ஒரு நாடக விமர்சனம்



23-01-2003 இன் முன் மாலை, சென்னைப் பல்கலை மரீனா வளாகத்தில் உள்ள பவள விழா நினைவுக் கருத்தரங்க மண்டபத்தில் அ.மங்கையின் நெறியாள்கையில் உருவான தனி நபர் நாடகமான 'பனித் தீ' நிகழ்த்திக் காட்டப்பட்டது. மகாபரதத்திலுள்ள உப கதையொன்றின் மறுவாசிப்பே இது. மறுவாசிப்பு என்ற பதத்துக்கான அகல ஆழ்வுகளூடு இதிகாச கால பெண்ணின் கொடுமைகள் காட்சியாக்கப் பட்டதோடு , தான் அடக்கப்படும்போதும், கொடுமைகள் புரியப்பெறும்போதும் பெண்ணுள்ளிருந்து வீறிட்டுக் கிளம்பும் வெறி கோபம் ஆகிய உணர்வுகள் 'பனித் தீ'யாய் உணரவைக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பொருத்தமான பாத்திரம்தான் சிகண்டி. பீஷ்மரைக் கொல்வதற்காகவே பால் பேதங்கடந்து பிறந்த பிறவி. அம்புப் படுக்கையில் குரு§க்ஷத்திரப் போர்முனையில் வீழ்ந்து கிடக்கிறார் பிஷ்மர்.இந்த அம்புகள் அர்ச்சுனனுடையவைதானே என்று முணுமுணுக்கிறார். அது அறிந்து சிகண்டி ஏளனம் பொங்கச் சிரிப்பதுடன் காட்சிகள் விரிவு பெறுகின்றன. சிகண்டி பீஷ்மரைக் கொவதற்கென்றே பிறந்த ஜென்மம்.பிறவி பெண்ணாகக் காணப்பட , பால் நிலை கடந்து ஆணாக வளர்வது ஒரு வைராக்கியத்தில் நிகழ்கிறது. அஸ்திரப் பயிற்சி , வலிமை, அடங்கா வெறி ஆகியன ஒரு பெண்ணுள்ளிருந்து கிளர்தலே இங்கு குவிமையப்படுத்தப்படுகிறது.

பின்னால் ஆணுடை களைந்து பெண்ணான தோற்றம் அம்பாவின் பெயரில் தொடரும். பிறகுதான் தன் சகோதரர்களுக்காக அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று ராஜகுமாரிகளை பீஷ்மர் வில்முனையில் கடத்திச் செல்லப்படும் நிகழ்வு விவரிக்கப்படுகிறது. அஸ்தினாபுரம் கொண்டு செல்லப்பட்ட அம்பா , தான் சால்வன் என்ற அரசனைக் காதலிப்பதாக சொல்ல பீஷ்மர் பின் அவளைப் போக விடுகிறார். ஆனால் சால்வனும் அவளை ஏற்க மறுத்து விடுகிற கொடுமையைச் சுமத்தவே திரும்ப அஸ்தினாபுரம் போகிறாள். அங்கே சத்யவதியைக் கண்டு தான் தன்னைக் கவர்ந்து வந்த பீஷ்மரையே திருமணம் செய்யப்போவதாகச் சொல்ல , அவரது பிரமச்சாரிய விரதம் அவளுக்குச் சொல்லப்படுகிறது. மறுபடி அங்கிருந்து எங்கே செல்வதெனத் தெரியாமல் அம்பா வெளியேறி நதியாகிறாள்.

ஓரங்க ஒரு நபர்க் காட்சிக்கான உத்திகள் மூலம் எழுப்பப்படும் அரங்க அமைப்பு முறைமை வெகுவாய்ச் சிலாகிக்க வைக்கின்றன. ஆண் அணிகலன்களைக் களைந்து பெண் நகைகளை அணிவதன் சம நேரத்தில் கதை விவரிப்பும் சேர்ந்து மொழித் தேவைகளைச் சுருக்குதலென்று மேடையுத்திகளின் சாத்தியமான அளவு பயன் பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய விடயம் ஆளப்பட்ட மொழி. அது சிருஷ்டிகர தன்மையுடன் நாடகத்தில் தொழிலாற்றியதைச் சொல்லவே வேண்டும். நாடகக் கலைஞர் எஸ்.உஷாராணியின் நடிப்பு அற்புதமானது. ஒரு மணி நேரம் க்ரமித்திருந்தார் மேடையை. அவ்வப் பாத்திரங்களாய் மாறியதாகவே நான் உண்ர்ந்தேன். அஸ்தினாபுரம் விட்டு இறுதியில் வெளியேறும் அம்பா, நதியாய் மாறி நிற்கையில் நாடகம் நிறைகிறது.

இதன் பாதிப்பு பெரிது. புனைவின் அதிகபட்ச சாத்தியம் அடையப்பட்ட அண்மைக்காலத்தின் சிறந்த நாடகப் பிரதியாக இதனைக் கொள்ள முடியும்.

இது பதிவு அல்ல, பாதிப்பின் விவரிப்பு.

000

Comments

மகேஷ் said…
ஐயா,
தங்களீன் கனவுசிறை நாவல் முதல் ் 4-5 வருடங்கலுக்கு முன் படித்தேன்...அடுத்த பாகங்கள் எங்கே கிடைக்கும்??முதல் பாகம் மிக நன்றாக இருந்தது...

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்