நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்…




மண்ணுக்கும் மனித மனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாய்க் காலங்காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. மண்ணின் வளம் பயிர்களுக்கு மட்டுமில்லை, மனங்களுக்கும் ஏற்படுமென்பதை சொல்லித் தெரியாமல் உணர்வதற்கான தருணம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதபடி நிகழும். ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று சொல்லப்பட்டது சும்மா இல்லை. உணர்ந்துதான்.

ஒரு தசாப்தத்துக்கும் மேலான ஆண்டுகளை நான் தமிழ்நாட்டிலே கழித்திருக்கிறேன். இந்திய உபகண்டத்தின் பல்வேறு நிலப் பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன். இந்தியாவின் தென்கோணம் தொடங்கி வடகோணம் ஈறாக, கீழ்த் திசையிலிருந்து மேற்றிசைவரை என் பயணம் பல தடவைகளில் நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் திருநெல்வேலிபோலவும், கேரளாவில் தலைச்சேரி போலவும் மிக அரிதான இடங்கள்  சிலவற்றையே என்னால் பார்க்க முடிந்திருக்கிறது.

திருநெல்வேலி எனக்குச் சின்ன வயதிலேயே பெயர்ப் பரிச்சயமான ஊர். திருநெல்வேலியிலேதான் பாஞ்சாலங்குறிச்சி இருக்கிறது. கட்டபொம்மனைப்பற்றிய சினிமா ஐம்பதுகளின் நடுப்பகுதியில் வெளிவந்தபோது ஞாபகத்தில் விழுந்த சொல், பின் எப்போதும் என் நினைவைவிட்டு அகலவில்லையென்றே தோன்றுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு ஜில்லாக்களில் திருநெல்வேலியை மட்டுமே திருநெல்வேலிச் சீமையென்று அழைக்கும் வழக்கு இந்தியாவில் பிரிட்டிஷ்காரரின் காலத்திலிருந்து தொடங்கியதுதான். ஆனாலும் காரணமில்லாமலில்லை. தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் வளம் கொழித்த பூமி திருநெல்வேலி. பாரதி பிறந்தது அங்கேதான். புதுமைப்பித்தன் பிறந்தது அங்கேதான். இன்னும் வண்ணதாசன், வண்ணநிலவன், தி.க.சி., சிதம்பர ரகுநாதன், ராஜமார்த்தாண்டன், வல்லிக்கண்ணன் எனப் பல்வேறு படைப்பாளிகளும், விமர்சகர்களும் பிறந்த ஊரும் அது.

மாரி காலம் முடிந்து, தாமிரபரணி பொங்கிப் பாயும் அழகைப் பார்க்கவேண்டும். கண்கொள்ளாக் காட்சி.

இந்தப் பெருக்கு இவர்களின் மனங்களில் இருக்கிறது. இது ஒரு தீவிரத்தின், கலகத்தின் அம்சமாகவே எனக்குத் தெரிகிறது.

அண்மையில் 'சென்னைச் சங்கமம்' நடந்து முடிந்திருப்பதாகவும், கிராமியக் கலைகளுக்கான அவ்விழாவில் கவிதை வாசிப்பு போன்ற பல்வேறு இலக்கியக் களங்கள் நடைபெற்றதாகவும் அறிய முடிந்ததிலிருந்து திருநெல்வேலி பற்றிய நினைப்பு மீண்டும் என்னுள் அலையடிக்க ஆரம்பித்துவிட்டது.

இலங்கையில் எமது 'திண்ணைவேலி'போல திருநெல்வேலி இருப்பதாலும், இந்த மாவட்டத்திலிருந்தே பல தமிழ்க் குடும்பங்கள் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இலங்கை மலைநாட்டில் குடியேற்றப்பட்டார்கள் என்ற அறிகை இருந்ததாலும் என்னுள் விழுந்த ஒரு பிரியம், இன்று பேரினவாதத்தால் இலங்கையில் திருநெல்வேலி பல்கலைக் கழகத் தமிழ் மாணவர்கள் குறிவைத்து அழிக்கப்படும் அவலத்தினால் அக்கறையாகியிருந்த தருணமாதலாலும் இந் நினைவின் அலையடிப்பு வெகு தீவிரம்பெற்று இருந்தது.

