Tuesday, June 16, 2015

கலாபன் கதை 2-6தேவதைகளின் கூண்டும்
பிசாசுகளின் வெளியும்


ஆயிரத்து தொளாயிரத்து எண்பதாம் ஆண்டின் ஆரம்பம் அது. தைப்பொங்கல் முடிய வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தவனுக்கு ஞானக்கோன் ஏஜன்ஸியில் கப்பல் பொறியியலாளனாய்ப் பதிய சிரமமிருந்தாலும், முடிந்திருந்தது. முன்புபோல் இந்தியா சென்று கப்பலெடுக்கிற எண்ணத்தை, முந்திய கப்பலைவிட்டு விலகி வீடு வரும்போதே அவன் திரஸ்காரம் செய்திருந்தான்.
வத்தளையில் அவனூர் நண்பர்கள் சிலர் வீடொன்று எடுத்து தங்கியிருந்தார்கள். அவர்கள் அதிகமும் அரச நிறுவனங்களிலும், சிலர் பெயர்பெற்ற தனியார் நிறுவனங்களிலும் வேலைசெய்தனர். அவர்களோடு பெரும்பாலும் தன்னால் ஒத்துப்போக முடியுமென்று நம்பியவன் அங்கேசென்று அவர்களோடு தங்கினான். வாடகை, சமையல் உட்பட்ட செலவுகளை ஏழாக பகிர்ந்துகொள்வது என்பது தீர்மானம்.

ஊர் நண்பர்கள் அதிமாய் இருந்தது ஒருவிதத்தில் கலாபனுக்கு அனுசரணையாக இருந்தது என்றே கூறவேண்டும். லேசாக குடிப்பதற்கு மட்டுமே அவனால் அங்கே முடிந்திருந்தது. வேறு தேடல்கள், ஒருமாதமாகிவிட்டிருந்த அளவில் முளைகொள்ளப் பார்த்தபோதும், நண்பர்களுக்காகவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு அவன் காத்திருக்கவேண்டியதாயிற்று.

ஒருநாள் திடீரென ஒரு தந்தி அவன் பெயருக்கு ஞானக்கோன் ஏஜன்ஸியிலிருந்து வந்தது. விபரம் தெரிவிக்கப்பட்டிராவிட்டாலும் அதன் காரணத்தை கலாபனால் மட்டுமல்ல, அறை நண்பர்களாலுமே அனுமானிக்க முடிந்திருந்தது.

மறுநாள் காலையில் ஏஜன்ஸிக்கு சென்றான் கலாபன்.
அன்றிரவே அவன் கிளம்பி  பம்பாய் துறைமுகத்தில் நின்றிருக்கும் எம்.வி.பிறீஸர் கிங் கப்பலில் சேரவேண்டுமென்று சொன்னார்கள். ஏஜன்ஸிக்கு கையூட்டெதுவும் அவன் கொடுக்கவேண்டி இருக்காதாகையால் கலாபனுக்கு அந்த வேலையை மறுக்க காரணமிருக்கவில்லை.

வத்தளைக்கு திரும்பிய கலாபன் ஏறக்குறைய எல்லாம் தயார் நிலையிலேயே இருந்ததால், மாலையில் விமானப் பயண சீட்டு கிடைத்ததும், நண்பர்களுக்கு அடையாள விருந்தளிப்போடு அதிகாலை ஒன்றரை மணியளவில் கிளம்பவிருந்த  ஏர்லங்கா விமானத்திலேற பத்து மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையம் புறப்பட்டான்.

குண்டுகள் வெடிக்காத, மனிதப் பேரவலம் பெரிதாக நடைபெறாத காலமாக அது இருந்தது. ஆங்காங்கே தமிழ்ப் பகுதிகளில் வங்கிக் கொள்ளைகளும், பொலிஸ் நிலைய தாக்குதல்களும், கைத்துப்பாக்கிகள் மூலமான கொலைகளும் நடந்துகொண்டிருந்தாலும், ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகமும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. கலாபன் கட்டுநாயக்க விமானநிலையத்தை அடைவதில் எந்தத் தடங்கலும் இருக்கவில்லை.
அங்கிருந்து பம்பாயை அடையவும், பம்பாய் விமான நிலையத்தில் காத்திருந்த அங்குள்ள கப்பல் ஏஜன்ற் அவனைச் சந்தித்து உடனடியாகவே பம்பாய் துறைமுகத்தில் நின்றிருந்த கப்பலுக்கு அவனை எட்டு மணிக்குள்ளாக கொண்டுபோய்ச் சேர்த்தார்.

