சாம்பரில் திரண்ட சொற்கள் 13

 

சாம்பலில் திரண்ட சொற்கள்

13


 

லேசான குடும்பமில்லை, இப்ப நீர் கேக்குற ஆக்களின்ர குடும்பம். பாட்டன், பூட்டன், கொப்பாட்டன், கோந்துறு, மாந்துறு எண்டு கன தலைமுறையளாய்த் தழைச்சு வாற பரம்பரை. அவையைப்பற்றி மற்றவை சொல்லத்தான் கேட்டிருக்கிறன். ஆனா கந்தப்பு வாத்தியார  நேரில அறிவன். அவர்தான் அந்தக் குடும்பத்தில நானறிஞ்ச மூத்த தலைமுறை ஆள்.  உவ சிவயோகமலரின்ர பாட்டன்காறன் அவர்.

அநியாயம் சொல்லக்குடாது, வெகு திறமான மனிஷன். கண்ணுக்கு முன்னால ஒரு சீவன் பட்டினி கிடக்க விட்டதில்லையாம்.  ஒரு, பெரிய தாதுப் பஞ்சத்திலயிருந்தும், கோதாரி நோயுிலயிருந்தும் எங்கட சனம் தப்பிப் பிழைச்ச  அந்தக் காலத்தில அவர் செய்த சேவையள மறக்கேலாவெண்டு இப்பவும் சொல்லுவின. பசியெண்டு போன ஆக்களுக்கு மனிசன் கைப்பிடி அரிசியாச்சும் குடுக்காமல் விட்டதில்லையாம். மனிஷர் மட்டுமில்லை, றோட்டில நிக்கிற ஆடு மாடு பசியாக் சிடந்தாக்கூட குழையொடிச்சுப் போட்டிட்டுப் போற ஆள் என்பினம்.

அவரின்ர மோன் வீரகத்தியும் நல்ல மனுஷன்தான்.  காலம்புறத்தில பள்ளிக்குடம் போக  குளிச்சு முழுகி வெள்ளை வேட்டி சட்டையோட  நெற்றியில துருநூற்றுப் பூச்சும் சந்தனப் பொட்டுமாய் வெளிக்கிட்டு வந்தாரெண்டா, சூரியன் வாறமாதிரி அப்பிடி பளீரெண்டிருக்கும். பாத்து சிரிச்சிட்டு ஒருக்கா தலையசைச்சாரெண்டா பன்னீர் தெளிச்சமாதிரி மேல் குளுர்ந்துபோகும்.

அவரை சமவயதுக்காறர் எண்டில்லை, பெரியாக்கள்கூட, வீரகத்தியெண்டு பேர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. ஆரும் எவரும் வித்துவான் வீரகத்தியெண்டுதான் கூப்பிடுவின. இந்தியாவெல்லாம் போய் நல்லாப் படிச்ச மனிஷன். கிரந்தப் பேச்சுக்கு ஆள் நம்பர் வண். வீட்டுக்குக் கிட்ட சரஸ்வதி வித்தியாசாலையெண்டு ஒரு சின்னப் பள்ளிக்குடமிருக்கு, அதிலதான் முதல்ல வாத்தியார் வேலை பாத்தார். பிறகு வல்வெட்டித்துறைப் பள்ளிக்குடத்தில தலைமை வாத்தி வேலை கிடைச்சு போயிட்டார்.

சயிக்கிள்ல போய், சயிக்கிள்ல வருவர். போக ஆறு கட்டை, வர ஆறு கட்டை. அந்தப் பன்ரண்டு கட்டையையும் மூசி மூசி உழக்குவார். வழியில ஒரு வெத்திலை தேத்தண்ணியெண்டு நிக்கிறேல்ல. பொயிலைப் பழக்கமும் இல்லை. ஆனா வேறயொரு பழக்கமிருக்கு. மூக்குப் பொடிப் பழக்கம்.

அதுக்கெண்டு ஒரு கறுப்பு டப்பா, நெருப்பெட்டிச் சைஸ்ஸில, வைச்சிருக்கிறார்.

அவர் மூக்குப் பொடி போடுறதும் பாக்க வலு சோக்காயிருக்கும். கதைச்சுக்கொண்டிருக்கேக்கயே நசுக்கிடாமல் டப்பாவை மெள்ளமாத் துறந்து ஒரு நுள்ளு, ஒரு நுள்ளளவுதான், பொடி எடுப்பார். எடுத்துக் கையில வைச்சபடி கதைச்சுக்கொண்டு நிப்பார். முன்னால நிக்கிற ஆள் அங்கால இங்கால பாக்க, அப்பிடியே  காத்து வளத்துக்கு முதுகைத் திருப்பிக்கொண்டு நிண்டபடி ரண்டு மூக்கோட்டக்கயும் மாறிமாறி பொடி நுள்ளியெடுத்த விரலுகளை வைச்சு ரண்டு ரண்டு தரம் சர்… சர்ரெண்டு இழுப்பார். இழுத்திட்டு திரும்பினாரெண்டா, முந்தி அந்த இட த்தில நிண்ட வாத்தியாரைக் காணேலாது. அந்தளவு உயரம், பெருப்பமாயிருந்தாலும், நிக்கிறது வேற ஆள்தான். கண்ணெல்லாம் நல்லாய்க் கலங்கி, மூக்கும் சிவத்திருக்க ஒருக்காச் செருமிப்போட்டு கதைச்சாரெண்டா விஷயமொண்டாயிருக்கும், ஆனா அது ஆரோவின்ர கதைதான்.

