சாம்பரில் திரண்ட சொற்கள் 14

14

கனவென்றோ எதார்த்தமென்றோ பகுத்துணரமுடியா தோற்ற மயக்கங்கள் வைத்தியசாலையின் ஒரு நோயாளிக்கு எப்போதேனும் நிகழ்வது அபூர்வமில்லை.

எங்கோ மறுபடியும் தன்னை எடுத்துச்செல்வதான உணர்வை, இன்னும் தீராத் துயரின் தொடர்ச்சியாயெண்ணி மறுகும் தருணத்தில், அவசரத்தில் கொண்டுசெல்லப்படும் படுக்கையொன்றின் சில்லுகள் எழுப்பிய கஜ… கஜ… ஒலியில், தான் கணங்கள் சில முன் அடைந்தது, மனப் பதிவிலிருந்த உணர்வனுபவத்தின் துயில்கால மீட்பென, கண்விழித்த சிவயோகமலர் தெளிந்தார்.

சிறிதுநேரத்தில் அவரது அறையோடுள்ள நடைபாதையில் தென்னாசிய  தாதியொருத்தி தன் கவனிப்பிலுள்ள நோயாளிக்கு மருந்து கொடுக்கவோ கொடுத்துவிட்டோ அவசரமற்ற நடையில் போய்க்கொண்டிருந்தாள். இரவின் நிசப்தத்தை அவள் காலடிகள் மெல்லக் கலைத்தடங்கின.

குழாய் வழி பிராண வாயுச் செலுத்துகை காலையில் நிறுத்தப்பட்டபோதே அபாய கட்டம் தனக்கு கடந்துபோய்விட்டதை சிவயோகமலர் தெரிந்திருந்தார். அக் கணம்போல் உயர்ந்த, உன்னதமான பொழுதை நீண்டகாலமாய் தான் அனுபவித்ததில்லைப்போல் மனம் முழுக்க ஓரினியவுணர்வலை பரந்தெழுந்தது.

சிறிதுநேரத்தில் பக்கப்பாட்டில் சுவரோரம் பார்த்தார். நாற்காலியில் தலை தொங்கியபடியிருக்க சாந்தரூபிணி தூங்கிக்கொண்டிருந்தாள்.  அறிதுயிலாய்த்தான் இருக்கும். ஒரு செருமலில் உறக்கம் கலைந்து என்னவென்று கேட்கிறவள் அவள்.

சக மனிதர்மீது கொள்ளும் அபிப்பிராயங்கள் தவறானவையென புரியப்படும் தருணங்கள் முதலில் துன்பமானவை ; பின்னர் இனிமை செய்பவை. ஆனால் அவற்றிற்கான சமயங்கள் எளிதில் வந்து கூடிவிடுவதில்லை. முந்திய இரண்டு இரவுகளாக  சாந்தரூபிணியூடு அத்தகுவொரு மேலான தருணத்தை சிவயோகமலர் பெற்றிருக்கிறார்.  அவளது பணிவிடையில் உருகிப்போயிருந்தது அவரது உள்ளம்.

இந்தப் பிள்ளையைத்தான், இவளின் அக்கறையைக் கேவலப்படுத்துவதன் மூலம், தன் வீட்டிலிருந்து கண்ணீர் தெறிக்க மேலே ஓடும்படி சில மாதங்களின் முன்பாகச் செய்தோமென்பதை அவரால் எண்ணிப்பார்க்கவும் முடியவில்லை.

இவள்தான் அந்த ஆபத்தான தருணத்தில் ‘நானிருக்கிறன், அன்ரீ’யென முன்னால் வந்துநின்றாள். திடீர் மூச்சடைப்பு ஏற்பட்ட  சிவயோகமலருக்கு வைத்திய அறிமுறையற்ற அவளது உதவிதான் அவரின் மூச்சைப் பிடித்துக்கொடுத்தது. ஆலகாலத்தை சிவன் கழுத்தில் பார்வதியின் பிடி தடுத்து நிறுத்தியதுபோல்,  பிரியவிருந்த உயிரைப் பாதிவழியில் தடுத்துவைத்தவள் அவள்.  தன் மூச்சையே சுவாசமாய் உள்ளே இறக்கியும் ஏற்றியும் உயிரபயம் கொடுத்தவள்.

