Sunday, June 28, 2009

கலாபன் கதை 1

குருவிக்கு ஒரு கூடு வேண்டும் :


அது ஒரு 1974இன் ஆடி மாதத்து இரவு. செறிந்து விழுந்து கிடந்தது இருள். ஆனாலும் தலைநகரின் மின்வெளிச்சம் வானத்தை ஓர் ஒளிப்பரவலில் கிடத்தியிருந்தது.

படுக்கையில் படுத்திருந்த கலாபன் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். பின் உறக்கம் வராதென்று உறுதியாக, எதையாவது அமைதியாகக் கிடந்து யோசிப்போம் என்ற முடிவோடு நிமிர்ந்து கிடந்தபடி தலையுயரத்தில் இருந்த வட்ட இரு கண்ணாடி ஜன்னல்களினூடு பார்வையை வெளியே எறிந்தான். வானம் தெரிந்தது. நிலா இல்லாத, நட்சத்திரங்களும் இல்லாத வானம். அவ்வப்போது ஒன்றிரண்டு நரைத்த முகில்கள் மிதந்தோடின அதில். பிறகு ஒரே வெளிர் நீலம். அதைப் பார்ப்பதுகூட அவனுக்கு வெகுநேரமாக அலுக்கவில்லை. பார்வை பரவெளியில் பதிந்திருந்தாலும் சிந்தனை அவ்வெளியினூடு சிறகடித்து வீடுநோக்கிப் பறந்துகொண்டிருந்தது.

அவன் தனது இளமனைவியையும், குழந்தையையும் ஊரில் தனியே விட்டு வந்திருக்கின்றான். கொழும்பு வந்து பதினான்கு நாட்கள். உடலில் விளைந்திருந்த தாபம் அவனது மனைவியின் அருகை இச்சித்தது. அது ஒரு தகன மண்டபத் தகிப்பை அனுபவிக்கச் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளம் உணர்ந்த காதலின் பிரிவுத் துயரும் அதற்குச் சற்றும் குறைவில்லாததாய்.

இனி அவன் அவளைக் காண மிகக் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மேலேயாவது ஆகும். அவள், காணும்போதெல்லாம் மனக்கிளர்ச்சி தரும் அழகியாகத்தான் இருந்துகொண்டிருந்தாள் அவனுக்கு. குழந்தையும் அவளே போல. அவளை இனிச் சேர எத்தனை காலமாகுமோ? அவன் இரண்டு கிழமைக்கு முன்னர் கொழும்பு புறப்பட்ட நாளின் முந்திய இரவில், வாத்சாயனக் கதைகள் சொல்லும் எத்தனை தரிசனங்களை அடைந்திருந்தது அவர்களது தும்புமெத்தைக் கட்டில். சிங்களத் தொழிலாளி வன்னியில் செய்து, தோளில் சுமந்துவந்து விற்ற கனதியற்ற கட்டிலே நிலமதிரக் கிளர்ந்த கலைநிகழ்வுகளால் களைத்ததே.
மனோ ஒரு பிரிவை ஆழமாக உணர்ந்துதான் அந்த இரவை அர்த்தமுள்ளதாக்கியிருந்தாள் அவனுக்கு. இன்னும் ஒரு வரு~த்துக்கு உடல் தவனம் தணிக்க வழியே இல்லையென்ற ஆவலாதியில் அடைந்த, அடையவைத்த இன்பங்கள் அவை.

மறுநாள் காலை தூக்கமற்றதால் சிவந்த விழிகளுடனும் அவள் குளித்துவந்து சந்தோ~மாகத்தான் வீட்டுக் காரியங்களைக் கவனித்தாள், பிறகு சமைத்தாள். ஆனால் மாலையாக ஆக அவள் முகம் இருளத் தொடங்கிவிட்டது. வானம் இருள முன்னம் இருண்ட அவளது முகம் கண்டு அவனுக்கும் கவலையின் அதிகரிப்பு. அவன் கொழும்புக்கு புகையிரதமேறச் செல்வதற்கான கார் வீட்டு வாசலில் வந்துநின்ற சத்தம் கேட்ட கணத்திலிருந்து அவள் அவளாக இல்லையென்பதை அவன் கண்டான். உற்றார் உறவினர் ஊராட்கள் சிலர் கூடியிருந்த நிலையில், எல்லாப் பிரிவாற்றுகையும் நேற்றைய இரவில் முடிந்ததுதானே என்று அவன் பார்வையால் விடைபெற்று வர, அவள் தாங்காமல் அழுததாய் ஓர விழிகளில் பட்டது அவனுக்கு.

அத்தனை காலத்துக்கு ஒரு பிரிவை விரும்பித்தான் ஏற்று அங்கே அவன் வந்திருக்கிறான். அந்தப் பிரிவை அவளைவிட தாங்க தான் தயார் என்பதுபோலவே வீட்டிலே அந்த முன்னாளிரவில் அவன் நடந்திருந்தான். ஆனால் இங்கேதான் தெரிந்தது, அவளாவது குழந்தையின் அருகிருப்பால் உடலையும் மனத்தையும் ஆற்றிக்கொள்வாளென்றும், தானே அவர்களிருவரில் ஒருவர்கூட அருகிருக்காத காரணத்தால் அவதியுறப்போவதென்றும்.
அந்த அழகின் தரிசனம், அந்த உடலின் சுகம் யாவற்றையும் ஓராண்டுக்கு மேலாகத் துறந்துவிடும் மனவலிமையை எது அவனுக்குத் தந்தது? அவனது வாழ்க்கையா? அந்த வாழ்க்கையையே சுழல் காற்றில் சருகாகப் பறக்கவிடும் விதியா? அவனுக்கு மட்டுமா அவ்வாறான விதி? விதியே அலைத்தும் உலைத்தும் வீழ்த்தியும் எழுப்பியும் வளமளித்தும் ஒருவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதெனில், அந்தப் பிரிவும் துயரும் அவனுக்குமட்டுமானதாக ஆனதெங்ஙனம்? அவன் எல்லாவற்றையும் யோசிக்க முனைந்தான்.
ஒவ்வொருக்கும் குடியிருக்க ஒரு துண்டு நிலம் வேண்டும். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னைமரங்கள் இல்லாமல்கூட இருக்கலாம். ஏதாவது ஒரு நிலம் வேண்டும். அதிலே ஒரு வீடு வேண்டும். அது மாளிகைக் கணக்காய் கலைவேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களுடன் இல்லாவிட்டாலும் பனிக்கும், மழைக்கும், வெய்யிலுக்கும், காற்றுக்கும் அடைக்கலமாவதற்கும், காதலிருவரின் கூடலுக்குமாய் ஒரு குடிசையாவது வேண்டும். கைப்பொருள் இல்லாவிட்டாலும் உழைத்துப் பிழைத்துவிடலாம். ஆனால் ‘காணக் கண் கூசுதே, கையெடுக்க நாணுதே, மாணிக்க வாய் திறக்க மாட்டாதே’ என்று கடன்காரனைக் கண்டு தவிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. கலாபனுக்கு முன்னவை இரண்டும் இல்லாதிருந்தன. பின்னது இருந்தது. அதனால்தான் மிகுந்த பிரயாசையில் நீண்ட பிரிவைச் செய்யும் அந்த வேலைக்காக அவன் வீட்டைவிட்டுப் புறப்பட்டான்.

