வாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…-தேவகாந்தன்-

2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில்லை, இதை வாசிக்க ஆரம்பித்தபொழுதில். அது பழக்கமும் இல்லை. வாசித்து முடிந்த பிறகு எழுத மனம் உந்தினால்தான் உண்டு. சீனிவசன் நடராசனின் ‘விடம்பன’த்தை இரண்டரைத் தடவையாக வாசித்த பிறகு இன்றைக்கு எழுத மனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை வாசித்து மூடிவைத்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழிய புத்தகத்தை தொடர முயன்றபோது முடியாமல்போனது. பக்கங்களை பின்னோக்கி நகர்த்தியபோதும் தொடுப்பை பிடிக்க முடியவில்லை. மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் அலுப்புத் தோன்றவில்லை. புதியதான தோற்றம். அது மீண்டும் மீண்டும் தன் ரகசியங்களைக் கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தது. சுகம் எச்சமாய் வந்தது. அதுவே இப்பிரதியின் அறுதியான பலன். ‘விடம்பன’த்துக்கு அடையாளமொன்று தேவைதான். அவ்வகையில் இதை நாவலென்று கொள்ளமுடியும். இதன் முன்னுரையில் சுகுமாரன் வகைப்படுத்துவதுபோல் picaresque வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். Picaresque வகையினத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றிரண்டு பண்புகளையே அது இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்...