Monday, December 22, 2014

பூக்கள் (உருவகக் கதை)

பூக்கள்


மல்லிகைக் கொடி சிரித்தது.

முற்றத்து மல்லிகைப் பந்தரிலே என்றைக்குமில்;லாதவாறு பூக்கள் இன்றைக்கு கொட்டிக்கிடக்கிறது. அந்த வைகறை வேளையிலே வீட்டின் தலைவி வந்து மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டு போகிறாள். இன்னும் சற்று நேரத்திலே அவளுடைய சுருண்ட கார்க் கூந்தலிலே அவை சரமாகத் தொங்கும். தங்கத்தில் இயன்ற அவளது மென் தோள்களிலும் சரிந்து கிடக்கும். இதை எண்ணுகிறபோது மல்லிகையின் மலர்ச்சி இன்னும் அதிகரிக்கிறது.

அதோ, கிணற்றடித் தோட்டத்திலே ஆயிரக்கணக்காக நிறைந்து கிடக்கின்றன கனகாம்பரப் பூக்கள். கனகாம்பரச் செடியின் முகத்திலும் மலர்ச்சி. தங்கச் சிறு ரதமாய் அசைந்துவந்த அந்த வீட்டின் பிஞ்சுக் குழந்தை, அதன் மஞ்சள் வர்ணத்தின் ஆசை மேலீட்டால் ஏற்பட்ட ஆவலோடும் கைகளை நீட்டிப் பறிக்கிறது.

தெய்வத்தின் கைகளிலே கிடக்கிற நினைப்பு அவைகளுக்கு. கனகாம்பரத்துக்கு மலர்ச்சி இன்னும் மேலோங்குகிறது.

ஆனால்…

அதோ, சிவந்த ஓடுகளுக்கு மேலாகத் தலை நீட்டி நிற்கின்ற மாமரத்தின் முகத்திலே இத்தனை ஆரவாரமான மலர்ச்சியைக் காணவில்லை. அதன் கொம்புகளிலும்தான் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. ஆயினும் அடக்கமான புன்முறுவலைத் தவிர வேறு ஆரவாரத்தைக் காணவில்லை.

மாமரத்தைப் பார்க்கிறபோது மல்லிகைக்கும் கனகாம்பரத்துக்கும் சிரிப்பு வருகிறது. மல்லிகைப் பூவை தலைவி தீண்டுகின்றாள், வண்டுகள் மொய்க்கின்றன, காண்போர் விரும்புகின்றனர். அதேபோல் கனகாம்பரப் பூவை குழந்தை விரும்புகின்றது. நறுமணமும் செந்தேனும் இல்லாவிட்டாலும் அதனுடைய அழகை யாரும் குறைசொல்லிவிட முடியாது. ஆனால் மாம்பூவினுக்கோ அழகுமில்லை, நிறைவான தேனுமில்லை. மொத்தத்தில் மனித வர்க்கத்தாலும், தேனி வர்க்கத்தாலும் புறக்கணிக்கப்பட்டுவிட்ட பூ என்பது மல்லிகையினதும் கனகாம்பரத்தினதும் எண்ணம். அதன் விளைவே அந்தச் சிரிப்பு.

மாமரம் அந்தச் சிரிப்புகளைப் பொருள்செய்யவே இல்லை. பழைய புன்முறுவலுடன் அமைதியாக இருக்கின்றது அது.

அன்றைய காலை மறைந்து மாலை மலர்ந்தது. மல்லிகைப் பூக்கள் முற்றத்திலே கொட்டிக் கிடக்கின்றன. கனகாம்பரப் பூக்கள் வாடி உதிர்ந்துவிட்டன. இவற்றின் இடத்தை நிரப்புவதுபோல் விண்ணிலே பூத்த நட்சத்திரப் பூக்கள் இந்தக் காட்சியைக் கண்டன. அவற்றின் இதயங்களிலே அற்ப ஆனந்தமும் சிறுமை எண்ணமும் கொண்டிருந்து மடிந்துவிட்ட அந்தப் பூக்களைப் பார்க்க அவ்வச் செடிகளின்மீது அனுதாபம் பூத்தது.

ஆனால், அதேசமயத்தில் மாமரத்தின் முகத்தில் மலர்ந்திருக்கின்ற மலர்ச்சிக்கும் காரணம் தெரியவில்லை. ஏன் இந்த அடக்கமான, அமைதியான சிரிப்பு?

வெள்ளி நிலா பவனிவரத் தொடங்கியது. தமது சந்தேகத்தை அவை கேட்டன.

 வெள்ளி நிலா பதில் கூறியது: ‘பூக்களின் சிறப்பு அவற்றின் மணத்திலோ, நிறைந்துள்ள தேனிலோ அல்லது மனங்கவரும் வனப்பிலோ அல்ல, தாம் நிலையாகி தம்முடைய இனத்தையும் நிலைப்பித்துவிட தாய்மைப் பொலிவு கொள்ளுகின்றனவே, அதிலேதான் தங்கியுள்ளது. மாம்பூவின் அல்லிகள் உதிரலாம். ஆனால் பூ நிலையாக இருந்து காயாகி, கனியாகி, விதையாகி ஒரு மரமாகவே விருத்தியாகிவிடும். பூவுக்கு இதுதான் உண்மையான பெருமையாக இருக்கமுடியும். மாமரத்தின் அடக்கமான மலர்ச்சிக்கு இந்த நினைப்பே காரணமாகும்.’

காரணத்தை அறிந்த வானப் பூக்கள் ஒருமுறை கண்ணைச் சிமிட்டிக்கொண்டன.

000

ஈழநாடு வாரமலர், 24.02.1969

No comments:

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...