சயந்தனின் ‘ஆறாவடு’
சயந்தனின் ‘ஆறாவடு’ மீதான ஓர் அரசியல், இலக்கியக் கண்ணோட்டம் ‘ஆறாவடு' நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்துகொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசிக்க முடிந்திருந்தது. நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும் அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது. நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும். இந்நூல் ஒரு புனைவு என்ற தளத்திலிருந்தான நோக்குகைக்கு இத் தகவல்கள் ஒன்றுகூட அவசியமானவையில்லை. ஆனால் முகப் புத்தகத்தில் பெரிய ஆரவாரம் நடந்துகொண்டு இருந்தவகையில் இதுவும், இத்துடன் வேறுபல செய்திகளும...