Tuesday, December 09, 2014

நூல் விமர்சனம் -10 ‘ஊழிக் காலம்’தமிழ்க்கவியின்
‘ஊழிக் காலம்’
(நாவல்)புவிக் கோளத்தில் எங்கெங்கோ, என்றென்றோ நடந்த பல்வேறு ஊழிகளினை நிகர்த்த வன்னிப் போரின் நேர் தரிசனப் பதிவுகளாக மட்டுமே இந்நூல் அடங்கிப் போயிருப்பினும், இதன் ஊடுகளில் அடங்கியிருக்கும் சொல்லப்படாத உண்மைகள்தான் இதை முக்கியமான நூலாக்குகின்றதன.


‘ஊழிக்காலம்’ நூலை வாசிக்க ஆரம்பித்தபோது அதில் இயல்பான வேகத்தில் செல்வது எனக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அது களங்கொண்டிருந்த மண் எனதுமாகும். விளையப் போகிறது என்றிருந்த சோகம் அனைத்தும் விழுந்து மூடிய மண். அதனாலேயே அப்பிய துயரத்தோடு பயணத்தை நின்று நிதானமாகவே செய்ய நேர்ந்தது.

இலங்கையின் வடபகுதி பஸ்ஸிலும், ட்ராக்டரிலும், சைக்கிளிலும், நடையிலுமாய் நான் அலைந்து திரிந்து உள்வாங்கிய இடம். யுத்தத்திற்கு முன்னாலேதான். வன்னியின் குடியிருப்புகள் தெரிந்திருந்தன. குடியேற்றப் பகுதிகளின் நாற்சந்திகள் தெரிந்திருந்தன. அத் தெருக்களில் ஓடிய பஸ்களின் தட எண்கள், போக்குவரத்து நேரங்கள் தெரிந்திருந்தன. ஆனால் புதிதாக முழைத்த குடியிருப்புகளும், அவற்றின் விஸ்வரூபம்கொண்ட பெயர்களும் தெரிந்திருக்கவில்லை. இந்தப் பழகிய  மண்ணூடாக நூல்வழி செய்த பயணம் என்னை வெகுவாகத் தாமதிக்க வைத்ததற்கு இத் தெரியாத்தனங்களே முதல் காரணம்.

தோல்விகளை விழுங்கக் கொடுத்துக்கொண்டு மன்னாரிலிருந்து அரச படைகள் முன்னேறினால் என் மனக்கண்களில் அதன் அடுத்த அடைவு பூநகரிதான். அதைத் தாண்டினால் கிளிநொச்சி. ஆனால் நூல் எத்தனையோ இடங்களின் பெயர்களைத் தருகிறது. கதை நிகழ் காலத்தில் புலம்பெயர்ந்த மக்களால் எத்தனையோ கிராமங்கள் புதிது புதிதாய்த் தோன்றியதையும், பழைய கிராமங்கள் சிறுநகர்களென வளர்ந்திருப்பதையும் இடைத் தூரங்களின் அளவையும் நூல்  சொல்கிறபோது மலைப்பு ஏற்பட்டது.
‘பூநகரியிலிருந்து முப்பதாவது கிலோ மீற்றரில் வேராவில் கிராமம். நூற்பதாவது கிலோ மீற்றரில் ஜெயபுரம். கிராஞ்சி சாலைகள் எதிரும் புதிருமாகக் கடக்க, இன்னொரு ஏழு கிலோ மீற்றரில் கரியாலை. நாகபடுவான் நாச்சிக்குடாச் சாலைகள் எதிரும் புதிருமாக வரும் அந்த முனைதான் முழங்காவில். மன்னார்-பூநகரிச் சாலையில் ஒரு நகரத்தின் அந்தஸ்தோடு பரந்துள்ள விவசாயக் கிராமம் அது.’

முழங்காவில் கிராமத்தின் நகர அந்தஸ்தின் காரணம் நூலிலே வெளிப்படையாகச் சொல்லப்படாத போதிலும், நிகழ்வுகளை ஏற்கனவே தெரிந்திருந்த வாசகனால் உணர முடிகிறது. புலப்பெயர்வினால் உண்டாகும் மனிதாயத சோகம் வளர்ச்சியின் பின்னணியில் மறைந்திருக்கிறது. வாழ்ந்து அத் துயரங்களை அனுபவித்த மக்கள் இந்த வளர்ச்சியை உணர்ந்திருக்கவே முடியாது. ஆனால் அது வரலாறாய் நடந்திருக்கிறது. ஒரு வாசகன் கண்டடையும் இந்த உணர்வுகளே வாசிப்பின் இறுதிப் பயன்.

