சாம்பரில் திரண்ட சொற்கள் - 10

 


அன்று முழுக்க பனி கொட்டிக்கொண்டிருந்தது. பஞ்சுப் பொதியை அவிழ்த்து கவிழ்த்து வைத்துக் குலுக்குவதுபோல் காற்றில் அலைப்புண்ணாத பனி இறங்கியது. நிலக் கீழ் வீட்டின் தன் அறையில் சோபாவில் அமர்ந்திருந்தபடி எல்லாம் சிவயோகமலராலும் கண்டுகொள்ள முடிந்திருந்தது. நிலத்தில் படியத் துவங்கிய பனி ஜன்னலின் கீழ்மட்டத்தை எட்டுமளவு உயர்ந்துவிட்டிருந்தது. இவ்வாறு தொடர்ந்து பெய்தால் கண்ணாடியை மூடும் திரையாகிவிடவும் கூடும். அப்போது அவளிருந்த அறைக்கு கல்லறையென்றில்லாமல் வேறு பெயர் என்ன? ஜீவசமாதி! மலருக்கு மனம் துண்ணென்றது. உடம்பில் ஒரு பதற்றம்.

ஆரம்பத்திலிருந்தே அம்மாதிரி வீட்டில் குடியேறுவதை அவர் மறுத்து வந்திருந்தாலும், சுந்தரத்தின் பொருளாதார அனுகூலத்தின் விளக்கத்தில் நடராஜசிவம் ஒத்துக்கொண்டுவிட மறுப்பதில் தனக்கான ஆதாரம்  அவர் அற்றுப்போனார். இன்னும் கொஞ்சம் அழுத்தமாய்  தான் இருந்திருக்கலாமென அப்போது நினைத்தார். நிலைமைக்குத் தகுந்ததான அந்த முடிவை, மேலே பெரிய பிணக்கின்றி அவர் ஒத்துக்கொண்ட முதல்  சந்தர்ப்பம் அதுவாகவே இருந்தது.

வெளியே பனித் தூவல் கண்டதுமே உடனடியாக வெளியே ஓடிச்செல்ல மனம் உந்துதல்கொண்டது. தன்னுடம்பைப் பாரமாய் அவர் உணரத் துவங்கி வெகுகாலமாகிவிட்டது. தரைமேல் வீடாயிருந்தாலும்  தரைக் கீழ் வீடாயிருந்தாலும் சரி, வெளியே செல்லும் வாய்ப்புகள் மருத்துவ தேவைக்கானவையாய் மூன்று மாதங்களுக்கு ஓரிரு   முறையாகவே அப்போதெல்லாம் அவருக்கு இருந்திருந்தன. அதற்கும் நோயாளர் போக்குவரத்து வாகனம் தேவைப்பட்டவர் அவர். உள்ளரங்கு நடைக்கும் சக்கர நாற்காலியின்றி உடம்பு வசையாதவர். ஊரிலே தன் வீட்டு விறாந்தையிலிருந்து மழை பார்த்து, பீலி நீரில் கை நனைத்து, தூவானத்தில் தோய்ந்து புளகித்த காலம்போல் அங்கேயும் பனியில் பந்துருட்டி எறிந்து சிறுபிள்ளை மனங்கொண்டு விளையாடும் ஆவல் வயதை மீறி, நோயுடலை மீறி துளிர்த்தது.

மனம் அப்படியிருக்க, உடம்பு…?

மூன்று மாத இடைவெளியில் செய்யவேண்டிய சிறுநீரகச் செயற்பாட்டு விகித அறிகைக்கான போன தடவைப் பரிசோதனை முடிவுபோலவே அடுத்த மாதப் பரிசோதனையிலும் இருக்குமென்பதைச் சொல்லமுடியாது. பதினைந்து… பதின்னான்கு… பதின்மூன்றென கடந்த காலத்தில் சிறுநீரக செயற்பாட்டு விகிதம்  குறைந்துகொண்டு வருவது, நினைக்கும்போதெல்லாம் முள்ளாயிருந்து மனத்தை உறுத்துகிறது.

