காத்திருப்பின் புதிர்வட்டம் (சிறுகதை)

 

                                                                                                                                  

கூடிருந்த மரத்தையும், மரமிருந்த நிலத்தையும் குருவி நிரந்தரமாய் விட்டகன்றதுபோல், அவர் நாடு நீங்கிப்போய் நீண்ட காலம். ஒருமுறை வந்து தன் நிலம் பார்த்துப்போக அத்தனை காலத்தில் அவர் எண்ணியதில்லை. அதில் ஏதோ அவருக்குத் தடையிருக்கிறது.

இப்போது ஓய்ந்துபோயிருக்கிறார். உடலாலும் மனத்தாலும் அந்தச் சோர்வு அவரில் இறுகி விழுந்திருக்கிறது. அவரது தனிச் சோபா அந்த இரண்டு பாரங்களையும் சேர்த்து தாங்கிக்கொண்டிருக்கிறது.

அப்போது மனத்துள் அவர் வாழ்ந்துகொண்டிருப்பது தன் இறந்த காலத்தின் ஞாபகங்களைத்தான். பவானந்தன் அதை அறிவான். 

அவரது சொல்லிலும், அவரது அனுக்கங்களின் ஒலியிலுமாய் பெரும்பாலும் அவர் சோகம் முழுதும் அவன் அறிந்துகொண்டிருக்கிறான். எனினும் அவர் கதையில் அவன் விளங்காத மிகப்பெரும் கூறும் இருந்தது.

இன்னும் சில நாட்களில் தன் நாடு செல்லவிருக்கும் பயணத்தில் அவன் அதை விளங்கிக்கொள்ள முந்;திய பயணத்தைப்போலவே முயல்வான். அது அவனுக்கு அவசியமாயிருக்கிறது. ஒரு கதையின் ரகசியக் கூறுகளைப் புரிந்துகொள்ளும் ஆர்வத்தை அவன் எப்போதும் கொண்டிருக்கிறான். மட்டுமில்லை. அவர்பற்றிய அக்கறை, சிற்றப்பாவென்ற உறவுமுறையுடன், நன்றிக்கடனென்ற இன்னொரு வளையத்தையும் பின்னியிருக்கிறது.

ஊரிலிருந்து முதன்முதலில் புலம்பெயர்ந்து வெளிநாடு வந்தவர் அந்தக் குடும்பத்தில் அவராகவேயிருந்தார். அவர்தான் தன் அண்ணன்கள் இரண்டுபேரையும், தன் அக்காள் அரியமலரையும் ‘வெளியில் எடுப்பித்து’ விட்டவர். நாட்டைவிட்டு வெளிக்கிடுவதன் முன்னும் சகோதரங்கள் படிப்பு ரியூஷன் என பறந்து திரிந்த காலத்தில், அந்தக் குடும்பத்தின் ஆதாரமாய் இருந்தது கடைசிப் பிள்ளையான அவர்தான். நாட்டைவிட்டு நீங்கிய பிறகும் அந்த பொறுப்புகளின் பிடியை அவர் தவற விட்டுவிடவில்லை.

உள்ளில் ஒரு போரைச் சந்தித்துக்கொண்டு இருக்கையில் வெளியில் ஒரு போரைச் சந்தித்த பலருக்கு அவ்வாறே நடந்தது.

பவானந்தனுக்கு அவர் திருமணமே செய்யாததின் காரணம் தெரியாக் குறையொன்று இன்னும் இருந்துகொண்டிருக்கிறது. எத்தனை தடவைகள் எண்ணியிருந்தாலும் இன்னும் அவன் மனஞ்சலிக்காத நினைவின் பயணப் பாதை அது.

தன் சிற்றப்பாபோல் அவனும் எல்லாம் எண்ணிக்கொண்டுதான் இருக்கிறான். எனினும் அவரின் அந்த தரிசுபட்ட வாழ்க்கைக்கு அவனொரு பதில் கண்டதில்லை. ஒருவேளை அவரது அந்நிலையை, ஒரு காத்திருப்பெனக் கருத முடிந்தாலும் அவனுக்கு அப் பதில் போதுமானதாக இருந்திருக்கும். அவன் அவ்வாறும் கருதமுடியாதவனாகவே இருந்தான்.