வாத்தியாற்ர கெட்டபுறமது. அதை, அவரோட நெருங்கிப் பழகினவையிலகூட கனபேர் கவனிக்கேல்லை. மூக்குப் பொடி போடுறதால உடம்பு சுகமில்லாமப் போன ஆக்கள் கனபேரிருக்கினம். அவையில குணம் கெட்டுப்போன ஆக்களும் கனபேர் இருக்கிறதாய்க் கேள்வி. வாத்தியாரும் பொடியால குணம் கெட்டுப்போன மனிசன்.

மனிஷன் இப்ப உயிரோடயுமில்லை. இல்லாமப் போன ஒராளைப்பற்றி பொல்லாப்புச் சொல்லப்படா. எண்டாலும் இந்தளவு சொல்லவேணும். அப்பத்தான் அந்தக் குடும்ப ஆக்கள் பட்ட சீரழிவுகளை விளங்கேலும். மனுஷி அன்னபூரணம், தங்கச்சியார் லச்சுமி, பெட்டையள் ரண்டு… அதுகள், எல்லாருமே அவற்ர அந்தப் பழக்கத்தால பாதிக்கப் பட்டிருக்கினம்.

அன்னபூரணம் பத்து கர்ப்பம் தாங்கிச்சிது. அதில ரண்டுதான் பிள்ளையாய்ப் பிறந்திது. மற்ற எட்டும்  அழிஞ்சுபோச்சு. மூத்த பொம்பிளப்பிள்ளை, அதுதான் உவ சிவயோகமலர், மேல்வகுப்பில படிக்கேக்கயே தாய்க்கு ரண்டுதரம் கர்ப்பம் கலைஞ்சு குய்யோமுறையோவெண்டு கத்திக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டோடியிருக்கினமெண்டா பாருமன்.

ஆஸ்பத்திரியிலயும் நேசியும் மேற்ரனும் வித்துவானைத் திட்டுறத நானே என்ர காதால கேட்டன். ‘பிள்ளைத்தாச்சிப் பொம்பிளயளெண்டா லாம்புச் சிமிலி மாதிரிக் கவனமாய்ப் பாக்கவேணும்; உங்கட உங்கட அமருகளயும் ஆத்திரங்களையும் அவையில போய்த் தீர்த்திடக் குடா’ எண்டு தாறுமாறாய்ப் பேசினாளவை.

அதாலதான் உவ சிவயோகமலரும் தேப்பனோட மோங்குடுத்து கதைக்காம கிதைக்காம கொஞ்சநாள் திரிஞ்திது.

கதை பேச்சில எவ்வளவுதான் வித்தியாசமிருந்தாலும், மனநிலையிலயும் நடத்தையிலயும் சரியாய் தேப்பனைப்போலதான்  உந்தப் பிள்ளை.

எவ்வளவுக்குப் படிச்சிருந்தாலும் அந்தாளிட்டயொரு தடிப்புக் குணமிருந்ததை ஒருத்தராலயும் இல்லையெண்ணேலா. சுத்தமான சைவக்காறர்; சாதியும் கலப்புக் கிலப்பில்லாத வெள்ளாளச் சாதி; யாழ்ப்பாணத்தில அரசர்மாரிருந்த காலத்தில எடுபிடி வேலை செய்தெண்டாலுஞ்சரி, படையள நடத்திற ஆக்களாய் இருந்தெண்டாலுஞ் சரி, இல்லாம…  சபையில ராசாவுக்கு ஆலோசனை சொல்லுற மந்திரியாயிருந்தாலுஞ் சரி… என்னண்டோ காணி பூமியெண்டு நல்லா சொத்துச் சேர்த்திட்டுது அந்தக் குடும்பம். எங்கட அப்பரே சொல்லியிருக்கிறார், உவங்கட காணி பூமியெல்லாம் எத்தினை எத்தினை பரப்பு, எங்கெங்க இருக்கெண்டு உவங்களுக்குக்கூடத் தெரியாதாம்.

அந்தக் காலத்தில கந்தப்பு வாத்தியாரிட்ட பன்ரண்டு சுத்து சில்லு வண்டிலொண்டு இருந்துதாம். அதில பிணைக்கிற மாடுகள் ரண்டும் இந்தியாவிலயிருந்து கொண்டுவந்த வடக்கன் மாடுகளாம். அந்த வண்டில்ல நான் ஏறினதில்லையெண்டாலும், புடிச்சுக்கொண்டு பின்னால ஓடியிருக்கிறன். ஷோக்கான வண்டில். அதுகின்ர சில்லுக்கு மஞ்சள் பெயின்ற் அடிச்சிருக்கு; நுகத்தடிக்கு சிவப்புப் பெயின்ற்; குத்துக்காலுக்கு பச்சை. அந்த வண்டில் நிப்பாட்டுற கொட்டில்ல கட்டியிருந்த பறணில கிடந்த ஊரிப்பட்ட  சாமானுகளோட அஞ்சாறு சாக்குமூட்டையளும் கிடந்துதாம். அதில ரண்டு மூண்டில ஏதேதோ பனையோலைச் சுவடிக் கட்டுகளாம். மிச்சத்தில காணி உறுதியள்தானாம் இருந்திது.

