நிகழ்வுகளும் நீரோட்டங்களும்
நிகழ்வுகளும் நீரோட்டங்களும் எனது வலைப்பூவின் சுயவிபரக் குறிப்பில், வாழ்வின் சமச்சீர் குலையும் தருணங்களில் என்னைத் தொலைத்து மீளும் ஒரு தந்திரத்தை அல்லது எனக்கேயான ஒரு வழிமுறையை நான் பதிந்திருக்கிறேன். இந்தத் தொலைதலும் மீள்தலும் என் பதின்ம வயதுப் பிராயம் முதல் தொடர்ந்தே வந்திருக்கிறது. தன்னைத் தொலைத்தலென்பது வேகமாக இயங்கும் ஒரு பிரபஞ்சத்திலும், அதே கதிக்கு ஈடுகொடுத்துச் சுழலும் ஒரு சமூகத்திலும் மிகச் சாதாரணமாக முடிந்துவிடுவதில்லை. அதற்கு ஒரு துறவு மனப்பான்மையே வேண்டும். இல்லறத்தில் துறவறத்தையும், துறவறத்தில் இல்லறத்தையும் நான் இந்தத் தொலைப்புகளில் அடைந்தது சர்வ உண்மை. இதை வேறொரு பத்தி எழுத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். தேவதைகளின் சுகங்கள் மட்டுமில்லை, அக்கால அனுபவங்களும் ஆயுள் பரியந்தம் என்னால் மறக்கப்பட முடியாதவை. அதை ஒரு ராசி என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை விளக்கும் சமயமல்ல இது. இங்கே இது சார்ந்து வேறொரு விஷயத்தையே சொல்லப்போகிறேன். கடந்த சில காலமாக இந்தத் தொலைப்பு வாழ்க்கையையே நான் நிகழ்த்திக்கொண்டிருப்பினும், இது முன்னவைகள் போலன்றி இந்த மண்ணுக்கும் கால தேச வர்த்தமானங்களுக்க...