ஈழ இறுதிப் போரின் இறுதியில் சற்றொப்ப ஒரு வார காலத்தை தன் நிகழ்களமாக இந்நூல் கொண்டிருப்பினும், இறுதிப் போரின் பாதிப்புகளும், பல்வேறு நிகழ்வுகளும் இதில் விவரணை ஆகியிருக்கின்றன.
ஒருவகையில் நாவலாக இது விரிவடையாவிடினும் மக்களின் நாளாந்த வாழ்வின் சகல துன்ப துயரங்களும் பதிவாகியிருப்பதில் இந்நூல் சமகால ஈழ நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இனி இந்நூலின் இடைவெளிகளூடாக வாசகன் கண்டுகொள்ளக் கூடிய மூடுண்டு கிடக்கும் உண்மைகளுக்கு வருகையில் வரலாறு இனிமேல்தான் சொல்லப்பட வேண்டியதிருக்கிறது என்கிற நிஜம் வெளிக்கிறது.
நூலாசிரியரின் விவரணையிலேயே இயக்க ரீதியான செயற்பாடுகள் மனோரீதியாக சீணிக்கத் தொடங்கிவிட்டதைத் தெரிவிக்கின்றன. ‘மதுவின் தந்தை நீதிபதிப் பொறுப்பில் இருந்தான். உயர் பதவி நிரம்பவே தலைக்கனத்தை ஏற்படுத்தியிருந்தது. தன்னறிவும் இல்லாமல் சொன்னறிவும் இல்லாமல் அவனது தீர்ப்புகள் இருந்தன’ என்கிறார் (ப:19) ஆசிரியர் ஓரிடத்தில்.

இந்தமாதிரி விடுதலைப் புலிகளின் நீதித்துறை இயங்கியவிதம் தெரிய வருகையில், சோவியத் யூனியன் உயிரோடிருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரதும் அதன் உயர் பதவியாளரதும் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளாலும், உச்சபட்ட வசதியான வாழ்முறைகளாலும் மக்கள் எவ்வளவு தூரம் கட்சியோடும் நிர்வாகத்தோடும் அந்நியப்பட்டும் வெறுத்தும் இருந்தார்களோ, அந்தளவுக்கு தமிழ் மக்களும் அந்நியமாகி, வெறுப்பு அடைந்திருந்தார்கள் என்ற வாய்மொழிகளை ஐயுறவேண்டிய அவசியம் குறைந்து போகின்றது.

இந்த முடிவை மேலும் ஒரு பருக்கையாக பின்வரும் பகுதி நிரூபிக்கின்றது: ‘விடுதலைப் புலிகள் போர்க்கள நடவடிக்கைகளோடு நிர்வாகத் துறைகளையும் எப்போது ஆரம்பித்தார்களோ, அப்போதே கணிசமான அனுபவம் மிக்க போராளிகளின் மனோநிலை மாற்றங்காண ஆரம்பித்துவிட்டது….’

இயக்க உயர்பதவிக்காரர் கிளிநொச்சியிலே காணிகள் வாங்கி விட்டிருப்பதை நூல் தெளிவாகவே சொல்கிறது. மட்டுமல்ல, இயக்ககாரியான பார்வதியின் மகன், இயக்க நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துகொண்டு இருந்துவிட்டு, அது பிடிக்காமல் கனடாவுக்குத்தான் போய்ச் சேர்கிறான். பார்வதி அவனது மனைவி ராணியையும் பிள்ளைகளையும் பராமரித்துக் கொண்டிருக்கிறாள்!
‘காலையிலே கிபிர் விமானங்கள் ஆனந்தபுரம் இரணைப்பாலைப் பகுதியை வட்டமிட்டு குண்டுகளைத் தள்ளின. பார்வதி இரணைப்பாலைக்குப் போக எண்ணியிருந்தாள். அவளுடைய கொஞ்சச் சேமிப்பு கிராமிய அபிவிருத்தி வங்கியில் இருந்தது. அது    முதலீட்டுச் சேமிப்பு. ராணியும் பிள்ளைகளும் தமிழீழ வைப்பகத்தில் சேமிப்பை வைத்திருந்தனர்’ என்பது இயக்கத் தொடர்பும், தீவிர ஆதரவுடையவர்களுடையதுமான வாழ்முறையாக இருந்திருப்பதை ஐயந்திரிபறத் தெரிவிக்கிறது.

வலிமை வாய்ந்த போராட்ட இயக்கமென சமீபகாலம்வரைகூட சர்வதேச அபிப்பிராயம் பெற்றிருந்த விடுதலைப் புலிகள் தோற்றதெவ்வாறென்று தமிழ்ப் புலங்களில் வியப்போடு கேட்கப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கான விடை இங்கே இருக்கிறது.

