ஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’
‘ஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’ தமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையிலிருக்கும் மறைந்த முதலமைச்சர் திரு. காமராஜர் ஆரம்பித்துவைத்த சத்துணவுத் திட்டத்துக்கு நிகரான உணவுத் திட்டமொன்று, ஐம்பதுக்களில் வட இலங்கைக் கல்வி வட்டாரப் பள்ளிகளில் நடைமுறையிலிருந்தமை எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது. சின்ன இடைவேளை எனப்பட்ட 10.15 மணி இடைவேளையில் காலை ஆகாரமாக பாலும், மதிய உணவு இடைவேளையான 12.45க்கு பணிஸ_ம் கொடுத்தார்கள். பிரித்;தானியர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த உணவளிக்கும் முறைமைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கந்தர் மடப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்வரை சின்ன இடைவேளையில் பால் கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னால் அது நின்றுபோக மதிய வேளையில் பணிஸ் கொடுப்பது தொடர்ந்துகொண்டிருந்தது. பின்னால் அதுவும் நின்றுபோனது. எப்போதென்று தெரியவில்லை. அதேவேளையிலேயே வட இலங்கைக் கல்வி வட்டார அனைத்துப் பள்ளிகளிலும் நின்றுபோயிருத்தல் கூடும். மதிய உணவு இடைவேளை நேரமளவில் கந்தர் மடப் பள்ளிக்கூட வளாகத்தின் நிறைந்த மாமரங்களிலெல்லாம் ஊரிலுள்ள காக்கைகள் முழுவதும் பறந்துவந்து கூட...