அவனுக்கான கபின் தயாராகவிருந்தது. மதியத்துக்கு மேல் கீழே எந்திர அறையைப் பார்க்கச் சென்றவன் கபினுக்குத் திரும்பியபோது, ஒரு தமிழ் இளைஞன் வாசலில் அவனைக் காத்துக்கொண்டு நின்றிருந்தான்.
நடா என்று பெயர்சொல்லி தன்னை அறிமுகப்படுத்திய அந்த தமிழிளைஞன், மிகுந்த சுயாதீனமெடுத்துக்கொண்டு கலாபனுடைய கபினுக்கு சென்றுவிட்டான். கலாபனுக்கு அதுமாதிரித் தொடர்புகள் விருப்பமில்லாதவை. அவற்றால் சிலசமயங்களில் அவன் சிரமங்களையும், துயரங்களையுமே அடைந்திருக்கிறான். ஆயினும் நடா இலங்கையனாக இருந்ததில் கலாபன் பெரிதாக தன் அதிருப்தியைக் காட்டிக்கொள்ளவில்லை. அவனும் மோசமான பேர்வழிபோல் தோன்றவுமில்லை.

கப்பலெடுக்க பம்பாய்க்கு வந்து மூன்று வருடங்களென்றான். கப்பல் அனுபவத்தைத் தவிர மற்றெல்லா அனுபவங்களையும் அந்த மூன்றாண்டுகளில் சம்பாதித்துள்ளதாக ஒரு துயரச் சிரிப்போடு சொன்னான்.
அன்று மாலை கலாபன் வெளியே சென்றபோது நடாவையும் அழைத்தே சென்றான். அவனிடமிருந்த தகவல்கள் மிகவும் வித்தியாசமானவையாக இருந்தன. அதைக் கிரகிக்க ஒரு பார்போல பொருத்தமான இடம் வேறெது இருக்கமுடியும்?

கலாபனுக்கு பம்பாய் பழைய இடம். ஆனாலும் கடந்த சில காலமாக அவன் பம்பாய்க்கு வந்திருக்கவில்லை. அது அந்த இடைக்காலத்தில் எவ்வளவோ மாறியிருந்தது. கட்டிடங்களாலும், தன்மையாலும். அதனால் கலாபனுக்கு அவனுதவி தேவையாயிருந்தது. அவன் பிரச்னையில்லாத, அதிகம் செலவு ஏற்படாத ஒரு றெஸ்ரோறன்ருக்கு இருவரும் போகலாமென்றான்.

சிறிதுநேரம் யோசித்துக்கொண்டிருந்த நடா கேட்டான்: “அண்ணை, ஆற்றயும் வீடாயிருந்தால் உங்களுக்குப் பறவாயில்லையோ?”

“ஆற்றயும் வீடெண்டா…?”

“எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆங்கிலோ இந்தியக் குடும்பம் இஞ்ச வி.ரி.யிலதான் இருக்கு. ஒரு வயதுபோன மனுசிக்கு ரண்டு பொம்பிளைப் பிள்ளையள். ஓண்டு கலியாணமாகி புருசன் விட்டிட்டுப் போட்டான். ஒரு பிள்ளையிருக்கு. மற்றப்பெட்டைக்கு கலியாணமாகேல்ல.”

“அப்பிடியான இடமெண்டா இன்னும் கூடுதலான பிரச்னைதானே வரும்.”
“ஒண்டும் வராதண்ணை. நான் இருக்கிறன்தானே, பயப்பிடாம வாருங்கோ.”
“போர்ட்டுக்கு கிட்ட இருக்கிறதால வாறன்.” கலாபன் அங்கே செல்ல இறுதியில் சம்மதித்தான்.

போர்ட்டுக்கு  அண்மையில் இருப்பதால் அங்கே செல்லலாமெனச் சொல்லியிருந்தாலும், கலாபனின் மனத்தில் வேறு நினைவுகளே ஓடியிருந்தன.

