுமைப்பித்தன். தமிழில் பெண்ணிய எழுத்தின் வகைமாதிரிக்கு முன்னெடுக்கக்கூடியது அம்பையின் எழுத்து. தலித்திய இலக்கியத்தில் பேசப்படும் படைப்பு பாமாவினது. நவீன தமிழின் பல்வகை இலக்கியங்களின் வகைமாதிரியை திருமதி. லட்சுமியின் மொழியாக்கத்தின் மூலம் ஒருவர் அடையமுடியும்.

தமிழும் செம்மொழியாகிவிட்டது. அதன் இலக்கியவளத்தை பிறமொழி பேசுவோர் எவ்விதம் கண்டுகொள்வது? உலகின் மூத்த மொழிகளில் ஒன்றானதும், செவ்வியல் இலக்கியங்கள் நிறைந்ததுமான தமிழ் மொழியை அவர்கள் எவ்வாறு தெரிந்துகொள்வது? சீகன் பால்குஐயர் போலவும், வின்ஸ்லோ போலவும், போப்ஐயர் போலவும் தமிழ் மக்கள் மத்தியில் வந்திருந்து தமிழ்மொழியைக் கற்று அறிந்துகொள்ளச் சொல்லலாமா? மொழிபெயர்ப்புக்கள் காலத்தின் அவசியம். நம் மெய்யான அக்கறைகள் இங்கிருந்தே தொடங்கப்படவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.

மெய்யான தமிழ்ப் புலமையை வெளிநாட்டார் வணக்கஞ் செய்யச் செய்வதற்கான வழியும் இதுவாகவே இருக்கிறது. மட்டுமில்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய வழித்தோன்றல்கள் தம் மொழி இலக்கியத்தை ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாகவேதான் அறிந்துகொள்ளப் போகிறார்கள். திரு.ஜோர்ஜ் எல்.ஹார்ட்டும், திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமும் இலக்கியத் தோட்டத்தினரின் மிகச் சிறந்த தேர்வுகள் என்பதில் எனக்கு உடன்பாடு.

ஜெயமோகன் பதிவுகள்.கொம் கட்டுரையில் தெரிவித்ததுபோல் திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமைவிட இத்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அமைப்பாளர்களுக்குச் செய்யப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு தேர்வு நடந்திருக்கிற பட்சத்தில் அமைப்பினரையும் குறைசொல்ல முடியாதேயிருக்கிறது. அமைப்பினரில் சிலரோடு உரையாட நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் நான் இதுபற்றி விசாரித்தபொழுது, அவர்களில் ஒருவர் இதுவரை காலத்தில் தகுதியான ஒருவரை நான் பரிந்துரை செய்திருக்கிறேனா? என்று கேட்டார்.

பங்காளியாக இருக்க முடியாதபொழுதில், அம்மாதிரியான பார்வையாள தளத்தில் நின்றான குற்றஞ் சுமத்தல்கள் மட்டும் சரியான அணுகுமுறையாக இருக்குமென எனக்குத் தோன்றவில்லை. சர்வதேசம் அளாவி இடம்பெறும் ஒரு விருது வழங்கலில் பல்வேறு குறைகள் இருக்க வாய்ப்புள்ளது. அக் குறைகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றை அவர்கள் கூடிய அக்கறையெடுத்து நிவர்த்திசெய்ய முயலவேண்டும்.

இயல்விருதுக்கான தேர்வுகளின் நியாயங்கள் விருது வழங்கலின்பொழுதோ அல்லது முன்னதாகவோ அறிவிக்கப்படுகிறதுதான். ஆனால் கடந்த இரண்டு தடவைகளிலும் இடம்பெற்ற படைப்பிலக்கியப் பரிசுகள் அளிக்கப்பட்டமைக்கான தராதர விளக்கங்கள் தெரிவிக்கப்படவேயில்லை.

எந்தச் சமூகத்தில் ஒரு நிறுவனம் இயங்குகிறதோ, அந்தச் சமூகத்துக்கு அது வெளிப்படையாக இருக்கவேண்டுமென்பதின் அகல்விரிவான விளக்கம் இதுதான். இனிவரும் காலங்களில் போட்டிக்கு எடுக்கப்பட்ட நூல்கள், தகுதியானவற்றின் தேர்வுத் தொகை, தேர்வுக்குப் பொறுக்கப்பட்டவை, பரிசீலனையில் நின்ற இறுதி நூல்களின் விபரம், தேர்வின் காரணம் என யாவற்றையும் அந்தச் சமூகத்தின் முன்னால் விரித்துவைக்கும் கடமையை இலக்கியத் தோட்டம் மறவாதிருக்கவேண்டும.;

ஓர் இலக்கியவாதியாக இம் முன்மொழிதலை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

00000

பதிவுகள்.காம், 2007

Saturday, June 07, 2008

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்
கொழும்பு வந்து ஒரு மாதத்தின் பின் யாழ்ப்பாணம் சென்றேன்.

