Posts

Showing posts from 2019

துக்கமும் இருண்மையும் கொண்டமைந்த காலத்தின் ‘பெருவலி’

Image
காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2017 டிசம்பரில் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல்   வெளிவந்த காலப்   பகுதியிலேயே நூல் கையில் கிடைத்திருந்தும் அதை வாசிக்கத் தொடங்குவதற்கு நானெடுத்த   கால நீட்சியின் கழிவிரக்கத்தோடேயே   அதை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்திய சரித்திரத்தில்    மாபெரும் நிகழ்வுகளைக்கொண்டது   மொகலாய அரசர்களின் ஆட்சிக் காலம். அதில் பதினேழாம் நூற்றாண்டு மிகவும் தனித்துவமானது. மிக ஆழமாய் இன்றெனினும் அக் காலப் பகுதியின் சரித்திரம் வாசகனின் அறிதலில் தவறியிருக்க வாய்ப்பில்லை.   வெகுஜன வாசிப்பில்   பெரிதும் பேசப்பட்ட அனார்க்கலி – சலீம் காதல் அக்பர் கால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டது.   தீவிர வாசகர்களின் கவனத்தையும் அக்பர் காலம் வேறு காரணங்களில் வெகுவாக ஈர்த்திருந்தது. அக்பர் காலம் தொடங்கி ஜஹாங்கீர், ஷாஜகான் ஈறாக ஐந்து பேரரசர்களின் ஆட்சிபற்றிய விதந்துரைப்பில்லாத மொகலாய சரித்திரம் அதுகாலவரை எழுதப்பட்டிருக்கவில்லை; கதைகளும் தோன்றியிருக்கவில்லை. அத்தகு காலக் களத்தில் கதை விரித்த நாவல் ‘பெருவலி’. இரண்டு பாகங்களாய் 167 பக்கங்களில் அமைந்த   இந் நாவலின் முதலாம

புனைவின் நிழல்

Image
ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும் ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ சென்ற ஆண்டு (ஏப்ரல் 2018) வெளிவந்திருக்கிறது. இதுபற்றி மிகுந்த வாத பிரதிவாதங்கள் ஓர் இலக்கியச் செயற்பாடுள்ள சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் குளத்திடை போட்ட கல்லான நிலைமைதான் வழக்கம்போல் பிரதிக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த   கட்டுரைகளின் இத் தொகுப்பு மிகுந்த அவதானிப்பில்     தோன்றிய வினாக்களுக்கு கண்டடைந்த விடைகளை மிகச் சுருக்கமாகவும், இறுக்கமாகவும் சொல்வதோடு, விடையாக எதையும் சொல்லாத இடங்களிலும் வினாக்களை எழுப்பிய அளவில் திருப்திகொண்டு தம்மை அமைத்திருக்கின்றன. பத்தொன்பது சிறு கட்டுரைகளின் தொகுப்பான இச் சிறு நூல் கொள்ளும் விகாசம் பெரிது. இதுபற்றி கவனம் கொள்கையில் முதலில் இதன் முன்னுரைபற்றிப் பேசவேண்டும். கட்டுரைகள் சொன்னவற்றை மிகச் சரியாக எடைபோட்டு அவற்றின் குறை நிறைகளைச் சுட்டி அதுவொரு வாசக திசைகாட்டியாக பொருத்தமாகச் செயற்பட்டிருக்கிறது. ஒரு

முற்றுத் தரிப்பு

காலம் என் நினைவின் தடங்களை இரண்டு தடவைகள் மீள மீளப் பதித்துச் சென்ற இடம் இதுதான். தேச வரைபடத்தில் அதனாலேயே இந்த இடம் பெரும் வரலாற்று முக்கியவத்துவம் கொள்கிறதெனச் சொல்லமாட்டேன். என்றாலும், இங்கே தகர்ந்திருப்பது என் வாழ்வின் இறுதி நம்பிக்கையாக இருக்கிறவகையில், இது என்னளவில் பெரும்   முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.           இதே இடத்தில்தான் சமாதானம் நிலவிய அந்த 2003ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு நீண்டகாலத்தின் பின்னால் அவளை நான் சந்தித்தேன். அப்போது அவளுடைய அகன்ற நெற்றியிலே குங்குமப் பொட்டு இருந்திருந்தது. சுரிதாரின் துப்பட்டா மறைத்திருந்த கழுத்தில் கொடியும் இருந்திருக்கலாம். அதற்கு மேல்   அவளது இடது கை விரலின் மோதிரம் குறித்து   என் கவனம் படரவில்லை.           வெள்ளவத்தை மார்க்கட்டுக்கு நேர் எதிர்ப்புறத்தில், திரும்பித் திரும்பிச் சென்று கடற்கரையை அடைந்த தெரு அது. அதன் மூலையிலிருந்த செருப்புக்கடையை நான் தாண்டிச் சென்ற வேளையில், ‘கேக்கேல்லப்போல’ என்றபடி விரைந்து பின்னால் வந்த தொனியில் அவசரமாய்த் திரும்பினேன். எதிரில் வந்து சிரித்தபடி நின்றாள் அவள்.           அவளை எ