அதனால் திருநெல்வேலியும், அவ்வூர் சார்ந்த சில நண்பர்களும், அவர்களுக்கும் அந்த மண்ணுக்குமிடையில் இருந்த பண்புத் தொடர்புகளும் என்னில் இடையறா நினைப்புக்களாயின. அதுபற்றித்தான் இங்கே தெரிவிக்க வருகிறேன். இது தனிமனித சம்பவத்தின் பதிவு மட்டுமில்லை, இலக்கியப் பதிவுமாகும்.

'சென்னைச் சங்கம'த்தில் நடந்த கவிதை அமர்விற்குத் தலைமை வகித்தவர் கவிஞர் விக்கிரமாதித்யன் என்று அறிந்தபோது, மிக்க மகிழ்ச்சிப்பட்டேன். விக்கிரமாதித்யன் நல்ல கவிஞர் மட்டுமில்லை, எனது நண்பருமாவார். ‘சிம்மாசனம் இல்லாத ராஜா’ என்று இவரைப்பற்றி ஒருமுறை ஜெயமோகன் குறிப்பிட்டது உடனடியாக ஞாபகம் வருகிறது.

கவிதை உலகில் விக்கிரமாதித்யனின் நடை தனித்துவமானது. ஆனாலும் ஒரு கலகக்காரராக அவரை வாசக உலகம் அறிந்திருந்ததே தவிர, அவரது கவிதை ஆற்றலை அது பெரிதாகக் கண்டுகொள்ளவேயில்லை. அதனால்தான் ஜெயமோகன் அவ்வாறு கூறியிருந்தார். இப்போதாவது அரச எடுப்பின் அக் கிராமியக் கலைவிழாவில், நூறு கவிஞர்கள் கவிதை வாசித்த அமர்வுக்கு அவர் தலைமை தாங்கியது ஒரு ‘சிம்மாசனம்’ கிடைத்ததுபோலத்தான் என நினைத்ததே என் மகிழ்வுக்குக் காரணம்.

ஏறக்குறைய தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து எனக்கு கவிஞர் விக்கிரமாதித்யனை அறிமுகம். தொண்ணூற்றைந்துக்கு மேலே மிகநெருக்கமாகப் பழகியிருந்தோம். திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்ததும், நேரே வீடுவந்து என்னைச் சந்திக்கிற நண்பர் அவர். ஊரிலிருந்தாலும் கிழமைக்கு ஒருமுறையாவது கடிதமெழுதிவிடுவார். பெரும்பாலும் சுகதுக்கங்கள் விசாரிக்கிற கடிதங்களாக அவை இருப்பதில்லையென்பதுதான் அவற்றின் விசேஷம். தான் அப்போது தங்கியுள்ள ஊர்பற்றி, அங்குள்ள நண்பர்கள்பற்றி, அண்மையில் வெளிவந்த அல்லது வெளிவரவிருக்கும் நூல்கள் பற்றியதாகவே அவை இருக்கும். அவரது இயற்பெயர் நம்பிராஜன். நம்பியென்றே நான் அழைப்பேன்.

விக்கிரமாதித்தயன் கலக்காரர். அதுபோலவே சிறீரெங்கனும். விக்கிரமாதித்யன் அளவு சிறீரெங்கன் பிரபலமில்லை. ஆனாலும் கலகக் குணம் இருவருக்கும் பொது. இதுதான் பாரதியிடமிருந்தது. இதுதான் புதுமைப்பித்தனிடமும் இருந்தது.

சிறீரெங்கன் எனக்கு எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்தே நண்பர். சென்னையில் ஒரு காம்பவுண்ட்டுக்குள் வேறுவேறு வீடுகளில் நாம் குடியிருந்தோம். இடதுசாரிச் சிந்தனையாளர், நல்ல இலக்கிய வாசகர் என்ற இந்த அம்சங்களே நம் நட்புக்குக் காரணம். அவர் தனியார் கல்லூரியொன்றில் கணித ஆசிரியராக இருந்தவர். பல்வேறு தகைமைகள் இருந்தும் அவர் தன்னையொரு கணித ஆசிரியனாகவே எண்ணிக்கொண்டிருந்தார். எம்.ஏ. பட்டதாரியான அவரின் சிறப்புப் பாடம் கணிதம்தான். ஒரு ‘கீறு’ இருக்கிற சமயத்தில், தன்னை ஒரு கணிதவியலாளன் (Mathematician) என்றே அவர் சொல்வார்.

