அறிஞர் \ பேரறிஞர் \ சி.என்

அறிஞர் \ பேரறிஞர் \ சி.என்



மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் திரு.சி.என்.அண்ணாத்துரையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழகத்தில் பரவலாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தி.மு.க.வின் அல்லது அதிலிருந்து பிரிந்த எந்தக் கட்சியினது முதல்வரையும்விட எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து மறைந்தவர் அவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் இந்த நேரத்திலாவது அவர்பற்றிய சரியான ஓர் அலசலைச் செய்யவேண்டியது ஒரு வரலாற்றுக் கடமையாக எஞ்சிநிற்கவே செய்கிறது.

ஆயினும் அதை இங்கே இப்போது நான் செய்யப்போவதில்லை. அவரை நினைவுகூரும் வண்ணம் சில விஷயங்களைக் குறிப்பிடுவதோடு, நம் நிகழ்கால நிலைமையில் அவரது வாழ்வனுபவம், குறிப்பாக அவர்; அரசியல்சார்ந்து எடுத்த சில முடிவுகள் எவ்வாறான எச்சரிக்ககைகளை எமக்கு விட்டுச்சென்றிருக்கின்றன என்பதைத் தொட்டுச்செல்வதையே செய்யவிருக்கின்றேன்.

அறிஞர் அண்ணா என்று ஊடகத் துறையினராலும், பேரறிஞர் அண்ணா என்று கழகத்தவராலும் அன்பாக அழைக்கப்பட்ட திரு. சி.என்.அண்ணாத்துரை, அவர் வாழ்ந்த காலகட்டத்தை வைத்துப் பார்க்கின்ற வேளையில் அவ் அடைமொழியினுக்குப் பொருத்தமானவராகத்தான் இயங்கியிருப்பதாகத் தெரிகிறது. அறியாமை, பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கைகளால் தமிழகம் குஷ்டரோகம் பீடித்ததுபோல் பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு அகன்ற நேரத்தில் அழுகிக்கொண்டிருந்தது என்று சொல்லமுடியும்.

‘நாட்டு மாந்தரெல்லாம் தம்போல் நரர்களென்று கருதார், ஆட்டு மந்தையாமென்று உலகை அரசர் எண்ணிவிட்டார்’ என்று பாரதி துரியோதனனின் அதிகார ஆட்சியின் கொடூரத்தைச் சொல்லியதை நாமறிவோம். ஆதலால் அரசரை  புதிதாக ஒன்றும் கற்பிதம் பண்ணவேண்டியதில்லை, நரர்களில் பெரும்பாலோர் ஆட்டுமந்தைகளாகவேதான் இருபதாம் நூற்றாண்டிலும், இன்னும் இருபத்தோராம் நூற்றாண்டிலும்கூட, வாழ்ந்துகொண்டிருப்பது உண்மையான விஷயம்.

ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் மட்டுமில்லை, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்கூட,  உண்மை நிலை இதுவே. நாம் புராதன காலத்திலிருந்து நகர்ந்துவந்த அளவுக்கு, நமது மனத்தில் உறைந்துகிடக்கும் வெறியுணர்வுகளிலிருந்தும், அறியாமைகளிலிருந்தும் வெகுதூரம் வந்துவிடவில்லையென்பதையே அன்றாடம் நடைபெறும் அரசியல் சமூக நிகழ்வுகள் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தநேரத்தில்தான் ராமசாமிப் பெரியார் என்ற பெருஞ்சுடர் எழுகிறது தமிழகத்தில். அப்பெருஞ் சுடரில் கிளைவிட்ட குஞ்சுகளில் ஒன்றாகத்தான் சி.என்.அண்ணாத்துரையின் தோற்றத்தினை நாம் இனங்காணவேண்டியிருக்கிறது. மேலைத்தேய அறிவுலகத்தினதும், சீர்திருத்த உலகத்தினதும் சிந்தனைச் சுடரில் தம் மனத்தைப் பறிகொடுத்த இவராலும், இவர்போன்றவர்களாலும் குறிப்பாக வெ.சாமிநாத சர்மா, சி.பி.சிற்றரசு போன்றவர்களால் தமிழகத்தின் சராசரி மனிதன் பகுத்தறிவின் மெல்லிய ஒளிக்கீற்றினைக் காணநேர்கிறது. மேடைப்பேச்சின் சாயலை ஒட்டிய ஓர் எழுத்துநடையை முன்னெடுத்த திராவிடச் சிந்தனை மிக்க இக்கூட்டத்திடையில் கலை, இலக்கியம் சார்ந்த திறமைகள் காரணமாய் சி.என்.அண்ணாத்துரை மிகவும் கவனிக்கவும், மெச்சவும் படுவது தவிர்க்கவியலாதபடி நேர்கிறது. இக் காரணத்தைச் சுட்டி அறிஞர் அல்லது பேரறிஞர் என்ற பட்டம் அண்ணாத்துரைக்குப் பொருத்தமானது என்றே வைத்துக்கொள்வோம். ஆனாலும் அதை ஒரு கலக மனம் இலேசுவில் ஒப்புக்கொண்டு அடங்கிக் கிடந்துவிட மாட்டாது.