சூரியன் மேற்கில் வட்டமாய் கீழிறங்கும் புள்ளிவரை வெளிநிலமும் வயல்நிலமுமான பிரதேசம் அவனது. தன் ஒருபக்கத்தே வண்ணான்துறையையும், தொடர்ந்த சதுப்பு நிலத்தையும், அருகோடிய வாய்க்காலையும் அது கொண்டிருந்தது. ஒருகாலத்தில்  செட்டியார் வளவென பெயர் கொண்டிருந்த இடமும் அங்கேதான் இருந்தது.

தனக்கான வாரிசுகளாய் ஆறு பெண்களை அஞ்சுகத்துக்கு கொடுத்துவிட்டு செட்டியார் மறைந்துபோன பின்னால் அது செட்டிச்சி வளவென்றாகியிருந்தது. ஆகியிருந்ததல்ல, அஞ்சுகமே அவ்வாறு ஆக்கினாள்.

செட்டியார் மரணத்தின் அந்தியேட்டி முடிந்த மறுநாள் அவரது மூத்த தாரத்து மகன் சிவசம்பு திடீரென ஒரு காலம்புறமாய் அங்கே வந்தான். ‘செட்டியாருக்கு ஒரே பெண்சாதி. அது என்ர அம்மா மங்களம்தான். அவர் செத்தாப் பிறகு சொத்தெல்லாம் அம்மாவின்ர பேரில வந்திட்டுது.  செட்டியார் இருக்கும்வரை எல்லா வசதியளும் அனுபவிச்சியள்தான, இனி அது நடக்காது. இண்டைக்கு புதன்கிழமை… அடுத்த புதன்கிழமை சரியா இந்தநேரத்துக்கு வருவன்… இருந்த தடயமும் காணியில இருக்கப்படா, எல்லாரும் வெளிக்கிட்டுப் போயிடவேணும். இல்லாட்டியோ… வைரவர் சாட்சியாய் சொல்லுறன்… உன்னையும் உன்ரை பெட்டையளையும் தோட்டத்துக்க துண்டுதுண்டாய் வெட்டித் தாட்டுப்போடுவன்.’

சொல்லிவிட்டு சிவசம்பு போய்விட்டான்.

வீட்டுக்குள் எல்லாம் கேட்டபடி நின்ற அஞ்சுகம் சீலையை அவசரமாய் ஒழுங்குபடுத்திக்கொண்டு வந்து, அவனைத் துரத்தியபடி பின்னால் ஓடினாள். ‘டேய், தம்பி, கொஞ்சம் நில்லடா வாறன்’ என்றவள் அவன் நிற்க தானும் நின்றுகொண்டு நிதானமாய்ச் சொன்னாள்: ‘உந்தமாதிரியெல்லாம் என்னை வெருட்டியிடேலாது, சிவசம்பு. இந்த விதை வேற. இப்ப சொல்லுறன் கேளு. செட்டியாருக்கு பிள்ளைப் பெத்தபடியா நானும் செட்டிச்சிதான். அவற்ர சொத்தில எனக்கும் என்ர பிள்ளையளுக்கும் உரித்திருக்கு. பிள்ளையளோட இஞ்சதான் இருப்பன். ஏலுமெண்டா வந்து வெட்டித் தாட்டிட்டுப் போ. தப்பிச்சுதெண்டா, லேசில உன்னை விடமாட்டன்; உன்ர வீடுவரைக்கும் வருவன்; கொல்லையிலயும் வந்து தேடுவன். அதைமட்டும் மறந்திடாத.’

அதன் பிறகு எதிர்ப்படுகிறவர்களிடம் எல்லாம் சொன்னாள், இனிமேல் அது செட்டிச்சி வளவென்று. அவளது ஆக்ரோஷம் கண்டவர்கள் அவளைப் பணிந்தனர். அன்றிலிருந்து அது செட்டிச்சி வளவு எனப் பெயர்கொண்டது.

