நிறமற்றுப் போன கனவுகள்

நிறமற்றுப் போன கனவுகள்:
இளவாலை விஜயேந்திரனின் கவிதை நூல் பற்றி…


ஈழத்துக் கவிதை (புதுக்கவிதை) தொடர்பான ஒரு நேர்மையான விசாரணை இதுகாலவரையில் தொடரப்பட்டமைக்கான ஆதாரமேதும் நம்மிடம் இல்லை. பேராசிரியர் கா.சிவத்தம்பி, மு.பொ., கலாநிதி செ.யோகராசா, குறைவாக நான் என்று சிலபேர்தான் இத்துறையில் கவனம் குவித்திருப்பது மெய்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ராஜமார்த்தாண்டன், வெங்கட் சாமிநாதன் மற்றும் பிரேமிள் என்று சிலரே இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரேமிள் ஈழத்தவராகவே கணிக்கப்படுவதில்லை என்கிற குறை தனியாகவுண்டு. அவரும் எழுபதுக்களின் நடுப்பகுதிவரையுமே ஈழக் கவிதைகளைப்பற்றி எழுதினார். அண்மைக் காலத்தில் சுஜாதாவும் இதுபற்றிக் கருத்துரைத்திருக்கின்றார். ஈழக் கவிதைகள் நீண்டனவாய் அமைந்து உணர்வுரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் கவிதைத்தனத்தில் பின்தங்கியுள்ளன என்பது அவரது குற்றச்சாட்டு. அது ஓரளவு அப்படியென்றும்தான் தெரிகிறது. இதை அவரோடு பாறுபடக்கூடிய வெங்கட் சாமிநாதனும் சொல்வார்.

பெண்கள் கவிதையைச் சிலாகிக்கிறவளவுக்கு மற்றைய கவிதைகளை அவர்கள் விதந்து பேசுவதில்லை. எந்தத் தமிழ்ப் புலத்தையும்விட ஈழம் கவிதையில் உலகத் தரத்தை அடைந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கக் கேள்விப்பட்டோம். பின் உடனடியாகவே கவிதைப் பரப்பில் நிண்ட கவிதைகளென குறை காணப்பட்டோம். ஆக பிரச்சினை சும்மா கிளரவில்லை என்பது வெளிப்படை. இதுபற்றி நாம் பார்த்தாகவேண்டும். அப்போதுதான் நாம் ஒரு சரியான முடிவுக்கு வரலாம். அது நமது பிரதானமான கடமையும் தேவையுமாகும்.

நவீன கவிதையின் பிறப்பிலிருந்து இதை நாம் வரையறை செய்து பார்க்கவேண்டும். நம் கவிதைப் பாரம்பரியம் ஒரு பாரக் கல்லாக நம் கவிதைப் படைப்புத் திறன்மீது தொங்கவிடப்பட்டிருந்தது என்பது நிஜம். நேர்படுத்துகிற ஒரு நல்ல நோக்கம் அவர்களிடம் இருந்தது. அதை மறுப்பற்கில்லை. புடலங்காய்க்கு கல் கட்டுகிற மாதிரியான ஒரு வாழ்முறையின் அம்சம் அது. ஆனால் அது ஒரு பாரமாகவே இருந்திருக்க முடியும். அதை அறுத்தெறிந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியது புதுக்கவிதையே.

 புதுக்கவிதையை தன் வாழும் காலம்வரை ஒப்புக்கொள்ளாமலே இருந்தார் கலாநிதி கைலாசபதி. அவ்வளவுக்கு அது தான்தோன்றிப் பிறவியாகவே இருந்ததென்பதுமுண்மை. அதன் மீது மதிப்புவைக்க விமர்சகர்களால் அல்ல, கவிஞர்களாலேயே அப்போது முடிந்திருந்தது. இது முக்கியமானது. ஈழத்து விமர்சகர்கள் கவிஞர்களைவிட ஒருபடி பின்னேயே இருந்துகொண்டிருந்தார்கள் என்பதே நிஜம். இது ஏனைய படைப்பிலக்கியத்துறையில் மறுதலையாக நிகழ்ந்தது. சிறுகதை நாவல்வகைகளை விமர்சகர்கள் பின்னாலே இழுத்துக்கொண்டு போனார்கள். பல்கலைக்கழகம் சார்ந்து பேராசிரியர்கள் எம்.ஏ.நுஃமான், சி.சிவசேகரம் தவிர படைப்பிலக்கியத் துறையில் வேறுபேர் இல்லை. இவர்களால் இரண்டு தளங்களிலும் இயங்க முடிந்திருந்தது. ஆனாலும் மேலே பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை.