இரக்கமென்ற ஒன்றைத் தவிர வேறினால் உந்துதல் பெற்றிருக்கமுடியாத அந்த அன்புக்கும் அன்பு என்றுதான் பெயரா? அபிநயவல்லியாகவே அந்த மூன்று இரவுகளிலும் அவரைப் பாராமரித்தாள். மூத்திரக் கெண்டியை எடுத்து வந்து அவர் பாவனைக்குக் கொடுத்தும், திரும்ப அதை எடுத்துப்போய் துப்புரவாக்கியுமான பேற்றுக்கடன் கழித்தலை அது நிகர்த்தது. அவருக்கு அந்த அன்பு கிடைத்தமை ஒரு கொடை; ஒரு வரம். அவர்தான் கண்டுகொள்ளாமல் இருந்தார். தெய்வம் காணவைத்தது. வேறு விளக்கம் அதற்குச் சாத்தியமில்லை.

மூன்று இரவுகள் சாந்தரூபிணியும் இரண்டு பகல்கள் சுந்தரமுமாக மாறிமாறி சிவயோகமலருடன் ஆஸ்பத்திரியில் தங்கி உதவியாற்றினர். அன்று காலையில் அவளுக்கு ‘துண்டு வெட்டலா’மென முதல்நாள் மாலையில் வைத்தியர் குறிப்பிட்டிருந்தார். காலையில் சாந்தரூபிணியின் மாமனோடு சுந்தரமும் வரும். சுந்தரமும் தன்னாலியன்றதைச் செய்ததுதான். ஆனாலும் அவருக்கான கடமையாக அது இருந்தது. தன்னால் முடியாதெனக் கூறி அவரால் ஓடிவிட முடியாது. கூடவிருந்த நோயாளியைத் தகுந்தபடி கவனியாதிருத்தல் சட்டப்படி குற்றம். நோயாளி மரணமடைந்தால் மூன்றாம் நிலை கொலைக் குற்றமே சாட்டப்படலாம்.

சுந்தரம், பாவம், அவரெல்லாம் ஓடுகிற மனிதரில்லை.  ஆனாலும் அதற்காக அவர் போற்றப்பட வேண்டியதில்லை. ஆனால் சாந்தரூபிணி…?

அந்த மனத்தை ஏற்கனவே புரிந்திருந்தால் வெறுப்பின் பரிமாணம் கொண்டிருந்த அந்தக் காலம், சற்றொப்ப இரண்டு வருஷங்கள், எவ்வளவு இனிமையாக அவர்களுக்கு அங்கே கழிந்திருக்கும்!

பெரும்பாலும் அவளுக்கு வீட்டில் நடந்த எல்லாம் தெரிந்திருந்தது. அத்தனை காலமாய் அனைத்தையும் அவதானித்துக்கொண்டுதான் ஒரு பூனையுறக்கத்தில் இருந்திருக்கிறாள்.

அவள் சுந்தரத்திற்கும் சிவயோகமலருக்குமிடையிலான உறவின் விரிசல்களைப் பேசினாள்.  அந்த நோயின் இருப்பை ஆரம்பத்திலேயே ஏன் காணமுடியாதுபோனதென வினவினாள். அவள் பயின்ற வீணை இசைக் கலையை முழுதாய்ப் பயன்படுத்தாததுபற்றி, சுந்தரம்தான் அல்வாய் வீட்டில் அவளது வீணையை உடைத்தாரா எனவும், அதற்குப் பழிவாங்குவதுபோலத்தான் பொக்கிஷங்களாய் அவர் பாதுகாத்து வைத்திருந்த அவரது ஓவியங்களைக் கிழித்து காற்றிலே உருட்டிவிட்டு வழிநெடுகச் சிரித்தபடி சென்றாரா என்பதுபற்றியெல்லாம் கேட்டாள்.

கடந்த இரண்டு நாள்களின் முன்னிரவுகளும் அவ்வண்ணமே அவர்களுக்குக் கழிந்திருந்தன.

‘உங்கள நான் எப்பிடிக் கூப்பிட…?’ என்ற கேள்வியிலிருந்து முதல்நாள் இரவுணவின் மேல் தன்னுரையாடலைத் தொடங்கியிருந்தாள் சாந்தரூபிணி.