கூடு இல்லாவிட்டால் வாழ்ந்துவிடலாம். கூடலில்லாமல் வாழ்வது எப்படி? அவன் நினைக்கத்தான் செய்தான். குருவிக்குக் கூடு ஒன்று வேண்டும் என்ற ஓர் உண்மை இருக்கிறதுதான். அதேவேளை வளர்ந்த குருவியொன்று கூட்டைவிட்டு தானே பறந்துபோய்விடுகிறது என்ற நிஜமும் இருக்கிறதல்லவா? பறத்தலின் சுதந்திரத்தை வீட்டினுள் பயில்வுசெய்தல் எப்படி? இவ்வாறு அவன் சொன்னபோது, மனோ, அவனது மனைவி சொன்ன பதில், ‘பறந்து சென்ற குருவிக்கும் உடனடியாக இல்லாவிட்;டாலும் பின்னராவது ஒரு வீடு வேண்டியிருக்கும்’ என்பதுதான். அந்தக் கோணத்தில் அவன் விழுந்தான். ஆம், வாழ்வதற்கு ஒரு கூடு தேவைதான்.

திடீரென ஓர் உலுப்பல். கலாபனின் சிந்தனை கலைந்தது. அப்போதைக்கு மட்டுமாகத்தான். அதுவொன்றும் மேலெழுந்தவாரியானதல்ல. உயிரில் வலியெழுப்பக்கூடியதாய் மனத்தின் ஆழத்தில் பதிந்திருப்பது. பிறகு, நாளை, அடுத்த கிழமை, அடுத்த மாதம், அடுத்த வரு~ம் என்று அவளையும் குழந்தையையும் மீண்டும் காணும்வரை தொடரப்போகின்ற சிந்தனையே அது.

கடந்த ஒரு கிழமையாக கபாலன் அங்கேதான் வேலைசெய்கிறான், கொடுக்கப்பட்டிருந்த அறையிலே, அதைக் கபின் என்கிறார்கள், படுக்கிறான். ஆனால் அப்படி உலுப்பி அதிர்வெழும்படியாய் என்றும் இருந்ததில்லை. அன்றைக்குமட்டும் ஏன் அப்படி?
பின்னர் அவனுக்குப் புரிந்தது. முதல் நாள் வரை கப்பல் திருத்த வேலைகளுக்காக ட்றை டொக்கில் நின்றிருந்தது. அதன் திருத்த வேலைகளெல்லாம் முடிந்து அன்றுதான் துறைமுகக் கரையில் கொண்டுவந்து கட்டியிருந்தார்கள். கப்பல் மறுநாள் காலை அங்கிருந்து புறப்படவிருந்தது.

அந்தப் புறப்படுகை சுகமான நினைவுகளையும் கிளர்த்தாமலில்லை கலாபனிடத்தில். ஆயிரமாயிரமான உழைப்பு. அவர்களுக்கான ஒரு காணி, ஒரு வீடு. அவனது மனைவி குழந்தைக்கு அழகழகான உடுப்புக்கள். அவன் மனைவி குழந்தைக்கு நகைநட்டுக்களும், ஊரில் வசதியானவர்கள் குடும்பத்து பெண்கள் குழந்தைகளுக்குப்போல. எல்லாம் சுகமான நினைவுகளையே செய்துகொண்டிருந்தன அன்றுவரை. ஆனால் திடீரென அப்படி ஒரு விசாரம் அவன் மனத்தில். ஒருவேளை கப்பல் மறுநாள் புறப்படப்போகின்றது என்ற காரணத்தால் ஏற்பட்டதாய் இருக்கலாம் அது. ஆனாலும் அந்தச் சிந்தனை இடையறுகிறது, கப்பலின் உலுப்பலில்.

துறைமுகத்தில் கட்டப்படும் கப்பல் கரைச் சுவரோடு வந்து மோதிவிடாது சங்கிலியில் பிணைத்த பெரும்பெரும் ரயர்களைத் தொங்கவிட்டிருப்பார்கள். கடலின் பாரிய அலைகள் வந்து மோதும்போது கப்பல் சிமெந்துக் கட்டினோடு மோதிச் சேதமாகாமல் இந்த ஏற்பாடு. அதேவேளை அலைகள் உள்ளே வேகவேகமாய் நுழையாதபடியும் பிறேக் வாட்டர் எனப்படும் கடலணைகள் எழுப்பப்பட்டிருக்கும். இவ்வளவற்றையும் மீறி ஒரு கப்பலையே உலுப்பிவிடுமளவுக்கு அலை பாய்ந்து வருகிறதெனில், அதன் வேகம் எப்படியானதாய் இருக்கும் என நினைக்க ஒரு மலைப்பு வந்தது கலாபன் மனத்தில். ஆனாலும் அதுபற்றிய எண்ணம் அவனது மனத்தில் நீண்டநேரம் நிலைக்கவில்லை. உழைத்துக் களைத்திருந்த உடலானதால், வெகுநேரம் சென்றேனும் உறக்கம் வந்தது.

பெரும்பாலும் கவிழ்ந்த ஸ்திதியில் படுத்திருந்த கபிலனுக்கு, அலைகளின் உலுப்பலில் கப்பலின் அசைவு புணர்ச்சிச் சுகத்தைக் கொடுத்தது. றெஜிபோம் மெத்தை அவன் மனைவி மனோவாக உருவெடுத்தது. அவன் சிறிதுநேரத்தில் ஸ்கலிதமானான்.
மறுநாள் அதிகாலையிலேயே கப்பலின் அசைவைக் கூடுதலாக உணர்ந்ததில்தான் கலாபனுக்கு தூக்கம் கலைந்தது. கப்பல்; புறப்படுகிறது என்பதை அனுமானிக்க வெகுநேரம் ஆகவில்லை அவனுக்கு. அவசர அவசரமாக முகம் கழுவி, உடுப்பை மாற்றிக்கொண்டு அவன் மேற்தளத்துக்கு வந்தபோது எம்.வி.ஜோய்18 என்ற பெயருடைய அந்தக் கப்பல் துறைமுகத்தைவிட்டு நகர்ந்து வெகுதூரம் வந்திருந்தது. கல்லணைக்கு வெளியில் கப்பல் சென்றுகொண்டிருக்க அதன் சமாந்தரத்தில் ஓர் இழுவைப் படகு வந்துகொண்டிருந்தது. கப்பலை வெளியே செல்லவைத்துக்கொண்டிருக்கும் பைலட், இறங்கிச் செல்வதற்கான படகு அது.

