Friday, April 11, 2008

அதை அதுவாக 19

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 19


‘உரைகாரரின் திரிப்புகள் பல குறள்களின் அர்த்தங்களையே மாற்றிவிட்டிருக்கின்றன.’


- தேவகாந்தன் -(48)

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
(பொருள், குடியியல், மானம் 4) குறள் 964


தன் நிலைமையிலிருந்து தாழ்ந்துவிட்ட மனிதனை ஒருவரும் மதிக்கமாட்டார்கள்.


தலையிலுள்ளபோதுதான் கூந்தல் அல்லது சிகை. இழிந்துவிட்டால் மயிர். கூந்தலைப் பேணலாம். மயிரைச் சீண்டுவார் இல்லை.

அதுபோலத்தான் தம் நிலையில் மாறாதிருக்கும்வரையில்தான் ஒருதருக்கு மதிப்பு. நிலை பிறழ்ந்துவிட்டால் மதிப்பே இல்லை.

இழிந்த என்ற சொல்தான் இங்கே முக்கியம்.

இழிதல் என்பது உதிர்தல். கெடுதல் என்ற அர்த்தமும் உண்டு. மேலேயுள்ள குறளிலுள்ள முதலாவது ‘இழிந்த’, உதிர்தல் என்ற அர்த்தமுடையது. இரண்டாவது ‘இழிந்த’, கெடுதல் என்று பொருள்படும்.

நிலைகெட்டவர் இந் நிலவுலகில் மதிக்கப்படுவதில்லையென்பது நிஜமேயானாலும், இங்கே சந்தர்ப்பவசத்தால் நிலை கெடலை வள்ளுவன் குறிக்கவில்லை. அப்போதுகூட நிலை சீண்டுவாரற்றதாகவே இருக்கும்தான். ஆனாலும் அவன் இங்கே குறிப்பது தகுதியில்லாதவற்றைச் செய்வதின் மூலம் நிலை பிறழ்தலைப் பற்றியே.

ஒருபோதும் மனிதன் தன்னிலை கெட்டுவிடக்கூடாது என்பதே இக் குறளின் போதனை.


(48)

பிறக்கொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
( பொருள், குடியியல், பெருமை 2) குறள் 972

பிறப்பால் சகல உயிரும் சமம். தொழிற் பாகுபாடுகள் காரணமாய் பிறப்பில் சிறப்பேதும் ஏற்படுவதில்லை.


பொருட்பாலின் குடியியல் சார்ந்த அதிகாரம் இது. இதை ஒழிபியல் என்று கூறும் பரிமேலழகர் உரையின் பழைய கழகப் பதிப்பு.

கழகப் பதிப்பில் பொருட்பாலில் இயலே மூன்றுதான் வரும்.

மு.வ. தெளிவுரையில் பொருட்பாலில் ஏழு இயல்கள். இதுவும் கழகப் பதிப்புத்தான்.

வேறு உரை நூல்களும் ஏழு இயல்களாகவே வகுக்கும்.

இந் நிலையில் இயல்கள் வகுக்கப்பட்டதுபோல் அவரவரும் தம்தம் கருத்துக்கேற்ப குறளிலும் திரிபுகளைச் செய்யவில்லையென்று எவ்வாறு நம்புவது?

ஆனாலும் இது இங்கே முக்கியமில்லை. குறளின் கருத்தே கவனிக்கப்படவேண்டியது.

பிறப்பால் பேதமில்லை, செய்யும் தொழிலே பேதத்தை உண்டாக்கிறதென்ற அர்த்தத்தையே பரிமேலழகரிலிருந்து மு.வ. ஊடாக அண்மைக் காலத்திய குறளின் உரைகாரர்வரை கொண்டிருக்கிறதானது வள்ளுவன் சொன்னதற்கே எத்தகைய முரண்!

‘பிறப்பு ஒக்கும் எல்லாவுயிர்க்கும். செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வா’ என்று பார்ப்பதில் என்ன சிரமம் இருந்தது?

‘பிறப்பால் சகல உயிரும் சமம். செய்தொழில் வேறுபாடுகள் எந்தச் சிறப்பையும் எவ்வுயிர்க்கும் ஏற்படுத்திவிடா’ என்பதே நேர் அர்த்தம்.

சற்றே கோணலாகப் பார்த்தாலுங்கூட இதற்கு எதிர்மாறான அர்த்தம் வந்துவிடாது. வாழ்க உரைகாரர்!

‘செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்க லாதார்’ என்றொரு குறள். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள், அவ்வாறு செய்ய இயலாதவர்கள் சிறியவர்கள் என்பது இதன் பொருள். முன்பகுதியை ஏற்றுக்கொள்ள முடிகிற அதேவேளை, செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய முடியாதவர்கள் சிறியர் என்ற அர்த்தத்தைத் தரும் பகுதியையுமா ஏற்றுக்கொள்ளமுடியும்?

உண்மையில் ஒரு எழுத்தின் திரிபே இந்த அளப்பரிய கருத்து மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது காண்கையில் வியப்பாயிருக்கிறது. இரண்டாவது அடியின் முதற் சீரில் ‘கு’ வரவேண்டிய இடத்தில் ‘க’ வந்ததே இதற்குக் காரணம். அப்படியாயின் ‘செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்குரிய செய்க லாதார்’ என்பதாக குறள் இருந்திருக்கவேண்டும்.

அரிய காரியங்களைச் செய்வோர் பெரியோர், இயலக் கூடிய காரியங்களையும் செய்யாதவர்கள் சிறியர் என்பதாய்த் தவிர வள்ளுவன் வேறு அர்த்தம் கொண்டிருக்க முடியமா?

‘எல்லாத் திரிப்பும் திரிப்பல்ல திருக்குறளில் உரைகாரர் திரித்ததே திரிப்பு’
என்று கத்திவிடலாம் போலிருக்கிறது எனக்கு.
000

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...