தன் சின்னம்மா அன்று நின்றிருந்த கோலத்திலும் வெடித்த வார்த்தைகளின் பயங்கரத்திலும் பொழுதெல்லாம் நரி வெருட்டுறூஉ நிலையாகிப் போனது சிவசம்புக்கு. கொல்லைக்கு காலையில் வெளிய போகவும் அச்சமாகிப்போனான். நிலைமையின் தீவிரம் கண்ட தாயின் ஆலோசனைப்படி, ஒரு ரண்டாந்தரப்பு மூலம், செட்டியார் வளவை அஞ்சுகத்தின் பேருக்கு உறுதிமுடித்துக் கொடுத்தனுப்பி அவன் கலக்கம் தெளிந்தான்.

அவ்வாறான கதைகள்கொண்ட செட்டிச்சி வளவைச் சுற்றிய, அதன் உரித்தாளி அஞ்சுகத்தைச் சுற்றிய, அவளது கடைசி மகள் கொஞ்சுங்கிளியைச் சுற்றிய கதைகளுள் ஊடாடியிருக்கிறது குமாரவேலுவின் புதிர்க் கதையும். ஒருவகையில் அது பவானந்தனையும் சுற்றியுள்ள கதையே.

*

சரவணமுத்துச் செட்டியாருக்கு கொழும்பிலே ஒரு பெரிய கடையிருந்தது. காலத்தில் கடனாளியாகிக்போய் கடையை விற்றுவிட்டு ஊரோடு வந்துவிட்டார் அவர். கப்பலையே விற்றுவிட்டு செட்டியார்கள் கடனடைத்த கதைகள் ஊரில் அடிபட்டிருந்ததால், சரவணமுத்துச் செட்டியார் கடையை விற்றதுபற்றி யாரும் அதிசயப்பட்டுக்கொள்ளவில்லை.

ஆனால் வரும்போது கைப்பிடியில் அவர் கூட்டிவந்த அஞ்சுகத்தைக் கண்டு ஊர்க்காரர் பேரதிசயம் பட்டார்கள். அக்கம்பக்கமாய் அவளது ரட்டை மூக்குத்திகள், காதுக் கடுக்கன்களும் வளையங்களும், அந்தளவு நீண்ட கூந்தல் யாவுமே அவர்களை திகைக்க வைத்துவிட்டன.

ஆயினும் அவர்கள் நூறு கதைகள் ரகசியத்தில் பேசினார்கள். அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டோ மூன்றோ குழந்தைகள் இருந்தார்களென்றும், அவர்களையும் புருஷனையும் கைவிட்டுத்தான் களவில் செட்டியாருடன் ஓடிவந்தாளென்றுமான கதைகள் அவை. அவற்றுள், தனது கடையை புருஷனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டுதான் செட்டியார் அவளை வாங்கி வந்ததாகவும் ஒரு கதை  உலா வந்தது.

செட்டியாருக்கும் அஞ்சுகத்துக்கும் ஒரு குழந்தை பிறந்த பின்னால் எப்படியோ மெல்ல மெல்ல அவள்மீதான அபவாதப் பேச்சுக்கள் வலுக்கெட்டுவிட்டன.

அஞ்சுகத்தை ஊருக்கு கூட்டிவந்து பராமரிப்பின்றிக் கிடந்த தனது ஒரு பெரும் தோட்டக் காணியில் மண்வீடு கட்டி அவளைக் குடியிருத்தினார் செட்டியார்.

பிள்ளைகள் பிறக்கப் பிறக்க மண்வீட்டை பெருப்பித்து இருமுகடு வீடாக்கினாரே தவிர, கல்வீடாய்க் கட்டிக் கொடுக்கவில்லை செட்டியார். அஞ்சுகம் கேட்கத்தான் செய்தாள், ‘கிட்டடியில குளமிருக்கிறதால எப்பவும் ஈரமாயிருக்கு நிலம். அதால பிள்ளையளுக்கு அடிக்கடி வருத்தமும் வருது.’

‘அடுத்த கோடையில பாப்பம். நிலத்துக்கு மட்டுமெண்டாலும் சீமெந்து போட்டுத்தரப் பாக்கிறன்.’

செட்டியார் தனக்குள்ள ஆயிரம் தொல்லைகளில் பிறகு கோடை வரும்போது தன் சொல்லை மறந்தேபோவார்.