கலாபன் கரைப் பக்கமாய் பார்வையை எறிந்தான். துறைமுகம் விலகிக்கொண்டிருந்தது. வினாடி வினாடியான நேர நகர்வில், அந்த இடைத்தூரம் அதிகரித்துக்கொண்டிருந்தது. மண்ணைவிட்டு விலகிய தூரமும் அதுதான். உறவுகளைவிட்டு விலகிய தூரம்கூட.


கப்பல் பயணம் அவனுக்குப் புதிது. அந்தப் புதிது மனத்தில் சொல்லொணா கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அந்தக் கிளர்ச்சிகளுக்கூடாகவும் ஓர் இடைஞ்சல். தலை லேசாகக் கிறுகிறுத்தது. மேல்ல மெல்லவாய் அதிகரித்தது அந்த சுகமின்மை. சிறிதுநேரத்தில் கலாபன் ஓக்…கென்று வாந்தியெடுத்தான்.

பதின்நான்கு நாட்கள் வாந்தி. சாப்பாடில்லாமல், வேலையில்லாமல், தூக்கமில்லாமல் ஒரே வாந்தி. எப்போதும் படுத்தே கிடந்தான் போறபோற இடங்களில். படுத்திருக்காதே…படுத்திருக்காதே…ஏதாவது வேலைசெய்துகொண்டிரு என்று கப்பல் தளவேலைக்குப் பொறுப்பான போசன் மாஹ்மத் அடிக்கடி வந்து சொல்லியும் அவன் எழும்ப மறுத்துக்கிடந்தான். ‘கப்பல் ஈரானில் பந்தர்அபாஸ் என்ற துறைமுகத்துக்குப் போகிறது, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அங்கே நாங்கள் போய்ச் சேர்ந்துவிடுவோம், கப்பலில் அனுபவமில்லாவிட்டால் எல்லோருக்கும் இப்படித்தான், அதற்காக இப்படியே படுத்துக்கிடந்தாயானால் பந்தர்அபாஸ் போனதும் உன்னை திரும்ப இலங்கைக்கு அனுப்பிவிடுவார்கள், கவனம்’ என்று பார்வையில் அறிமுகமாகியிருந்த ஒரு சிங்கள கப்பல்கார இளைஞன் வந்து சொல்லிப்போனான். கலாபன் அப்போதும் எழும்பவோ, வேலைசெய்யவோ முயலவில்லை. முடியாது கிடந்திருந்தான்.

அவனுக்குள் ஒரு கூடும், வீடும் என்ற கனவு தகர்ந்துகொண்டிருந்தது. இருபது நாட்களுக்கு மேலே கப்பலில் இருந்திருக்கிறான். குறைந்தபட்சம் அரை மாதச் சம்பளமாவது கிடைக்கும். அப்போதைய ஓர் அமெரிக்க டொலரின் இலங்கை ரூபா மதிப்பு ஏழு ரூபா இருபத்தைந்து சதம். எப்படியும் கொழும்பில் குழந்தைக்கு ஒன்றிரண்டு சட்டையும், மனைவிக்கு ‘றேசிங்கவு’ணும் வாங்கிக்கொண்டு வீடு செல்லவும், அந்தப் பிரிவின் வதையோடு உழைத்த உழைப்பென்று இரண்டாயிரம் ரூபாவையாவது மனோவின் கையில் கொடுக்கவும் போதுமானதாயிருக்கும் என தன்னைச் சாந்தி செய்துகொண்டிருந்தான் அவன்.
மூவாயிரம் தொன் நிறையுள்ள பாரமேற்றக்கூடிய கப்பல் அது. கொழும்பிலிருந்து வெறுமையாகச் சென்றுகொண்டிருந்தது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலமாதலால் காற்று உக்கிரம்கொண்டு வீசியது. தரையிலேயே அதன் தாக்கம் பயங்கரமாய் இருக்கும். மரங்களை முறித்து, தோட்டங்களை நாசமாக்கி அந்த ஆடி, ஆவணி மாத காலங்களில் அது செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமில்லை. தடுப்புகளற்ற கடல்வெளியிலோ பெரும் அட்டகாசம் போட்டது. கப்பல் முன்னே பத்தடி நகர்ந்தால், ஒரு வலிய அலை வந்து அதை ஐந்து அடி பின்னகர்த்தி வைத்துவிடும். முன்னேறுவதும், பின்னேறுவதும். கப்பல் கடலின் அலைகளுடன் போராடிக்கொண்டிருந்தது. கடலும் மலையென உயர்ந்து, பாதாளமெனத் தாழ்ந்து கப்பலை ஒரு பந்துபோல் விளையாடியது. எந்த விநாடியிலும் அந்தப் பந்தை கடல் தன் வயிற்றினுள் வாயைக் கிழித்துக்கொண்டு விழுங்கிவிடும்போல தோன்றிக்கொண்டிருந்தது கலாபனுக்கு.

ஒருபோது தன் ஒரேயொரு கப்பல் சிநேகிதனான அந்தச் சிங்கள வாலிபன் கிட்ட வந்தபோது, ‘நாங்கள் கரை போய்ச் சேருவோமா?’ என்றுகூடக் கேட்டுவிட்டான். அதற்கு அந்த வாலிபன் சொன்னான்: ‘பயப்படாதே. கப்பல் இரும்பினாலெனினும் மிதப்பதற்காகவே கட்டப்பட்டது. அது தாழுவது அபூர்வம். ஒரு பக்கத்துக்குச் சாய்ந்தால், மற்றப் பக்கம் தானாகவே நிமிரும்படியான அமைப்பு இதற்கு உண்டு. முன்னே சாய்ந்தால், அது பின்னே சாய்ந்து மறுபடி சமநிலையெடுக்கும்.’ பிள்ளையாரே கப்பலை எப்படியாவது காப்பாற்றிக் கரைசேர்த்துவிடு என்று கலாபனின் உள்ளம் மானசீகக் குரலெடுத்தது. அந்த உயிர்ப் பயத்தில் கப்பலேறி வந்து பாதி மாதத்தில் திரும்பப்போகிறோமே என்ற வெட்கம், இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோனது.

பிறகொருமுறை அந்த இளைஞன் வந்து, ‘சரி, மிகவும் முடியாதென்றால் கடல் தண்ணீர் அள்ளிக் குடித்துப் பார், அது மருந்தாக இல்லாவிட்டாலும் நாணமாகச் செயல்பட்டு கடல்நோய் எனப்படும் உன் தலைச்சுற்று நிற்கக்கூடும்’ என்று கூறிப்போனான். சரி, செய்துதான் பார்க்கலாமே என்று கடல் தண்ணீரை கயிற்றில் பேணிகட்டி இறக்கி அள்ளியெடுத்துக் குடித்தான். மீண்டுமொரு முறை வாந்திதான் வந்தது. வெறுவயிற்றை விறாண்டிக்கொண்டு குடலோடு வந்ததுபோலிருந்தது. சிங்கள இளைஞனை மனத்துக்குள்ளாய் ‘பேய்ப்பூனாமோன்…’ என்று வைதுவிட்டு கலாபன் படுத்துவிட்டான்.
அன்று காலை கண்விழித்தவன் கண்டது ஒரு புதிய உலகத்தை. தலைச் சுற்று போன இடம் தெரியாமலிருந்தது. பக்கக் கம்பிகளில் பிடிக்காமல் நடக்க முடியாதிருந்தவன் கம்பிகளைப் பிடிக்காமல் கப்பலின் நடைபாதையில் மிக இலகுவாக நடந்தான். அவன் அன்று மெஸ்ஸில் மிக நிதானமாக இருந்து காலைச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வேலைக்குத் தயாராக மேற்றளத்துக்கு வந்தபோது யாருமே அங்கில்லாதிருந்தது ஆச்சரியமாக இருந்தது. மெல்ல அது திகைப்பாக மாறியது. உள்ளே சென்று விசாரிக்கத்தான் தெரிந்தது, அன்று ஞாயிற்றுக்கிழமையென்பது. ஞாயிறுகளில் அத்தியாவசிய வேலைகள்தவிர எதுவுமே கப்பலில் நடைபெறுவதில்லை.

