சம்பூர்ண நிராகரணம்: 2

விசாரணை 2.



இறுதிப் பகுதி


இந்தக் காலம்வரையும் இலங்கைப் பத்திரிகைகளில் இந்திய எழுத்தாளர்களே எழுதினார்கள். அதுவும் மோசமான எழுத்துக்கு உதாரணமாய்ச் சொல்லப்படக் கூடியவர்கள் எழுதினார்கள். நமது எழுத்தாளர்கள் கூட கல்கி, குமுதம் வகை எழுத்துக்களையே எழுதிவிட்டு பெருமையும் அடைந்து கொண்டார்கள். 1956 வந்ததும் ஏற்பட்ட மாற்றத்தால் ஒரு புதிய வட்டம் எழுத்துத் துறைக்குட் பிரவேசித்தது. அவர்களாலும்தான் இலக்கியரீதியான அடையாளத்தை தாபிக்க முடியவில்லை. காரணம் வெளிப்படையானது. 'கார், பங்களா, உத்தியோகம்' என்று துரைத்தனக் கனவுகளோடு வெளிவந்த பேர்வழிகள்தான் இவர்கள் ('ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு.த்.பக்.33). இந்த அவர்களோடு அ.முத்துலிங்கத்தையும் உள்ளடக்குவார் மு.த.

(7) இந்த பொருளாதார , அரசியல் மாற்றங்களின் அடியாக முகிழ்ந்தெடுத்ததுதான் முற்போக்கு இலக்கிய இயக்கம். அதுதான் மண்வாசனை பற்றி பேசியது. அதுதான் தேசிய இலக்கியத்தைப் பேசியது. இது கண்டு யாழ்ப்பாணத்து சைவ வேளாளர் இலக்கிய உலகம் கொதித்தெழுந்தது. மக்களின் பேச்சு மொழியைக் கையாண்டு அவர்களின் வாழ் நிலைமைகளைப் பற்றிப் பேசிய படைப்புகளை இழிசனர் இலக்கியமென்று இகழ்ந்தது. இந்தப் பிற்போக்குப் புலத்தின் பலத்தை உடைக்க தயவு தாட்சண்யமற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாயிற்று.

(8) மார்கஸிய விமர்சகளுடைய பணி அப்போதுதான் ஈழத்தமிழ்த் தேசிய இலக்கியத்துக்குக் கிடைக்கிறது. பேராசிரிய எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பழந்தமிழிலக்கியங்களின் காலக் கணிப்பு, உணர்வுனிலை ஆய்வாளர் படிப்பாளிகளிடத்திலேற்படுத்திய அத்தனை பாதிப்பு கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் ஏ.ஜே.கனகரட்னா ஆகியோரின் கூட்டு தினகரனில் கைலாசபதியின் பிரவேசம் ஆதியாம் காரணங்களினால் தொடர்ந்தது. ஈழத் தமிழ் இலக்கியத்தின் செல்னெறி கண்டடையப் பட்டாயிற்று. ஈழத் தமிழிலக்கியம் தன் தொப்புள்க் கொடித் தொடர்பை முடிவாக அறுத்துக் கொண்டு தனிப்பிறவியாயிற்று. அதைச் சவலைப் பிள்ளையாகிவிடாமல் வலுவூட்டி வளர்த்தவர்கள் மார்க்ஸிய விமர்சகர்களே என்ற மகா உண்மையை எவர் மறந்தாலும் நாம் மறந்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை மார்க்ஸிய விமர்சகர்களின் பங்களிப்பு இதுதான். இவ்வளவுதான்.இதற்கு மேலே-கீழே இல்லை.