கவிதை அவர்களுக்கு முன்னாலேயே போய்க்கொண்டிருந்தது. ஒருசில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘மல்லிகை’யின் 39வது ஆண்டு மலரில் ‘ஈழத் தமிழிலக்கியத்தின் அசைவிறுக்கத்துக்கான காரணம்’ என்ற கட்டுரையில் இந்த அசைவிறுக்கத்தின் முக்கியமான காரணியாக இதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். பல்கலைக் கழகங்களில் எமது விமர்சன ஆதாரத் தளங்கள் சென்றடைந்துவிட்டனதான். அதை மீட்காதவரை ஈழத் தமிழிலக்கிய உலகுக்கு உய்வில்லை. சரி, இனி கவிதைபற்றிப் பார்ப்போம்.

கவிதை கவிதைக்குள்ளேயே கண்டடையப்பட வேண்டும் என்பது சரிதான். கவிதையை ஆய்வுக்காக மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ள முடியும். முதலாவதை Political embience  என்று கூறலாம். இங்கு கவிதையை இலேசுவில் கண்டடைந்துவிட முடியாது. கவிதை ஓடி ஒளிந்து விளையாடும். நிற்பதுபோலத் தோன்றும், ஆனால் நிற்காது. இல்லைப்போல் தெரியும், ஆனால் சட்டென எங்கிருந்தோ வந்து தோன்றிவிடும். இவ்வகைக் கவிதை முயற்சியே தமிழில் ஆரம்பத்தில் இருந்தது. பின்னாலும் இது சற்றுத் தொடர்ந்ததாகச் சொல்லமுடியும். ஆவணப்படுத்தல் என்ற கோஷத்துடன் இது வெளிவந்துலாவியது. ஈழத்தின் சமீபகால கவிதைகளின் பொதுத்தன்மை இதுவெனச் சொல்லலாம். யுத்தத்தின் காரணமான கொடுமைகள், அழிவுகள், வெறுமைகளை இது விதந்து பாடியது. அவ்வாறு செய்யவேண்டியது அவசியமாகவும் இருந்தது. அடுத்த தலைமுறைக்கான ஆவணப்படுத்தலை இது செய்யவே செய்தது. யதார்த்தம் இங்கே பாதையிட்டது இப்போதுதான் நிகழ்ந்தது.

அடுத்த பகுப்பினை Political  function  எடுத்துக்கொண்டது. குறியீட்டுவாதம், மீமெய்வாதம், படிமவாதம், தொன்மவாதம் என்பவை இப்பகுப்பில் அடங்கும். இவை வெவ்வேறு போக்குடையவை. ஆனாலும் ஒரே வழியில் பயணிப்பவை. மொழிச் சேர்க்கையின் சூட்சுமங்கள் இங்கே பரவசம்
(Pleasure of madness) நிழ்த்துவதும் இங்கேதான்.

மூன்றாவது பகுப்பினை கவிதை எந்திரம் (Poetical mechine ) எனலாம். இவ்வகைக் கவிதை வாசிக்கும்போதுமட்டும் தோன்றி மறைகிற தன்மையுடையதாய் இருக்கும். கவிதையை உருவாக்கிக் காட்டும் ஒரு எந்திரமாய்ச் செயற்படுவதாலேயே இது பொயற்றிக்கல் மெசின் என்று அழைக்கப்படுகிறது. இது சிலவேளைகளில் அசாத்தியமான கவிதைச் சாத்தியங்களை வெளியிடும். பொதுவாகச் சொல்லப்போனால் கவிதையை இவை தமக்குள் வைத்தில்லாமல் வாசிக்கும்போதில் மட்டும் காட்டி மறைக்கும். இவற்றுடன் நாலாவது ஒரு வகையாக தொன்மக் கவிதையியலைச் சொல்லலாம். இது ஆங்கிலத்தில் mitho poetry எனப்படும். மிக்கதாகவும் மொழிப் புலனுடன் தொடர்புடையது இது. மர்மங்களின் வெளிப்படைத் தன்மை, வெளிப்படைகளின் மர்மத் தன்மையென புதிர் நிகழ்வுகளைச் சாத்தியப்படுத்தக்கூடியது இது.