ஒண்டும் விளையாட்டுப் பேச்சில்லை. நீர் தாராளமாய் நம்பலாம். எண்டாலும் இரக்கப்படுற மனமும் ஓட்டைக் கையுமாய் இருந்ததில கன காணியள வித்துச் சிலவழிச்சிட்டுதுகள்; இன்னும் கொஞ்சக் காணியள பழனி கோயிலுக்கு எழுதிவைச்சிட்டுதுகள். எண்டாலும் வித்துவான் தன்ர காலத்தில பெரிய காணி பூமிக்காறராய்த்தான் இருந்தார். அவற்ர தங்கச்சியாருக்கு ஊரில அரண்மனைவீடெண்டு இருந்த ஒரு பெரிய வீட்டைக் குடுத்துக் கலியாணம் செய்துவைச்சினமெண்ட.து லேசான விஷயமே?

அப்ப… தடிப்பு ஏறாமல் என்ன செய்யும்?

சாந்தமான மனிஷனெண்டபடியா தண்டுமுண்டுக்கு வித்துவான் நிக்கிறேல்லைத்தான். ஆனா அவற்ர தம்பி  சண்முகராசாவெண்டு ஒருத்தர் இருக்கிறார், அந்தாள் வெட்டுக் குத்துக்கும் கிறுங்காத மனிஷன். எங்கட தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் ஆலயப் பிரவேசம் நடத்தின காலத்திலயும், தேனிக்கடைப் பிரவேசம் நடத்தின காலத்திலயும் சண்டியன்மாரைச் சேத்துக்கொண்டு தென்மராச்சிக்கே நெஞ்சை நிமித்திக்கொண்டு வந்திட்டுது.

அச்சுவேலிப் பிரச்சினை முத்தின நேரத்தில ஆளுக்கு வெடிவைக்கத் திரிஞ்சாங்கள்; ஆற்ர நல்லகாலமோ, மனிஷன் தப்பியிட்டுது.

அந்த இறுமாப்பும் தடிப்பும் வித்துவானிட்டயும் இருந்திது. ஆனா என்னவொண்டு, வெளிவெளியாய் அதை அவர் காட்டினதில்லை, அதுதான் வித்தியாசம்.

அந்த மனநிலைதான் உவவிட்டயும். சும்மா லேசுப்பட்ட ஆளில்லை உவ. அதில ஐமிச்சப்படத் தேவையில்லை. எல்லாம் தெரிஞ்சுதான் சொல்லுறன். சாதித் தடிப்பும், பணத் திமிரும் எல்லாம் அடி அடியாய் வந்த சொத்து அவைக்கு.

அந்தஸ்த்து வித்தியாசமிருந்தாலும் ஒரே சாதியாக்கள் இவையின்ர முன்னால் வீட்டு கணபதிப்பிள்ளை குடும்பம். வித்துவானுக்கும்  பெண்சாதிக்கும் இங்கிதமாய் நடக்கத் தெரிஞ்சதால போக்குவரத்து, குடுக்கல் வாங்கல் எல்லாமிருந்திது. மட்டுவில் பண்டித்தலைச்சி அம்மன் கோயில், சன்னதி கோயில், வல்லிபுரக் கோயிலெல்லாம் குடும்பமாய் வண்டில்ல போய்வருவின. கணபதிப்பிள்ளையர் இதுகளுக்குப் பின்னடிச்சுக்கொண்டு நிண்ட மனுஷன்தான். எண்டாலும் குடும்பத்தை அனுப்பிவைப்பார்.

ஒருநாள் அம்மன் கோயிலுக்குப் போன இடத்தில, பொங்கல் முடிஞ்சோடன பெடியன் எல்லாரையும் முந்தி வந்து பின்பக்கத்தில வெய்யில் முகத்தில அடிக்காதமாதிரி ஏறியிருந்திட்டுது. உந்த சிவயோகமலர் இருக்கே… அதுவும் சின்னன்தான் அப்ப… தங்கட வண்டில்… தான்தான் முதல்ல ஏறவேணுமெண்டு நாண்டு நிண்டிட்டுதாம். பெடியன் கீழ இறங்கிற மட்டும் ஒருதற்ர சமாதானத்தில அடங்கேல்லயாம். தேப்பன் தடி எடுத்தும் பாத்தாராம். அதுக்கும் கேக்கேல்லையாம். பெடியன் கீழ இறங்கினாப் பிறகுதான் பெட்டை அடங்கிச்சிதாம்.