‘இவ்வளவு நாளாய் எப்பிடிக் கூப்பிட்டிரோ, அப்பிடி.’

‘உங்களுக்கு அது விருப்பமில்லாம இருக்குமெண்டு நினைக்கிறன்…’

‘எனக்கு எதுதான் விருப்பமாயிருந்திருக்கு…? இந்த வீடு வாசல்… சொந்தங்கள்… சினேகிதங்கள்… கனடா… ஶ்ரீலங்கா… எதுவும்தான் பிடிச்சதாயில்லை. ஆனா விட்டிட்டு எங்க ஓட…? வாழ்றதே பிடிக்கேல்லை. அதுக்காக செத்திடேலுமோ…? என்ர வயசுக்கு நீர் மோள் முறையாய்த்தான் வருவிர். அப்ப… அன்ரியெண்டே கூப்பிடும்.’

‘அப்ப… நீங்களும் என்னை நீ… நானெண்டே…. சொல்லுங்கோ.’

‘சரி.’

‘உங்களுக்கு ப்ளட் பிரஷர் இருக்கு. மத்தியானம்மட்டும் 160-100 இல இருந்திது. இப்ப கொஞ்சம் இறங்கியிருக்கு. எண்டாலும் இதுவும் கூடத்தான். அதால நீங்கள் சும்மா எடுத்ததுக்கெல்லாம் கோவப்படாம இருக்கவேணும்.’

சிவயோகமலர் தனக்குள்ளாய் சிறிதுநேரம் கிலுகிலுத்தார். தலையை மறுத்தானுக்குப்போல் அசைத்தார். எதுவோ தூர நிகழ்வையெண்ணி கண்ணை மூடியமர்ந்திருந்துவிட்டு பிறகு திறந்தார். இங்கிதமான நிகழ்வுகளால்போல் இதழ்களை ஒருமுறை மெலிதாய் மலர்த்தினார். ‘ஊரில, எங்கட வீட்டுக்கு முன்னால பவளமாச்சியெண்டு ஒராச்சி இருந்தா. ஆரோ இல்லை, இவற்றை பேத்திதான். மனுஷி நல்லாய்க் கதைசொல்லும்….’

‘அவவைப்பற்றிக் கேள்விப்பட்;டிருக்கிறன்.’

‘ம். மனுஷியும் ஊர் அடிச்சுத் திரிஞ்ச மனிஷிதான். சின்னன்ல பவளமாச்சியின்ர கதையெண்டா எனக்குப் போதும். ஐயாவும் வெள்ளிக்கிழமை பின்னேரத்தில திருவிளையாடற் புராணக் கதை சொல்லுறவர். அதுகளைவிட பவளமாச்சியின்ர கதை வலு சோக்காயிருக்கும். ஒருநாள் அவ சாரைப் பாம்பின்ர ஒரு கதை சொன்னா. அப்ப எனக்கு அது விளங்கேல்ல. சரியா  என்னை வைச்சுச் சொன்ன கதையெண்டு  இப்பதான் எனக்குத் தெரியுது…’

பவளமாச்சியின் வார்த்தைகளில் கதை அவளுள் விரிந்தது.

ஒருநாள், திடீரெண்டு சாரைப் பாம்பொண்டு வரக் கண்ட கொஞ்ச தவக்கைக் குஞ்சுகள் கெடிகலங்கிப்போய், பக்கத்திலயிருந்த கல்லுக் கும்பிக்குள்ள பதுங்கிறதுக்கு பாய்ஞ்சோடத் துவங்கிச்சின. அதைக் கண்ட தாய்த் தவக்கை, ‘அது சாரைப் பாம்புதான, அதுக்கெல்லாம் நீங்கள் பயப்பிடத் தேவையில்லை, நீர்ப் பாம்புமாதிரி சரியான நல்ல பாம்பது’ எண்டு அவையை ஆசுவாசப்படுத்திச்சிது.

இது சாரைப் பாம்பின்ர காதில விழ, அது இன்னும் நல்ல பாம்புமாதிரி முகத்தை பாவமாய் வைச்சுக்கொண்டு, தவக்கைக் குஞ்சுகளுக்கு ஒரு துன்பமும் செய்யாம அங்கால போயிட்டுது.

