Posts

Showing posts from June, 2023

நகுலாத்தை : யதார்த்தமும் மாயமுமாய் பயணிக்கும் பிரதி

Image
  ‘ நகுலாத்தை’: யதார்த்தமும் மாயமுமாய் பயணிக்கும் பிரதி   (1) 2022 ஆவணியில் வடலி வெளியீடாக வந்த யதார்த்தனின் ‘நகுலாத்தை’ நாவல், தன் மதிப்பீட்டை அண்ணளவாய்ச் செய்வதற்கான வெளிகளையே கொண்டுள்ளது. அதில் ஐதீகம், நாட்டார் பாடல், வாய்மொழி இலக்கியங்களின் பயன்பாடுபற்றியதும், அப் படைப்பாக்கத்திற்கு நிறையவே தேவைப்பட்டிருக்கக் கூடிய தேடல்கள், கள ஆய்வுகள்பற்றியதுமான   படைப்பாளியின் எந்த விபரங்களும் இல்லை. வடவிலங்கையின் நிலவியல் படம் மட்டும் தரப்பட்டுள்ளது. கதையிலிடம்பெறும் ஐதீகங்கள் குறித்து, அவை ஐதீகங்களா புனைவுகளா என்பதுபற்றிய படைப்பாளியின் வாக்குமூலம், இதுபோன்ற ஓர் இலக்கியப் பிரதிக்கும் முக்கியமானது. அல்லாமல், நாவல் கட்டமைப்பு தவிர்ந்த காத்திரமான விமர்சனம் சாத்தியப்படாது. இத்தகைய தட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கப்படும் விமர்சனம், ஏகதேசமாய் தன் வழியில் முன்செல்லவோ, தடைகளால் பின்னிழுக்கப்படவோதான் செய்யும். நாவல் சார்ந்த குறையாகவன்றி இதை பதிப்பு சார்ந்த குறையாகக் காணவேண்டும்.   (2) மொழி வழியில் ‘நகுலாத்தை’ ஒரு பிரதியாய் நன்கு கட்டமைந்திருக்கிறதென்பதில் ஐயமில்லை.   அது பாவித்த மொழி அந்த

சாம்பரில் திரண்ட சொற்கள் 14

Image
14 கனவென்றோ எதார்த்தமென்றோ பகுத்துணரமுடியா தோற்ற மயக்கங்கள் வைத்தியசாலையின் ஒரு நோயாளிக்கு எப்போதேனும் நிகழ்வது அபூர்வமில்லை. எங்கோ மறுபடியும் தன்னை எடுத்துச்செல்வதான உணர்வை, இன்னும் தீராத் துயரின் தொடர்ச்சியாயெண்ணி மறுகும் தருணத்தில், அவசரத்தில் கொண்டுசெல்லப்படும் படுக்கையொன்றின் சில்லுகள் எழுப்பிய கஜ… கஜ… ஒலியில், தான் கணங்கள் சில முன் அடைந்தது, மனப் பதிவிலிருந்த உணர்வனுபவத்தின் துயில்கால மீட்பென, கண்விழித்த சிவயோகமலர் தெளிந்தார். சிறிதுநேரத்தில் அவரது அறையோடுள்ள நடைபாதையில் தென்னாசிய   தாதியொருத்தி தன் கவனிப்பிலுள்ள நோயாளிக்கு மருந்து கொடுக்கவோ கொடுத்துவிட்டோ அவசரமற்ற நடையில் போய்க்கொண்டிருந்தாள். இரவின் நிசப்தத்தை அவள் காலடிகள் மெல்லக் கலைத்தடங்கின. குழாய் வழி பிராண வாயுச் செலுத்துகை காலையில் நிறுத்தப்பட்டபோதே அபாய கட்டம் தனக்கு கடந்துபோய்விட்டதை சிவயோகமலர் தெரிந்திருந்தார். அக் கணம்போல் உயர்ந்த, உன்னதமான பொழுதை நீண்டகாலமாய் தான் அனுபவித்ததில்லைப்போல் மனம் முழுக்க ஓரினியவுணர்வலை பரந்தெழுந்தது. சிறிதுநேரத்தில் பக்கப்பாட்டில் சுவரோரம் பார்த்தார். நாற்காலியில் தலை தொங்கியபடி

சாம்பரில் திரண்ட சொற்கள் 13

Image
  சாம்பலில் திரண்ட சொற்கள் 13   லேசான குடும்பமில்லை, இப்ப நீர் கேக்குற ஆக்களின்ர குடும்பம். பாட்டன், பூட்டன், கொப்பாட்டன், கோந்துறு, மாந்துறு எண்டு கன தலைமுறையளாய்த் தழைச்சு வாற பரம்பரை. அவையைப்பற்றி மற்றவை சொல்லத்தான் கேட்டிருக்கிறன். ஆனா கந்தப்பு வாத்தியார   நேரில அறிவன். அவர்தான் அந்தக் குடும்பத்தில நானறிஞ்ச மூத்த தலைமுறை ஆள்.   உவ சிவயோகமலரின்ர பாட்டன்காறன் அவர். அநியாயம் சொல்லக்குடாது, வெகு திறமான மனிஷன். கண்ணுக்கு முன்னால ஒரு சீவன் பட்டினி கிடக்க விட்டதில்லையாம்.   ஒரு, பெரிய தாதுப் பஞ்சத்திலயிருந்தும், கோதாரி நோயுிலயிருந்தும் எங்கட சனம் தப்பிப் பிழைச்ச   அந்தக் காலத்தில அவர் செய்த சேவையள மறக்கேலாவெண்டு இப்பவும் சொல்லுவின. பசியெண்டு போன ஆக்களுக்கு மனிசன் கைப்பிடி அரிசியாச்சும் குடுக்காமல் விட்டதில்லையாம். மனிஷர் மட்டுமில்லை, றோட்டில நிக்கிற ஆடு மாடு பசியாக் சிடந்தாக்கூட குழையொடிச்சுப் போட்டிட்டுப் போற ஆள் என்பினம். அவரின்ர மோன் வீரகத்தியும் நல்ல மனுஷன்தான்.   காலம்புறத்தில பள்ளிக்குடம் போக   குளிச்சு முழுகி வெள்ளை வேட்டி சட்டையோட   நெற்றியில துருநூற்றுப் பூச்சும் சந்தனப