Friday, April 10, 2009

ஈழத்துக் கவிதை மரபு: ஈழத்துக் கவிதை மரபு: 
மரபுக் கவிதையிலிருந்து
புதுக்கவிதை ஈறாகத் தொடரும்
கவிதை மரபு


1.
ஈழத்துப் பூதந்தேவனாரிலிருந்து நமது இலக்கிய வரலாறு தொடங்குவதாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். அதுவே ஈழத்துக் கவிதை வரலாற்றின் தொடக்கமும் ஆகும். பூதந்தேவனிலிருந்து அரசகேசரி ஊடாக ஐரோப்பியர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் வரை இலக்கிய வரலாறு மட்டுமன்றி கவிதைபற்றிய வரலாறும் இருண்டே கிடக்கிறது. சின்னத்தம்பிப் புலவர் காலத்திலிருந்து அச்சொட்டாகக் கவிதை வரலாற்றைக் கூறமுடியும். சின்னத்தம்பிப் புலவரின் கவிதை வீறும் அற்புதமானதுதான்.

எனினும் அதற்கு முன்னாலும் ஆற்றல் மிக்க இலக்கியங்கள் சில எழுந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பூதந்தேவனின் சங்கப் பாடலிலிருந்து, அரசகேசரியின் ‘இரகுவம்ச’த்துடன் பின்னால் ‘கோட்டுப் புராணம்’, ‘தால புராணம்’, கனகி புராணம்’ ஆகிய படைப்புகளினூடாக இன்றைய பா.அகிலன்வரையும் உள்ளோட்டமாய் ஒரு மரபின் தொடர்ச்சி ஓடியிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. இது ஈழத்துக் கவிதைக்கு மட்டுமில்லை, எந்த நாட்டுக் கவிதைக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய உள்ளோட்டத் தொடர்புதான். ஆனால் துல்லியமாகவும், பெரும்பாலும் மாறாத் தன்மையுடனும் தமிழிலக்கியப் பரப்பில் இருப்பது வித்தியாசமானது.

ஈழத்தில் பெருங்காப்பியமெதுவும் தோன்றவில்லையென்பது ஒரு குறையாகச் சுட்டப்படலாம். சிறுகாப்பிய முயற்சிகூட இருக்கவில்லை. ஈழத்துக்கான காவிய முயற்சிகள் ஒரு தனி வழியில் இருந்திருக்கின்றன. அது பிற்காலத்திலேதான். ஈழத்தில் காவியமெதுவும் தோன்றாமலிருப்பதற்கான காரணம் முற்றுமுழுதாக அரசியல் நிலைமை சார்ந்தது. காவியம் தோன்றுவதற்கு கல்வி, பொருளாதார நிலைமைகள் சிறப்பாக வளர்ந்திருக்கவேண்டும். நாடு அமைதி நிறைந்ததாய் இருக்கவேண்டும். துர்ப்பாக்கிய வசமாக காவிய காலத்தில் ஈழம் அமைதி நிறைந்ததாயோ, பொருளாதார சுபீட்சம் பெற்றதாயோ இருக்கவில்லை.

ஈழத்தில் தோன்றிய பெரும்பாலானவையும் தனிநிலைச் செய்யுள்களே. இவை மரபு சார்ந்தே இருந்தன. பாரதியின் பெருமைமிக்க கவிதை நெறி தமிழுலகில் கவியும்வரை, இம் மரபே தொடர்ந்தது. தனிநிலைச் செய்யுள்கள் உணர்ச்சியை அடிநாதமாய்க் கொண்டெழுபவை என்பார்கள். ஏறக்குறைய உரைநடையில் சிறுகதைக்குள்ள இடம், பாடல்களில் தனிநிலைச் செய்யுளுக்கு உண்டு. இரண்டுமே உணர்பொருங்கு, சம்பவ ஒருமை, கள அமைதியென்று அனைத்தும் அச்சொட்டாய் அமையும் வடிவங்கள். இதனாலேயே இவை தன்னுணர்ச்சிப் பாடல்களென்றும் அழைக்கப்படுகின்றன. இவை தனிமை இரக்கம்போலவோ, சுய இரங்கலாகவோ இருக்கவில்லையென்றாலும், பெரிதான சமூக அக்கறை கொண்டிருந்தனவாகவும் சொல்லமுடியாது.