புதுவை இரத்தினதுரையின் 'உலைக்களம்' நூல் வெளியீடு அப்போதுதான் நடந்தது. கலாநிதி கைலாசபதி அரங்கில் நடைபெற்ற அக் கூட்டத்திற்கு நிறைந்த சனம். அது ஓர் இலக்கிய விழாவாக மட்டும் நடக்கவில்லையென்று இரு சில இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் முணுமுணுத்தனர். விழாவின் முற்பகுதி அரசியல் சார்ந்தும் , பிற்பகுதி நூல் வெளியீடு , மதிப்புரைப் பகுதியாக நடந்தது என்பதும் சரிதான். ஆனால் ஏன் அப்படி நடக்கக் கூடாது என்று கேட்டபோது நண்பர்களிடம் பதில் இருக்கவில்லை. புதிய காலங்களில் அமையும் புதிய களங்கள் முந்திய காலங்களின் பெறுமானங்களால் அளக்கப்படுவது சாத்திய மில்லையென நான் சொன்னபோது நண்பர்கள் பேசாமலிருந்தனர். யோசிப்பார்களென அப்போது தோன்றிற்று.

உலைக்களம் நூலை வாசிக்கப் பெரு விருப்போடு இருக்கிறேன். வாழ்வின் ஓடும் அவசரங்களுள் எப்பவோ ஓரிரு முறை 'எரிமலை'யில் உலைக்களம் வாசித்த நினைப்பு. வீச்சான அதன் வரிகளால் ஞாபகமாயே இருக்கிறது. நூலை வாசித்தால் விமர்சிக்கத் தடையிருக்காது. அதுவரை நூல் விமர்சனம் கூடாது. ஆனால் பின்னால் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் புதுவை இரத்தினதுரை ஆற்றிய பதிலுரையிலுள்ள ஒரு விஷயம் குறித்து உடனடியான விமர்சனம் தேவையென்றவகையில் இக் கருத்துகள்: 'கவிதைக்கு ஒரு வரைவிலக்கணம் இட்டதாக நான் அறியவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை மீறியதுதான். உண்மையில் மரபுக் கவிதைகளெல்லாம் சம காலத்தில் எழுந்தவையல்ல. வெண்பாவுக்கு எப்படி விருத்தம் புதுக் கவிதையாயிற்றோ , எப்படி கட்டளைக் கலித்துறைக்கு அகவல் புதுக் கவிதையாயிற்றோ அவ்வாறு புதுக் கவிதைகள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டவைதான்.'(வீரகேசரி 17.08.2003)இது புதுவை இரத்தினதுரையின் கருத்து.

கவிதைக்கு வரைவிலக்கணம் இல்லையென்பது சரிதான். காலந்தோறும் அது தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வந்திருக்கிறதென்பதும் சரிதான். ஆனாலும் அது புதிதான கவிதையே தவிர , புதுக்கவிதையல்ல என்பது கவனிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பாரதியின் எளிமைப் படுத்தப்பட்ட கவி வடிவங்களிலிருந்து புதுக்கவிதை தோன்றியதென தப்பிதமாகக்கொண்டுவிட நேரிட்டுவிடும்.

புதிதடைந்து வந்த கவிதை புதுக்கவிதையென்பது புதுக்கவிதையையே பிழைபட உணரவைத்துவிடும். உண்மையில் புதுக்கவிதையென்பது ஒரு பாய்ச்சல். எல்லாம் கட்டறுத்து எங்கோ வந்து விழுந்து தன்னை உருவமைத்த கவிவடிவம் அது. இதை மய்யப்படுத்தி நாம் பல தளங்களில் உரையாட, விவாதிக்கவுண்டு. செய்வோம்.

யாழிலிருந்து திரும்பி சில காலங்களை வன்னியில் கழித்தேன். புதிய அனுபவங்களின் திரட்சியோடு இப்போது கொழும்பு மீண்டிருக்கிறேன். இவ்வனுபவங்களின் மீள்வுக்காகவே மீண்டும்- மீண்டும் மீண்டும்- நான் வன்னி போவேன்.

கொழும்பு திரும்பிய பின் நான் ஏற்கனவே பூர்த்தியாக்கியிருந்த நாவலின் அச்சாக்கப் பணிகளைக் கவனித்தேன். நாவல் பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாய் புரட்டாதி மாதம் நடுப் பகுதியில் வரவிருக்கிறது. புதிய களத்தில் , புதிய உத்திகளில் ஈழத்தின் வளரும் நாவலிலக்கியத் துறையின் வீச்சு வெளிப்படும்படியாய் அது வாசக மனங்களைப் பிணிக்குமென நம்புகிறேன்.

நாம் கடந்த ஒரு கால் நூற்றாண்டாயும் , நிறைந்த யுத்த சூழலிலும் இலக்கியத்தின் போக்கினை மாற்றாமலே தொடர்ந்து வந்துவிட்டோமோவென்று ஓர் உள்ளோடிய எண்ணம் கடந்த சில காலமாயே என்னுள் இருந்துவந்தது. யதார்த்த தளத்தின் ஒரு பகுதியிலேனும் இடித்தலைச் செய்து புதிய இலக்கியப் போக்குகளின் செல்வாக்கை அங்கீகரிக்காத வரையில் , வெறும் பதிவு என்கிற தளத்திலிருந்து நாம் இலக்கியத் தரத்தை எட்டவே முடியாதென்பதை இப்போது இறுக்கமாக உணருகிறேன்.