அன்று சுகமான நாளாகக் கழிந்தது கலாபனுக்கு. இப்போது வேலைசெய்ய முடிந்திருந்தாலும், அத்தனை நாட்கள் வேலைசெய்யாது இருந்ததற்காக வேலையைவிட்டு நிறுத்தி நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற பயமும் உள்ளே இருந்துகொண்டிருந்தது. அது கரைநெருங்குகிறது என்ற அறிகையால் இன்னுமின்னும் வளர்வதாயிருந்தது.

மறுநாள் கப்பல் ஈரானை அடைகிறது என்று அறிந்தான் அவன். இப்போது கடல் கொஞ்சம் மூர்க்கம் அடங்கியிருந்தது. கண்ணில் பந்தர்அபாஸ் துறைமுகத்துக்கோ வேறு அண்மையில் இருக்கக் கூடிய துறைமுகத்துக்கோ செல்லக்கூடிய கப்பல்களின் தூரத்திலான தோற்றங்கள்வேறு சற்று மனத்தைத் தேறப் பண்ணின.

அன்று இருளத் துவங்க தூரத்திலாய் ஒளிப்புள்ளிகள் சில தெரிந்தன. பத்து மணிவரையில் ஒளிப்புள்ளிக் கோடு ஒன்று தூரத்தே உருவாகியிருந்தது. மேலும் ஓரிரு மணத்தியாலங்களில் நிலைத்த புள்ளிகளிடையே ஓடும் புள்ளிகள் தோன்றி வாகன அசைவுகளைத் தெரிவித்தன. ஆடும் கடலில் ஆடாத நிலத்தின் காட்சி அற்புதமாக இருந்தது அவனுக்கு. அந்த அழகையெல்லாம் அனுபவிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்திய கடல்தண்ணீரையும், உபாயம் சொன்ன அத்தவையும் நன்றியோடு நினைத்தான். ஏனோ, அப்போது பிள்ளையாரின் நினைவு அவனுக்கு வரவில்லை.

விடிந்த சிறிதுநேரத்தில் பைலட் வந்ததும் அதுவரை நங்கூரம் பாய்ச்சி துறைமுகத்துக்கு வெளியில் நின்றிருந்த கப்பல் உள்ளே சென்றது. கப்பல்காரர் எல்லோரும் ஏஜன்ற் வந்துவிட்டதை அறியக் காட்டிய ஆவலாதி கலாபனுக்கு ஆச்சரியமாகப் பட்டது. கப்பல் கரையை அடைந்ததும் அவர்கள் எதிர்பார்க்கிற முதல்வேலை அதுதான் என்பதை அவனது சிங்கள நண்பன் சொன்னான். மெய்தான். ஒரு உயிர்ப் பயமிக்க பயணத்தின் பின் அவர்கள் முதலில் அடைய நினைப்பது ஊரிலுள்ள சொந்தங்களின் சேமநலம்கூறும் கடிதங்களை. அடுத்து அவர்களின் உடல் தவனத்தைத் தீர்ப்பதற்கான பணத்தைத்தானாம்.
பத்து மணியளவில் தேநீரின் பின் வெளியே வந்து சிகரெட் புகைத்துக்கொண்டு விரக்தியாய் கப்பலில் சாமான்கள் ஏற்ற படும் ஆயத்தங்களைப் பார்த்தபடி வெளி மேல்தளத்தின் கப்பல் கட்டும் இரும்புக் குற்றியில் அமர்ந்திருந்தான் கலாபன்.

அந்தக் கப்பல் பனாமாவில் பதிவுசெய்யப்பெற்றது. நீல, வெள்ளை, சிவப்பு நிற பனாமாக் கொடி கப்பலின் பின் அணியத்தில் கட்டப்பட்டிருக்கும். அவன் முதல்முறை கப்பல் புறப்பட்டபோது பார்த்தவேளையில் அது புத்தம் புதிதாக படபடத்துக்கொண்டிருந்தது அங்கே. அப்போது பார்த்தபோது தும்புபட்டுக் கிடந்தது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று கப்பலைச் சின்னாபின்னப் படுத்த முடியாத காரணத்தால் கொடியை நார் நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. தன் மனம்போல அதுவும் சிதைவுபட்டிருப்பதாய் எண்ணினான் கலாபன்.
மதியமளவில் ஏஜன்ற் வந்து எல்லோரும் சென்று கடிதமும் பணமும் பெற்றார்கள். நண்பன் அத்த, அவனுக்கு கடிதம் வந்திருக்காவிட்டால் என்ன, பணம் எடுக்கலாம்தானே என வற்புறுத்தி அழைக்க, வீடுபோவதானாலும் ஏதாவது ஒன்றிரண்டு பொருட்களையேனும் ஒரு ஞாபத்துக்காக அங்கே வாங்கிச் செல்லலாமேயெனச் சென்றான்.

சீஃப் ஒஃபீசர் அறையில் போசன் மாஹ்மத் நின்றிருந்தான். முப்பது டொலர் பணமெடுத்தான் அவன். மாஹ்மத் சிரித்தபடி இப்போது எல்லாம் சரிதானே என்றான். ஊருக்குத் திருப்பி அனுப்பப்படப்போகிற பிரச்சினை இனி இல்லை. ஓர் அழுத்தத்துள்ளிலிருந்து விடுபட்டதாய் உணர்ந்தான் கலாபன். அந்த விடுதலைதான் அவனை சாக்கோவுக்கு அத்தவுடன் செல்லவைத்தது.