வாழ்வின் நீண்ட காலப் பெருவெளியில் சொற்ப காலமே எஞ்சியுள்ள நாட்களை நினைத்ததைத் தின்று, நினைத்ததைக் குடித்து, நினைத்தபடி வாழமுடியாமற் போயிருக்கும் அவலம் அளப்பரியது.  அது மனம் முழுக்க அவருக்கு நிறைந்திருக்கிறது. சாவூரிலிருந்த திரும்பியதும் இலங்கையில் வாழ்ந்த காலமும், தனியாக கனடா வந்த புதிதில் வாழ்ந்த காலமும் ஓர் ஒழுங்கில் இச்சாபூர்வமாக இருந்தன. அவர் சந்தித்த விபத்துக்கள் உண்டு. எனினும் அதிலிருந்து அவர் மீண்டார். அதனால் கூண்டுக்குள் அடைபட்டதுபோன்ற நிகழ் காலத்தினால் எதற்கும் எவரிலும் எரிச்சலாகவே அவருக்கு வந்துகொண்டிருக்கிறது. கண் முன்னே தெரிவது சுந்தரம்தான். அதுவும் இன்னும் நன்றாக நடமாடக்கூடிய வலுவோடு. அது பொறாமையாகவும் கோபமாகவும் ஒரு புள்ளியில் பிரிநிலை அடைகிறது.

அவர் நினைக்க… வருந்த எவ்வளவு இருக்கின்றது!

குசினிப் பக்கத்தில் சுந்தரம் பாத்திரங்களில் கிளப்பும் கடகடாச் சத்தம் சுயபச்சாத்தாபத்தில் தன் மன ஈறலில் உழன்றுகொண்டிருந்தவரை வெடிக்கவைக்கிறது. ‘கொஞ்சம் மெதுவாய் உந்த வேலையளைச் செய்தாவென்ன? காது கிழியுது சத்தத்தில.’

‘முடிஞ்சுது… முடிஞ்சுது…’ சுந்தரம் சாந்தமாய் இரைகிறார் பதிலை.

பாவம், என்ன செய்யுதோ அந்தாளென அவருக்கு நினைக்க வருவதில்லை. அது தன் நோயும், தன் முடக்கமுமென்ற வட்டத்துள் விழுந்து சகல நியாயப்பாடுகளையும் எரிக்கிறது. யார்மீதாவது, எப்போதாவது பாவமென அவரால் இரங்க முடிவதாயிருந்தால், அது சிவத்திமீதானதாகவே இருக்கிறது. ஏனெனில் அன்பைக் கொட்டிவிட்டு பதிலுக்கு அன்பைக்கூட எதிர்பாராதிருந்த ஜீவன் அவள். அவளுக்கு ஒரு வாழ்க்கை இன்னும் நல்லதாய் அமைந்திருக்கலாம். அதனாலேயே சமீப நாட்களில் சிவத்தியை அவர் அதிகமும் நினைத்துக்கொள்கிறார். அவள் ஒரு பற்று; ஆறுதலின் பற்று.

அவளை அவர் எப்போது கடைசியாய்க் கண்டார்?

 

 

 

அது, தஞ்சாவூர்ப் பயணம்பற்றி அவர் தெரிந்திராத நாளுக்கு முந்திய நாள்.

செவ்வந்தி வீட்டுக்கு வந்தாள்.

மாலை நேரம்.

இருள் விழ நேரமிருந்தது.

வெளியில் யாரையும் காணவில்லை.

வாசலோரமிருந்து தோழியின் அறைத் திசையில் எட்டி அவளது பெயரை செவ்வந்தி காற்றாய் எறிந்தாள்.

அது மின்கதிர் வலுகொண்டு மலரின் செவிகளில் விசையுடன் சென்றிறங்கியது. ‘மலர்…! மலர்…!’