சிலபேருக்கு சின்ன வயதிலயே போட்டி பொறாமையான மனம் அமைஞ்சிடுதுபோல. அதில உவ சிவயோகமலரும் ஒராளெண்டு நினைக்கிறன். கடைசிவரை சுந்தரத்தாரை நிம்மதியாயிருக்க விடேல்லயே உந்த மனுஷி. உவள் துன்னாலைத் தங்கம்மான்ர மோள் சிவத்தியோட கொஞ்சக் காலம் இவவுக்கு பெரிய கொண்டாட்டம் இருந்துதெல்லோ, உவவின்ர கதையெல்லாம் சிவத்தி சொல்லியிருக்கிறாள்.

கடைசியில ரண்டு பேருக்கும்தான் கலியாணம் நடந்திதெண்டாலும், அல்வாய்ச் சிவன் கோயிலடி சீதண வீட்டில இருக்கேக்கயே நாயும் பூனையுமாய்த்தானாம் எப்பவும் இருந்தினம். அதுவும் வீணை வாசிக்க கச்சேரிக்குப் போறனெண்டு கொழும்பில போய்க் கிடந்தா கொஞ்ச நாள். சுந்தரத்தாரும் ஏன் விட்டிட்டு இருந்தாரெண்டு எனக்கெண்டா உண்மையில விளங்கேல்லை.

ஒருநாள் கொழும்பிலயிருந்து வீட்டை வந்தவவுக்கும் சுந்தரத்தாருக்கும் பெரிய வாக்குவாதமாய்ப் போச்சு. இந்தத் தகராறில…. என்னமாதிரி நடந்திதோ… இல்லாட்டி இவர்தான் தள்ளிவிழுத்தினாரோ தெரியாது…. சுவரோட சார்த்தி வைச்சிருந்த வீணை கீழ விழுந்து உடைஞ்சுபோச்சு. அந்தக் காலத்திலயே பத்தாயிரம் ரூவா பெறுமதியாம். உவ கோவிச்சுக்கொண்டு போய் தேப்பன் வீட்டில நிண்டிட்டா. ஒருநாள் சுந்தரத்தார் பள்ளிக்குடம் போக வீட்டை வந்து அவர் கீறி வைச்சிருந்த படங்களெல்லாத்தையுமெடுத்து கிழிச்செறிஞ்சிட்டு போயிட்டா. மூண்டு பிள்ளையளுக்குப் பிறகும் இந்தமாதிரி விளையாட்டு வேண்டாமெண்டு இவர்தான் போய் உவவை பிறகு கூட்டிவந்தாராம்.

மூண்டு பிள்ளையள் இவைக்கு. மூத்த ரண்டும் பெடியள்; கடைசி பொட்டை. தாயைப்போல மூண்டும் நல்ல வடிவும் நிறமும். அவர் காக்காக் கறுப்பு; சிரிப்புத்தான் வெள்ளை. இவைக்கு தோல் வெள்ளையெண்டாலும் சிரிப்பு கறுப்பாய்த்தான் இருந்திது.

மூண்டுக்குள்ளயும் ரண்டாம் பொடியன் மகேந்திரசிவம் நல்ல குணமும் வடிவும். என்ர கணக்குச் சரியெண்டால், பொடியன் தொண்ணூறில நாட்டைவிட்டு வெளிக்கிட்டிருக்கவேணும். தொண்ணூற்ரொண்டில கனடா வந்து சேந்திட்டுது. என்ர மோனும் சரியா அந்த ஆண்டிலதான் வெளிக்கிட்டு தொண்ணூற்ரொண்டில கனடா வந்து சேந்தவன்.

எனக்கு இந்த ரண்டாவது பெடியன் மகேந்திசிவத்தை நல்லாத் தெரியும். ஊரிலயிருக்கேக்கயே தெரியும். என்ர மோன்ர வகுப்பெண்டபடியா கதை பேச்சுமிருந்திது. கனடா வந்தும் கொஞ்சக் காலம் ஸ்காபரோவிலதான் பெடியன் இருந்திது. பிறகு இயக்கங்களின்ர தொந்திரவு வலுத்துப்போச்செண்டு ஒட்டாவா போட்டுது.

நல்ல பொடியன்; பொறுப்புத் தெரிஞ்ச பொடியன். தாயை ஏஜன்ரால இஞ்ச எடுத்துவிட்டது அந்தப் பிள்ளைதான. சகோதரங்களை வெளிநாட்டுக்கு எடுத்துவிட்டதும் அந்தப் பிள்ளைதான். ரண்டாயிரத்தில ஒராளை சிலோனிலயிருந்து ஏஜன்ரால எடுத்து விடுறதெண்டாலே குடும்பம் கடனில முழுகிப்போம். மூண்டு பேரையெண்டா, யோசிச்சுப் பாரும்.   இப்பிடி ஒண்டையும் பாராம, இஞ்ச எடுத்துவிட்டதுக்கு உவ செய்த கைமாறு என்ன தெரியுமே?

அதைக் கொஞ்சம் விளப்பமாச் சொன்னாத்தான் உமக்கு வடிவா விளங்கும். நேரமிருக்குத்தான? சொல்லுறன், கேளும்.