சாக்கோ, ஈரான் விலைமாதரின் குடியிருப்பு. நகருக்கு சுமார் இருபத்தைந்து மைல் தூரத்தில் தனிக் கிராமம்போல் அமைக்கப்பெற்றிருந்தது. ஈரானிய, பாகிஸ்தானிய, சில ஈரானிய அமெரிக்க கலப்பின விலைமாதர்கள் வெள்ளை வெள்ளையாக. இன்னும் கறுப்பான ஆபிரிக்க முஸ்லீம் பெண்கள். தவிட்டு நிற இந்தியப் பெண்களும். இலங்கைப் பெண்களும்கூட அங்கே இருந்திருக்கலாம். அந்தப் பல வர்ணப் பெண்களுக்கிடையே பல வர்ண ஆண்கள். கப்பலில் வந்த உயர்பதவி வெள்ளைக்காரர் முதல், கடின வேலை செய்யும் ஆசிய, ஆபிரிக்க ஆண்கள்வரை. இடம் ஒரு களியாட்ட விழாத் திடலாகத் தென்பட்டது. வெள்ளைக் கூடாரங்களுள் போகம். விரிந்த வெள்ளை மணல்வெளியில் பேரம். அந்த மண்வெளியில் பறந்துகொண்டிருந்த கிளினெக்ஸ் துண்டுகள் அங்கு நிகழ்ந்த உடலுறவுகளின் எண்ணிக்கைக்காதாரமாக விளங்கின. ஓர் அருவருப்பை அது விளைத்திருந்தாலும், அலைந்துகொண்டிருந்த வெண்தோல் மாதர் கலாபனில் கிளர்ச்சியைக் கிளர்த்தினர். அவன் ஒரு வெண்தோலும், கனத்த முலைகளுமுடைய ஓர் எகிப்துக்காரியை நாடினான்.
~h மன்னர் காலத்து புரட்சிக்கு முற்பட்ட ஈரான் அது. அச்சொட்டாக அமெரிக்க நிர்வாகமும், நடைமுறைகளும். நகரத்திலிருந்து அந்த இடத்துக்குச் செல்ல தனியாக ராக்ஸிகள் இருந்தன. அவை நகருக்குள்ளோ, பிற இடங்களுக்கோ செல்லா. பிற ராக்ஸிகள் அந்த இடத்துக்குச் செல்லா. நான்கு பேர் ஒரே முறையில் செல்ல முடியும். செல்லவேண்டிய இடம் எதுவும் சொல்லத் தேவையில்லை, ராக்ஸிக்குள் ஏறியிருக்க வேண்டியதுதான், நான்காவது நபர் ஏறியதும் ராக்ஸி நேரே சாக்கோவில் போய் நிற்கும். அத்தவோடு சென்றிருந்ததனால் இடங்கள் குறித்துக் க~;டப்படவேண்டியிருக்கவில்லை கலாபனுக்கு.

மாலையில் கப்பலுக்கு வந்தபோது கலாபனின் மனத்தில் ஒரேயொரு கேள்விதான் விடைத்துநின்றது. கூடு என்பதென்ன, இணை என்பது என்ன, குடும்பம் என்பது என்ன என்ற அத்தனை கேள்விகளுக்கும் அடிப்படையான ஒற்றைக் கேள்வி அது.
வாழ்க்கையின் மய்யம் எது?

காமம் என்ற மய்யத்தைச் சுற்றி எழும் நீரோட்டமே வாழ்வு என்றுதான் கலாபனுக்குப் பட்டது. வாழ்வின், உலகத்தின் இயக்கம் காமத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கிறது. அதை இழுத்துக்கொண்டில்லாமல் பிரபஞ்ச இயக்கம் இல்லை.

இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. ஜோசப் கொன்ராட் போன்றவர்களைப்போல் தன் கடல் அனுபவங்களையெல்லாம் எழுத கலாபன் ஆசைப்பட்டிருந்தான். அவனால் முடியாது போய்விட்டது. அவனும் இல்லையாகிப் போனான். அவன் இல்லையென்று ஆகிப்போனான் என்பதைவிட, என்னுள் சமாதியாகிப்போனான் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. கச்சாய் மணல்வெளிகளில் நிலவும், மதுவும் உடனிருக்க அவன் சொன்ன கதைகள் எவ்வளவோ. இன்றுவரை எனக்குள்ளிருந்து தம் விடுதலைக்காய் என்னை நச்சரித்துக்கொண்டிருக்கும் அந்தக் கதைகளை, அவனின் ஆன்ம சாந்தி வேண்டியேனும் வெளிப்படுத்த என்னுள் இருக்கிறது ஓர் உத்தேசம். அதன் முதல் கட்டமாக இந்தப் பகுதியை எழுதியிருக்கிறேன்.

000

(ThaiVeedu, June 2009 )

Thursday, June 18, 2009

அம்பை

அம்பை :
 நவீன தமிழிலக்கியத்தில் 
மிகவுயர்ந்து ஒலித்த பெண்ணியக் குரல்

-தேவகாந்தன்-

ஒரு விருது பற்றிய அறிவிப்புக்குப் பின்னால் அது குறித்த சலசலப்போ சர்ச்சையோ தவிர்க்க முடியாதபடி எழுந்தே வந்திருக்கிறது. எங்கேயும்தான்;. இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது இவ்வாண்டு அம்பைக்குக் கிடைத்திருப்பதான அறிவிப்பு வெளிவந்தபோது அபூர்வமாக அவ்வாறான சலப்பையோ சர்ச்சையையோ அவதானிக்க முடியவில்லை. நவீன தமிழிலக்கியத்தில் தெளிவுடன் மிகவுயர்ந்தொலித்த பெண்ணியக் குரலாக அவரது எழுத்துக்கள் (மற்றும் செயற்பாடுகளும்) ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் அந்த சலனமின்மையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

அம்பையை எனக்கு நேரில் பழக்கமில்லை. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சிறிதுகாலம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தது மட்டும்தான். அதுவும் நான் ‘இலக்கு’ சிற்றிதழை நடாத்திய காலத்தில் இதழ்கள் அனுப்பியதாலும், கட்டுரை கேட்டு கடிதம் எழுதியதிலும் ஏற்பட்ட தொடர்பே. மே 1996 இல் ‘இலக்கு’வின் ஆறாவது இதழ் தி.ஜானகிராமன் சிறப்பு மலராக வந்தது. நான் கேட்டதற்கு உறுதி அளித்திருந்தபடி அம்பை தி.ஜா.நினைவு மலருக்கு கட்டுரை அனுப்பியிருந்தார். ‘பசு,பால்,பெண்:தி.ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்’ என்பது அக் கட்டுரையின் தலைப்பு. ‘மரத்துப் போன பசு, மரத்தால் ஆன பசு என்று பால் வற்றிப்போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள்படும்படி பெண்ணை உவமித்துக் கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலைப்பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்படட்ட பாதை’ என்று தொடங்கியிருக்கும் அந்தக் கட்டுரை.

கணையாழியில் ரசித்து வாசித்த அம்பையின் சிறுகதைகள், எழுத்தின் பொருள் குறித்த தன்மையாலும் மற்றும் நடையாலும் ஓர் அவதானிப்பையும் ஆதர்ஷத்தையும் ஏற்கனவே நான் ஈழத்தில் இருந்தபோதே ஏற்படுத்தியிருப்பினும், இவரது ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கி 1976இல் வெளிவந்த ‘சிறகுகள் முறியும்’ தொகுப்பினை 1984இன் பின் தமிழகத்தில் இருந்தபோது வாசித்த பின்னால் என்னளவில் இவரை முக்கியமான எழுத்தாளராக ஆக்கியது.