மே-18 அளவில் இராணுவ பாதுகாப்பு வளையத்துள் பிரவேசிக்கும் பார்வதியை ‘அன்ரி’ என்று அன்பு செய்ய இராணுவத்தோடு இணைந்திருந்த சிலர் முன்வருவதும்கூட விடையின் ஒரு பகுதியை சூட்சுமமாய்க் கொண்டிருக்கிறது.

இன்னொன்றும் கவனமாகவேண்டும். நிலைமையிலோ  போர் உக்கிரம் அடைந்திருக்கிறது. வன்னியின் கிழக்கே மணலாறு, நாயாற்றுப் பகுதிகளிலிருந்து ராணுவம் முன்னேறுகிறது. இன்னொரு திசையில் முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய இடங்களை நோக்கியும் நவீன ஆயதங்களுடன் இராணுவம் முன்னேறுகிறது. இந்நிலையில் நடப்புகள் எவ்வாறு தோற்றம் காட்டுகின்றன?

‘ஸ்ரீலங்கா அரசு முதன்முதலாகப் பாதுகாப்பு வலயம் ஒன்றை அறிவித்தது. தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் தெற்கு ஆகிய பகுதிகள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டன….

‘நிவாரணப் பொருட்கள் ஒழுங்காக வந்தனதான். ஆனால் இரு வாரங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு, பதிவுகள் என்று மக்கள் இழுத்தடிக்கப்பட்டனர். அவர்கள் பதிவுகளைப் புதுப்பித்துக்கொண்டு நிவாரணங்களை எடுத்தனர்’ என (ப:66-67) நூல் தெரிவிக்கும் சம்பவங்கள் முக்கியமானவை.

அப்படியானால் அழிவுகளுக்கும், மிகுகொடுந் துயர்களுக்கும் ஆளாகியவர்கள் நந்திக்கடல்வரை விடுதலைப் புலிகளைப் பின்தொடர்ந்த அல்லது மனித கேடயங்களாய் இழுத்துச் செல்லப்பட்ட மக்களுக்கா ஏற்பட்டன? தமிழ்க்கவியின் எழுத்து எமக்கு போரின் முடிவு குறித்துச் சொல்லப்பட்டனவெல்லாம் உண்மையில்லை என்ற அறிகையை ருசுப்பிக்கின்றது.

எல்லா நிகழ்வுகளும் வரலாற்றின் ஆதாரங்களாகும் தன்மை வாய்ந்தனதான். ஆனால் எல்லா நிகழ்வுகளும் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டுத்தான் வரலாறு எழுதப்படுகிறதா என்ற கேள்வி என்னுள் நெடுங்காலமாக உண்டு. இல்லையென்ற பதிலை ஏற்கனவே நான் கண்டடைந்திருந்தாலும், அதை மீண்டும் உறுதி செய்கிறது ‘ஊழிக் காலம்’.

நூலின் அடுத்த கட்ட விசாரிப்பை இங்கிருந்து துவங்கலாம்.
ஈழ யுத்தத்தின் இறுதி நாட்களில் புயல்மழை அடிக்கிறது. ஒருநாள் எனினும் அதன் பாதிப்பு பயங்கரமாயிருக்கிறது. பங்கர்கள் நீர் நிறைந்து உயிரபயம் கொள்ளும் இடங்களெல்லாம் மறைந்து போகின்றன.

இத்தகு நிலையில் நூலில் ஒரு சந்தர்ப்பம் பின்வருமாறு விரிக்கப்படுகிறது:‘தினேஷ்  தன் தங்கையரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிப் புறப்பட்டான். ஆனால் தினேஷ்   தங்கைகளின் கொட்டிலை நெருங்கியபோது நிலைமை சாதகமாக இருக்கவில்லை. கட்டைக்காடு வட்டக்கச்சியிலிருந்து வெளியேறிய மக்களால் நிரம்பி வழிந்தது.

“அண்ணா, ரா ராவாய் நாங்கள் உந்த வாய்க்காலுக்கதான் கிடந்தனாங்கள். எல்லாச் சனமும் உதுக்கதான்.”

“ஷெல்லடியோ சொல்ல ஏலாது..”

மாறிமாறிப் புதினம் சொன்ன தங்கையரை விலக்கிவிட்டு,“வீட்டக் கழட்டி ஏத்துங்க..” என்று தினேஷ்  அவசரப்படுத்தினான்.’

தமிழ் மக்கள் செல்கிற இடமெல்லாம் கிணறுவெட்டிக் குடியேறுகிறவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆம். ஆனால், அவர்கள் இடம்விட்டு இடம்பெயர்கிறபோது மட்டும் கிணற்றை விட்டுவிட்டு வீட்டைக் கழற்றிக்கொண்டு போகிறவர்கள் என்று இனிமேல் சொல்லப்படலாம்.