ஒட்டாவா போய் அடுத்த வரியத்திலயே அங்கயிருந்த ஒரு கயானாப் பெட்டைக்கும் மகேந்திரசிவத்துக்கும் பழக்கமாகிப் போச்சு. தனியாய் இருந்தவர்தான, கட்டுப்பாடில்லாம பழகியிட்டினம்போல, பொடிச்சி மாதமாய்ப் போச்சு. அதால திடீரெண்டு கலியாணம் செய்திட்டினம். சகோதரங்களுக்கும் சொல்லேல்லை, ஊரில தாய்தேப்பனுக்கும் சொல்லேல்லை. தாய்க்காறி வரப்போறா, நேரில சொல்லலாமெண்டும் நெச்சிருக்கலாம்.

தாய்க்காறி ரண்டாயிரத்தில ஒரு நல்ல சமரில வந்தாவெண்டு ஞாபகம். பொடியனும் வலு சந்தோஷமாய் மனிஷியையும் பிள்ளையையும் ஒட்டாவாவிலயிருந்து கூட்டிவந்து ரொறன்ரோ எயாப் போட்டில நிண்டுகொண்டிருக்கு.

மோன், தாய் வாறதாய்ச் சொன்ன பிளைற் வந்து மூண்டு மணத்தியாலமும் ஆயிட்டுது, இதென்ன, ஆள் இன்னும் வரேல்லையெண்டு ஏங்கிப்போச்சு. மகேந்திரசிவம் சிலோன் ஏஜன்ருக்கு போனடிக்கிறார். பதில் கிடைக்குதில்லை. விஷயத்தைக் கேட்டறியிற கயானாப் பிள்ளைக்கும் பெரிய சோகமாயிருக்கு.

கடைசீல விசாரணைக்கு இமிக்கிறேஷன்காறர் மகேந்திரசிவத்தைக் கூப்பிடுறாங்கள். இவர் போய் எல்லா அலுவலையும் முடிச்சிட்டு தாயைக் கூட்டிக்கொண்டு வாறார்.

மாமிக்காறியைப் படத்;தில கண்டிருக்கும், அந்தக் கயனாப் பிள்ளையும் வலு சந்தோஷத்தோட சிரிச்சுக்கொண்டு அவவிட்டப் போகுது. மகேந்திரசிவம் நிண்ட சீரிலயும், பிள்ளையை ஆதரவோட அவளிட்டயிருந்து வாங்கின மாதிரியிலயும் ஒரு அனுமானம் அவவுக்கு வந்திருக்கும், பார்வையிலயே கேள்வி விழுகிது.

எல்லாம் சொல்லுறன்… நீங்கள் முதல்ல வாருங்கோ… எண்டிறார் மோன். மனுஷி வேண்டாவெறுப்பாய் அந்தப் பிள்ளையை விலத்திக்கொண்டு அங்கால போகுது.

அம்மா எண்டிறார் மோன்.

‘எனக்கு எல்லாம் விளங்கியிட்டுது, மகேந்திரன். இந்தக் கேவலத்தைப் பாக்கிறதுக்குத்தான் அவசரப்பட்டு என்னைக் கூப்பிட்டனியோ…’

நான் கூப்பிட்டிருந்தாலும் காசு அவ்வளவும் குயின்ஸி பாங்கில கடனெடுத்தது…

‘அதென்னவோ, அது உன்ர பிரச்சினை. இப்ப என்னைக் கொண்டுபோய்  எங்ஙனயெண்டான்ன தங்கவிடு. சிலவுக்கும் கொஞ்சம் காசு தா. நான் அபிநயாவோடயும் நடராசசிவத்தோடயும் கதைச்சு என்ர வழியைப் பாக்கிறன். எப்பவாச்சும் என்னைப் பாக்கவேணும்போல இருந்தா, நீமட்டும் வந்து பார்; அந்த நாயும் அதுகின்ர குட்டியும் என்ர கண்ணிலயும் படக்குடாது.’

வாய்க்கு ஆயிரம் பாஷை இருக்கட்டும். முகத்துக்கு ஒரு பாஷைதான், ஒரேயொரு பாஷைதான், மாமிக்காறியின்ர வாயில வந்ததுகளை விளங்காட்டியும், முகத்திலயிருந்து வந்த பாஷையை அந்த கயானாப் பிள்ளையால விளங்கியிருக்க ஏலும். அது விளங்கின நிமிஷத்தில தன்ர மனிசன்ர குடும்பத்தில இருந்த மதிப்பு ஆசை பாசம் கனவு கற்பனை எல்லாத்தையும் அந்தப் பிள்ளை எரிச்சிருக்கும். இது நடந்தது ரண்டாயிரத்திலயெண்டா… பாரும்…. இப்ப ரண்டாயிரத்துப் பத்தொன்பது… பதினெட்டு பத்தொன்பது வரியம்… மாமியாரைப் பாக்க வரேல்லை ; மோனும் வாறதில்லை.

மோன் எப்பாலுமிருந்திட்டு போனில கதைக்கிறாரெண்டு கேள்வி. அதுவும் தேப்பனோடதான் கூட.