அந்தச் சாரைப் பாம்பு வேறயொரு நாளும் அந்த வழியாலை வந்திது. தாய் எங்கயோ போயிட தனியயிருந்த தவக்கைக் குஞ்செல்லாம் அதைக் கண்டிட்டுது. அப்பேக்க அவைக்கு முந்தினமாதிரி பயம் வரேல்லை.

பயப்பிடாததோட பாம்புக்கு குறுக்கும் மறக்குமாய் ஓடியும், அதுக்கு நெய்க்காட்டியும், அதுக்கு நக்கலடிச்சும் பெரிய கூத்தெல்லாம் போட்டுதுகள்.

சாரைப் பாம்புக்கு கோவம் வந்திட்டுது. டக்கெண்டு யாய்ஞ்சு முன்னால நிண்ட தவக்கைக் குஞ்சொண்டை கவ்விச்சிது.

பாம்பு அந்தமாதிரிச் செய்யுமெண்டு எதிர்பார்த்திராத தவக்கைக் குஞ்சுகளுக்கு அப்பத்தான் தெரிஞ்சிது, சாரையெண்டான்ன நாகமெண்டான்ன பாம்பெண்டா பாம்புதான், அது தங்கட சத்துராதியெண்டது.

பாம்பின்ர வாயில அம்பிட்ட தவக்கைக் குஞ்சு அடிச்சுவைச்சுக் கத்தத் துவங்கிச்சிது. ‘அம்மா சொன்னவ, சாரைப் பாம்புக்குப் பயப்பிடத் தேவையில்லையெண்டு. அதாலதான் நான் அப்பிடிச் செய்தன். நல்லபிள்ளையெல்லே, என்ன விட்டிடு, நான் இப்பிடியே எங்ஙனயாச்சும் ஓடியிடுறன்’ எண்ண, ‘இனிமே சாரைப் பாம்பில்லை, நான், நாகப் பாம்பு’ எண்டிட்டு பாம்பு தவக்கைக் குஞ்சை அப்பிடியே விழுங்கியிட்டுது.

நல்ல கதைதான், அன்றைக்குக்கூட நன்றாகவேயிருப்பதாய் எண்ணி இதழ்களில் சிரித்தார் சிவயோகமலர். பிறகு சொன்னார்: ‘எல்லாத்திலயுமிருந்து ஒதுங்கி, ஒரு சாரைப் பாம்புமாதிரித்தான் நானுமிருந்தன். ஆனா என்னைச் சுத்தியிருந்த மனிசற்ர கொடுமை தாங்கேலாமப் போச்சு. நான் நாகமாய் மாறியிட்டன்.’ சாந்தரூபிணியின் மௌனத்தில் அவளை நிமிர்ந்து ஒருமுறை நோக்கிவைிட்டு, ‘என்ன, நம்பேலாமக் கிடக்கோ?’ என்றார்.

‘நம்புறதுக்கென்ன?’ என்று சிரித்தாள் அவள். ‘மற்றவைக்காண்டி எங்கட சுபாவத்த நாங்களேன் மாத்தவேணும்? அதைத்தான் யோசிச்சன்.’

‘இல்லாட்டி, வாற அவமானங்களையும் பழியளையும் தாங்கிற மன வலிமையோட இருக்கவேணும். அது எல்லாரிட்டயும் இருக்காதெல்லே?’

‘இதெல்லாம் வீட்டுக்காறரிட்டயிருந்தோ வெளியாக்களிட்டயிருந்தோ வந்திது?’

சிவயோகமலர் மௌனத்துள்ளிருந்து அந்த முகங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வகைப்படுத்த முயன்றார்.  அடுக்கு குழம்பியது. அவர்கள் ஒன்றுக்குள் வகைப்படுத்தப்பட முடியாதவர்கள்தான். நல்லவர்களாயும், தீயவர்களாயும், திட்டமிடுபவர்களாயும், எழுந்தமானத்தில் நடப்பவர்களாயும், உறவுக்குள் உள்ளவர்களாயும், வெளியாட்களாயும் அவர்கள்.