ஆனால் தோட்டக் கிணற்றை மட்டும் கல்லில் கட்டிக்கொடுத்தார், தோட்டம் செய்ய வசதியாயிருக்குமென்று.

காலத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டன. சரவணமுத்துச் செட்டியார் காலமாகியிருந்தார்; அஞ்சுகத்தின் ஆறு பெண்களில் மூத்த மூன்று முதிர் கன்னிகளுக்கு தத்தம் விருப்பப்படி குடும்பங்கள் அமைந்திருந்தன. அவர்களும்  எங்கெங்கோவுள்ள புருஷன்மாரின் குடியேற்றத் திட்ட நிலங்களில் போய், குழந்தைகள் பெற்று வாழ்ந்துகொண்டிருப்பதாய் ஊரில் பேசிக்கொண்டார்கள். பின்னால் அவர்களுக்கிளையதாய் வெளியுலகம் தெரியாதிருந்த இரண்டு பெண்களும்கூட வளவிலோ வீட்டிலோ காணப்படாதிருந்தார்கள். ரகசியமான செய்தியொன்று மெல்ல உலவிற்று, அவர்கள் யாருடனோ ஓடிப்போய்விட்டதாக.

கோலமே மாறிப்போனாள் செட்டிச்சி. சின்னவிக் கிழவி, தான் கண்டதாய்ச் சொன்ன ஊத்தைப் பேயின் வடிவத்தை அவள் நிகர்த்துப்போனாள். திடமும் சீணித்துப்போனது. ஊர்ப் புறணியின் அவமானம் இன்னொருபுறமாய் அழுத்த, வீட்டுள் முடக்கமும் ஆகிவிட்டாள்.

செட்டியார் மரணத்தின் பின் தனக்கு ஆதரவாய் இருந்திருக்க வேண்டிய தன் பிள்ளைகள், தப்பிவிடுவதற்கான தருணம் பார்த்திருந்துபோல் ஓடினதில்தான் அவள் உடைந்தது. அது எவரையும் உடைக்கும்தான்.

வேய்ச்சலுக்கு இருநூற்றைம்பது மட்டை கிடுகுகளாவது குறைந்தபட்சம் தேவைப்படும் பீலி வைத்துத் தொடுத்த பெரிய இருமுகடு வீட்டின் கூரை பொத்தல்கள் விழுந்து, மாரி ஒழுக்கில் சுவர்கள் கரையத் துவங்கியிருந்தன.

ஒருகாலத்தில் கத்தரி, மிளகாய், வெண்டி, வாழை, ஈரவெண்காயமென பசுமைபற்றி நின்ற தோட்டம் மருந்துக்கு சில வாழைகள் நிற்குமிடமாய் வறட்சிபட்டுப் போனது. வேம்பு, இலுப்பை, அன்னமுன்னா, ஆடாதோடை, கிலுகிலுப்பை, நாயுருவியெனவும் பனை வடலிகளென்றும் செடிகளும் மரங்களுமாய் எல்லைகள் மண்டிப்போயின.

வெளியில் போர் நடந்துகொண்டிருக்கையில், அவர்களுக்குள்ளும் வறுமையுடனும் துயரத்துடனுமான போர்.

எதுவும் பேசாமல் அழுகிற அம்மாவுடன் சேர்ந்து தானும் அழுதுகொண்டிருந்தாள்  கொஞ்சுங்கிளி.

பார்த்துவிட்டு, கண்களைத் துடைத்தபடி அம்மா கேட்டாள், ‘நீ எப்ப ஓடப்போற?’

அது செவியேற மேலுமாய் அழுதாள் அவள்.