அவரும் பெட்டையோட கதைக்கிறேல்லை. தன்ர மனுஷிக்குத் தெரிஞ்சிடுமெண்ட பயமாக்கும்.

எல்லாற்ர ஆட்டத்துக்கும் இடம்விட்டு காலம் ஓடிக்கொண்டிருக்கு.

எல்லாரும் நெச்சிருப்பினம்,, நாங்கள் வெண்டிட்டம்… நாங்கள் வெண்டிட்டமெண்டு.

அது அப்பிடித்தானாவெண்டு போகப் போகத்தான தெரியும்.

 

அது அவரைத் திடுக்கிடப் பண்ணியது. உறைந்துபோகச் செய்தது. அத்தனை ஆண்டு கால தன் மனைவியின் பராமரிப்பில் அவ்வாறான ஒரு நிலைமையை சுந்தரம் என்றும் எதிர்கொண்டதில்லை. யாரும் யாரையும் எதிர்கொள்ளக் கண்டதுமில்லை ; கேட்டதுமில்லை. அது அவருக்கே  நேரும்போது என்ன ஆவார் அவர்?

வாழ்வில் எதுவித ஆசாபாசமும் அற்றதாய்க் கழிந்த கடந்த காலங்களைப்போலவே மீதி நாட்களையும் கடத்திவிடும் தீர்மானம்தான் அவரிடத்தில் இருந்திருந்தது. துன்பம், துயரம், இழப்பு, நோய்நொடியென எதனிலுமே பிரக்ஞையற்ற ஒரு விருத்தா வாழ்க்கையெனினும் அதையே குறியாகக்கொண்டு வாழ்ந்து வந்தார்.

அவரது வயதும், நிலைமையும் அதைவிட அவரிடம் எதிர்பார்க்கச் செய்ய முடியாதனதான். ஆனாலும் அவை அவதானத்தில் இருக்கவேண்டியவை. தவிர்க்கப்படக் கூடாதவை.

மனைவியின் இரவுணவை எடுத்துக்கொண்டிருக்கையில் அவரது அறைக்குள் விக்கலெடுப்பதுபோன்ற அபூர்வமான ஓசை பிறப்பதைக் கேட்டார் சுந்தரம். ஆபத்தெதையும் எதிர்பார்க்காது அநாயாசமாக நாலடி வைத்து என்னது எனப் பார்க்கப்போலத்தான் சிவயோகமலரின் அறை வாசலை அவர் சமீபித்தார்.

உள்ளே மலர் மூச்செடுக்க படும் துடிப்பில் திடுக்கிட்டுப்போனார். அவரது உடம்பே விறைத்துப் போனது. ‘மலர்…!’ என அலறியதற்கு மேல் ஏது செய்யவும் இயலாதுபோனார். அவ்வாறான ஆபத்துச் சமயங்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் செல்ல அம்புலன்ஸ் உதவிக்கு 9-1-1 க்கு போனெடுக்கவும் முடியாதவராய் அவர் ஆகியிருந்தார். குறைந்தபட்சம் அவரால் செய்யமுடிந்தது படிக்கட்டுப் பக்கம் திரும்பி ‘சாந்தீ…!’யென  பெருங்குரல் எடுக்கமட்டுமே.

ஏற்கனவே அவர் ‘மல’ரெனக் கதறியது கேட்டு பெரிய மாமன் செல்லமுத்துவுக்கு தேநீர் போட்டுக்கொடுத்து தானும் அருந்திக்கொண்டிருந்த சாந்தரூபிணி செவிப் புலனைக் கூர்த்திருந்தாள். அதனால் பின்னும் சுந்தரம் தன்னைக் கத்தியழைத்த சத்தத்தில் ஏதோ ஆபத்தையுணர்ந்துகொண்டு விநாடிகள் தாமதமின்றி கீழே ஓடினாள். தன் வேகத்தை இப்முறை பாதிப் படிக்கட்டில் அவள் நிறுத்திக்கொள்ளவில்லை.

கீழே இறங்கி இருவர்மீதும் கவிந்த பார்வையில் நிலைமையின் கடூரத்தை விளங்கிப்போனாள் சாந்தரூபிணி.

மலர் மூச்செடுக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். மூச்சு உள்ளே செல்லப்போல் வெளியேறவும் முடியாது திணறினார். உடனடியாக மலரின்நெஞ்சை நீவி அவர் அமைதியடையும்படி, ‘அதொண்டுமில்லை, வாய்வுப் பிரச்சினையாயிருக்கும்’ என எதையோ சொல்லி நம்பிக்கை வரப்பண்ண முயற்சித்தார்.

அந்தளவில் கண் விழிகள் பிதுங்கி, சுவாசம் பெரும்பாலும் மலருக்குத் தடைபட்டுப்போயிருந்தது. அந்த நிலையில் அவரது மனத்தில் தோன்றிய ஒரே எண்ணம்… ‘செயற்கைச் சுவாசம்.’

அவசரமாய் சுந்தரத்தைத் தெளிவித்து 9-1-1 க்கு போனெடுக்கச் சொல்லிவிட்டு மலருக்கு வாய்வழி காற்றை ஊதும் முறையைத் தொடங்கினாள்.