‘நம்பிக்கை இன்னும் இருக்கிறது’

1.                                                                                             1.     கிளைப் பனைமரம் கடந்த ஜுன் 14, 2019இல் புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை ரொறன்ரோவில் பார்க்க முடிந்திருந்தது. புகலிட மற்றும் இலங்கைச் சூழலில் குறும்பட ஆக்கங்கள்போல் முழுநீள திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல சகுனமேயாகும். ஆனாலும் நம்பிக்கை தருகிறவிதமான பெறுபேறுகள் கிடைக்கவில்லைப்போன்ற தோற்றமே காணக்கிடக்கிறது. அசோக ஹெந்தகம, பிரசன்ன விதானகெ போன்ற சிங்கள நெறியாளர்களது படங்களுக்கு நிகரானவளவுகூட   இவை உயர்ந்து செல்லவில்லை. இதில் உலகத் தரமென்பது கனவுக்கு எட்டாத்   தூரமாகவே இருக்கிறது. இந்த உண்மையை மறுப்பதில் பிரயோசனமில்லை. இதை நேரில் முகங்கொள்வதே செய்யத் தகுந்தது. ஆனாலும் ‘ஒற்றைப் பனைமர’த்தில் அதன் பிரதியாக்க மேன்மையை ஒரு பார்வையாளனாய் என்னால் வியக்க முடிகிறது. ஆயின், ‘ஒற்றைப் பனைமரம்’ அடையவேண்டிய உயரத்தை ஏன் அடையாமல் போனது என்ற கேள்வியும் அதனடியாகவே எனக்குள் முளைக்கிறது. பல கேள்விகளில் இது ஒன்று. ஆனாலும் முக்கியமான கேள்வி.             இத் திரைப்

'மேகலை கதா'பற்றிய ஓர் அறிவிப்பு

‘மேகலை கதா’ புனைவின் வழியில் நான் உணர்ந்ததைப் படைப்பாக்கிய ‘கதா காலம்’ (2004), ‘லங்காபுரம்’ (2008) ஆகிய நாவல்களுக்குப் பிறகு காலம் நீளக் கடந்துபோய் இருக்கிறது. இப்போது அதே வழியில் சாத்தனாரின் மணிமேகலை காப்பியத்தை நாவலாக்கும் முயற்சியிலிருக்கின்றேன். புத்த ஜாதகக் கதைகள் என் சிறுவயதுப் பழக்கம். அதுவே கௌதம புத்தர் வரலாற்றினுள்ளும், புத்த மத வரலாற்றினுள்ளும் புகும் வேட்கையை எனக்குத் தந்தது. இலங்கையிலுள்ள எண்ணிறந்த விகாரைகளும், தாதுகோபுரங்களும், சிகிரியாபோன்ற கலை மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் இவ்வார்வங்களுக்கும் முயற்சிகளுக்கும் உத்வேகம் தந்திருக்க முடியும். எல்லாவற்றையும் உள்வாங்கியிருந்தபோது மணிமேகலை காப்பியப் பிரவேசம் பெரும் புனைவு வெளியை என்னுள் உண்டாக்கிற்று. நினைவின் பரப்பெங்கும் அது முதல் ஒரு புத்த பெண் துறவியின் இடையறாச் சஞ்சாரம் இருந்துகொண்டு இருந்துவிட்டது. ஒரு வாய்ப்பான சமயத்துக்காக நான் காத்திருந்தேன். ஆனால் என் காத்திருப்பால் மணிமேகலையின் சஞ்சாரம் மனத்துள் வார்த்தைகளை ஒரு தருணத்தில் பிதுக்கத் துவங்கிவிட்டது. இதை நான் தவறவிடக்கூடாத ஒரு சமயமென எண்ணினேன். அதனால் எழுதத்