ஆறு பிள்ளைகளுக்கும் பெயர்களிருந்தன. ஒன்று சரஸ்வதி, ஒன்று பார்வதி, இன்னொன்று ஈஸ்வரி, மற்றது லட்சுமி, அடுத்தது துர்க்கை, கடைசியாய் மீனாட்சி என்பனவாக. ஆனால் வீட்டிலே எல்லாம் கிளிகள். மூத்தது செல்லக்கிளி, அடுத்தது பவுண்கிளி, மற்றது அருமைக்கிளி அடுத்து நேசக்கிளி, ஐந்தாவது பசுங்கிளி என ஐந்து கிளிகள் வந்துவிட்டிருந்தன. ஆறாவது பள்ளி செல்ல ஆரம்பித்தும் அதற்கொரு கிளிப்பெயர் கிடைக்காதிருந்தது. ஆறு கிளிகளும் தாய்க் கிளியுடன் ஒன்றுகூடி ஒரு பெயர் பலனேதுமின்றி யோசித்தன.

ஒருநாள் பள்ளிக்கூடம்விட்டு ஓடிவந்த கடைக்குட்டி சொல்லிச்சுது, ‘நான் கொஞ்சுங்கிளி, அம்மா. என்னை கொஞ்சுங்கிளியெண்டு கூப்பிடுங்கொ.’

எல்லாக் கிளிகளும்போல் அதுவும் பறந்து போய்விடுமென்றுதான் அஞ்சுகம் எண்ணினாள். ஆனால் இறுகிய அதன் முகம் அளித்தது வார்த்தைகளற்ற நம்பிக்கைப் பிரகடனம். ‘சாகிறமட்டும் உங்களவிட்டுப் போமாட்டன்.’

ஊர் நெசவு சங்கத்தில் தறியடித்து தாயைப் பராமரித்துக்கொண்டு  கூடவிருந்தாள் கொஞ்சுங்கிளி.

காலம் நகர்ந்துகொண்டிருந்தது.

*

வண்ணான்துறையையொட்டி வாய்க்காலுக்கு அந்தப் பக்கமாயுள்ள சதுப்பு நிலத்தில் செம்மாலை கறுப்படிக்கத் துவங்குகம் வேளையில் மின்மினிப் பூச்சிகள் அம்பாரமாய் எழும்பிப் பறக்கும். கோடி வௌிச்சக் கண்கொண்ட ஒரு தேவதையாய் காட்சி சிறக்கும்.

அந்த நேரத்தில் ஊத்தைப் பேயின் அலைவு இருக்குமென்ற பயம் எவரும் அந்த இடத்தை அணுகுவதைத் தடுப்பதாயிருந்தது. இருந்தாலும் அதையும் மீறிய ஆவலில்  அவ்வப்போது ரகசியத்தில் அங்கே வந்துபோகிறவனாய் இருந்தான் சின்ன பவானந்தன். 

அவ்வாறான ஒருநாளில்தான், கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த அஞ்சுகத்தை முதன்முதலில் அவன் கண்டான்.

இரண்டு பக்க மூக்குத்தி, காதுச் சோணையில் தோடும், தண்டில் வளையங்களுமென  கிராமத்திலே சாஸ்திரம் சொல்ல வரும் குறத்தியின் சாயல்கொண்ட தோற்றம். நல்ல உயரமான, தண்டுதரமான ஆனாலும் மெலிந்த, கபில நிறமுடையவளுக்கு நீண்ட கூந்தலிருந்தது. லேசாய்ச் சுருண்டு கருகருவென்றிருக்கும். பராமரிக்க சிரமமான அந்தக் கூந்தல் அழகுபோல் பவானந்தன் ஊரில் எந்தப் பெண்ணிிடத்திலும் கண்டிருக்கவில்லை.

தோள்வரை மறைத்த தடுப்பு வேலிக்கு மேலாக, அவள் குளித்து முடித்து உடைமாற்றுவதும், பின் முடிந்திருந்த கொண்டைத் திரணையை அவிழ்த்து உலுப்பிவிடுவதும், கட்டில்  வைத்திருந்த சின்ன வட்டக் கண்ணாடி பார்த்து  திலகமிடுவதும் எல்லாம் அவன் கவனித்தான்.

நிழலில் நிற்க அவன் கண்ணுக்கு மறைந்திருந்த திலகம், அவள் நகர்ந்து வெய்யிலுக்கு வர பிரகாசிப்பது கண்டு பவானந்தன் அதிசயப்பட்டான். ஆயினும் அந்தளவு பெரிய பொட்டு, அந்தளவு பெரிய கண்களையுடைய அவளுக்கு வடிவில்லையென எண்ணினான் அவன்.