படைப்பின் உன்னதம் கொண்ட ஒரு பேனாக்காரனுக்கு அரசியலின் அதிகாரம் தூசுபோல. அவன் தன் படைப்பாளுமைக் கர்வத்தில் அரசர்களைச் சிறுத்துப்போக வைக்கவே விரும்புவான். அதனால்தான்போலும், அப்போது ‘தீபம்’ இலக்கிய இதழை நடாத்திக்கொண்டிருந்த நா.பார்த்தசாரதி ஒருபோது சி.என்.அண்ணாத்துரையை சி.என்.அண்ணாத்துரை என்றே ஒரு பொதுமேடையில் பேசப்போக பெரும் வம்பாகிப்போகிறது. கழகத்தார் லேசுவில் விட்டுவிடவில்லை. மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார் நா.பா. அவர் மன்னிப்புக் கேட்கவில்லையென்பது வேறு விஷயம். ஆனால் அந்தளவுக்கு நிலைமை சூடாகிப்போய்விடும்.

அறுபதுகளின் ஆரம்பத்தில் தமிழுலகம் வெகு உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த ஓர் இலக்கிய நிகழ்வுபற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்று திராவிட இயக்கத்தார் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த வேளை. இதற்கு மறுதலிப்பான பிரச்சாரமும் நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனாலும் இதை ஒரு விவாதத்தில் தீர்மானிக்க, மூன்று தொடர்கள் கொண்ட ஒரு விவாத மேடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொளுத்தவேண்டும் என்ற தரப்பில் வாதித்தோரில் முக்கியமானவர்கள் சி.என்.அண்ணாத்துரையும், சோமசுந்தர பாரதியும். எதிர்த்தரப்பில் பிரதிவாதித்தோரில் முக்கியமானவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி.

முதலிரு மேடைகளிலும் ராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என வாதித்தோரின் கரங்களே மேலோங்கியிருந்த நிலையில், மூன்றாவது மேடைக்கு ராஜகோபாலாச்சாரியார் சுகவீனமென்று காரணம் சொல்லி வராமலே நின்றுவிடுகிறார். கனல் பறக்கும் அவ் விவாதங்களின் தொகுப்பு பின்னால் ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. அத்தனைக்கு பேச்சாற்றல் மிக்கவர்தான் அண்ணாத்துரை.

அதை மேலும் இரு நிகழ்வுகள் வலுப்படுத்தி நிற்கும்.

அண்ணா நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் இந்தியைத் தேசியமொழி ஆக்குவது குறித்த சர்ச்சை எழுந்திருந்தது. நாடாளுமன்றத்திலும் அதுபற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நேரம். அப்போது இந்தியைத் தேசியமொழி ஆக்கநேர்வதற்கான காரணமாக அது பெரும்பான்மையினர் பேசும்மொழியென ஓர் அமைச்சர் காரணம்சொல்லி அமர்ந்ததும் பேச எழுந்த அண்ணா, பெரும்பான்மை என்பது எல்லா விஷயங்களிலும் பொருத்தமாக வராதென்றும், அப்படியானால் அதிகமாக இருப்பதால் காக்கையையே இந்தியாவின் தேசியப் பறவையாக வைத்திருக்கவேண்டுமே தவிர மயிலை ஆக்கியிருக்கக் கூடாதென்றும் தெரிவிக்க சபை பதிலிழந்து மவுனித்ததாம்.