மலர் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

அவள் அந்தத் தேர்வு முடிவின் பாதிப்பிலிருந்து முற்றும் தேறியிராத நிலையில் வசீகரனது கடிதக் கண்டெடுப்பு அவள் நிலையைச் சிதறிப்போகச் செய்திருந்தது. தந்தை அவளை அடிக்கவில்லை; திட்டக்கூடச் செய்யவில்லை. கடிதத்தைத் தூள் தூளாகக் கிழித்து காற்றில் உருட்டிவிட்டு வெளியே போனார். திரும்ப வந்தார். மறுபடி வெளியே போனார். அவளிருந்த திசையில் திரும்பக்கூடச் செய்யவில்லை. ஆனால் மலருக்குத் தெரியும் அவர் மனத்தில் திட்டமொன்று உருவாகிக்கொண்டிருக்கிறதென்று. என்ன திட்டம்? அவளறியாள். ஆனால் அவரது மௌனத்தின் கனதியளவு அதுவும் பாரதூரமாகவே இருக்கும்.

அவ்வாறில்லாமல் இருப்பதற்கும் ஒரு புள்ளியளவு சாத்தியமிருந்தது. அவள் வசீகரனது கடிதத்திற்கு பதிலே எழுதுவதில்லையென்றோ, அப்போதாவது எழுதுவதில்லையென்றோ எண்ணுமளவான அர்த்தமுள்ள வார்த்தைகள் அதில் இருந்திருந்தன. அவர் அதைத் தவறியிருக்க முடியாது. அதுதான் நிலைமை அந்தளவு அடக்கத்தில் இருக்கிறதென்றும் எடுத்துக்கொள்ளலாம். செவ்வந்தி அதில் தொடர்புள்ளாள் என்பதற்கு அவர்களிடம் ஆதாரமில்லை. ஆனாலும் அவள் அறியாமல் எதுவும் நடந்திருப்பது சாத்தியமில்லையென்ற நம்பிக்கை அவர்கள் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் செவ்வந்தியின் அன்றைய வரவிருந்தது.

தந்தை வெளியே போனதைக் கண்டிருந்தாள். தாய் பின்வளவில் அலுவலாயிருந்தாள். செவ்வந்தியோடு பேசாவிட்டாலும், நிலைமையைச் சொல்லி கொஞ்ச நாளைக்கு வீட்டுக்கு வராமலிருக்கக் கேட்கவேணுமென எண்ணி எழுந்துவந்தாள்.

அவள் கிட்ட வர, இன்னும் மாறாத தோல்வியின் ஸ்தம்பிப்பில் மலர் இருப்பது கண்டு, தான் பகிர வந்த செய்தியைச் சொல்லலாமாவென செவ்வந்தி தயங்கினாள்.

‘என்ன, சொல்லு, சிவத்தி.’ மலர் அவசரப்படுத்தினாள்.

செவ்வந்தியிடத்தில் சுமுகம் வெளித்தது. ‘என்னைச் சுத்திக்கொண்டு கொஞ்சநாளாய் ஒரு பெடியன் திரியிறானெண்டு சொன்னனே… அவன் நேற்றைக்கு வீட்டுப் படலைக்கே வந்திட்டான், மலர்…’

‘…’

‘நான் அடுப்படிக்கை நிக்கேக்கிறன். வீட்டுக்காறர்… வீட்டுக்காறரெண்டு படலையடியில கூப்பிட்டுக் கேக்கிது. நான் முத்தத்துக்கு வந்து பாத்தா படலையில இவன்! எனக்கெண்டா அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு. கால் சவளத் துவங்கிது. அம்மா வந்திட்டா…? அக்கம் பக்கத்தில ஆரும் பாத்தாலும் பிழைதான? எனக்கெண்டா என்னண்டு கேக்கவும் வாய்வரேல்ல. சலம் சலமாய் வேர்த்தொழுகிது. பிறகு ஒருமாதிரித் துணிஞ்சுகொண்டு, என்ன வேணுமிண்டு கேட்டன்…’

‘ம்…’