சென்ற ஆண்டுவரை புலம்பெயர் எழுத்தாய் என் எழுத்தைக் கருதியிருந்த நான் இப்போது ஈழ நேரடி இலக்கியமாய் இதைக் காண்கிறேன். இதுவரை வெளிவந்த 'கனவுச் சிறை' மஹாநாவல் உட்பட்ட எனது பத்து நூல்களும் இந்தியாவைத் தளமாகக் கொண்டு வெளிவந்தவை. இலங்கையில் வெளிவரும் எனது முதலாவது நூலும், மொத்தமாய் வெளிவரும் எனது பதினோராவது நூலும் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' என்கிற இந்த நாவலாகும்.

நிச்சயமாகவே அப் புதுச் செல்நெறியைப் புலப்படுத்தி இது நிற்கிறது. அதை விமர்சகர்களே - வாசகர்களும்தான் - சொல்லவேண்டும் . ஆழமான விமர்சனங்களுக்காய்க் காத்திருக்கிறேன்

000

இரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......

இரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......


இம் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி ஆறாம் தேதி வரை ஐந்து நாட்கள்  கொழும்பிலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன உலக இந்து மகாநாட்டின் நிகழ்வுகள்.

முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதியும் , பிரதமரும் பங்கேற்றிருந்தனர். இரண்டாம் நாள் பகலில் ஆய்வு அமர்வுகள் நடைபெற பல இடங்களிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. மாலையில் கலை கலாச்சார நிகழ்வுகள். ஞாயிறு மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை கலை கலாச்சார நிகழ்வுகளுக்கான மேடை காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டிருந்தது. கடல் போல் நிறைந்திருந்தது கூட்டம். சமுத்திர ஓங்கார ஓசையை அடக்கி எழுந்துகொண்டிருந்தன, சுவர் போல் அமைக்கப்பட்டிருந்த மேடையின் இருபுறத்து ஒலிபெருக்கிகளின் ஊடாக நிகழ்ச்சிகளின் ஒலிப்பு. இரு திரைகளில் தூர இருப்போருக்கான வீடியோ படப்பிடிப்பு நகர்ந்துகொண்டிருந்தது. திங்கள் மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபம் சென்றேன். வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி எங்குமே 'ஓம் நமசிவாய' என்ற  ஐந்தெழுத்து மந்திரம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. மனதை ஏதோ செய்து பரவசமாக்கிற்று.

மகாநாட்டின் பூரண வெற்றியை அறிவித்துக்கொண்டு சகல நிகழ்வுகளும் நேற்று ஓய்ந்தன. இப்போது மாநாட்டு நோக்கத்தினது வெற்றி தோல்விகளை , உப விளைவுகளை பார்க்கத்தான் வேண்டும். அவசியம்கூட.

இந்தியாவில் இத்தகையதொரு மாநாடு பலத்த சர்ச்சைகளைக் கிளர்த்தியிருக்கும். மத்தியில் ஆட்சிசெய்யும் கட்சியானது இந்துத்துவ முன்னெடுப்பு, மதம்சாரா மற்றைய கட்சிகளை ஓரணியில் திரளவைத்திருக்கின்றது. இந்தியாவில் தற்போதைய பிரச்னை பொருளாதாரம், கல்வி, பெருகிவரும் தேய்வுநோய் கூட அல்ல; இந்துத்துவம்தான். பாகிஸ்தானுடனான பிரச்சனைகளின் தொடர்ச்சியும் இதே பின்னணியிலேயே பார்க்கப்படவேண்டும். காஷ்மீர் பிரச்னை அணுகப்படவேண்டிய வழியும்கூட இதுதான்.  இத்தகைய நிலையில் ஓர் உலக இந்து மாநாடு அங்கு பல நாச காரியங்களை மிக்க சலனமின்றி ஆற்றியிருக்கமுடியும்.

இலங்கையில் இத்தகைய விளைவுகளுக்கு அதன் சமூக அமமைப்பு இணக்கமாக இல்லை. இங்கே இந்து மதம்- குறிப்பாக சைவ மதம்- உண்டே தவிர இந்துத்துவம் இல்லை. எனினும் திக்கம், அகண்ட இந்து ராஜ்யக் கனவுகள் இல்லாவிடினும், அர்த்தமளாவி அது அனர்த்தங்கள் சிலவற்றையேனும் இங்கு விளைக்காமல் விட்டுவிடவில்லை. இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கிடையேயுள்ள சாதிப்பாகுபாடு மதம் சார்ந்து விளைந்து வளர்ந்ததுதான்.

இப்போது நாம் ஒரு கேள்வி கேட்கலாம்."இலங்கையில் நடைபெற்ற 2ம் உலக இந்து மாநாட்டின் மூலம் உண்மையில் ஏதாவது நன்மை அடையப்பட்டிருக்கிறதா?"

ஓம், இலங்கைத் தலைநகரில் தமிழர்களால் இப்படி ஒரு விழாவினை நடத்த முடிந்திருக்கிறதென்பதே நன்மையான விஷயம்தானே என்று யாரேனும் பதில்சொல்லக் கூடும்.

