Sunday, November 09, 2008

மக்கள் கவிஞன்

‘மக்கள் கவிஞன்’ 
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- தேவகாந்தன் -


இப்போதெல்லாம் கார்களில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகியிருக்கிறது இசை. வானொலியில், குறுந் தகட்டிலென்று பலவாறாக அவை. சிலவற்றை அவற்றின் அர்த்தத்துக்காக, சிலவற்றை அவற்றின் இசைக்காகவென்று ரசிக்கவும் முடிகிறதுதான். ஆனாலும் இவற்றின் சமூகப் பொறுப்புப்பற்றி யோசிக்கையில் வெறுமைதான் எஞ்சுகிறது. பழையனவெல்லாம் நல்லனவுமல்ல, புதியனவெல்லாம் கெட்டனவுமல்ல என்ற புரிதல் எனக்கிருக்கிறது. ஆயினும் சில பழைய ஆளுமைகள்போல் புதியனவான ஆளுமைகள் தோன்றவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேதான் ஆகவேண்டும்.

தம் கொள்கைகளைக் கடைசிவரை காத்திருந்து, அவற்றோடு தம் வாழ்வை இணைத்துக்கொண்டவர்கள்தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களில், திரைப்படப் பாடலாசிரியர்களைப் பொறுத்தவரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம் முதன்மையானது. அவருக்குப் பின் இன்று நூற்றுக்கு மேற்பட்ட பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்படத் துறையிலே தோன்றியிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் பட்டுக்கோட்டையாரின் இடம் வெறுமையாகவே இருக்கிறது.

இளையராஜாவுக்கு இருக்கும் சிறப்புகளில் ஒன்று அவர் கிராமிய இசையை திரைப்படத் துறைக்குள் அதிகமாகவும் புகுத்தியவர் என்பது. அதுபோல் கிராமியப் பாடல்களை, அதன் அர்த்தங்களை திரைப்படத் துறைக்குள் புகுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மட்டுமில்லை, தான் சார்ந்த கொள்கையைக்கூட அவ்வப்போது திரைப்படப் பாடல்களில் புகுத்தி மக்களின் குரலை எதிரொலிக்கச் செய்தவர் அவர். அவரது எளிமையே சில பாடல்களில் மிகஅழகாக வந்து விழுந்திருக்கும்.

ஸ்ரீதர் ‘கல்யாண பரிசு’ திரைப்படத்தை உருவாக்கிய சமயம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம்தான் பாடல்களை எழுதி வாங்கவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டார். அதன்படி பாடலாசிரியரைச் சந்திக்க பட்டுக்கோட்டை போயிருக்கிறார்கள். அவர் முதலில் கதையைக் கேட்டிருக்கிறார். ஸ்ரீதர் மேலோட்டமாகக் கதையைக் கூறி முடிய கல்யாணசுந்தரம் சொல்லியிருக்கிறார், ‘சரி, பாடலை எழுதுங்கள்: காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் - கலங்குகிறான் அவளை நெஞ்சில் நிறுத்தி…’

தான் கதை சொன்ன இலகு பாணியிலேயே கல்யாணசுந்தரம் பாடலைச் சொன்னது திகைக்க வைத்திருக்கிறது ஸ்ரீதரை. பின்னாளில் இதை ஸ்ரீதரே மிக உருக்கமாகச் சொல்லி கல்யாணசுந்தரத்தின் திறமையைப் பதிந்துகொண்டிருக்கிறார்.

இடதுசாரிக் கருத்துக்களில் மிகத் தீவிரமான ஈடுபாடிருந்தது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு. ஒரு கலைஞன் மக்களை நோக்கிப் பயணிக்கிறானென்பதின் அர்த்தம், அவர்களது இருண்ட வாழ்வின் விடிவுக்கான பாதையில் சிரத்தைகொண்டு உழைப்பதுதானே.

எம்.ஜி.ஆர். நடித்து இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்’. அதில் நாடோடியான எம்.ஜி.ஆருக்கும் புரட்சிக்காரியான பானுமதிக்கும் ஒரு பாடல் வரும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமே அதை எழுதியிருந்தார். கேள்வி பதில் மாதிரியான வடிவத்தில் அப்பாடல் அமைந்திருப்பது அதன் சிறப்புகளில் ஒன்று.

அதில் பெண் கேள்வியாகக் கேட்பாள்: ‘காடு விளைந்தென்ன, நமக்கு கையும் காலும்தானே மிச்சமாக இருக்கிறது? இந்தப் பஞ்சைகள் வாழ்வதற்கு வழியே இல்லையா?’

அதற்கு ஆண் பாட்டிலே பதிலளிப்பான்: ‘தினம் கஞ்சி கஞ்சியென்றால் பானை நிறையாது, சிந்தித்து முன்னேற வேணுமடி.’

அந்த ‘சிந்தித்து முன்னேற வேணுமடி’ என்ற சொற்களில் எவ்வளவோ அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.

‘பொருளே இல்லார்க்குத் தொல்லையா
புதுவாழ்வே இல்லையா
இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா
இறைவா நீ சொல்லையா’

என்றுதான் வறுமையின் உச்சத்தை அக்காலத் திரைப்படப் பாடலாசிரியர்களால் வெளிக்கொணர முடிந்திருந்தது. வறுமையை நீக்க அவர்கள் அறிந்திருந்த ஒரேவழி இறைவனை அழைப்பதுதான். வறுமையை இல்லாது செய்ய இறைவன் சுடர் பிடிக்கவேண்டியிருந்தது. குசேலருக்கு கிருஷ்ணன் ‘அளப்பது’போல் இறைவனே வந்து அவரவர் வறுமையையும் தீர்ப்பதான மார்க்கம் தவிர வேறு மார்க்கம் அவர்களுக்குத் தெரியாதிருந்தது.