‘சிரிச்சபடி நிண்டவன், கொஞ்சம் நெருப்புத் தாருமெண்டான். கையிலயிருந்த வீடியையும், அது பத்திறதுக்கெண்டதுபோல காட்டினான்…

‘எனக்கு இப்ப பயம் போட்டுது. அப்பிடி ஆரும் வந்து கேக்கிறது வழக்கம்தான? எண்டாலும் அவன்ர துணிச்சல்ல கொஞ்சம் கோபம் வந்திது’ என்றவள்  மலரின் கண்களைக் கூர்ந்து பார்த்தபடி, ‘நான் அதுக்கு என்ன சொன்னனெண்டு நெக்கிறீர்?’ என்று தாமதித்தாள்.

மலரின் முகபாவம் அப்போதும் மாறவில்லை. ஆனால் அவள் என்ன சொன்னாளென்று அறியும் ஆவல் காணப்பட, ‘அடுப்பில நெருப்பில்லையெண்டன்.  அவன் திகைச்சு அடுப்படிக் கூரையை பூந்து பூந்து பாத்தான். கூரைக்குள்ளால புகை புக்குப் புக்கெண்டு போய்க்கொண்டிருக்கு மேல. அவன் புகையைக் காட்டி, கூரையால புகை போகுதெண்டான். அதுக்கு நான், புகைதான? நீர் நெருப்பெல்லோ கேட்டனீரெண்ண, நெருப்பில்லாம என்னெண்டு புகை வருமெண்டு நிண்டுகொண்டான். நான், நெருப்பில்லாட்டியும் புகை வரும், காட்டட்டோ எண்டிட்டு, அடுப்படிக்க போய் ஒரு கொள்ளிக் கட்டையை எடுத்து தண்ணி வாளிக்கை முக்கியிட்டு, அது சூட்டில புகையப் புகையக் கொண்டுவந்து காட்டினன். தூரத்தில நிண்டுதான். அவன் சிரிச்சான். பிறகு காதுச் சோணையில வீடியைச் செருகிக்கொண்டு திரும்பிப் பாத்தபடி நடக்கத் துவங்கினான்.

‘நான் அந்தளவோட நிப்பாட்டியிருக்கவேணும். ஆனா என்ர வாய் சும்மா கிடக்கேல்ல. நெருப்பெட்டியிருக்கு, தரட்டோ எண்டு கேட்டிட்டன்.

‘அவன் சிரிச்சுக்கொண்டு திரும்பிவந்தான். நான் புகட்டில கிடந்த நெருப்பெட்டியை ஓடிப்போய் எடுத்துவந்து குடுத்தன்.

‘வரேக்க, வாசல்ல கிடந்த கூம்பாளை தடக்கப் பாத்தது. கவனமெண்டான். நெருப்பெட்டியை வேண்டி கையில வைச்சுக்கொண்டு என்னைப் பாத்து சிரிச்சிட்டு, இதுக்குள்ள நெருப்பிருக்கெண்டா கையில சுடேல்லயே! எண்டு கேட்டான்.

‘அந்தளவு கிட்டத்தில பாக்க நல்லாய்த்தான் இருந்தான். வீடியைப் பத்தியிட்டு, நெருப்பெட்டியைத் திருப்பித் தரேக்க, நாளைக்கும் வருவன், நெருப்புக் கொள்ளி தந்தாப் போதுமெண்டிட்டு, போயிட்டான். போகேக்க, கண்ணைப் பூஞ்சிக்கொண்டு பாத்துச் சிரிச்சான். அது அவனுக்கு நல்ல வடிவாயிருந்திது, மலர்.’

‘நீ பிழை விட்டிட்டாய், சிவத்தி, நான் பிழை விட்டமாதிரி. நேற்றைக்கில்லை, உனக்கு முந்தியே அவனில விருப்பம் வந்திட்டுதடி. எனக்குப் பின்னால சுத்துறான்… பெரிய கரைச்சலாய்க் கிடக்கெண்டு நீ சொன்னதெல்லாம் பொய்’ என்று எரிச்சலோடு சொன்னாள் மலர்.