உண்மையில் மிகவும் ஆழமாக நிலைமைகளை ஆய்ந்து பார்த்துக் கூறுவதானால், ஓரளவு மட்டுமே இது நன்மை கண்டிருப்பதாக என்னால் கூறமுடிகிறது.

இந்து சமயம் இலங்கைத் தமிளர்களது மதம் மட்டுமில்லை, அது இந்தியாவில் ....பூட்டானில்...நேப்பாளத்தில்....மோரிஷியஸ்ஸில் எல்லாம்கூட இருக்கிறது. அப்படியான நிலையில் ஓர் இந்து மாநாட்டை இங்கே கூட்டுவதில் என்ன கஷ்ரம், யாருக்கு எற்பட்டுவிடப்போகிறது? அதுவும் அரசாங்கம் எடுத்த விழாவுக்கு? தனிநபர்கள் சிலர் பெரும் பங்காற்றினார்கள் என்பது மெய்யே. ஆக, இன நல்லிணக்கத்தைக் காண வேண்டின் தமிழ் விழா, குறைந்த பட்சம் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கைத் தலைநகரில் நடக்க வேண்டும். சிங்கள உறுமய கட்சியும் , ஜே.வி.பி.யும் அதற்கு இசைந்து கொடுத்துவிடும் என்கிறீர்கள்? எதார்த்தத்தில் வாழப் பழகுவோம். அப்படியெல்லாம் நடப்பது சிரமமே. ஆனால் ஒன்று: அவற்றுக்கான ஓர் அடித்தளத்தை - ஆரம்பத்தை - இருபத்தோராண்டுகளின் பின் நடைபெற்ற இந்த இரண்டாம் உலக இந்து மாநாடு போட்டுவைத்திருக்கிறது. அவ்வளவுதான்.

'இந்து தர்மத்தின் மூலம் சமாதானம்' என்பது மாதிரியான வெற்று வரிவடிவங்களெல்லாம் எழுப்பப்பட்டிருந்தன. அதெல்லாம் சுத்த ஹம்பக்! ஆனாலும் அதன் மூலம் சமாதானமெனின் வந்துவிட்டுப் போகட்டும். 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்பதே தமிழனின் ஒற்றுமை மந்திரம்.

அதை முன்னெடுக்கும் உரம் இப்போதைக்கு யாருக்குமில்லைத்தான்.

000

(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரை இது.)


இரண்டாம் புலப் பெயர்ச்சி
மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கிக்கொண்டு அகதியாய் ஓடியவர்கள்தாம் நாம். ஆனாலும் அந்த மண் இந்த வேர்களுக்கும் ஒத்துப் போக அங்கு பெரிய பிரச்சனைகளற்ற ஒரு வாழ்வு எங்களுக்குச் சித்தித்தது.

யுத்தமும் மேற்குலகும் சம ஈர்ப்புச் செய்த வேளையில் ஒரு போராட்டமே நடத்தி எங்குமில்லாமல் இந்திய மண்ணிலேயே தங்க முடிந்தது. அதில் நிறைய காயங்கள் பட்டிருந்தேன். தழும்புகளை விழுப்புண்களாய் நிச்சயமாக நான் மட்டுமாவது மதிக்கவே செய்வேன். கவலைப்பட்டு சில காரியங்களை நான் மட்டுமாவது செய்யாமலிருக்கவேண்டும்தான்.

இரண்டு தசாப்தங்கள் எப்படிக் கடந்தன? ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன்? என் படைப்பின் உந்து விசைகள் என்னை அங்கு அடையாளப்படுத்தின. அந்த படைப்பாற்றல் இன்னும் க்ஷீணமடையவில்லை. என் சாதனைகள் குறித்து எப்போதும் எனக்கு கரிசனமுண்டு. காலம் நாளை அதைச் செய்யும்போது புறவுலகம் அறியட்டும்.

எவ்வளவு இலக்கிய நண்பர்கள்! எவ்வளவு இலக்கிய ஆர்வலர்கள்! எவ்வளவு வாசகர்கள்! தாயகத்திலிருந்து ஓடியபோதுகூட பெரிய வலி தெரியவில்லை என்பது சத்தியமான வார்த்தை.

பின்னர் மெல்ல வலி செய்த கணங்கள் ஏற்பட்டன.

ஆனாலும் சாதனைகளின் வீறுகளில் அவற்றை அடக்கி வைக்க முடிந்திருந்தது.

அங்கிருந்து தாயகம் திரும்ப தயாரானபோது......?  ஒரு பக்கம் தாயகம் திரும்புகையின் மகிழ்ச்சி ரேகைகள் எறிபட்டுக்கொண்டிருந்தாலும் அந்த மண்ணை நீங்க மனம் ஏன் அத்தனை அவலம் பட்டது?

அது என்னளவில் ஓர் இரண்டாம் புலப்பெயர்ச்சி.

முந்திய புலப்பெயர்வினைவிட வலிகூடிய பெயர்வாயிற்று.

மீண்டும் என் மண் மிதிதேன் கண் கலங்க ..... மெய் விதிர்க்க.