இக்காலகட்டத்துக்குரிய ஈழத்துக் கவிதைகளின் விசே~ அம்சம், அவை கிராமியப் பாடல் மரபுக்கு எதிராய் எடுத்த எதிர்நிலையாகும். இந்த எதிர்நிலை எடுப்பு பொருளளவில் இல்லையென்பதுதான் இதிலுள்ள விசே~ அம்சம்.

‘உணர்வின் வல்லோ’ருக்கே இலக்கியவாக்கம் உரியதென்று கூறும் நன்னூல் சூத்திரம். படித்தவர்களுக்கான படைப்பு இது. பாமரர்களுக்கானதே வாய்மொழி இலக்கியம். இந்த இரண்டும் எதிரெதிர்த் திசையில் நின்றிருந்தாலும் ஒரு பொருளையே பேசின. அறத்தை, நியாயத்தை, இயற்கையை, வறுமையை, தனிமையை, ஏக்கத்தை, காதலையே இரண்டும் பேசின. ஆனால், தம் தம் மொழியில்.

தமிழகத்திலும் இவ்வாறான நிலையே இருந்திருப்பினும், இவ்வளவு ஆழமான பிரிகோட்டை அங்கே காண முடியாது. ‘ஈழத்துத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் பல்வேறு கட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களது பங்களிப்பு கணிசமாக உள்ளது’ என்பார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. எனினும் இது அதிகமாகவும் பிரபந்த காலத்திலேயே நிகழ்ந்தது என அவரே சொல்வார். நவீன தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில், இது அருகி அருகி வந்து, ஈழம் தன் கவிப் பண்பில் தனித்துவமான அடையாளங்களுடன் தற்போது விளங்குவதாகக் கொள்ளலாம். இந்த அம்சம்தான் வௌ;வேறு மொழிகளில் செவ்வியல் இலக்கியமும், வாய்மொழி இலக்கியமும் ஒரே பொருளைப் பேசியமை ஆகும்.

ஆறுமுக நாவலர், விபுலாநந்தர் போன்றோர்கூட பாடல் புனைந்திருக்கிறார்கள். இவற்றை கவிதைகளாக யாரும் கொள்வதில்லை. ஆனால் கல்லடி வேலன் என்று மக்களால் அழைக்கப்பட்ட ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை இயற்றிய பாடல்கள், ஓர் ஈழக் கவிப் பண்பைப் புலப்படுத்துகின்றன. ‘கண்டனம் கீறக் கல்லடியான்’ என்பார்கள். அவ்வளவுக்கு பெரும் கண்டனகாரராய் இவர் இருந்தவர். சமூகப் பிரச்னைகளையே கவிதைப் பொருளாகக் கொண்டு ஆசுகவிகள் பாடியவர். இது ஒரு அம்சமாக இங்கு வளர்ந்து வந்திருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ‘கவிதையைத் தமது ஆளுமையையும் சிந்தனையையும் புலப்படுத்தும் புலமை வாதங்களுக்குத் தளமாகப் பயன்படுத்தும் பண்பு இலங்கையில் வளர்ந்துள்ள அளவுக்குத் தமிழகத்தில் வளரவில்லையென்பதையும் அவதானிக்கலாம்’ என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தை வைத்துப் பார்க்கிறபோது, ஈழத்துக்கேயுரிய கவிதை மரபாக இதைக் கொள்ளமுடியும்.

2
இங்கு நாம் பார்க்கப்போகிற கால கட்டம் பாரதி சகாப்தத்துக்குப் பிறகு வருகிறது.

மரபுக் கவிதை நெறியில் நின்றுகொண்டு நவீனக் கருத்துக்களையும் புதிய களங்களையும் நோக்கி ஈழத்துக் கவிதை ஓடிய காலப் பகுதியாக இதைக் காணலாம். நவீன கவிதையின் செல்நெறி தீர்மானிக்கப்பட்ட காலமாக இதைக் கொள்ளவேண்டும். நாளைய ஈழத்துக் கவிதை எவ்வழியில், எவ்வாறு செல்லவேண்டுமென்பதைத் தீர்மானிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, முக்கியமான ஒரு சில கவிஞர்களின் மேல் சாய்ந்தது. அவர்களுள் முக்கியமானவர்கள்தான் மஹாகவியும், இ.முருகையனும்.

