Sunday, June 22, 2008

இயல் விருது

இயல் விருது1.

எந்தப் பரிசின் பின்னணியிலும் ஒரு அதிகார நுண்ணரசியல் உள்ளூர ஓடியிருக்கும் என்பது சரியான வார்த்தைதான். மிகப்பெரும் இலக்கியப் பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கலின் பின்னணியிலும், அதன் தெள்ளத் தெளிவான நுண்ணரசியலின் வெளிப்பாட்டை ஒருவரால் உணர முடியும். பல்வேறு தருணங்களிலும் கம்யூனிச நாடுகளாயின் அவ்வரசியல் கட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் நாடுகளாயின் இஸ்லாத்தின் இறுகிய சமூக அரசியல் தீவிரப் போக்குகளை மறுதலித்தும் எழுந்த இலக்கிய மயப்படுத்தப்பட்ட எழுத்துக்களே பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இவ் அமைப்பின் 1901ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்துவரும் நூற்றாண்டுக் கால வரலாறு தெரிவித்து நிற்கின்றது.

புலிச்சர் (Pulitzer ), புக்கர், க்ரொஸ் வேர்ட் என்பவை மட்டுமல்லாது, கனடாவின் அதிகூடிய பரிசுத் தொகையை (ஒரு லட்சம் கனடா டொலர், தேர்வு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை) பிரெஞ்சுமொழியில் படைக்கும் எழுத்தாளருக்கு அவரின் வாழ்நாள் சாதனையை முன்வைத்து வழங்கும் கில்-கொர்பெய்(Gilles- Corbei) விருது, இருபத்தையாயிரம் டொலர்களை ஆண்டுதோறும் அவ்வாண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய ஆக்கத்துக்காக வழங்கும். கில்லர் அமைப்பின் பரிசளிப்புகள்கூட இந்த நுண்ணரசியலின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டதாகச் சொல்லமுடியாதேயுள்ளது.

இலங்கை சாகித்திய மண்டல அமைப்பானாலும் சரி, இந்திய சாகித்திய நிறுவனமானாலும் சரி, வேண்டப்பட்டவர்களுக்கான அரசியல்வாதிகளின் பரிந்துரைப்பிலேயே பல காலமும் பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருப்பதை நாம் நிதர்சனத்தில் கண்டிருக்கிறோம். எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், சு.வில்வரத்தினம் போன்ற சிறந்த படைப்பாளிகள் இலங்கையில் பரிசு பெறாது போனதற்கும், அதுபோல் இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளியான சுந்தர ராமசாமி போன்ற பலர் தாம் வாழும்காலத்திலேயே பரிசுபெறாது போனதற்கும் வேறு காரணங்களை நாம் கண்டுவிடமுடியாது. ஐந்து முறை மகாத்மா காந்தியின் பெயர் சமாதான விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தும் அவரது பெயர் தெரிவாகாமலே போனமை, நோபல் பரிசுத் தேர்வாளர்களின் மேற்கத்தியச் சிந்தனைக் குறைபாடு காரணமான பெரும் அவமானமாய் இன்றும் அதன்மேல் படிந்தேயிருக்கிறது. தமிழ்நாட்டில் ராஜராஜன் பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசுகளிலும் இந்தப் பின்னணியின் குறைந்த நிலைச் செயற்பாடுகள் இருக்கவே செய்கின்றன.

ஒரு படைப்பு எந்தச் சமூகத்துக்குத் தரப்படுகிறதோ அந்தச் சமூகத்திலிருந்து அந்தப் படைப்பிற்கான அங்கீகாரத்தை ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பது இயல்பானது. படைப்பு எந்தச் சமூகத்தில் முகிழ்க்கிறதோ, அந்தச் சமூகம் பரிசு கொடுக்கும் தகுதியோடும் இருக்கவேண்டும். பரிசின் பின்னால் நுண்ணரசியல் இயங்குகிறது என்பது பரிசே தேவையில்லையென்பதாக ஆகிவிடக்கூடாது. பரிசு ஒரு சிறந்த படைப்புக்கான கவுரவம்.

2.

கனடா இலக்கியத் தோட்டம் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒரு நிறைவை நோக்கிய பாதையில் தன்னைச் செலுத்தி வந்திருக்கிறது என்பது ஓரளவேனும் அந்த அமைப்பின் இயங்குமுறையைத் தெரிந்திருப்பவர்களுக்கு புரியப்கூடிய சங்கதி. இதையே விருதுபெற்றோரின் பட்டியலும் சுட்டிநிற்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கியப் பரிசுகளையும், மற்றும் தமிழ்க் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த பரிசினையும் இலக்கியத் தோட்டம் அறிவித்து வரினும், அதன் முதன்மையான பணி இயல் விருது வழங்கலாகவே எனக்குப் படுகிறது. அது தமிழ்மொழி சார்ந்த ஒருவரின் வாழ்நாள் சாதனைக்கானது. இயல்விருது என்ற பதச்சேர்க்கையே ஒரு ஸ்தூலக் கனதியடைந்து தன் உன்னதத்தின் அவாவுகையை வெளிப்படுத்தி நிற்பதும் கவனிக்கப்படவேண்டும்.