இந்நிலையில் ஈழக் கவிதையினை எடுத்துப் பார்த்தால் அவற்றின் வகையினத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது ஈழக்கவிதை பொயற்றிக்கல் எம்பியன்ஸ் எனப்படும் கவிதைமொழிச் சூழல் வகைபற்றியதாக இருப்பது புரியும். இது ஆவணப்படுத்தும் முக்கியமான வகையினம். அந்தமாதிரியே நடந்தும் இருக்கிறதுதான். நடந்துகொண்டிருக்கிறதுகூட. நம் கவிதை வரலாற்றை எடுத்துப் பார்தால் புதுக்கவிதையின் தொடக்கமே அசாத்தியமான தன்மையோடு இருந்தது புரியும். ஒரு புதியதடத்தில், அதுவரை ஈழக்கவிதை தொடாத இடத்தை மிக ஆழமாகத் தொட்டுக்கொண்டு சென்றது. இனத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகியிருந்த நிலையில், மண்ணின் அபகரிப்பு ஆட்சியாய் இருந்த சூழ்நிலையில், சுதந்திரத்தைக் காட்சியிலும் காணாதிருந்த வேளையில் அவற்றுக்காகப் பாடினார்கள் கவிஞர்கள். சேரன், சண்முகம் சிவலிங்கம், வஐச ஜெயபாலன், சு.வில்வரத்தினம், சி.சிவசேகரம், எம்.ஏ.நுஃமான் என்று ஒரு புதிய வட்டம் அமைந்தது. இவர்களோடு சேர்த்து எண்ணப்படவேண்டியவரே இளவாலை விஜயேந்திரன்.

நம் கவிதை வரலாற்றில் இந்தக் கட்டம் முக்கியமானது. தமிழ்ப் பரப்பு இதுவரை காணாப் புலம் உதயமானது. ‘எங்கும் ஒலிக்கிறது காற்று, எனது நிலம்! எனது நிலம்!’ என்ற குரல் தமிழ்ப் புலத்திற்குப் புதிது. கருத்தே புதிதில்லை. மஹாகவியின் கவிதைகள் சில இதை மிக வலுவாய்ச் சொல்லியிருக்கின்றன. இங்கு சொல்லப்பட்ட முறையே முக்கியம். வஐச ஜெயபாலனின் கவிதைகள் வன்னி மண்ணை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும். க.கலாமோகன், க.ஆதவன் மற்றும் பா.அகிலன் போன்றோரின் வட்டமும் மண்ணை வெகுவாய் இச்சித்துப் பாடியிருக்கும். இத் தொகுப்பின் பின்னணியிலேயே இளவாலை விஜயேந்திரனின் ‘நிறமற்றுப் போன கனவுக’ளை பார்த்தாக வேண்டும்.

‘நிறமற்றுப் போன கனவுகள்’ 2001இல் வெளிவந்திருக்கிறது. சென்னையில் இதை நான் வாசித்திருக்கிறேன். அதற்கு முதல் ‘சரிநிக’ரில் ஒன்றோ இரண்டோ கவிதைகளை வாசித்ததாக ஞாபகம். கவனத்துக்குரிய கவிஞராக அவரை அவை இனங்காட்டின. காலகட்டத்தின் பண்புகளைவிட தனிப்பட்டவரின் கவிதைப் பண்புகள் வித்தியாசமானவை. அக் கவிதைப் பண்புகள் என்ன? அவை பிற கவிஞர்களின் கவிதைப் பண்புகளுடன் எவ்வளவு இணைந்தும் வேறுபட்டும் நின்றன? இவை முக்கியமானவை. இவற்றைப் பார்க்க நாம் பிரதியுள் சென்றாக வேண்டும்.

இப் பிரதியை மேலோட்டமாக விமர்சிக்க எனக்கு விருப்பமில்லை. தமிழ்ச் சூழலில் நிலவும் ஆழமற்ற விமர்சனங்களை, மேலெழுந்தவாரியான மதிப்புரைகளை விலக்குகிற பணி ஏற்கனவே தொடங்கியாகிவிட்டது. சமரசமற்ற விவாதிப்புக்களை என்றையும்விட தீவிர இலக்கிய நாட்டமுள்ள இக் காலகட்டம் விதந்து நிற்கிறது. நாம் அதைப் பாதிப்படைய விட்டுவிட வேண்டாம்.

00000




(கனடா ரொறன்டோ நகரில் 2005ஆம் ஆண்டு அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரை.)

Comments

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்