பகுதி 3

(9) மார்க்ஸியர்களின் இலக்கிய விமர்சனம் சரியான ஈழ இலக்கியத்தைத் தெரிந்து தமிழ்ப் பரப்புக்கு அறிமுகமாக்கிற்று. எனக்கும் சந்தேகம்தான். இன்மையை ஒரு காரணமாகச் சொல்லலாம். ராஜம் ஐயர் அளவு எழுதியவர்கள்கூட தோன்றவில்லை இக்காலகட்டம் வரையிலும் என்பார் மு.தளையசிங்கம். இந்த நிலையில் தேசிய இலக்கியத்தின் அடையாளமாய் அல்லது மண்வாசனை இலக்கியத்தின் எடுத்துக் காட்டாய் எதைச் சொல்வது? தேசிய நீரோட்டத்தை அதிகரிப்பித்தல் என்ற தளத்தில் சிலரின் சில எழுத்துக்கள் முன்னிலைப் படுத்தப் படுதல் இக்கட்டத்தில் நிகழ்வது தவிர்க்க முடியாதது. முகத்துக்காகச் சில தேர்வுகள் நடந்துள்ளதையும் மறுக்க முடியாது. ஆனால் இதுதான், இழிசனர் இலக்கியமென்ற வாய்ப்பாட்டைச் சுக்கு நூறாய்க் கிழித்தெறிந்தது. ஆனாலும் உண்மையை நாம் மறைக்க வேண்டியதில்லை. சிவத்தம்பி அவர்களால் இது குறித்து ஒப்புமூலம் ஒரு நேர்காணலில் சில காலத்துக்கு முன் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஒருவேளை கைலாசபதி ஜீவியவந்தராய் இருந்திருப்பின் அவருமே இன்று இதை கொண்டிருக்கக் கூடும். அத்தகைய நிகழ்வுண்மைகளை வைத்துக் கொண்டுதான் தமது படைப்புக்கள் கண்டு கொள்ளப் படாமல் ஒதுக்கப் பட்டன என்ற கூச்சல் சிலரால் எழுப்பட்டது. தகுதியில்லாதவர்கள் உயர்த்தப் பட்ட நேரத்தில் தகுதியானவர்கள் அவர்களைவிடவும் தாழ நின்றார்கள் என்பது சரிதான்.
ஆனால் எதோ தம்மையும் தாழ்த்தியே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, அதுவும் சமூக நிலை காரணமாக என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவர்கள் தாம் இருட்டடிப்புச் செய்யப் பட்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவர்கள், அவர்களது தகுதி அளவுக்கு விமர்சனங்கள் செய்யப் பட்டும், ஈழத் தமிழ் வரலாறுகளில் குறிக்கப் பட்டும் இருக்கிறார்கள். அவர்கல் தரமும அதுதான். அதற்கு மேலே - கீழே இல்லை.