அந்த ஆங்கிலோ-இந்திய குடும்பத்தின் வீட்டுக்குச் சென்றபோது வேறு இரண்டு மூன்று பேர் அங்கேயிருந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உள்ளே சென்றதும், இந்தியிலோ மராத்தியிலோ அந்த பெரியன்ரியை அழைத்து தமக்கு விஸ்கி வாங்கித்தர சொன்னான் நடா.
கலாபனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, தன்னிடம் இந்திய ரூபாய் இல்லையென்பது. ஐம்பது டொலர் எடுத்துக்கொடுத்தான். பெரியம்மா எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு வெளியே சென்றாள். வெளிநாட்டுப் பணம் மிகச் சாதாரணமாக மாற்றக்கூடிய இடமாக வந்துவிட்டதா பம்பாய்? கலாபன் அதிசயித்தான்.

கலாபன் அந்த வீட்டை நோட்டமிட்டான்.

;ட’பட அமைந்த கூடம். இரண்டு அறைகள் இருந்தன. ஒரு பகுதியை சமையலறையாக பாவித்தார்கள். எண்ணெய் அடும்பும், மேடையும், சில்வர் பானை சட்டிகளும் இருந்தன.

கலாபனும் நடாவும் சிகரெட் புகைத்தனர். அது முடிவதற்குள் பெரியம்மா விஸ்கி போத்தலோடும், சிகரெட் பைக்கற்றோடும் வந்துவிட்டாள்.

பாதி போத்தல் முடிந்தளவில் நடா மிழற்றத் தொடங்கிவிட்டான். அதன்மேல் பம்பாயிலிருந்த இலங்கைத் தமிழிளைஞர்கள்பற்றி அறிவதில் கலாபனுக்குச் சிரமமிருக்கவில்லை. இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டம் மிகுந்த வீச்சு பெற்றிராத அந்தக் காலத்தில், பெரும்பாலான இளைஞர்கள் கப்பலெடுக்கவென்றே தம் மண்ணை நீங்கினர்.

ஒருகாலத்தில் வாழ்க்கை அழைத்த பக்கங்களுக்;கெல்லாம் ஓடியோடி தமிழினம் மாய்ந்த வரலாற்றை ரத்தம் சொட்டச் சொட்ட கவிதையாக்கினான் ஒரு கவிஞன். பாரதி என்றழைக்கப்பட்ட அந்த மகாகவிஞனின் கவிதைதான் கண்ணற்ற தீவில் தமிழகத்திலிருந்து சென்ற தமிழரடைந்த துயரவரலாற்றைச் சொன்னது. அடுத்து ‘துன்பக்கேணி’ என்றொரு கதையெழுதினான் இன்னொரு மகாகலைஞன். அதுவும் தமிழகத் தமிழர்கள் தம் மண் பிரிந்து இலங்கையின் மலைநாடு சென்று பட்ட கொடுமைகளை, அடைந்த துயரங்களையும் மரணங்களையும் பேசியது. 1970களில் இந்தியா வந்து அதன் அனைத்து துறைமுக நகரங்களிலும் வாழ்வைத் தொலைத்த இலங்கைத் தமிழிளைஞர்களின் கதைதான் இனி எழுதப்படவுள்ளது என நினைத்தான் கலாபன்.

சிவபாலனோடு நண்பனாகியதிலிருந்து அவனுக்கும் இலக்கியார்த்தமாய்ச் சிந்திக்க இப்போதெல்லாம் முடிந்திருந்தது.

நடா பெரியன்ரியை கூப்பிட்டு முட்டை வறுத்து தரச்சொன்னான்.

முட்டை வறுவல் வந்தது. இன்னொரு அரைப் போத்தல் விஸ்கி கேட்டான். பெரியன்ரி வாங்கிவந்து கொடுத்தாள். நடா குடிப்பதும், கதை சொல்வதுமாய். கலாபன் கேட்டபடியிருந்தான்.

ஒருபோது ஞாபகம்வர பெரியன்ரியின் மகள்களைப்பற்றிக் கேட்டான் கலாபன். “அவை வெளியில வரமாட்டினமோ?”