யாரிடமும், சிவத்தியிடம்கூட, சொல்லாத அவ்விரகசியங்களை சாந்தரூபிணியிடம் கண்கலங்கியபடி தன் வயதின் தடையை மீறிக்கொண்டும்  சிவயோகமலர் வெளிப்படுத்தினார்.

முடிக்கும்போதுமட்டும், ‘நான் கனதடவை நினைச்சுப்பாத்திட்டன், என்னிலயில்லை, அந்த வெள்ளி அரைமூடி சலங்கையிலதான் எல்லாற்ர கண்ணுமிருந்து, இந்தளவு அழிவுகளையும் எனக்குச் செய்திருக்கு.’

‘எனக்கு விளங்கேல்ல, அன்ரி. அரைமூடி சலங்கையோ… என்ன சொல்லுறியள்…’

சிவயோகமலர் விளக்கினாள், சிறுவயதுக் காலத்தின் காட்சிகள் கண்ணில் விரிந்தபடி.

பேபிப் பவுடர்ப் பேணியிலிருக்கிறமாதிரி சின்னவயதில் மொழுமொழுவென்றிருப்பார் அவர். தடுக்குப் பிள்ளையாயிருக்கும்போதே பவுணில் அரைமூடி சலங்கை அணிவித்துவிட்டார்கள் பெற்றோர். நடக்கத் துவங்கின பிறகு, திருட்டுப் பயத்தினால் அதை வெள்ளியில் செய்வித்துப் போட்டிருந்தனர்.

பவுணாயிருந்த காலத்தில்போலவே எல்லோர் கண்களும் வெள்ளியாயிருக்கும்போதும் தேடலில் அலைந்திருக்கிறது. அவள் நன்கு வளர்ந்தும், பெரியபிளள்ளையாகிய பின்னரும், கூட, அக் கண்கள் மானசிகமான அரசமிலை தேடி அலையவே செய்தன.

நடனத்தின் கண்களும் அதையே தேடி அலைந்திருக்கும். என்னவொன்று, கண்களை நேர்நேர் சந்திக்கும்போது அவன் வெட்கத்தோடு தலை திருப்பிக்கொள்வான்.

வசீகரன் தேடியதும் அதுவாகவேயிருக்க முடியும். அதுபோலவே மாணிக்கவாசகமும். இல்லாவிட்டால் மூவினத்தாரிடையே வந்து சரஸமாட அழைத்திருக்கமாட்டான்.

சிவயோகமலர் எல்லாம் விளக்கினார்.

அடக்க முனைந்தும் ஒரு துளி கண்ணிலிருந்து அடங்காமல் உதிர்ந்து உருண்டது.

வெளியே எல்லாம் நேராகத் தென்பட்டும், காணமுடியாதபடி மனம் கோணிய மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்களென சிவயோகமலரின் கண்ணீர்க் கதையில் உணர்ந்தாள் சாந்தரூபிணி. அவர் கடைசியாய்ச் சொன்னதும் உண்மையாக இருக்கலாம். எல்லோரும் அந்த வெள்ளி அரைமூடி சலங்கையை பார்வையால் வெட்டிப் பிளந்து உறுப்புக் காணும் உன்மத்தம் கொண்டவர்களாய் அலைந்திருக்கவும்கூடும். ஒருவேளை அவர்கள் பார்ப்பதாயில்லாமல், அவர்கள் பார்ப்பதாய் அவர் கற்பனைசெய்ததாகவும் அத் தருணங்கள் எடுக்கப்படலாம்.

ஆனாலும் அவர் பாவம்தான்!

மனதார ஒரு துளி கண்ணீர் அவருக்காக உகுக்கவேண்டும்போல் அவளுக்கு இருந்தது. அவருக்கிருந்த மாற்றீடுகளை அவள் எண்ணி அடங்கினாள். பெண்ணாய் அடங்கவேண்டியவராயிருந்தும் கல்வியாய், வசதிகளாய் பல பெண்களுக்கில்லாத வாய்ப்புகள் அவருக்கு இருந்தனவே!

அதனை சாந்தரூபிணி கேட்டாள்.