இக்காலகட்டத்துக்கு இன்னொரு வகையான விளக்கமும் அளிக்கலாம். பாரதியின் சகாப்தத்தைத் தொடர்ந்து ஈழத்தில் எழுந்தது, மறுமலர்ச்சி இயக்கமாகும். அ.ந.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், மஹாகவி போன்றோர் இவ்வியக்கத்தின் முக்கிய கவிஞர்கள். மஹாகவியும், முருகையனும் ஒரே திசையில் பயணித்தார்களாயினும் வௌ;வேறு தடங்களிலேயே அது நடந்தது எனச் சொல்லவேண்டும். நடுத்தர மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலித்தவராய் மஹாகவி விளங்க, முருகையனோ முற்போக்கு இலக்கியத்தின் பிரதிநிதியாக விளங்கினார்.

யதார்த்தமென்பது முக்கியமாக புனைகதைக்கானதென்பார்கள் விமர்சகர்கள். அத்துறையிலேயே அது முக்கியமாய்த் தன்னைப் பயில்வுசெய்கிறது. அதைக் கவிதைத் துறைக்குக் கொண்டுவந்து வீச்சுப்பெற வைத்தவர்களாக இவ்விருவரையும் கூறமுடியும். பின்னால் இந்த யதார்த்த முறையில் பிறழ்வுகொண்டு இரு கவிஞர்களுமே சிறிது விலகினார்கள். அப்போதும், அது ஈழத்து நவீன கவிதையின் அடித்தளத்தைப் பலமாக இட்ட முயற்சியாகவே கொள்ளப்படலாகும்.

அறுபதுகள் ஈழத்துக் கவிதை வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த காலகட்டமாகும். ஏனெனில் சாதியெதிர்ப்பு, சாதிக் கலவரங்கள் என்று வடக்கிலும், இனக் கலவரங்களென்று தெற்கிலும் நாடு கொந்தளிப்பாக இருந்த காலம். இதை ஈழத்துக் கவி மரபின் தொடர்ச்சியாகக் கொள்ள முடியும்.

இக்காலகட்டத்தில் சாதியெதிர்ப்பு சம்பந்தமாக வெளிவந்த கவிதைகளில் மிகவும் முக்கியமான கவிதைகளாக இரண்டு கவிதைகள் பேசப்பட்டன. ஒன்று, சுபத்திரனின் ‘சங்கானைக்கென் வணக்கம்’. மற்றது, மஹாகவியின் ‘தேரும் திங்களும்’. முதலில் இவ்விரு கவிதைகளையும் தனித்தனியே காண்பது மேலே சொல்லப்போகிற வி~யங்களின் விளக்கத்துக்கு உதவியாக இருக்கும்.

சங்கானைக்கு என் வணக்கம் -
சுபத்திரன்

சங்கானைக்கென் வணக்கம் சரித்திரத்தில் உன் நாமம் மங்காது, யாழகத்து மண்ணிற் பலகாலம் செங்குருதிக் கடல் குடித்துச் செழித்த மதத்துக்குள் வெங்கொடுமைச் சாக்காடாய் வீற்றிருந்த சாதியினைச் சங்காரம் செய்யத் தழைத்தெழுந்து நிற்கின்ற சங்கானைக்கென் வணக்கம்.
கோயிலெனும் கோட்டைக்குள் கொதிக்கும் கொடுமைகளை நாயினும் மிக்க நன்றிப்பெருக்கோடு வாயிலிலேநின்று வாழ்த்தும்பெருஞ்சாதி.
நாய்கள் வாலை நறுக்கஎழுந்தாய் சங்கையிலேநீயானை சங்கானை-அந்தச் சங்கானைக்கென் வணக்கம்.
எச்சாமம் வந்து எதிரிஅழைத்தாலும் நிச்சாமக்கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும் குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன் சங்கானை. மண்ணுள் மலர்ந்த மற்றவியட்நாமே உன் குச்சுக்குடிலுக்குள் குடியிருந்தகோபத்தை மெச்சுகிறேன் மெச்சுகிறேன் எண்ணத்திற் கோடி ஏற்றம்தருகின்றாய் புண்ணுற்றநெஞ்சுக்குள் புதுமைநுழைக்கின்றாய் கண்ணில் எதிர்காலம் காட்டிநிலைக்கின்றாய் உன்னைஎனக்கு உறவாக்கிவைத்தவனை என்னென்பேன் ஐந்துபெருங்கண்டத்தும் எழுந்துவரும் பூகம்பம்தந்தவனாம் மாஓவின் சிந்தனையால் உன் நாமம் செகமெலாம் ஒலிக்கட்டும் செங்கொடியின் வீடே சிறுமைஎடுத்தெறியும் சிங்கத்தின்நெஞ்செ செய்தேன்உனக்கு வணக்கம்.