ஒரு நிமிஷமாயிற்று, இரண்டு நிமிஷமாயிற்று… சாந்தரூபிணியின் நம்பிக்கைகள் தளரவாரம்பித்தன. மலர் தன் இறுதிமூச்சை ஏற்கனவே விட்டுவிட்டதாகவே எண்ணிவிட்டாள். அந்தநேரத்தில்  வீட்டு வாசலில் இரைந்த வாகனச் சத்தம் அவளை மீண்டும் அம் முயற்சியில் தொடர்ந்து மும்முரமாய் ஈடுபடவைத்தது.

திடீரென மலரின் தொண்டையில் அடைப்பொன்று திறபட்டதுபோன்ற சத்தம். மறுகணம் அவரின் அவதியான சுவாசம் சுயமாய் இயங்கத் தொடங்கியது.

அந்தளவில் அம்புலன்ஸில் வந்த வைத்திய அதிகாரிகள் நிலைமையைப் பரிசீலித்து, முதலில் பிராணவாயுச் செலுத்துகையையும், பின் அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்வதற்கான ஆயத்தத்தையும் செய்தார்கள்.

வெளியே, ஷ்ட்ரெச்சரில் எடுத்துச்சென்று வண்டியுள் மலரை ஏற்றுகிற நேரத்தில், இன்னும் ஆசுவாசப்பட முடியாதிருந்த சிவயோகமலரின் கரம் சுந்தரத்தின் பக்கம் நீண்டு அவரைப் பற்றியது.

கூடச் செல்வதா வேண்டாமாவெனத் தயங்கியபடி நின்றிருந்த சுந்தரம் மேற்கொண்டு ஒரு கணம் தாமதிக்கவில்லை. அம்புலன்ஸில் ஏறிக்கொண்டார்.

‘மாமா நிக்கிறார், நான் பின்னால அவரோட காரில வருவன், நீங்கள் யோசியாமலிருங்கோ, அங்கிள்’ என்று சுந்தரத்திற்கு தெம்பளித்தாள் சாந்தரூபிணி.

ஆஸ்பத்திரியில் அந்தநேரத்தில் வெகு சந்தடியாயிருந்தது. நெடுஞ்சாலை விபத்தொன்றினால் பொலிசும் டொக்டர்களுமென இருந்த பரபரப்பைத் தாண்டி அவசரகால சிகிச்சைக்கான ஓரறையில் மலரைக் கொண்டுசென்றார்கள். டாக்டரின் பரிசோதனை முடியும்வரை பார்வையாளர்கள் வெளியே அந்தரத்திலிருக்க விடப்பட்டனர்.

தனக்கு அன்றிரவு அன்ரியுடன் தங்க வசதியாயிருக்குமென்றும், சுந்தரத்தை வீடு சென்று பிள்ளைகளுக்கும் மற்றும் வேண்டியவர்களுக்கும் தகவலளிக்கும் காரியத்தைக் கவனிக்கும்படியும்   வற்புறுத்தினாள் சாந்தரூபிணி.

டாக்டர் வெளியே வந்து உடல்நிலைபற்றித் தெரிவித்ததும் சிறிது சமாதானமானவர், உள்ளே சென்று மலரைப் பார்த்து, அவரின் கரத்தை ஆதரவாகத் தடவி அவளிடம் விடைபெற்றார்.

வீடு வந்த சுந்தரத்தின் அமைதி இன்னும் தொலைவிலேயே நின்றிருந்தது..  ஒரு சிறு பொழுதில், புகைப்பதினாலான புற்றுநோய் எச்சரிக்கையை இரண்டு தடவைகள் மீறினார். அப்போதும் மனம் தெளிய அவருக்கு மறுத்திருந்தது.

முதலில் மலரின் சுகவீனம்பற்றி பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டுமென ஒட்டாவாவிலுள்ள மகேந்திரசிவத்திற்கு போனெடுத்து விஷயத்தைச் சொன்னார். பின்னர் நள்ளிரவு தாண்டியிருந்தாலும் பரவாயில்லையென இங்கிலாந்திலுள்ள அபிநயவல்லியை அழைத்தார். கனடாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பதினாறு மணி நேர வித்தியாசமாதலால் நள்ளிரவு தாண்டியிருக்கும் அந்த நேரத்தில் தாயின் நிலைமையைச் சொல்லி நடராஜசிவத்தைப் பதற்றப்படுத்த வேண்டாமென காலையில் போன் செய்யக் காத்திருந்தார்.

பிள்ளைகள் இரண்டு பேருக்கும் தாயின் சுகவீனத்தை அறிவித்தபோதே அவர்களுக்குச் சொன்ன ஆறுதல் வார்த்தைகளால் தானுமே  அமைதி கூடப்பெற்றுப்போனார் அவர். அது மூன்றாவது தடவையும் புற்றுநோய் எச்சரிக்கையை மீறுவதிலிருந்து அவரைத் தடுத்தது.

சோபாவில் அமர்ந்திருந்த சுந்தரத்தின் மனம்  ஆழமற்று அந்தந்த விஷயங்களிலும் தொட்டுத் தொட்டுப் பறந்துகொண்டிருந்தது.