(10) ஈழ இலக்கியத்தை உலக இலக்கிய தரத்துக்கு உயர்த்தும் ஒரு மகா படைப்பாளிக்கென்று எம் இலக்கிய மேடையிலே ஒரு விலைமதிப்பற்ற முடி இருக்கிறதுதான். அதைக் குறிவைத்துக்கொண்டு 'அது எனக்குத்தான்' என்றும், 'அதை எனக்குத் தரவில்லை' என்றும் போடும் சன்னதங்களை நாம் பொருள் செய்ய வேண்டியதில்லை. முன்னே பின்னே எழுதியிருந்தாலும் ஐம்பதுகளின் கடைசியிலும் அறுபதுகளிலும் தான் ஸ்தாபனமாகிறார்கள் மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா, கே.டானியல், நீர்வை பொன்னையன் போன்றோர். மு.த. அற்புதமான படைப்பாளி. ஆழமான சிந்தனாவாதி. அம்பது ஆண்டுகளுக்குப் பின் வரக்கூடிய ஈழத்து இலக்கியச் செல்னெறியை அன்றே கோடி காட்டியவர். அவரது இள வயது மரணம் ஈழத் தமிழுக்கு, ஏன் மொத்த தமிழுலகுக்குமே பேரிழப்பு எனலாம். மெய்யுள், மரபில் காலுன்றி உயர்ந்து உயர்ந்து உச்சத்தில் வடிவங்களையே விழுங்கி விட்டு நின்று நவீனத்துவம் பேசுவது. மெய்மை சார்ந்தது. ஆன்மீகம், சமூகம், அரசியலெல்லாம் இணைந்து வரும் ஓர் அற்புத சிந்தனைப் பிறவி மெய்யுள். அதன் ஆன்மீக வியாதியே அதன் எமன். ஆன்மீகமென்பது தன்னுணர்ச்சி சார்ந்த ஒரு அகவயம் மட்டுமே. அது எழுதப்படலாம். ஆனால் வாதுக்கும், அமைப்புக்கும் அப்பாற்பட்டது. மெய்யுள் நெறி, மு.த.வின் பின்னால் ஒரு மார்க்கமாகப் படர்ந்ததாய்ச் சொல்ல முடியாது.
எஸ்.பொன்னுத்துரையைப் பொறுத்த வரை அவரது வீச்சான படைப்புக் காலகட்டத்தில் ஈழத் தமிழிலக்கியத்தை ஒரு இஞ்சியாவது உயர்த்திய சில சிறுகதைகளின் படைப்பாளி மட்டுமே. அதற்கும் மேலே-கீழே அவரும் இல்லை. நற்போக்கு இலக்கியம் ஒரு இலக்கிய விதண்டாவாதம். தம் காலத்தில், தம் சமூகம் சார்ந்த பிரச்னை குறித்து ஒரு இம்மியளவும் கூட இவர்கள் எழுதவில்லையென்பது எத்தனை பெரிய புதுமை. தம் சமூக நிலப்பாட்டில் நின்று நீர்வை பொன்னையனும், டொமினி ஜீவாவும், டானியலும் எழுதினார்கள். இன்று தலித் இலக்கிய முன்னோடி நாவல்களாக டானியலில் எழுத்துக்கள் கணிக்கப் படுகின்றன. சிறந்தபடி சமூக ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்தியவையாக நீர்வை பொன்னையனின் சிறுகதைகள் எடுக்கப் படுகின்றன. இவர்கள் முற்போக்கு அணிக்குள் இருந்து வளர்ந்தவர்கள். தம் சமூகத்துக்கும் ஈழத் தமிழிலக்கியத்தை உரிமையாக்கி வைத்தவர்கள். இவர்கள் கைலாசபதி மரபினைச் சார்ந்தவர்களில்லை. அப்படி ஒரு மரபும் வேதசகாயகுமார் சொல்வது போல் இல்லை. மரபுகள், அபூர்வமான சமூக நிலைமைகளில் தவிர தனி மனிதர்களால் ஆவதில்லை. அது சமூகத்தால் கட்டப் படுவது. அதுபோல் தளையசிங்கம் மரபென்றும் இல்லை. தன் படைப்புத் திறனால் தமிழிலக்கிய உலகில் நிமிர்ந்து நின்றார் என்பதுதான் தளையசிங்கம் குறித்த நிஜம். இதுக்கு மேலே போய் என்ன சொல்ல? பொன்னுத்துரை தன் தளத்தில் தலித் இலக்கியம் படைத்திருக்க முடியும். ஆனால் அவரோ ஒரு மாய்மாலத்துட் போய் சொற்காமத்தில் விழுந்து கிடந்தார். ஈழத் தமிழிலக்கியத்தின் அடையாளமாக அதீத பாவனைச் சொற்பிரயோகம் இருக்கவே முடியாது. ஆனாலும் இவையெல்லாமே படைப்புக் கதி குறித்த விஷயங்களில்லை என்பதை மானசீகமாக இங்கே முதலில் ஒப்புக் கொள்கிறேன். இவையெல்லாம் ஒரு கேள்வி மட்டும்தான். வெறும் பேச்சு என்று உண்டா எங்கேயும்? அது கூட ஒரு அர்த்தம் குறித்ததுதான். இலக்கியம் உடலும் உயிரும் சார்ந்த கூறு. ஒரு தலைமுறை இளையவனான நானும் சில நண்பர்களும் இந்த மாய்மாலத்துள் சிலகாலம் கட்டுண்டு கிடந்தோம். சொற்காமம். ஒரு காலத்துக்கு மேல் அந்த மாயத்திலிருந்து நாம் விடுபட்டோம்.