அந்தளவில் தந்தை வந்துவிட பேச்சை முடிக்கவேண்டியதாயிற்று அவர்களுக்கு.

வித்துவான் வீரகத்தி பார்த்தார். கடுப்பான பார்வைதான். ஆனாலும் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.

செவ்வந்தி மலரிடம் சொல்லிக்கொண்டு நடந்தாள்.

அதுதான் தஞ்சாவூர் செல்வதன் முன் மலர் செவ்வந்தியைச் சந்தித்த கடைசித் தருணம்.

‘பாவம், சிவத்தி’ என்று அப்போதும் சிவயோகமலர் நினைத்துக்கொண்;டார்.

 

 

எந்த உணர்வெழுச்சிகொண்ட நாளினும் தனித்துவமானதாய், எந்த உணர்வு தூக்கலாயிருந்ததென்று அடையாளப்படுத்த முடியாதபடி அமைந்திருந்தது, அந்த தஞ்சாவூர்ப் பயண நாள்.

அது வைகாசி மாதத்து ஒரு காலை நேரம்.

மலர் வழக்கம்போல் எழுந்து கிணற்றில் போய் முகம் கழுவி வருகிறாள். பின்விறாந்தையில் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்த தந்தை, அவளை பெயர் சொல்லி அழைக்கிறார். ஆச்சரியத்தோடு நிமிர்ந்தவள் பார்வையில் அவரின் சிவப்பு ரேகைகள் பின்னலிட்ட கண்கள் எதிர்ப்படுகின்றன. மலரின் பரீட்சைத் தோல்வியில் துவங்கி வசீகரனின் காதல் கடித அகப்படுதலுடன் மோசமாகிய நிலைமையின் அடையாளமாய் வெளிப்பட்ட அந்தச் செம்மை அன்று ஓரளவு குறைந்திருப்பதை அவள் தெரிகிறாள். அது சிறிது ஆசுவாசத்தை அவளுள் நிறைக்கிறது. ஆனாலும் ஓர் ஒட்டுப்பொட்டின் போலித்தனம் அதிலிருக்கக்கூடிய சாத்தியத்;தையும் அவள் நினைக்காமலில்லை. அவரது அமைதிக்குள் எந்த உணர்வும் வெளிப்படச் சிறகு விரிப்பதில்லை. அங்கே படித்தது போதும், அவள் இனி தஞ்சாவூர் போய் வீணை வாசிக்கப் பழகவேண்டும் என்கிறார் அவர்.

அன்னபூரணமே எதுவும் அறியாதிருந்தாள்போலும். அவள் இடைமறிக்கிறாள். அந்தக் குடும்பத்திலிருந்து ஆரும், குறிப்பாக பெண்கள், அப்படிப் போய்ப் படிப்பதில்லையே!

தங்கள் பரம்பரையில் வாய்ப்பாட்டு, இசைக் கருவி வாசிக்கக் கூடிய கலைஞர் யாரும் இதுவரை தோன்றவில்லையென்பது மெய்தான், அந்த வசையை மாற்றத்தான் மலரை தஞ்சாவூர் அனுப்பி வீணை வாசிப்பு பயின்றுவர அனுப்புவதாக அவர் நிதானமாய், விளங்காமல் குறுக்கிட்டவள் விளங்குவதற்குப்போல் நிறுத்தி நிறுத்தி, பதிலளித்தார்.

இளமைக் காலத்தில் திருவாரூர் இசைத் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் பயணம் செய்தவர் அவர். அதனால் அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள் ஆங்காங்கே. அவர்கள் மூலமாய் தஞ்சாவூர் வீணை வித்துவான் சபேஸய்யரிடம் பயிற்சிபெற ஏற்கனவே ஒழுங்குகள் செய்தாகிவிட்டிருந்தன. அன்று மாலை கொழும்பு பயணம். அங்கேயும் இந்தியா செல்வதற்கான அவசர கால பாஸ்போர்ட்டுக்கும் இந்திய விசாவுக்கும் பதவியிலுள்ள சில நண்பர்கள் விரைவிலெடுக்க உள்வழியில் அனுசரணை புரிவார்கள். தமிழ்நாட்டிலே புதிய  உடுப்புகள் வாங்கிக்கொள்ளலாம், அதனால் தேவையானவற்றை மட்டும்கொண்டு அவள் வெளிக்கிட்டால்போதும்.