2001 ஆம் ஆண்டில் அமைப்பாகிச் செயற்பட ஆரம்பித்த இலக்கியத் தோட்டம், தன் முதல் இயல் விருதை திரு. சுந்தர ராமசாமிக்கு அறிவிக்கிறது. பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமியின் படைப்பிலக்கிய ஆற்றல் சந்தேகத்துக்கு இடமற்றது. அவரது சிறுகதைகளையும், பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளையும் நீக்கிவைத்துப் பார்த்தால், அவரது நாவல்கள் ஒரு காலகட்டத்தின் சிறந்த படைப்பாளியாக அவரை நிறுத்திவைக்கப் போதுமானவை. ஜே.ஜே. சில குறிப்புக்கள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், ஒரு புளியமரத்தின் கதை ஆகிய மூன்றும் இந்த வரிசைத் தரத்திலேயே தமிழின் சிறந்த படைப்புக்கள்தான். அவரது கட்டுரைகளும் நாவல்கள் அளவுக்கு முக்கியமானவை. காற்றில் கலந்த பேரோசையிலுள்ள கட்டுரைகள், கட்டுரைத்தனத்தை மீறி கலைத்துவம் மிக்க படைப்புக்களாகவே இருக்கும். இந்த வகையில் இயல்விருதுக்கான இலக்கியத் தோட்டத்தின் தேர்வு மிகச் சரியானதாகவே இருந்தது.

அடுத்த இயல்விருது பெற்றவர் இலங்கையைச் சேர்ந்த திரு. கே.கணேஷ். திரு.கே.கணேஷ்  பிரச்சினைக்குரிய மனிதரல்ல என்றபடியாலும், அவர் மலையகத்தைச் சேர்ந்தவரானபடியாலும் ஒரு இடஒதுக்கீட்டில்போல அவருக்கான பரிசு கேள்விகளைக் கிளர்த்தவில்லை. இதையடுத்து பரிசு பெறுகிறவர் வெங்கட் சாமிநாதன். தமிழகத்திலிருந்து தெரிவாகும் அடுத்தவரும் பிராமணர் என்றமாதிரியான ஒரு சலசலப்பு வெ.சா. விஷயத்தில் எழுந்தது. அதுவல்லாமல் அவருக்கான பரிசை அப்போது கேள்விப் படுத்தியவர்களில் முக்கியமான ஒருவர் கலாநிதி எம்.ஏ. நுஃமான். படைப்பிலக்கியத்துறை சாராதவராயினும், அவரது கடும் விமர்சனம் புதுக்கவிதையின் வளர்ச்சிக் காலத்தில் முக்கியமாகவே கருதப்பட்டது. அக்கிரகாரத்தில் கழுதைபோன்ற அற்புதமான திரைப்படப் பிரதியாக்ககாரரும் அவர்தான். இந்தவகையிலும் அந்தப் பரிசு தகுதியானவருக்கே போய்ச் சேர்ந்தது என எடுக்கலாம்.

அடுத்து திரு.இ.பத்மநாபஐயர். ஐயர் என்று பெயரிலேயே அடையாளம் வைத்துக்கொண்டுள்ளது தவிர இவர் என்ன செய்தார் பரிசுக்கு? என்று அப்போதும் பரவலான கேள்விகள் பிறந்தன. இதற்கெதிரான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. மற்றது சிற்றிதழ் வெளிப்படையாகவே தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.
ஆனால் பத்மநாபஐயர் இலங்கை, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தமிழ் இலக்கியம் குறித்துச் செய்த சேவை ஒப்புமிக்கு இல்லாதது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அவர் ஒருவகையில் தமிழ்க் கொண்டோடியாகவே இருந்தார்.

அடுத்து ஜோர்ஜ் எல். ஹார்ட். ஏறக்குறைய சங்கத் தமிழை ஆங்கில மாணவர்களுக்கும், ஆங்கிலத்தில் பயிலும் மாணவர்களுக்கும், ஆங்கில இலக்கியவாதிகளுக்கும் முன்னால் எடுத்துவைத்த பெரும்பணியினைச் செய்தவர் திரு.ஹார்ட். இது ஏறக்குறைய ‘மால்குடி’ திரு. ராமானுஜத்தின் பணிக்கிணையானது.

ஈழ அரங்காடலில் தனித்துவமும் புதுமையும் புகுத்திய திரு.தாசீஸியஸுக்கு அடுத்த இயல்விருது வழங்கப்பட்டது. இப்போது 2007ஆம் ஆண்டுக்கான இயல் விருது திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமுக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பின் மூலம் தமிழின் நவீன இலக்கியத்தை அவர் ஆங்கில இலக்கிய உலகத்துக்கு அளித்திருப்பதின் வாழ்நாள் சாதனைக்காக இத் தேர்வு நடந்ததாய் அறிவிப்புத் தெரிவிக்கிறது.

3.