மீண்டும் என் மண் மிதித்தேன்....வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையாய் உருவாகி நின்றேன்.

000

(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரை இது.)


நிமிர்ந்தே திரிந்தவர்

சென்ற மாதம் சு.சமுத்திரமவர்கள் ஒரு கார் விபத்தில் காலமானார் என்ற செய்தி எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

ஓர் இழப்பின் பாரிய தாக்கம்.

'கடிதோச்சி மெல்ல எறி'கிற நண்பராக இருந்தார் அவர். அவர் எழுத்தாளராகவும் இருந்தார். அவருடனான என் அறிமுகம் ஒரு கலகத்திலேதான் ஆரம்பித்தது.

எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் வைரவிழா நிகழ்வில் அவரது நாவல்கள் பற்றி மதிப்பிட்டு கட்டுரை வாசித்த நான் , இடதுசாரி எழுத்தாளர்களின் நூல்களை என் தேர்வில் சேர்த்துக்கொள்ளவில்லையென ஓங்கிக் குரலெடுத்தார் அவர்.

சேர்ப்பதும் சேர்க்காததும் என் வாசிப்புச் சார்ந்த சுதந்திரங்களென நான் வாதாட அடங்கி என் நண்பரானவர்.

'தேவகாந்தனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு சண்டையில் ஆரம்பித்தது' என்று எல்லோரிடமும்லொரு குழந்தைபோல் சொல்லிக்கொண்டிருந்தார்.

உயர்ந்த, சற்று தடித்த, உடல்ரீதியான தாக்குதலுக்கும் தயங்காதவர்போல் எப்போதும் நிமிர்ந்தே திரிந்த அவர் இப்போது இல்லை.

ஓர் வீறு தமிழிலக்கையத்தில் எங்கோ அழிந்துபோனதுபோல் உணர்கிறேன்.

கொடிது கொடிது , மரணம் கொடிது.

000

எதிர்க் குரல்கள்

எதிர்க் குரல்கள்


காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன்: சாசுவத உண்மைகள்மீது தீவிரமாக எழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்கு தக தம் இருத்தலை நெகிழ்வித்து/ மாற்றி வந்திருக்கின்றன என்பதுதான் அது. அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவே சாத்தியமாக இருந்திருக்கின்றன.

கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா. அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை.

ஒவ்வொரு கட்ட சமூக காலத்திலும் அவை வெவ்வேறு தளங்களிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரே மாதிரியே இருந்திருக்கின்றன. அவ்வக் கால சமூகம் வேறு எந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களை கவனத்தில் எடுத்துக்கொண்டிராது. ஒரு காலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அது தன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தை மட்டுமே சொல்லும். பின்- நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப் படவேண்டும். மாற்றை அது எப்போதும் சொல்லாது.

கலகக் குரலின் மூர்க்கத்தில்தான் சமூகங்கள் நகர்ந்திருக்கின்றன. சாசுவத உண்மைகள் காலத்துகுத் தகவாய் மாறி வந்தமைதான் மனு நாகரிகத்தின் வரலாறு. மாறி வந்தன என்று சொல்கிற சுலபத்தில் அவை மாறிவரவில்லையென்பதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். பெரும் போராட்டங்கள், உயிர்த் தியாகங்கள், ரத்தச் சொரிவுகள், வாழ்வு அர்ப்பணங்கள் இல்லாமல் எதுவும் நடந்ததில்லையென்பதை சரித்திரம் சொல்லி நிற்கிறது.

இலக்கிய உலகின் கலகக் குரல்களெல்லாமேகூட இந்த நியதியில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவைதான். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திலே முதல் கலகக் குரல் எழுந்த இடம் வனம். அதைச் சித்தர் குரலாய்க் காலம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. மேலை நாடுகளில் விசித்திரமான இடங்களிலெல்லாம் கலகக் குரல்கள் ஒலித்திருக்கின்றன. குறிப்பாக பிரான்ஸில் avant-guarde களும் surrialist களும் மலசலகூடங்களுக்கு அண்மையில் தம் படைப்பு , கருத்து பரிமாற்றங்களைச் செய்யும் மேடைகளை அமைத்து வந்திருக்கிறார்கள். மஹாராஷ்டிரத்தில் 1969 இல் தலித் இலக்கியம் என்ற சொல்லாடல் பாவனை பெறமுன்பு, பொது மலசல கூடங்களுக்கு அருகே எதிப்பிலக்கிய வெளிப்படுத்துகைகள் நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய பின்புலத்தில் கடந்த ஓரிரு மாதங்களுக்கிடையில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க நினைக்கின்றேன்.