மலர் உறைந்துபோக அத்தனை வார்த்தைகளும்போதும்.

அவரது மௌனத்துள்ளிருந்த பூதம் அவ்வாறுதான் அன்று வெளிப்பட்டது.

மலர் பேசாமல் அவ்விடம் விட்டகன்றாள்.

தஞ்சாவூர் இசைப் படிப்புக்கு மெயிவ் வண்டியெடுத்து புறப்பட சரியாக எட்டு மணி நேரமேயிருந்தது. அதில் நான்கு மணி நேரத்தை அழுதழுது கழித்தாள்; மீதி நான்கு மணி நேரத்தை கொழும்பு எப்படியிருக்கும், தஞ்சாவூர் எப்படியிருக்கும்,தஞ்சாவூருக்கும் மட்ராசுக்கும் தூரம் அதிகமோ, அங்கே ஒரு வீணை என்ன விலை விற்குமென எண்ணிக் கழித்தாள்.

அம்மாவைத் தவிர வேறு யாரிடமும் சொல்லி விடைபெறாமல் ஒரு நெடும்பயணம். யாரிடமும் சொல்லவும், புவனேஸிடம்கூட, வாய்ப்பிருக்கவில்லை. தந்தை அனுமதிக்கவுமில்லை. விறாந்தையில் நின்றிருந்த ஒரு பொழுதில் தெருவில் பரவிச்சென்ற பார்வை நடனத்தின் வீட்டுப் படலையடியில் பதிந்து நின்றது. அதில், தானொரு கலைஞியாகும் பரவசத்தின் அணுக்கூறெதுவும் இருந்திருக்குமா? அவனது ஓவியத் திறமையை ஒருவகையில் அவள் எதிர்கொள்ளும் புள்ளியாகிறதா அது? ஆனால் அங்கே நடனம் காணப்படாதது மட்டுமல்ல, அது அப்போது சாத்தப்பட்டுமிருந்தது.

கொழும்பு மன்னார்வரை ரயில் பயணம், அங்கிருந்து ராமேஸ்வரம்வரை கப்பல் பயணம், ராமேஸ்வரத்திலிருந்து பஸ் பயணமுமாய் கும்பகோணத்தில் வீரகத்தியின் நண்பர் நல்லசிவத்தின் வீட்டை அவர்கள் அடைந்தபோது முடிந்திருந்தன முழு இரண்டு நாட்கள்.

உண்மையான கனவு வாழ்க்கை இனிமேல்தான் இருந்ததென்பதை தஞ்சாவூரில் சபேஸய்யர் வீடு சென்ற பிறகுதான் மலர் தெரிந்தாள்.

நல்லசிவத்திடம் கார் இருந்தது. பளீரென்று வெண்மையான அம்பாஸிட்டர் கார். மலருக்கு அந்த நிறம் பிடிக்கும். அவள் கரவெட்டியில் கண்டதெல்லாம் கறுப்பு ஏ40 வாடகைக் கார்களைத்தான்.

மலர் சேலை கட்டிவந்தாள். போன சரஸ்வதி பூஜையிலன்று கல்லூரிக்கு கட்டிச் சென்ற அதே மஞ்சள் சேலை. அதற்கு துளிர்ப் பச்சைக் கரையுள்ள மஞ்சள் சட்டை. பார்க்க பொன்னுருக்கி வார்த்த முழுச் சிலைபோல அவளின் செம்மேனி தகதகத்துக்கொண்டிருந்தது.