“இனித்தான் வருவினம். பிள்ளை நித்திரை கொள்ள ரீட்டா வருவாள். அதுக்குப் பிறகு கொஞ்சநேரத்தால ஜெஸ்மின் வருவாள்” என்ற நடா, கலாபன் தூண்டாமலே திரும்ப கதைக்குள் நுழைந்துவிட்டான்.

இப்போது நடாவுக்கு நன்கு போதையேறியிருந்தது தெரிந்தது. இனி பெரிதாக அவனிடமிருந்து பிதற்றல் தவிர வேறெதுவும் வெளிவராதென்பதை கலாபன் உணர்ந்தான். ஆனாலும் போக மனமில்லாதிருந்தது கூண்டுக்குள்ளிருக்கும் அந்த இரண்டு பெண்களையும் காணும்வரை.

பெரியன்ரி வெளியிலேயே அமர்ந்துகொண்டிருந்தாள். இன்னும் சிலர் வந்தார்கள் சிறிய குப்பிப் போத்தலுடன். சிறிதுநேரத்திலேயே குடித்துமுடித்து போயினர். அவர்கள் காசு கொடுத்ததைப்; பார்க்க கிளாஷுக்கு இத்தனை ரூபாயென்று பெரியன்ரி ஒரு தொகை வாங்குவதாக கலாபன் கருதினான்.
கலாபனுக்கு நடாவிடமிருந்து இன்னும் சில விஷயங்கள் உள்ளேயிருக்கும் அந்த இரண்டு பெண்களையும்பற்றி தெரியவேண்டியிருந்தது. அவன் கேட்டான்: “நடா, அந்த ரண்டு பிள்ளையளும் உண்மையில பெரியன்ரியின்ர பிள்ளையளோ?”

“எனக்குத் தெரியாதண்ணை. ஆனா அவளவையும் அன்ரியெண்டுதான் கூப்பிடுகினம். சொந்தக்காறராய் இருக்கும். அவ்வளவு நெருக்கம் அவைக்குள்ள. பெரியன்ரிக்கு தலையிடியெண்டாக்கூட அவளவை துடிச்சுப் போவாளவை. அவளவைக்கு ஒரு காச்சல், இருமலெண்டாலும் பெரியன்ரியும் அப்பிடித்தான்” என்றான் நடா.

“அவை நல்லாக்கள்தானோ? இல்லாட்டி அப்பிடியிப்பிடியோ?”
“இப்பவே பத்தரை மணியாச்சு. இனித்தான் வெளிய வருவினமெண்டேக்கயே உங்களுக்கு விளங்கியிருக்கவேணுமண்ணை. முதல்ல தமக்கை வருவா. பிறகு தங்கச்சியார் வருவா. சும்மா ஆக்களிட்ட போகமாட்டாளவை. எல்லாம் கப்பல்காறர்தான். சிலோன் பெடியள்தான் அதிகமாய் வாறது. ஆனா பாத்தா நம்பமாட்டியளண்ணை, இவளவை இப்பிடி நடக்கிறாளவையெண்டு.”

அப்போது அறைக்குள்ளிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். சேலை உடுத்தியிருந்தாள். தடிமனாக இருந்தாள். அந்த உயரத்துக்கு உருவம் பெரிதுதான். ஆனால் ஒரு பரு வந்த மறுகூட இன்றி முகம் பளீரென்று நி~;களங்கமாய் இருந்தது. முகத்தில் சலனத்தின் எந்தச் சாயலும் இல்லை. கண்டு அதிர்ந்துறைந்திருந்தான் கலாபன்.

அவனது பார்வையை எதிர்ப்பட மெல்லச் சிரித்தாள். பற்கள் மின்னின. இயல்பில் சிவந்த இதழ்களுக்கிடையில் அந்த வெண் பற்கள், பாரதி சொன்னதுபோல் ‘தின்பதற்கு மட்டுமல்ல, தின்னப்படுவதற்குமான பற்க’ளாய் இருந்தன. அந்த அழகு அவன் எதிர்பார்த்திராதது. தெய்வீகமான அழகு என ஏதாவதிருந்தால் அதுதான் அந்த அழகு என்பதில் கலாபனுக்கு உறுதியிருந்தது.

பெரியன்ரியுடன் கதைத்துவிட்டு திரும்ப அவளை நடா அழைத்தான்.
முதலில் தலையை அசைத்தாள். பின் மெதுமெதுவாக நடாவோடு பேசியபடியே வந்து கலாபனின் அருகில் அமர்ந்தாள்.