இதுபோல இன்னுமொரு சம்பவம். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நேரு கொடுத்த ஒரு வாக்குறுதியின் பேரில் முடிவுக்கு வந்திருந்தது. இது ஒரு போலியான நிலைமைதான். இந்தியை இந்தி பேசாத மாநிலங்களில் திணித்துவிடுவதற்கான முயற்சிகள் மெதுமெதுவாக நடந்துகொண்டுதான் இருந்தன பல்வேறு மட்டங்களில். ஆனாலும் அதற்கான எதிர் அல்லது பதில் நடவடிக்கைகளும் நடந்துகொண்டுதான் இருந்தன.

ஒருமுறை அண்ணா டெல்லி சென்றிருந்தபோது ஓர் அமைச்சர் மிகச் சாதுர்யமாக, ரயில்நிலையங்களில் பெயரை வடமாநிலத்தாரின் சிரமங்களைக் குறைக்க இந்தி எழுத்தில் போட்டுவிடுகிற தேவையிருக்கிறது,
ஒரு சொல்தானே, அதைப் பொருள்செய்யாமல் விட்டுவிடுங்களேன் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அண்ணா பதில்சொல்லியிருக்கிறார், ‘வேற்று மாநிலத்தார் புரிந்துகொள்வதற்கு ஆங்கிலச் சொல் இருக்கிறதுதானே, ரயில்நிலையத்தில் மட்டும் பெயரை இந்தியில் பொறிப்பதன்மூலம் என்ன பெரிய பிரயோசனம் வந்துவிடப் போகிறது, ஒரு சொல்தானே விட்டுவிடுங்களேன்’ என்று.

இவ்வாறு அண்ணாவின் சொற்சாதுர்யங்கள்பற்றி அவர் பேசி முடிந்த கணங்களிலேயே பத்திரிகைகள் வாயிலாக யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டே அறிந்து நாம் மெச்சிக்கொண்டிருந்தோம் அன்று. அத்தனைக்கு அண்ணா கூர்த்த மதி படைத்தவர் என்றே தெரிகிறது.

அண்ணா சம்பந்தப்பட்டதாக இன்னுமொரு வித்தியாசமான கதையும் பேச்சிலடிபடுவதுண்டு. அண்ணாவுக்கு நேரடியான திரையுலகத் தொடர்பிருந்தது. வேலைக்காரி, ஓர் இரவு போன்ற படங்களின் கதை வசனகர்த்தா அவர். அவைபோல் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட படங்கள் இன்றுகூட தமிழகத் திரையில் வருவதேயில்லை. ‘பாதை தெரியுது பார்’ என்ற ஒரு சினிமா தவிர பெயர்சொல்ல ஒரு படம் அங்கில்லை. அப்படியான சமூக அக்கறைகொண்ட இரு படங்களின் கதை வசனகர்த்தா என்பதாலேயே, அப்போது முன்னணி நட்சத்திரமாகவிருந்த பானுமதியோடு இணைத்து ஒரு கதை பரவிவந்தது. அதுபற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அண்ணா, ‘பானுமதி படிதாண்டாப் பத்தினியுமல்ல, நானும் முற்றும் துறந்து முனிவனல்ல’ என பதிலிறுத்தாராம். இந்தக் கதையில் எனக்குச் சந்தேகமுண்டு. ஆனாலும் இதை மறுப்பதோ, நிறுவுவதோ என் திட்டமல்ல. இது எனக்கு வேறொரு சம்பவத்தை நினைவுறுத்துவதால் இதைக் கூறினேன்.

‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ எனத் தொடங்கும் பாடல்பற்றிய கதையே அது.

பாண்டிய மன்னனுக்கு திடீரென சந்தேகமொன்று தோன்றுகிறது. அதாவது தனது மனைவியின் கூந்தலிலுள்ள மணம் இயற்கையானதா, செயற்கையானதா என்ற சந்தேகம். அதைத் தெளிவாக்கும் செய்யுளை எழுதும் புலவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்பெறும் என அவன் பிரசித்தம் செய்யச்செய்கிறான்.