அவள் பட்ட அவதிகள் அவள் தேடிச் சென்றவைகளல்ல. பலரிடமிருந்தும் ஏற்பட்டவை. சுந்தரம் மறைமுகக் காரணியாய், வசீகரனும் மாணிக்கவாசகமும் நேரடிக் காரணிகளாய் அதில் சம்பந்தம். அதற்கான பதிலை அவள் யோசிக்கவேண்டும். சுருக்கமாயெனினும் ஆதியிலிருந்து.

நடனசுந்தரம் தற்காலிக ஆசிரியப் பணியிலும், பின்னால் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் இருந்த காலமது.

நினைவுகூரும் இப்பொழுதில், மரணத்தின் திறந்த வாசல்வரை சென்று திரும்பிய இக் கணத்தில் தெரிகிறது, அடிக்கடி பார்க்கின்ற சந்தர்ப்பங்களே சுந்தரத்தின்மீதாக ஒரு பிரியத்தினை விளைவித்துவிடவில்லையென. அது அநாதியானது; கோபங்களால் பொறாமைகளால் மூடுண்டது. ஆனாலும் இருப்பு உள்ளது.

தற்காலிக ஆசிரிய நியமனத்தில் இருக்கும்போதே ‘முது கண்ணன் வேய்ங்குழல்’ ஓவியத்தை, அதனால் விளையக்கூடிய நன்மை தின்மைகளை யோசியாது வரைந்து இந்து சமூகத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியவன் அவன். யாழ் ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்று பார்வையாளர் விமர்சகர் பலரையும் ஈர்த்த அவ்வோவியம்பற்றி ஒரு வாரம் அவளது கல்லூரியிலே ஆசிரியர்களும் உயர் வகுப்பு மாணவர்களும் அதன் நகையுணர்வையும், கலகத்தின் கனலையும் குறித்துப் பேசிக்கொண்டார்கள்.  இவற்றின் தாக்கம், உண்மையில், அவளிடத்தே விருப்பமாய்ச் சுரந்திருக்கவேண்டும். மாறாக அவளுக்கு எரிச்சலை, பொறாமையை அது கிளப்பியது. அவற்றையும் உண்மையான எரிச்சலாகவும் பொறாமையாகவும்கூட கொள்ளவேண்டியதில்லை.

வசீகரனின் காதல் கடிதம் அவளறையில் காணப்பட்டு, அதன் அதிர்வு மறைவதற்குள்ளேயே வீணை வாசிப்பு கற்க தஞ்சாவூருக்கு ஒரு பகல் அவகாசத்தில் அவள் புறப்படவேண்டி இருந்த நிலைமையில், அவளிடத்தே அது குறித்து சுபாவமாய்த் தோன்றியிருக்கக்கூடிய கோபத்திற்குப் பதிலாய் உள்ளார மகிழ்ச்சியே கிளர்ந்ததென்பது, அவனுக்கு நிகராய், தானொரு ஏதோவொரு கலையின் வித்தகியாய் விளங்கப்போகும் வாய்ப்புக் கருதித்தானே!

இலங்கை ஓவிய உலகில் தம் பெயர் பொறிக்கப் புறப்பட்டவர்களெல்லாம் ரவிவர்மாவின் தமயந்தியும் பொய்கையும் அன்னப்பட்சியும் வரைந்துகொண்டிருக்கையில், அண்ணன் இராமன்மீது வைத்த பாசத்தினால் கூடவே தன் கணவனான இலக்குவனும் வனவாசம் புறப்பட்டுப்போக, அரண்மனையில் பதினான்கு ஆண்டு காலம் தனிமையின் துயரனுபவித்த அவனது மனைவி ஊர்மிளையின் முழு சோக உணர்வும் தெறிக்க அவன் ஓவியம் வரைபவனாகயிருந்தான்.

மூன்று வருஷங்களில் அற்புதமான தஞ்சை வீணைக் கலைஞர் சபேஸய்யரிடம் வித்தை கற்று அவள் வந்தபோது, அவனை நேர்நேரே பார்வையில் எதிர்கொள்ளும் பலம் அவளுக்கு முதன்முறையாக வந்திருந்தது. அதை அவன், அவளது இயல்பான அகங்காரத்தின் திருந்திய வடிவமெனக் கொள்ளவைத்ததோ என்னவோ, அவளை முகங்கொள்வதிலிருந்து அவன் மெதுமெதுவாய் ஒதுங்கினான்.