நான் நன்கு பழகிய நண்பர்களுள் மார்க்ஸீயத்தை மிக நுணுக்கமாய்த் தெரிந்தவர் அவர் மட்டும்தான். மூலதனத்தின் சிற்சில பகுதிகளையே அதுவரையில் நான் கற்றிருந்தேன். ஒரு பத்து வருஷ  காலத்தில் அவரிடமிருந்தே மீதிப் பகுதியை நான் படித்தறிந்தேன். அவரது படிப்பித்தல் முறை அபாரமானது. அவரது சொந்த இலக்கிய நயம் தேரும் திறமை, படிப்பித்தலில் கூடுதல் பலமாக இருந்து தொழிற்பட்டது. இப்போதும் மூலதனத்தை முற்றாக விளங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லமுடியாவிட்டாலும், அதைப் பெருமளவுக்கு அவரின் துணைகொண்டே நான் வாசித்தறிந்தேன் எனல்வேண்டும்.

கணிதம் தெரியாவிட்டால் மூலதனத்தை முழுவதுமாகப் புரிய முடியாது என்று வெட்டொன்று துண்டிரண்டாகக் கூறிய மனிதர் அவர். இன்றைய அரசியல் சதுரங்கக் களத்தில் காய் நகர்த்தல்களை நான் மார்க்ஸின் துணைகொண்டே புரிந்துகொள்கிறேன். அப்போதெல்லாம் சிறீரெங்கனை நான் நினைத்துக்கொள்கிறேன்.

மிக அண்மைக் காலம்வரை தமிழில் மார்க்ஸின் மூலதனம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவில்லை. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில்தான் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ சென்சரி புக் கவுஸின் மூலம் முதன்முதலில் வெளிவந்தது. அது திரு. தியாகு சிறையிலிருந்து ஆயுட்தண்டனையைக் கழித்த காலத்தில் செய்த மொழிபெயர்ப்பாகும். அது வெளிவந்த சிறிது காலத்திலேயே இன்னுமொருவர் செய்த மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளிவந்தது. இரண்டையும் வாசித்து, அவர்கள் மூலதனத்தைப் புரிவதில் செய்த தவறுகளை மூலதனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் மொழிபெயர்ப்புக்களை ஒருசேர வைத்து எடுத்துக்காட்டியிருக்கிறார் சிறீரெங்கன். நான் மட்டுமில்லை, பலரும் பயன் பெறவேண்டும், இதை நீங்கள் ஏன் எழுதக்கூடாது? என்று நான் கேட்டபோது, எழுதத்தான்வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். பின் ஏனோ செய்யாது விட்டுவிட்டார்.

லதா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் பங்குகொண்டிருந்த ‘சூர்யோதயா’ என்றொரு பெண்கள் பத்திரிகை சிறிதுகாலம் வெளிவந்துகொண்டிருந்தது சென்னையிலிருந்து. அப் பத்திரிகை சிறீரெங்கனின் வழிகாட்டலில்தான் நடந்தது. எனது ‘தீர்ப்பு’ சிறுகதை வெளிவந்தது அச் சஞ்சிகையில்தான். அதை வேற்றுமொழிப் பெண்கள் சஞ்சிகைகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புச் செய்து அவ்வாசிரியர் குழுவேதான் அனுப்பி, இந்தியா பூரா அது அறியப்பட்டதாய்ப் பின்னர் அறிந்திருக்கிறேன்.

அது நின்று போய்ச் சிறிதுகாலத்தில் ஒரு சிறுபத்திரிகை தொடங்கும் என் எண்ணத்தை சிறீரெங்கனுக்கு நான் சொல்லி சில வாரங்களுக்குள்ளேயே ‘புதியன’ என்றொரு சிறுபத்திரிகையை நண்பர் ஆரம்பித்துவிட்டார். என் ‘இலக்கு’ அதற்கு ஒரு மாதம் கழித்தே வெளிவந்தது. ஒரே அச்சகத்தில் அவை அச்சாக்கமானது மட்டுமில்லை, ஒரே முகவரியிலிருந்தும் வெளிவந்தன. ஒரு பத்திரிகைக்கு மற்றவர் உதவி ஆசியர்போல் வேலைசெய்தோம். வேறு எங்காவது இதுபோலச் சாத்தியம் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகமே.