(12) 'டானியல் கதைகள்' என்கிற கே.டானியலின் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும், 'மேடும் பள்ளமும்' என்கிற நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும் பல உன்னதமான ஈழத்துச் சிறுகதைகளை ஒருவரால் தேரமுடியும். நாவலாசிரியராவதன் முன் டானியல் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. சிறுகதைகளே இலக்கியப் போக்குகளின் சிறந்த வெளிப்பாட்டு வடிவமென்று சொல்லப் படுகிற படிக்கு அவை தரமும், பதிவு, விகாஸமும் கொண்டவை. இவர்களை விடவும் அ.செ.முருகானந்தம், தெணியான்,ரகுநாதன்,வ.அ.இராசரத்தினம் என்ற பரந்துபட்ட எழுத்தாளர்களிடமிருந்து ஒரு பெரும் தொகையைச் சிறந்த சிறுகதைகளாக எடுக்க இடமிருக்கிறது. ஆனாலும் இது நிராகணமானவர்கள் குறித்த விவகாரம். அதனால் அவை இப்போது கரிசனமில்லை.

(13) ஒரு தசாப்த காலத்துக்குச் சற்று மேலாக முற்போக்கு இலக்கியக் கொள்கைகள் ஈழத் தமிழிலக்கியத்தின் முதுகெழும்ப்பாய் இருந்தன என்பது குறைந்த கணிப்பீடு இல்லை. அவற்றுக்கு ஆதாரமாய் இருந்தன மார்க்ஸியப் பார்வையுள்ள எழுத்தாளரின் படைப்புக்கள். இவை, மார்க்ஸியத்தை சமூக அரசியல் இலக்கியச் சிந்தனைக்கான சித்தாந்தமாய் ஏற்றுக் கொண்டவர்களின் படைப்புக் கதி மிகுந்த கணங்களில் பிரசவமானவை என்பதே சரி. அவற்றுக்கு மார்க்ஸிய எழுத்துக்கள் என்று பட்டயம் எழுதித் தொங்கவிடுவதும், பொது இலக்கிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்குவதும் இலக்கியத்துக்கு செய்யும் அநீதிகள். அபத்தங்கள்.

(14) நிலமற்றவரென்று பெரும்பாலும் எந்தக் குடும்பமும் இலங்கையில் இல்லையென்பது இந்தியத் தமிழனுக்குத் தெரியுமா? 'குண்டிக் குத்த' ஒரு முழம் மண் அங்கே எல்லோருக்கும் இருக்கிறது. ஆனாலும் அவற்றின் வகை தொகை வேறு வேறுதான். அங்குள்ள தண்ணீர்ப் பஞ்சத்தை அற்புதமாய் விளக்குகிற கதைதான் நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான ''மேடும் பள்ளமும்' கதை. அடையமுடியாத ஆழத்தில் நீருற்றுக்கள் உள்ள மேட்டு நிலங்களில் தாழ்த்தப்பட்டோரின் காணிகள். கிணறு வெட்டி நீரைக் காணலாமென்பது அங்கே கனவு. ஆயினும் அந்தக் கனவுதான் அங்கே வாழ்க்கை. கனவுக்கு நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை அபார முயற்சியைப் பிறப்பிக்கும். அப்படி நீரூற்றுக் காணமுயலும் மலையும் பிளக்கும் ஒரு தாழ்த்தப் பட்ட குடும்பம் தன் நம்பிக்கை சரிவதை அக்கதை எடுத்துக் காட்டும். உணர்வால் மட்டுமன்றி, உருவ நேர்த்தியாலும் சிறந்து நிற்கிற கதை இது. இது போல் டானியல் கதைகளிலும் சில உண்டு. டொமினிக் ஜீவாவிடமும் சில நல்ல கதைகளை நாம் எடுக்க முடியும். இவர்கள் ஓர் அலையின் பிரதிநிதிகள். அந்த அலையைக் கடந்துதான் அடுத்த கட்டத்துள் ஈழ இலக்கியம் பிரவேசித்தது. அந்தக் காலகட்டம் அடுத்த காலகட்டத்தின் உரம். அவர்களை ஒட்டு மொத்தமாய் வரட்சியாய் எழுதிய எழுத்தாளர்கள் என்ரு சம்பூர்ண நிராகரணம் பண்ண வேதசகாயகுமாரினால் எப்படி முடிந்தது? இந்த அணுகுமுறை நாளை தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? அயோத்தியிலே ஒரு காலத்தில் ராமர் கோவில்தான் இருந்தது. சுமார் 500 வருஷங்களின் பின் பாபர் காலத்தில் அதை இடித்து விட்டுததான் பாபர் மசூதி கட்டினார்கள். பின் ஒரு 500 ஆண்டுகள் கழித்து மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டுவது சரியென்று சொல்வது மாதிரியான விவாதம் தானே இங்கு வேதசகாயகுமாரினால் முன் வைக்கபட்டிருப்பது? இப்போது முற்போக்கு இலக்கிய இயக்கம் இல்லை. தேவையுமில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்ததும், அது சார்ந்த இலக்கியங்களெழுந்ததும், அவற்றிலும் உன்னதங்கள் உள்ளன எனபதும் நிஜங்களல்லவா? எப்படி ஒதுக்க முடியும்? இந்த நிராகரணத்தின் நிலைப்பாட்டை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