பெருமழை பிடித்த ஒருநாள் வாய்க்காலில் வீழ்ந்து அதிர்ஷ்டவசமாய் குமாரவேலு சின்னையாவால் காப்பாற்றப்பட்டதற்குப் பிறகு, வண்ணான்துறை  வர வீட்டில் அவனுக்கு தடை விழுந்துபோயிற்று. அவனும் வேறு பராக்குகளில் மின்மினிகளின் வெளிச்சப் பறத்தலை மறந்துபோனான்.

மாரி காலம் முடிந்த ஒரு மாலைக் காலத்தில் மறுபடி மின்மினி பார்க்க ஆசை கிளர்ந்த பவானந்தன் வண்ணான்துறைபோய் எரிவண்டுப் பறப்பில் கண்கள் எரிந்து அவதிப்படுகையில் சைக்கிளை வாய்க்கால் கரையில் உருட்டியபடி போய்க்கொண்டிருந்த குமாரவேலுச் சின்னையாவை கண்டான்.

அவர் அங்கே வருவது புதுமையாய்த் தோன்றிய பவானந்தன் கண்ணைக் கசக்கியபடி அதுபற்றியே யோசித்தவண்ணம் இருந்தான்.

குமாரவேலு சைக்கிளை உருட்டியபடி நடந்துகொண்டே அஞ்சுகத்தின் வீட்டுப் பக்கத்தை அடிக்கடி திரும்பிப் பார்த்தார். அப்போது கடைசிப் பெண் கொஞ்சுங்கிளி வாய்க்காலுக்கு முதுகு காட்டிநின்று மேற்குக் கிடங்குள் அமிழும் சிவப்புச் சூரியன் பார்த்தபடியிருந்தாள்.

அவள் பக்கம் திரும்பித் திரும்பிப் பார்த்து நடந்ததில் வரப்பில் சறுக்கி சைக்கிளோடு வாய்க்காலுக்குள் விழவும் பார்த்தார் அவன் சின்னையா.

அதுபோல் தன் சின்னையாவை பல தடவைகள் அங்கே அவன் கண்டுவிட்டான்.

துறையுலவு ஊத்தைப் பேய்களுக்கு தன்னை எச்சரித்து அவ்விடம் அணுகாதிருக்கச் சொன்னவர், தான்மட்டும் அங்கே வருவதேனென அவனுக்கு யோசனை பிடித்தது.

கொஞ்சுங்கிளி வேலையால் வந்து கிணற்றடியில் குளிக்கும் வேளையிலோ, குளித்துவிட்டு மேற்குக் குழியிறங்கும் செஞ்சூரியன் காணும்வேளையிலோ  சம்பவிக்கும் தனது சின்னையாவின் வருகைகள்பற்றி அவனால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. ஆனால் வாய்க்கால் கரையில் போவது யாரென்று பார்க்கக்கூட முகம் திருப்பாமல் ஏதோ ஆத்திரத்தில்போல் கொஞ்சுங்கிளி நின்றிருந்ததைத்தான் அவன் விளங்கமுடியாது போனான்.

ஒருநாள் அதை அவரிடமே கேட்க எண்ணி ஒரு உரையாடலை பவானந்தன் துவக்கினான். ‘உங்கள வாய்க்கால் கரையில சைக்கிள உறுட்டிவர கனதடவை கண்டிருக்கிறன், சின்னையா.’

‘உந்தக் கல்லுக்குள்ளால ஓடிவந்து சில்லுக்கு காத்துப் போகப் பண்ணுறதவிட, வரம்பில உறுட்டிக்கொண்டு வாறது வலு வசதியெல்லோ? அதோட அது குறுக்குப் பாதையும்தான?’

அவரது சமாளிப்பில் நியாயமிருந்தது.

ஊரின் மேட்டுநில வடிநீரெல்லாம் வாய்க்கால் வழி வயலுக்குள் பரவும். அந்த நீர் தாழ்பூமி செல்லும் வாய்க்காலூடு ஓடி பரவைக் கடலை நிறைக்கும். பின் அங்கிருந்து பயணப்பட்டு ஆழக் கடலுள் போய்க் கலக்கும்.