இனி நடாவின் உதவி அவனுக்குத் தேவையில்லை.

அவன் அவளைப் பார்த்து குடிக்கிறாயாவென்று விஸ்கி போத்தலைக் காட்டினான். உடனே தலையிட்டு, “நோ… நோ… பெரியன்ரி, ஏக் பியர் லேக்கியாவோ” என்றான் நடா.

“நீ பியர் குடிப்பதால்தான் இப்படி மொத்தமாக இருக்கிறாய். விஸ்கி குடித்தாயென்றால் இந்த உடம்பு கொஞ்சநாளிலேயே பாதியாய்க் குறைந்துவிடும்” என்றான் கலாபன்.

உடனே ரீட்டா பெரியன்ரியை கூப்பிட்டு தனக்கு பியர் வேண்டாமென்றும், அன்றைக்கு தான் விஸ்கியே குடிக்கப்போவதாகவும் சொன்னாள்.
ஒரு தடம் கலாபனை நோக்கி எறியப்பட்டாயிற்று.

ரீட்டா கிளாஸ் எடுத்துவந்து விஸ்கி ஊற்றிக் குடிக்கவாரம்பித்தாள். “உனக்கு ஒன்று தெரியுமா? நான் ஆரம்பித்ததே விஸ்கியில்தான்.”

அப்போது ஜெஸ்மின் வந்தாள். மெலிந்து உயரமாக இருந்தாள். மிக இளமையாய்த் தோன்றினாள். நீளப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தாள். அழகும், லாவகமும் பொருந்திய அந்த உடம்பு ரீட்டாவுக்கு சமதையான பொலிவுகொண்டு விளங்கியது.

நீண்;டநேரமாக அவளையே கலாபன் கவனித்துக்கொண்டிருப்பது கண்ட ரீட்டா, அவளை அவன் விரும்பினால் அழைக்கலாம் என்ற ஊடு விடுவதுபோல் தனது கிளாஸ{டன் எழுந்து அங்காலே குடித்துக்கொண்டிருந்த இருவரையும் நோக்கிச் சென்று பேசிக்கொண்டு நின்றாள்.

இந்த விபரங்களெல்லாம் தெரியாமல் இருக்க முடியாது நடாவுக்கு. அவன் ஜெஸ்மினை அழைத்தான்;. கலாபன் உடனேயே வேண்டாமென்றுவிட்டான்.
சிறிதுநேரத்தில் இன்னும் இரண்டு இளைஞர்கள் வந்து அவளிடம் பியர் கேட்டனர். கடலோடிகளாய்த் தெரிந்தது. இலங்கை இளைஞர்களாகவும் தோன்றியது. “நேற்று இவங்கள் வந்து அவளோடதான் படுத்திட்டுப் போனாங்கள்” என்று கலாபனுக்கு கூறினான் நடா.

கலாபன் சிகரெட் எடுத்துப் புகைத்தான்.

அவனது சிந்தனை எங்கோ பறந்தது.

‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழி ஊரிலிருக்கிறது. அது ஆயிரமாயிரமாண்டுப் பழமையான மொழியும். இவ்வளவு அர்த்தத்தோடு இலக்கியத்திலும் இது ஏறியுள்ளது.

இவ்வளவு அரும்பாடுபட்டு செல்வத்தைச் சேர்ப்பது தானும், தன் குடும்பத்தாரும் வாழவும், ஈகைக்காகவுமென்று சங்க மருவிய காலத்து நூல் சொல்கிறது. இது சங்கமருவிய காலத்தில் மட்டுமில்லை, இன்றைக்கும் இருக்கவேண்டிய பண்புதானே? இன்றைய இலங்கை இளைஞர்கள் இவ்வாறு மதுவிலும், மாதுவிலுமாக திரைகடலோடிச் சம்பாதித்ததை செலவுசெய்வார்களானால் திரவியத்தை எவ்வாறு வீடுகொண்டுபோய்ச் சேர்க்கமுடியும்? தேடத்தானே திரைகடல் ஓடுகிறான்?

கலாபனது சிந்தனையை ரீட்டாவின் பிரசன்னம் கலைத்தது.