தன்னியல்பில் ஒதுங்குபவளை ஒதுக்குகிறபோது விளைவு என்னவாகயிருக்கும்? மனப் பொருத்தம் தவிர மற்றுள எல்லாப் பொருத்தங்களும் இணங்கிநின்ற மாணிக்கவாசகத்துடனான திருமணத்திற்கு அது அவளைச் சம்மதிக்கவைக்கிறது. அவளால் அந்நிலைமையைத் தவிர்த்திருக்க முடியுமாவென்பது கேள்வியேயில்லை. தன் விருப்பம்போல் அவள் விழுந்தாள்.

கொழும்பிலிருக்கவேண்டிய காலங்களில் தந்தை வழி உறவினர் வீட்டிலே அவள் தங்கியிருந்தாலும், மாணிக்கவாசகம் அவளிடத்திற்கு வருவதோ, அவள் இரத்மலானயிலுள்ள அவன் வீட்டுக்குச் செல்வதோ அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருந்தது.

சனி ஞாயிறுகளில் பார்ட்டியென்ற பெயரில் நடந்த மூவினத்தோரின் புராசல்கள்பற்றி அவள் அறியவந்தபோது தனது அவசரப்பட்ட முடிவோவென கலங்கினாள். ஆனாலும் கறந்த பால் முலையேறுவதெங்ஙனம்? அதனால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காலையில் அவ்வாறான போக்குவரத்துக்களை உருவாக்கினாள்.

ஒருநாள் இரத்மலானை சென்றிருந்தபோது சற்றும் எதிர்பாராத சந்திப்பை அவள் எதிர்கொள்கிறாள். அங்கு நின்றிருந்த வசீகரனை தன் நெருங்கிய உறவுக்கார நண்பனென அறிமுகப்படுத்தினான் மாணிக்கவாசகம்.  ‘நீ முந்தி வசீகரனோட பழகினமாதிரியே, எங்களுக்குக் கலியாணம் நடக்கிறவரை பழகலாம்’ என ஒருமாதிரி சிரித்தபடி அவள் காதுள் சொன்னான்.

அதிலுள்ள விஷயம் வெளிப்படையானது. அது அவளை நொறுக்கியது. சிதற வைத்தது. ‘முந்தி வசீகரனோட என்னமாதிரிப் பழகினன்?’ என அதட்டினாள்.

‘எனக்கு நடிச்சுக் காட்டாத, வசீகரன் எல்லாம் எனக்குச் சொல்லியிட்டான்’ என கர்ஜித்தான் அவன். ‘நாகரீகமாய், படிச்சவமாதிரி பழகிறதுன்னா சரி, இல்லேன்னா கலியாணம் இல்லை.’

என்னவோ செய்யென்றாள் அவள்.

கல்யாணம் நின்றுபோயிற்று.

வித்துவான் வீரகத்தியும்  கல்யாண வயதில் ஆண்பிள்ளைகளையுள்ள சில உறவினர் வீடுகளை அணுகத்தான் செய்தார். தங்கை மகன் மயில்வாகனத்தைக்கூட கேட்டுப்பார்த்தார். சாதகப் பொருத்தமில்லையென பதில்சொல்லினார்கள்.

கடைசியில், எப்படியோ, எதிர்பார்த்தேயிராத நடனசுந்தரத்துடன் அவளுக்கு கல்யாணமாயிற்று. அவன் விரும்பினனென அவளும், அவள் விரும்பினாளென அவனும் எண்ணிக்கொண்டாலும் நிஜத்தில் அந்த விருப்பமானது இருவரிடத்திலுமே இல்லாமலேதான் அவர்களது வாழ்க்கை துவங்கியது.

எப்போது அந்த உண்மை வெளிப்படுகிறதோ அக் கணத்தில் அவர்களது உறவும் தெறிக்கும். ஆனால் அதை உறுதிப்படுத்த இருவருமே விரும்பாதும் முயலாதும் விட்டதற்கு வித்துவான் வீரகத்தியும், சுந்தரத்தின் அம்மா செல்லம்மாவும் காரணமாகிப் போனார்கள்.