பெண்ணியம் சார்ந்த கருதுகோள்களை கட்டுரைகள் மூலமாகவன்றி, அம்பையதும் அம்பை போன்றோரதும் படைப்பிலக்கியமூடாகவே ஆரம்பகாலத்தில் அறிய முடிந்திருந்தது என் போன்ற பலருக்கும். அதனால் தி.ஜா.நினைவு மலருக்கான அம்பையின் கட்டுரை மரப்பசு நாவலை அலசியவிதம், ஒரு நாவலாக அது என்னை வசீகரித்திருந்தபோதிலும் அது கருத்தாடலில் முரண்கொண்டிருந்ததை ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டது. ஒரு நாவலை வாசக ரசனைக்கப்பால் சென்றும் அதன் உள்ளார்ந்திருக்கும் அர்த்தத்தை, அரசியலை அறியவேண்டிய அவசியத்தை, தெரிதாவின் கட்டவிழ்ப்பு வாதம்பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னாலேயே செய்தது அம்பையின் மரப்பசு நாவல்பற்றிய கட்டுரை என்பதாய் இப்போது நினைவுகொள்ள முடிகிறது.

இந்தக் கட்டுரை முக்கியமானது. பெண்ணியல் குறித்த சொல்லாடலை தமிழ்மரபில் நிலைநிறுத்தி வைத்த முக்கியமான பெண் படைப்பாளின் கட்டுரைகளில் ஒன்று. சோரன் கீர்க்கேகார்ட் (Soren Kierkegaard 1813 – 1855) என்ற ஆரம்ப பெண்ணிலைவாதத்தின் தத்துவவாதி காலத்திலிருந்து, பெண்ணிய தத்துவங்கள் பரந்துபட்டனவாய், பலதரப்பட்டனவாயே இருந்து வந்திருக்கின்றன. ஒவ்வொரு தத்துவத்தின் பின்னாலும் தனிப்பட்ட அனுபவங்களினதும், அறிகைகளினதும் தாக்கம் இருந்துகொண்டிருந்தது. அறுதியான ஒரு முடிவை அடைய இவை தடைக்கல்லாக இருந்தன என்ற வேளையில், தவிர்க்கப்பட முடியாதனவாய் விரிந்த சிந்தனைக் களத்தை உருவாக்கின என்பதும் நடந்தது.

இந்தத் தளத்திலிருந்து செயற்பாட்டுக்கான தத்துவங்கள் வகிர்ந்தெடுக்கப்பட்டன. இன்றைய பின்நவீனத்துவ, ஜனநாயக, இடது சிந்தனை மரபுகளிலிருந்து ஒரு பொதுத்தள அமைப்பு காணப்பெற்று அந்த அமைப்பிலிருந்தான ஒரு செயற்பாட்டுத் தளம் இயக்கம் பெற்றிருக்கிறது. இச் செயற்பாட்டுத்தள இயக்கத்திலிருந்து அம்பையின் கருதுகோள்கள் உருவாகியுள்ளன என்பது ஒரு சரியான முடிவாக இருக்க முடியும்.

காமம் என்ற முழுநிலையில் பெண்ணுடல் கொண்டிருக்கும் பங்கு ஒருபக்கச் சார்பாகவே அர்த்த பாவனையாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெண்ணுடலின் விடுதலையை முதன்மையாக்கி, அதனைப் புரிந்துகொள்வதின்மூலம் தொடரும் விடுதலைகளின் நிர்மாணத்தைச் சாத்தியமென்று அக் கட்டுரை தெளிவாகவே பேசுகிறது. அம்பை சொல்கிறார்: ‘உடலிலிருந்தும், அதன்மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதிபோல் பாவித்து மறுவாசிப்புச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.’

தி.ஜா.வின் சிறந்த நாவல் ‘மோகமுள்’ என்பாருளர். எம்.ஏ.நுஃமான் தனக்குப் பிடித்தமான தி.ஜா.வின் நாவலாக மோகமுள்ளை எடுத்துக்கொண்டு அதை விமர்சன ரீதியில் அணுகிய கட்டுரை அவரது ‘இலக்கியமும் திறனாய்வும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலிலே உண்டு. எனக்கு ‘மோகமுள்’ளும் பிடிக்கும், ‘செம்பருத்தி’யும் பிடிக்கும். ஆனால் ‘மரப்பசு’ மிகவும் பிடிக்கும். நான் பல தடவைகள் வாசித்த பிரதி அது. தி.ஜா.வின் ‘அம்மா வந்தா’ளை விடவும். கட்டிறுக்கம், பாத்திர வார்ப்பு, அது வட்ட அலைகளில் விரிந்துசென்று பல களங்களையும், பல அர்த்தங்களையும் பல அடுக்குகளையும்கொண்டு வாசகனை ஒரு மவுனத்தில் உறையவைத்து முடிந்திருக்கும். இப்போதும் தி.ஜா.வின் நாவல்களுள் எனக்குப் பிடித்ததாக ‘மரப்பசு’வைச் சொல்ல எனக்குத் தடையில்லை. ஆனால் அதன்மீதான கவுரவம் அன்றிருந்ததுபோல் இன்றில்லை என்பதையும் சேர்த்தே நான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு அம்பையின் கட்டுரை அதனை ஒரு முழுக்கட்டவிழ்ப்புக்குள் உள்ளாக்கியிருந்தது. அம்பையேகூட அது தன் வாசிப்பின் வெளிப்பாடு, மற்றும்படி அதில் கட்டவிழ்ப்பு என்று எதுவுமில்லையென்றாலும், அது கட்டவிழ்ப்புத்தான். விமர்சக கட்டவிழ்ப்பு இல்லையெனினும், வாசக கட்டவிழ்ப்பு.

அம்பை கட்டுரையின் ஓரிடத்திலே கூறுவார், ‘(நாவலின்) இரண்டாவது சறுக்கல் மீறல்,சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணரவேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல்பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ‘ஆயிரம் யோனிகள் உடையவள் நான்’ என்று தன் உடலின் எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டு, உருவகரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளைய வந்தவள் அக்கமகாதேவி எனும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் முறிக்கப்படுவது ஏற்கவேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது நிலைகொள்ள அவகாசம் எடுப்பதுபோல, உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்ப கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல் இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். உடம்பையும், தன்னையும். உலகையும், விண்ணையும், வானையும் புரிந்துகொள்ளும் ஒரு கட்டம். இப்படியெல்லாம் இதைப் பார்க்க தி.ஜா.வுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கனவே உள்ள கச்சிதமான அடைப்புகளுக்குள் போட விரும்புகிறார்.’