சபேஸய்யர் வீட்டில் நல்லசிவமும், வீரகத்தியும் அவருடன் நிறைய நேரம் பேசினார்கள். வீரகத்தி அறிமுகப்படுத்தப்பட்டபோது சிறிது மலர்ந்திருந்த சபேஸய்யரின் முகம் அப்போது இறுகியிருந்தது. அது நீண்டநேரம் நிலைத்து அவ்வாறேயிருந்தது. அவர் தன் எதற்காகவோவான மறுப்பைப் பிடிவாதமாகக் காட்டிக்கொண்டிருப்பதாய்ப் பட்டது மலருக்கு. கூட நின்றிருந்தாள் அவருடைய பேத்தியாகக்கூடிய ஒரு பெண். அவளை லட்சுமியென்று சபேஸய்யர் அவ்வப்போது அழைத்துக்கொண்டார். அவள் சிரிப்பும் எவரையோபோல் கேந்தி பண்ணிக்கொண்டு இருந்தது.

அவளுக்கு அக்கறையில்லை, அவர்கள் என்னவாகிலும் பேசிக்கொள்ளட்டும் அல்லது அவர் பேத்தி யாரையேனும் கேந்தி பண்ணிக்கொள்ளட்டும். ஆயினும் சங்கீதப் பயிற்சி சிறிதுமற்ற தன்னை மாணவியாய் அங்கே கொண்டுவந்து நிறுத்தியிருப்பதை சபேஸய்யர் விரும்பவில்லையென மலர் அனுமானித்துக்கொண்டாள்.

வாக்குவாதம் கெஞ்சுதலாய் பின் இறைஞ்சுதலாய் மாறிவர சபேஸய்யர் இரங்கிவிட்டார்போலும். வெளிக்கட்டில் நின்றிருந்தவர்கள் கூடத்துக்கு வந்தார்கள்.

தன் குருவை முதன்முதலாய் நேர்முகத்தில் காண்கிறாள் மலர்.

ஐந்தடி உயரம். பழுத்த எலுமிச்சை நிறம். மெலிந்த உடல்வாகு. நெற்றியில் பட்டை விபூதி. தோளில் பூணூல். அவரின் கடுமை மெல்ல மெல்ல சாந்தமாகி வந்திருந்தது.

கூடம் வந்ததும் சபேஸய்யரின் முதல் ஆக்ஞை லட்சுமியின் கிலு கிலு சிரிப்பை நிறுத்தியதுதான்.

நிமிர்ந்து மலரைப் பார்த்து கடையிதழில் ஒரு குறுஞ்சிரிப்புடன், ‘உனக்கு வீணை தெரியுமோ?’ என்று கேட்டார். ‘எங்கே, இங்கு இருக்கிற கருவியள்ல எது வீணைன்னு காட்டு பார்க்கலாம். வீணைபோல தம்புராவும் இருக்கும்,.’

அவளுக்கு உள்ளே சிரிப்பு வந்தது. அது வெளியிலும் படர்ந்தது. ஒரு பெருங்காலத்தில் பலபேரறிய சிரிக்காதிருந்தவள், அன்று சபேஸய்யர் பேச்சில் சிலரறியச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு காலத்தின் ஒரு சமிக்ஞை.

வீணையை மலர் காட்டினாள்.

‘உன் தந்தை சொல்றதிலயிருந்து பாத்தா, நீ எப்பவுமே வீணை வாசித்ததில்லேன்னு புரியிறது; சரி. ஆனால் வீணையை எவ்வாறு வைச்சு வாசிப்பாங்கான்னாவது நோக்குத் தெரரியுமோ குழந்தை? காட்டு, அதையும் பார்க்கலாம். வீணை வாசிக்கிறமாதிரி ஒரு போஸ்… ஒரு ஸ்திதி…’

மலருக்கு ஏதோ சொல்லமுயன்ற நல்லசிவத்தை சபேஸய்யரின் உயர்ந்த கரம் அடக்கியது.

மலர் சிரித்தபடியேதான் வீணையை அணுகினாள்.