சுருக்கமாக அவ்வளவுதான் அவர்களது கதை.

வீணையை சுந்தரம் உடைத்ததுபற்றியும், அவரது ஓவியங்களை அவள் கிழித்தெறிந்ததுபற்றியும் சாந்தரூபிணி கேட்டபோது, ஆத்திரகாறனுக்கு புத்தி மட்டு என்றுமட்டும் சொல்லி சிவயோகமலர் முடித்துக்கொண்டார். பிறகு வெகுநேரத்தின் பின் மெதுவாகவும் தெளிவாகவும் ஓவியங்களைக் கிழித்ததுக்காய் அத்தனை வருஷ காலத்தில் ஒரு துளிப் பொழுதுகூட தான் வருந்தியதில்லையென்றார். தன் செயலுக்காய் சுந்தரமும் வருந்தியிருக்காதென்றே தான் நம்புவதாகவும் சொன்னார்.

சுந்தரமய்யாவே அதைச் சொல்லும்வரை  அவளது சரியான பதிலாகாதென்றாள் சாந்தரூபிணி. ஒருமுறை நிமிர்ந்து பார்த்த சிவயோகமலர் மறுபடி குனிந்துகொண்டார்.

இருவருமே கலைஞர்கள். ஒருவர் ஓவியத்தில் திறமையானவர்;  மற்றவர் வீணை வாசிப்பதில்.  வீணை உடைபட்டதோடு அவளும், ஓவியங்கள் கிழிபட்டதோடு அவரும் தத்தம் திறமைகளை அந்தந்தப்படியே ஏன் விட்டிருந்தார்களென ஒரு கேள்வியைக் கேட்டாள் சாந்தரூபிணி. அவர்களால் அது எங்ஙனம் முடிந்ததென்றாள்.

சுந்தரம் அதற்கு முந்தியே நரம்புத் தளர்ச்சி நோய் வந்ததிலிருந்து வரைதலை விட்டுவிட்டாரென்று அவசரமாய்ச் சொன்னார் சிவயோகமலர். அது பரம்பரையாக வந்ததா அல்லது வேறு காரணங்களில் வந்ததாவென சாந்தரூபிணி கேட்டதற்கு, அவருக்கு அப்போது நிறைய குடிக்கிற பழக்கமிருந்ததாய்ச் சொன்னார். குடியை நிறுத்தி தொடர்ந்து மருந்தெடுக்க அந்த நோய் அப்பவே குணமடைந்துவிட்டதைச் சொல்லவும் அவர் தவிரவில்லை.

அவரது கலங்கிய கண்களில் ஒரு புதியவிகாசம். கடந்த காலத்தின் தவறுகள்மட்டுமல்ல, தவறியவைகளும் இதயத்தை ஒரு தருணத்தில் உடைத்துவிடக்கூடியவை.

காலம் எல்லா வலிகளையும் ஆற்றுகிறது. காலம்மட்டுமே ஆற்றுகிறது.

சிவயோகமலர் எண்ணியபடியிருக்க வானத்தின் கீழ் மூலை மெல்ல வெளுத்துவந்தது. காலைகளின் தன்மை எந்த நாட்டிலும் ஒன்றாகவே இருப்பதாகத் கோன்றியது. நிசப்தத்திலிருந்து சத்தம் வௌிப்படும் புள்ளியாக இருக்கிறது ஓர் அதிகாலை.  இரவுக்கும் பகலுக்குமான எல்லைக் கோட்டில் பிறக்கும் ஒரு குளிர்மை இருக்கிறதே அது அபூர்வமானது.

ஏதோ வெளிச் சத்தத்தில் கண் விழித்தாள் சாந்தரூபிணி. நேரத்தைப் பார்த்தாள். ‘டொக்ரர் வாற நேரமாகுது, இண்டைக்கு டிஸ்சார்ஜ் பண்ணுறதெண்டு நேற்றுச் சொன்னவர்,அன்ரி. வோஷ் றூம் போட்டு வருவம், மெல்ல எழும்புங்கோ’ என்றாள்.

 

 (தொடரும்)

தாய்வீடு ஜுன் 2023


 

 

 


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்