தேரும் திங்களும்
- மஹாகவி

‘ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே வாருங்கள் நாமும்போய் பிடிப்போம்வடத்தை’ என்று வந்தான் ஒருவன். வயிற்றில்உலகத் தாய் நொந்துசுமந்திங்கு நூற்றாண்டு வாழ்வதற்காய்ப் பெற்ற மகனே அவனும் பெருந்தோளும் கைகளும் கண்ணில் ஒளியும் கவலையிடை உய்யவிழையும் உலகமும் உடையவன்தான்
வந்தான் அவன் ஓர் இளைஞன் மனிதன்தான் சிந்தனையாம்ஆற்றற் சிறகுதைத்து வானத்தே முந்தநாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு மீண்டவனின் தம்பி மிகுந்தஉழைப்பாளி.
‘ஈண்டுநாம்யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல் வேண்டும்’ எனும் ஓர் இனிய விருப்போடு வந்தான் குனிந்து வணங்கி வடம்பிடிக்க. ‘நில்’ என்றான் ஓராள் ‘நிறுத்து’என்றான்ஓராள் ‘புல்’என்றான்ஓராள் ‘புலை’என்றான்இன்னோராள் ‘கொல்’என்றான் ஓராள் ‘கொளுத்து’என்றான்வேறோராள். கல்லொன்றுவீழ்ந்து கழுத்தொன்றுவெட்டுண்டு பல்லோடுஉதடுபறந்து சிதறுண்டு சில்லென்று செந்நீர் தெறித்து நிலம் சிவந்து மல்லொன்றுநேர்ந்து மனிதர்கொலையுண்டார்.
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர் மேற்கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிட பாரெல்லாம்அன்று படைத்தளித்த அன்னையோ உட்கார்ந்திருந்திட்டாள் ஊமையாய்த் தான்பெற்ற மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.
முந்தநாள் வானமுழுநிலவைத் தொட்டுவிட்டு வந்தவனின் சுற்றம் அதோ மண்ணில் புரள்கிறது.

0

ஒருவகையில் முதல், கரு, உரிப் பொருள்கள் ஒத்துவரக் கூடியதாய் சங்கப் பாடல்களுக்கு நிகரான கவிதைகளை மஹாகவி பாடினார் என்று சொல்லப்படுவதுண்டு. இயற்கையையும் தனிமனித மனநிலைகளையும் விதந்து சொல்வன சங்கப்பாடல்கள். அப்படியான கவிஞர் சமூக அக்கறை கொண்டு பாடல் புனைவது முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டியது. ‘மதத்தின் பெயரால் நிகழும் தீண்டாமைக் கொடுமையின் கட்புலக் காட்சியாக விரியும் இக் கவிதையின் ஊடாக சமூக முரண்பாடுகள் மீதான தனது வெறுப்புணர்வையும் அகன்ற மனித நேயத்தையும் புலப்படுத்தி விடுகிறார் மஹாகவி’ என்கிறார் கலாநிதி நா.சுப்பிரமணியன், இப் பாடல் குறித்து. அது சரிதான்.

இது ஒருவகையில் கவிதையின் நிலைமாறும் காலமும்கூட. சமூகத்திலேற்படும் மாற்றங்கள், மொழியிலும் மாற்றங்களை வற்புறுத்துகின்றன. இவ்வகையில் யாப்பும் மாறுகிறது. வாழ்க்கையின் போக்குக்கும் யாப்புக்கும் தொடர்புண்டு. இன்னும் விளக்கமாகச் சொன்னால், இதுவரை செவிப்புலத்துக்கான உருவம் பெற்றிருந்த கவிதை, இது முதற்கொண்டு கட்புலத்துக்கான புதுக்கவிதையின் உருவத்தைத் தாங்க பெரிதும் விழைகிறது.