அவளுக்கு பலா மரத்தில் செய்த அந்த வீணையின் பாரம் அனுமானமாய்த்தான் தெரிந்திருந்தது. இருந்தும் அதை ஒரு சிசுவைப்போல அவதானமாய், அநாயாசமாய் எடுக்கினாள். கூடத்தின் நடுவிலிருந்த கம்பளத்தில் கையூன்றாமல் சப்பணிக்க அந்தப்படியே அமர்ந்தாள். வீணையின் குடத்தை வலது மடியில் அணைத்துவைத்துக்கொண்டு, யாளிப் பக்கத்தை உயர்த்தி சுரைக்காயை இடது தொடையில் பொறுக்க வைத்தாள். வலது இடது கை விரல்களை அதனதன் தந்திகளில் பொருத்தி வாசிக்கும் பாவனையில் பத்து விநாடிகள் அசைவறுத்திருந்தாள்.

சபேஸய்யர் நிலை குத்தினார்.

அவரது கண்கள் சாய்ந்திருந்த அவளது நீண்ட கழுத்தை நோக்கின; பின் நீண்ட விரல்களில் படிந்தன; பின்னால் கரம் வீணையைக் கோலியிருந்த நளினத்தில் இறங்கின.

அது வீணையை வைத்திருப்பதற்கான மடி; அவை, வீணையை ஏந்துவதற்கான கரங்கள்; அவையே நீட்பம் பருப்பங்கள் சரியாக அமைந்த மீட்கும் விரல்கள்; மொத்தத்தில் அவளுக்குத் தேவையானது வித்துவமல்ல, அவளுள் உறைந்திருக்கும் வித்தையை வெளிக்கொணர ஓர் ஆசான்.

‘உனக்கு சங்கீதமேதும் தெரிஞ்சிருக்கவேணாம். உனக்குள்ள அதெல்லாமே இருக்கு. அதுபோதும் எனக்கு. நான் உனக்கு வீணை சொல்லித் தர்றேன்’ என்றார்.

வித்துவான் வீரகத்தியின் கண்கள் கலங்கின. நல்லசிவத்தின் மனம் நிறைந்தது.

‘நீ எழும்பலாம்’ என்றார் சபேஸய்யர்.

வீணையை இருந்த இடத்தில் வைத்துவிட்டுத் திரும்ப அவள் விரலொன்று தந்திகளில் பட்டது. டங்கென்ற அதிர்வுடன் அதிலிருந்து விடுபட்ட நாதம்போல் ஒலிவெள்ளம் பெருகியது. எழுந்த ஓசை கூடத்துள் இசை வாரிதியாய்ப் பெருகிக்கொண்டேயிருந்தது நீண்டநேரமாய். வீரகத்தியும் நல்லசிவமும் புளகித்து நின்றனர்.

அவர்களிருவரையும் பார்த்து, ‘நீங்க கிளம்பலாம். அவ இனி இந்தாத்துப் பொண்ணு. நாங்க பாத்துக்கறோம்’ என்றார் சபேஸய்யர் சிரித்தபடி.

சபேஸய்யரின் விசேஷ கவனம்கொண்ட சிஷ்யையாக மூன்றாண்டுகள் அந்த இல்லிலிருந்து மலர் சிட்சை பெற்றாள். அந்தக் காலம் அவளைப் புதிதாக வார்த்திருந்தது.

அந்த மூன்றாண்டுகளில் மூன்று தடவைகள் வித்துவானும் மகளைப் பார்க்க வந்துபோனார்.

அவள் எல்லாம் கற்றாள், ஆழமாய் ஒன்றைக் கற்றாள். அதுதான் பாடுபவரின் சுரத்திற்கேற்பவாய் ஸ்வரங்களை இசைக்கும் ஞானம்.

தனக்காக வாங்கிய வீணையுடன் கொழும்பில் தந்தையுடன் வந்திறங்கினாள் மலர்.

அவளுக்கு முன்பாகவே தஞ்சாவூர் வீணை வித்துவான் சபேஸய்யரின் சிஷ்யை சிவயோகமலரின் பெயர் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய இடங்களில் இறங்கியிருந்தது.

000

தாய்வீடு, பெப். 2023


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்