‘புதியன’வில் எஸ்.என்.நாகராஜனின் ‘மார்க்சீயம்: கிழக்கும் மேற்கும்’ என்ற நூலுக்கு ஓர் ஆழமான விமர்சனம் எழுதியிருந்தார் சிறீரெங்கன். சில தொடர்களாக அது வெளிவந்தது. பரவலான கவனிப்பைப் பெற்றது. என்னோடு கலந்தாலோசித்து, விவாதித்துத்தான் அந்த விமர்சனக் கட்டுரையை அவர் எழுதினார். அதில் அவர் காட்டிய பொறுப்புணர்வு என்னை இப்போதும் பிரமிக்கவைக்கும்.

அந்த நண்பர் இப்போது உயிரோடு இல்லை. மிகவும் ஆற்றல் வாய்ந்த, மிக்க வாசிப்புப் பழக்கமுடைய, எவரோடும் அளவுக்கு அதிகமாக வார்த்தையாடாத அந்த நண்பர் நான் சென்னையிலிருக்கும்போதுதான் காலமானார். ஆனாலும் என் கடுமையான சுகவீனம் காரணமாய் நான் சிறிதுகாலம் ஒதுக்கத்திலிருந்த காரணத்தால், அச் சாவுபற்றி அறியக்கூட முடியாமல் போனது. அறிந்த சிறிதுகாலத்தில் நானும் இந்தியாவைவிட்டு இலங்கை சென்றுவிட்டேன்.

சிறீரெங்கனின் ஆவியே வந்து சஞ்சலம் செய்துகொண்டிருந்ததுபோலத்தான் அவரின் நினைவு என்னை வதைத்துக்கொண்டிருந்தது. அவர் சாகிற காலத்தில் மிகவும் மனநிம்மதியை இழந்திருந்தார் என்று பின்னர் அறிந்தேன். கிழமையின் பலநாட்களிலும் சேர்ந்துதான் குடிப்போம். ஆனாலும் இலக்கிய, அறிவார்ந்த, இடதுசாரி அரசியல், உலக நடப்புகள் தவிர உரையாடல் வேறு சாதாரண விஷயங்களில் சஞ்சரித்ததில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்.

அவரின் உருவம் அடிக்கடி என் மனக்கண்ணில் விழுந்துகொண்டிருந்தது. நீண்ட தலைமயிர். சடைத்த தாடி. காலையில் எண்ணெய் பூசி தோய்ந்துவிட்டு தலையை அழுந்த வாரிவிட்டாரென்றால், இரவுவரை அது கலையாது. விக்கிரமாதித்யனுக்கும் அதுமாதிரித் தோற்றம்தான். ஆனாலும் அது அவ்வப்போது நீண்ட தலைமுடி கட்டையாகவும், தாடி மீசை மட்டுமாகவும் மாறிக்கொண்டிருக்கும். ஆனால் சிறீரெங்கன் முதல் பார்த்த கோலத்திலேயே கடைசிவரை காட்சியாகியிருந்தார்.

எந்த விஷயத்திலுமுள்ள முரண் முதற் பார்வையிலேயே இவருக்கு எப்படித் தட்டுப்பட்டு விடுகிறதென்று பலமுறையும் எண்ணி நான் வியந்திருக்கிறேன். அது அவரது கலக மனத்துக்கு மட்டுமே சாத்தியமாவது என்றுதான் பின்னர் தெளிந்தேன். மண்ணின் குணம், மனிதர்களுக்கும் சேரும்தான்.
சிறீரெங்கன் ஒருவகையில் என் நண்பர். ஒருவகையில் பல விஷயங்களில் ஆலோசனை சொன்ன மந்திரி. ஒருவகையில் மார்க்ஸீயம் போதித்த ஆசிரியர். அவர் நினைவை நான் அலட்சியம் பண்ணிவிட முடியாது.

இந்தப் பதிவின் பின்னராவது அந்த என் மனச் சஞ்சலம் ஓரளவேனும் தணியும் என்று நம்புகிறேன்.

000


தாய்வீடு, 2007


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்