யுத்தத்தின் முதலாம் அதிகாரம்




கொழும்பு வந்து ஒரு மாதத்தின் பின் யாழ்ப்பாணம் சென்றேன்.

புதுவை இரத்தினதுரையின் 'உலைக்களம்' நூல் வெளியீடு அப்போதுதான் நடந்தது. கலாநிதி கைலாசபதி அரங்கில் நடைபெற்ற அக் கூட்டத்திற்கு நிறைந்த சனம். அது ஓர் இலக்கிய விழாவாக மட்டும் நடக்கவில்லையென்று இரு சில இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் முணுமுணுத்தனர். விழாவின் முற்பகுதி அரசியல் சார்ந்தும் , பிற்பகுதி நூல் வெளியீடு , மதிப்புரைப் பகுதியாக நடந்தது என்பதும் சரிதான். ஆனால் ஏன் அப்படி நடக்கக் கூடாது என்று கேட்டபோது நண்பர்களிடம் பதில் இருக்கவில்லை. புதிய காலங்களில் அமையும் புதிய களங்கள் முந்திய காலங்களின் பெறுமானங்களால் அளக்கப்படுவது சாத்திய மில்லையென நான் சொன்னபோது நண்பர்கள் பேசாமலிருந்தனர். யோசிப்பார்களென அப்போது தோன்றிற்று.

உலைக்களம் நூலை வாசிக்கப் பெரு விருப்போடு இருக்கிறேன். வாழ்வின் ஓடும் அவசரங்களுள் எப்பவோ ஓரிரு முறை 'எரிமலை'யில் உலைக்களம் வாசித்த நினைப்பு. வீச்சான அதன் வரிகளால் ஞாபகமாயே இருக்கிறது. நூலை வாசித்தால் விமர்சிக்கத் தடையிருக்காது. அதுவரை நூல் விமர்சனம் கூடாது. ஆனால் பின்னால் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் புதுவை இரத்தினதுரை ஆற்றிய பதிலுரையிலுள்ள ஒரு விஷயம் குறித்து உடனடியான விமர்சனம் தேவையென்றவகையில் இக் கருத்துகள்: 'கவிதைக்கு ஒரு வரைவிலக்கணம் இட்டதாக நான் அறியவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை மீறியதுதான். உண்மையில் மரபுக் கவிதைகளெல்லாம் சம காலத்தில் எழுந்தவையல்ல. வெண்பாவுக்கு எப்படி விருத்தம் புதுக் கவிதையாயிற்றோ , எப்படி கட்டளைக் கலித்துறைக்கு அகவல் புதுக் கவிதையாயிற்றோ அவ்வாறு புதுக் கவிதைகள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டவைதான்.'(வீரகேசரி 17.08.2003)இது புதுவை இரத்தினதுரையின் கருத்து.

கவிதைக்கு வரைவிலக்கணம் இல்லையென்பது சரிதான். காலந்தோறும் அது தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வந்திருக்கிறதென்பதும் சரிதான். ஆனாலும் அது புதிதான கவிதையே தவிர , புதுக்கவிதையல்ல என்பது கவனிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பாரதியின் எளிமைப் படுத்தப்பட்ட கவி வடிவங்களிலிருந்து புதுக்கவிதை தோன்றியதென தப்பிதமாகக்கொண்டுவிட நேரிட்டுவிடும்.

புதிதடைந்து வந்த கவிதை புதுக்கவிதையென்பது புதுக்கவிதையையே பிழைபட உணரவைத்துவிடும். உண்மையில் புதுக்கவிதையென்பது ஒரு பாய்ச்சல். எல்லாம் கட்டறுத்து எங்கோ வந்து விழுந்து தன்னை உருவமைத்த கவிவடிவம் அது. இதை மய்யப்படுத்தி நாம் பல தளங்களில் உரையாட, விவாதிக்கவுண்டு. செய்வோம்.

யாழிலிருந்து திரும்பி சில காலங்களை வன்னியில் கழித்தேன். புதிய அனுபவங்களின் திரட்சியோடு இப்போது கொழும்பு மீண்டிருக்கிறேன். இவ்வனுபவங்களின் மீள்வுக்காகவே மீண்டும்- மீண்டும் மீண்டும்- நான் வன்னி போவேன்.

கொழும்பு திரும்பிய பின் நான் ஏற்கனவே பூர்த்தியாக்கியிருந்த நாவலின் அச்சாக்கப் பணிகளைக் கவனித்தேன். நாவல் பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாய் புரட்டாதி மாதம் நடுப் பகுதியில் வரவிருக்கிறது. புதிய களத்தில் , புதிய உத்திகளில் ஈழத்தின் வளரும் நாவலிலக்கியத் துறையின் வீச்சு வெளிப்படும்படியாய் அது வாசக மனங்களைப் பிணிக்குமென நம்புகிறேன்.

நாம் கடந்த ஒரு கால் நூற்றாண்டாயும் , நிறைந்த யுத்த சூழலிலும் இலக்கியத்தின் போக்கினை மாற்றாமலே தொடர்ந்து வந்துவிட்டோமோவென்று ஓர் உள்ளோடிய எண்ணம் கடந்த சில காலமாயே என்னுள் இருந்துவந்தது. யதார்த்த தளத்தின் ஒரு பகுதியிலேனும் இடித்தலைச் செய்து புதிய இலக்கியப் போக்குகளின் செல்வாக்கை அங்கீகரிக்காத வரையில் , வெறும் பதிவு என்கிற தளத்திலிருந்து நாம் இலக்கியத் தரத்தை எட்டவே முடியாதென்பதை இப்போது இறுக்கமாக உணருகிறேன்.

சென்ற ஆண்டுவரை புலம்பெயர் எழுத்தாய் என் எழுத்தைக் கருதியிருந்த நான் இப்போது ஈழ நேரடி இலக்கியமாய் இதைக் காண்கிறேன். இதுவரை வெளிவந்த 'கனவுச் சிறை' மஹாநாவல் உட்பட்ட எனது பத்து நூல்களும் இந்தியாவைத் தளமாகக் கொண்டு வெளிவந்தவை. இலங்கையில் வெளிவரும் எனது முதலாவது நூலும், மொத்தமாய் வெளிவரும் எனது பதினோராவது நூலும் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்' என்கிற இந்த நாவலாகும்.

நிச்சயமாகவே அப் புதுச் செல்நெறியைப் புலப்படுத்தி இது நிற்கிறது. அதை விமர்சகர்களே - வாசகர்களும்தான் - சொல்லவேண்டும் . ஆழமான விமர்சனங்களுக்காய்க் காத்திருக்கிறேன்

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்