வாய்க்கால்கள் மதகுகளுடன் கூடிய கல் றோட்டுகளாய் மாறிக்கொண்டிருந்தாலும், ஊர் வெள்ளம் வயல்வெளியில் வடிவதற்கும், அங்கிருந்து கடலுக்குள் பாய்வதற்குமான வாய்க்கால்களின் தேவை அப் பகுதியில் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறதுதான்.

அஞ்சுகம் ஏன் அவ்வாறு முடக்கமானாள் என்பதோ, கொஞ்சுங்கிளியின் திரும்பிப் பார்ப்பதற்குமான மறுப்பு ஏனென்பதோ, சைக்கிளை உருட்டிச்செல்லும் அத்தனை இடைஞ்சல்களையும் தாங்கிக்கொண்டு அவன் சின்னையா ஏன் இன்னுமே வாய்க்கால் கரை வழி செல்கிறாரென்பதோ பதில் கிடைக்காத கேள்விகளாயிருக்கையிலேயே 1983 ஜுலை வந்து சின்னையாவும் ஜேர்மனி போய்ச் சேர்ந்துவிட்டார். பிறகு மற்ற குடும்பத்தவர்களும். கடைசியாக பவானந்தனும்.

*

போன வருஷம் பவானந்தன் ஊர் சென்றபோது செட்டிச்சி வளவு சென்று நிலைமையை விசாரிக்கும் எண்ணத்தோடுதான் சென்றான்.

அதன்படி விசாரித்ததில் செட்டிச்சி இறந்துபோனதும், கொஞ்சுங்கிளி இன்னும் அங்கேதான் தனியாய் இருப்பதும் ஆனால் பெரும்பாலும் வெளியில் காணப்படுவதில்லை என்பதும் அறிந்தான்.

அது அவனுக்குப் புதினமாயிருந்தது. தனிமனுஷி ஆகியிருந்தாலும் அத் தோட்டப் பெருநிலத்தின் சொந்தக்காரியாய் இருக்கிறவள் கல்யாணம் செய்யலாம்; விரும்புகிறவனை இழுத்துக்கொண்டு ஓடலாம்; வெளிநாடுகூட போகலாம். ஏனதில் எதுவுமே செய்யாதிருக்கிறாள் கொஞ்சுங்கிளி?

தன் புதிர் இன்னும் விடுபடாமலே அப் பயணம் அவனுக்கு முடிவடைந்தது.

இரண்டொரு நாளில் ஊருக்குக் கிளம்பவிருக்கின்ற இப்போது, இரவு தூங்காமல் கிடந்து மனத்தை அலைய விட்டிருக்கையில், தான் ஜேர்மனி வருவதன் முன்பான ஒருநாளில் குமாரவேலுவினதோ கொஞ்சுங்கிளியினதோ புதிர் நிலைமைகளோடு தொடர்புற்றதென அதுவரை தோன்றியிராததான கொஞ்சுங்கிளியின் சிநேகிதி கமலா சொன்ன  கதையொன்று அவனுக்கு ஞாபகம் வந்தது.

அன்று ஒரு சனிக்கிழமையாக இருந்ததாம்.

நெசவு சங்கத்தில் மாலை நான்கு மணிக்கு வேலைமுடிந்து லூமிலிருந்து இறங்கிய கொஞ்சுங்கிளியும் கமலாவும் வெளியேவர மழை தூறத் துவங்கியது.

கமலாவின் வீட்டடிக்கு வந்தபோது, ஏற்கனவே பாதி நனைந்துவிட்டதில் மேலே அற நனைய பின்னிற்காத கொஞ்சுங்கிளி, நண்பியிடம் சொல்லிக்கொண்டு மேலே ஓடத் துவங்கியிருக்கிறாள்.

சிறிதுநேரத்தில் சைக்கிளில் குடைபிடித்துக்கொண்டு பின்னாலே குமாரவேலு போவதைக் காணமுடிந்தது கமலாவால்.