இவ்வளவு மக்களின் இவ்வளவு சோகத்துள்ளும் மனித மனநிலைகளின் விசித்திரங்களை அவதானிக்கவும் நூலில் இடங்கள் இருக்கின்றன. ஒருவன் தன் தெரிந்தவர்களுக்கு சொல்லும் சில வார்த்தைகளூடாக அது வெளியாகிறது.

‘டோய்… துரையர்ட முன்னூறு மாட்டையும் சாச்சுக் கொணர்ந்து உதில ஒரு பட்டியில அடைச்சார். அதுகள் கள்ள மாடுகள். ராத்திரியே கட்டையத் தட்டிப்போட்டு அவ்வளவும் ஒட்டங்குளம் திரும்பிப் போயிற்றுதுகள்.’

இவ்வாறான அவதானங்களெல்லாம் மிக்க கவனத்துடன் பதிவாகியுள்ளன நூலில்.

மிக்க இயல்பான கடித நடையில் நூல் விபரங்களைச் சொல்லிச்சென்று முடிகையில், இரண்டு பாத்திரங்கள் மட்டும் மனத்தை அழுத்திக்கொண்டிருந்தன எனக்கு.

பார்வதிபோல் நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் களமுனையிலிருந்து தப்பிப் பிழைத்திருப்பது தெரிந்த விஷயம். அவரின் அவதிகள் அந்த நூற்றுக்கணக்கான பேர்களும் அடைந்த அதே அவதிதான். அதுமாதிரியான அவதிக் கணங்கள் கருணை ரவி, யோ.கர்ணன் போன்றோரின் சிறுகதைகளில் பதைக்க வைக்கும் விதத்தில் பதிவாகியிருக்கின்றன. இந்த நூலில் மறக்கமுடியாதவையாய் வரும் இந்த இரண்டு பாத்திரங்களும் மிகவும் விபரிப்புக்குள்ளாகாதவை. எந்த நூலிலும்கூட. ஒன்று, பாரி. மற்றது, பார்வதியின் கணவர் மணியம்.

வாஞ்சைகள் வாழ்வின் எந்தத் தருணங்களிலும் இழக்கப்பட முடியாதனவாய் இருப்பதற்கு பாரி சாட்சி. ‘கிளிநொச்சியிலிருந்து வந்த ஒரு வாரத்தில் ஒருநாள் காலை ‘மியாவ்’ என்ற குரலுடன் பார்வதியைநோக்கி ஓடிவந்தது பாரி. குட்டிப் பேரன் கண்ணன் பாய்ந்துவந்து அள்ளி எடுத்துக் கொஞ்சினான். எல்லோருக்கும் ஆச்சரியம், அது எப்படித் தேடிக் கண்டுபிடித்து வந்தது என்று.’
வளர்ப்பு மிருகங்களையும் விட்டு நீங்குவதற்கான மனிதர்களது அவலத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதே அவலங்களுக்கிடையே அவர்கள் வளர்த்த பூனை பாரி அவர்களைத் தேடிவந்ததை எப்படி விளங்குவது? மிருகங்களிடத்தில் உள்ள அந்த வாஞ்சை வெளிப்படும் இடம் மெய்சிலிர்க்க வைப்பது.

உயிர் காக்கும் அத்தனை மனித சாத்தியங்களையும் உபயோகிக்கும் அந்தரம் கொண்டவர்களாக அவர்கள். பங்கரைப் பலப்படுத்தி அங்கேயே தங்குவதா அல்லது அந்த இடத்தையும்விட்டு ஓடுவதா என்பதை அனுபவங்கள் மூலமாகவன்றி, அந்நந்த நேரத்து உள்ளுணர்வின்படி தீர்மானிக்கவேண்டிய இக்கட்டான நிலைமை. பார்வதி முடிவெடுத்து விடுகிறாள். ஆனால் முடிவே இல்லாதவராய் அல்லது எந்த முடிவுமே வேண்டாதவராய் ஒரு பாரம்போல் அமைந்திருக்கிறார் மணியம்.

நூலில் மணியம் குறிப்படப்படுமிடத்தில் அந்த ‘த்தார்’ என்னை நெருடியது. ஆனாலும் அந்த நெருடலினூடேயும் அந்த வரி காத்திரமாய் இறங்கி  பாத்திரத்தை நித்தியமாக்குகிறது.

அந்த வரி: ‘பார்வதியின் கணவர் மணியத்தார் எதுவுமே நடவாததுபோல தாடியைத் தடவிக்கொண்டு கிடந்தார்.’

இவ்வாறான ஜென்மங்களும் உண்டு. ஆனாலும் அவற்றின் சாசுவதத்தை ஒரு வரி ஆக்கிய விந்தையை வெகுவாக நூலில் ரசிக்க முடியும்.

00000


தாய்வீடு , டிசம்பர்  2014
No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...