அதற்கான பாடலைச் சிவனிடமிருந்து பெற்றுவருகிறான் தருமி என்ற புலவன். அதில் பிழை இருப்பதாகக் கூறி தமிழ்ச் சங்கத்தின் முதன்மைப் புலவன் நக்கீரன் பரிசைத் தடுக்கிறான். பின் சிவனே புலவன் வேடத்தில் வருவதும், நக்கீரன் அது தெரிந்தும் பணியாமல் தன் கருத்தைக் கூறுவதும், கோபமடையும் சிவன் நெற்றிக்கண்ணைத் திறக்க வெப்பம் தாங்காமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் விழுந்து கிடந்து வருந்துவதும், பின் சிவன் கோபம் தணிந்து நக்கீரனது தமிழோடு விளையாடவே தான் அத் திருவிளையாடலைப் புரிந்ததாகக் கூறி நக்கீரனைக் கரைசேர்ப்பான். ‘திருவிளையாடல்’ படத்தில் நாகேஷ் , சிவாஜி, முத்துராமன் ஆகியோர் தருமி, சிவன், பாண்டியனாக நடித்து அசத்தியிருப்பார்கள்.

இந்தச் சம்பவத்திலும் உண்மை தெரியவருவதில்லை. அதாவது பாண்டியன் மனைவியின் கூந்தலுக்கு இயற்கை மணம் அல்லது செயற்கை மணம் எது உள்ளது எனத் தெரியவராது செய்யுளின் மூலம். அண்ணாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணா சொன்னதாகக் கூறப்படும் பதிலிலும் சம்பவ உண்மை தெரியவராது. ஆனாலும் கதை நீண்டகாலமாக நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை இதிலுள்ள புனைவுத் தன்மையால்தான் இக்கதை வாழ்கிறதோ என்றும் தோன்றுகிறது.

வாழுங் காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளரெனப் பெயர்பெற்றிருந்தவர் அண்ணா. அவர் காலத்தில் சமயச் சொற்பொழிவுக்கு பெயர்போனவர் கிருபானந்த வாரியார். அரசியல் பேச்சுக்கு நாஞ்சில் மனோகரன். இலக்கியப் பேச்சுக்கு ம.பொ.சி. இவர்களுக்கு இவர்களது துறையில் நூறு நூறு புள்ளிகள் கொடுக்க முடியும். அப்படியானால் அண்ணா எப்படிச் சிறந்த பேச்சாளர் ஆக முடியும்? இந்தக் கேள்விக்கு ஒருவர் சொன்னார்: ‘இவர்களுக்கு தம்தம் துறையிலேதான் சிறப்பு. ஆனால் அண்ணாவால் இந்த ஒவ்வொரு துறையிலுமே தொண்ணூறு புள்ளிகள் எடுக்கமுடியும். அதனால்தான் அண்ணா சிறந்த பேச்சாளர் எனப்பட்டார்.’

எனக்குள் உள்ள கேள்வி இதுதான். இவ்வளவு சிறப்பு மிக்க அண்ணா ஏன் அந்தளவுக்கான சிறப்பினை வரலாற்றில் பெறாதுபோனார்?

அவ்வளவு எளிமையாக வாழ்ந்த அண்ணா, அவ்வளவு கூர்த்த மதி படைத்த அண்ணா, இறுதியில் ஒரு கட்சி வட்டத்துள் மட்டும் நினைக்கப்படுபவராக ஆனது எப்படி?

அந்த அறிவு, அந்த விவேகம், அந்தச் சீரிய சமூகக் கருத்துக்களின் கொள்ளிடம் என்ற பிரக்கியாதி, கட்சியின் நலத்துக்காக தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டார் என்ற அவப்பெயரோடு ஏதோ ஒருவகையில் தொடர்புகொண்டிருந்திருக்கிறது. ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை இல்லையே’ என்று முழக்கமிட்டவர் பெரியார். அந்தப் பாசறையிலிருந்து வளர்ந்து வெளிவந்தவர், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று கடவுளை ஒருமையாகவேனும் ஒப்புக்கொண்டதற்கும் எம்மிடம் சமாதானம் இல்லை. வெளிப்படையாய் இல்லையெனினும், உள்ளுறையாக இவைபற்றிய அபிப்பிராயங்கள் காலத்தின் கவனத்தில் இருந்திருக்கிறது. அதுவே அவரது முழு ஆளுமையினையும் வரலாற்றில் தடம் பதியாது மங்கச்செய்யும் பேராற்றலாய்த் தொழிற்பட்டிருக்கிறது.

இது இன்னும் நிறைய யோசிக்கப்படவேண்டியதுதான்.

யோசிப்போம்.
000

தாய்வீடு  2008

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்