இவை மஹாகவியினதும், முருகையனதும் ஆற்றல் சான்ற கவி ஆக்கங்களால் ஈழத் தமிழ்க் கவிதை பெற்ற பெரும்பேறு. சண்முகம் சிவலிங்கம் மஹாகவிபற்றிச் சொன்னது சரியாகவே இருவருக்கும் பொருந்தும். அவர் சொன்னார்: ‘பாரதி ஒரு யுகசக்தி என்பது மெய்யே. ஆனால் அந்த யுகசக்தி பிரிந்துவிட்டது. அதன் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால், அதன் மறுகிளை மஹாகவியே. பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால், அத் தோல்வி நிகழாமல் அதனை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி.’

இந்த முரண்களும், முரண்டுகளும், சமூக அக்கறையும்தான் ஈழத் தமிழ்க் கவிதையில் பூதந்தேவன் தொடக்கம் அரசகேசரி ஊடாக மஹாகவிவரை தொடரும் கவிப் பண்புகள், பாரம்பரியங்கள்.3.
ஈழத்தின் சமகாலக் கவிதைப் பரப்பு, மிக்க விசாலமானது. இதற்கு முந்திய காலகட்டத்தின் மேலோட்டமான பொருள்களை உறுதியாய் வாங்கி மேலெடுத்துச் சென்றது அது. தமிழுணர்வும், இனக் கொடுமைகளின் மேலான கோபமும் காட்டியவை முந்திய காலகட்டத்தின் கவிதைப் பண்புகள். அதை அடுத்த கட்டத்துக்கு இக் காலகட்டத்துக் கவிஞர்கள் உயர்த்தினார்கள். மட்டுமில்லை. யுத்த ஆதரவு, வாழ்வு பற்றிய ஆதங்கம், பெண்விடுதலை, சமூக விடுதலை இவற்றின் வளர்ச்சியில் யுத்த எதிர்ப்பு, சமாதானத்தின் கூவல், மண் இச்சிப்பு போன்றனவும் வளர்ந்தன. இக் காலகட்டக் கவிஞர்களுள் குறிப்பிடக் கூடியவர்களில் முக்கியமானவர்கள்: சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சோலைக்கிளி, எம்.ஏ.நுஃமான், புதுவை இரத்தினதுரை, சி.சிவசேகரம், காசிஆனந்தன், சு.வில்வரத்தினம், பசுபதி, ஹம்சத்வனி, சுல்பிகா, மைத்ரேயி, செல்வி, சிவரமணி, ஒளவை, ற~;மி, இளையஅப்துல்லா, கி.பி.அரவிந்தன், நட்சத்திரன் செவ்விந்தியன், பா.அகிலன். இவர்களுள் சேரன், வஐச ஜெயபாலன், நுஃமான் ஆகியோர் மூத்த கவிஞர்கள். முந்திய கவிஞர்கள் சமைத்த பாதையில் அதன் பண்புகளைப் பதிவுசெய்தவர்கள். இவர்களில் சிலரின் பண்பு நலங்களைத் தெரிந்துகொள்ளக் கூடியதான சில கவிதை அடிகளைப் பார்க்கலாம்:

துயர் சூழ்ந்து ரத்தம்சிந்திய நிலங்களின்மீது நெல்விளைகிறது சணல் பூக்கிறது மழை பெய்கிறது…
(சேரன், மயானகாண்டம்)

மீண்டும் எனது மண்மிதித்தேன் மீண்டுமென் பழைய சிறகுகள் விரித்தேன் மீண்டும் எனக்குப் பழகிய காற்று மீண்டும் எனக்குப் பழகிய ஆறு மீண்டும் எனது இழந்த நிம்மதி…
(வஐச ஜெயபாலன், ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்)