இந்த விமர்சனரீதியிலான முடிவைச் சுலபமாக ஒரு கட்டவிழ்ப்பில் கண்டடைந்துவிட முடிகிறதுதான். அல்லது புணர்ச்சி விடுதலையோடு பெண்ணின் மொத்த மன, உடல் விடுதலைகளினைக் கண்டடையும் சாத்தியத்தின் நம்பிக்கை பெறப்பட்டு விடுகிறதுதான். ஒரு சுளுவான வழியாகக்கூட இது முதற் பார்வைக்குத் தோன்றக்கூடும். ஆனால் படைப்பில் இதற்கான மொழியைக் கண்டடைவது சாதாரணமான காரியமாகி விடுவதில்லை. பெண்மொழியென்பது பெண்ணின் அனுவங்களினூடாகக் கண்டடையப்படும் பெறுமானங்களை வெளிப்படுத்துவதற்கான ஊடகம் மட்டுமல்ல. அனுபவங்களையே மொழியாக்கிப் பகிர்வது. அது தமிழல்லாத அல்லது தமிழில்லாத வார்த்தைகளின் அடைதல் அல்ல என்பது மிகச் சரியான வரையறையே. ஒரு மீறலைச் செய்யாமல் அதன் எல்லைகள் அடைதற்கூடியனவல்ல என்பதே பெண்மொழி அடைதலின் சூக்குமம். அதை படைப்பாக்க முயற்சியொன்றின்போதே சிரம சாத்தியங்களில் தரிசிக்க முடிகிறது படைப்பாளியினால்.

தமிழில் கவிதைச் சாத்தியங்கள், பல பெண் கவிஞர்களுக்கும் ஓரோர் எல்லைவரையில் கைகூடியுள்ளமை தம் அனுபவ வெளிப்பாட்டுக்கான ஒரு மொழியின் கண்டடைதலின் விளைவே என்பது நூற்றுக்கு நூறு சதவீதமும் உண்மை. அதை வெகு சில குரல்களே திசைகாட்டும் கருவியாய் நின்று வழிகாட்டியிருக்கின்றன. அவற்றினுள் ஒன்று அம்பையினது என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை.

‘சிறகுகள் முறியும்’ தொகுப்புக்குப் பிறகு அம்பையின் மேலும் இரு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. 1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) 2. காட்டில் ஒரு மான் (2000). இவை ஒற்றைத் தொகுப்பாக்கப்பட்ட ஒரு வெளியீடும் ‘அம்பை சிறுகதைகள்’ என்ற பெயரில் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இத்தனை கதைகளையும் வைத்துப் பார்த்தால் ஆண்டுக்குச் சராசரியாக ஒரு சிறுகதையையே அம்பை படைத்திருப்பது தெரியும். தன் ஆளுமைக்கான இவரின் வேறு துறை ஈடுபாடுகள் இதற்குக் காரணமாக இருக்கமுடியுமெனினும், ஏறக்குறைய ஐம்பது சிறுகதைகளில் தன் நோக்கில் வெளிப்படுத்தப்பட வேண்டிய கருத்துநிலைகளை இவர் வெளிப்படுத்திவிட்டதாகக் கொள்ளமுடியும். எனினும் தான் வற்புறுத்திய பெண்மொழியில் படைப்பாக்க முயற்சியின் உதாரணத்துக்கு இவர் எழுதியுள்ள ‘கைலாசம்’ சிறுகதையை எடுத்துக்காட்டலாம்.

மீறல் செயற்பாட்டினை மீறல் இல்லாத மொழியின் மூலம் வெளிப்படுத்திவிட முடியாது. முலைகளும், யோனியும், புணர்ச்சியும், விந்துவும், ஸ்கலிதமும், கொட்டைகளும் ஆண்களினதில் மட்டுமில்லை, பெண்களது படைப்புக்களிலும் இன்று நிறையவே வெளியாகிக்கொண்டிருக்கின்றன. குட்டி ரேவதியின் ஒரு கவிதைத் தொகுப்பின் பெயர் ‘முலைகள்’. பெருமாள் முருகன் எழுதிய ‘பீக்கதைகள்’ போல இது மீறலின் ஓர் அடையாளம்தான். நாம் ஒரு மொழியைக் கண்டடையாமல் ஒரு புதிய உபாயத்தைப் பேசிவிடவே முடியாதென்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். தலித்துக்களுக்கான ஒரு மொழி இருப்பதுபோல, பெண்களுக்கான ஒரு மொழி இருக்கிறது. தத்தம் உணர்வுகளை அந்தந்த மொழியில் வெளிப்படுத்துகைக்கான பிரக்ஞை அந்தந்தப் படைப்பாளிகளுக்கு இருக்கவேண்டியது நியதியாகும். 2006 ஒக்-டிச. ‘உயிர்நிழல்’ இதழில் வெளிவந்த அம்பையின் ‘கைலாசம்’ சிறுகதை இந்தப் பிரக்ஞை தவறாத, அதேவேளை கலாநேர்த்தி குறையாத, படைப்பின் சிறந்த உதாரணம்.

‘கட்டிலில் சிகந்தர் நிர்வாணமாகக் கிடந்தான். போர்வை காலடியில் கிடந்தது. அவன் நீண்ட குறி ஒரு பக்கம் மடங்கி விழுந்திருந்தது. அவள் பார்க்கும் முதல் ஆண்குறி. சுன்னத்து செய்த குறி. சுதாவுக்கும் அது முதல் முறையாம். சுதா ஓடிப்போய் தன் பைனாகுலரை எடுத்துவந்தாள். இருவரும் வெகு அக்கறையுடன் அந்தக் குறியைப் பார்த்தனர். அதை மட்டும் பெரிதாக்கிப் பார்த்தபோது, அவன் உடலிலிருந்து விலகிய ஒன்றாய், ஒரு குட்டிப் பாம்பாய் அது பட்டது. சாதுப் பாம்பு. அவன் உடல் அசைவுகளுக்கு ஏற்ப அங்கும் இங்கும் மடங்கி விழுந்த பாம்பு’ என்று எழுதுவதற்கு முன்னர் ஒரு மரபை அம்பைக்கு முறிக்க வேண்டியதிருக்கிறது. இடக்கரடக்கலை ஓர் இலக்கணமாகச் சொல்லியிருக்கும் மொழியில், குறிகளுக்கான குறிப்பான்களை எளிதில் பிரத்தியட்சப்படுத்திவிட முடிவதில்லை. அது ஒரு தொடர்ந்தேர்ச்சியான முயற்சியிலேயே சாத்தியத்தை அடைகிறது. சிலவேளை யுத்தங்களில்.

தனக்கான ஒரு மொழியைக் கண்டடைய அம்பைக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கும்? அதற்கான முன்மாதிரி எழுத்துக்களுக்கு எவ்வளவு முயற்சி செலவாகியிருக்கும்?