கடந்த 04. 12. 2002இல் ஒரு காலை நேர சென்னை கடற்கரை-மயிலை பறக்கும் ரயில் தடத்தில் இயங்கிய ரயிலில் 'மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை' என்ற அஜயன் பாலாவின் சிறிய சிறுகதைத் தொகுப்பொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ரயில் இப்போதெல்லாம் இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்த அம்சமாகியிருப்பது ஏனென்று தெரியவில்லை. ரயிலின் நீட்சியும், ஒரே தாள கதியில் இயங்கும் அதன் இயக்கத்தை இடையிடை ஊடறுத்துச் சிதைக்கும் லய பேதமும் ஒரு சுவையை எற்படுத்தியிருக்கலமோ? சில மாதங்களின் முன் ஓடும் ரயிலில் பயணிகளூக்கு மத்தியில் ஒரு கவிஞர் கூட்டம் கவியரங்கொன்றை நடத்தியிருக்கிறது. அதற்கு முன்னால் கோணங்கி போன்றவர்கள் இலக்கியச் சந்திப்புக்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே இது பெரிய அதிசயமில்லை. அங்கு நூல் வெளியீடு செய்யப்பட்ட விதம்தான் புதுமையானது-அதீதமானது. புத்தக வெளியீடு, ஓடும் ரயிலில் இருந்து வெளியிடுபவரால் வெளியே வீசி எறிவதன் மூலம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கலந்துகொண்டவர்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் முகம் தெரிந்த இலக்கியவாதிகளே. குறிப்பாக 'புதுப் புனல்' ஆசிரியர் சி.மோகன், 'வெளி' ரங்கரஜன் போன்றோர்.

இன்னொரு நிகழ்வு , பிரமிளின் கவிதைகள்பற்றிய கருத்தரங்கு. இது மதுக் கடை ஒன்றின் bar இல் நடந்திருக்கிறது. குடிப்பதற்கு வந்த பலரில் ஆச்சரியங்களை விளைவித்துக்கொண்டு இந்த அரங்கு நடந்து முடிந்த பின்னால் சண்டையும் நடந்திருக்கிறது. 'பல்லோடு உதடு பறந்து சிதறுண்டு/ சில்லென்று செந்நீர் தெறித்து/ நிலம் சிவந்து / மல்லொன்று நேர்ந்து...'என்று நம்மூர் மஹாகவி பாடியது அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. இதில் கலந்துகொண்டவர்களும் சாரு நிவேதிதா, விக்ரமாதித்யன் போன்ற இலக்கியவாதிகளே.

இவையெல்லாம் உள் கொதித்து எழும் உணர்வு உச்சமடைகிற வேளைகளிலேயே நடக்கின்றன என்பதுதான் நிஜம். இவை ஒரு சமூகத்தின் கலகக் குரல்கள். இவையே நியாயமில்லைத்தான். ஆனால் இவை சமூகத்தை மாற்றும் அவசியத்தை வற்புறுத்துவன. இன்னும் இவை மாற்றவும் செய்யும். ஓரளவேனும்.

'தலித் அழகியல் என்ற சொற்றொடரும், தலித் கலகப் பண்பாடு என்ற சொற்றொடரும் ஒரே அர்த்தம் பெறும் சொற்றொடர்கள் என்ற அதிரடிக் கருத்தும் இக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது' என்று வேறு ஒரு கருத்தரங்கு பற்றி எஸ். சுவாமிநாதன் என்பவர் இம்மாத (பெப்.2003) கணையாழியில் எழுதியிருக்கிறார்.

இது ஆரம்பம்தான். இனிவரும் காலங்கள் மிக்க கடுமையானதாக இருக்கப்போகின்றன. தலித் குரல்களோ, அமைப்பாகிவிட்ட குடும்பம், பெண்ணடிமை, மரபு போன்றவற்றுக்கு எதிரான குரல்களோ விழிக்கிறவர்களுடையதாய் இருப்பதால் மிகக் கடூரமாகத்தான் இருக்கும். சுகனும், ஷோபாசக்தியும் தொகுத்த 'கறுப்பு' நூல் வெளியீடு அ.மார்க்ஸ் தலைமையில் 30. 01. 2003 இல் நடந்தது. தொகுப்புப்பற்றி ராஜேந்திரன் என்ற இளைஞர் சாரத்துடன் மேடை வந்து பேசினார். இந்த நண்பர் போன ஆண்டு நிறப்பிரிகை நடத்திய ஷோபாசக்தியின் 'கொரில்லா' நாவல் விமர்சனக் கூட்டத்திலும் இம்மாதிரியே வந்து உரை நிகழ்த்தினார். செய்யட்டுமேன். எவ்வளவு காலம்தான் சொல்லிக்கொண்டே இருப்பது? இந்த அதீத நடைமுறைகளெல்லாம் உள்ளெழும் நெருப்பின் ஓசைகள்.சமூகம் மாறியாகவேண்டும். வேறுவழி இல்லை.

000
(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில்
எழுதப்பட்ட கட்டுரை இது.)


ஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்
இது உண்மையில் ஒரு சினிமா விமர்சனமில்லை. அண்மையில் நான் பார்த்த 'பாப் கார்ன்'சினிமா என்னைப் பாதித்ததின் பதிவுகளே இவையும். ஒரு தமிழ்ச்சினிமா வேறுமாதிரி இங்கே உருவாக்கிவிட முடியாதது. தொழில் திறமைகளால் கட்டியமைக்கப்பட்ட இயங்கு தளங்கள் இங்கே . இதற்குள்ளிருந்து தமிழ்ச் சினிமாவின் தலையெழுத்தை மாற்றும் ஒரு திரையுலகப் படைப்பாளி மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேர்கிறது. நாசர், மோகன் லால் , சிம்ரன், எஸ். ராமகிருஷ்ணன் கூட்டில் வெளிவந்திருக்கிற இந்த சினிமா , ஆரோக்கியமாய் இருக்கிறதென்பதை விடவும் , தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் முயற்சிகளிலொன்றாக வந்திருக்கிறதென்பதுதான் சரியானது. அதனாலேயே இது அக் கூட்டின் வெற்றியாகவும் ஆகிறது.
ஒரு இசைக் கலைஞனின் உருவம் மோகன் லாலுக்கு அற்புதமாய்ப் பொருந்தி வந்திருக்கிறது. உணர்ச்சியை எந்த இடத்திலும் தேவையான அளவுக்கு மீறிக் காட்டிவிடாத அவரது நடிப்பு குறிப்பிட்டாகவேண்டியது. மலையாள சினிமாவின் கொடை இது என்று நினைக்கிறேன். அவரது பேச்சு முறைகூட முதல் சில நிமிடங்களுக்கு தமிழ்ச் சினிமாவுக்கு பழக்கப்பட்ட மனதுக்கு ஒட்டிவர சிரமப்படுகிறது. பின் இசைவாகி , சினிமா முடிகிறவரையில் பிடித்துப் போகிறது; பாத்திரத்துக்கு இயைந்த பேச்சு முறையென்பதை மனம் அங்கீகரிக்கிறது.
சிம்ரனுக்கு இதுவரை ஏற்றிராத தாய் பாத்திரம். பாசத்தைப் பொழியும் பாத்திரமாக அது இல்லை. ஒரு ஆளுமைமிக்க கலைஞரின் தனித்துவம், வெறித்தனம், அன்பு, அது பறிபோய்விடுமோ என்ற பயம், பாசம் .... என்று பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாத்திரம். அதனை அநாயாசமாக நடித்துக் காட்டுகிறார் சிம்ரன். அவர் நெற்றியின் அந்தவளவான பொட்டும் , புகழ் பெற்ற ஒரு இந்திய நடன கலைஞரை நினைவூட்டி சில படிமங்களைச் சிறப்பாகவும், சரியாகவும் உருவாகவே வைத்திருக்கிறது எனல் வேண்டும். இவ்வாறான கலைத்துவம் மிக்க இரு பாத்திரங்கள் எப்படிப் பேச முடியுமோ அப்படிப் பேச வைத்து, வசனத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நாசரும், எஸ்.ராமகிருஷ்ணனும். சில இடங்களில் உணர்வின் வலு, சொல்லாளுமைகளாலும் நேர்ந்ததை சுட்டிக்காட்டவே வேண்டும். 'ஸ்பரிசம்' சமஸ்கிருதச் சொல். மலையாளத்தில் மிகு புழக்கத்திலுண்டு. அதை 'முதல் ஸ்பரிசம்' என்று குறிப்பதன் மூலம் 'முதல் உறவு' குறிக்கப்படுகிறது இங்கே. முதல் உறவென்பதில் வரும் கொச்சைத்தனம் , முதல் ஸ்பரிசத்தில் இருக்கவே இருக்காது.
மோகன் லாலை விக்ரமாவாய் , சிம்ரனை யமுனாவாய் அழிய வைத்திருப்பதின்மூலம் நாசரின் வெற்றி அடையப்பட்டிருக்கிறது. மகளாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவரின் நடிப்பும் தம் மூத்த கலைஞர்களுக்கு குறைந்ததில்லை.நாசரின் வெற்றியது சூட்சுமத்தின் ஒரு கதவு, பாத்திரங்களுக்குப் பொருத்தமான கலைஞர் தேர்வு. சுமார் இரண்டு மணிநேரப் படம். ஒரு இலக்கியப் பிரதியை வாசித்த மனப் பதிவையும் பாதிப்பையும் இது ஏற்படுத்தியது எனக்குள். முதல் வரும் பத்து நிமிடங்கள் , படத்தின் வலு குறைந்த பகுதி. விக்ரமாவின் தங்கை பாத்திரம் பலஹீனம். அதன் உரையாடலும் நடவடிக்கைகளும் தமிழ்ச் சினிமாவின் மரபார்ந்த உறைவுகள்.
இன்னுமொன்று சொல்ல மறந்தது. யுவன்சங்கர் ராஜாவின் இசை. வார்த்தைகளாலின்றி , இசையாலுமின்றி , உணர்வு அடையும் பரவசத்தால் மட்டும் நெஞ்சி¢ல் இருக்க வைத்த இசை அது. கடைசிக் கட்டத்தில் கலைஞர்களோடு சேர்ந்து இசையும் நடிக்கிறது. சினிமாவின் தரத்தைஉயர்த்தியதில் அதற்கும் பெரும் பங்கு. முதல் பத்து நிமிஷங்களில் அதுவும்தான் தோல்வி. தொழில் நுட்பக் குறைபாடுகளும் அந்த பத்து நிமிடங்களில் கவனத்தை இடிக்கின்றன. மீதி நிமிடங்களின் அனுபவம் நெஞ்சை நிறைக்கிறது.

