கலாபன் கதை 3
கடலில் தொலைந்த ஒருநாள் அதுவரை இல்லாதவாறு அவன் கடலோடியாக மாறிய காலத்திலிருந்துதான் அவனுக்கும், அவனது மனைவிக்குமிடையிலான மனஸ்தாபங்கள் உருவாகியிருந்தன என்பதை அப்போதெல்லாம் அவன் அதிகமாக உணரத் துவங்கியிருந்தான். எந்தக் கடலோடித் தொழிலினால் அந்த முரண்கள் உருவாகினவோ, அதன்மூலமாகவே அவற்றினை நீக்குவதற்கு அவன் தன்னை ஒரு திடசங்கற்பத்துள் ஆட்படுத்திக்கொண்டான். அவள் எதிரே இருந்தபோது தன்னுள் எழுந்திருந்த தாபம், அவளில்லாத அப்பொழுதில் ஒரு சுரமாகத் தன்னைத் தேய்க்க ஆரம்பித்திருப்பதையும் அவனால் நினைக்க முடிந்திருந்த கணங்கள் அவை. காணாதபோது தலைவனின் குறைகளையும், கண்டபோது அவனின் பிரியத்தையும்மட்டுமே தரிசித்ததாக திருக்குறளில் ஒரு தலைவி கூறுவதை எங்கோ படித்திருந்த ஞாபகம் அவ்வப்போது நினைவில்வந்து சலனம் விளைத்துக்கொண்டிருந்தது. அது தலைவனுக்கும்கூட பொருந்துவதுதான் என ஒரு சிரிப்போடு, சிகரெட்டின் புகை சூழ்ந்த தன் கபினுக்குள் வேலை முடிந்து சிறிது போதையோடு இருக்கும் தருணங்களில் அவன் நினைப்பது அடிக்கடி நிகழ்ந்தது. அவளுக்காகவும், தன் குழந்தைக்காகவும் இனி தான் அதிகமாக வாழவேண்டுமென்று அவன் தீர்மானித்துக்கொண்டான். ...