ஆங்கிலத்தில் புதுமைப்பித்தனையும், மௌனியையும், சுந்தர ராமசாமியையும், அம்பையையும், அசோகமித்திரனையும், பாமாவையும் இன்று தமிழ் அறியாத உலகம் அவரது மொழிபெயர்ப்புக்களின் ஊடாகவே அறிந்துகொள்கிறது என்பது முக்கியமானது. தமிழ்ச் சிறுகதையின் மகாஉச்சம் தொட்டவன் புதுமைப்பித்தன். தமிழில் பெண்ணிய எழுத்தின் வகைமாதிரிக்கு முன்னெடுக்கக்கூடியது அம்பையின் எழுத்து. தலித்திய இலக்கியத்தில் பேசப்படும் படைப்பு பாமாவினது. நவீன தமிழின் பல்வகை இலக்கியங்களின் வகைமாதிரியை திருமதி. லட்சுமியின் மொழியாக்கத்தின் மூலம் ஒருவர் அடையமுடியும்.

தமிழும் செம்மொழியாகிவிட்டது. அதன் இலக்கியவளத்தை பிறமொழி பேசுவோர் எவ்விதம் கண்டுகொள்வது? உலகின் மூத்த மொழிகளில் ஒன்றானதும், செவ்வியல் இலக்கியங்கள் நிறைந்ததுமான தமிழ் மொழியை அவர்கள் எவ்வாறு தெரிந்துகொள்வது? சீகன் பால்குஐயர் போலவும், வின்ஸ்லோ போலவும், போப்ஐயர் போலவும் தமிழ் மக்கள் மத்தியில் வந்திருந்து தமிழ்மொழியைக் கற்று அறிந்துகொள்ளச் சொல்லலாமா? மொழிபெயர்ப்புக்கள் காலத்தின் அவசியம். நம் மெய்யான அக்கறைகள் இங்கிருந்தே தொடங்கப்படவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.

மெய்யான தமிழ்ப் புலமையை வெளிநாட்டார் வணக்கஞ் செய்யச் செய்வதற்கான வழியும் இதுவாகவே இருக்கிறது. மட்டுமில்லை. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய வழித்தோன்றல்கள் தம் மொழி இலக்கியத்தை ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாகவேதான் அறிந்துகொள்ளப் போகிறார்கள். திரு.ஜோர்ஜ் எல்.ஹார்ட்டும், திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமும் இலக்கியத் தோட்டத்தினரின் மிகச் சிறந்த தேர்வுகள் என்பதில் எனக்கு உடன்பாடு.

ஜெயமோகன் பதிவுகள்.கொம் கட்டுரையில் தெரிவித்ததுபோல் திருமதி. லட்சுமி ஹோல்ம்ஸ்ரோமைவிட இத்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அமைப்பாளர்களுக்குச் செய்யப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு தேர்வு நடந்திருக்கிற பட்சத்தில் அமைப்பினரையும் குறைசொல்ல முடியாதேயிருக்கிறது. அமைப்பினரில் சிலரோடு உரையாட நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் நான் இதுபற்றி விசாரித்தபொழுது, அவர்களில் ஒருவர் இதுவரை காலத்தில் தகுதியான ஒருவரை நான் பரிந்துரை செய்திருக்கிறேனா? என்று கேட்டார்.

பங்காளியாக இருக்க முடியாதபொழுதில், அம்மாதிரியான பார்வையாள தளத்தில் நின்றான குற்றஞ் சுமத்தல்கள் மட்டும் சரியான அணுகுமுறையாக இருக்குமென எனக்குத் தோன்றவில்லை. சர்வதேசம் அளாவி இடம்பெறும் ஒரு விருது வழங்கலில் பல்வேறு குறைகள் இருக்க வாய்ப்புள்ளது. அக் குறைகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றை அவர்கள் கூடிய அக்கறையெடுத்து நிவர்த்திசெய்ய முயலவேண்டும்.

இயல்விருதுக்கான தேர்வுகளின் நியாயங்கள் விருது வழங்கலின்பொழுதோ அல்லது முன்னதாகவோ அறிவிக்கப்படுகிறதுதான். ஆனால் கடந்த இரண்டு தடவைகளிலும் இடம்பெற்ற படைப்பிலக்கியப் பரிசுகள் அளிக்கப்பட்டமைக்கான தராதர விளக்கங்கள் தெரிவிக்கப்படவேயில்லை.

எந்தச் சமூகத்தில் ஒரு நிறுவனம் இயங்குகிறதோ, அந்தச் சமூகத்துக்கு அது வெளிப்படையாக இருக்கவேண்டுமென்பதின் அகல்விரிவான விளக்கம் இதுதான். இனிவரும் காலங்களில் போட்டிக்கு எடுக்கப்பட்ட நூல்கள், தகுதியானவற்றின் தேர்வுத் தொகை, தேர்வுக்குப் பொறுக்கப்பட்டவை, பரிசீலனையில் நின்ற இறுதி நூல்களின் விபரம், தேர்வின் காரணம் என யாவற்றையும் அந்தச் சமூகத்தின் முன்னால் விரித்துவைக்கும் கடமையை இலக்கியத் தோட்டம் மறவாதிருக்கவேண்டும.;

ஓர் இலக்கியவாதியாக இம் முன்மொழிதலை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

00000

பதிவுகள்.காம், 2007

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...