இன்று பனங்கூடல் சரசரப்பில் பங்குனியின் உடல் தின்னும் கொடுநெருப்பில் ஜீப்புகள்தடதடத்து உறுமி சப்பாத்துகளின் பேரொலியில் தமிழ்முதுகுகள் கிழிந்து மூர்ச்சையுற்ற சேதி கேட்டு விம்மிஎழும் பேரலைகள் என்மனமாய்
(ஹம்சத்வனி, புதுச்சேரி)

அந்த இரவின்தொடக்கம் போர்யுகத்தின் ஆரம்பம் இரும்புப் பறவைகள் வானில் பறக்க பதுங்கு குழிகளில் மனிதர் தவிக்க தொடர்கிறது அந்த இரவு
(சுல்பிகா, போர் இரவுகளின் சாட்சிகள்)

வெள்ளைப் பறவைகள் எல்லாம் மெல்லக் கொடுங்கூர்க்கழுகுகளாயின
(சி.சிவசேகரம், நதிக்கரை மூங்கில்கள்)

அநேகமாய் ஒவ்வொரு நாளும் துக்கம் தீன்பொறுத்த கோழிமாதிரி விக்கும் அளவுக்கு
(சோலைக்கிளி, இனி அவளுக்கு எழுதப்போவது)

முற்றத்துச் சூரியன் முற்றத்து நிலா முற்றத்துக் காற்றென வீட்டு முற்றங்களுக்கே உரித்தான வாழ்வனுபவங்கள் விடைபெற்றுக்கொண்டன
(சு.வில்வரத்தினம், வேற்றாகி நின்ற வெளி)


இவ்வாறு விரியும், சமகாலத்துக் கவிஞர்களின் போர் நிலத்து அனுபவங்களும், இனக்கொடுமையால் அடைந்த துன்பங்களும்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வெளியில் ஈழத்துக் கவிதைகளின் விசே~ங்களும் முதன்மையும் இவ்வாறுதான் தாபிதமானது. கனவுலகக் கவிதைகள் கடந்த காலத்தவையாகிவிட்டன. நிகழ்வின் ரத்தமும் சதையும்கொண்ட படைப்புக்களே இக் காலகட்டத்தில் அதிகமாகவும் எழுந்தன. மிக அதிக அளவான பெண்களும் இக்கால கட்டத்தில் எழுதப் புகுந்தனர். புதிய அனுபவங்களின் சேர்த்தி இதனால் நிகழ்ந்தது. ‘சொல்லாத சேதிகள்’ கவிதைத் தொகுப்பு, புகலிடப் பெண்களின் கவிதை வீச்சை ஓரளவு வெளிப்படுத்திய தொகுப்பாகும்.

யுத்த பூமியில் மரணங்கள் நிகழும். அது சாதாரணர், கலைஞர் என்று பேதம் பார்ப்பதில்லை. ஆனால் நிறைய கவிஞர்களின் கொலையும் தற்கொலைகளும் நிகழ்ந்த கொடுமைகள் ஈழத்தல் மட்டும்தான் சாத்தியம். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் சில படைப்பாளிகள் தம் மன அவசம் பொறுக்கமுடியாத நிலையில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தளவு ஈழத்திலும் வாழ்நிலை நெருக்குதலுக்குள்ளாகியிருக்கிறது. இது ஒருவகையில் உன்னதமான கவிதைகள் பிறக்கவும் வழி சமைத்தது ஒரு புறத்தில். அவை யுத்தத்தை வெறுத்தன. சமாதானத்தைக் கூவின. வாழ்வை இச்சித்தன.

இருபதாம் நூற்றாண்டின் அந்தம் வரையான ஈழத்துக் கவிதையின் வளர்ச்சியும் போக்கும் இவ்வாறே இருந்தன.

அது சமூக அக்கறையோடு கலா மகிமை வேண்டியது. அதுவே அதன் கவி மரபாய், மரபுக் கவிதையூடாகவும் வந்து சேர்ந்தது.

இனப் படுகொலைகளின் ஓரம்சமாக யுத்தத்தை ஆதரித்த ஈழக் கவிதை, இனி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் குரல்கொடுக்கத் துவங்கியிருக்கிறது. இது ஒருவகையில் சர்வதேச கோ~ம்தான். விடிவெள்ளிகள் தேடித் தவிபோர் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.


(கணையாழி, ஜூலை 2003)

00000

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...