ஒரு நாடக விமர்சனம்23-01-2003 இன் முன் மாலை, சென்னைப் பல்கலை மரீனா வளாகத்தில் உள்ள பவள விழா நினைவுக் கருத்தரங்க மண்டபத்தில் அ.மங்கையின் நெறியாள்கையில் உருவான தனி நபர் நாடகமான 'பனித் தீ' நிகழ்த்திக் காட்டப்பட்டது. மகாபரதத்திலுள்ள உப கதையொன்றின் மறுவாசிப்பே இது. மறுவாசிப்பு என்ற பதத்துக்கான அகல ஆழ்வுகளூடு இதிகாச கால பெண்ணின் கொடுமைகள் காட்சியாக்கப் பட்டதோடு , தான் அடக்கப்படும்போதும், கொடுமைகள் புரியப்பெறும்போதும் பெண்ணுள்ளிருந்து வீறிட்டுக் கிளம்பும் வெறி கோபம் ஆகிய உணர்வுகள் 'பனித் தீ'யாய் உணரவைக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பொருத்தமான பாத்திரம்தான் சிகண்டி. பீஷ்மரைக் கொல்வதற்காகவே பால் பேதங்கடந்து பிறந்த பிறவி. அம்புப் படுக்கையில் குரு§க்ஷத்திரப் போர்முனையில் வீழ்ந்து கிடக்கிறார் பிஷ்மர்.இந்த அம்புகள் அர்ச்சுனனுடையவைதானே என்று முணுமுணுக்கிறார். அது அறிந்து சிகண்டி ஏளனம் பொங்கச் சிரிப்பதுடன் காட்சிகள் விரிவு பெறுகின்றன. சிகண்டி பீஷ்மரைக் கொவதற்கென்றே பிறந்த ஜென்மம்.பிறவி பெண்ணாகக் காணப்பட , பால் நிலை கடந்து ஆணாக வளர்வது ஒரு வைராக்கியத்தில் நிகழ்கிறது. அஸ்திரப் பயிற்சி , வலிமை, அடங்கா வெறி ஆகியன ஒரு பெண்ணுள்ளிருந்து கிளர்தலே இங்கு குவிமையப்படுத்தப்படுகிறது.

பின்னால் ஆணுடை களைந்து பெண்ணான தோற்றம் அம்பாவின் பெயரில் தொடரும். பிறகுதான் தன் சகோதரர்களுக்காக அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று ராஜகுமாரிகளை பீஷ்மர் வில்முனையில் கடத்திச் செல்லப்படும் நிகழ்வு விவரிக்கப்படுகிறது. அஸ்தினாபுரம் கொண்டு செல்லப்பட்ட அம்பா , தான் சால்வன் என்ற அரசனைக் காதலிப்பதாக சொல்ல பீஷ்மர் பின் அவளைப் போக விடுகிறார். ஆனால் சால்வனும் அவளை ஏற்க மறுத்து விடுகிற கொடுமையைச் சுமத்தவே திரும்ப அஸ்தினாபுரம் போகிறாள். அங்கே சத்யவதியைக் கண்டு தான் தன்னைக் கவர்ந்து வந்த பீஷ்மரையே திருமணம் செய்யப்போவதாகச் சொல்ல , அவரது பிரமச்சாரிய விரதம் அவளுக்குச் சொல்லப்படுகிறது. மறுபடி அங்கிருந்து எங்கே செல்வதெனத் தெரியாமல் அம்பா வெளியேறி நதியாகிறாள்.

ஓரங்க ஒரு நபர்க் காட்சிக்கான உத்திகள் மூலம் எழுப்பப்படும் அரங்க அமைப்பு முறைமை வெகுவாய்ச் சிலாகிக்க வைக்கின்றன. ஆண் அணிகலன்களைக் களைந்து பெண் நகைகளை அணிவதன் சம நேரத்தில் கதை விவரிப்பும் சேர்ந்து மொழித் தேவைகளைச் சுருக்குதலென்று மேடையுத்திகளின் சாத்தியமான அளவு பயன் பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய விடயம் ஆளப்பட்ட மொழி. அது சிருஷ்டிகர தன்மையுடன் நாடகத்தில் தொழிலாற்றியதைச் சொல்லவே வேண்டும். நாடகக் கலைஞர் எஸ்.உஷாராணியின் நடிப்பு அற்புதமானது. ஒரு மணி நேரம் க்ரமித்திருந்தார் மேடையை. அவ்வப் பாத்திரங்களாய் மாறியதாகவே நான் உண்ர்ந்தேன். அஸ்தினாபுரம் விட்டு இறுதியில் வெளியேறும் அம்பா, நதியாய் மாறி நிற்கையில் நாடகம் நிறைகிறது.

இதன் பாதிப்பு பெரிது. புனைவின் அதிகபட்ச சாத்தியம் அடையப்பட்ட அண்மைக்காலத்தின் சிறந்த நாடகப் பிரதியாக இதனைக் கொள்ள முடியும்.

இது பதிவு அல்ல, பாதிப்பின் விவரிப்பு.

000

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...