வறுமையை ஒழிக்க வேறு ஒரு மார்க்கம் இருக்கிறது என்ற கருத்தானது மார்க்சீயச் சிந்தனைகள் பரவ ஆரம்பித்த பின்னால்தான் பலருக்கும் தெரிய வந்தது. அவ்வாறு தெரிந்திருந்தவர்களிலும் சிலர்தான் தம் வாழ்வும், வளமும் அழிந்தாலும் கலங்காமல் அக் கொள்கைகளைக் கடைசிவரை தம் எழுத்துக்களிலும், பாடல்களிலும் எதிரொலிக்கச் செய்தார்கள்.

அவ்வாறானவர்களில் முதன்மையானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கஞ்சி…கஞ்சியென்று அழுதுகொண்டிருந்தால் பானை நிறைந்திடாது, அதைப் புரட்சிமூலம்தான் பெறவேண்டும் என்பது ‘சிந்தித்து முன்னேற வேண்டுமடி’ என்ற அவ்வரியின் கருத்து. அக் கருத்து உள்ளுறைந்து வருவதிலும் ஓர் அழகுண்டுதான். ஆனாலும் கல்யாணசுந்தரம் அதை அழகுக்காகவே சொல்லாமல் விட்டிருந்தார் என்று கொள்வதற்கில்லை. அக்கால கட்டத்தில் தென்னிந்தியா முழுவதும் வியாபித்திருந்த நக்ஸலைட்களுக்கெதிரான சட்ட வன்முறை காரணமாக அப்படியொரு பூடகத்தில் தன் கருத்தை வெளிப்டுத்தவேண்டிய நிலையே அவருக்கு இருந்திருக்க முடியும்.

தனது கருத்தை இன்னொரு படத்திலேதான் கொஞ்சமேனும் வெளிக்கொண்டுவர முடிந்தது பட்டுக்கோட்டையாருக்கு. அது ‘அரசிளங்குமரி’ படம். அதில் எம்.ஜி.ஆர் குழந்தையை வைத்துக்கொண்டு அதன் அழுகையைத் தணிப்பதற்காகப் பாடுவதுபோன்ற ஒரு காட்சி வரும். ‘சின்னப்பயலே… சின்னப்பயலே…’ என்று அப்பாடல் தொடங்கும். இந்தப் பாடலைக் கேட்கிறபோதெல்லாம் பாரதியாரின் ‘ஓடிவிளையாடு பாப்பா’ என்ற பாடல் எனக்கு நினைவுவரத் தவறுவதில்லை. ‘மோதி மிதித்துவிடு – பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்று குழந்தைகளுக்கு பாரதி கூறுவதுபோல்தான், கையிலுள்ள குழந்தைக்கு கதாநாயகன் சொல்லும் ‘தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டுசெய்யடா, தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா’ என்று வரும் சுந்தரத்தின் பாடல்வரிகளும் இருக்கின்றன.

இதிலேகூட தனியுடைமையை ஒழிக்கப் பாடுபடு என அறிவுரை சொல்வதாக மட்டும்தான் வருகிறது. தனியுடைமையை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் எதை ஸ்தாபிப்பது என்பதற்கு அதில் விடையிருக்காது.

அதற்கு, மேலும் சில காலம் செல்லவேண்டியிருந்தது கல்யாணசுந்தரத்துக்கு.

‘திருடாதே’ படம் வந்தது. அதிலும் கதாநாயகன் எம்.ஜி.ஆர்தான். அதிலும் சின்னப் பிள்ளைகளை நோக்கிப் பாடுவதுபோலத்தான் பாடல் வரும். ‘திருடாதே, பாப்பா திருடாதே’ என்று தொடங்குகிறது அப்பாடல். அதிலேதான் ‘இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால், பதுக்கிற வேலை இருக்காது’ என்று எல்லாம் பொதுவுடைமையாக வேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்பட்டிருக்கும்.

இன்று எத்தனையோ திரைப்படப் பாடலாசிரியர்களை தமிழ்ச் சினிமா உலகம் கண்டுவிட்டது. ஆனால் மக்களை நினைத்து, தன் கொள்கையை நினைத்துப் பாடல் எழுதுபவர்கள் அறவே இல்லாதிருப்பது தமிழ்ப்பட உலகத்தின் சாபம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை ‘பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’என்று ஒரு பிரபலம் புகழ்ந்திருக்கிறது. அது கண்ணதாசன் என்பதாய் ஞாபகம். அப்படி பாட்டின் வீறுசெறித்து தன் கொள்கையை எந்தெந்த வழிகளிலெல்லாமோ பிரசித்தம் செய்த அந்தத் தலைமகனின் இடம் இன்றும் வெறுமையாகத்தான் இருக்கிறது. அந்த ஆளுமைகள்போல் புதிய ஆளுமைகள் தோன்றவில்லையே ஏன்? மேட்டை இடிக்காமல் பள்ளத்தை நிரப்ப முடியாது என்பது புரியாத சங்கதியல்ல. அதை வெளியே சொல்வதற்கு எழுத்தாண்மை தேவை. அது கல்யாணசுந்தரத்திடம் இருந்தது. இன்றைய தலைமுறைப் பாடலாசிரியர்களிடம்…?

000
தாய்வீடு, நவம்பர் 2008

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...