உண்மையில் 9-1-1க்கு போனெடுக்கவேண்டுமென்பது  அவருக்குத் தெரிந்திருந்தது. எணண்ணத்திலும் ஓடியது. உடம்புதான் இயங்காதிருந்துவிட்டது. தனது ஸ்தம்பிதம் மேலும் சிறிதுநேரம் நீடித்து தான் ‘சாந்தீ…!’ எனக் கத்தாதிருந்தாலோ, காதில் அத் தொனி விழாது அவள் வரத் தாமதமாகியிருந்தாலோ மலருக்கு என்ன நேர்ந்திருக்குமென எண்ண அவரது மனம் பதறியது. அந்தப் பேரிழப்பு தன்னால் நேர்ந்ததாக இருந்தால் வாழ்க்கை முழுக்க அதுவொரு பழியாய், பாவமாய் தன்னை நிழலாய்ப் பின்தொடர்ந்திருக்குமேயென எண்ண அவரது நெஞ்சு துடித்தது. பின்தொடரும் அந்த ஆத்மாகூட தன்னை சகல வழிகளிலும் பழிவாங்கத் தயங்கியிராதென எண்ண அவரது உள் நடுக்கம் மேலும் அதிகரித்தது.

அப்போது, அம்புலன்ஸில் ஏற்றும் கணத்தில், சுத்தரம் நிற்குமிடத்தைத் துளாவி அவரைப் பற்றுக்கோடாய் சிவயோகமலர் பற்றியதை நினைத்துப் பார்த்தார். அதுதான் உயிர் அகத்ததோ புறத்ததோ என்ற தருணத்தில் அவர் காட்டியிருக்கக்கூடிய அடைக்கலத்தின் அடையாளமென்பதை அவர் அறிவார். அந்த அடைக்கலமாய் தானிருந்ததில் ஒரு நிறைவும், அந்த நினைப்பில் ஒரு சிலிர்ப்பும் அவரிடத்தில் உண்டாயின.

சிவயோகமலர் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிய பின்னாலும் தன் அகங்காரத்தின், உதாசீனத்தின், சிறுமைப்படுத்துவதின் மனக்கூறுகள் அழிந்தவராய் நடப்பாராவென்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆயினும் அப்போதும் அவர் தன் இரக்கத்துக்குரியவராகவே இருப்பாரென்பதில் சுந்தரத்திற்கு நம்பிக்கை. அந்தளவு மோசமான உத்தரிப்பை மலர் ஒரு சிறு காலவெளியில் அனுபவித்திருந்தார். இரவுகளில் பயங்கரக் கனவுகளாய் அந்தக் காட்சிரூபம் தனக்குத் தோன்றிவிடக்கூடாதே என சுந்தரம் உள்ளுள்ளாய் விரும்பிக்கொண்டார். 

எவ்வளவு செல்வாக்கான, எவ்வளவு வசதியான குடும்பத்திலிருந்து வந்த பெண் அவர். திடீரென்ற உயிரச்சம்  நேர்ந்தபோது எல்லாமிழந்தவராய், எதுவுமற்றவராய், வெறும் உயிர்ச் சடலமாய் ஆகியிருந்தாரே! அது தன் அந்திமத்தின் அடையாளமாவென்ற ஏக்கம் பார்வைக்கும் வெறுத்திருந்த தன்னையும் துணைக்கு அழைத்ததே!

அவ்வாறுதான், எல்லோரும் அடங்குவதற்கு ஒரு தருணம் வருகிறது.

அவர் முன்பே எண்ணியிருந்ததுபோல் அது ஒரு கணத்தின் விளைவுதானே!

கணமென்பது காலத்தின் வகிர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறுபொழுது.

தேகத்துக்கும் சவத்துக்கும், ரூபத்திற்கும் அரூபத்திற்கும், நனவுக்கும் கனவுக்கும், சத்துக்கும் அசத்துக்குமிடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது அது.

புள்ளிபோலன்றி, கணத்துக்கு பரிமாணமுண்டு. சிலவற்றின், ஒன்றிலிருந்து ஒன்றாகும் மாற்ற விசைக்குத் தேவையான காலவளவு அதுதான்.

கலாபூர்வமான விஷயங்களின், உதாரணமாக சித்திரத்தில், கணம் சிறைப்பிடிக்கும் உணர்வு உயிர்த்துவம் பெறுகிறது. அதுவே உயிராகிறது. உயிரின் உயிருமாகிறது.

அவ்வாறான பல கணங்களை சுந்தரம் தவறவிட்டிருக்கிறார். அந்த வீணைக் கலைஞி சிவயோகமலரும்கூட அவ்வாறான பல கணங்களைத் தவறவிட்டவரே.

இழக்கும்போதுமட்டுமன்றி இழந்த பின்னாலும் அதுபற்றி உணரப்படாது போவதில் விளைகிறது பேரிழப்பு. யாரிவர்களில் கூடுதலான பேரிழப்பாளியாகக்கூடும்?

(தொடரும்)

 தாய்வீடு மே 2023

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்