‘மோகம் புரிவது எளிது. காதல் அப்படியல்ல. பெண்-ஆண் உறவு மிகவும் சிக்கலானது. அதில்தான் எத்தனை நெருக்கம், எத்தனை விலகல்? எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை? எத்தனை வன்முறை, எத்தனை மென்மை? எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு? எத்தனை ஆதூரம், எத்தனை ஆவேசம்? காதலிக்கும் நபரையே விஷம்வைத்துக் கொல்லலாம் என்று ஆத்திரம் வருகிறது. தணிகிறது. பந்தம்போல் கட்டிப்போடுகிறது. கூடுபோல் ஆசுவாசம் தருகிறது. தகிக்கிறது. குளிர்விக்கிறது. என் உடலை ஒரு பிரதியாகப் பார்க்கும்போது அது ஒரு நிலைத்த பிரதியாக இல்லை, கைலாசம். அது மாறியபடி இருக்கிறது. அதன் தோற்றமும் அர்த்தங்களும் மாறியபடி உள்ளன. என் முலைகள் தளர்ந்து, சற்றே கீழிறங்கி உள்ளன. என் தொடைகளில் பச்சை நரம்போடுகிறது. கால்களிலும் கைகளிலும்கூட. என் அல்குல் ஒரு பழுத்த இலைபோல் இப்போது இருக்கிறது. என் ஐது மயிர் முன்போல் அடர்த்தியாக இல்லை. கருமையாகவும் இல்லை. நரைத்து இருக்கிறது. ஈரமில்லாமல் உலர்ந்து இருக்கிறது’ என்று நடுத்தர வயதைக் கடந்த கமலம் நினைக்கிறாள் கதையிலே.

அது காதலையும் காமத்தையும், ஒருவகையில் தன் உடலையும்தான், கண்டடைய ஒரு பெண் எடுத்த தீரா முயற்சிகளின் அனுபவ வெளிப்படுத்துகை. கற்பு, பரத்தமை என்பன இல்லாத ஒருவெளி தேடிய நன்கு படித்த, வேலை பார்க்கின்ற ஒரு பெண்ணின் கண்டடைவு. அதிலே இரக்கம் இருக்கிறது. அறம் இருக்கிறது. அன்பு இருக்கிறது. கூடிவாழ்தலின் சமூகப் பிரக்ஞை இருக்கிறது. இந்த உணர்வின் வகைப்பாட்டைக் கண்டடைதலிலேயே என்றென்றைக்குமான பெண்மொழியின் முயற்சிகள் உற்சாகத்தோடு ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒருபோது நதிநீராக, ஒருபோது காட்டாறாக. இன்னொருபோது மெல்லென உதிரும் மழைத் தாரைகளாக உதிர்வின் பரவசம் கிளர்த்தியபடியும்.

பெண் எழுத்துக்களில் ஒரு கோபம் எப்போதும் முகங்காட்டிக் கொண்டிருக்கின்றது என்ற ஆணுலகக் கூற்று உண்மையானதுதான். அதை அவசியமானது என்றே நான் நினைக்கிறேன். அது அவ்வாறுதான் தன் ஆரம்பதசையில் இருக்கவும் முடியும். அம்பையின் சுகந்தி சுப்பிரமணியனின் மறைவுக்கான மார்ச் 2009 ‘காலச்சுவ’ட்டில் வெளிவந்த இரங்கற் கடிதம் முக்கியமானவொன்று. அது தன் முழுக் கோபத்தையும் அடங்கிய தொனியில் வெளிப்படுத்தியிருந்தது. யாரையென்று குறிப்பாய்க் குறைசொல்ல முடியாது, சம்பந்தப்பட்ட அனைவரையும், அனைத்தையும் அது வெய்து தீர்த்ததாயிருந்தது. அது குறித்து சிறிய சர்ச்சையொன்றும் யமுனா ராஜேந்திரனுக்கும் அம்பைக்குமிடையே ஏற்பட்டிருந்தது. அது மறக்கப்பட்டுப்போன சர்ச்சையாக ஆகிவிட்டிருந்தாலும், அம்பையின் கடிதம் கொண்டிருந்த சமூகத்தில் பெண்கள் அடக்கவும் ஒடுக்கவும் படுவதான நிலைமையின்மீதான கோபம் மனத்தில் சாசுவதமாகியிருக்கின்றது. அக் கடிதத்தின் தலைப்பே ‘புதையுண்ட சுகந்தி’ என்று ஒரு அநீதியின் கதையாக விரிந்துகொண்டிருக்கும்.

கடிதத்தில் அம்பை மேலும் இவ்வாறு எழுதுவார்: ‘தன் வாழ்க்கைபற்றி பெரும் அதிர்ச்சிதரும் தகவல்களை அவள் என்னிடம் கூறியிருக்கிறாள். அவை உண்மை என்று நிரூபிக்கத் தன்னிடம் சாட்சிகள் உண்டு என்பாள். அவள் கூறிய அத்தனை திடுக்கிடும் தகவல்களும், மனப்பிறழ்வால் ஏற்பட்ட அதீத கற்பனைகள் என்று அவள் கணவர் கூறுகிறார். இருக்கலாம். அவள் அன்னை கணவனைவிட்டு இன்னொருவருடன் வாழ்ந்தவர். இதனாலேயே பாட்டியால் மிகவும் வன்முறை கலந்த கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவள். அதன் பிறகு வன்முறை அவள் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிப்போயிற்று….அவள் ஒரு நல்ல மனைவியாகவோ, ஒரு நல்ல தாயாகவோ இருந்தாளா என்று எனக்குத் தெரியாது. அவள் வதைபட்ட பெண்.’

இந்த ஆக்ரோஷம் முக்கியமானதல்லவா? இதுவில்லாமல் பெண்நிலை வாதத்தை வெறுமனே பேசுவதாலும் எழுதுவதாலும் என்ன ஆகிவிடப்போகிறது? மேலும் படைப்புக்கே இதுதானே மூலக்கனலும்!

தலித்தியம், பெண்ணியம் என்பன தமிழின் இன்றைய வளங்கெழு புதிய கிளைகள். நவீனத்துவச் சொல்லாடலுக்கான பாரிய களங்களைக் கொண்டவை இவை. ஒருவகையில் மரபுரீதியிலான காலகால இலக்கிய வகைமைகளுட்படாமல் தனித்து நிற்பவைகூட. இந்தவகையில் செம்மைசார்ந்த இலக்கிய முயற்சிகளுக்கு இதுவரை முன்னுரிமை அளித்துவந்த இலக்கியத் தோட்டம், இவ்வாண்டு அம்பையை இயல் விருதுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பதன்மூலம், தன் பரப்பினை விசாலப்படுத்தியுள்ளமை பாராட்டுக்குரியது. அம்பைக்கான விருது அவரது இலக்கிய முயற்சிகளுக்கானது மட்டுமில்லை. அவரது இசை நடன ஆர்வங்களுக்கும், அதனாலான இசை நடன பெண் கலைஞர்களின் அனுபவப் பதிவுகளுக்கும், ஸ்பாரோ அமைப்பின் தோற்ற வளர்ச்சிப் பணிகளுக்காகவும், அவரது விவரணப் பட ஈடுபாட்டினுக்குமானதுதான். எனினும் ஓர் இலக்கியவாதியாய் அதை இலக்கியம் சார்ந்த விருதாகப் பாவிப்பதே எனக்கு உவப்பாக இருக்கமுடியும்.
0000

பதிவுகள்.காம், ஜூன் 2009


'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...