(15) இந்தப் பகுதி முரண்பாடற்றவிதமாக சில விடுபடுதல்களையும் , தவறான பகுப்புக்களையும் சுட்டிக் காட்டுவதோடு அமையும். இந்தக் காகட்டத்தை 1980க்கு மேலானது என்று கொண்டு துவங்குவதும் புரிதலைச் சுலபமாக்கும். இனப் படுகொலைகளும், பரிகாரமான யுத்தமும், புலப்பெயர்வுகளுமென்று அரசியல், சமூகக் களமாய் விரிகிறது இக்காலம்.
உணர்வின் பிரதிபலிப்பாக இலக்கியம் என்ற பொதுத் தன்மையை இலக்கியம் பெற்றது இந்த இரு தசாப்தங்களிலும்தான். இவற்றையும் 1981-90 என்றும் 1991-2000 என்றும் பிரித்துப பார்ப்பது நல்லது. முதலாம் பத்தில் இனக் கொடுமைகளும், வெளிநாடுகளுக்கான புலப் பெயர்வும் இலக்கியத்துக்கான உள்ளடக்கமாய் இருந்தன. சமூகம் குலைய, சிதறிய உதிரி மனிதர்களின் தொகை அதிகமாகி, அதுவே ஒரு சமூகப் பிரச்னையாக இக்கால கட்டத்தில் உருவானதாகக் கொள்ளலாம். புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் தோற்றப்பாட்டை இக காலகட்டத்துக்கு உரியதாக்குவதுதான் சரி. அது இலக்கிய நயமற்று வெறும் ஒப்பாரிகளாகவும், புலம்பல்களாகவுமே இருந்தன. அவற்றில் நல்ல சில ஆக்கங்கள் இல்லாமலில்லை. இக்காலகட்டம் ஒருவகையில் சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கானதாய் இருந்ததென்றும் கொள்ளப்பட முடியும். இரண்டாம் பத்தின் விஷேச அமசம் யுத்த மறுப்பும், தனி மனித சுதந்திரமென்ற கோஷமுமாகும். வெளி நாடுகளில் விளைந்த கலாச்சாரச் சிக்கல் மெல்ல அமைந்து அடங்கி வந்ததாய்த்தான் கொள்ள வேண்டும்.

