Tuesday, June 16, 2015

ஏற்புரை…இலக்கியத் தோட்ட நாவல் விருது

இலக்கியத் தோட்ட நாவல் விருதுக்கான 3  நிமிட ஏற்புரை…

-தேவகாந்தன்-


வணக்கம்! கனவுச்சிறை நாவலுக்கு 2014ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது கிடைத்தமைக்காக  அவ்வமைப்பினைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும், நடுவர்களுக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சர்வதேச அளவில் மிக முக்கியமான தமிழ் விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விருது ‘கனவுச் சிறை’ நாவலுக்கு கிடைத்தமைக்காக உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நாவல் கதைகொண்டிருக்கும் காலம் 1981 தொடங்கி 2001 வரையான இருபத்தோராண்டுகள். எனினும் அது விரிந்திருக்கும் வெளி இலங்கைச் சரித்திரத்திரத்தில் இருபத்தொரு நுர்ற்றாண்டுகள். அரசியல், மதம், கலையென அது விகாசம்கொண்டிருக்கும் தன்மை இதில் முக்கியமானது. நொடி என்று கால அளவையின் மிகச் சிறிய பகுதி தமிழில் குறிக்கப்படுகிறது. அதையும் உன்னல் கால், உறுத்தல் அரை, முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்று என நான்காக வகுத்திருக்கிறது தொல்காப்பியம். ஆயிரம் பக்கங்கள்கொண்ட இந்த நாவலிலும், ஐந்து பாகங்கள், பதினொரு பகுதிகளென நுண்மையாக வகுக்கப்பெற்ற பல்வேறு பகுப்புக்கள். 1981, 1983, 1985 என இருபத்தோராண்டுக் காலம் பதினொரு காலப் பகுதிகளில் அமைகிறபோது, அது தழுவிச் செல்லவேண்டிய மேலும் பத்து வரு~ங்களான 1982,1984,1986 ஆகியவற்றின் கதை பின்னே நகர்ந்து செல்வதின் மூலம் வளைந்து வளைந்து செல்லும் நாகமாக தன்னை வடிவமைத்த நாவலும் இது. இந்த அமைப்பு நான் எழுதும்போதே நினையாப் பிரகாரமாய் அமைந்ததுதான். எனினும் அதுவே நாவலின் விசே~மான அம்சமாக பலராலும் சொல்லப்பட்டிருந்தது.

1981-2001 வரையான காலத்தைப்போல் 2009வரையான மீதி நிகழ்வுகளை எப்போது நாவலாக்கப் போகிறீர்கள் என்று சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அப்படியொரு அபிப்பிராயம் இல்லையென்று அவர்களுக்குப் பதில்கூறியிருந்தேன். உண்மையும் அதுதான். இந்த ‘கனவுச்சிறை’யை எழுத எப்படி என்னிடம் திட்டமிருக்கவில்லையோ, அப்படித்தான் அது. ‘தோன்றியது, எழுதினேன்’ என்பதுதானே விஷயம்!

திருப்பி திருப்பி கைகளாலே எழுதப்பட்டதில் சுமார் ஐம்பதாயிரம் முழுநீள பக்கங்கங்களை அழித்துவிட்டு, இரண்டாயிரம் பக்க கையெழுத்துப்  பிரதியாக இந்நாவல் இறுதியில் தேறியிருந்தது. ஒற்றைத் தொகுப்பாக 1998லேயே வந்திருக்க வாய்ப்பற்றுப் போனது இந்நாவலுக்கு. இது அரசியலைப் பேசுவதாக இருக்குமோ என்ற சில பதிப்பகங்களின் பயம் அதன் காரணமாக இருந்தது. இது அரசியலைப் பேசியதுதான். ஆனால் அது பேசியது அகதிகளுக்கான அரசியலாகவே இருந்தது.

பதினாறு ஆண்டுகளின் பின் அச் சாத்தியம் இன்று நிறைவேறியிருக்கிறது. அச் சாத்தியத்தை அளித்த காலச்சுவடு பதிப்பகத்துக்கும், அதற்கு நீண்டவொரு முன்னுரையை வழங்கிய திரு.தேவிபாரதிக்கும் என் நன்றிகள். தமிழ் இலக்கியத் தோட்டத்தினருக்கு மீண்டும் என் மனதார்ந்த நன்றிகள்.
வணக்கம்.
000

கனவுச்சிறை நாவலுக்கான தமிழ் இலக்கிய தோட்டவிருது விழா ஏற்புரை 
06.16.2015

No comments:

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...