ஈழம்: கொடிதுகளின் நிகழ் களம்
நால் திசையும் அளாவியெழுந்த ‘நாடாளுமன்ற’ சர்வாதிகாரங்களின் உக்கிர யுத்தபூமிகளாக பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈழம் ஆகிய நாடுகளெல்லாமே ஆகியிருக்கின்றன என்றபோதிலும், ஈழம் எனது பிறப்பைச் சுமந்த மண் என்ற வகையில், அதை முன்னிறுத்திய உரைக்கட்டாக இது அமைவது தவிர்க்க முடியாததாகின்றது. ஆனாலும் மற்ற நாடுகளின் துயரவெளி சற்றொப்பவும் இதற்குக் குறைந்ததில்லையென்பதில் எனக்கு மாறுபாடான கருத்தில்லை. அதனால் அந்நாடுகளின் யுத்த கொடூரங்களது வெளிப்பாடுகள் இதில் தவிர்க்கமுடியாதபடி இடம்பெறவே செய்யும். இவ்வாறான உரைக்கட்டொன்றினை சிறிதுகாலத்துக்கு முன்னரே நான் எழுதியிருக்கவேண்டும். எண்ணமிருந்தும் நடவாது போயிருக்கிறது. சிறுவயது முதலே பொருள்மையக் கருதுகோள்களில் கொண்டிருந்த பற்று, இதற்கான ஒரு தடையாக ஆகியிருந்திருக்க முடியும். ஆனாலும் எவ்வாறோ அது தவறிப்போய்விட்டது என்பது இப்போது நினைக்கத் துக்கமாகவே இருக்கிறது. பொருண்மியக் கருதுகோள்களையும் மேவிய கலாச்சார, தேசிய இன அடையாளங்கள் முன்னிலைப்பாடடையும் ஓர் அசாதாரண சந்தர்ப்பத்தின் பிறப்பும், பொருண்மியக் கருதுகோள்களின் ஆதாரத்தில் எழுந்த அரசியல் கட்சிகளினதும் மற்றும...