(16) இந்த முதலாம் பத்துக்குரியவர்களே றஞ்சகுமார்,உமா வரதராசன்,எஸ்.எல்.எம்.ஹனி•பா, சட்டனாதன் போன்றோர். இவர்களில் றஞ்சகுமார், உமா வரதராசன், சட்டனாதன் ஆகியோர் குறித்து வேதசகாயகுமாரின் கட்டுரை சரியானதாகவேதான் சொல்கிறது. ஹனி•பா விடுபடல். இக்காலகட்டத்துப் படைப்பாக்கங்களின் மூலமாய் ஒருவரைத் தேர அல்லது நிராகரிக்க ஒரு ஆய்வாளருக்குள்ள உரிமையை நாம் மதிக்கிறோம். எமக்கு வேறு அபிப்பிராயங்களிருப்பினும், அதை மதிப்பது கருத்துத் தர்மம். எஸ்.எல்.எம்.ஹனி•பாவின் 'மக்கத்துச் சால்வை' கிழக்கிழங்கையில் தோன்றிய சிறந்த் ஒரு படைப்பு. இதில் வேதசகாயகுமாரோடு முரண் வேறு வகையானது. கருணகரமூர்த்தியை தளையசிங்கம் மரபில் வந்தவராக அவர் கொள்வார். அதுபோல் கலாமோகனைப் பற்றிக் கூறுகையில் கைலாசபதி மரபென்பார். இந்தப் பகுப்பு பொருத்தமற்றதும், அனாவசியமானதுமாகும். கைலாசபதியின் விமர்சன நோக்கு போக்குகளைவிட்டு ஈழத் தமிழிலக்கியம் வெகுதூரம் வந்து விட்டது. எம்.ஏ.நு•குமான்,, கே.எஸ்.சிவகுமாரன், சி.சிவசேகரம்,ந.ரவீந்திரன் என்று மாறுபட்ட விமர்சன் உலகுள் அது புகுந்து விட்டது. தளையசிங்கத்தின் தொடர்ச்சியிலும் யாரும் இன்று இல்லை. இன்றைய இலக்கியப் போக்கு மேலைனாட்டு இலக்கியப் போக்குகளை அடியொற்றியே செல்வதாகக் கொள்ளவேண்டும். கலாமோகனையும், மு.பொ.வையும் அவ்வாறு கொள்வது பொருந்தும். பொ.கருணாகரமூர்த்தி, சக்கரவர்த்தி ஆகியோர் இன்னும் யதார்த்த உலகை விட்டு பெருமளவு மாறவில்லை. அவர்களின் நவீனத்துவம் கட்டமைப்பை விடவும் மொழி சார்ந்த கூறுகளிலேயே தங்கியிருக்கிறது. றஷ்மி போன்றவர்கள் இரண்டாம் பத்துக்குரியவர்கள். சில சிறந்த சிறுகதைகளை எழுதிய பலபேர் இக்காலகட்டத்துக்குரியவர்களே. காலகட்டத்துக்கான தொகுப்புக்கள் வெளிவரும்வரை, மேற்தட்டு ஆய்வு மட்டத்தில் உள்ளோரால் இக்காலகட்டங்களைச் சரியாகவே மதிப்பிட்டு விடமுடியாது. தொகுப்புக்கள் வெளிவருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. முன்புதான் மனித சக்தி அச்சாக்கத்தில் பெரும் பங்கு வகித்தது. இந்தியா நூல் வெளியாக்கத்தில் முன்னின்றது. இன்று கணினித் தட்டச்சு முறையும், தொழில்நுட்ப அச்சாக்க வளர்ச்சியும் பதிப்பு நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட்டன. புதிய பார்வைகளும், விமர்சனமுறையும் கொண்ட படைப்புக்களும், தொகுப்புக்களும் வெளிவரத் தொடங்கி விட்டன. அண்மையில் ஈழகேசரி கதைத் தொகுப்பு வெளிவந்திருப்பது நல்ல ஓர் உதாரணம். முனியப்பதாசன் போன்றோரின் தொகுப்புக்களும் வெளிவரும்போது ஈழத் தமிழிலக்கியத்தின் தரத்தை வெளியுலகம் அறியும்.
எம்.வேதசகாயகுமாரின் முக்கியமான ஒரு கட்டுரை இது. ஈழத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து ஈழத்தவராலே கூட இவ்வளவு விரிவாயும், ஆழமாயும் எழுதப்படவில்லையென்பதை நோக்குகின்றபோது இதன் அருமையை ஒருவரால் தெரியமுடியும். ஒரு குறிப்பிட்ட சிந்தனா வட்டத்துள் ஈழத் தமிழ் சிறுகதைகளை அடைத்து ஒரு மதிப்பீட்டை முன்வைத்ததே இதிலுள்ள முரண். மற்றும்படி செய்யப் பட்ட முயற்சி, காட்டப்பட்ட அக்கரைகள் யாவும் பாராட்டப்பட வேண்டியன. ஈழத்தவருக்கே முன்மாதிரியான முயற்சி என்றே இதைச் சொல்லலாம்.


(thanks: pathivukal.com)2000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்