“என்ன யோசித்துக்கொண்டிருந்தாய்?” ரீட்டா கேட்டாள்.

“ஒன்றுமில்லை.”

“ம்.”

அவள் விஸ்கி ஊற்றி குடித்தாள். சற்றுநேரம் செல்ல கேட்டாள், “நீ இன்றைக்கு இங்கே தங்குவாயா?” என.

“நேற்றிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டு இன்று காலையில்தான் கப்பலில் சேர்ந்திருந்தேன்.”

“பயணக் களைப்பா?”

“ஓரளவு.”

“கப்பல் எப்போது புறப்படுகிறது?”

“நாளை மாலையில். துபாய்க்குச் செல்கிறது.”

“அங்கிருந்து எங்கே? ஏதாவது ஐரோப்பிய நாடொன்றுக்காயிருக்கும். நீ கவலைப்படத் தேவையில்லை.”

“இல்லை, திரும்பவும் இங்கேதான். பம்பாய், கல்கத்தா அல்லது மங்க@ர் எதுவாகவும் இருக்கும்.”

“இப்போது என்ன செய்யப்போகிறாய்?” என  ரீட்டா கேட்க, கலாபன் சிறிதுநேரம் யோசித்தான். அது பாலியல் தொழிலாளிக்கான தேவையின் அழைப்புத்தான். ஆனாலும் அவளோடு அன்றைய பொழுதுக்கு இன்;னுமொருவன் வந்து சேரக்கூடுமானாலும், அவள் உள்ளுள்ளாய் அக்கணம் அடைந்த ஒரு துக்கத்தின் இழை முகத்தில் கவிந்திருந்து அவள் அழகையே அழித்துக்கொண்டிருந்தது.

அதை அவன் அனுமதித்துவிட முடியாது. “நான் தங்குகிறேன்” என்றான் கலாபன்.

அப்போது அவள் முகம் மலர்ந்தவிதத்தில் கலாபன் மனம் குளிர்ந்தது.
அவர்கள் நேரமாக ஆக தனியுலகமாகிப் போனார்கள். பெரியன்ரி வந்து தூங்கி விழுந்துகொண்டிருந்த நடாவை எழுப்பி தங்குமிடத்துக்குச் செல்ல அனுப்பினாள். டாக்ஸியில் செல்ல கலாபனிடம் இருபது ரூபா வாங்கிக்கொண்டு நடா வெளியேறினான்.

அப்போது நடாவை இடிப்பதுபோல அவசரமாக ஒருவன் உள்ளே வந்தான். ஏதோ மராத்தியில் கத்தினான். பெரியன்ரி அலுமாரியைத் திறந்து எதையோ எடுத்துவந்து அவசரமாக நீட்டினாள். ரூபாய்கள். வாங்கி எண்ணிப்பார்த்துவிட்டு “அச்சா” என்றுவிட்டு வந்த வேகத்திலேயே வெளியேறினான் அவன்.

கலாபனால் கதையொன்றை அப்போதே புனைய முடிந்தது. அதுவல்ல அவனது விருப்பம். கதையைவிடவும் முக்கியமானது அதிலுள்ள உணர்வு. அதை ரீட்டாவால்மட்டுமே அந்தக் கதையில் செறிக்க முடியும்.
உள்ளே சென்ற பின்னால், “யாரவன்? பெரியன்ரி பணம் கொடுத்தாளே, அவன்தான்” என ரீட்டாவை கலாபன் வினவினான்.

“நீ கவனித்தாயா? ம்… அவன்தான் எனது விதியையும், என் தங்கையின் விதியையும் நிர்ணயித்தவன். எங்கோ பெற்றோர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்த எங்களை அவர்களிடமிருந்து பிரித்து, எங்கோ வைத்து வளர்த்து பிறகு இங்கே கொண்டுவந்து சேர்த்தவன் அவன்தான். விதியை எழுதியதனால் அவனே எங்கள் கடவுள்.”

அத்தனை சோகத்தை அவ்வளவு வார்த்தைகளில் ஏற்ற முடியுமா? கலாபன் அதிசயித்தான்.

அவனது கதைக்கு அப்போது உணர்வு கிடைத்தது.

000


தாய்வீடு, ஜூன் 2015
No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...