படலையில் அவள் நின்றிருக்க, றோட்டு முகரியில் சைக்கிளை மறித்து காலூன்றியபடி நின்றுகொண்டு அவளுடன் குமாரவேலு ஏதோ பேசுவதும், சிறிதுநேரத்தில் கொஞ்சுங்கிளி சைக்கிளில் முன்னால் பாரிலே ஏறிக்கொள்ள சைக்கிள் நகர்ந்துவிடுவதும் மழைத் தாரைகளினூடு மங்கலாய்த் தெரிந்தது.

அதிலொரு பாதகமுமில்லை.

கமலாவும் வீட்டுக்குள் போய்விட்டாள்.

மறுநாள் வேலையில்லாத ஞாயிற்றுக்கிழமை கழிய, திங்கட்கிழமை காலை சந்தித்தபோது கொஞ்சுங்கிளி இயல்பாயில்லை. கமலா காரணம் கேட்க, மழையில் நனைந்ததில் முதல்நாள் முழுக்க உடம்புளைவோடு காய்ச்சல் குணமாயும் இருந்ததென்றாள்.

'இண்டைக்கு எப்பிடியிருக்கு உடம்பு?’

‘இண்டைக்கும் ஒரே அலுப்பாய்த்தான் கிடக்கு’ என அவள் பதிலளித்ததைத் தெரிவித்து, பிறகு அவள் என்றைக்கும் சிரித்து தான் கண்டிருக்கவில்லை என்றிருந்தாள் கமலா.

அதிலிருந்து பவானந்தனால் எதையும் திண்ணப்பட முடியவில்லை. ஆனால் குமாரவேலுவினதும் கொஞ்சுங்கிளியினதும் அந்த நிலைமைகளுக்கு ஏதாவது எங்காவது பதிலிருக்குமானால் அதை அங்குதான் கண்டடையமுடியும் என்பதான ஓர் எண்ணத்தீவிரம் அப்போது அவனுள் முளைத்தது.

அதன் இன்னொரு வடிவம் அவன் குழம்புவது என்பதுதானே?

அக் குழப்பம் அவன் பயணத்திலும், பின் செட்டிச்சி வளவை அடைகிறவரையிலும் அவனில் நின்றிருந்தது.

முந்தியமுறை வந்திருந்ததைவிட இம்முறை நிறைய காணியில் புல் பூண்டுகளும், செடி கொடிகளும்  பெரிது பெரிதாய் முளைத்திருந்தன. இருமுகடுக் குடிசையிலொன்று கழற்றப்பட்டிருந்தது. அவ்விடம், செம்மண் சரிந்த மேடாய் இருந்தது. இடையிருந்த பீலி வேலியோரமெங்கிலும் காணப்படவில்லை. கொத்தி விறகாய் எரிக்கப்பட்டிருக்கலாம்.

குடிசையைச் சுற்றி மானஞ்சம்புப் புல் நிறைய வயலில் நெல்போல் இடுப்பளவு உயரம் வளர்ந்திருந்தது.

பவானந்தன் அதை எண்ணி முடிகிறவரையில் மேற்குப் பார்த்து நின்றிருக்கும் கொஞ்சுங்கிளியின் உருவம் ஒரு திடுக்காட்டத்தோடு கண்ணில் பட்டது.

ஏறக்குறைய அவள் தாயாரே அந்தவிடத்தில் நின்றிருப்பதான தோற்றம். ஆனாலும் அதில் ஒரு வெறுமைதான் பிரகாசமாய்ச் சுடர்ந்துகொண்டிருந்தது.

அதிலிருந்து காத்திருப்பு, அவமானகரம், அமானுஷ்யத்தின் பாதிப்பென அவன் என்ன பதிலைக்கொள்ள? 

அவனது சிந்தனை புதிர்வட்டப் பாதையில்போல் சுழன்றது.

அவன் சூழலை உணர்ந்தபோது இருள் சூழ விழுந்திருந்தது.                                                                                  

அவன் வாய்க்காலோரத்தில் அவதானமாய் நடக்கத் துவங்கினான்.

நிச்சயமாய் அவனுக்கு அங்கே வரும் தேவை இனி இருக்கவில்லை.

 

***

இமிழ் (சிறுகதைத் தொகுப்பு) 2024

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்